Advertisement

அத்தியாயம் 8

“உன் சின்ன மக ஊருக்கு வந்திருக்கா” வீட்டுக்கு வந்ததும் வராதுமாக செங்கதிரவன் மனைவியிடம் குரல் கொடுத்தான்.

“ஏழு வருஷமா ஊருக்கு வராதவ எதுக்கு வந்தாளாம்? காலை உணவுக்கு இட்லியை வேக வைத்தவாறு இருந்த மங்களம் சமையலறையில் இருந்தவாறே கேட்டாள்.

“அவ ஊருக்கு வந்திருக்கிறது உனக்கு எப்படி தெரியும்? நீ போய் அவளை பாத்தியா? எங்க தங்கி இருக்கா உன் மவ?” மகன் சொன்னதை கேட்டு அங்கே வந்த நாச்சியார் கேள்விகளை அடுக்கினாள்.

“நான் எதுக்கு அவள போய் பார்க்கணும்? அவ குடும்பத்தோட கோவிலுக்கு வந்துட்டு போகும் போது முனியாண்டியோட கடைக்கு வந்திருந்தா. உள்ள வந்தவள பார்த்ததும் நான் கிளம்பி வீட்டுக்கு வந்துட்டேன்” என்றான் மிதுவை பெற்றவன்.

“காதுல, கழுத்துல நகை ஏதாச்சும் போட்டிருந்தாளா? இல்ல அன்னக்காவடி போல இருந்தாளா?” வீட்டில் பார்த்த மாப்பிள்ளை வேண்டாம் என்று சீதனம், சீர்வரிசை இல்லாமல் தாஸோடு போனாளே, அவன் அவளை எவ்வாறு வைத்திருக்கிறான்? இருவரும் எவ்வாறு குடும்பம் நடத்துகிறார்கள் என்பதை தான் நாச்சி இப்படி கேட்டாள். தாஸ் யாரோ அல்ல தனது மகள் வயித்து பேரன். என்னதான் சோலையம்மாளின் மீதிருந்த கோபத்தால் இருவரையும் ஊரை விட்டு ஒதுக்கியும், ஒட்டி உறவாடாமலும் இருந்தாலும் அவர்கள் நல்லா இருக்க வேண்டும் என்று மனதால் வேண்டிக் கொண்டாள். அதை பேச்சில் காட்ட மாட்டாள் அவ்வளவு தான்.

“அதெல்லாம் நான் பார்க்கல. புடவை கட்டித்தான் வந்திருந்தா. ரெண்டுமே பசங்க. மூணு வயசுல ஒரு பையன். ஆறு மாசமோ எட்டு மாசமோ ஒரு பையன்”

“ம்ம்… இத்தனை வருஷம் கழிச்சு எதுக்கு ஊருக்கு வந்திருக்கலாம்?”

“அதையும் அவகிட்ட தான் கேட்கணும்”

“அவகிட்ட கேக்கணும் னு, கொஞ்சனும் னு போய் நிக்காத. போனவளுக்கு நம்ம வீட்டு விலாசம் தெரியாதா? அவளாகவே வரட்டும்” சோலையம்மாள் பேசிய பேச்சின் தாக்கத்தால் பேத்தியை பார்க்கவே கூடாது என்று பிடிவாதத்தோடு இருந்த நாச்சியார் கழுத்தை நொடித்தாள்.

ஆனால் பெற்ற அன்னையான மங்களத்துக்கு அப்படி இருக்க முடியுமா? இவர்கள் முன்னிலையில் முறுக்கிக் கொண்டாலும் மகளை எப்பொழுது பார்ப்பது என்ற எண்ணம் தான்.

சமையலறையில் இருந்து அன்னை மகன் சம்பாசனையை குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டிருந்தவள் “பாவி மக காலையிலே கோவிலுக்கு போறேன்னு சொல்லி இருந்தா, நானும் கோவிலுக்கு வந்திருப்பேனே” என்று மிதுவை திட்டினாள் மங்களம்.

காலை உணவை அத்தையின் கையில் கொடுத்து விட்ட அமிர்தாஷினிக்கு தங்கையை பார்க்க செல்லலாமா? வேண்டாமா? என்று ஒரே குழப்பம். இரவு உணவை தயாரித்தவள் அத்தையின் கையிலேயே கொடுக்க, “நீயும் வா…” என்று பலவந்தமாக அழைத்துச் சென்றிருந்தாள் அத்தை கனகா.

பல வருடங்கள் கழித்து பார்த்ததில் சகோதரிகள் இருவரும் கண்ணீரோடு கட்டி தழுவிக் கொண்டு நலம் விசாரித்துக் கொண்டனர்.

அக்கா தங்கையை தொந்தரவு செய்யாமல் தாஸ் குழந்தைகளை கவனிக்கலானான்.

“உன் பசங்களா? உன்ன மாதிரியே இருக்காங்க” என்று அமிர்தா சொல்ல,

“ஆமா ஆமா குணத்திலும் அவளை மாதிரியே” குழந்தைகள் செய்யும் சேட்டைகளை நினைத்து வாய்மூடி சிரித்தான் தாஸ்.

கணவனை முறைத்து விட்டு “உனக்கு எத்தனை பசங்க?” புன்னகையோடு கேட்டாள் மிது.

“ஒரு பொண்ணு, ஒரு பையன். நாளைக்கு வீட்டுக்கு வாங்க மீட் பண்ணலாம்”  தங்கையோடு பேசிக் கொண்டிருந்தவளுக்கு வீட்டார் அறிந்து கொண்டால் என்னவெல்லாம் நடக்குமோ என்ற அச்சம் எல்லாம் இருக்கவில்லை. அத்தை, மாமா, கணவன், கொழுந்தனார் என்று அனைவருமே மிதுவுக்கு ஆதரவாக இருக்க, வீட்டார் வந்து தன்னை பேசினால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று தைரியமும் நிம்மதியும் அமிர்தாசனிக்கு இருந்தது.

தங்கையை நினைத்து சதா புலம்பும் அன்னைக்கு மட்டும் தகவல் சொல்ல வேண்டும் என்று எண்ணியவள், இரவோடு இரவாக அன்னையை அலைபேசியில் அழைத்து தங்கை ஊருக்கு வந்திருப்பதாகவும் நலமாக இருப்பதாகவும் ரகசியமாக தகவல் கூறியிருந்தாள்.

ஊரை விட்டு சென்றவள் எங்கே இருக்காளோ? எப்படி இருக்காளோ? குழந்தைகள் இருக்காங்களோ? எத்தனையோ? குழந்தைகளை பெற்றெடுக்கும் பொழுது தனியாக எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு இருப்பாளோ என்று அன்னையாக மனதுக்குள் கதறினாள்.

அவள் மனக்குறைகளை கேட்கவும், புரிந்துகொள்ளவும் கணவனும், மாமியாரும் தயாராக இல்லாத பொழுது, யாரிடம் முறையிடுவாள்? படைத்த இறைவனிடம் தானே சரணடைவாள். காலையில் வீட்டில் பூஜை செய்பவள், தினமும் மாலையில் கோவிலுக்கு செல்லலானாள்.

மிது காலையில் கோவிலுக்கு வருவதை அறிந்திருந்தால் ஏதாவது காரணம் கூறிக்கொண்டு காலையிலேயே சென்று பார்த்திருப்பாள் மங்களம். இப்பொழுது அவளால் புலம்ப மட்டும் தான் முடிந்தது.

மிதுவும் தாஸும் ஊருக்கு வந்தது மிதுவின் வீட்டார் அறிந்து கொண்டதை போல், தாஸின் வீட்டாரும் அறிந்து கொண்டிருந்தனர்.

“வேலா… டேய் வேலா… தாஸ் பொண்டாட்டி புள்ளையோட ஊருக்கு வந்து இருக்கிறானாமே கேள்விப்பட்டியா?” பின் வாசல் வழியாக உள்ளே நுழைந்தாள் சோலையம்மாள்.

“இப்ப எதுக்கு அத்த அவனை பத்தி பேசுறீங்க அவன்தான் வேண்டாம் என்று தலைமுழுகிட்டோமே” கொஞ்சம் கோபமாகவே கூறினாள் மதுமிதா

என்னதான் காதல் திருமணம் செய்திருந்தாலும், பெற்ற மகனை பாராமல் பேசாமல் ஒரு தாயால் இருக்க முடியுமா? அதுவும் தாஸ் மதுமிதாவின் செல்ல மகன். அவள் கோபம் எல்லாம் தாஸ் காதல் திருமணம் செய்ததில் இல்லை. அவன் திருமணம் செய்து கொண்டது அவளது அண்ணன் செங்கதிரவனின் மகள் மிது என்றாகிப் போனது தான் அவளுடைய கோபத்திற்கு காரணம்.

வீட்டாளர்கள் தான் அவனை ஒதுக்கி விட்டார்கள். அவனுமே வீட்டாளர்கள் வேண்டாம் என்று இருந்ததோடு, பெற்ற அன்னை தன்னிடம் கூட பேசாமல் இத்தனை வருடங்கள் இருந்து விட்டானே என்று கோபம் தான் மதுமிதாவை இவ்வாறு பேச வைத்திருந்தது.

“நீ இப்படி பேசினாலும் உன் பய மேல உனக்கு இருக்குற பாசம் எனக்கு தெரியாமலா இருக்கும்” என்ற சோலையம்மாள் “மூத்தவனத்தான் வசதியான குடும்பத்தில் கட்டிக் கொடுத்துட்டு பராக்கு பார்த்துட்டு நிக்கிற. ஒரு நல்லது கெட்டதுக்கு வீட்டு பக்கம் வரானா அவன்?

இளையவனையாவது கூட வச்சுக்க வேணாம். ஊருக்கு வந்தவனை அவளுங்க பேசி மயக்கி வீட்டுக்கு கூட்டிட்டு போக முன்னாடி நாம நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்” என்றாள்.

“நானா பார்த்திய அந்த எம்.எல்.ஏ ஓட பொண்ணுக்கு கட்டி வைக்க சொன்னேன்? வசதியான வீட்டு பொண்ணு. செல்லமா வளர்ந்திருப்பா, நம்ம வீட்டு சூழ்நிலைக்கு சரிப்பட்டு வரமாட்டா என்று எவ்வளவோ சொன்னேன். ஆத்தாவும் மகனும் என் பேச்சை கேட்டீங்களா? என்னமோ என் பையனோட வாழ்க்கைய நானே கெடுக்கிறது போலவும்,  அவன் எதிர்கால முன்னேற்றத்திற்கு  குறுக்க நிக்கிறது போல போலவும், என் பேச்சை கொஞ்சம் கூட கேட்காம, அவனுக்கு அந்த புள்ளைய கட்டி வச்சீங்க இல்ல.

அந்த எம்.எல்.ஏ தன்னோட பொண்ணு என்னமோ பஞ்சு மெத்தையாலே பொறந்து, வளர்ந்தது போல நம்ம வீட்டுல வசதி பத்தல என்று என் பையன கல்யாணம் முடிஞ்ச கையோட வீட்டோட மாப்பிள்ளையா கூட்டிட்டு போயிட்டான். அவனும் வசதியான வீடு, காரு, ஏசி என்று மாமனார் சொல்றதைக் கேட்டு அவர் பின்னாடி போயிட்டான். பண்றது எல்லாம் நீங்க பண்ணிட்டு, என் தலையை உருட்டுறீங்களா?

இங்க பாருங்க எனக்கு புள்ளன்னு எவனும் வேணாம். உங்களுக்கு பேரன் வேணும்னா நீங்க போங்க” என்றாள் மதுமிதா.

“நான் செத்தா… எனக்கு கொல்லி போட என் பையன் இருக்கான்டி. ரெண்டு புள்ளைய பெத்தும் உனக்குத்தான் ஒருத்தனும் கூட இல்ல” மாமியாராக மதுமிதாவை வசை பாட ஆரம்பித்தாள் சோலையம்மாள்.

“என்ன எரிக்காதீங்க புதைங்க” கடுப்பாக சொல்லிய மதுமிதா வீட்டு வேலைகளை பார்க்கச் சென்றாள்.

“உன்ன போல தானே உன் பசங்களும் இருப்பாங்க. உனக்கு அப்படியே உன் அம்மா புத்தி. அதுங்களுக்கும் அவ புத்தி தானே வந்திருக்கும். யாரையும் மதிக்கிறதில்லை. சொல் பேச்சு கேக்கிறதில்லை. தான் செய்வது தான் சரி என்று ஆடுதுங்க. என்ன ஜென்மங்களோ” நாச்சியாரை திட்ட சந்தர்ப்பம் அமையுமா? என்று காத்துக் கொண்டிருப்பவள் கிடைத்த சந்தர்ப்பத்தை விடுவாளா? மதுமிதாவின் தலை மறைந்தும் சோலையம்மாளின் சத்தம் மட்டும் குறையவே இல்லை.

வெளியே சென்றிருந்த தாஸின் தந்தை தணிகை வேலன் வீட்டுக்குள் வரும் பொழுதே அன்னையின் சத்தம் ஓங்கி ஒலிப்பதை பார்த்து “இன்னைக்கும் மாமியாரும், மருமகளும் முட்டிக்கிட்டீங்களா? அம்மா அவ நீ பார்த்த பொண்ணுதானே. உன் பேச்சை மீறாமல் தானே அவள நான் கட்டுனேன். நீங்க ரெண்டு பேரும் ஒத்துமையா இருக்க வேணாம்? என்ன இது எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுக்கிட்டு?” எரிச்சலோடு தான் உள்ளே நுழைந்தான்.

“நானும் உன் பொண்டாட்டியும் மாமியார் மருமகளா, எப்போடா சண்டை போட்டிருக்கோம்? நான் அவளை பேசினா அதுக்கு காரணம் அந்த நாச்சியாராக தான் இருக்கும் என்று உனக்குத் தெரியாதா?” மகனை முறைத்தாள் சோலையம்மாள்.

“இப்போ அந்த அம்மா என்னத்த பண்ணிருச்சு?” கல்யாண நாள் ஆரம்பித்த பிரச்சனை இன்னும் ஓய்ந்த பாடில்லை. இத்தனைக்கும் அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும் எந்த கொடுக்கல், வாங்கலும் இல்லை. ஆனால் ஒரு நாளாவது அந்த வீட்டைப்பற்றியும், வீட்டில் உள்ளவர்களை பற்றியும் இந்த வீட்டில் பேசாத நாளே இல்லை என்ற கோபம் மட்டும் தான் தணிகை வேலனின் எரிச்சலுக்கு காரணம்.

“ஆ…. ஓடிப்போன உன் பையன் அவன் பொண்டாட்டி புள்ளைங்களோட ஊருக்கு வந்திருக்கானாம். மூத்தவனத்தான் அந்த எம்.எல்.ஏக்கு தாரவாத்து கொடுத்துட்டியே. இவன அந்த நாச்சியார் பேசி கூட்டிட்டு போக முன்னாடி, நீ போய் அவன வீட்டுக்கு கூட்டிட்டு வா.

அஞ்சு பிள்ளைய பெத்த. அஞ்சில மூணு பொட்ட. ரெண்டு வெளியூர்ல கட்டி கொடுத்துட்ட. அதுங்களும் ஒரு விசேஷத்துக்கும் ஊருக்கு வரதில்ல. கடைசியா பொறந்தவளாவது ஊர்ல கட்டிக்கொடு. படிக்க வைக்கிறேன் என்று அதிகமா படிக்க வச்சு மாப்பிள்ளைய வெளிநாட்டுல தேடிடாத. அவளாவது வயசான காலத்துல வீட்டுக்கு வந்துட்டு போகட்டும். 

ரெண்டு பையன பெத்து என்ன பிரயோஜனம்? ஒருத்தன் ஊர்ல இருந்தே வீட்டுப் பக்கம் வர மாட்டேங்குறான். மத்தவன் ஊரவிட்டே ஓடிட்டான். அதான் வந்துட்டானே. வந்தவன பேசி கூட்டிட்டு வந்துடு” என்றாள்.

தான் பெற்ற பிள்ளைகளை பற்றி வளமையாக அன்னை புலம்புவது தான். அவற்றை எல்லாம் ஒதுக்கியவன். தாஸ் விஷயத்தை மட்டும் முன் நிறுத்தி “கடைத்தெருவுல பார்த்தேன்” மெல்ல முணுமுணுத்தவன்? “ஏழு வருஷமா வராதவன் இப்ப எதுக்கு வந்திருக்கான். இப்போ எதுக்கு அவன வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்லுறீங்க? கூப்பிட்ட உடனே அவன் வந்துட போறான். அவன் மட்டும் கூட்டிட்டு வர நினைக்கிறீங்களா? இல்ல அவன் பொண்டாட்டி, புள்ளைங்களையும் கூட்டிட்டு வர உத்தேசமா?

ஏன் கேட்கிறேனா… நான் அவன கூப்பிட்டு அவன் வரேன்னு சொல்லி, அவன் பாட்டுக்கு அவனோட பொண்டாட்டியையும், புள்ளைங்களையும் கூப்பிட்டுகிட்டு வாசல்ல வந்து நின்னா, நீங்க பாட்டுக்கு, நீ மட்டும் உள்ள வா… உன் பொண்டாட்டிக்கு இந்த வூட்டுல இடம் இல்ல என்று சொல்லிட்டீங்கன்னா, அவன் பொண்டாட்டி தான் முக்கியம் என்று திரும்ப போயிடுவான்.

ஏழு வருஷமா அம்மா, அப்பா, குடும்பம் யாருமே வேண்டாம் என்று இருந்தவன், நீங்க சொன்னதுக்காக வீட்டுக்கு வந்து, வீட்டு வாசல்ல வச்சி பொண்டாட்டி வேணாம்னு சொல்லுவானா?

அவன வீட்டுல சேர்க்க முன்னாடி… உங்க கோபம், பகை எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சுட்டு, நல்லா யோசிச்சு முடிவெடுத்துட்டு, அவன வீட்டுக்கு கூப்பிடுங்க” என்றான் தணிகை வேலன்.

தந்தையான தணிகைவேலனுக்கு தன்னுடைய மகன் தாஸ் காதல் திருமணம் செய்து கொண்டதோ, செங்கதிரவனின் மகளை திருமணம் செய்து கொண்டதோ பிரச்சனை இல்லை.

தன் மனைவி மதுமிதா அவளுடைய குடும்பத்தோடு எந்த சம்பந்தமும் இல்லாமல் தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் வாழ்கிறாள். அவளைப் போல் தாஸின் மனைவியும் அவளுடைய குடும்பத்தாரை ஒதுக்கிவிட்டு, தங்களுடைய குடும்பம் தான் முக்கியம் என்று இருந்தால் சரிதானே என்ற எண்ணம் தணிகை வேலனின் மனதில் ஆழமாய் பதிந்திருந்ததால் மிதுவை ஏற்றுக்கொள்வதில் அவனுக்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. இரண்டு பேரக்குழந்தைகள் வேறு இருக்கின்றார்கள். அவர்களுக்காக வேண்டியாவது தாஸின் மனைவியை பொறுத்துப் போக வேண்டாமா?

கண்டிப்பாக தாஸ் மனைவியையும், பிள்ளைகளையும் விட்டு வீட்டுக்கு வரமாட்டான் என்று அறிந்தமையால் தான் அன்னையிடம் யோசித்து முடிவு எடுக்குமாறு கூறினான்.

மகன் சொல்வதை புரிந்துகொள்ளாது சோலையம்மாள் நாச்சியாரின் பேத்திக்கு இந்த வீட்டில் இடமில்லையென மிதுவையும் நாச்சியாரையும் வசைபாடலானாள்.

“நான் பையனே வேணாம் னு சொல்லிக்கிட்டு இருக்கேன். இவர் என்ன வேண்டாத மருமகள வீட்டுல சேர்க்குறத பத்தி பேசிகிட்டு இருக்காரு. விவஸ்தகெட்ட மனுஷன். எங்கண்ணன் இவர் அம்மாவை தானே பேசினாரு. இவர் குடும்பத்தைப் பத்தி தானே பேசினாரு. நானே என் குடும்பம் வேணாம் னு இருக்கேன். இவர் என்ன ஒட்டி உறவாட துடிக்கிறாரு” மதுமிதா சோலையம்மாளின் காதுபடவே புலம்ப, அதுவேறு கிழவியை ஏற்றிவிட்டிருக்க, மகனை திட்டலானாள்.

“எக்கேடும் கெட்டு ஒழிங்க” சொல்வதை புரிந்துகொள்ளாத இவர்களிடம் என்ன பேச வேண்டியிருக்கிறது என்று அவர்களை திட்டிய தணிகை வேலன் வெளியே சென்றான்.

காலையில் மிது குடும்பத்தோடு கோவிலுக்கு சென்றதும், சென்று வரும் பொழுது தணிக்கை வேல் அவர்களை பார்த்தது என்று அனைத்தும் நாச்சியாரின் காதுக்கு வந்தது.

“ஏன்டா கதிரவா? ஒதுக்கி வைக்கிறோம்னு சொல்லிட்டு, நம்மள ஒட்ட விடாம, அந்த சோலை குடும்பம் நம்ம மிது கூட ஒட்டி உறவாடுறாங்களோ”

தணிகை வேலன் தன் அன்னையிடம் மகனை பார்த்ததாகவும் பேசவில்லையென்றும் கூறினாலும் நடந்ததோ வேறு.

தாஸ் அன்பாக “அப்பா…” என்று அழைத்திருக்க, மிது செய்வதறியாது “மாமா” என்று அழைத்திருந்தாள்.  

“உங்க மேல அம்மாவும், அப்பத்தாவும் கோபமா இருக்காங்க. நான் நின்னு பேசினா… என்ன வீட்டுல சேர்க்காம மாட்டுக்கொட்டகைள வச்சுதான் சோறு போடுவாங்க” என்று தணிகை வேலன் சொன்னதும் மிதுவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“சிரிக்காதே மிது, பாக்குறவங்க அதுக்கும் ஏதாவது சொல்வாங்க” தாஸ் அதட்ட,

“மாலையும் கோவிலுக்கு வரேன் மாமா. வாங்க” என்றாள் மிது.

தணிக்கை வேலன் பதில் சொல்லாமல் சென்றிருந்தான்.

அவர்கள் என்ன பேசினார்கள் என்று கேட்காவிட்டாலும் சிரித்துப் பேசினார்கள் என்பது தான் அங்கிருந்தவர்கள் கண்ணில் பட்டது. 

அது போதாதா? அடுத்த வீட்டு விசயங்களை பேசும் வாய்கலுக்கு,

கோவிலிருந்து வெளியே வரும் பொழுது தணிக்கை வேலனை சந்தித்தவர்கள் கடைக்கு சென்ற பொழுது செங்கதிரவனை சந்தித்தார்கள். மகளை பார்த்ததும் ஆனந்தத்தில் அதிர்ந்த கதிரவனின் முகம் கோபத்தில் சிவக்க, தாஸின் கையிலிருந்த சைத்ரனின் மழலை மொழியில் அவன் புறம் திரும்பும் பொழுதே முகம் கணியத்தான் செய்தது. ஆனாலும் மகளோடு பேசத்தான் பிடிக்கவில்லை. முகத்தை திரும்பியவாறு வந்துவிட்டான்.

“ஊருக்கு வந்தால் வெட்டுவேன், குத்துவேன் என்ற வேலன் மகனை பார்த்ததும் பாசம் பொங்க சிரிச்சான்”

“அவன் ஓடிப்போய் ஏழு வருஷம் ஆச்சேப்பா… கோபமும் ஓடிப் போய் இருக்கும்”

“மூத்தவனும் இல்ல இளையவனாவது இருக்கணுமில்ல. கோபத்தை இழுத்து பிடிச்சிக்கிட்டு தான் இருக்க முடியுமா? அதான் சமாதானமா போக முடிவு பண்ணியிருப்பான். விவரமானவன்”

“மருமகளோடும் சிரிச்சான். அந்த பாசம் கூட கதிரவனுக்கு இல்லப்பா”

“மருமகளோடு சிரிச்சிருக்க மாட்டான். அவ கைல இருக்குற அவன் பேரன பார்த்து சிரிச்சிருப்பான்”

“அவ்வளவு பாசமிருக்குறவன் பேரபாசங்கள தூக்கி கொஞ்ச வேணாம்?”

“கொஞ்சிட்டு ஊட்டுக்குத் தானே போகணும். அதான் ஒதுங்கிட்டான்” ஆளாளுக்கு பார்த்ததை தங்கள் பாணியில் கதை கட்டியதோடு, சோலையம்மாளை பற்றி புறணி பேச ஆரம்பித்தனர்.

பார்த்தவர்கள் கண், காது, மூக்கு வைத்து தானே பேசுவார்கள். அதுதான் நாச்சியாரின் காதுக்கும் வந்திருந்தது. 

“நாத்தனாரோட மூத்தவன் எம்.எல்.ஏ வீட்டு மாப்பிளையாயிட்டானே அதனால மிது வீட்டுக்காரர ஊருக்கு வரவழைச்சு, சேர்த்துக்க திட்டம் போடுறாங்களோ என்னவோ” என்றான் செங்கதிரவன்.

“டேய் என்னடா சொல்லுற?”

“ஆமா அத்த… உங்க பொண்ணோட பக்கத்து வீட்டுல இருக்காளே வசந்தி அவ போன் பண்ணி சொன்னா. சோலையம்மா கத்துறது மைக் செட் போட்டது போல அந்த தெருவுக்கே கேட்டுச்சாம்”

“உனக்கு யாருடா சொன்னது?” மகனை ஏறிட்டாள் நாச்சியார்.

மருமகள் சொன்னதை உள்வாங்கி கொண்டாலும், மருமகளின் பேச்சில் நாச்சியாருக்கு நம்பிக்கையில்லை. அதற்கு காரணம் மங்களம் ஒருநாளும் இல்லாமல் இன்று சோலையாம்மாளின் வீட்டில் நடக்கும் விசயத்தை பற்றி பேசியது தான்.

“கடைத்தெருவுள எல்லாரும் பேசிக்கிட்டாங்க. நரசிம்மன் மாமா அந்த சோலையம்மா திட்டம் தெரியாம உங்கம்மா வீம்பு பிடிக்கிறான்னு என்கிட்ட வம்பு வளக்குறாரு. விசாரிச்சு பார்க்க வேண்டியதில்லையே. உண்மையும் அது தானே. மூத்தவனை அந்த எம்.எல்.ஏ பொண்ணுக்கு கட்டிக் கொடுத்ததோடு சரி இந்தப்பக்கம் அவன் தலை வச்சு பகிடுக்குறானில்லை. ஏழு வருஷமா ஊருக்கு வராதவங்க வந்திருக்காங்கன்னா என்ன அர்த்தம்? அந்தம்மா திட்டம் போட்டு தான் எல்லாம் செய்யுது” என்றான் கதிரவன். 

“பார்த்தியாடா… சோலைக்கு இருக்குற கொழுப்பை, ஊறவிட்டு துரத்துறது போல துரத்திட்டு. போன்ல கொஞ்சி குலாவியிருக்குறா. மூத்தவனை எம்.எல்.ஏ பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக்க கொடுத்து ஏதோ பண்ண திட்டம் போட்டு அது சரிஞ்சி காலடில விழுந்ததும், சின்னவனை ஊருக்கு வரச்சொல்லி வெளிய தங்க வச்சிருக்கா.

என் வயித்துல பொறந்த கழுத அந்த வீட்டுக்கு விசுவாசமா இருக்கு. கூட்டுக களவாணிங்க” சோலையம்மாவையும், தான் பெத்த மகளான மதுமிதாவையும் வசைபாட ஆரம்பித்த நாச்சியா “உன் சின்ன மகளும் இதுக்கு உடந்தை” என்று மிதுவையும் திட்ட ஆரம்பித்தாள்.

மிதுவை திட்டினால் மங்களம் பார்த்துக் கொண்டு இருப்பாளா? “ஐயோ அத்த அவளுக்கு இது பத்தி எதுவும் தெரியாது”

“என்ன தெரியாது? நீ அவ கூட போன்ல பேசுறியா?” போட்டு வாங்கினாள்.

“என்கிட்ட போன் இருக்கா? உங்க பையன் வீட்டுல இருந்தா தானே போன் பேசமுடியும். என் வீட்டுக்கு போன் பண்ணாலும் என்னைக்காவது அறைக்குள்ள இருந்து பேசியிருக்கேனா? என்ன பேசினேன்? யார் கூட பேசினேன்னு உங்க ரெண்டு பேருக்கும் நல்லாவே தெரியுமே”

என்கிட்டேயேவா? என் பொண்ண பிரிஞ்சிருந்தது போதும் இனிமேலும் முடியாதுடா சாமி என்று அன்னையாக அவதாரமெடுத்திருந்தாள் மங்களம்.

 “அதுங்க போன்ல கொஞ்சி குலாவியிருந்தா நேரா வீட்டுக்குத்தான் கூப்பிட்டு இருப்பாளுக, இப்படி வேற வீடெடுத்து தங்கியிருக்க மாட்டாங்க. எதேச்சையா ஊருக்கு வந்தவங்களைத்தான் வளைச்சி போட பாக்குறாங்க. நாம முந்தனும் என்று சொல்லுறேன்” அமிர்தாஷினி சொன்ன தகவல்களை வைத்து பேசி மாமியாரையும், கணவனையும் சரிக்கட்டினாள்.

“டேய் கதிரு. உன் பொண்டாடி சொல்லுறது சரிதான். நாம இன்னைக்கே போய் மிதுவையும், அவ வீட்டுக்காரரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்” என்றாள் நாச்சியார்.

“நாம கூப்பிட்ட உடனே வந்துடுவாளா? அவ வர சம்மதிச்சாலும் அவ வீட்டுக்காரன் வர சம்மதிப்பானா? அவன் உடம்புல ஓடுறது அந்த சோலையம்மா ரெத்தம் தானே” என்றான் செங்கதிரவன்.

“அடியேய் மங்களம்… அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி, அம்மாவை பாசத்தை பொழிஞ்சி உன் பொண்ணு மனச கராச்சி வீட்டுக்கு கூட்டிட்டு வர. உன் அழுகையை பார்த்தே அவ புருஷன் கூட வரணும்”

“நான் பாட்டுக்கு காலையில கோவிலுக்கு செல்லும் சாக்கில அமிர்தாசனியோட வீட்டுப்பக்கம் போய் மிதுவை பார்த்துவிட்டு வரணும் என்று எண்ணிக் கொண்டிருந்தா,   இப்போவே மிது வீட்டுக்கு போலாம் என்று கூடவே வரேன்னே சொல்லுறதுமில்லாம டிராமா வேற பண்ண சொல்லுறாங்க. இவங்க போய் பேசினா, அவ குதிப்பாளே” மானசீகமாக தலையில் அடித்துக் கொண்ட மங்களம் என்ன செய்வது என்று யோசித்தாள்.   

Advertisement