Advertisement

அத்தியாயம் 21-2
அப்பத்தா பேசியதை கேட்டு லஹிருவுக்கு சிரிப்பாக இருந்தது. எதுவும் பேசாமல் அறைக்கு சென்றவன் நுவரெலியாவுக்கு செல்ல தயாரானான்.
“உன்னால எங்க வீட்டுல எல்லாம் வந்து இருக்க முடியாது. நீ உன் சித்தப்பா வீட்டுல தங்கிடு” அவன் பின்னால் வந்த சாரு சொல்ல லஹிரு அவளை திரும்பிக் கூட பார்க்கவில்லை.
“நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும். அத நான் பாத்துக்கிறேன். நீ கிளம்ப தயாராகு. அத்தைக்கும், முத்துக்கும் தீபாவளிக்கு டிரஸ் எடுக்க வேணாம்? வெறுங் கையோடவா போவ?”
அவளுக்கு அது தோன்றவே இல்லை. திருமணம் ஆனா பின் முதன் முதலாக வீட்டுக்கு சென்றாள். வெறுங்கையோடுதான் சென்றாள். அது கூட அவசரமாக சென்றதால் அவள் அதை பற்றி யோசிக்கவில்லை. பண்டிகைக்கு செல்லும் பொழுது அதுவும் திருமணமாகி முதன் முதலாக செல்லும் பொழுது வெறுங்கையோடு போனால் நல்லாவா இருக்கும்?
அத்தை எதுவும் சொல்ல மாட்டாள். காலனியில் உள்ளவர்கள் பேசுவார்களே. அவளை மட்டுமா பேசுவார்கள் இவனையும் சேர்த்து பேசுவார்கள். இவனை குற்றம் சொன்னால் பத்தாதென்று சிங்களவர்களே அப்படித்தான் எனும் விதமாக மதத்தையல்லவா குறை சொல்வார்கள்.
துணி வாங்கிச் செல்ல அவளிடம் பணமேதும் இல்லை. அதற்கும் இவனிடமா காசு வாங்க வேண்டும் என்று நினைக்கும் பொழுது மனம் வெறுத்தாள்.
“எதுக்கு இப்போ வண்டில போறோம்? எங்க வீட்டு முன்னாடி தான் வண்டிய நிறுத்த முடியாதே. ரோட்டுல வண்டிய நிறுத்தி. நைட்டுல எவனாவது வண்டி பார்ட்ஸ் கழட்டி கிட்டு போயிட்டான்னா அப்பொறம் உன் வீட்டுக்கு வந்ததனாலதான் இப்படி ஆச்சு என்று என்ன குத்தம் சொல்லவா? பேசாம ரயில்லயோ இல்ல பஸ்ஸுலையோ போய் இருக்கலாம்” சாரு லஹிருவின் மேல் பாய்ந்தாள்.  
“அம்மா தாயே கொஞ்சம் அமைதியா வா. திருட்டு போனா உன்ன என்ன உன் காலனியையே குத்தம் சொல்ல மாட்டேன் போதுமா” கடுப்பானான் லஹிரு.
அவனும் எவ்வளவுதான் பொறுமை காப்பான். துணி வாங்க சென்ற போது “அத்தைக்கும், முத்துவுக்கும் மட்டும் வாங்கினா போதுமா? உன் ப்ரெண்டுக்கு வாங்க வேணாமா? அவ வேற முத்துவை கல்யாணம் பண்ண போறா இல்ல. சொந்தக்காரி வேற” என்று இவன் ஆரம்பிக்க,
“எதுக்கு நான் மேலும்  கடனாளியாகவா?” அவனை முறைத்தாள் சாரு.
சட்டென்று லஹிருவுக்கு அவள் சொன்னது புரியவில்லை. “என்ன” என்று பார்த்தவன் “எல்லாத்தையும் பணத்தை வச்சுதான் அளப்பியா? இது என் காசு இல்ல. உங்கப்பா காசு வேண்டியதை வாங்கிக்க” என்றான்.
“அப்பா காசு கொடுத்தாரா? எப்போ?” சந்தோசமாக கேட்டாள் சாரு.
தன்னிடம் கொடுக்காமல் இவனிடம் எதற்காக கொடுத்தார் என்ற கோபம் கொஞ்சம் இருந்தாலும், தன்னிடம் கொடுத்தால் வாங்க மாட்டேன் என்று நினைத்து இவனிடம் கொடுத்திருப்பார் என்று எண்ணினாள்.
“காசு என்றா காசு தானே. இவ அப்பா கொடுத்த ஆயிரம் ரூபா நோட்டுகள்ல மட்டும் மயில் மஞ்ச கலர்லயா இருக்கப் போகுது அதுவும் பச்சை கலர்லதானே இருக்கப் போகுது” அவனை முறைத்தவன் “நீ குளிக்கிறப்போ உன்ன தேடி வந்தாரு நான் தான் உன் கிட்ட கொடுத்தா நீ வாங்க மாட்ட என்று நான் வாங்கி வச்சி கிட்டேன்” என்றான்.
“எவ்வளவு கொடுத்தாரு?”
“அப்பா காசு என்றதும் இளிக்கிறத பாரு. நல்லவேளை ஏன் சொல்லல என்று கேக்கலையே” என்று நினைத்தான் லஹிரு.
சாரு ஊருக்கு போவதை அறிந்து மகளை பார்க்க ஜீவக வந்ததும் உண்மை, பணம் கொடுக்க எண்ணியதும் உண்மை. “என்ன மாமா என் பொண்டாட்டிக்கு நான் செலவு செய்ய மாட்டேனா” என்று லஹிரு மறுத்து விட்டான். அதனால்தான் அவன் சாருவிடம் இதை பற்றி கூறி இருக்கவில்லை. இவள் பேசியதை வைத்து வேறு வழியில்லாது “உங்கப்பன் காசுதான் வேண்டிய அளவு செலவு செய்துகொள்” என்றான்.
“இதோ இந்த கார்ட கொடுக்க சொன்னாரு” என்று அவனுடைய கார்டை நீட்ட அதை வாங்கி அவள் பையில் பத்திரமாக வைத்துக்கொள்ள “எனக்கும் அதுல தான் செலவு செய்ய சொன்னாரு” என்று இவன் சொன்னான்.
அவனை முறைத்த சாரு “உன் கிட்ட தானே காசு கொட்டிக் கிடக்கு. எங்கப்பா காச வேற கரைக்கப் பாக்குறியா? ஊரான் காசு என்றா கண்ண மூடிக்கிட்டு செலவு செய்வியா?” என்று பேச
“அடிப்பாவி” எனும் விதமாக அவளை பார்த்தவன் அமைதியாக நிற்க, இவளோ வான்மதிக்கு மட்டுமன்றி அவள் குடும்பத்துக்கு சேர்த்தே துணிகளை எடுத்தாள்.
ஒருவாறு ஷாப்பிங் முடித்து வண்டியில் ஏறிய பின்தான் வண்டியை கொண்டு போய் வீட்டில் நிறுத்த முடியாது என்று நியாபகம் வந்திருக்கும் அதை சொல்லி கணவனை கடுப்பேற்றினாள்.
இவர்கள் வருவதை முன்கூட்டியே பஞ்சவர்ணத்துக்கு கூறியிருக்க, எளிமையான விருந்து ஏற்பாடு செய்திருந்தாள்.
அவள் என்ன நினைத்தாள் என்றால் மதியம் சாப்பிட்டவர்கள் புஞ்சி நிலமையின் வீட்டில் தங்கிக் கொள்வார்கள் தீபாவளியன்று வருவார்கள் என்றுதான். ஆனால் சாரு அவர்கள் இங்குதான் தங்குவதாக சொன்னதும் மறுக்கவும் முடியவில்லை. என்ன செய்வது என்றும் புரியவில்லை.
முத்துவிடம் கூற அவன் நண்பனொருவனின் அறையில் தங்கிக் கொள்வதாக கூறினான். ஆனால் பஞ்சவர்ணம் எங்கு தங்குவது? புதிதாக திருமணமானவர்கள் வேறு தனிமையும் வேண்டும். பெரிய வீட்டில் இருந்த லஹிருவுக்கு இந்த வீட்டில் எந்த அசௌவ்கரியமும் ஏற்படக் கூடாதே என்ற கவலை வேறு தொற்றிக் கொள்ள, யார் வீட்டில் ஆட்கள் குறைவு, யாரிடம் கேட்டப் பார்க்கலாம் என்று யோசித்தாள்.
அவர்களின் தடுமாற்றம் லஹிருவுக்கு புரிந்தது என்ன பிரச்சினை என்று கேட்க, பஞ்சவர்ணமும், முத்துவும் ஒரே நேரத்தில் “ஒன்றுமில்லை” என்றனர்.
ஆனால் சாரு அவன் மீதிருந்த கோபத்திலையே அங்கிருக்கும் நிலமைக்கு அவன்தான் காரணம் என்பது போலவும், அவனால் அவர்கள் சங்கடப்படுவது போலவும் கூறினாள்.
“இதுதான் பிரச்சினையா? யாரும் எங்கயும் போக வேணாம். எல்லாரும் ஒண்ணா இங்கயே தூங்கலாம். அதற்கு நான் வழி பண்ணுறேன். வா முத்து வெளிய போயிட்டு வரலாம்” முத்துவை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான். 
“இந்த சின்ன வீட்டுல இவன் என்ன வழி பண்ண போறான்? மாடி கட்டி தூங்க போறானா? லூசு” சாரு மனதுக்குள்ளே கணவனை வையலானான்.
அவர்கள் வெளியே சென்ற உடன் அத்தைக்கு வாங்கிய தீபாவளி துணியை பிரித்துக் காட்டியவள் பிடித்திருக்கா என்று கேட்க,
“எனக்கு எதற்கு டி இம்புட்டு விலைல புடைவை வாங்கி இருக்க?” சாருவை முறைத்தவாறு பஞ்சவர்ணம் கேட்டாலும் முகம் பூரிப்பில் மிளிர்ந்தது.
“சும்மா நடிக்காத அத்த. இத பாரு உன் மருமகளுக்கு வாங்கினது” வான்மதிக்கு வாங்கிய புடவையை காட்ட,
“கல்யாணத்துக்கு புடவை வாங்குற செலவு மிச்சம் டி” என்றாள் பஞ்சவர்ணம். இதுதான் அவர்களின் நிலமை.
“ஒரே கல்லுல ரெண்டு மங்கா அடிக்கலாம் என்று பாக்குற. நீ கலக்கு” சிரித்த சாரு “ஆமா இந்த துணிய சும்மா கொண்டு போய் கொடுத்தா போதுமா? முறை, குறை என்று ஏதாவது இருக்கா?”
“முறை செய்ய போனா காசு தான்டி செலவாகும். சும்மா போய் கொடுத்துட்டு வரலாம். வீட்டுல இருப்பாளான்னு போன போட்டு கேளு”
சாரு அலைபேசி வழியாக வான்மதியை அழைக்க, அவள் கடையில் இருப்பதாகவும். மாலை வந்து விடுவதாகவும் கூற, வந்த உடன் தெரிவிக்குமாறு கூறிய சாரு அலைபேசியை துண்டித்தாள்.
மாலை சென்று அவர்களுக்கு வாங்கிய துணிகளையும் கொடுத்து விட்டு தோழியையும் பார்த்து பேசிக் கொண்டிருந்தாள். அதுவரை லஹிரு வீடு வந்து சேரவில்லை.
இந்த சூழல் அவனுக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் வராமல் இருக்கின்றான். அதற்குத்தான் சித்தப்பாவின் வீட்டில் தங்கிக்கொள்ள சொன்னேன். சொல்வதை கேளாமல் இப்படி நடந்துகொள்ள வேண்டுமா? என்று பொருமலானாள்.
அவனுக்கு அழைத்து கேட்க பிடிக்காமல் முத்துவை அழைத்து கேட்க, கிரவுண்டில் புட்பால் விளையாடிக் கொண்டிருப்பதாகக் அவன் கூற, “என்ன?” என்று இவள் தான் அதிர்ந்தாள்.
வண்டியை எடுத்துக் கொண்டு எங்கயாவது ஊர் சுற்ற போய் இருப்பான் என்று இவள் நினைத்திருக்க, காலனி பசங்களோடு விளையாடுகிறான் என்றதும் அதிர்ச்சியாக இருக்காதா?
மதிய உணவுக்கு பிறகு சென்றவர்கள் வந்தது இரவு உணவுக்குத்தான். வரும் பொழுது மடிக்க கூடிய இரண்டு மெத்தைகள் துணி காய போடும் கயிறு, பெரிய கனமான படுக்கை விரிப்புகள், இன்னும் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் சில என வாங்கி வந்திருந்தனர்.
முத்துவோடு சென்று குளித்து விட்டு வந்தவனுக்கு சுடச்சுட தேனீர் வழங்கினாள் சாரு.
“நாள் எப்படி போச்சு? நா இல்லாம போர் அடிக்கலையே?” என்று லஹிரு கேட்க அவனை முறைத்தவள்
“இந்த வீட்டில நீ நடிக்க ஒன்னும் அவசியமில்லை.  இங்கதான் பாட்டி இல்லையே” என்றாள்.
“என்ன பார்த்தா நடிக்கிறவன் போல தெரியுதா?” நாடியை தடவி யோசிப்பது போல் பாவனை செய்தான் இவன்.
“நமக்குள்ள போட்டுக்கிட்ட அக்ரிமெண்ட் இன்னமும் இருக்கு. அத மறந்துடாத” கணவனை மிரட்ட எள்ளலாக சிரித்தான் லஹிரு.
“என்ன?” என்று பார்த்தவளை “அதை தான் அப்பத்தா வாங்கி வச்சிட்டாங்களே. இந்நேரம் அத எரிச்சிருப்பாங்களோ? புதைச்சிருப்பாங்களோ”
“என் காபி என் கிட்டாதான் இருக்கு” திமிராகவே பதில் சொன்னவளை புன்னகையோடு பார்த்தவன்
“எது அந்த துணி பைலை வச்சிருந்தது தானே” என்றான். 
சாரு விரைந்த அவள் துணி பையை துலாவலானாள்.
லஹிருவுக்கு என்று அவள் மேல் காதல் உண்டானது அன்றே அவனிடமிருந்த காபியை கிழித்து எறிந்திருந்தான்.
இவளிடமிருப்பதை காட்டி பிரச்சினை செய்வாள் என்று அதை எப்படியாவது அவளிடமிருந்து அபகரிக்க எண்ணியவன் அதை அவள் எங்கு வைத்திருப்பாள் என்று யோசிக்க, “ஆமா இருக்கிறதே ஒரு துணிப்பை அதுல வைக்காம எதுல வைப்பா” என்றவன் அதை குடையும் போதே கிடைத்து விட ஓடிச் சென்று எரியும் விறகடுப்பில் போட்டு விட்டான். அது சாம்பலான பின்தான் நிம்மதியடைந்தான்.
அசலை பாக்டரியிலுள்ள லாக்கரில் வைத்திருந்தமையால் அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டான். அதுதான் சுதுமெனிகேயின் கையில் சிக்கியிருந்தது.
   
தனது துணிப்பையில் அக்ரிமெண்ட் நகலை காணாது அதிர்ந்தவள் கணவனை முறைக்க, அவனோ கிழித்து காற்றில் பறக்க விட்டது போல் செய்கை செய்தான். எதற்காக இவன் இவ்வாறெல்லாம் செய்கிறான் என்ற ஒருவித குழப்பத்திலையே இருந்தாள் சாரு.
திடிரென்று காலனியில் யாரோ கெட்ட கெட்ட வார்த்தைகளால் யாரையோ திட்டுவது கேட்டது. திட்டுபவரின் குரல் குலைந்து ஒலிக்க அந்த நபர் குடித்திருப்பது புலப்படவே அதிர்ந்த லஹிரு “இங்க தினமும் இப்படியா?” என்று முத்துவிடம் கேட்கும் பொழுதே இன்னும் இரண்டு பேர் அதே போல் வசை பாட ஆரம்பித்திருந்தனர்.
“இவங்க கிட்டாதான் ட்ரைனிங்” எடுத்தியா என்பது போல் மனைவியை பார்த்தவன், இந்த மாதிரியான சூழ்நிலையில் வளர்ந்ததினால் தான் இவள் இவ்வாறு இருக்கிறாள், அதற்கு தன்னுடைய தந்தையும் ஒரு காரணம் என்று பெருமூச்சு வீட்டுக் கொண்டான்.    
இரவு உணவுக்கு பின் எங்கே தூங்குவது? என்று பெண்கள் இருவரும் பார்த்திருக்க, வீட்டின் நடுவே கயிறை கட்டி கொண்டு வந்த படுக்கை விரிப்பை போட்டு மறைத்து, கொண்டு வந்த மெத்தைகளை இரு பக்கமும் போட்டு தூங்க ஆயத்தமானார்கள்.
வீட்டுக்கு நடுவே கயிறு கட்டி இருந்தாலும் சாருவும் லஹிருவும் தூங்க மூன்று பக்கமும் மறைவாகவும் வாசல் ஜன்னல் மட்டும் தெரியும் பக்கம் இருந்தது.
முத்துவும், பஞ்சவர்ணமும் வாசல் கதவு மற்றும் சமையல்கட்டு பக்கம் இருந்தனர். அவர்களை தாண்டி வெளியே சென்றுவர இவர்களுக்கு எந்த சிரமமும் இல்லாதவாறுதான் படுக்கையும் போடப்பட்டிருந்தது.
நடக்க இருக்கும் விபரீதம் அறியாமல் சாருவுக்கே பார்க்க பிடித்துத்தான் போனது.

Advertisement