கள்ளம் கொண்டது
உன் கண்கள்..
களவாடப்பட்டது
என் இதயம்…
திருமணத்திற்கு வேண்டிய அனைத்து வேலைகளையும் முகம் சுழிக்காமல் முன் நின்று முறையாய் செய்து கொண்டிருந்தார் வசுந்திரா. பெரிய பெண்ணிற்கு செய்ய முடியாததை சின்னவளுக்கு செய்து திருப்தி அடையும் மனைவியின் மனமாற்றம் புரிந்து மனநிம்மதி கொண்டார் கணபதிநாதன்.
நாளும் ஒரு கவிதையை குறுஞ்செய்தியாய் விதுரன் அலைபேசிக்கு அனுப்பி அவன் இதயத்தை வெல்லும் முயற்சியை விடாது தொடர்ந்து செய்தாள் ஹனிகா. அவள் அனுப்பி வைக்கும் கவிதைகளை எல்லாம் ரகசியமாய் நாட்குறிப்பில் எழுதிவைத்து அவ்வப்போது ரசித்துக் கொள்வான் விதுரன்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் விதுரன் ஹனிகாவை தொடர்பு கொண்டு பேசுவான், ஹனிகா தங்கள் எதிர்காலம் குறித்த கனவுகளுடன் பேசிட விதுரன் பொதுப்படையான விவரங்களை அலசிடுவான்.
நாட்கள் இவ்வாறு இயல்பாய் நடை போட்டுக்கொண்டிருக்க, திருமண நாளும் வந்தது, ஊர் உறவு கூடியிருக்க உறவினர்கள் புடை சூழ்ந்திருக்க, இவள் எனக்கு உரியவள் நான் அவளின் உடையவன் என்று ஊர் உலகிற்கு அறிவுறுத்திட, நாணத்துடன் நடைபயின்று உரிமையாய் அருகில் வந்து அமர்ந்தவள் கழுத்தில் பொன் தாலியிட்டு, ஹனிகாவை தன் வாழ்வின் இன்பத்தின் வரவில் இணைத்துக்கொண்டான் விதுரன்.
வானவில் தான்
அவளின் உடையானதோ..
அந்தி வானம் தான்..
அவளின் வதன நிறமானதோ..
மையிட்ட கண்ணில்
கொஞ்சம் மையலையும்
சூடிக்கொண்டு..
கனவில் கண்ட காதலை
நிஜத்தில் உரிமை கொண்டாடிட..
நாணத்தை மஞ்சலென
பூசிக்கொண்டு..
நளினத்தில் மயிலினத்தை
தோற்கடித்து…
மணவறை காண்கிறாள்..
மணப்பெண் கோலம்
கொண்ட கோதையவள்..
காதல் கணவன் கரம் சேர்கிறாள்..
நெருங்கிய உறவுகள் மட்டும் கலந்து கொள்ளும் சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றாய் முறையாய் செய்துகொண்டே வந்திட, இளவயது பெண்களும் அவர்களை வழிநடத்தும் சில பெரியவர்களும் புதுமணமக்களுக்கு பாலும்பழமும் கொடுக்கும் சம்பிரதாயத்திற்காக அழைத்துச் சென்றனர். ஹனிகாவின் அக்கா தங்கை உறவில் இருந்த பெண்கள் விதுரனுக்கு ஊட்டும்போது மட்டும் வேண்டுமென்றே பழத்தை வாய் அருகில் கொண்டு சென்று கொடுக்காமல் ஏமாற்றி வேடிக்கை காட்ட, விதுரனும் வேடிக்கை புரிந்து கன்னம் குழிவிழ சிரித்தபடி அமர்ந்திருக்க, அவன் கன்னக்குழி அழகை ரசித்தபடி ஹனிகாவின் தங்கை முறையில் இருந்த ஒருத்தி, “ சிரிக்கும் போது என்ன அழகு! இதுல மயங்கி தான் கட்டுனா உங்களை தான் கட்டுவேன்னு ஒத்தக்காலுல நின்னா போல!” என்று வியந்து கொள்ள, “போங்க மாமா என்னை ஏமாத்திட்டீங்க, இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல, என்னை கட்டிக்கிறேன்னு சொல்லுங்க, பால் பழம் என்ன பாயசத்தோட விருந்தே வைக்கிறேன்”, என்று இன்னொருத்தி கிண்டல் செய்ய, “நல்லா இருக்குடி உங்க ஆசை! , நீங்க சொல்றத பார்த்தா உங்க மாமன் வரிசையா கல்யாணம் பண்ணிட்டே இருக்கணும் போல!, வந்தோமா சம்பிரதாயத்தை பண்ணிட்டு கிளம்பினோமான்னு இல்லாம வெட்டி வாய் அடிச்சிட்டு நிக்கிறாளுங்க!” என்று முன்பு ஒருமுறை திருமணத்தில் வைத்து விதுரனிடம் குத்தலாய் பேசிய, ஹனிகாவின் பெரியம்மா முறையான வாணி பகடி பேசிய பெண்களை கூறுவது போல விதுரனை தாக்கி பேசிட அதுவரை புன்னைகையுடன் இருந்த விதுரன் முகம் வாடிப்போனது.
அதற்கு மேல் விளையாடாமல் விதுரன் சுவைத்த பழத்தை ஹனிகா புறம் நீட்டினர் பெண்கள். அவளோ அதை உண்ணாமல், வாணியை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
ஹனிகா செயலின் காரணம் புரியாமல், அன்று சந்தியா தன் எச்சில் பட்டதை சாப்பிட பிடிக்காமல் முகம் திருப்பியதை போல் இவளும் சங்கடப்படுகிறாள் என்று எண்ணிக்கொண்டவன் மெதுவாய் அவளை நெருங்கி, “என் எச்சில் பட்டத சாப்பிட விருப்பம் இல்லைனா விட்டுடு, யாரும் உன்னை காட்டயப்படுத்தமாட்டாங்க” என்று விதுரன் கிசுகிசுக்க “என் மாமாவோட எச்சில சாப்பிட எனக்கு என்ன சங்கடம்!” என்று விதுரனுக்கு பதில் தந்தவள், “குடுடி, ஒரு பழம் ஊட்டுறதுக்கு இவள கல்யாணம் பண்ணிக்கனுமா, நீ பழமும் ஊட்ட வேணாம் பாயாசம் ஊத்த வேணாம், என் மாமனுக்கு நானே ஊட்டிவிட்டுக்குறேன்”, என்று அந்த பெண்ணின் கையிலிருந்த பழத்தை வெடுக்கென்று பறித்துக்கொண்டு, “இந்த கல்யாணத்த நடத்துறதுக்கு என்ன பாடுபாட்டேன், இவ நோகாம வந்து பாயசம் கொடுக்குறேன் பந்தி போடுறேன்னு பல்ல காட்டுறா! இதுல வரிசையா கல்யாணமான்னு நக்கல் வேற, பெரியங்க பேசுற பேச்ச பாரு!” என்று அருகில் இருந்தவர்களுக்கு தெளிவாக கேட்கும்படி முணுமுணுத்து விதுரனுக்கு பழத்தை ஊட்டிவிட்டாள் ஹனிகா.
அவள் செய்கையில் அருகில் இருந்த விஷமிகள் அல்லாத விருந்தினர்கள் வாய்விட்டே சிரித்துவிட விதுரன் சிரிப்பை அடக்கியபடி அவள் ஊட்டிவிட்டதை மெதுவாய் மென்றபடி சிறுவெட்கத்துடன் தலையை திருப்பிக்கொள்ள, “ஹுக்கும், அக்கா புருஷனை கட்டுனதுக்கே இந்த ஆட்டம் போடுறனா, உனக்கு மட்டும் நல்ல வாழ்க்கை கிடைச்சிருந்தா கையில பிடிக்க முடியாது” என்று இம்முறை ஹனிகாவை நேரடியாகவே குத்தினார் வாணி.
அதற்கும் அசராமல், “ஓ.. நல்லா வாழ்க்கை கிடைச்சு கையில பிடிக்க முடியாம தான் உங்க பொண்ணு உங்க வீட்டுக்கே வந்துடங்களா பெரியம்மா!” என்று சிறு பிள்ளை போல கண்ணை சிமிட்டி அவருக்கு புரியும் விதத்திலேயே ஹனிகா பதில் தர, விதுரனும் சரியான பதிலடி என்பது போல மெச்சுதலாய் பார்க்க, அதற்கு மேலும் அங்கு நிற்க பிடிக்காமல் வெளியேறியவர் நேராக வசுந்தராவிடம் வந்து நின்றார்.
“என்ன வசுந்தரா, அன்னைக்கு மண்டபத்துல வைச்சு அவ்வளவு எடுத்து சொன்னதுக்கு அப்புறமும் விஷயத்த கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்து விட்டுட்ட? நானா இருந்தா இதை முளையிலேயே கிள்ளி எறிஞ்சிருப்பேன்”, என்று புகைந்து கொண்டார் வாணி.
“என்ன அக்கா செய்ய சொல்றீங்க?, பொண்ணு ஆசைப்பட்டுட்டா, கட்டினா அவரைத்தான் கட்டவேன் இல்லனா செத்துடுவேன்னு மிரட்டும் போது வேற என்ன செய்ய முடியும்?” என்று வசுந்தரா சமாதானம் செய்ய முயல, “நல்ல கதையா இருக்கு நீ சொல்லுறது, குழந்தை ஆசைப்பட்டு கேட்குதுன்னு கொள்ளிக்கட்டையை எடுத்து கையில குடுக்க முடியுமா என்ன? சின்ன புள்ள அதுதான் விவரம் புரியாம ஆசைப்படுதுன்னா, பெரியவங்க நீங்க எடுத்துச்சொல்லி புரிய வைச்சிருக்க வேணாம், மூத்த பொண்ணு சாவுக்கு காரணமாயிருந்தவனுக்கே இரண்டாவது பொண்ணையும் கட்டிக்கொடுக்குற உங்க புத்திசாலித்தனத்தை என்னன்னு சொல்றது?” என்று வெளிப்படையாகவே தன் வெறுப்பை காட்டினார் வாணி.
“ என்னோட சாவுக்கு என் புருஷன் தான் காரணம்னு என் பொண்ணு ஆவி வந்து உன்கிட்ட சொல்லுச்சா? இல்ல நீ அந்த கேஸ எடுத்து நடத்துனியா?” என்று அவர்களுக்கு பின்னிருந்து கணபதிநாதன் குரல் கேட்க பதற்றத்துடன் திரும்பிய வாணி, “அது இல்ல மாமா நான் என்ன சொல்ல வறேன்னா! கல்யாணமான ரெண்டு மாசத்துலயே இவன் கூட வாழ முடியாம தான, நம்ம வீட்டுல வந்து இருந்து ஊர் பேச்சுக்கு பயந்து உயிர விட்டா சந்தியா, நம்ம பொண்ணு சாவுக்கு காரணமா இருந்தவனுக்கே இரண்டாவது பொண்ணையும் குடுத்திருக்கீங்களே அந்த ஆதங்கத்துல நாலு வார்த்தை கூட குறைய பேசிட்டேன்” என்று குரலை தணித்து பின்வாங்கினார் வாணி.
“ நீ எங்க மேல இருக்குற அக்கறையில தான் பேசுறேன்னு நல்லாவே புரியது” என்று உன் எண்ணம் என்னவென்று தெரியும் என்பது போல சற்று அழுத்தத்துடன் நிறுத்தியவர், “ என் சாவுக்கு யாருமே காரணம் இல்லன்னு லெட்டர் எழுதி வச்சுட்டு தான் தன் முடிவ தேடிக்கிட்டா என் பொண்ணு. இதுக்கு மேல நடந்ததுக்கு என் மாப்பிள்ளைய குறை சொல்லுறது ரொம்ப தப்பு, இதுக்கு முன்னாடி எப்படியோ இனிமேல் இந்த மாதிரி பேசிட்டு திரியாத” என்று கணபதிநாதன் கண்டித்திட, “நான் தூக்கி வளர்த்த பொண்ணு வாழ்க்கை இழந்து நிக்கிறத பார்த்தா என் மனசு தாங்குமா?” என்ற வாணி கணபதிநாதன் பார்வையில் பேச்சை நிறுத்தி “உங்களுக்கு உங்க மாப்பிள்ளை மேல நம்பிக்கை இருக்கும்போது நான் என்னத்த சொல்றது? எல்லாம் உங்க மேல இருக்கிற அக்கறையில் தான் புலம்புகிறேன். கல்யாணத்துக்கு வந்தேன் வந்த வேலை முடிஞ்சுடுச்சு நான் கிளம்புறேன்” என்று அவசர அவசரமாய் வெளியேறினார் வாணி.
“ சரி சரி, அரட்டை அடிச்சது போதும், பொண்ணும் மாப்பிள்ளையும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று வம்பு பேசி வாயாடிக் கொண்டிருந்தவர்களை விலக்கிவிட்டு விதுரன் ஹனிகாவை ஓய்வெடுக்க அறைக்கு செல்லும்படி அறிவுறுத்தினார் தேன்மொழி.
மாடியில் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட தனி அறைக்கு செல்லும் வழியில் சந்தியாவின் அறையை கடக்கும்போது தானாய் விதுரன் கால்கள் தயங்கிநின்றது.
விரல் கோர்த்து தன்னுடன் இணையாய் நடந்து வந்தவன் திடீரென்று தயங்கி நிற்கவும் திரும்பிப் பார்த்தவளுக்கு விதுரன் முகத்தில் இருந்த கவலையின் காரணம் புரிந்தது, “என்ன மாமா அக்கா ஞாபகம் வந்திருச்சா?” என்று விசாரிக்க “ நான் கொஞ்ச நேரம் இந்த ரூம்ல இருக்கட்டுமா ஹனி?” என்று ஏக்கம் கலந்த குரலில் சிறு கெஞ்சலுடன் விதுரன் வினவிட அதுவரை இறுகிப் பற்றியிருந்த விரலை விலக்கிக் கொண்டவள், “இதை நீங்க என்கிட்ட கேக்க வேண்டிய அவசியமே இல்லை, இருந்தாலும் என் உணர்வுகளுக்கு மதிப்பு தந்து பர்மிஷன் கேக்குற உங்க உணர்வு நான் மதிக்காம போனா நல்லா இருக்காது மாமா!”, என்று அனுமதி தந்து விலகி சென்றாள் ஹனிகா.
கலங்கிய விழிகளுடன் அறைக்குள் நுழைந்தவன், அருகில் இருந்த மேஜையில் சாய்ந்தபடி நின்றுவிட சூழ்நிலை மறந்து சிலையாய் நின்றிருந்தவன் நிலை சொன்னது அவன் மனதில் இருக்கும் வலியின் அளவை, ஒருநொடி அவனைக் கூர்ந்து கவனித்த ஹனிகா ஒரு முடிவுடன் தன் மாமியாரை தேடிச் சென்றாள்.
வந்தவர்களை கவனித்து வழியனுப்பி கொண்டிருந்த தேன்மொழியை தனியே பிடித்து இழுத்து சென்றவள் தன் முடிவை சொல்ல, “என்ன சொல்ற ஹனி, அது எப்படி முடியும் நம்ம வழக்கப்படி பொண்ணு வீட்டுல வைக்கிறது தானே முறை” என்று ஹனிகாவின் வார்த்தைக்கு மறுப்பு கூறிக்கொண்டிருந்தார் தேன்மொழி.
“இந்த சம்பிரதாயம் எல்லாம் நாம பார்த்து உருவாக்கிக்கிட்டது தான அத்தை, அக்கா வாழ்ந்த வீட்டுல அவ உயிர்விட்ட அறைக்கு பக்கத்திலேயே, எங்க புது வாழ்க்கைய தொடங்கணும்னு நினைச்சா எனக்கே கஷ்டமா இருக்கு, மாமாவுக்கு எப்படி இருக்கும்? இப்ப கூட மாமா சந்தியா ரூம்ல தான் இருக்காரு”, என்று ஹனி நிறுத்த “அவன் இன்னும் எதையும் மறக்கலையா!” என்று ஆதங்கப்பட்டார் தேன்மொழி.
“அவ்வளவு சீக்கிரம் எல்லாத்தையும் மறக்கமுடியாது அத்தை, அதுக்கான நேரத்தையும் சூழ்நிலையையும் நாமதான் அமைச்சு கொடுக்கணும். என் மாமா முகத்துல கவலையை பார்க்கும்போதெல்லாம் என் மனசும் கலங்குது. தயவுசெஞ்சு எனக்காக, உங்க பையனோட நிம்மதிக்காக அப்பாகிட்ட பேசி நீங்கதான் சம்மதிக்க வைக்கணும்” என்று கேட்டுக்கொண்டவள், அவர் சம்மதம் என்று தலையசைக்கும் வரை விடாமல் கெஞ்சி கொஞ்சி மிஞ்சி தன் எண்ணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட்டு விதுரன் இருக்கும் இடம் வந்து விரைந்தாள் ஹனிகா.
அறையின் மூலையில் இருந்த சாய்வு நாற்காலியில் கண்மூடி அமர்ந்திருந்தவன் கால்களில் தலை சாய்த்து கொண்டு அமர்ந்தவள் தலைமுடியை ஆதரவாய் வருடியபடி, “என்னை மன்னிச்சிடு ஹனி, கல்யாணமான முதல் நாளிலேயே நான் உன்னை கஷ்டப்படுத்துறேன்னு புரியுது, ப்ளீஸ்டா என்னால என்னை கட்டுப்படுத்த முடியல” என்று கலக்கத்துடன் மன்னிப்பு வேண்டினான் விதுரன்.
“நமக்கு காயம் தந்த விஷயத்தை மறக்குறது ரொம்பவே கஷ்டமான காரியம்ன்னு எனக்கும் தெரியும் மாமா, அதனால எல்லாத்தையும் மறந்திடுங்கன்னு நான் சொல்ல மாட்டேன். உங்கள் கஷ்டத்தையும் காயத்தையும் என்கூட பகிர்ந்துக்கோங்கன்னு தான் சொல்லுறேன்” என்றாள் ஹனிகா.
அதுவரை இருந்த தயக்கம் உடைத்து “என் தியா இருட்டுல தனியா இருக்க கூட பயப்படுவா, அவளால எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வர முடிஞ்சது? இந்த இடத்துல தான உயிரவிட்டா” என்று சிறுபிள்ளை போல் கண்ணீர்விட்டு கதறியவனை கண்டு வேகமாய் எழுந்து நின்றவள் தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக்கொண்டு “மாமா ப்ளீஸ்.. “ என்று அவன் வருத்தம் காணப்பொறுக்காமல் கலங்கினாள் ஹனிகா.
“ கடைசியா ஒரு தடவை கூட என் தியாவை பார்க்க முடியலையே ஹனி, அவ சாகும் போது என்னை தேடியிருப்பா தான” என்றான் விதுரன்.
முன்பு நடந்தது மனதில் படம் ஓட “அக்கா உங்கள ரொம்ப மிஸ் பண்ணுனா மாமா, அவளுக்கு உங்கள விட்டுட்டு இருக்கவே முடியல. அந்த மாதிரி அதுக்கு முன்னாடி எப்பவும் சந்தியா என்கிட்ட மனசு விட்டு பேசினதே இல்ல, யார்கிட்டயாவது உங்க மேல இருக்கிற காதல சொல்லணும்னு தவிச்சிட்டே இருந்திருப்பா போல அவ்ளோ பேசினா, உங்க வீட்டுலயிருந்து வந்ததுலயிருந்து என் மாமா இப்படி என் மாமா அப்படின்னு தினமும் என்கிட்ட ஏதாவது சொல்லிட்டே இருப்பா. நீங்க சிரிக்கும்போது கன்னத்துல விழுகிற கன்னக்குழி அவளுக்கு ரொம்ப பிடிக்குமாம். இப்படி அவளுக்குள்ள இருந்த ரகசியம் எல்லாத்தையும் கொட்டித்தீர்த்தா, ஒருநாள் கோயிலுக்கு போயிட்டு வரேன்னு வெளிய போயிட்டு வந்தவ, அதுக்கப்புறம் யார்கிட்டயும் பேசவே இல்ல, எதையோ யோசிச்சுட்டு ரொம்ப நேரம் அமைதியாவே உட்கார்ந்து இருப்பா. திடீர்னு என்ன ஆச்சுன்னு தெரியல, காலையில கதவு தட்டும் போது திறக்கவே இல்ல, கதவு உடைச்சிட்டு பார்க்கும்போது….”, என்று அதற்கு மேல் கூறமுடியாமல் கதறலுடன் நிறுத்திட தன் வலியை கூறி அவளின் வேதனையை அதிகரித்து விட்டோம் என்பது புரிய “ஹனி ஹனி…என் கஷ்டத்தை சொல்லுறேன்னு உன்னையும் கலங்க வைச்சுட்டேன், சாரி டா”, என்று அவள் கன்னம் தட்டி சமாதானம் செய்து, “போதும் இதுக்கு மேல இங்க இருக்க வேணாம் கிளம்பு” என்று தன்னுடன் அழைத்து சென்றான் விதுரன்.
ஹனிகா கேட்டுக்கொண்டபடி தேன்மொழி தன் அண்ணனிடம் பேசி அன்றைய இரவுக்கான சடங்கினை இடம் மாற்றி வைக்க ஏற்பாடு செய்தார், அதன்படி விதுரனின் வீட்டில் அவன் அறையில் அலங்கரிக்கப்பட்ட அறையில் இருவரும் தனித்துவிடப்பட்டனர்.
“ஹனி நம்ம கல்யாண வாழ்க்கையை தொடங்கணும் தான், அதை இன்னிக்கே தொடங்கணும்னு எந்த அவசரமும் இல்ல தான!” என்று விதுரன் தயக்கத்துடன் தன் எண்ணத்தை கூறிட “அவசரம் எனக்கு இல்ல உங்களுக்கு இருக்கா?” என்று கண்ணடித்து ஹனிகா சிரிக்க சூழ்நிலையை இலகுவாக்க அவள் செய்யும் முயற்சி புரிந்து மெலிதாய் சிரித்து கொண்டவன், “நான் சின்ன பிள்ளையில பார்த்த ஹனி இல்ல நீ, உண்மைய சொல்லனும்னா நீ ரொம்ப மெச்சூரா பிஹேவ் பண்ணுற, அடுத்தவங்க உணர்வு புரிஞ்சு சூழ்நிலைய அழகாக ஹாண்டில் பண்ணுற!, நான்தான் உன்னை சின்ன குழந்தைன்னு நினைச்சுட்டு இருக்கேன்.உன்னை பார்க்க புதுசா இருக்கு”, என்று வெகு இயல்பாய் பேசினான் விதுரன்.
“ அது என்ன என்னை அடிக்கடி சின்ன குழந்தைன்னு சொல்றீங்க? சந்தியா உங்கள கல்யாணம் பண்ணிக்கும்போது அவளுக்கும் என் வயசு தான்,” என்றாள் ஹனிகா.
“ உன் கேள்வி சரிதான், ஆனா நான் பார்க்கும் போது, அவ குமரி என் வயசுக்கு ஏத்த ஜோடி. நீ குழந்தை”, என்று விதுரன் வேண்டுமென்றே வெறுப்பேற்றி பார்க்க கோபமாய் முறைத்து நின்றவள், இரு கரம் தூக்கி “மாமா தூக்கு” என்றிட முன்பு ஒருமுறை கிடைத்த முத்தத்தை எண்ணிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு விதுரன் அவள் உயரத்திற்கு குனிந்து வர, வலிக்கும்படி கன்னத்தை கடித்துவைத்தவள், “இன்னொரு தடவை என்னை குழந்தைன்னு சொன்னீங்க கொலை பண்ணிடுவேன்” என்று மிரட்டல் விடுக்க கடிபட்ட இடத்தில் இருந்த தன்னவள் இதழ் எச்சிலை மெதுவாய் துடைத்துக்கொண்டு, “என் கன்னம் கூட எட்டமாட்டேங்கிது, குழந்தைன்னு சொன்னா கோபம் மட்டும் மூக்குக்கு மேல வருது” என்று சிரித்தான் விதுரன்.
“குழந்தை குமரியா வளர்ந்து பலநாள் ஆச்சு, கண்ணை திறந்து பார்த்தா நல்லா தெரியும்” என்றிட மேலும் கீழுமாய் ஏற இறங்க பார்த்தவன், “எது வளர்ந்து இருக்கோ இல்லையோ உயரம் மட்டும் வளரவே இல்லை, இன்னும் தூக்கு மாமான்னு கைய தூக்கிட்டு கெஞ்சும் போது, என் ஹனி குட்டி குழந்தையா தான் தெரியுறா!” என்று உடலால் வளர்ந்தவளை உள்ளத்தால் குழந்தை என்று சொல்லாமல் சொன்னான் விதுரன்.
அவன் சொன்ன தோரணையை ரசித்து சிரித்தவள், “என்னை இப்படியே குழந்தை குழந்தைன்னு கொஞ்சிட்டே இருங்க, இது கூட ஒரு விதத்துல கிக்கா நல்லாதான் இருக்கு”, என்றாள் ஹனிகா.
அதுவரை மனதில் தேக்கி வைத்திருந்த கவலையை மறந்து இருவரும் ஒருவரை ஒருவர் சளைக்காமல் கேலி கிண்டல் செய்து கொண்டு இரவின் முன் பொழுதை கழித்திட, உறக்கம் வேண்டி கண்கள் கெஞ்சியதும் பேச்சை முடித்துக்கொண்டு அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் ஆளுக்கு ஒருபுறமாய் படுத்துக்கொண்டனர்.
சற்றுநேரத்தில் விதுரன் அசையாமல் அயர்ந்துவிட, மெதுவாய் நெருங்கி அவன் பரந்த மார்பை தன் மஞ்சமென எண்ணிக்கொண்டு தலைசரித்து கண் அயர்ந்தாள் ஹனிகா.
இறுக மூடியிருந்த இதழ் மெதுவாய் புன்னகையின் சாயலை சூடிக்கொள்ள தன் மீது சரிந்து கிடந்தவள் முன் நெற்றியில் முத்தமிட்டு, “குழந்தைடி நீ” என்று செல்லம் கொஞ்சிவிட்டு பலநாள் நெருங்காத நிம்மதி உறக்கம் கொண்டான் விதுரன்.
இரவோடு இரவாக..
என் இதயம் உன்னிடம்
சரிந்துவிழும் என்று
சற்றும் எதிர்பார்க்கவில்லை..