9

காதல் மலரும் தருணம்..

எத்தனை  காயங்கள்
என்னுள் இருந்தாலும்..
அத்தனையும்
மறந்து போகிறேன்..
உன் கொஞ்சல் மொழியில்
கரைந்து போகிறேன்..

விதுரன் உருவமில்லா எதையோ  பின்தொடர்ந்து செல்ல, ‘விது மாமா என்னை விட்டு போகாதீங்க. நீங்க இல்லாம என்னால வாழ  முடியாது, என்கிட்ட வாங்க மாமா’ என்று கத்திகொண்டே ஹனிகா   கதறலுடன்   அழைக்க,  ‘ஹனி’  என்று  ஏக்கத்துடன் அழைத்து தயங்கி நின்ற விதுரன், மறுநொடி   அந்த உருவமில்லா  நிழலை வெறித்து அதனை தொடர்ந்து  சென்று தீண்ட, விதுரன் கைகளில் அகப்படாமல் அவ்வுருவம் காற்றோடு காற்றாய் கலந்து மறைந்தது.  கலங்கிய விழிகளுடன்  அதையும் பின் தொடர முடியாமல்  ஹனிகாவை நெருங்கவும் முடியாமல்  பரிதவித்து நிற்க, அவனை நெருங்கிய ஹனிகா, “நான் வேணாமா உனக்கு, ஆனா எனக்கு நீ தான் வேணும் மாமா”, என்று  தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொள்ள,  பதற்றத்துடன் தனது காலை கனவை கலைத்து எழுந்து அமர்ந்தான் விதுரன். 

எப்போதும் விடியலில் எழும் பழக்கமில்லை என்றாலும், புது இடம் என்பதாலும் விதுரன் அணைப்பில் உண்டான உணர்வுகளின் தாக்கத்தினாலும் உறக்கம் கொள்ள மனமில்லாமல்  முன் எழுந்து, ஊரை ஏய்க்கும் முயற்சியாய், தலைக்குளித்து  அரக்கு நிற புடவையில்  எளிமையிலும் எழிலான அழகுடன் கண்ணாடி முன் நின்று தலை வாரிக்கொண்டிருந்தவள்,  பதற்றமாய் எழுந்து அமர்ந்த  கணவனை கண்டு, “என்ன மாமா எதுக்கு இவ்வளவு பதட்டமா  இருக்கீங்க? பயப்படாதீங்க நேத்து நான் உங்கள ஒன்னும் பண்ணல!” என்று  ஒற்றை புருவம் உயர்த்தி கிண்டல் செய்தாள் ஹனிகா.

அவள் கிண்டலை பொருட்படுத்தாது, பாரமாய் கனத்த தலையை  தாங்கிப்பிடித்தபடி விதுரன் அமைதியாய் அமர்ந்திருக்க அவனருகில் வந்து “ தலை வலிக்கிதா?,  கைய எடுங்க நான் பிடிச்சு விடுறேன்”, என்று  மெதுவாய்    அழுத்தம் கொடுத்து பிடித்துவிட்டவள், “ என்னாச்சு? ஏன் இவ்ளோ பதட்டம்?” என்று பரிவுடன் விசாரித்தாள்  ஹனிகா.

தன்னவள்  விரல்  தந்த இதத்தில் இமைமூடி அமர்ந்திருந்தவன்,  “கனவு” என்று தான் கண்ட கனவை விவரிக்க முடியாமல்  தடுமாறிட, “ கெட்ட கனவா?”  என்றவளிடம், “என்ன கனவுன்னு சொல்லத் தெரியல”, என்றான். 

“ என்னன்னு சொல்லத் தெரியாத கனவுக்கு தான் இவ்ளோ சீன் போட்டீங்களா?, நீங்க எதையாவது ரொம்ப நேரம் யோசிச்சுட்டு இருந்திருப்பீங்க!, அதுதான்   கனவா  வந்து பயங்காட்டி இருக்கும்”, என்று ஹனிகா சிறு குழந்தைக்கு சொல்வது போல் விளக்கம் கொடுக்க அதில் உண்மை இருப்பது புரிந்தும் அதை வெளிக்காட்ட மனமில்லாமல், “ நான் எதப்பத்தியும் யோசிக்கல”, என்று ஹனிகா  விரல்களை விலக்கிவிட்டு கட்டிலை விட்டு இறங்கினான் விதுரன். 

சட்டென்று அவன் கரம் பற்றி இழுத்திட, அதை சற்றும் எதிர்பாராத விதுரன், தடுமாறி முன்பு அமர்ந்திருந்த இடத்திலேயே மீண்டும் வந்தது  விழுந்து கோபமாய் முறைக்க, அதைப் பொருட்படுத்தாது..” எதை மறைக்க என்கிட்ட இருந்து தப்பிச்சு போக பாக்குறீங்க?”  என்றாள் சற்று கோபமான குரலில்.

“உன்கிட்ட மறைக்க என்ன இருக்கு?, எனக்கு என்ன கனவு வந்ததுன்னு  தெரியாமலேயே நீயா ஒரு கதை கட்டுனா, அதை காது கொடுத்து நான் கேட்கணுமா?!” என்று விதுரனும் கோபம் காட்ட, “ என்ன கதையா? யாரை பார்த்து கதை கட்டுறேன்னு  சொல்றீங்க?, ஹலோ மாமா, நான் ஒரு சயின்ஸ் ஸ்டுடென்ட்  அதை மறந்துடாதீங்க! எந்த விஷயத்தையும் அறிவியல் பூர்வமாக தான் பார்ப்போம், ஆராய்ச்சி பண்ணி நிரூபிக்காத விஷயத்தை அவ்ளோ சீக்கிரத்துல    நம்பவே மாட்டோம்”, என்று,  சுய தம்பட்டம் அடித்தவளை ஏளனப்பார்வையுடன் விதுரன் பார்த்திருக்க, “அப்படி  பார்த்தா என்ன அர்த்தம்?  கனவுனா  என்னன்னு தெரியுமா? எதனால வருதுன்னு தெரியுமா?” என்ற   ஹனிகாவின் கேள்விக்கு, சிறு குழந்தை கேட்கும் கேள்விக்கு அன்னையவள் தெரிந்தும் தெரியாது என்று பொய் உரைப்பது போல ரசனையுடன் தலையசைத்து, உதட்டை சுழித்தான் விதுரன். 

தன்னை அறிவாளி என்று காட்டிக்கொள்ள கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல், “ இங்கிலாந்துல இருக்குற ஸ்வான்சியா பல்கலைக்கழகம் ஒரு ஆய்வு நடத்துனாங்க, உளவியலாளர் மார்க் ப்லாக்ரோவ், தான் அந்த ஆய்வ  வழிநடத்தினாரு,  நாம முழிச்சிருக்கும்போது அனுபவிக்கிற நினைவையும்,  உணர்ச்சியையும்  சேமிச்சு வைக்கிற உயிரியல் நிகழ்வுதான் கனவாம். கனவுகள, சிக்மன்ட் பிராய்டு  ‘நாளின் எச்சங்கள்’னு சொல்லுறாரு.  கனவுகளைப்பத்தி ரிசர்ச் செய்றது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்ல, தனக்கு அந்த நேரத்துல என்ன நடக்குதுன்னு யார்கிட்டயும் சொல்ல முடியாம  ஆழ்ந்த உறக்கத்துல  இருக்கிறவங்க மூளைக்கு தான் கனவு வருது, பாதி தூக்கத்துல எந்திரிச்சு  எனக்கு இந்த கனவு வந்துச்சு இப்படி இருந்துச்சுன்னு சொல்லமுடியாது குறிப்பு எழுதி வைக்கவும் முடியாது, இருந்தாலும்  எவ்வளவு கஷ்டப்பட்டு அதை பத்தி ரிசர்ச் பண்ணி இருக்காங்கன்னு பாருங்க”, என்று ஹனிகா தன் அறிவியல் அறிவை காட்டிட, “யாராலயும் விவரிக்க முடியாத கனவ எப்படி  ரிசர்ச் பண்ணுனாங்க?,  அவங்க மூளையில மைக்ரோ சிப் வச்சு, தூங்கும்போது வர கனவ  ரெக்கார்டு பண்ணுவாங்களா?, லைவ் ரிலே கொஞ்சம் டிலே”, என்று ஹனிகா வார்த்தையை  நம்பாமல்  கிண்டல் செய்து சிரித்தான் விதுரன். 

அவன் தொடையில் வலிக்கும்படி கிள்ளியவள், “பேசிட்டு இருக்கும்போது  நடுவுல பேச கூடாது!” என்று ஹனிகா மிரட்ட “ ஏன் மனப்பாடம் பண்ணி வைச்சது மறந்திடுமா?” என்று  அதையும் கிண்டல்  செய்தவன்   சட்டை காலரை பற்றி தன் அருகில் இழுத்து, கன்னத்தை  கடித்தவள்,  “வாய மூடிட்டு கதை கேட்கணும், நடுவுல நடுவுல பேசுனா, அடுத்து எங்க கடிப்பேன்னு எனக்கே தெரியாது!” என்று  மிரட்டலோடு நிறுத்தாமல் செயலிலும் காட்டியவள் மேலும் தொடர்ந்தாள். “விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இவ்ளோ வளர்ந்திருக்கிற இந்த காலத்துல கூட நீங்க சொன்ன மைக்ரோ சிப் டெக்னாலஜி ஒர்க் அவுட் ஆகாது, கனவு  காணுறவங்க, கண்ட கனவுக்கு  சம்மந்தமான நினைவுகல  சேகரிச்சு அதை அடிப்படையா வெச்சுத்தான் கனவுகளை பத்தி ரிசர்ச் பண்ணியிருக்காங்க. தனக்கு  வர கனவுகள துல்லியமா சொல்லுற இருபது  தன்னார்வலர்கள், அவங்களோட அன்றாட செயல்கள் எல்லாத்தையும் ஒரு டைரியில  குறிச்சு வைக்க, அவங்க எழுதி வச்ச நிகழ்வுகளையும் அடுத்தடுத்த அவங்களுக்கு வந்த கனவுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, யாரும்  நினைச்சுக்கூட  பார்க்காத ஒரு விஷயம் தெளிவாச்சு, ரிசர்ச்க்கு வந்தவங்க,  நாளோட நிகழ்வுகள், ராபிட் ஐ மூவ்மென்ட் ஸ்லீப்ன்னு (Rapid Eye Movement sleep) சொல்லுற   ஆழ்ந்த   உறக்கத்தின்  நினைவுகளுக்கு  தொடர்புடைய மூளையின் தீட்டா அலைகளோட தொடர்புடையதாக  இருந்ததும் இந்த ஆய்வுல கண்டுபிடிச்சாங்க.   அதுமட்டும் இல்லாம சலிப்பு தட்டுற  விஷயங்கள  தவிர்த்து,  உணர்ச்சிபூர்வமா நடக்குற   நிகழ்ச்சிகள் தான் கனவா  வருதுன்னும் கண்டு பிடிச்சிருக்காங்க.  ஆகமொத்ததுல  முழிச்சிட்டு   இருக்கும் போது நடக்கும்  நிகழ்ச்சிகளுக்கும் கனவுகளுக்கும் நம்ம நினைவுகளை பத்திரமா சேகரிச்சு  வைக்கிற மூளையோட தீட்டா அலைகளுக்கும் சம்மந்தம்  இருக்குன்னு அதிகாரபூர்வமாக நிரூபிக்கபட்டிருக்கு.” என்று நீண்ட விளக்கம் கொடுத்து நிறுத்தினாள் ஹனிகா.

“இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?,  மே பீ நீ சொன்னது சரிதான்”,  என்று விஷயத்தை முடித்துக் கொண்டு விதுரன் எழுந்திட, “விஷயம் இதோட முடியல” என்று ஹனிகா விடாமல் பிடித்து வைக்க “அம்மா தாயே   சயன்ஸ் ஸ்டுடென்ட், தெரியாத்தனமா கனவு வந்துடுச்சு,  அதுக்கு  இவ்ளோ பெரிய விளக்கமா? விட்டா எல்லாத்துக்கும் ரிசர்ச் செஞ்சு ப்ரூப்  ரிபோட்  கேட்ப போல, ஆளை விடு “  என்று  அலுத்துக்கொண்டே  விதுரன் எழுந்திட, “அறிவியல் பூர்வமா மட்டுமில்ல ஆன்மீக ரீதியாகவும்  கனவுகளுக்கு நிறைய விளக்கம்  கொடுத்திருக்காங்க, கனவு வர நேரத்தை வைச்சு அது பலிக்க கூடிய  காலத்தை பஞ்சாங்கத்துல சொல்லி இருக்காங்க,   மாலை 6 – 8.24 மணிக்குள்ள கண்ட கனவு  ஒரு வருசத்துக்குள்ளயும்,  இரவு 8.24 – 10.48 மணிக்குள்ள கண்ட கனவு 3 மாசத்துலயும், இரவு 10.48 – 1.12 மணிக்குள்ள கண்ட கனவு 1 மாசத்துலயும், இரவு1.12 – 3.36 மணிக்குள்ள கண்ட கனவு 10 சில  நாட்களுக்குள்ளேயும், விடியக்காலையில கண்ட கனவு உடனடியாக பலிக்குமாம்,  இப்போ சொல்லுங்க உங்களுக்கு  என்ன கனவு வந்தது?”  என்றாள் ஹனிகா.

“ எனக்கு என்ன கனவு வந்ததுன்னு தெரியணும்,  அதுக்கு எதுக்கு தலைய சுத்தி மூக்கை தொடுற, இப்படி நேரடியா தொட வேண்டியது தானே!” என்று ஹனிகாவின் மூக்கை பிடித்து இழுத்து நெற்றி   முட்டிக்கொண்டவன், “ஒரு ராட்சசி நான்  அவளை விட்டு  விலகிப்போனாலும் விடாம துரத்தி  வந்து என்னை அவ கூடவே இழுத்துட்டு  போறா, இது தான்  எனக்கு வந்த கனவு”  என்று  பொய்யாய் கனவை விவரித்து,  விதுரன் விலகிட..

“ என்னைவிட்டு  உன்னை பிரிக்க நினைக்கிறது  யாரா இருந்தாலும் ஒரு கை பார்த்திடுவேன்”,   என்று தன் பிடிவாத பிரியத்தை வெளிப்படுத்தினாள் ஹனிகா.

கனவில் கூட தன்னை பிறருக்கு விட்டுக்கொடுக்க விரும்பாமல்  சண்டையிடும் பெண்ணவள் அன்பில் நெகிழ்ந்து போனவன், “நமக்கு நடுவில யாரும் வரமாட்டாங்க, போதுமா!”, என்று அவள் தலையை பற்றி செல்லமாய் ஆட்டியவன், அது ஈரத்துடன் இருக்க , “ஹே.. என்ன இது  இன்னும் முழுசா விடியக்கூட  இல்ல, இந்த நேரத்துல எதுக்கு  தலைக்கு குளிச்ச, உடம்புக்கு ஏதாவது வந்திடப்போகுது”, என்று  சிடுசிடுத்துக்கொண்டே, தலையை  துவட்டியபடி, “கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல,  எப்போ பாரு விளையாட்டுத்தனம், உன்னையெல்லாம் வைச்சுட்டு நான் என்ன தான் செய்யப்போறேனோ, காலம்  முழுக்க இப்படி தான் உனக்கு சேவை செய்யணும் போல”,  என்று  தொடர்ந்து திட்டிக்கொண்டே  இருந்தான் விதுரன். 

கண்கள் சுருக்கி, செல்லம் கொஞ்சி உதடு சுழித்து, “ நீ தான  மாமா,  என்னை அடிக்கடி குழந்தைன்னு சொல்லுவ,  குழந்தை   வேற எப்படி நடந்துக்கும் ?” என்று  அழகாய் சிரித்திட,  “குழந்தையே தான்”,   என்று சலித்துக்கொண்டான் விதுரன். 

“ரொம்ப தான் அலுத்துக்காதீங்க, எனக்கு செய்யாம வேற யாருக்கு செய்யப் போறீங்க” என்றவள்,   விதுரன் முகத்தில் இருக்கும் உணர்வை படிக்க முடியாமல் “ என்னை உனக்கு பிடிக்கும் தான மாமா, ரொம்ப டார்ச்சர் பண்ணுறேன்னு வேற வழியில்லாம  கல்யாணம்  பண்ணிக்கிட்டீங்களா?” என்றிட, “ ரொம்ப சீக்கிரமாவே கேட்டுட்ட, நமக்கு இரண்டு குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் கேட்க வேண்டியது தான  இந்த கேள்விய!” என்றவன், ஹனிகா  குறும்பாய் பார்த்திட “நீயே ஒரு குழந்தை உனக்கு ஒரு குழந்தை நினைச்சு பார்க்கும் போதே பயமா இருக்கு,  இப்பவே இந்த பாடு படுத்துற, குழந்தை பிறந்ததுக்கு அப்புறம்  இன்னும்  என்னை என்ன  பாடு படுத்தப்போறியோ,  உன்னையும் கவனிச்சுட்டு, குழந்தையையும் நான் தான் பார்த்துக்கனும் போல”, என்று   உளறியவன்,  சொன்ன வார்த்தையின் பொருள் புரிந்து சட்டென்று முகம் திருப்பிக்கொள்ள,

 “இரண்டு குழந்தையென்ன பேரன் பேத்தி எடுத்தாலும் நான் கேட்டுட்டே தான்  இருப்பேன், நீங்களும் எனக்கு பதில் சொல்லிட்டே தான் இருக்கணும்”, என்று அவன் கன்னம் பற்றி தன் புறம் திருப்பியவள்,

என்னை என்ன  செய்யப்போகிறாயோ
என்று கோப முகம் காட்டும்
உனக்கு எப்படி புரியவைப்பேன்..
உன் மீது நான் கொண்ட  காதல்
என்னை  என்னென்னவோ
செய்கிறது என்று!..

என்று கவிதை வரிகளில்  தன் காதலை உரைத்து விதுரன் கவனிக்கும் முன் அவன்  கன்னத்தில் அவசர முத்தமிட்டவள், 

கள்ளத்தனமாய்
உன் கன்னத்தில்
பதிக்கப்படும்
அவசர  முத்தத்திற்கு என்றும்
தனி சுவையுண்டு…

என்று  அதற்கும் கவிதை கூறிட, “ என்னை எப்படி இந்த அளவுக்கு காதலிக்கிற ஹனி,  ஐஞ்சு வருஷமா நீ  என்னை நேருல கூட பார்த்தது இல்லை,  அப்புறம் எப்படி?” என்று விதுரன் குழப்பத்துடன் வினவ, “ உங்கள  எதுக்கு இவ்ளோ பிடிச்சதுன்னு தெரியல, ஒருவேளை சின்ன வயசுல இருந்தே உங்க கூடவே   அதிகமா ஒட்டிட்டே இருந்ததால கூட இருக்கலாம், ஆனா  ஒரு  விஷயம் மட்டும் உண்மை உங்கள பிடிச்ச அளவுக்கு  வேற யாரையும் பிடிக்கல.  என்னை கேள்வி கேட்கிறது  இருக்கட்டும்,   நான்  கேட்ட கேள்விக்கு முதல  பதில் சொல்லுங்க, என்னை உங்களுக்கு பிடிக்கும் தான?”, என்று அதே கேள்வியை மீண்டும்  கேட்டிட,

“நீ எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காம சொல்லுவேன்,  உன் குழந்தைத்தனம் பிடிக்கும்”, என்று அவள்  நெற்றியில் பதில் முத்தமிட்டான் விதுரன். 

“அவ்ளோ தானா?”   என்று ஏமாற்றத்துடன் ஹனிகா  இதழ்  சுழிக்க, கன்னத்திலும் முத்தமிட்டவன்,  மீண்டும் அவள் “ அவ்ளோ தானா “ என்று அதே கேள்வியை கேட்க, “இப்போதைக்கு அவ்ளோ தான்” என்று சிரித்தபடி  விலகி சென்று தன் காலைக்கடன்களை முடித்து வந்தவன் கோபம் போல் முறைத்தபடி அமர்ந்திருந்தவளை பின்னருந்து அணைத்து, அவள் கழுத்து வளைவில் முகம்  புதைத்து, “என்னை  எப்பவும்  திமிரான பார்வையில திருடப்பாக்குற  இந்த கண்ணு பிடிக்கும்,  கொழுகொழு கன்னம் பிடிக்கும், குட்டி காதுல தொங்குற இந்த ஜிமிக்கி பிடிக்கும்”  என்று விதுரன் வரிசையாய் அடிக்கிட, “ பொய்! பொய்! சுத்தப் பொய்! இதெல்லாம் உங்களுக்கு உண்மையிலேயே பிடிக்கும்னா, நான் கேட்டதும் இதை தான சொல்லிருக்கனும், அதை விட்டுட்டு இப்போ வந்து சமாதானப்படுத்த சொல்லுறீங்களா?”  என்றாள் ஹனிகா.

“ஹனி!   காதல்  சும்மா சுடக்கு போட்டதும் வந்துடாது, அதுக்கும் கொஞ்சம் டைம் எடுக்கும். எனக்கு உன்னை பிடிக்கும், நீ எதிர்பார்க்கிற காதல் நிச்சயம் வரும்” என்றான்  விதுரன்.

“ காதல் வரும்  தெரியும், அது வந்துடுச்சுன்னு எப்படி தெரியும்? காதல் வந்ததுக்கு அப்புறமும்  நீங்க என்கிட்ட சொல்லாம மறைச்சா நான் எப்படி கண்டு பிடிக்கிறது? ” என்று ஹனிகா நியாயமான கேள்வி கேட்க.. “ எனக்குள்ளேயும் உன் மேல காதல் வந்திடுச்சுன்னா, நிச்சயமா சொல்லுறேன்  உன்கிட்ட மறைக்கமாட்டேன்,    எனக்குள்ள உன்னை கண்டுபிடிச்சா உடனே எந்த சலனமும் இல்லாம  தயக்கமே இல்லாம உன்னை எடுத்துக்குவேன்”, என்று உறுதி அளித்தான் விதுரன்.

குலதெய்வ கோவிலில்  கணபதிநாதன் பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்க குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வந்தவர்களுக்கு, வசுந்தரா கையால்  மறுவீட்டு  விருந்து பரிமாறினார்.  

சந்தியாவுடன் திருமணம் முடிந்து மறுவிருந்துக்கு வந்தவர்களை வீட்டிற்குள் வரவிடாமல்  வாசலியேயே வைத்து  வசை மொழிகளில் வேண்டிய அளவு அர்ச்சித்து    வழியனுப்பிவைத்த   வசுந்தராவின் செயல்கள்  நெஞ்சில் வந்து போக  தயக்கத்துடன் விதுரன் விருந்தை  மறுக்க   அவன் தயக்கத்தின் காரணம் புரிந்து, ” அன்னைக்கு என் விருப்பம் இல்லாம  என்  பொண்ணு  கல்யாணம் நடந்துச்சு, அந்த  கோபத்துல,   கொஞ்சம் முன்னப்பின்ன பேசிட்டேன், அதை மறந்துடுங்க. இது உங்க மாமனார்  வீடு, சங்கடப்படாம சாப்பிடுங்க” என்று வற்புறுத்தலுடன் விருந்து பரிமாறி, விதுரனை சிறப்பாக கவனித்தார் வசுந்தரா. 

கணபதிநாதன்   பலமுறை வற்புறுத்தியும் அன்று இரவே   ஊருக்கு தன் மனைவி மற்றும் தாயாரை அழைத்து கொண்டு கிளம்பிவிட்டான் விதுரன். 

உன் விழி விரித்த
காதல் வலையில்
சிக்கிக்கொண்ட  மீன்
நானடி..
என்னை சிறை செய்த
காதல் கைகாரி
நீயடி..