பத்மினிக்கு இப்பொழுது தனிமை அவசியம். ஆனாலும் அவளை தனியாகவும் விடமுடியாது. நல்லதம்பி சமையலறையை கட்டிக் கொண்டிருப்பதால் பத்மினிக்கு துணையாக இருப்பார் என்று பத்மினியை வீட்டில் இறக்கிய சர்வேஷ் நேராக வந்தது சிறிசேன முதலாளியின் கடைக்கு.
“வாங்க தம்பி என்ன இந்த பக்கம்? சவாரி கிடைக்கலையா?” செல்வா நக்கலாகவே ஆரம்பித்தான்.
“டேய் செல்வா அண்ணா. நீ என்ன இந்த ஊருல இந்த கடைல எடுபிடியாகவே இருந்திடலாம் னு முடிவே பண்ணிட்டியா? காலையிலையே கடைக்கு வர, மாங்கு மாங்குனு கடைல வேல பாக்குற. நாம எதுக்கு இங்க வந்தோம் எங்குறதையே மறந்துட்டியா?” செல்வாவை பதிலுக்கு கிண்டல் செய்தான் சர்வேஷ்.
“சினிமாலதான் நடிக்க முடியல. மேனேஜரா குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன். நிஜ வாழ்க்கைல நடிக்க சான்ஸ் கிடைச்சிருக்கே பின்னி பெடலெடுக்க மாட்டேன்?” சர்வேஷ் தன்னை கிண்டல் செய்கிறான் என்றதும் டேய் நானும் நடிகன் தாண்டா என்று வடிவேல் பாணியில் பதில் சொன்னான் செல்வா.
சத்தமாக சிரித்த சர்வேஷ் “எல்லாருக்கும் நடிக்கிறதுக்கு மட்டும்தான் சம்பளம் கொடுப்பாங்க. உனக்கு கடைல வேல பாக்குறத்துக்கும் சம்பளம் கிடைக்குது என்ஜோய்” என்று மீண்டும் நக்கல் செய்தான்.
“பயபுள்ள விடவே மாட்டானே. இதோ வரேன்” என்ற செல்வா “நடிக்கிறதுக்கு ஒழுங்கா சம்பளம் கொடுத்தா நான் எதுக்கு கடைல காசு வாங்க போறேன். எனக்கு ஏகப்பட்ட செலவு இருக்கு” சர்வேஷ் கொடுக்கும் சம்பளம் பத்தவில்லை என்று சந்தடி சாக்கில் சொல்லிக் கொண்டான்.
“ஒண்டிக்கட்ட உனக்கு அப்படி என்னடா செலவு? இங்க வந்ததுல இருந்து திங்குறது, தூங்குறது என்று எல்லா செலவும் என் பொறுப்பு. சம்பளத்தை அப்படியே உன் பேங்க் அக்கவுண்ட்டுலதானே போடுற? பத்தாததுக்கு கடைல வேற சம்பளம் வாங்குற” கடைசி வாக்கியத்தோடு சர்வேஷ் உதிர்த்த சிரிப்பில்லையே நக்கல் கொட்டிக் கிடந்தது.
“எனக்கும் குடும்பம் இருக்கு பாஸ்” என்று சொல்லுவானென்று நினைத்தால் “ஊரா இது? ஊரானு கேக்குறேன். டேடா விலைக்கு ஈகுவலா வரி கேக்குறான். காற்றாலைக்கு வந்த சோதனையை நினச்சா…”
“ரீலோட் கூட என் காசுலதான் டா போடுற” சட்டென்று சொல்லி சிரித்தான் சர்வேஷ்.
“மறந்திட்டீங்கனு நினச்சேன் மறக்காம ரீலோட் பண்ணிடுங்க தம்பி. இல்லனா கடைல கொடுக்குற சம்பளம் ரீலோட் போட்டே காலியாகிடும்” தீவிரமான முகபாவையில் சொன்னான் செல்வா.
“நீ ரொம்ப நல்லவன்டா… ஓசியிலையே ஓட்ட வண்டியோட்டி ஓட்டோ வாங்கி அதுக்கு ஏரோபிலேன் என்று பேரும் வைப்ப”
“ஐயோ புகழாதீங்க. எனக்கு புகழ்ச்சி பிடிக்காது” வெட்கப்படுவது போல் நடித்தான் செல்வா.
“உன்ன என்ன பண்ணலாம்” என்று சர்வேஷ் செல்வாவை முறைக்க சுராங்கணி சிறிசேன முதலாளியோடு சண்டை போடுவது கேட்டது”
“இங்க என்ன பிரச்சினைனு தெரியலையே” தாத்தாவும் பேத்தியும் சிங்கள மொழியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, என்ன பிரச்சினையாக இருக்கும் என்று எட்டிப் பார்த்தான் சர்வேஷ்.
“சார் முதலாளி உங்காள அடிச்சிடப் போறாரு. போங்க. போய் காப்பாத்துங்க என்று கிண்டல் செய்தான் செல்வா.
“ஐயோ இவள என் தலேல கட்டாம தூங்க மாட்டான் போலயே” என்று சர்வேஷ் நினைத்தாலும் பிரச்சினை என்னவென்று சிறிசேன முதலாளியை நெருங்கிக் கேட்டான்.
“அது ஒண்ணுமில்ல தம்பி. நேத்து அந்த லாவண்யா பொண்ணு வந்து குழந்தைக்கு பால்மா வாங்கிட்டு போச்சு. அந்த பால்மா வேற விலை அதிகம். ஏற்கனவே வாங்கின நாலு பாக்கட்டுக்கு காசு மிச்சம் வச்சுருக்கா. இது தெரியாம இந்த பொண்ணு பாதி காச வாங்கி பால்மா பாக்கட்டை கொடுத்து விட்டிருக்கா.
ஒன்னு என் கிட்ட கேட்டிருக்கணும். இல்லையா யார் யார் கடனுக்கு பொருள் வாங்கி சென்றிருக்கிறாங்க என்ற புத்தகத்த பார்த்திருக்கணும்.
பாக்கட் காணோம் னு கேட்டாத்தான் சொல்லுறா லாவண்யாவுக்கு கொடுத்தாளாம். இப்படியே கடனுக்கு கொடுத்துக்கிட்டு இருந்தா கடைய மூட வேண்டியதுதான். அது என்ன இந்த பால்மா தான் கொடுக்கணுமா? காசு இல்லனா விலை குறைஞ்ச பால்மாவை கொடுக்க வேண்டியது தானே” மூச்சை பிடித்தவாறு கூறி முடித்தார் சிறிசேன முதலாளி.
“ம்ம்… பணம் இருக்குறவனுக்கு பருப்பு சோறு இல்லாதவனுக்கு பழைய சோறு. ஒண்ணுமில்ல தம்பி என்று எல்லாத்தையும் சொல்லிட்டாரு. பெருசுக்கு குசும்புதான். தான் சாப்பிடலானாலும் குழந்தைக்கு கொடுக்கணும் என்று என்று எண்ணுறவ தான் தாய். இருக்குறதுலையே நல்லதா பார்த்துதான் கொடுப்பா? கண்டதையுமா கொடுப்பா?” செல்வா முணுமுணுத்தான்.
“இப்போ என்ன தாத்தா சத்தம் போடுறீங்க? சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறாங்க. குழந்தையோட பால்மா தானே ப்ரீயா கொடுத்துட்டு போங்களேன்” என்றாள் சுராங்கணி.
“ஏம்மா நான் ஒன்னும் தன்ஸல் {தானம்} கொடுக்கல. வியாபாரம் செய்யிறேன். உனக்கு தானம் கொடுக்கணும் என்றா வேறயா பொருட்கள் வாங்கி தானம் செய். உன் அப்பாவும் இப்படித்தான். அவனை எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வச்சேன். அரசாங்க வேலையும் வாங்கினான். ஆனா நாட்ட திருத்துறேன்னு அரசியல்வாதிகளுக்கு எதிரா கொடி புடிச்சி கிட்டு போராட்டம் பண்ணி அனாமத்தா ஜெயிலுக்கு போனான்.
வெளில வந்தும் அமைதியானானா? பழைய ஜனாதிபதியை தொரத்த போராட்டம் பண்ண வேலையைக்கு லீவு போட்டு கோல் பேஸ்ஸுல கூடாரத்துல தங்கி இருந்தான். அவனுக்கு தலை விதியா? அவன் செலவுக்கு நான் காசு அனுப்பினேன்.
கடைசில என்ன ஆச்சு? புது ஜனாதிபதி வந்தான். மக்களை பாதுகாக்க வேண்டிய ஆர்மிய வச்சே அடிச்சி துரத்திட்டான் இல்ல. காயமாகி ஹாஸ்பிடல்ல இருந்தும் திருந்தல்ல. திரும்ப அரசியல் பேசிகிட்டு இருக்கான். விளங்காத பய” மகனை கண்டமேனிக்கு திட்ட ஆரம்பித்தார்.
சுராங்கணி உதவி செய்ய வேண்டும் என்று எண்ணுவதில் தவறில்லை. அவளது நல்ல மனசும் புரிகிறது. ஆனால் தொழில் என்றால் தொழிலாக செய்ய வேண்டும் அதில் கருணை பார்த்தால் கடையை இழுத்து மூடி விட்டு வீட்டில் இருக்க நேரிடும். தானம் செய்ய வேண்டும் என்றால் அதை முறைப்படி செய்ய வேண்டும். இவர் சொல்லுறதும் சரிதான் என்று பார்த்திருந்தான் சர்வேஷ்.
மொழிகளை கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருப்பதால் இந்த கொஞ்சம் நாட்களிலையே சிங்கள மொழியை சரளமாக பேச கற்றுக்கொண்டிருந்தான். அதனால் அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்று அவனுக்கு தெளிவாகவே புரிந்தது.
“மாற்றம் வரணும் என்றா போராட்டம் பண்ணிதான் ஆகணும். ஆர்மியோட வேல நாட்டோட எல்லையை பாதுகாக்கிறது மட்டுமில்ல. நாட்டுக்குள்ள கலவரம் வராம பாத்துக்கணும். ஜனாதிபதி உத்தரவு போட்டா அத அவங்க மீரா முடியாது. மீறினா ஆர்மிக்கே என்று இருக்குற கோட்டுல நிறுத்துவங்க. அவங்களுக்கும் பிரச்சினை இருக்கு. அவங்கள குத்தம் சொல்லி என்ன செய்ய? அவங்களும் எங்களை போல சாதாரண குடும்பத்துல இருந்து வந்தவங்கதான். வாக்குவாதம் தடியடியில் முடிஞ்சது” என்றாள்.
“உன் கூட பேசி பிரயோஜனமில்ல. உன் அப்பன் கடை பக்கம் வர்றதுமில்லை. என்ன? ஏது? என்று கேக்குறானுமில்ல. நான் உசுரோட இருக்குறவரைக்கும் என் கடைய என் இஷ்டப்படி செய்ய விடுங்க” பேத்தியை திட்டியவாறே சிறிசேன முதலாளி வெளியே சென்றார்.
“ஆமா ப்ரோடஸ்ட்ல நடந்ததெல்லாம் பக்கத்துல இருந்தது பார்த்தது போல சொன்னீங்க. டிவில பார்த்துத்தானே சொன்னீங்க” கிண்டலாக செல்வா கேட்டான்.
சுராங்கணி உருவத்தில் கொஞ்சம் பூசினால் போல் இருப்பாள். அளவான உயரத்தில் இருந்தாள். முடியை வேறு நீளமாக வார்த்து தினமும் பின்னலிட்டு கடையில் அமர்ந்திருப்பாள்.
இந்த காலத்தில் எந்த பெண் இப்படி ட்ரெஸ்ஸு போடுறா? நீளமான முடியை வைத்திருக்கின்றாள்? அப்படியே இருந்தாலும் விரிச்சி போட்டுக்கிட்டு பேயா அலையும்” என்ற மைண்ட் வாயிசை இழுத்து நிறுத்தினான் செல்வா.
இடுப்புக்கு கீழே ஆடும் அவளது நீளமான ஜடையை பார்த்து “தயிர்சாதத்துக்கு” சிங்களத்துல என்ன சொல்வாங்களோ தெரியலையே? அம்மாஜி மாதிரி இருக்கா இவள போய் தம்பிசாருக்கு எப்படித்தான் பிடிச்சதோ?
ஆ… லவ்வு யார் மேல், எப்போ வரும் என்று யாருக்குத் தெரியும்? வருங்கால எஜமானி நல்லா காக்கப்புடி” என்றது செல்வாவின் மனம்.
போராட்டத்தை பற்றி சுராங்கணி பேசுவதை பார்த்து “படிச்ச புள்ள நியூசை பார்த்து பேசுது” என்று எண்ணித்தான் கேட்டான்”
“ஆமா… ஆமா….” என்ற செல்வாவுக்கு சர்வேஷ் இறுதியாக நடித்த படத்துக்காக காலேஜ் மாணவனாக சூட்டிங்கில் எவ்வாறு போராட்டம் செய்தான் என்று நினைக்கையில் சிரிப்பாக இருந்தது.
“அப்போ கொலோம்போ வரலையா?” சுராங்கணி சாதாரணமாக கேட்டாள்.
“நடந்தே வந்தோம் சுராங்கணி” என்றான் சர்வேஷ்.
கொழும்பில் போராட்டம் நடைபெறும் பொழுது எல்லா ஊரிலிருக்குதும் ஒருநாள் நடந்தே கொழும்புக்கு போராட்டக்காரர்கள் சென்றது உலக செய்தியாச்சே. சட்டென்று ஞாபகத்தில் வர சொன்னான் சர்வேஷ்.
“என் பேர் ஒன்னும் சுராங்கணி இல்ல. சுரங்கணி. சுரங்கணி. எதுக்கு சுராங்கணி…. சுராங்கணி…. என்று இழுக்குறீங்க” என்று முகம் சுளித்தாள்.
“அப்படியா… விஜே ஆண்டனி கூட அப்படித்தான் பாடினாரு, கொக்கரை கொக்கரை கோ… னு தளபதி கூட அப்படித்தான் பாடினாரு. அதான்” செல்வா பாடிவேற காட்ட,
“கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க. உங்களுக்கு சுரங்கணி என்று யார் பேர் வச்சது?” உலகத்துல இவ்வளவு பெயர் இருக்க இவளுக்கு யார் இந்த பெயரை வைத்திருப்பார்கள் இது சில நேரம் சர்வேஷின் மண்டைக்குள் ஓடும் கேள்விதான் இன்று தான் தைரியமாக கேட்டிருந்தான். அவனுக்கு அவளை பிடிக்கிறதா? இல்லையா? தெரியவில்லை. அவள் பெயர் ரொம்பவே பிடித்திருந்தது.
“தாத்தா தான்” சர்வேஷுக்கு இருந்த ஆர்வம் பதில் சொல்லும் சுரங்கணிக்கு இல்லை. அவள் சாதாரணமாகவே பதில் கூறினாள்.
“முதலாளியோட பழைய காதலியோடு பெயரா இருக்குமோ?” என்ற செல்வாவை முறைத்தான் சர்வேஷ்.
“யாருத் தெரியும்” அதையும் சுரங்கணி பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
“ஆமா சுரங்கணி ப்ரோடேஸ்ட்ல நடிகர்கள் கூட கலந்து கொண்டாங்கள்ல. அது மாதிரி எந்த பிரச்சினை வந்தாலும் அவங்க கலந்துகொள்ளணும், தட்டிக்கேட்கனும் என்று நினைக்கிறீங்களா?”
சர்வேஷ் ஒரு நடிகன். இலங்கையில் இவ்வளவு பிரச்சினை போய் கொண்டிருக்கிறது. ஒரு நடிகனாக நீ குரல் கொடுத்தியா? ஒரு அறிக்கையாவது விட்டியா? என்று சுரங்கணி நாளைக்கு கேட்டு விடக் கூடாதே என்று செல்வா சாதாரணமாக கேட்டு விட்டு காதை தீட்டினான்.
“அதான் ஒரு நடிகன் குரல் கொடுத்தா… அவன் அப்படி பேசிட்டான். இப்படி பேசிட்டான். அவமரியாதையா நடத்து கிட்டான். அவமானப்படுத்திட்டான் மன்னிப்பு கேட்கணும். என்று ஒரு கும்பல் கிளம்பிடுவாங்க. பேசலானா…. அமைதிகாக்குறாங்க. மக்கள் பிரச்சினையை கண்டும் காணாதது போல இருக்காங்க என்று ஒரு கும்பல் பேசுவாங்க. பேசி பிரச்சினையாகுறத விட அமைதியாக இருக்குறது மேல். பேசுறத விட செயல்ல காட்டுறது சிறப்பு. இது நடிகர்களுக்கு மட்டுமில்ல ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தான்
அவங்களும் எங்களை போல சாதாரண மனுஷங்க தான் சூப்பர் பவர் இருக்குறவங்க இல்ல. யாரானாலும் தனியா குரல் கொடுத்தா செல்லாது. ஒண்ணா குரல் கொடுத்தா தான் உண்டு.
நிரஞ்சன் இருக்காரே….
“யாரு அவரு”…
“நடிகர் தானே அண்ணா… ஓஹ்… சிங்கள படம் பார்க்க மாட்டீங்களா. ஆனா அவர் அரசியல்வாதியாச்சே. அவரை தெரியாதா?” என்ன இவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்கிறார்கள் நிரஞ்சனை தெரியாது என்கிறார்கள் என்று சுரங்கணி பார்க்க,
“ஓஹ்… அவரா அவருக்கென்ன” என்று சமாளித்தான் சர்வேஷ்.
“மக்களுக்கு நல்லது செய்யணும் என்று நினைச்சி அரசியலுக்கு வந்துட்டாரு போல. உள்ள வந்தா எல்லாம் கள்ளனுங்க. மீடியா முன்னாடி எதிர்க்கட்சியும், ஆளும்காய்ச்சியும் கூட்டாளிங்க தம்பி என்று ஒரு ஸ்டேட்மென்ட் வச்சாரு. அது என்ன? இது என்ன? என்று கேள்வி கேக்க ஆரம்பிச்சதும் தூக்கி உள்ள வச்சிட்டாங்க. சமீபத்துலதானே வெளிய வந்தாரு”
“சரிதான்” என்ற சுரங்கணி பொருள் வாங்க கடைக்கு ஆள் வரவே அதை கவனிக்கலானாள்.
பார்க்க சாதுவான பெண்ணாக இருப்பவள், இவ்வளவு தைரியமான பெண்ணா? சுரங்கணியை பார்த்திருந்த சர்வேஷுக்கு இன்று அவள் வித்தியாசமாக தெரிந்தாள். அவன் பார்த்து பழகிய எல்லா பெண்களுமே தங்களுடைய வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேணும், பணம் சம்பாதிக்க வேணும் என்று ஓடிக்கொண்டிருப்பவர்கள். பணம் என்ற ஒன்று இருந்தால் போதும் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடலாம். நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருந்து விடலாம் என்று நினைப்பவர்கள்.
சாமானிய மக்களுக்கு எவ்வளவு பிரச்சினைகள் இருக்கு? அப்படி இருக்கும் பொழுது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஒன்றென்றால் பொதுநலமாக சிந்திப்பவர்கள் எத்தனை பேர்? செயல்படுபவர்கள் எத்தனை பேர்? அதிலும் தங்களை அடித்த ஆர்மியை கூட விட்டுக் கொடுக்காமல் அவர்களின் நிலையை கூட இந்த பெண் சரியாக புரிந்து வைத்திருக்கிறாள். எத்தனை பேர் தான் பிரச்சினையை என்று வரும் பொழுது எதிரியாளியின் பக்கமிருந்து சிந்திப்பார்கள்? இவள் வித்தியாசமானவள் தான்” தனக்குள் புன்னகைத்தவன் அவளையே பார்த்திருந்தான்.
“தம்பி இப்படி பப்லிக்கா சைட் அடிக்கக் கூடாது. கடைக்கு வர்றவங்க முதலாளிகிட்ட போட்டுக் கொடுத்தா எனக்கு வேல போய்டும்” நக்கல் செய்தான் செல்வா.
“ஆமா பெரிய கலெக்டர் வேல. போனா போய் குப்பை அல்லு” என்ற சர்வேஷ் சிரித்தவாறே கடையிலிருந்து வெளியேறினான்.
மதிய உணவுக்கு கமலத்தின் வீட்டுக்கு சென்றவனின் புன்னகை மாறாமல் இருக்க, “என்ன தம்பி லாட்டரி அடிச்சது போல முகம் பளிச்சுனு இருக்கு?” என்று கமலம் கேட்டாள்.
“ஒண்ணுமில்ல அத்த என்றவன் நல்லதம்பிக்கும், பத்மினிக்கும் மதிய உணவை எடுத்துச் சென்று கொடுத்தான்.
பத்மினி அழுது ஓய்ந்து தெளிவாக இருந்தாள்.
“உங்க அண்ணன் எங்க போய் இருக்காரு” சர்வேஷின் முகத்தை கூட பார்க்கவில்லை. அவன் கொடுத்த உணவு பாத்திரங்களை வாங்கிக் கொண்டவளுக்கு குற்ற உணர்ச்சி இதயத்தை இறுக்கிக் கொண்டிருக்க, கதிர் எங்கே என்று கேட்கவே மனம் வரவில்லை. இதில் என் கணவன் எங்கே என்றா கேட்பாள்?
சர்வேஷுக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தாலும், எல்லா பிரச்சினைகளும் ஓய்ந்து விட்டது. இனி இருவரும் பேசி சேர்ந்து வாழ மட்டும் தான் இருக்கிறது என்று அண்ணன் கம்பியூட்டர் கிளாஸ் போய் இருப்பாரு. இல்ல கல்லு வியாபாரத்துல போய் இருப்பாரு” என்றான்.
“கல்லு வியாபாரத்துல போனா பன்னெண்டு மணி, ஒரு மணிக்கெல்லாம் வீட்டுல இருப்பாங்க” என்றவள் கம்பியூட்டர் கிளாஸா?” என்று ஆச்சரியப்பட்டாள்
“அண்ணன் பொறக்க போற குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுக்கணும் என்று அவர் படிக்கிறாரு” சாதாரணமாக சொல்வது போல் சொன்ன சர்வேஷ் அங்கிருந்து கிளம்ப. அவன் சொன்னதை கேட்டு “என்ன?” என்ற பத்மினி மனம் நிறைய புன்னகைக்கலானாள்.
செல்வாவுக்கு மதிய உணவை எடுத்துக்கொண்டு சர்வேஷ் கடைக்கு வர “நீங்க எதுக்கு தம்பி வந்தீங்க. நான் வீட்டுக்கு வந்தே சாப்பிட்டு இருப்பேனே” என்றான் செல்வா.
சிலநேரம் சவாரிக்கு செல்லும் பொழுது சர்வேஷ் செல்வாவுக்கு உணவு கொண்டு வந்து கொடுப்பான். அதனால் செல்வா கிண்டல் செய்யாமல் சாதாரணமாக கூறினான்.
ஆனால் சர்வேஷ் சுரங்கணியின் நினைவில் இருந்ததால் “இல்ல சிறிசேன முதலாளி கோவிச்சிட்டு போனாரே. வந்துட்டாரா? என்ன ஆச்சு என்று பாக்க வந்தேன்” இவனும் சாதாரணமாக சொன்னான்.
“செல்வா அண்ணாக்கு சாப்பாடு கொடுக்க வந்தீங்களா?” என்று சுரங்கணி சர்வேஷை பார்த்துக் கேட்க,
புன்னகையிலையே பதில் சொன்னவன் “உங்க தாத்தா கோவிச்சிட்டு போனாரே வந்தாரா?” கடைக்குள் எட்டிப் பார்த்தவாறே இவன் கேட்டான்.
“கோபமா? தாத்தாவுக்கு என் மேலா? அவர் கோபமெல்லாம் படமாட்டாரு. சாப்பிட்டுட்டு வந்துடுவாரு. நாங்க பண்ணுறது நியாயம் என்று அவருக்கும் தெரியும். என்ன எங்களுக்கு ஏதாவது ஆகிடும் என்று பயப்படுறாரு. அந்த பயத்த தான் கோபமா காட்டுறாரு.
நாங்க எப்படி அமைதியா இருக்க முடியும்? எங்க ஏரியா ரோட்டை பாத்திங்களா. குண்டும் குழியுமா இருக்கு? வண்டில போக முடியுதா? ஆனா அடிக்கடி பாதையை சீர் அமைக்கிறேன்னு ரோட்டு கட்டுற வேல நடக்கும். வெள்ளம் வந்தா? ரோட் திரும்ப பேத்து கிட்டு போகும். இது கூட அரசியல் தான்.
வெள்ளத்தால ரோட் உடைஞ்சிருச்சி நாங்க போட்டு தரோம் என்று ஓட்டு கேக்குறது. ரோட்டை போடுற சாக்குல, கமிஷன் என்ற பேர்ல லட்சக்கணக்குல சம்பாதிக்கிறது.
கழிசடைங்க சம்பாதிச்சிட்டு போனா போகுது எங்க வரிப்பணம் தானே னு விட்டா ரோட்டை கூட ஒழுங்கா போட மாட்டானுங்க அடுத்த வெள்ளம் வந்தா திரும்ப ரோட் பேத்துக்கிட்டு போய்டும்.
ஜப்பான்ல கூட வெள்ளம் வந்தது ரோட் பெத்துக்கிட்டு போனது. ஒரு மணி நேரத்துல ரோட்டை போட்டுட்டாங்க. கேட்டா ஜப்பான் டெக்னோலஜி நம்ம நாட்டுல இல்லனு கதை வேற. இந்த ஊரு இம்தியாஸ் ஹாஜி அவர் வீட்டுக்கு போற குறுக்கு பாதைக்கு சொந்த செலவுல தார் ரோட் போட்டு ஆறு வருசமாச்சு. இந்த ஆறு வருஷத்துல எத்தனை தடவ வெள்ளம் வந்தது? அவரோட ரோடு ஒன்னும் ஆகல.
இங்க அந்த ஸ்கூல் முன்னாடி இருக்குற பாலத்த அஞ்சி வருசமா கட்டினானுங்க. அது எதுக்கு தெரியுமா? பாலத்துக்கு கீழ கல்லு கிடைக்குதாம் என்று பதல் தோண்டினாங்க.
இப்படி பண்ணா நாடு எப்படி முன்னேறும்? எந்த வளமும் இல்லாம சிங்கப்பூர் இந்த நிலமைல இருக்குறதுக்கு காரணம் நல்ல தலைமை. தாய் பெத்த குழந்தைக்காக சுயநலமா யோசிக்கிறதுல தப்பில்ல. தலைவன் சுயநலமா இருந்தா நாடு இப்படித்தான் இருக்கும்.
ஒரு மனுஷனுக்கு இருக்கவே கூடாதது பொறாமை, கோபம் கூட இருக்க வேண்டிய இடத்துல இருக்கணும்” என்றவள் ஒரு புத்தகத்தோடு அமர்ந்து விட்டாள்.
படிக்கிறாளா? கதை படிக்கிறாளா தெரியவில்லை. அவளை சுற்றி அரணாக இனிப்பு பாட்டில்கள் நிறைந்திருக்க எட்டித் தான் பார்க்க வேண்டும்.
வழமையாக சர்வேஷ் அவளை கண்டுகொள்ள மாட்டான். இன்று என்னவோ அவளோடு பேசிக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்க,
“ஆமா ஏன் உங்கப்பா கடைக்கு வர்றதில்லை. தாத்தா சொல்லுறது போல அவர் இல்லனா கடைய மூடிடுவீங்களா? இந்த ஏரியால உங்க கடைதான் பழைய கடை” என்று இவன் பாட்டுக்கு பேசிக் கொண்டே போனான்.
தலையை உயர்த்தி அவனை பார்த்தவள் “இப்போ என்ன சொல்ல வரீங்க?” அவனை முறைத்துப் பார்த்தாள் சுரங்கணி.
“இல்ல காலைல சிறிசேன முதலாளி…” என்று சர்வேஷ் ஆரம்பிக்க
“அப்பா ரிட்டையர் ஆனா கடைக்கு வருவாரு. யாருமே இல்லனா ஆள் வச்சி கடைய நடாத்திப்போம். நீங்க எதுக்கு இதெல்லாம் யோசிக்கிறீங்க? போங்க போய் உங்க வேலைய பாருங்க” என்ன இவன் கொஞ்ச பேசினா ஓவரா பண்ணுறான் என்று மீண்டும் முறைத்தாள்.
“என்ன தம்பி இன்னைக்கு உங்களுக்கு எந்த சவாரியும் இல்ல போலயே பொழுது போகலைனு சுரங்கணிய டாச்சர் பண்ணுறீங்களா?” சர்வேஷை கிண்டல் செய்ததோடு காப்பாற்றவும் முயன்றான் செல்வா.
“உங்களுக்கு பொழுது போகாததுக்கு நான்தான் கிடைச்சேனா? நான் படிக்கணும். இந்த சாப்டர் புரியவே மாட்டேங்குது. கொஞ்சம் டிஸ்டப் பண்ணாம போங்க” சர்வேஷை துரத்தினாள் சுரங்கணி.
“ஐயோ பா…வம்” செல்வா மீண்டும் நக்கல் செய்ய அவனை முறைத்தது மட்டுமில்லாமல் “வீட்டுக்கு வா உன்ன வச்சிக்கிறேன்” என்று மிரட்டி விட்டு ஆட்டோவை கிளப்பினான் சர்வேஷ்.
பெயருக்கு இரண்டு மூன்று சவாரியை முடித்தவனுக்கு சுரங்கணியின் கடைக்கு செல்ல பிடிக்காமல் கமலத்தின் வீட்டு சென்று தூங்கினான்.
கதிர்வேலிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது.
“டேய் உங்க அண்ணி எங்கடா? நீ அவளை இன்னக்கி வேலைக்கு கூட்டிட்டு போய் விட்டியா? இல்லையா?” கோபமும் பதட்டமும் அவன் குரலில் அப்பட்டமாக இருந்தது.
“அண்ணி இன்னக்கிக்கு வேலைக்கு போகல. நீ வர்ற வரைக்கும் வீட்டுல வைட்டிங். நீ வீட்டுக்கு போ” என்றவன் அப்பொழுதுதான் மணியை பார்த்தான். இரவு எட்டு மணி.
“அண்ணி எட்டு மணிக்கு வேலை விட்டு வருவாங்க. அந்த நேரத்துல இவரு பான் விக்க போய் இருப்பாரே….” என்று சிந்தித்தவன் “அட பாவி மனிஷா பொண்டாட்டியாவே தினமும் பாலோ பண்ணி இருக்க, அதான் இன்னைக்கு அவங்க வேலைக்கு வரலன்னு தெரிஞ்சிருக்கு” கதிர்வேல் எப்பொழுதும் தன்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கின்றான் என்று முணுமுணுத்ததோடு “அண்ணி மேல் இவருக்கு இம்புட்டு லவ்வு. சொல்லி தொலைக்க வேண்டியது தானே” இன்றோடு பிரச்சினை முடிவுக்கு வந்துடும் என்று புன்னகைத்தவனுக்கு சுரங்கணியின் ஞாபகம் வந்து ஒட்டிக் கொள்ளவே தலையை உலுக்கி விட்டு எழுந்து சென்றான்.