அத்தியாயம் 13

அய்யய்யயோ

ஆனந்தமே

நெஞ்சுக்குள்ளே

ஆரம்பமே

நூறு கோடி வானவில்

மாறி மாறி சேருதே

காதல் போடும் தூறலில்

தேகம் மூழ்கி போகுதே

ஏனோ ஒரு ஆசை

வா வா கதை பேச

அய்யய்யோ…

அய்யய்யய்யோ

அய்யய்யய்யோ…

 “ஏன்டா… காலையிலையே ஒப்பாரி வைக்கிற?” சரோஜா கிண்டல் தான் செய்தாள்.

தினமும் திட்டும் அன்னை வழமைக்கு மாறாக கிண்டல் செய்வாள் என்று கதிர் எதிர்பார்ப்பானா? “அம்மோய் நான் சந்தோசமா பாடுறது உனக்கு ஒப்பாரி வைக்கிறது போல தெரியுதா? போம்மா போ போய் சாப்பாடு எடுத்து வை”

“ஏன்டா அதான் உன் பொண்டாட்டி கூட ராசியாகிட்டியே அவ கிட்ட சொல்ல வேண்டியது தானே. பொண்டாட்டிய வேல வாங்க நோகுதோ?” கோபக்குரலில் சரோஜா கூறினாலும் முகத்தில் ஆனந்தம் தாண்டவமாடியது. அது கதிர்வேலுக்கு புரியவில்லை. 

“அவதானே சமைக்கிறா நீ சாப்பாடு போட்டாத்தான் என்னவாம்?” இவனும் விடாது பேச

“என்ன வீட்டு வேலைக்காரியாகவே வச்சிக்கலாம் னு புருஷனும் பொண்டாட்டியும் திட்டம் போடுறது பச்சயா தெரியுதுடா. உங்க ரெண்டு பேருக்கும் வேல செய்ய என்னால முடியாது. பேரனோ, பேத்தியோ இருந்தா… போனா போகுது என்று புள்ளய பாத்துகிட்டு வீட்டோட இருந்துட்டு போறேன்” என்றாள்.

அதன்பின் தான் கதிர்வேலுக்கு சரோஜா ஏன் இப்படி பேசுகிறாள் என்றே புரிந்தது.

சரோஜா இதுநாள் வரை இப்படி இருவரிடமும் பேசியதில்லை. கதிர்வேலிடம் “ஏன்டா குடிக்கிற? குடிச்சி நாசமாக்குற? உனக்கு பத்துவ பிடிக்கும் தானே அவ கூட சேர்ந்து வாழு” என்றுதான் சொல்வாள்.

“பத்மினியின் மேல் எந்த தவறும் இல்லையே. அவளிடம் என்ன பேச என்று எதுவும் பேச மாட்டாள். ஆனால் கதிர்வேல் நடந்துகொள்ளும் முறையால் “உன் புருஷன திருத்தி அவன் கூட வாழு” என்பாள்.

“அத்த சும்மா பேசமா போ.. போய் கீரையை ஆஞ்சி வை. நான் என் புருஷனுக்கு சாப்பாடு போடுறேன். நீ வா அத்தான்” என்று கதிர்வேலை அழைத்தாள் பத்மினி.

சரோஜா பேசியதை கேட்டு பத்மினிக்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று கூட புரியவில்லை. அத்தையை திட்டுவது போல் திட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

“அம்மோய் ஏய் அம்மோய் நீ சொல்லிட்டல்ல உன் ஆசைய சீக்கிரம் நிறைவேத்திடலாம்” என்ற கதிர்வேல் ஒரு பாட்டை முணுமுணுத்தவாறு பத்மினியின் பின்னால் சென்றான்.

“ஏன் செல்வா அண்ணா இப்போ இங்க என்ன நடந்தது? உண்மையிலயே சரோஜா அம்மா கோபப்பட்டாங்களா? இல்ல அண்ணிய சாப்பாடு போட சொல்லி சொன்னாங்களா?” சர்வேஷ் யோசனையாக கேட்க,

“எத்தனை சினிமா பாத்திருக்கேன். அம்மா ஒரு பக்கம் நடிக்குது, பையன் ஒரு பக்கம் நடிக்கிறான். உங்க குடும்பமாச்சே” என்று சர்வேஷின் முறைப்பை பெற்றுக் கொண்டான் செல்வா.

“மொறைச்சது போதும். நாம வந்த வேல முடிஞ்சிருச்சு. எப்போ நீங்கதான் கதிர் அண்ணாவோட தம்பி என்ற உண்மைய சொல்ல போறீங்க? ஊருக்கு கிளம்ப வேணாம்? இல்ல இந்த ஊருளையே தங்கலாம்னு நினைப்போ? காதல் கத்தரைக்காய் னு ஏலம் போட போனா எதுக்கு வந்தோம்னு கூட மறந்து ஊர சுத்துறது” எங்கயோ பார்த்தவாறு செல்வா சர்வேஷை பார்த்து கிண்டல் செய்தான்.

“வந்த வேல இன்னும் முடியல. இப்போதான் ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்திருக்காங்க. இன்னும் வேல இருக்கு” என்றான் சர்வேஷ்.

“கடைசி வரைக்கும் கல்யாணமாகம மொட்ட பையனா இந்த ஊருல குப்பை கொட்ட சொல்லுறீங்களா?”

“யாரு நீ? நீதான் அந்த லாவண்யா பொண்ணுக்கு ரூட்டு விடுறியே?”

“யார? அந்த சீசீடிவியையா? அந்த பொண்ணுக்கு கல்யாணமாகி கொழந்த வேற இருக்கு? நம்ம கண்ணுல மாட்டுறது எல்லாம் இப்படித்தான்” என்று முணுமுணுக்க வேறு செய்தான்.

யார் யார் வீட்டுப்பக்கம் வருகிறார்கள்? என்று லாவண்யா சின்ன சத்தம் கேட்டாலும் வெளியே வந்து பார்ப்பாள். அதனால் செல்வா அவளுக்கு சூட்டிய பெயர் தான் சீசீடிவி.

“நான் விசாரிச்சேன். கல்யாணமாகல” நாடியை தடவியவாறே கூறினான் சர்வேஷ்.

“என்ன கல்யாணம் ஆகலையா?” அதிர்ந்தவன் “இந்த காலத்து பொண்ணுங்கள நம்பவே முடியல. பால் வாடியிற மூஞ்ச வச்சிக்கிட்டு கல்யாணமாகுறதுக்கு முன்னாலையே பாப்பாவ சுமந்துக்கிட்டு திரியுதுங்க. எந்த புத்துல எந்த பாம்பிருக்கு என்று சும்மாவா சொன்னாங்க?” மனதுக்குள் இருக்கும் ரணத்தை வார்த்தைகளாக்கி துப்பினான் செல்வா.

“டேய் என்ன நடந்தது என்று தெரியாம தப்பா பேசாத” செல்வாவின் தலையிலையே தட்டினான் சர்வேஷ்.

“நான் என்ன தப்பா சொன்னேன். நீங்க சொன்னதைத்தான் சொன்னேன் தம்பிசார். கொழந்த பொறக்க கல்யாணம் ஆகணுமா என்ன? சின்னபுள்ளத்தனமா பேசுறீங்களே” செல்வா கிண்டல் செய்ய,

“போய்த் தொல, உனக்கு லாவண்யாவ பிடிச்சிருக்கு. ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க, அவ வாழ்க்கைல என்ன நடந்தது என்று சொல்லலாமே என்று பார்த்தேன். கிண்டலா பண்ணுற கிண்டல்” செல்வாவை பிடித்து தள்ளி விட்டான் சர்வேஷ்.

“தம்பிசார் தம்பிசார் லைப் மேட்டர் கொஞ்சம் கருணை காட்டுங்க. இப்படியெல்லாம் சொல்வேன்னு கனவு கூட காணாதீங்க. எனக்கு எங்க ஊருல அத்த பொண்ணு வைட்டிங். ஏதோ இந்த லாவண்யா பொண்ணு பார்க்க அழகா இருக்கானு சைட் அடிச்சேன். மலர் அழகா இருந்தா பல வண்டுகள் மொய்க்கத்தான் செய்யும் தம்பி. அதுக்காக நான் அந்த பொண்ண லவ் பண்ணுறேன்னு கதை கட்டுறதா? எந்த ஊரு நியாயம் இது?”

“டேய் நீங்க ரெண்டு பேரும் சாப்பிட வரலையா” என்று கதிர்வேல் உள்ளே இருந்து குரல் கொடுத்தான்.

“மனுஷனா பொறந்தா ஆயிரத்தெட்டு பிரச்சினை இருக்கத்தான் செய்யும். அவளுக்கு கல்யாணம் ஆகலனா… அது அக்கா புள்ளையா இருக்கும். இல்ல அண்ணனோட புள்ளையா இருக்கும். இத சொல்லுறேன்னு பஞ்சாயத்து பண்ணி அவளுக்கு வாழ்க கொடுக்க வச்சிடுவீங்க போல. பசிக்குது வாங்க. சர்வேஷ் முறைக்க, முறைக்க உள்ளே சென்றான் செல்வா.

எங்களால கடைல எல்லாம் சாப்பிட முடியாது அம்மா. இத்தனை நாளா கடைல சாப்பிட்டோம். இனிமேலாவது வீட்டு சாப்பாடு சாப்பிடணும் என்று ஆச படுறோம். பொருளெல்லாம் நாங்க வாங்கிட்டு வரோம். நீங்க சமைச்சி கொடுத்தா போதும்” என்ற சர்வேஷ் செல்வாவிடம் கூறி ஒரு மாதத்துக்கு தேவையான அனைத்து மளிகை பொருட்கள் மற்றும், மூன்று நாட்களுக்கு தேவையான காய்கறிகள், நாளாந்தம், மீன், இறைச்சி என்று வாங்கி வந்து கொடுப்பான்.

தேவையான பொருள் இருந்தால் சமைப்பதில் சரோஜாவுக்கு சிரமம் ஒன்றும் இல்லையே. அறையை கட்டி வாடகை அதில் கழிந்து போகும். வாங்கி வரும் பொருட்களுக்கு எப்படி கணக்கு பாக்குறது என்று சர்வேஷிடமே கேட்டாள்.

“என்னம்மா நீங்க? இதுக்கெல்லாம் கணக்கு பார்க்கணுமா? உங்களுக்கு இன்னொரு பையன் இருந்தா இதெல்லாம் செய்ய மாட்டானா? அப்படியே உங்களுக்கு சிரமமா இருந்தா இப்படி வச்சிக்கோங்களேன். நான் பொருள் வாங்கிட்டு வரேன் நீங்க சமைச்சி கொடுக்குறீங்கன். இந்த வீட்டுல, தண்ணி, கரன்ட்டு என்று எல்லாம் தான் நாங்களும் பாவிக்கிறோம். அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு” என்று சரோஜாவை சிந்திக்க விடாமல் செய்தான்.

“என்னங்கடா காலையிலையே மீட்டிங்க போட்டு பேசிகிட்டு இருக்கிறீங்க? என்ன விஷயம்?” சாப்பிட அமர்ந்த இருவரையும் பார்த்துக் கேட்டான் கதிர்வேல்.

“உங்க ரெண்டு பேரையும் ஹனிமூனுக்கு எங்க அனுப்பலாம் என்றுதான். இல்ல செல்வா அண்ணா” சர்வேஷ் தன் பேச்சில் செல்வாவை இழுத்தான்.

“பத்து கூப்பிட்டா நான் எங்க வேணாலும் போவேன். எத்தன நாள் வேணாலும் போவேன். அவ கூட இருந்தா போதும்” என்றான் கதிர்வேல்.

“தம்பி… உங்க அண்ணன் கில்லாடி தான். பொண்டாட்டிய எப்படி எல்லாம் கரெக்ட் பண்ணுறாரு. நீங்களும் இருக்குறீங்களே. இன்னும் அந்த சுரங்கணி புள்ளகிட்ட பல்பு வாங்கிகிட்டு” சர்வேஷை செல்வா வம்பிழுக்க,

சுடச்சுட சுட்ட தோசையை கதிர்வேலன் தட்டில் வைத்த பத்மினி “எங்கவேணாலும்னா என்ன அர்த்தம்? எங்க என்று சொல்லு?” என்றாள்.

“ஆகா… தோசைக்கு சட்னி அம்சமா இருக்கு” என்ற செல்வா. “உங்க அண்ணன் கிளம்ப தாயாகிட்டான். உங்க அண்ணி சம்மதம் சொல்லிட்டாங்க” என்றான்.

ஆகா மொத்தத்தில் கதிர்வேல் தேனிலவுக்கு செல்ல தயாராகிவிட்டான். பத்மினி அவன் கூட செல்ல சம்மதம் சொல்லி விட்டாள் என்பது அவர்களின் பேச்சில் சர்வேஷுக்கும் புரிந்தது. அவன் எந்த பதிலும் கூறாது. அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்தான்.

“உனக்கு எங்க போகணும் என்று சொல்லு அங்க போகலாம். பொதுவா நுவரெலியா போவாங்க. இல்ல பீச் சைட் போவாங்க. நீ எங்க போகணும் என்று சொல்லுறியோ அங்க போகலாம்” உன் விருப்பம் தான் என் விருப்பம் அதில் எந்த மாற்றமும் இல்லை என்று புன்னகைத்தான் கதிர்வேல்.

“நாம ட்ரிப் என்று எங்கேயுமே போனதில்ல. ஏன் நாம எல்லாரும் ஒரு வாரம் பத்து நாள் ஜாலியா பீச் சைட் போய் அப்பொறம் நுவரெலியா போய் சுத்திட்டு வரலாமே” என்றாள் பத்மினி.

“நாங்க என்றா?…” சர்வேஷ் சந்தேகமாக கேட்க

“நாங்க என்றா… நாங்க. நாங்க எல்லாரும். அம்மா, அப்பா, அத்த, நீங்க ரெண்டு பேரும், நாங்க ரெண்டு பேரும்” என்றாள் பத்மினி. 

“கிழிஞ்சது போ… அப்போ அது ஹனிமூன் ட்ரிப் இல்ல. பமிலி ட்ரிப்” என்றான் செல்வா.

“ஏன்டா நாம ட்ரிப்பு போற நிலமைலயா இருக்கோம்? சின்னங்சிறுசுங்க நீங்க எங்கயாச்சும் ரெண்டு நாள் போயிட்டு வாங்க” என்றாள் சரோஜா.

“அம்மா இப்போ என்ன காச பத்தி யோசிச்சு தானே நீ வரமாட்டேன்னு சொல்லுற? நான் சேர்த்து வச்ச காசு இருக்கு. வா போலாம்” என்றான் கதிர்வேல்.

“டேய் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு சேமிச்சு வச்ச காச இப்படி ஒரே நாள்ல செலவளிக்கிறது தப்பு. ஏதாவது இக்கட்டான சூழ்நிலையுனு வந்தா எவன்கிட்டயாவது கடன்படணும். அப்பொறம் கடன அடைக்கவே சம்பாதிக்கணும். இதுதான் நம்ம தலைவிதியா?. ஒன்னும் வேணாம். சொன்னா கேளு” கொஞ்சம் கோபக் குரலில் கூறினாள் சரோஜா.

“உண்மை தான். நம்ம சூழ்நிலை அதிகமா செலவழிக்க முடியாதுதான். அதுக்காக வாழ்க்கைல எதையுமே அனுபவிக்காம வாழ்ந்தோம், செத்தோம்னு இருக்க சொல்லுறியா?

அப்பா இருந்திருந்தா… அவர் சம்பாதிச்சு நீ ஆசைப்பட்டது போல நகை வாங்கி கொடுத்திருப்பார். நீ எங்கவெல்லாம் போகணும் என்று ஆசை படுறியோ அங்க எல்லாம் கூட்டிட்டு போய் இருப்பாரு.

ஒத்த புள்ள என்ன வளர்க்க நீ எவ்வளவு கஷ்டப்பட்ட. உன்ன சந்தோஷமா பார்த்துக்கணும் என்று எனக்கும் ஆசை இருக்கு இல்ல. அந்த ஆச பத்துவுக்கும் இருக்கு. நமக்கு நடுவுல வரக் கூடாது என்று நீ நினைக்கிற. நீ இல்லாம நம்ம குடும்ப இல்லனு நாம நினைக்கிறோம். புரிஞ்சிக்க” 

“டேய் இப்படி பேசி நெஞ்ச நக்காதடா. நீ இப்படியெல்லாம் பேசுறவன் கிடையாதே” தோளில் போட்டிருந்த துண்டால் கண்களையும், மூக்கையும் துடைத்தவாறு கூறினாள் சரோஜா.

பத்மினியின் கண்களும் கலங்கியிருக்க கண்களை சிமிட்டி தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவள் “அதான் அத்த சம்மதிச்சிட்டாங்களே. ட்ரிப்புக்கான ஏற்பாட்டை செய் அத்தான்” என்றாள்.

“ட்ரிப்பை அப்பொறம் போலாம் மொதல்ல தோசையை வைமா…” செல்வா கதற

“இவன் ஒரு தீனிப்பண்டாரம்” கதிர்வேல் சிரித்தான்.

“புது சமையலறையை கட்டி முடிச்சாச்சு ஏன் இன்னும் அடுப்பை பத்தவைக்காம இருக்கீங்க?  கரி படியும் என்றா? சீக்கிரம் பத்த வைங்கப்பா. நானே உங்களுக்கு தோசை ஊத்தி தாரேன்” கடுப்பானான் செல்வா.

“இன்னும் கொஞ்சம் வேல பாக்கி இருக்கே, கண்ணு தெரியலையா?  அங்கேயே உக்காந்து சாப்பிட ஒரு மேசையும் நாட்காலிகளும் போடலாம்னு பிளான் பண்ணுறோம்” என்று சர்வேஷ் சொல்ல

“டேய் நான் தரையில உக்காந்தே சாப்பிடுவேன்டா” என்றான் செல்வா.

“அதில்ல தம்பி புது சமயலறைக்கு புதுசா பாத்திரம் வாங்கலாம்னு பத்து சொன்னா. போக நேரம் கிடைக்கல. இன்னிக்கிதான் எனக்கு லீவு. போய் வாங்கிட்டு வரணும்” என்றாள் சரோஜா.

“அதான் விஷயமா? என் கிட்ட சொல்லி இருந்தா நானே போய் வாங்கிட்டு வந்திருப்பேன். இப்போ சமைக்க முடியாம, சாப்பிட முடியாம இருக்கேன்” புலம்பினான் செல்வா.

“அண்ணா… காலைல பச்சை தண்ணில ஊறிக்கிட்டு இந்த மண் அள்ளுற வேலையெல்லாம் வேணாம். பான் விக்கிற வேலையால நைட்டு வீட்டுக்கு வரவும் லேட் ஆகுது. நாம வேற ஏதாவது தொழில் பண்ண யோசிக்கணும்” என்றான் சர்வேஷ்.

“தம்பி என்ன சொல்லுறான்?” நீ ஆத்துல மண் கர போடுறியா? இது எப்போலா இருந்து?” சரோஜா அதிர்ச்சசியாக கேட்டாள்.

“ஏன் அத்தான் உனக்குத்தான் மழைல கொஞ்சம் நனைஞ்சாவே ஜலதோஷம் பிடிக்குமே. ஆத்துல இறங்கி இருக்க” தான் ஒன்றுமே அறியாமல் இருந்து விட்டோம் என்று கண் கலங்கினாள் பத்மினி.

வீட்டாருக்கு நிச்சயமாக இது தெரியாது. கதிர் நல்லவன். உழைப்பாளி. குடும்பத்தை பற்றி சதா எண்ணுபவன் என்று புரியவைக்க வேண்டியே கூறினான் சர்வேஷ்.

“டேய்….” என்று பல்லைக் கடித்தவாறு சர்வேஷை முறைத்த கதிர்வேல் “அது எப்பயோ போனது இப்போ இல்ல” கூறும் போதே சமாளிப்பது தெரிந்தது.

“நீ ஒன்னும் பொய் சொல்லாத. உன்ன எத்தனை தடவ குடிகாரன். சம்பாதிக்க துப்பில்லாதவன் என்று திட்டி இருப்பேன். ஒருவார்த்தை சொல்லி இருப்பியா? போ.. அத்தான்” கர கரவென கண்களிலிருந்து கண்ணீர் பெறுக, அடுத்து பேச முடியாமல் நின்றாள் பத்மினி.

“ஏய் பத்து… வேல வெட்டி இல்லாம இருந்தா தாண்டி அழணும். நான்தான் ஏதோ ஒரு வேலைக்கு போனேனே. அதான் இந்த பிரபு பிஸ்னஸ் பண்ணலாம்னு சொல்லுறான்ல. முதல்ல கண்ண தொட” அணிந்திருந்த லுங்கியை இழுத்து அவள் கண்களை துடைத்து விட்டான்.

“அப்பப்பப்பா… திரைல வந்தா க்ளப்சு காது ஜவ்வ கிழிக்கும். இல்ல தம்பி” என்ற செல்வாவை முறைத்த சர்வேஷை வாயில் கையை வைத்து “நீ மூடு” என்றான்.

மகன் கஷ்டப்படுகிறான் என்றதும் சரோஜாவுக்கு கவலையாகத்தான் இருந்தது. பத்மினியும், கதிர்வேலும் சேர்ந்ததை பார்த்ததும் நிம்மதியாக புன்னகைத்தாள்.

“அம்மா… தோசை கருகுது பாருங்க” செல்வா சொல்லி வாயை மூடவில்லை

“சரோஜா… சரோஜா… அடியேய் உள்ள இருக்கியா”

வாசலில் ரமேஷின் அன்னை புஷ்பவள்ளி அழைப்பது கேட்கவே “இவ எதுக்கு இங்க வந்தா” என்றவாறே சரோஜா வெளியே வர அனைவரும் அவள் பின்னால் வந்தனர்.

அங்கே புஷ்பவள்ளியோடு ரமேஷும் நின்றிருந்தான்.

“என்ன ஏழரையைக் கூட்ட வந்தான்னு தெரியலையே” என்ற சரோஜா அவர்களை பேச்சுக்கு கூட உள்ளே அழைக்காமல் “என்ன விஷயம்” என்று கொஞ்சம் கோபமாகவே கேட்டாள்.

“ஏன்டி… நீதானே இந்த சிறுக்கிக்கு உன் மகன கட்டி வச்ச” பத்மினியை முறைத்தாள் புஷ்பவள்ளி.

“அம்மா” என்று ரமேஷ் கத்த

“வார்த்தையை அளந்து பேசு நாக்க அறுத்துப்புடுவேன். என்ன பிரச்சினை பண்ணவென்றே காலைல கங்கணம் கட்டிக்கிட்டு என் வீட்டு வாசல்ல வந்து நிக்கிறியா?” சரோஜா பேச மற்றவர்கள் அமைதியாகத்தான் நின்றனர்.

“இங்க பாரு எனக்கென்ன தலையெழுத்தா காலையிலையே உன் வீட்டுக்கு வந்து கோலம் போட? இதோ இவ இருக்காளே இவளுக்கு ஒரு புருஷன் பத்தாதாம் என் மவனும் வேணுமாம்” என்று மீண்டும் பத்மினியை பார்த்து முறைத்தாள்.

புஷ்பவள்ளிக்கு தலையெழுத்தா என்ன? காலங்காத்தால மகனை அழைத்துக் கொண்டு வந்து சரோஜாவின் வீட்டு வாசலில் நின்று கத்தி கூப்பாடு போட? பத்மினி கதிர்வேலை வீட்டாரின் கட்டாயத்தில் திருமணம் செய்து மனதளவில் பல இன்னல்களுக்கு ஆளாக்கிக் கொண்டிருப்பதாகவும். அவள் இன்னும் தன்னைத்தான் விரும்புவதாகவும். தன்னோடு வந்து வாழ அழைத்தால் புஷ்பவள்ளியின் சம்மதம் இல்லாமல் பத்மினி வரமாட்டேன் என்று மறுத்ததை கூறிக் கூறி ரமேஷ் தினமும் வீட்டில் செய்யும் தொல்லை தாங்க முடியாமல் தான் வந்தாள்.

பத்மினியை பார்க்க பார்க்க, இவள் எப்படி என் மகனிடம் தான் சம்மதித்தால் கதிர்வேலை விட்டு வருவதாக கூறினாள் என்று ஞாபகம் வர கோபத்தை அடக்க முடியாமல் தான் பேசினாள்.

“என்ன தம்பி சார் இது? ஒரு பிரச்சினை இப்போதான் ஓஞ்சது? புதுசா ஒன்னு கிளம்பி வந்திருக்கு?” செல்வா என்னதான் நடக்குது என்று தலையை சொரிந்தான்.

சர்வேஷ் எதுவும் பேசவில்லை. பிரச்சினை என்னவென்று அறிந்தால் தானே பேச முடியும்?

“ஏய் புஷ்பவள்ளி… பெரியம்மா… பெரியமனிஷியா பேசு. இல்ல இல்ல மரியாதை, மரியாதை கெட்டுடும் பாத்துக்க” என்ற கதிர்வேல் “என்னடா உங்கம்மாவ பேச விட்டு வேடிக்க பாக்குறியா?” என்று இவன் ரமேஷை முறைத்தான்.   

“அம்மா உன்னால கண்டவனெல்லாம் என்ன திரட்டுறான். எதுக்கு வந்தோம் என்று பேசாம ஏன் வீணா பிரச்சினை பண்ணிக்கிட்டு இருக்க?” ரமேஷ் கதிர்வேலை முறைத்தான்.

“டேய் நான் கண்டவன் இல்லடா பத்மினி புருஷன். உனக்கு இன்னும் புரியலையா?” நக்கலாக சிரித்தான் கதிர்வேல்.

நேற்றுவரை இதை செல்ல அச்சப்பட்டுக் கொண்டிருந்தவன் பத்மினியே அவன் பக்கம் வந்துவிட்டதால் இனிமேல் நெஞ்சை நிமிர்த்தி தைரியமாக சொல்ல என்ன தயக்கம்? சொல்லும் பொழுது பத்மினியின் கையை கோர்த்துக்கொள்ள வேறு செய்தான்.

“என்ன பத்து இதெல்லாம்? எங்கம்மா சம்மதிச்சா? என் கூட வருவான்னு சொன்னியே. என் அம்மா சம்மதிச்சிட்டுட்டாங்க. வா போலாம்” பத்மினியின் கையை கோர்த்திருக்கும் கதிர்வேலன் கையை பார்த்தவாறே கேட்டான் ரமேஷ்.

கதிர்வேல் பத்மினியின் கையை பற்றும் பொழுது பத்மினி கையை உதராதது ரமேஷின் மனதுக்கு நெருடலாகத்தான் இருந்தது. கதிர்வேல் பத்மினியை பயமுறுத்தி இருப்பான். கட்டாயப்படுத்தி அவன் கூட இருக்க வைக்கிறான் என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டான். 

“என்னடி என் மவன்தான் கேக்குறானில்ல. வாயில ன்ன புட்டா? என்னமோ சொன்னியாமே நான் சம்மதிச்சா என் மவன் கூட வந்துடுவான்னு. எங்க உன் அத்தையும், புருஷனும் இங்கதான் இருக்காங்க சொல்லேன்? உன் அத்தையே உன் நாக்க அறுத்து அந்த நாய்க்கு போடும்” படுத்துக் கொண்டிருந்த மணியை பார்த்துக் கூறினாள் புஷ்பவள்ளி.

“ஏய் என்னடி இது? இவ என்னென்னமோ சொல்லுற? நீ புட்ட முழுங்கினது போல அமைதியா நிக்குற? சொல்லித்தொல” பத்மினியை பார்த்து சீறினாள் சரோஜா.

பத்மினி என்னவென்று சொல்வாள்? ஆம் அவள் அவ்வாறு கூறினாளே. ஏன் அவ்வாறு கூறினாள்? ரமேஷ் புஷ்பவள்ளியிடம் சென்று தான் கூறியதை கூறினாள் ரமேஷை அவள் அடித்து வழிக்கு கொண்டு வருவாள் என்று தானே கூறினாள். இப்படி வீட்டுக்கு வந்து பிரச்சினை செய்வாள் என்று எண்ணினாளா? இப்படி நடப்பதாக இருந்தால் அன்று அப்படியொரு வார்த்தையை கூறியிருக்க மாட்டாள்!

“ஏன்டா ராத்திரி தனியா வேலைக்கு போயிட்டு வர பொண்ணுகிட்ட கைய புடிச்சி இழுத்து வா கல்யாணம் பண்ணிக்கலாம், ஊர விட்டு ஓடலாம் னு கூப்பிட்டா… உன் கிட்ட இருந்து தப்பிக்க என் பத்து என்னவோ சொல்லி இருக்கா. அத தூக்கி பிடிச்சிக்கிட்டு இங்க வந்து நிக்குறீயா? நியாயமா பார்த்தா… ராத்திரி தனியா வந்த என் பொண்டாட்டி கிட்ட தப்பா நடக்க பார்த்த என்று உன்ன போலீஸ்ல புடிச்சி கொடுத்திருக்கணும். எதோ மறுவாழ்வு மையத்து போயிட்டு வந்திருக்க, மனநல காப்பகத்துக்கு போகணுமான்னு விட்டுட்டேன்” என்றான் கதிர்வேல்.

  

“என்னடா சொல்லுற? எடுபட்ட பய. கைய புடிச்சி இழுத்தானா? ஏன்டி சொல்லல? செவுட்டுலயே ரெண்டு போட வேணாம்” என்ற சரோஜா ரமேஷை அறைந்து விட்டாள்.

“ஏய் என் பையன் மேலயா கை வைக்கிற?” என்று புஷ்பவள்ளி சரோஜாவை அடிக்க முனைய,

வேடிக்கை பார்த்திருந்த சர்வேஷும், செல்வாவும் நடுவில் புகுந்து இருவரையும் பிரித்து விட்டனர்.

“ரமேஷ். எனக்கு என் அத்தானைத்தான் பிடிச்சிருக்கு. தயவு செஞ்சி. என்ன என் அத்தானோட நிம்மதியா வாழ விடு. போ… இங்க இருந்து போ…” பத்மினி கத்த

“போதுமாடா… உனக்கு போதுமா? என்னமோ உன் மினி. உன் மினி என்று சொன்னியே. அவளுக்கு அவ அத்தான்தான் வேணுமாம். வா போலாம்” புஷ்பவள்ளி ரமேஷை இழுத்துக் கொண்டு போக,

“மினி… மினி… மினி…” கெஞ்சியவாறும், அழுதவாறும் சென்றான் ரமேஷ்.

மழை பொழிந்து ஓய்ந்தது போல் சட்டென்று அவ்விடமே நிசப்தமானது. சரோஜா உள்ளே சென்றாள்.

“நடந்தத நெனச்சி நீ மனச போட்டு குழப்பிக்காத பத்து. உன் மேல எந்த தப்பும் இல்ல. நீ என்ன சொல்லி இருந்தாலும் அவன் நன்மைக்காகத்தான் இருக்கும்” என்றான் கதிர்வேல்.

“தங்க யு அத்தான். இப்போதான் நாம பிரச்சினை இல்லாம ஒண்ணானோம். நான் எதோ சொல்ல போய் அத அவன்…” என்று பத்மினி எதோ சொல்ல வர

அவள் வாயில் விரல் வைத்து தடுத்தவன் “இங்க பாரு. நீ எந்த விளக்கமும் கொடுக்க வேணாம்” என்றான்.

அவன் கையை பற்றியவள். அவன் நெஞ்சில் சாய்ந்து “இல்ல இப்போதான் நான் உன்ன புரிஞ்சி கிட்டேன். அதுக்குள்ள எங்க நீ  என்ன தப்பா புரிஞ்சிகிட்டு உன் கிட்ட இருந்து விலக்கி வைப்பியோன்னு பயந்துட்டேன்” என்றவள் அவனை இறுக கட்டிக் கொண்டாள்.

 “தம்பிசார்…. தம்பிசார்… அங்க என்ன ளுக்கு? இது ஒன்னும் திரையில வரும் காதல் காட்ச்சி இல்ல. கண்டு கழிக்க. உங்க அண்ணனோட வாழ்க. கூட இருக்குறது உங்க அண்ணி. தப்பா தோணல. கண்ணு பட்டுட போகுது. இப்படி பார்க்கக் கூடாது என்று உங்களுக்குத் தெரியாதா? சினிமால நடிச்சி நடிச்சி உண்மை எது? பொய் எது? என்று கூட இவருக்கு தெரியல. இப்படி குறுகுறுன்னு பாக்குறது தப்பு” செல்வா கிண்டல் செய்தவாறே சர்வேஷை அங்கிருந்து கிளப்ப முயன்றான்.

கதிர்வேலை பார்த்திருந்த சர்வேஷுக்கு கதிர்வேல் நடிக்கிறானோ என்ற சந்தேகம் எழுந்தது.