Advertisement

9..

நதியோடு இலையாக
உன்னோடு பயணிப்பேன்..
காதல் கரை கண்டு
உன்னில் என்னைக்
கலந்து நாளும்
மாறாத அன்பில்
திளைத்திருபேன்…

எவர் கண்ணிலும் படாமல்   அபிநந்தன் குடும்பம் ஏற்பாடு செய்திருந்த  வீட்டை விட்டு சற்று தொலைவில் இருந்த பேருந்து நிறுத்தத்தில்.. காத்திருந்தவள்.. கையில் அணிந்திருந்த நிச்சயதார்த்த மோதிரத்தை மெதுவாய் சுழட்டியபடி… ‘ எல்லா நகையையும் அங்கேயே வச்சிட்டு வந்துட்டேன்,  ஆனா உன்னை விட்டுட்டு வர ஏன் எனக்கு மனசு வரல.. நீ வைரங்கிறாதலயா.. இல்ல உன்னை என் கையில போட்டு விட்டவன என்னால முழுசா வெறுக்க முடியலங்கிறதாலயா!’ என்று  எண்ணிக்கொண்டவள் மனதில் அவளுக்கும் அபிநந்தனுக்குமான முதல் சந்திப்பு நினைவில் வந்தது.

‘அன்னைக்கு சகா சொன்ன மாதிரி குடிச்சிட்டு வந்ததால தான் ஆக்சிடென்ட் ஆகி இருக்குமோ!, சே சேச்ச அப்படி இருக்காது அவன் குடிச்சிருந்தா ஹாஸ்பிடல்ல சொல்லி இருப்பாங்க.., அவனுக்கு குடிக்கிற பழக்கம் இருக்குமா.. ஸ்மோக்கிங் ஹாபிட்ஸ் .. ‘ என்று தனக்குள் யோசித்தவள்,   ‘ செயின் ஸ்மோக்கரா இருந்தா லிப்ஸ் கருப்பாயிருக்கும்னு சொல்லுவாங்களே, ஆனா அவன் லிப்ஸ்.. நல்ல பிங்க் கலர்ல.. அய்யோ நான் இப்ப என்ன யோசிச்சிட்டு இருக்கேன். அவனுக்கு கெட்ட பழக்கம் இருந்தா என்ன? இல்லனா என்ன? அவன் லிப்ஸ் எந்த கலர்ல இருந்தா எனக்கென்ன?’ என்று எண்ணியவள் மனதில் மீண்டும் அபிநந்தனின் முகமே வந்து நிலைத்து நின்றது.

மதுரிமாவின் பாட்டி வேலம்மாளின் அதிகார குரலுக்கு எவராய் இருப்பினும் அடங்கிப் போவது தான் வழக்கம்.. அவரையே அவரது பாணியிலேயே பதிலடி தந்து வாயடைக்க செய்த மாப்பிள்ளையை  பார்க்கும் ஆவல் பேராவலாய் எழுந்தது மதுரிமாவிற்குள்..

மாப்பிள்ளை வீட்டினர்  அமர்ந்திருந்த வீட்டின் வரவேற்பு பகுதியை மெதுவாய் எட்டிப் பார்த்தவளுக்கு.. முதுகு காட்டியபடி அமர்ந்திருந்த அபிநந்தனின் முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை என்றாலும்.. அவனது குரலும் குரலில் இருந்த கம்பீரமும் ஒரு வித அதிகார தோரணையும் .. மதுவிற்கு  பிடித்துப் போனது.

அளவான ஒப்பணையுடன்  அழகாய் தயாராகி பதுமை போல் வந்து நின்றவளை விழி விரித்து வியப்புடன் நோக்கியவன் முகத்தை கண்டு… மதுரிமா அதிர்ச்சியடைய…   அவனோ அழகாய் கன்னக் குழி விழ சிரித்து.. அவள் மனதை மயக்கும் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தான்.

பொண்ணும் மாப்பிள்ளையும் தனியா பேசிட்டு வரட்டும், என்றதும்  கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன் படுத்தி தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று தெரிவித்து விட வேண்டும்  எனும்  தீர்மானத்துடன்   அபிநந்தனை அழைத்துக் கொண்டு வீட்டின் மாடி பகுதிக்கு  சென்றாள் மதுரிமா.

பல வண்ண ரோஜா செடிகள் வரிசையாய் அடுக்கப்பட்டிருக்க.. செடிகளில் பூத்த மலர்கள் செடிகளுக்கே சொந்தம் என்னும் வரையறைக்குள் உட்பட்டது போல் அங்கங்க பறிக்கப்படாமல் விடப்பட்ட ரோஜாக்கள் அவ்விடத்தை மேலும் அழகாய் காட்டிட…. மாலையின் குளிர்ந்த காற்று மெதுவாய் இருவரையும் உரசி சென்றது.

தனது விருப்பமின்மையை எப்படி தெரிவிப்பது என்ற தயக்கத்துடன் மதுரிமா…  மாடி தோட்டத்தில் இருந்த ரோஜா மலர்களின் இதழ்களை மெதுவாய் வருடியபடி இருக்க,  வந்ததில் இருந்து அவளையே  வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அபிநந்தன்.

‘என்ன பேசுறதுன்னு தெரியாம நான் அமைதியா இருக்கேன் சரி!  , இவன் எதுக்கு அமைதியா இருக்கான்!’ என்று தனக்குள் எண்ணியவள் மெதுவாய் தலையை நிமிர்த்தி பார்க்க.. அவள் தன்னை கவனிக்கிறாள் என்று புரிந்ததும்  அவசரமாய் புன்னகை ஒன்றை இதழில் சூடி… “நீ ரொம்ப அழகா இருக்க.. ” என்று ரசனையாய் கூறினான் அபிநந்தன்.

இதயம் இரு மடங்கு வேகத்துடன் துடித்து இம்சிக்க.. மலர் இதழ் வருடிய மதுவின் விரல்கள்  இதயம் உணர்ந்த பதட்டதின் வெளிப்பாடாய் மென்மையான மலர் விடுத்து வன்மையான முட்களை  நாடி இருந்தது.

விரலில் கசிந்த சிறு துளி  உதிரத்தை கண்டதும் பதறித்  துடித்தவன் பட்டென்று அவள் கரம்  பற்றி காயம் கொண்ட  விரலை தன் இதழுக்குள் பொருத்திக் கொள்ள…” என்ன பண்றீங்க கைவிடுங்க!” என்று சங்கடத்துடன் கரத்தினை விளக்கிக் கொள்ள முயன்றாள் மதுரிமா.

” ஓ.. சாரி.. உன்  கைல இரத்தம்  வந்துச்சு..  ” என்றவன் அவளது கரத்தை விடுத்து, ” எல்லாமே ரோஜா செடியா இருக்கு. முள்ளு உன்னை காயப்படுத்தும்னு தெரிஞ்சும் எதுக்கு இத்தனை ரோஜா செடி?, வேற ஏதாவது முள்ளு இல்லாத செடி வளர்க்கலாம் இல்லையா” என்று எதையோ அறிந்து கொள்ளும் ஆவலுடன் வினவினான் அபிநந்தன்.

“நீங்க அதை முள்ளா பாக்குறீங்க! நான் அதை ரோஜாவோட பாதுகாவலனா பாக்குறேன். நம்ம பாக்குறது விதத்துல தான் எல்லாம் இருக்கு.” என்றாள் மதுரிமா.

வியப்புடன் விழி விரித்தவன்.. பரிவுடன் அவள்  விரல்களுடன் தன்விரல் கோர்த்து.., “என் அம்மாவும் இப்படித்தான் சொல்லுவாங்க.. உன்னோட ஒவ்வொரு பேச்சும் செயலும் எனக்கு என்னோட அம்மாவை ஞாபகப்படுத்துது. நான் என் அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன் மதுமா. நீ எனக்கு அம்மாவா எப்பவும் என் கூடவே இருப்பியா?” என்றவன் குரலில் ஏக்கம் நிறைந்திருக்க குரலுக்கு ஏற்றார் போல் அவன் கண்களும்.. எதிர்பார்ப்புடன் அவளை நோக்கியது.

என்ன பதில் சொல்வது என்று புரியாத குழப்பத்துடன் தயங்கியவள் மெதுவாய் விரல்களை விலக்கிக் கொண்டு.. ” பார்த்ததும் பிடிச்சு போய் பொண்ணு கேட்க வந்ததா சொன்னாங்க!, ஒரே ஒரு தடவை நேர்ல பார்த்ததை வச்சு கல்யாணங்கிற பெரிய முடிவ உங்களால எடுக்க முடிஞ்சது. கண்டதும் காதல்னு பொய் சொல்லி தப்பிக்க பாக்காதீங்க..  அன்னைக்கு நீங்க என் முகத்தை கூட சரியா பாக்கல.. ” என்றாள்.

” முகத்தை பார்த்து தான் காதல் வருமா என்ன?, ஒருத்தர் கூட இருக்கும்போது ஒருவித நிம்மதியையும் பாதுகாப்பையும் உணருறது கூட ஒரு வகையில காதல் தான்   மதுமா. நீ என் பக்கத்துல இருக்கும்போது என் அம்மாவே என் கூட இருக்குற மாதிரி மனசு ரொம்ப நிம்மதியா இருக்கு. நீ என் வாழ்நாள் ஃபுல்லா என்கூடவே இருக்கணும்னு ஆசைப்படுறேன் அதுக்காக தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவு எடுத்தேன். ” என்றான் அபிநந்தன்.

“நீங்க முடிவெடுத்தா மட்டும் போதுமா?” என்று மது துவங்க.. ” போதும்!” என்று ஒரு வார்த்தையில் முடித்தான் அபிநந்தன்.

” என் முடிவு முக்கியம் இல்லையா!”  என்று மதுரிமா வினவ… ”   நான் உன்னைப் பத்தி எல்லாத்தையும் விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டு தான் வந்திருக்கேன். இதுவரைக்கும் உனக்கு எந்த பாய் ஃப்ரெண்ட் இல்ல.. நீ யாரையும் லவ் பண்ணவும் இல்ல.. சோ என்னை வேணாம்னு சொல்ல உன்கிட்ட எந்த காரணமும் இல்லை..” என்றான் அபிநந்தன்.

” ஐ ஹவ் எ பாய் ஃப்ரெண்ட்ன்னு  நெத்தியில எழுதி ஒட்டிட்டா அலைவாங்க. என் மனசுல என்ன இருக்குன்னு வெளிய விசாரிச்சா தெரியாது. என்கிட்ட பேசினா மட்டும் தான் நான் என்ன நினைக்கிறேன்னு புரிஞ்சுக்க முடியும். ” என்று மதுரிமா கூறிக் கொண்டிருக்க,

அதற்குள் அவ்விடம் வந்து சேர்ந்த மதுரிமாவின் அன்னை கண்மணி.. ” கீழ எல்லாரும் உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. “என்று தனிமையில் இருந்த இருவரையும் அழைத்துச் செல்ல வந்தார்.

தான் இன்னும் தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்பதை சொல்லவே இல்லையே என்ற தவிப்புடன் மதுரிமா வர, இன்னும் நான் அவள பத்தி சரியா விசாரிக்கலையோ.. என்ற குழப்பத்துடன் வந்து அமர்ந்தான் அபிநந்தன்.

சொல்லாதே என்னை தடுத்தும் கேட்காமல்.. மதியழகன் தான் உரைத்த பொய்க்க காதல் கதையை கட்டவிழ்த்து விட… அதுவரை குழப்பத்தில் இருந்த அபிநந்தன் முகத்தில் புன்னகை பரவியது..   அவசரத்தில் உதிர்ந்த புன்னகை என்றாலும்  தவறாமல் கன்னத்தில் விழுந்த குழியை ரசனையாய் வருடியது பெண்ணவள் விழிகள்.

அன்று அவன் உதிர்த்த கன்னக்குழி புன்னகை.. இன்றும் அவள் மனதில் வந்து போக… ‘ இந்த ஒரு வாரமா அவனோட அந்த கன்னக்குழி சிரிப்பு என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிடுச்சு. அதனாலதான் இன்னைக்கு அவன் அதே மாதிரி சிரிக்கவும் என்னையும் மீறி அவன்கிட்ட நெருங்கிட்டேன். சும்மா சொல்ல கூடாது சிரிக்கும் போது  அழகா தான் இருக்கான் . ‘ என்று எண்ணிக் கொண்டிருந்தவள்.. ‘ ஆனா அன்னைக்கு புடவை எடுக்க போம்போது ரொம்ப வித்தியாசமா நடந்துக்கிட்டான். ‘ என்று
பெண் பார்த்து சென்ற அடுத்து இரு தினங்களில் திருமண புடவை எடுக்க சென்ற போது அவன் விசித்திரமாய் நடந்து கொண்ட முறையை எண்ணிப் பார்க்க துவங்கினாள்.

கடையின் சிப்பந்தி ஒவ்வொரு புடவையாய் அவள் மேல் வைத்து  காட்டிட… அவளுக்கு பிடித்தமான மயில் கழுத்து நீல வண்ணப்  புடவை  அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது.

ஆனால் அவன் அதை விடுத்து.. வேறு ஒரு புடவையை அவளுக்கென தேர்வு செய்து கொடுத்தான்.

தன் விருப்பத்திற்கு இங்கு மதிப்பில்லையோ என்று மதுரிமா அமைதி கொள்ள.. அப்போதுதான் அபிநந்தனின் பெரியண்ணை கோமதி.. “இவன் எப்பவும் இப்படித்தான் சரியான பிடிவாதக்காரன்.  அடுத்தவங்களோட விருப்பத்துக்கு கொஞ்சம் கூட மதிப்பு தர மாட்டான். கல்யாண விஷயத்துல நீ ரொம்ப அவசரப்பட்டுட்ட.. இன்னும் உனக்கு நேரம் இருக்கு இப்பவே எல்லாத்தையும் நிறுத்திடு.  அதுதான் உனக்கு நல்லது”, என்று எவரும் அறியாமல் அவளிடம் ரகசியமாய் ஓதிவிட்டு சென்றார்.

தன்னிடம் ரகசியமாய் கூறிச் சென்ற பெண்மணியின் வார்த்தையை முழுதாய் கிரகித்துக் கொள்ள முடியாமல் ஏற்கனவே குழப்பத்தில் மனதை மேலும் குழப்பிக் கொண்டு  நின்றாள் மதுரிமா. 

அங்கு இருந்த எவருக்கும் அவளது விருப்பம் மட்டுமல்ல முகமாற்றம் கூட பெரிய விஷயமாக தெரியவில்லை போலும்.. அவரவர்  உடை தேர்வில் கவனமாய் இருந்தனர்.

வண்ணத்திலும் வடிவத்திலும் தன் அன்னையின் திருமண புடுவையை போல் இருந்த ஒரு அடர் சிவப்பு நிற சிறு கொடி வடிவிலான ஜரிகை வேலைபாடுடன் கூடிய பட்டுப்புடவையை முகூர்த்தத்திற்கு என அபிநந்தன் தேர்வு செய்ய,  அதனை சற்று முன்புதான் வேறு ஒருவர் தேர்வு செய்து  விட்டதாக தெரிவித்தனர் .

” சேம் டிசைன் அண்ட் கலர்ல வேற  காட்டுங்க..” என்று கேட்க…

” சாரி சார். இந்த கலர்ல எந்த ஒரு பீஸ் தான் இருக்கு, விஜய் டிசைன்ல வேற கலர்ஸ் இருக்கு காட்டவா… ” என்றனர்.

” இல்ல சேம் கலர் தான்  வேணும்.  ”  என்று பிடிவாதமாய் நின்றான் அபிநந்தன்.

“இப்போதைக்கு இல்லை சார், ஆர்டர் வேணா குடுத்துட்டு போங்க.. நாங்க ரெடி பண்ணி தரோம்” என்றனர் பணியாளர்கள்.

“இல்ல அது சரிப்பட்டு வராது கல்யாண தேதி நெருங்கிடுச்சு.. இப்ப கையோட புடவை எடுத்துட்டு போனா தான் பிளவுஸ் தைக்க சரியா இருக்கும்” என்று பெண்கள் கூறிட.. ” நாம வேற டிசைன் பார்க்கலாமே.. ” என்று மற்றவர்களின் வார்த்தையை ஆமோதித்தாள் மதுரிமா.

“நோ வே  .. இது மாதிரி தான் என் அம்மாவோட கல்யாண புடவை இருக்கும். அது மாதிரி தான்  வேணும்.  ” என்று தன் பிடிவாதத்திற்கு காரணம் கூறினான் அபிநந்தன்.

” உன் அம்மாவோட கல்யாண புடவை மாதிரி எடுத்து.. உன் அப்பா அம்மா கல்யாண வாழ்க்கை மாதிரியே உன்  வாழ்க்கையும் பாதில முடியனும்னு நினைக்கிறியா?.. வேற ஏதாவது நல்ல டிசைனா பாரு..” என்று சடைத்துக்கொண்டார் கோமதி.

பொது இடம் என்றும் பாராமல் தங்களை சுற்றி ஆட்கள் இருப்பது கூட நினைவில்லாமல் அமர்ந்திருந்த இருக்கையை விட்டு கோபமாய் எழுந்த அபிநந்தன்.. ” வாய மூடுங்க என் அம்மா அப்பாவை பத்தி பேசு உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை” என்று கோபம் கொந்தளித்த கண்களுடன் கோமதியை  நோக்கி முன்னேறினான்.

அவன் எண்ணம் என்னவென்று புரிந்தது போல்.. பரத்  தம்பியை தன்  புரம் இழுத்து தனியே அழைத்துச் சென்றான்.

” எங்க என்ன பேசணும்னு தெரியாதா?” என்று நிலவேந்தன் மருமகளை அடக்கிட.. 

நடந்த கலவரத்தை எண்ணி பெண் வீட்டார் முகம் வாடிப்போனது..

“அவனுக்கு அவன் அம்மா மேல பாசம் அதிகம் அதனால தான் சட்டுனு கோபப்பட்டுட்டான்,  நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. ” என்று பெண் வீட்டாரை சமாதானம் செய்தார் நிலவேந்தன்.

அபிநந்தனின் கோபம் பெரிய விஷயமாக தெரிந்ததோ என்னவோ,  கோமதியின் எண்ணம் சரி இல்லை என்று மட்டும் அங்கிருந்த எல்லோராலும் புரிந்து கொள்ள முடிந்தது.

அதன் பின் அபிநந்தனுக்கு பிடித்த புடவையை தேர்வு செய்தவர்களிடம் அதற்கான விலையை விட இரு மடங்கு விலையை கொடுத்து அதே புடவையை வாங்கி வந்தனர்.

பெற்றோருக்காக இந்த திருமணத்தை  செய்து கொள்வோமா என்று அவ்வப்போது வரும் யோசனை.. அபிநந்தனின் கோபத்தை கண்ட நொடி மொத்தமாய் கலைந்து போனது.

‘அவனுக்கு புடிச்ச புடவை எடுக்குறதுக்கே அவ்வளவு பிடிவாதம்  பிடிச்சான்.  உன்னை மட்டும் அவ்வளவு ஈசியா விட்டுடுவானா என்ன?, கல்யாணத்தை நடத்தி காட்டறேன்னு சவால் வேற விட்டு இருக்கான். ‘ என்று தனக்குள் எண்ணியவள் சுற்றும் முற்றும் பார்வையில் அலசிட.. எவரும் இல்லா இருள் இரவு அவளுக்குள் சிறு அச்சத்தை விதைத்தது.

‘ இதுக்கு மேல பஸ்க்கு வெயிட் பண்ணி பிரயோஜனம் தான் பேசாம கேப் புக் பண்ணி போயிடலாம்.’ என்று தனது அலைபேசியில் வாடகை  செயலியில் வாகனத்திக்காக பதிவு செய்து காத்திருக்க துவங்கிய நேரம்..

அவளுக்கு முன் வந்து நின்றது ஒரு  மூவுருளி உந்து ( ஆட்டோ) அதில் ஏற்கனவே இருவர் அமர்ந்திருக்க..  ” எங்கமா போகணும், ஷார் ஆட்டோ தான்.. உன்  கையில இருக்கிற காசைக் குடு போதும்.. ” என்றார்   வாகன ஓட்டுநர்.

” இல்ல வேணாம். கேப் புக் பண்ணி இருக்கேன் அது கொஞ்ச நேரத்துல வந்துரும்” என்று மதுரிமா மறுக்க..

” நீ காசு கூட கொடுக்க வேண்டாம்… கூட வா போதும்” என்றவர்கள் மூவுருளி உந்துவை  விட்டு இறங்கி வர..

ஏதோ தவறாக இருப்பதை புரிந்து கொண்ட மதுரிமா…    அங்கிருந்து விலகி நடக்க முயற்சித்தாள்.

அவளை விடாது வழி மறைத்து நின்றவர்களில் ஒருவன்,  ” அதுகுள்ள என்ன அவசரம், கொஞ்ச நேரம் கொஞ்சிட்டு பொறுமையாவே  போகலாம்ல  ” என்று  விஷமமாய் புன்னகை செய்தான்.

அவன் வார்த்தையை ஆமோதிப்பது போல் மற்ற இருவர் மதுரிமாவின் இருபுறமும்   மெதுவாய் அவளை நெருங்கிட… பெண்ணவள் மனதிற்குள் பயம் பற்றிக் கொண்டது.

என்ன செய்வது என்று புரியாத மிரட்சியுடன்… ” வேண்டாம் நான் யாருன்னு தெரியாம என்கிட்ட தப்பா பேசிட்டு இருக்கீங்க!, நான் யார் தெரியுமா என் அப்பா யார் தெரியுமா?” என்று தனக்குள் உணர்வும் பயத்தை வெளிக்காட்டாமல்  பேசினாள் மதுரிமா.

” தோடா.. பாப்பாவுக்கு அவங்க அப்பா யாருன்னு தெரியல  போலடா.. நம்மக்கிட்ட வந்து அதோட அப்பா டீடைல் விசாரிச்சிட்டு இருக்கு.” என்று ஒருவன் கிண்டல் செய்ய..” என்னடா கிண்டல் பண்ணுறீங்களா?, என் அப்பா போலீஸ் ஆபீஸர்.. அவருக்கு மட்டும் நீங்க என்கிட்ட மிஸ் பிஹேவ் பண்ண ட்ரை பண்ணுன விஷயம் தெரிஞ்சா.. உங்களை எல்லாம் என்கவுண்டர்ல போட்டு தள்ளிடுவாரு.. ஒழுங்கு மரியாதையா பிரச்சனை பண்ணாம ஓடிடுங்க”  என்று மது எச்சரிக்கை விடுக்க,

” சும்மா பூச்சாண்டி காட்டாத பாப்பா, நீ விடுற ரீலை   நம்புறதுக்கு வேற ஆளப் பாரு..” என்று பதில் தந்தபடி  அவள் வலக் கரம் பற்றினான் ஒருவன்.

” கைய விடு” என்று கர்ஜனையாய் ஒலித்தது ஒரு ஆண் குரல்.

அரை இருளில் தங்களை எதிர்ப்பது யார் என்று தெரியாத வம்பு செய்தவர்கள்… குரல் கேட்ட திசையில் திரும்பி..
 
” எவண்டா  இவன் சாவு கிராக்கி..” என்று வசை பாடியபடி  ஒருவன் செல்ல…

மற்றொருவன் தங்களிடம் சிக்கிக் கொண்டிருக்கும் பெண் தப்பி விடக்கூடாது எனும் எண்ணத்துடன் அவளது கரத்தை இறுகப்  பற்றிக்   கொண்டான்.

அரை இருளில் நின்றிருந்த ஆடவனை நோக்கி சென்றவன் அவன் மார்பில் கை வைத்து  பின்னுக்கு  தள்ளியபடி” என்னடா பெரிய ஹீரோன்னு நினைப்பா?, “என்று மரியாதை இல்லாமல்  பேசிட,   மறுநொடி  மண்ணில் சரிந்து வழியில் சுருண்டு கிடந்தான்.

கீழே  விழுந்து கிடந்தவன் மார்பில் மிதித்து  அவனைக்  கடந்து  மதுவிடம் நெருங்கி வந்தான் அபிநந்தன்.

இவனுக்கு பயந்து தான் இருள் என்றும் பாராது அவசரமாய் ஓடி வந்தோம் என்ற நினைவு சிறிதும் இன்றி.. ” நந்து” என்று கதறி துடித்தபடி.. மது அவனை நோக்கி ஓடி செல்ல முயல.. அதற்கு தடை விதிப்பது போல..  கரம் பற்றி இருந்தவன்.. ” என்னடி…  நந்து  பந்துனு   ஓவரா துள்ளுற?..  ” என்று  அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தான்.

அதே நேரத்தில் மற்றொருவன்  முன் வந்து..”என்னடா ஒரு  ஆள அடிச்சுட்டா பெரிய இவனா நீ?” என்று கோபமாய் கேட்டபடி  கையை ஓங்கிக் கொண்டு  அபிநந்தனை நெருங்கினான்.

ஓங்கிய கையை  முறுக்கிப் பிடித்து.. பின்புறம் கொண்டு வந்தவன்… ” ஆமாம் டா.. நான் பெரிய இவன் தான்டா.. என்னடா பண்ணுவ…?” என்று  கேட்டுக் கொண்டே சரமாரியாக.. அவன் முதுகில் குத்திக் கொண்டே இருக்க. … தனது கூட்டாளியை காப்பதற்காக மதுவின் கரத்தை  விலக்கி விட்டு அவர்களிடம் ஓடி வந்தான் மற்றொருவன்.

பற்றி இருந்த கரத்திற்கு விடுதலை கிட்டியவுடன்.. அவசரமாய் அபிநந்தன் அருகில் வந்து நின்று கொண்டாள் மது.

கோபமாய்  வந்தவனை லாவகமாய் தடுத்து நிறுத்தி..  அவன் வலக் கரத்தை பற்றி.. ” இந்தக் கை தான என் மதுவை அடிச்சது” என்று வெறி கொண்டவன் போல் மூவுருளி உந்தின் முன் கண்ணாடியில் ஓங்கித்  தட்டினான்.

அவன் தட்டிய வேகத்தில்  உடைந்து சிதறிய கண்ணாடித் துகள்கள் மதுவை காயப்படுத்தி  விடக் கூடாது என்பதற்காக அருகில் நின்றிருந்தவள் புறம் வேகமாய் திரும்பி அவளை அணைத்துப்  பிடித்தபடி நின்றான் அபிநந்தன்.

அடிபட்டவன் வலியில் பதறி துடித்துக் கொண்டிருக்க.. அவனை சிறிதும் கண்டுகொள்ளாதவன்  மதுவின் கன்னத்தை அக்கறையாய் பற்றி கொண்டு ” உனக்கு ஒன்னும் இல்லேல மதுமா.. நீ நல்லாத் தான இருக்க..?” என்று பரிவுடன் வினவினான்.

” எனக்கு ஒன்னும் இல்ல.. ” என்ற மது தன் கன்னத்தை பற்றி இருந்த கரத்தை விலக்க முயல.. அவள்  முயற்சியை முறியடித்து தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டவன்…” கொஞ்ச நேரத்துல உனக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு பயந்து போயிட்டேன். ” என்று அவள் நெற்றியில் இதழ் பதிக்க..

” என்னடா நாங்க கரெக்ட் பண்ணலாம்னு  நினைச்சா நீ தனியா ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க.. ” என்று கேட்ட படி மீண்டும் மூவரும் சேர்ந்து அபிநந்தனை தாக்க முன்வர…

மதுவை  சற்று தள்ளி நிற்கும் படி செய்கை செய்து விட்டு,  கீழே கிடந்த  கட்டை  ஒன்றை எடுத்து… மூவரையும் சரமாரியாக தாக்கத் துவங்கினான்.

“அபி.. பிளீஸ் வேணாம்.. விட்டுடுங்க யாருக்காவது ஏதாவது ஆகிடப் போகுது.. ” என்று மதுரிமா அபிநந்தனை தன்னால் இயன்ற அளவு தடுக்க முயல.. அவள் வார்த்தைகளுக்கு செவிமடிக்காமல் … விடாமல் விரட்டி சென்று மூவரையும்  தாக்கிக் கொண்டிருந்தான்.

இரத்தக் காயங்களுடன்  உயிருக்கு அஞ்சி ஆளுக்கு ஒரு திசையில் ஓடத் துவங்கினர்.

தப்பி பிழைக்க ஓடியவர்களையும் விடாது விரட்டியவன்…  சிறிது நேரம் கழித்து மது இருக்கும் இடம் வந்த போது.. அவள் அருகில் ஒருவன் அவளை தாங்கிப் பிடித்தது போல் நின்றிருக்க…   கையில் இருந்த   கட்டை கொண்டு அவன் முதுகில் ஓங்கி அடித்தான்.

கட்டையின் ஓரத்தில் ஆணி போல் இருந்தா கூர்மையான ஏதோ ஒன்று  முதுகை குத்திக் கிழிக்க… வலியுடன் கத்தியபடி,   கையில் தாங்கிப் பிடித்திருந்தவளுடன் சேர்ந்து சரிந்து விழுந்தான் மதுரிமாவின் உடன் பிறந்த சகோதரன் மதுசுதன்.

Advertisement