குழப்பமாக சுரங்கணியின் கடைக்கு வந்த சர்வேஷ் ஒரு சிகரெட்டை வாங்கி புகைக்க ஆரம்பித்தான்.
சுரங்கணியிடம் தான் காசு கொடுத்து வாங்கினான். இதுநாள் வரை அவன் புகைத்து பார்த்திராத அவள் சற்று ஆச்சரியமாக பார்த்தாளே ஒழிய, “யாருக்காக வாங்குறாய்?” என்று கூ ட கேட்காமல் தான் கொடுத்தாள். ஒரு ஓரமாக நின்று சர்வேஷ் பதட்டமாக புகைக்கவும் “காலையிலையே என்ன புகைச்சல்?” என்று கூட கேட்கவில்லை.
கடைக்கு வருபவர்களோடு பொது விஷயங்களை பேசுவதோடு சரி. சொந்த விஷயங்களை பேசுவதையோ, சொந்த விஷயங்களில் தலையிடுவதிலோ சுரங்கணிக்கு இஷ்டமில்லை. அது அநாகரீகம் என்று கருத்துபவள் அதை பற்றி கேட்கவும் மாட்டாள், கருத்தில் கொள்ளவும் மாட்டாள்.
“புகைப்பது கூடாது என்று தெரிந்து தானே புகைக்கிறார்கள் என்று எண்ணுவதோடு, கூடாது என்று சிகரெட் அட்டையில் போட்டிருக்கும் போதே நாம் விற்கிறோமே. தெரிந்தே நாம் விற்கும் பொழுது, கூடாது என்று தெரிந்தே புகைக்கும் அவர்களுக்கு நாம் புத்திமதி சொல்வதா? சொன்னாலும் திருந்துவார்களா?” என்ற எண்ணம்தான் சுரங்கணிக்கு.
ஆனால் சர்வேஷ் சிகரெட் வாங்கும் பொழுதும் சரி, அதை பற்ற வைக்கும் பொழுதும் சரி அவளிடம் வழமையாக சிந்தும் புன்னகையை தொலைத்து ஏதோ சிந்தித்துக் கொண்டிருக்கிறான் என்று அவனை பார்த்து புரிந்து கொண்டவளோ!
“என்னவென்று கேட்கலாமா? கேட்டால் தப்பாக நினைப்பானோ? என்ன பிரச்சினை என்று கேட்பது தப்பா? பிரச்சினை என்ன என்று கேட்பதில் தப்பு எங்கே இருக்கிறது?” அவனை பார்த்தவாறே மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தவள் மானசீகமாக தலையில் கைவைத்தாள்.
“நீ எதுக்கு இப்போ அவனை பத்தி யோசிக்கிற? இது உன் குணமே இல்லையே. போ… அமைதியா போய் உன் வேலையை பாரு. அவன் என்னமோ பண்ணிக்கட்டும்” என்று அவன் மனம் தூற்ற,
“என்ன பிரச்சினை என்று தெரியலையே முகம் ஒரு மாதிரி இருக்கு” மீண்டும் அவனை பார்த்தவளுக்கு அதற்கு மேல் பொறுமை காக்க முடியாமல் என்னவென்று கேட்கலாமென வாய் திறக்க போன போது செல்வா கடைக்கு வந்தான்.
“என்ன தம்பி காலையில்லையே… என்ன பிரச்சினை?” செல்வாவே அப்பொழுதுதான் கடைக்கு வருகிறான். அவனுக்கு முன்னால் சர்வேஷ் வந்து புகைக்கிறான் என்றால் நிச்சயமாக எதோ ஒன்றை அவன் மனதுக்குள் போட்டு உருட்டிக் கொண்டிருக்கின்றான் என்று செல்வாக்கு நன்றாகவே தெரியும்.
சர்வேஷ் குடிக்கவே மாட்டான், புகைக்கவே மாட்டான் என்றெல்லாம் கூறிட முடியாது. பார்ட்டி என்று சென்றால் சில நேரம் குடிப்பான். சிலநேரம் தொடக் கூட மாட்டான். குடிக்க வேண்டும் என்று தோன்றினால் செல்வாவை அழைத்துக் கொண்டு பாருக்கு சென்று குடிப்பான்.
எதையாவது சிந்திக்கும் பொழுது மட்டும்தான் புகைப்பான். வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் பொழுது டைரக்டர் சொன்னதை உள்வாங்க யோசிக்கும் பொழுது புகைப்பவன். இலங்கைக்கு வர வேண்டும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கும் பொழுது புகைத்தான்.
அதன்பின் இப்பொழுதுதான் சர்வேஷ் புகைப்பதை செல்வா பார்க்கிறான். அப்படியென்றால் நிச்சயமாக எதோ பிரச்சினை இருக்கிறதல்லவா? அதனால்தான் செல்வா நேரடியாக என்ன பிரச்சினை என்று கேட்டிருந்தான்.
“என் அண்ணன் தான்….” என்ற சர்வேஷ் சிந்தித்துக் கொண்டே இருந்தான்.
சர்வேஷ் செல்வாவோடு பேசுவதை பார்த்த சுரங்கணி இனி அவன் பார்த்துக்கொள்வான் என்று கடைக்குள் சென்றாள்.
“அவருக்கென்ன? அதான் உங்க அண்ணனும், அண்ணியும் ஒன்னு சேர்ந்துட்டாங்களே. வீட்டை கட்டிக் கொடுத்துட்டு, நீங்கதான் அவரோட தம்பி என்று சொல்லிட்டு நாம கிளம்ப வேண்டியது தானே பாக்கி” செல்வா அடுத்தடுத்து என்ன நடக்க வேண்டும் என்று கூறினாலும், சர்வேஷின் மனதில் என்ன இருக்கிறது என்று அறிய ஒவ்வொரு வார்த்தையையும் நின்று நிதானமாகத்தான் கூறினான்.
“தெளிவா சொன்னா சொலுஷன் சொல்லுறேன்” என்ற செல்வாவை பார்த்த சர்வேஷ் கையிலிருந்த சிகரெட்டை தூர எறிந்தான்.
சர்வேஷுக்கு எல்லமே செல்வா தான். சர்வேஷ் என்ன சொன்னாலும் அதை சரியாக உள்வாங்கி இது இப்படித்தான் என்று கூறுபவன் செல்வா. அதனால் இனி சிகரெட்டுக்கு தன் கையில் வேலையில்லை என்று எறிந்து விட்டான்.
“அண்ணி வேலைக்கு போயிட்டு வரும் பொழுது அண்ணன் தினமும் பாலோ பண்ணுறான்னு சொன்னேனே. அது அவன் அண்ணி மேல வச்சிருக்கிற காதலாலையும், அவங்கள பாதுகாக்கணும் என்ற எண்ணத்தினாலையும் என்று சொன்னேனே. வேவு பார்க்கத்தானோ என்று சந்தேகமாக இருக்கு” தன் மனதில் என்ன இருக்கிறதோ அதை சுற்றி வளைக்காமல் நேரடியாகத்தான் சொன்னான் சர்வேஷ்.
“இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க…” கதிர்வேல் என்ன தில்லாலங்கடி செய்திருக்கிறான் என்று அறிய காதை தீட்டினான் செல்வா.
“அண்ணியோட பாதுகாப்பை கருதி அவங்கள பாலோ பண்ணவன் அந்த ரமேஷ் அன்னக்கி ராத்திரி அண்ணியோடு வந்து பேசினப்போ பார்த்திருப்பானில்ல. என் பொண்டாட்டிகிட்ட உனக்கென்னடா பேச்சு வேண்டி கிடக்கு என்று நாலு அப்பு அப்பி அந்த ரமேஷ துரத்தி இருந்தா அண்ணி மேல இருக்குற காதலாலையும், கோபத்தாலையும் பண்ணிட்டாரு என்று சொல்லலாம். சாதாரணமா மனுஷனுக்கு கோபம் வந்தா, சராசரியான கணவனுக்கு கோபம் வந்தா அப்படித்தான் பிகேவ் பண்ணுவான்.
என்னதான் அண்ணிகிட்ட நல்ல பேர் வாங்கணும், ரமேஷ் கூட எந்த பிரச்சினையும் செய்யக் கூடாது என்று நினைச்சாலும் ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்தா கோபம் வராதா? கண்டிப்பா வரத்தானே செய்யும். அடிதடி சண்டைல இறங்கலைன்னாலும் அங்கன போய் நின்னு வாய் சண்டையாவது போட்டிருப்பாரே. அமைதியா நின்னு வேடிக்கை பாத்திருக்காரு என்றா எங்கண்ணா எல்லாத்தையும் திட்டம் போட்டுத்தான் செய்யுறான்னு தோணுது”
“எல்லாத்தையும்…. எல்லாத்தையும் என்று நீங்க எத மீன் பண்ணுறீங்க? அமைதியா நின்னு வேடிக்கை பார்த்திருக்காரு என்று எத வச்சி சொல்லுறீங்க? ஒருவேளை ஒருவேளை அன்னக்கி ராத்திரி அந்த ரமேஷும், உங்கண்ணியும் பேசினப்போ உங்கண்ணன் அங்க இல்லையோ? என்னவோ? அன்னக்கி உங்கண்ணன் அண்ணிய பாலோ பண்ணலையோ என்னவோ, உங்கண்ணன் பாலோ பண்ணுறது மட்டும் தொழிலா வச்சிருக்காரா? பான் வேன்ல பான் விக்க போறாரே. அன்னக்கி வர லேட்டாகி இருக்கும்”
எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். சர்வேஷ் சொல்லும் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்வதுதான் செல்வாவின் வேலை. அப்பொழுதுதான் சர்வேஷுக்குள் இன்னும் கேள்விகள் பிறக்கும். பதிலோடு தெளிவும் கிடைக்கும். எந்த பிரச்சினையானாலும் இவர்களது உரையாடல் இவ்வாறுதான் இருக்கும்.
“அண்ணன் ஒருநாளும் லேட்டா போக மாட்டான் என்று அண்ணி ஒரு நாள் வேலைக்கு போகலைனதும் எனக்கு போன் போட்டு எங்க உன் அண்ணி இன்னக்கி வேலைக்கு போகலையானு கேட்டதுலையே தெரிஞ்சது”
“என்ன சொல்ல வரீங்க? இப்படி பாதில ஆரம்பிக்கலாமா முழுசா சொல்லுங்க தம்பிசார்” கிண்டலடித்தாலும் செல்வா கூர்ந்து கவனிக்கலானான்.
“அண்ணி வேலைக்கு கிளம்பின பிறகுதான் அண்ணன் வீட்டை விட்டு போவாரு. காலைல நடந்து போறவங்கள குறிப்பிட்ட தூரத்துல பாலோ பண்ணுறவரு, நைட்டுல வீட்டுக்கு வரும் பொழுது பாலோ பண்ணுறப்போ லேட்டா போவாரா? அதுவும் பவர் கட் வேற நடக்குறப்போ?”
“வாய்ப்பில்லைதான்”
“இவரு பாலோ பண்ணுறது அண்ணிக்கு தெரியாம இருக்கலாம். தெரியாதபடி இத்தனை நாள் பார்த்துக்கிட்டிருக்காரு என்று நான் நினைக்கிறன்.
அன்னைக்கு நான் அண்ணிய வேலைக்கு கூட்டிகிட்டு போனப்போ அண்ணன் வீட்டுல இருந்தாரு. காலைல என் கூட ஆட்டோல போறதால பாலோ பண்ணுறத விட்டிருக்கலாம்.
ஆனா நைட் நேரம் என் கூட அண்ணி வந்தாலும் அவர் பாலோ பண்ணுறத விடல. அன்னைக்கு அண்ணி வேலைக்கு போகம கல்யாணம் நின்னப்போ என்ன நடந்தது? அண்ணன் மேல தவறு இல்லனு தெரிஞ்சி கிட்டாங்க.
வேலைக்கு போன அண்ணி வீட்டுக்கு வந்துட்டாங்களா? என்று ஒரு கணவனா அண்ணன் எனக்கு போன் போட்டு கேட்டிருந்தா அதுல ஒரு நியாயம் இருக்கும்.
ஆனா அவரு சரியா எட்டு மணிக்கு போன் பண்ணாரு. அப்போதானே அண்ணி சூப்பர்மார்கட்டுல இருந்து வெளிய வர்ற நேரம். அவங்க தினமும் வெளிய வர நேரத்தை தாண்டி ரெண்டு நிமிஷம் லேட் என்றதுமே எனக்கு போன் போட்டு அண்ணி எங்கன்னு கேட்டாரு.
அத வச்சுதான் சொல்லுறேன். அவரு பாலோ பண்ண லேட்டா போக மாட்டாரு.
அப்படிப்பட்டவர் அன்னக்கி அண்ணி ரமேஷோடு பேசும் போது அங்கதான் இருந்தாரு. அவங்க பேசினது கேட்டாரு என்று உறுதியா சொல்லுறேன்”
“ஒஹ்.. ஓஹ்”
“அது மட்டுமில்ல, ரமேஷுக்கு அண்ணிக்கும் நடக்க இருந்த கல்யாணத்த நிறுத்தினது கூட அண்ணனா இருக்கலாம்”
“சே… சே… உங்கண்ண அப்படியெல்லாம் செய்ய மாட்டாரு. தங்கமானவரு”
“ச்..ச்..ச்..ச்..ச்..ச்.. நீ சொல்லுறது போல லேட்டா போய் இருந்தா அங்க நடந்தது எப்படி படம் பார்த்தது போல தெரியும்? வாய்ப்பில்லல. அங்க நடந்ததை பார்த்தும் எதோ திட்டத்தோடதான் அமைதியா இருந்திருக்காரு” யோசனையாகவே சொன்னான் சர்வேஷ்.
“இன்னக்கி காலைல நடந்த பிரச்சினைல எங்கண்ணன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் மனசுல அப்படியே இருக்கு”
ஒரு நடிகனுக்கு முக்கியமானதே வசனம் தான். தான் எந்த குளறுபடியும் செய்யாமல் எழுதிக் கொடுத்த வசனங்களை பேசுவது மட்டுமல்ல, சக நடிகர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டால் தான் தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக இயற்ற முடியும்.
அந்தவகையில் சர்வேஷ் மற்றவர்களை கூர்ந்து கவனிப்பதில் வல்லவன். அதனால் தான் கதிர்வேல் பேசிய வார்த்தைகளை வைத்து அவன் மீது சந்தேகம் கொண்டான்.
“அப்படி என்ன சொன்னாரு உங்கண்ண?” செல்வாவும் அங்குதான் இருந்தான். தான் கவனிக்காத்தை இவர் என்ன கவனித்து விட்டார் என்று கேட்டதோடு யோசிக்கவும் செய்தான்.
“அந்த ரமேஷ் மறுவாழ்வு மையத்திலிருந்து ஊருக்கு வந்த அன்னைக்கே அண்ணிய பார்த்து “வா என் கூட வந்துடு. நாம் சேர்ந்து வாழலாம்” என்று கூப்பிட்டிருக்கான். அதுக்கு அண்ணி உங்கம்மா சம்மதிக்காம நான் வர மாட்டேன் என்று சொல்லியிருக்காங்க”
“இதைத்தான் அந்தம்மா வந்து கத்தி கூப்பாட்டு போட்டாங்களா?”
“ரமேஷ் வந்து பேசினான். அவன் கிட்ட சொல்லி புரிய வைக்க முடியாது என்று இப்படி சொல்லி அனுப்பினேன். அவங்கம்மா நல்லா நாலு விளக்குமாத்தால சத்தி விளக்கமா விளக்குவாங்க. அப்போ புரிஞ்சிக்குவான் என்றாங்க. அண்ணி எந்த உள்நோக்கத்தோடயும் அப்படி ரமேஷ் கிட்ட சொல்லல. அவன் கூட போற எண்ணமும் அவங்களுக்கு இல்ல. அண்ணன் நல்லவரு வல்லவரு என்று தெரிஞ்சிக்க முன்னாடியே அவங்க ரமேஷ் கூட போற எண்ணத்துல இருக்கல.
அன்னைக்கி ராத்திரி அண்ணி ரமேஷ் கூட பேசினது அண்ணன் கேட்டிருந்தா… அண்ணிய பத்தி நல்லா தெரிஞ்ச அவருக்கு அண்ணி ஏன் அப்படி பேசினாங்க என்றும் தெரிஞ்சிருக்கும்”
“ஐயோ எனக்கு சுத்தமா புரியல” தலையில் அடித்துக் கொண்டான் செல்வா.
“அன்னக்கி ராத்தி செல்வா பேசினது அண்ணன் கேட்கலனா இந்த ரெண்டு வாரத்துல செல்வாவை ரோட்ல எங்கயாச்சும் பார்த்தா பிரச்சினை பண்ணி இருக்க மாட்டாரா? இல்ல அந்த செல்வா பிரச்சினை பண்ணி இருக்க மாட்டானா?”
“ரெண்டு பேரும் சந்திக்கவே இல்லையோ”
“இந்த சின்ன ஊருளையா? எனக்கென்னமோ வேணுமெண்டு அண்ணா செல்வாவ சந்திக்கிறத தவிர்த்திருக்கிறாரு என்று தோணுது.
“அட போங்க தம்பி. ஆதாரம் இல்லாம ஒரு யூகத்திலையே பேசிகிட்டு இருக்கிறீங்க. இது உங்கண்ணன் பரவால்ல. பாட்டு பாடிதான் கொல்லுவாரு”
“நான் என் சந்தேகத்தை தானேடா சொல்லிக்கிட்டு இருக்கேன்”
“உங்க சந்தேகத்துல தீய வைங்க. திட்டம் போட்டு செய்யிறவருதான் உங்க கிட்ட அழுது புலம்பினாரா? அந்த மனுஷன் அம்புட்டு கஷ்டத்தையும் உங்ககிட்ட சொல்லி பாரத்த இறக்கி வச்சிருக்குறாரு. நீங்க அவரையே சந்தேகப்படுறீங்களா? தள்ளுங்க” “இவருக்கு வேல இல்லனனும். இல்லாத ஒண்ணா இருக்கு என்று கதை, திரை கதை வசனம் எழுத கிளம்பிட்டாரு” முணுமுத்தவன் “எனக்கு வேல இருக்கு” என்று செல்வா கடைக்குள் சென்றான்.
ஆம் கதிர்வேல் தன்னிடம் பேசும் பொழுது வராத சந்தேகம் இப்பொழுது ஏன் வந்தது? அண்ணன் என்ற பாசமா? இல்லை இருவரையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்ற ஆவலா? எது என் கண்ணை மறைத்தது?
சர்வேஷுக்கு சட்டென்று மீண்டு வர முடியவில்லை. சந்தேகப்பட்டால் அதை அலசி, ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டுமல்லவா?
உண்மையிலயே ரமேஷும் அண்ணியும் சந்தித்துக் கொண்ட இரவு அண்ணா அவர்களின் உரையாடலை கேட்டிருக்காவிட்டால், இன்று காலை ரமேஷின் அன்னை புஷ்பவள்ளி அண்ணி சொன்னதாக கூறியதை கேட்டு கொஞ்சமாச்சும் கோப்பட்டிருக்கணும்.
என்னதான் அண்ணி மேல் காதல் இருந்தாலும், அண்ணிக்கு இவ்வளவு சப்போர்ட் பண்ணி பேசி இருக்க மாட்டாரு. முகத்தில் கூட கோபம் துளியளவு இல்லனா நிச்சயமாக அன்னக்கி ராத்திரி அவங்க பேசினது அண்ணா கேட்டிருக்கணும். அண்ணி ஏன் அப்படி பேசினாங்க என்றும் புரிஞ்சிகிட்டு அமைதியா இருந்திருக்கணும்.
அது எப்படி அண்ணியிடம் நல்ல பெயர் வாங்கவென்றே பேசுவான். அவன் சரியில்ல. அவனை பாலோ பண்ணனும்” என்ற முடிவுக்கு வந்தான் சர்வேஷ்.
“தம்பிசார் ஒரு கைப்பிடிங்க.” செல்வாவின் குரல் அழுத்தமாகவும், சத்தமாகவும் கேட்ட பின்தான் சிந்தனையிலிருந்து விடுபட்டான் சர்வேஷ்.
“இது ஒன்னும் எம்ப்டி சிலிண்டர் கிடையாது. சினிமால அசால்ட்டா தூக்கிட்டு போனது போல ரெண்டா தூக்கிட்டு போக. கேஸோட தூக்கும்” செல்வா கிண்டல் செய்ய ஆரம்பித்தான்.
“பசங்களா பார்த்து இறக்கி வைங்கடா. பல மாசத்துக்கு பிறகு கடைக்கு சிலண்டர் எடுத்திருக்கேன். கேஸ் தட்டுப்பாட்டால கேஸ் சிலிண்டர் வராமலையே இருந்தது. இப்போதான் நம்ம கடைக்கு வந்திருக்கு” என்றார் சிறிசேன முதலாளி.
“என்ன முதலாளி சொல்லுறீங்க? பெற்ரோல்தான் இல்லனு சொன்னீங்க கேஸும் இல்லையா?” இந்த கடையே ஒரு பழைய கடை. இன்றுதான் இவர்கள் சிலிண்டர்களை விற்க முடிவு செய்திருப்பார்கள் என்று எண்ணியிருந்தான் செல்வா.
“கப்பல் வந்திருகிச்சுனு நியூஸ்ல சொன்னா போதும் டவுன்ல கிவ் ஆரம்பிச்சிடும். வீட்டுல இருக்குற எம்ப்டி சிலிண்டரை நைட்டு கொண்டு போய் கொடுத்து கிவளை நிக்கிறவனுக்கு காசு கொடுக்கணும். ஐநூறு ரூபாய இருந்து ரெண்டாயிரம் ரூபா வரைக்கும் ஒரு சிலிண்டருக்கு வாங்கினானுங்க”
“பகல் கொல்லையா இல்ல இருக்கு?” சம்பாதிக்க எப்படியெல்லாம் வழி கண்டு பிடிக்கிறாங்க வியந்தான் செல்வா.
“டவுனுல செருப்பு தைக்கிறவன், குடை தைக்கிறவன் எல்லாம் சேர்ந்துதான் கடை வாசல்ல யாரும் ஆட்டைய போட்டுக்கிட்டு போயிடாம பத்து பத்து சிலிண்டர சங்கிலி போட்டு கட்டி பாத்துக்கிட்டாங்க.
காலைல போய் காசு கொடுத்து எம்ப்டி சிலிண்டருக்கு பதிலா புது கேஸ் சிலிண்டர வாங்கிட்டு வர வேண்டியதுதான் எப்படி இருந்த நாடு? ஒவ்வொண்ணுத்துக்கும் கிவ்வுல நிக்க வச்சிட்டானுங்க”
“என்னடா இது இலங்காபுரிக்கு வந்த சோதனை? இதுக்கெல்லாம் கிவ்விள நிக்க வேண்டியதா போச்சு. ஹனுமாரோட வாலுக்கு தீ வச்ச சாபம் சும்மா விடுமா?” கிண்டலாக சொன்னாலும் செல்வாவுக்கு மக்கள் எவ்வளவு இன்னல்கள் பட்டிருப்பார்கள் என்று புரிந்துகொள்ள முடிந்தது.
“கிவ்விள நின்னு யாருக்கும் பொருள் வாங்க பொறுமை இல்ல. காரணம் பொருள் தட்டுப்பாடு. அடிதடி சண்டையும், வெட்டுக்குத்து சம்பவங்களும் ஏராளம். பெற்ரோல் கிவ்விள ஆர்மி, போலீஸ் என்று போட்டுத்தான் மக்களை கட்டுப்படுத்தினாங்க”
“இப்போ கூட டவுன்ல திடீர் என்று பெற்ரோல்காக கிவ் இருக்கே. நேத்து பார்த்தேன்” என்றான் சர்வேஷ்.
“ஆ… அந்த தியேட்டர் பக்கத்துல இருக்குற சேட்டா? அது டிராபிக் பா… சரி சரி பத்திரமா எடுத்து வைங்க. இப்போ எம்ப்டி சிலிண்டரை பதினைஞ்சாயிரம் போகுது. எவனாச்சும் தூக்கிட்டு போயிட்டான்னா. இதுக்கே நான் சம்பாதிக்கணும்” செல்வாவை அதட்டினார் சிறிசேன முதலாளி.
“ஓகே… ஓகே..” என்றவாறே வேலையில் கவனமானான் செல்வா.
“ஏம்மா உனக்கு லீவ் எப்போ முடியுது? நீ எப்போ திரும்ப பேராதெனியக்கு போகப் போற?” பேத்தியை பிரிய வேண்டுமே என்ற சோகத்தில் கேட்டார் சிறிசேன முதலாளி.
“அடுத்த வாரம் போகணும் தாத்தா” பொருட்களை அடுக்கியவாறே சுரங்கணி சிறிசேன முதலாளியோடு உரையாட, சர்வேஷின் கவனம் அவள் பக்கம் திரும்பியது.
“ஒருத்தன் காலையிலையே வந்து சிகரெட் வாங்குறானே… இத்தனைநாள் இல்லாத பழக்கம் என்ன புதுசா என்று கூடவா கேட்க மாட்டா? எனக்காக வாங்குறேனா? இல்ல வேற யாருக்காகவாவது வாங்குறேனா என்று தெரிஞ்சிக்கிற ஆர்வம் கூடயா இவளுக்கு இல்ல? அந்த அளவுக்கு மட்டமா போய்ட்டேனா?
அதான் சிகரெட்டை பத்த வைக்கிறத பார்த்தா இல்ல. எதுக்கு குடிக்கிறீங்க? ஏதாவது பிரச்சினையா? கலையிலையே எதுக்கு குடிக்கிறீங்க? உடம்புக்கு நல்லதில்லைனு தெரியாதா? இந்த மாதிரி கேள்விகள் இவளுக்கு தெரியாதா?
ஆமா எதையாச்சும் வித்து காசு பார்த்தா போதும்” சுரங்கணியை மனதுக்குள் சர்வேஷ் எரித்துக் கொண்டிருக்க, அதில் எண்ணெய் ஊற்ற வந்தான் செல்வா.
“தம்பிசார் உங்காளு அடுத்த வாரம் ஊருக்கு போறாங்களாம். சட்டுபுட்டுனு பூவ கொடுத்து அந்த மூணு வார்த்தையை சொல்லிடுங்க. அப்பொறம் காலேஜ் போனா அங்க எவனாச்சும் உசார் பண்ணிடுவான். நீங பீபீ ஊத வேண்டியிருக்கும்”
“ஐயோ… இந்த ஊரு பாஷைய கேட்ச் பண்ணிட்டீங்க போல. சபாஷ்” என்று செல்வா சொல்ல. சர்வேஷ் அவனை முயன்ற மற்றும் முறைத்தான்.
“ஆமா போன வருஷம் ஒலெவல், ஏலெவல் பசங்களுக்கு எக்ஸாம் வைக்க பேப்பர் இல்லனு சொல்லி டிசம்பர்ல வைக்க வேண்டிய எக்ஸ்சாம இந்த வருஷம் மே மாசம் தானே வச்சானுங்க. உங்களுக்கு எப்படி? எக்ஸாம் இருக்கா?”
“ஏம்மா கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க. எல்லா டிபார்ட்மெண்ட்டும் இப்படி அடிவாங்கிருச்சே இதுக்கு முக்கியமான காரணம் என்னவா இருக்கும்?” சர்வேஷிடமிருந்து விடுபடவென்றே சுரங்கணியிடம் கேள்வி கேட்டான் செல்வா.
ஏதாவறு ஒரு துறையில் பிரச்சினை என்றால் சரி செய்யலாம். இங்கே எல்லாமே பிரச்சினையாக இருக்கிறதே என்று சர்வேஷும் அவள் பதிலுக்காக ஆவலாக காத்திருந்தான்.
“முதல் காரணம் உற்பத்தி. வயல் இருந்தாலும் பொதியள அளவு அரிசி உற்பத்தி செய்யப்படுறது இல்ல. பால்பண்ணைகள் இருந்தாலும், உள்நாட்டு தேவைக்கு பத்தாது.
அதிகமான பொருட்கள் இறக்குமதிதான் செய்யிறோம். டாலர் இல்லனா இறக்குமதி செய்ய முடியாது. தட்டுப்பாடு வரத்தானே செய்யும். ஆணிவேர்லயே அடிச்சா எல்லாம் ஆட்டம் காணத்தான் செய்யும்” நாட்டை எப்படியெல்லாம் கொள்ளை அடிக்க முடியுமோ, அடித்து விட்டார்கள். எஞ்சி இருப்பது கடன் மட்டும் தான் என்று சொல்லாமல் சொன்னாள்.
“ஏம்மா நீ அரசியலுக்கு வர ஏதாவது எண்ணம் இருக்கா?” செல்வா வளமை போல் கிண்டல் செய்ய,
“சுரங்கணி நான் வீடு வரைக்கும் போயிட்டு வரேன்” என்று கிளம்பினார் சிறிசேன முதலாளி.
அவருக்கு தலையசைத்தவாறே “ஏன் கேக்குறீங்க?” புரியாமல் பார்த்தாள் சுரங்கணி.
“இல்ல நாட்டு நிலவரம் பத்தி இம்புட்டு தெரிஞ்சி வச்சிருக்க, அக்கறையாகவும் இருக்க அதான் கேட்டேன்” என்றவன் சர்வேஷை பார்த்து கண்சிமிட்டினான்.
“ஆமா, ஆமா நாட்டை பார்த்து கடைசில வீட்டை கோட்டை விட்டுடாதீங்க” சர்வேஷ் செல்வாவை முறைத்தவாறே கூற,
“நாட்டை பாத்துகிறவங்களுக்கு வீட்டை பாத்துக்க தெரியாதா? உங்க கிட்ட இருந்து நான் இப்படியொரு பதில எதிர்பார்க்கள பிரபு. ஏன் பொம்பளைங்க என்றா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா போச்சா?” சர்வேஷை சுரங்கணி முறைத்தாள்.
“என்னடா… ரூட்டு மாறி போகுது? சரியில்லையே. இன்னும் ஒன்னு சேரவே இல்ல அதுக்குள்ள பிரேக்கப் ஆயிடும் போலயே” என்று “ஐயோ அம்மா… தம்பி அந்த அர்த்ததுல சொல்லல” செல்வா விளக்கம் கொடுக்க முனைந்தான்.
“முதல்ல உன்ன நேசிக்கிறவங்கள அக்கறையா பாத்துக்க, அப்பொறம் நாட்டை கவனிக்கலாம். சிகரெட் கேட்டா உடனே கொடுத்துடுவியா? இனிமேல் நானே கேட்டாலும் கொடுக்கக் கூடாது. புரிஞ்சதா?” கடுமையான குரலில் கூறி விட்டு சர்வேஷ் புன்னகைத்தான்.
தான் எதுக்கு இப்போ கோபப்படுகிறோம்? இவளிடம் என்ன எதிர்பார்க்கிறோம்? என்று அவனுக்கே புரியவில்லை. பேசிய பின்தான் தான் நடந்துகொள்ளும் விதம் குழந்தைத்தனமாக இருக்கிறது என்று புன்னகைத்தான். அத்தோடு அதற்கான காரணமும் அவனுக்கு தெளிவாகவே புரிந்தது.
அவனுக்கு அவள் பெயர் மட்டுமல்ல அவளையும் ரொம்பவே பிடித்திருந்தது. வேண்டாம் விலகி இரு என்று மூளை சொன்னாலும் மனம் கேட்குமா? நேற்று அவளோடு பேசிய பின் அவள் நினைவுகள் அதிகமாக தாக்கியிருக்க, ஒரு முடிவோடுதான் இருந்தான்.
கதிர்வேலன் சிந்தனையில் கடைக்கு வந்து சிகரெட் வாங்கியவனுக்கு சுரங்கணியே கண்ணுக்கு தெரியவில்லை. இப்பொழுது அவள் தன்னை கண்டு கொள்ளவில்லை என்ற கோபம் எட்டிப் பார்த்திருக்க, தன் மனதை நன்றாகவே உணர்ந்து கொண்டான்.
“அட அட அட” என்ற செல்வா விசில் அடித்தான்.
“லூசா நீ” என்று சர்வேஷ் செல்வாவை முறைக்க,
“லூசா நீ” என்று சர்வேஷை சுரங்கணி முறைத்தாள்.
“யோவ் காசு கொடுத்து சிகரெட் வேணும் என்றது நீ. குடிக்கக் கூடாது என்று தெரிஞ்சே குடிச்சது நீ. காலைல குடிச்ச என்ன? மாலைல குடிச்சா என்ன? விக்கிறதுக்குத்தான் கடைல வச்சிருக்கோம். நீ காசு கொடுத்தா நான் விக்கத்தான் செய்வேன். சிகரெட் குடிச்சா நோய் வரும் என்று தெரிஞ்சிதான் நீயும் குடிக்கிற, நானும் விக்கிறேன். உனக்கு வேணாம்னா நீதான் வாங்கக் கூடாது. அத விட்டுட்டு என்ன கொடுக்கக் கூடாது என்று சொல்லுற?” பொறித்துத்தள்ளினாள்.
அவளை புன்னகை முகமாகவே பார்த்திருந்த சர்வேஷ் “உன் கோபம் கூட அழகாகத்தான் இருக்கு. என்ன அத இன்னும் கொஞ்சம் மாத்தி. என் மேல அக்கறையா இருக்குறதுக்காக கோபத்தை காட்டு. அக்கறை கூட எனக்காக மட்டும். உனக்கு பிடிக்காத விசயத்த நான் பண்ணா… பண்ணக் கூடாது என்று சொல்லுற உரிமை, அந்த உரிமை கூட என் மேல மட்டும் இருக்கணும் என்று தான் என்னோட ஆச”
“என்ன உளறிக்கிட்டு இருக்க? சிகரெட் மட்டும் தான் குடிச்ச என்று நினச்சா? காலைலயே சரக்கும் போட்டிருக்கியா? போ… போ… போய் தேசிக்காய் நல்லா உச்சந் தலைல தேச்சி குளி. போதை தெளியும்” சர்வேஷை பிடித்து கடையிலிருந்து தள்ளி விட்டாள் சுரங்கணி.
“ஒருத்தன் உசுரக் கொடுத்து ப்ரொபோஸ் பண்ணிக்கிட்டு இருக்கான் கொஞ்சம் கூட பீல் பண்ணாம இப்படி பண்ணுறாளே இந்த பொண்ணு” செல்வா இந்த சூழ்நிலையை கையாளுவது என்று புரியாமல் பார்த்திருந்தான்.
“உனக்கு நான் சொல்லுறது புரியலையா? புரியாத மாதிரி நடிக்கிறியா?” தன்னை தள்ளிய சுரங்கணியை திரும்பிப் பார்த்துக் கேட்டான் சர்வேஷ்.
“எனக்கு எதுவும் தெரிஞ்சிக்க வேணாம். முதல்ல நீ கிளம்பு” சுரங்கணி அவனை கடையிலிருந்து வெளியேற்றுவதில்லையே குறியாக இருக்க,
“அப்போ உனக்கு நான் சொன்னது புரிஞ்சது. சீக்கிரம் உன் பதில சொல்லு. கல்யாணத்த பத்தி பேச வேணாம்” புன்னகைத்தவாறே சர்வேஷ் வெளியேறினான்.
“பார்டா. இப்போதான் அண்ணனையே வேவு பார்க்கணும் என்றாரு. சந்தடி சாக்குல இவருக்கு சாந்திமுகூர்த்தத்துக்கு நேரம் வேற பாக்குறாரு” செல்வா வாயில் கைவைத்தான்.