8….
என் கண்ணீர் துடைக்க நீளும்
உன் கரங்களுக்குள்
சிக்கிக் கொள்ள தவிக்கிறேன்..
நாளும் உன் காதலில்
என்னைக் கலந்து…
உன்னை என்னுள்
சிறைபிடிக்க துடிக்கிறேன்…
” என்னப்பா தம்பிகளா? கூட படிக்கிற பொண்ணு அடியாள வச்சு அடிச்சிட்டான்னு, நீங்களே தான் தேடி வந்து கம்ப்ளைன்ட் கொடுத்தீங்க! இப்போ நீங்களே அந்த பொண்ணு மேல எந்த தப்பும் இல்லைன்னு சொல்றீங்க!. இதுல எது உண்மை?” என்று சுஹனியின் மீது கொடுத்த புகாரை திரும்ப பெற வந்த இளைஞர்களிடம் விசாரித்தார் காவல் அதிகாரி.
“என்னை.. பாக்க அடியாள் மாதிரியா இருக்கு!” என்று கேட்டபடி உள்ளே நுழைந்தான் அவன்.
” யார்யா நீ? இருக்கிற தலைவலிக பத்தாதுன்னு நீ வேற சம்மன் இல்லாம ஆஜர் ஆகுற?” என்று எரிச்சலுடன் வினவினார் காவல் அதிகாரி.
” இந்த பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணுனதுக்காக இந்த பொறுக்கி நாய்கள அடிச்சதும் நான் தான், இவங்க அடியான்னு சொன்னதும் என்னைத் தான். இப்ப நீங்க சொல்லுங்க எண்னைப் பாத்தா அடியாள் மாதிரியா இருக்கு?” என்றான் கீர்த்தன்.
” ஓ.. அது நீ தானா? ஆள் பார்க்க சினிமா ஹீரோ மாதிரி டிப் டாப்பா தான் இருக்க, அடியாளா இல்லைனாலும் நீ இவங்கள அடிச்சது தப்பு தான். உன் தப்பு புரிஞ்சு போலீஸ் கேஸ் ஆயிடும்னு பயந்துட்டு ஓடிட்டனு நினைச்சேன். பரவாயில்லையே தைரியமா தான் வந்து நிக்கிற?, ” என்று காவல் அதிகாரி அலட்சியமாய் பேசிட… ” சார் கொஞ்சம் மரியாதையா பேசுங்க..” என்று கீர்த்தன் அருகில் வந்து நின்றான் சித்தேஷ்.
” அது சரி மகாராஜாவுக்கு மரியாதை கேக்குதோ! ஆமா நீ யாரு இந்த ராஜாவோட எடுப்பா.” என்று அப்போதும் திமிராகவே வினவினார் காவல் அதிகாரி.
” அவர் யாருன்னு தெரிஞ்சா நீங்க இப்படி பேச மாட்டீங்க!,” என்று சித்தேஷ் கூறிக் கொண்டிருக்க… அசட்டையாக கையை அசைத்து எதுவும் செல்லாதே என்பது போல் செய்கை செய்தான் கீர்த்தன்.
“ அட… இருங்க பாஸ்… நீங்க யாரு உங்களுக்கு இருக்கிற பவர் என்னன்னு தெரிஞ்சா, இவங்க இப்படி பேச மாட்டாங்க” என்றான் சித்தேஷ்.
“ அதெல்லாம் நீ ஒன்னும் சொல்ல வேணாம், நாம இங்க வந்தது அந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்ண, இதுல தேவை இல்லாம என் டீட்டேல் எதுக்கு குடுக்கணும்” என்று தன் விபரம் வெளியாவதை விரும்பாமல் தடுத்தான் கீர்த்தன்.
“ஹலோ நீங்க எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் சாரி சட்டத்துக்கு முன்னாடி எல்லாரும் ஒன்னு தான். அந்த பசங்கள அடிச்சது நீ தானே?, இப்ப கூட கொடுத்த கம்ப்ளைன்ட்டை வாபஸ் வாங்க சொல்லி மிரட்டி தானே அந்த பசங்களை இங்க கூட்டிட்டு வந்து இருக்க?” என்றார் காவல் அதிகாரி.
” யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஆமா இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை?. அடி வாங்குனவங்களே உண்மைய சொல்லி கேஸ்ஸை வாபஸ் வாங்க வந்திருக்கேன்னு சொல்றாங்க, அவங்க கிட்ட என்ன நடந்ததுனு விசாரிக்கிறத விட்டுட்டு வேற ஏதேதோ பேசிட்டு இருக்கீங்க. முதல்ல அவங்க என்ன சொல்றாங்கன்னு கேளுங்க சார்” என்றான் கீர்த்தன்.
” யார்கிட்ட எப்போ, எப்படி விசாரிக்கணும்னு நீ ஒன்னும் எங்களுக்கு சொல்லித் தர தேவையில்லை.. ” என்று குத்தலாக கீர்த்தனிடம் கூறியவர், காயங்களுடன் நின்றிருந்த இளைஞர்கள் புறம் திரும்பி.. ” இந்த ஆள் மிரட்டினலால தான் இங்க வந்திருக்கீங்களா?, யாருக்கும் பயப்படாம உண்மைய சொல்லுங்க, இதுக்கும் ஒரு கேஸ் போட்டு இந்த ஆள உள்ள தள்ளிடுறேன்.” என்றார் காவல் அதிகாரி.
அலட்சிய தோரணையுடன் கீர்த்தன் நின்றிருக்க இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமுறை பார்த்துக் கொண்டு கீர்த்தன் புறம் திரும்பி, ” சார் எங்கள மிரட்டல நாங்களா தான் உண்மையை சொல்ல வந்திருக்கோம். ” என்றனர்.
” இப்போ மாத்தி பேசுறதால இந்த கேஸ் உங்க பக்கமே திரும்புறதுக்கு வாய்ப்பு இருக்கு, அது தெரியும் தானே உங்களுக்கு.. ” என்று காவல் அதிகாரி எச்சரிக்கை கொடுக்க…
” ஹலோ என்ன சார், நானும் வந்ததுல இருந்து பாத்துட்டு இருக்கேன், நீங்க அவங்கள ப்ரொடெக்ட் பண்றதுல தான் குறியா இருக்கீங்க!” என்று வழக்கறிஞர் பெண்மணி குரல் கொடுக்க..
” நேத்து வரைக்கும் அந்த பொண்ணு மேல தப்பு சொல்லிட்டு இருந்தவங்க… இப்ப வந்து திடீர்னு மாத்தி பேசினா சந்தேகம் வராதா?, அதான் என்ன ஏதுன்னு விசாரிக்கிறேன்.” என்று தன் செயலுக்கு காரணம் கூறினார் காவல் அதிகாரி.
” மாத்தி பேசுறது அவங்க இல்ல, நீங்க தான்.. இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன சொன்னீங்கன்னு மறந்துடுச்சா?, ஒன்னு இந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணுன ஆள் வரணும், இல்லைன்னா அந்த பசங்க வந்து உண்மைய சொல்லனும்னு சொன்னீங்க தானே!, இப்போ ரெண்டுமே நடந்திருக்கு இருந்தாலும் நீங்க ஆக்சன் எடுக்காம இருக்கீங்க!” என்று குற்றம் சாட்டினார் வழக்கறிஞர்.
நியாயமான கேள்விக்கு பதில் கூற முடியாமல் தடுமாறிய காவல் அதிகாரி…” அது அது வந்து… நான் என் கடமையைத் தான் செய்றேன். ” என்றவர் வழக்கு தொடர்ந்த இளைஞர்கள் புறம் திரும்பி, ” உண்மைய சொல்லுங்க அங்க என்ன நடந்தது?” என்று விசாரணையை தொடர்ந்தார்.
” சார் நான் சுஹனிய ரொம்ப நாளா ஒன் சைடா லவ் பண்ணிட்டு இருக்கேன். ஒரு நாள் அவ கிட்ட என் லவ்வை ப்ரொபோஸ் பண்ணவும் செஞ்சேன். அதுக்கு அவ லவ்ல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல, நாம எப்பவும் போல பிரண்ட்ஸாவே இருப்போம்னு சொல்லிட்டா… அவ என்னை வேணான்னு சொன்னதை என்னால தாங்கிக்க முடியல. எப்படியாவது அவளை பழி வாங்கணும்னு நினைச்சேன். சதீஷ் தான் அவ கிட்ட தப்பா நடந்துகிட்டு அதை வீடியோ எடுத்து சோசியல் மீடியால போஸ்ட் பண்ணிடலாம் அதை விட பெரிய அவமானம் வேற எதுவும் இருக்காது, அவமானத்துல கூனிக்குறுகி வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடப்பான்னு ஐடியா கொடுத்தான். நானும் அவ மேல இருந்த கோபத்துல அது தான் சரின்னு நினைச்சேன். அதனால என்னோட பிறந்த நாள்னு பொய் சொல்லி அவளை மட்டும் தனியா கூட்டிட்டு போனோம். எங்க ஒரு வேலை மனசு மாறி சுஹனிய பழிவாங்காம விட்டுவிடுவோமோனு யோசிச்சு, நாங்க பிக்ஸ் பண்ண ஸ்பாட்க்கு போறதுக்கு முன்னாடியே நல்ல ட்ரிங் பண்ணிட்டோம். அதுக்கப்புறம் எங்க திட்டப்படி அவ கிட்ட தப்பா நடக்க ஆரம்பிச்சோம். அதையெல்லாம் சதீஷ் அவனோட செல்போன்ல வீடியோவா எடுக்க ஆரம்பிச்சான். அப்ப தான் திடீர்னு இவர் வந்து எங்களை அடிச்சு போட்டு, சுஹனிய எங்க கிட்ட இருந்து காப்பாத்தி கூட்டிட்டு போயிட்டாரு. நாங்க போட்ட திட்டம் சரியா நடக்கலன்னு கோபத்துல சுஹனி மேல போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ணினோம். இது தான் உண்மையிலேயே நடந்தது. சுஹனி ரொம்ப நல்ல பொண்ணு அவ எந்த தப்பும் பண்ணல” என்று தன் தவறை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் வழங்கினான் விக்னேஷ்.
தோழன் விக்னேஷ் வார்த்தையை ஆமோதிப்பது போல் அவன் அருகில் அமைதியாய் தலையசைத்தபடி நின்று இருந்தான் சதீஷ்.
” கேட்டீங்களா சார் தப்பு பண்ணுனவங்களே அவங்க தப்ப ஒத்துக்கிட்டாங்க.. இதுக்கு மேல உங்களுக்கு எந்த சாட்சியும் ஆதாரமும் தேவையில்லைனு நினைக்கிறேன், இப்பவாவது அந்த பொண்ணு மேல இருக்கிற கேஸை கிளோஸ் பண்ணுங்க சார். ” என்றார் வழக்கறிஞர்.
தவறு செய்தவர்களே தங்கள் தவறை ஒப்புக்கொண்டு சரண் அடைந்திட வேறு வழி இல்லாமல் சுஹனியின் மீது தொடுக்கப்பட்ட பொய்யான வழக்கை ஒதுக்கி வைத்து விட்டு உண்மையாய் தவறு செய்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்தார் காவல் அதிகாரி.
சுஹனியின் தோழியும் அவளுடன் வந்தவர்களும் சுஹனியின் நன்றியை பெற்றுக் கொண்டு காவல் நிலையத்திலிருந்து கிளம்பி சென்று விட.. தனித்து நின்றிருந்தவள் கீரத்தன் அருகில் வந்து, ” தேடி வந்து உதவி பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.. ” என்று வேண்டா வெறுப்பாக நன்றி தெரிவித்தாள் சுஹனி.
” என்ன வெறும் தேங்க்ஸ் தானா?, நேத்து வீடு தேடி வந்து பாஸை எப்படி எல்லாம் பேசினீங்க அதுக்கு முதல்ல சாரி கேளுங்க.. ” என்றான் சித்தேஷ்.
” நேத்து அவர் நடந்துகிட்ட விதத்துக்கு தான் அப்படி பேசினேன், முதல்ல அவர என்கிட்ட சாரி கேக்க சொல்லுங்க அதுக்கப்புறம் நான் சாரி கேட்கிறேன்.. ” என்று கோபமாய் கூறினாள் சுஹனி.
” உன்னோட சாரியையும் தேங்க்ஸ்ஸையும் எதிர்பார்த்து நான் எதுவும் செய்யல, உனக்கு வேண்டியது கிடைச்சிடுச்சுல இதுக்கு மேல என்னை தொந்தரவு பண்ணாத, என்னை தேடி வராத, அது தான் உனக்கு நல்லது” என்று ஒரு விரல் நீட்டி எச்சரிக்கை செய்தவன் அலட்சியமாய் அங்கிருந்து வெளியேறிட.. ” என்ன மேம், இப்படி பேசிட்டீங்க உங்களுக்காக பாஸ் எவ்ளோ ரிஸ்க் எடுத்தாருன்னு தெரியுமா?, நீங்க வீட்டுக்கு வந்து கோபமா பேசிட்டு போனதுல இருந்து பாஸ் நிம்மதியாவே இல்ல. நைட்டு சரியா கூட சாப்பிடல தெரியுமா?, தனியா உக்காந்து எதையோ ரொம்ப நேரமா யோசிச்சுட்டே இருந்தாரு. காலைல திடீர்னு என்ன நினைச்சாருன்னு தெரியல, அந்த பசங்கள பாக்கணும்னு சொன்னாரு, நானும் அவங்க ஆள் அட்ரஸ் விசாரிச்சு சொன்னேன், ரெண்டு பேரையும் தனியா கூட்டிட்டு போய் பாஸ் என்ன சொன்னாருன்னு தெரியல, ரெண்டு பேரும் அவங்களோட தப்ப ஒத்துக்க ரெடி ஆகிட்டாங்க. என் பாஸ் இதுவரைக்கும் இந்த மாதிரி எந்த பொண்ணுக்கும் உதவி பண்ணது இல்ல, ஃபர்ஸ்ட் டைம் உங்களுக்கு ஹெல்ப் பண்ணிருக்காரு, நீங்க என்னடான்னா அவர இப்படி எடுத்து எறிஞ்சு பேசிட்டீங்க.. ” என்று வருத்தத்துடன் கூறி தன் முதலாளியை பின் தொடர்ந்தான் சித்தேஷ்.
சித்தேஷ் கூறியதன் பின்பு தனது தவறு புரிந்து வருந்தியவள், அவசரமாய் கீர்த்தனை தேடிச்சென்று, ” நேத்து உங்க கிட்ட ரொம்ப தப்பா பேசிட்டேன் சாரி, உங்களோட ஹெல்ப்புக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்று உண்மையான நன்றியுடன் நன்றி தெரிவித்து விட்டு மெய்யான வருத்தத்துடன் மன்னிப்பு வேண்டினாள் சுஹனி.
எப்போதும் பாறை போல் இறுகி இருக்கும் இதழ்கள் மெலிதாய் புன்னகையின் சாயலை பூசிக்கொள்ள, ” இட்ஸ் ஓகே.. நீ அப்படி பேசினது தான் எனக்கு பிடிச்சிருந்தது..,” என்று தன்னையும் மீறி தனது மனதின் வார்த்தைகளை வெளிப்படையாக உளறி விட்டு அடுத்த நொடியே தன் தவறு புரிந்து, ” இனிமே என்னை தொந்தரவு பண்ண மாட்டேன்னு நம்புறேன்” என்று இளகத் துவங்கிய மனதை மறைத்து கோபமாய் அறிவித்துவிட்டு தனது சொகுசு ஊர்தியில் ஏறி அமர்ந்தான் கீரத்தன்.
” பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு தேடி வராதான்னு சொன்னா என்ன அர்த்தம்?” என்று கீர்த்தனை கேலி செய்வது போல் கூறியவள்,” இனி அடிக்கடி மீட் பண்ணலாம்” என்று புன்னகை மாறாமல் கூறினாள் சுஹனி.
ஏனோ மனம் அவளை மீண்டும் காண வேண்டும் என்ற ஆவல் கொண்டாலும்.. அத்தகைய சந்திப்புகள் அவள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்ற எண்ணம் அவனது ஆவலையும் ஆசையையும் அடக்கி வைத்தது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா” என்ற பொருளும் உள்ளது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~