7…
தென்றல் காற்று வருட
மலரும் மென் மலர் போல்…
காதல் வருட மலர்ந்தது
பெண்ணவள் மனமும்..
“என்ன சுஹனி?, உனக்கு ஹெல்ப் பண்ணுன ஆளை போய் மறுபடியும் பார்த்தியா?, அவர் என்ன சொன்னாரு?, உனக்கு ஹெல்ப் பண்ண ஓகே சொல்லிட்டாரா?” என்று அக்கறையுடன் வினவினார் விடுதி பொறுப்பாளர் அகிலா.
” இல்ல மேம், அவர் ஹெல்ப் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாரு” என்று கவலையுடன் கூறினாள் சுஹனி.
” சரி அடுத்து என்ன தான் செய்யப் போற?, பேரன்ட்ஸ் கிட்ட இன்ஃபார்ம் பண்ணலாமா?. உனக்கு சொல்ல பயமா இருந்தா சொல்லு, அவங்க கிட்ட நான் பிரச்சனையை எடுத்து சொல்றேன்” என்றார் அகிலா.
வேண்டாம் என்பது போல் மறுத்து தலையசைத்தவள், ” எனக்கு ஹெல்ப் பண்ண அவங்க வர மாட்டாங்க..” என்று சோகமாய் கூறினாள்.
” பெத்த பொண்ணு பிரச்சனையில இருக்கிறது தெரிஞ்சதும் எந்த அப்பா அம்மா பாத்துட்டு சும்மா இருப்பாங்க. கண்டிப்பா உனக்கு ஹெல்ப் பண்ண வருவாங்க, உனக்காக நான் அவங்க கிட்ட பேசுறேன்.” என்று உதவிட முன் வந்தார் அகிலா.
” வேண்டாம் மேம், இந்த பிரச்சனையை நானே பார்த்துக்கிறேன். ” என்று பிடி கொடுக்காமல் பேசினாள் சுஹனி.
” நான் உனக்கு ஹெல்ப் பண்ணுறதுக்கு தான் முயற்சி பண்றேன் உனக்கு புரியுதா இல்லையா?, ஹாஸ்டல்ல இருக்கிற பொண்ணு போலீஸ் கேஸ் அது இதுன்னு அலையுற விஷயம் மேனேஜ்மென்ட்க்கு தெரிஞ்சா.. உன்னை இங்க இருந்து வெளியே அனுப்பிடுவாங்க, உன் மேல இருக்கிற அக்கறைல தான் இதுவரைக்கும் இந்த பிரச்சனையை மேனேஜ்மென்ட் வரைக்கும் கொண்டு போகாம இருக்கேன். சப்போஸ் வேற யாரு மூலமாவது இந்த விஷயம் மேனேஜ்மென்ட்க்கு தெரிய வந்ததுன்னா உனக்கு மட்டும் இல்ல எனக்கும் பிரச்சனை ஆகும். என் வேலை போறதுக்கு கூட வாய்ப்பு இருக்கு.” என்று சூழ்நிலையின் தீவிரத்தை விவரிக்க முயன்றார் அகிலா.
“உங்க சிச்சுவேஷன் எனக்கு புரியுது மேம், என் ஃப்ரெண்டோட அக்கா லாயர் தான் அவங்க எனக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லி இருக்காங்க. அதனால என் வீட்டுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றவள் அதற்கு மேலும் அங்கு தாமதிக்காமல் தனது அறையை நோக்கி நகர்ந்தாள்.
‘ என்ன பொண்ணு இவ இப்படி பிடிவாதம் பிடிக்கிறா?. என்ன தான் பெத்தவங்க மேல கோவமா இருந்தாலும் அத இந்த நேரத்துலயா காட்டுறது.’என்று எண்ணிக் கொண்டவர் சுஹனியின் அனுமதி இல்லாமலேயே அவளது வீட்டிற்கு நிலவரத்தை அலைபேசி மூலம் அறிவித்தார் அகிலா.
” என் அக்கா கிட்ட பேசிட்டேன் சுஹா. உமன் வெல்ஃபேர் டீம் கிட்ட உன் பிரச்சனையை எக்ஸ்பிளைன் பண்ணிட்டாங்களாம். நாளைக்கு வெல்ஃபேர் ஆபிசர் ஒருத்தவங்க நம்ம கூட வர ரெடியா இருக்காங்க. சோ ஸ்டேஷன் போயி அந்த பசங்க மேல ஒரு கம்ப்ளைன்ட் பைல் பண்ணிட்டு உன் மேல எந்த தப்பும் இல்லைனு எக்ஸ்பிளைன் பண்ணிடலாம்னு அக்கா சொன்னாங்க. ” என்று அலைபேசி மூலம் அழைத்து விபரம் கூறினாள் சுஹனியின் தோழி.
மறுநாள்… சுஹனியின் தோழி, அவளது வழக்கறிஞர் சகோதரி மற்றும் அவர்களுக்கு உதவ முன்வந்த மகளிர் நலச்சங்க அதிகாரி ஒருவர் நால்வரும் சுஹனியின் மீது வழக்கு தொடரப்பட்ட காவல் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.
” சார் அந்த பசங்களால பாதிக்கப்பட்டது இந்த பொண்ணு, ஆனா நீங்க இந்த பொண்ணு மேலயே ஆக்சன் எடுப்பேன்னு சொல்றது கொஞ்சம் கூட சரியில்ல. ” என்றார் வழக்கறிஞர்.
” பாதிக்கப்பட்டிருந்தா முன்னாடியே வந்து கம்ப்ளைன்ட் பண்ணி இருக்க வேண்டியது தானே!” என்று காவல் அதிகாரி அதிகாரமாய் அறிவிக்க.. ” அந்த பொண்ணு பயந்துட்டா சார், அது மட்டுமில்ல அந்த பசங்க இவளோட ஃப்ரெண்ட்ஸ், அதனால கம்ப்ளைன்ட் பண்ண வேணாம்னு விட்டுட்டா. இப்போ கம்ப்ளைன்ட் தர ரெடியா இருக்கோம், அந்த பசங்க மேல ஆக்சன் எடுங்க” என்றார் மகளிர் நலச் சங்கத்தின் அதிகாரி.
” என்ன மேம் உங்களுக்கு தெரியாத சட்டமா?, முதல்ல யார் கம்ப்ளைன்ட் பண்ணினாங்களோ அதுக்கான ஆக்ஷனை தான் எங்களால எடுக்க முடியும். நீங்க சொல்ற மாதிரி இந்த பொண்ணு மேல தப்பு இல்லன்னா அதை நிரூபிக்கட்டும் அதுக்கப்புறம் கம்பிளைன்ட் பைல் பண்ணுங்க தாராளமா நாங்க ஆக்சன் எடுக்கிறோம். ” என்றனர் காவல் அதிகாரிகள்.
” தப்பு பண்ணலன்னு நிரூபிக்க சொல்றீங்களே!, இவ தான் தப்பு பண்ணுனான்னு உங்க கிட்ட ஏதாவது ஆதாரம் இருக்கா.. ” என்று வழக்கறிஞர் சட்ட ரீதியான கேள்வி எழுப்ப..
” மேம் அந்த பசங்க கூட இந்த பொண்ணு கார்ல கிளம்பி போனத நேர்ல பார்த்தவங்க நிறைய பேர் இருக்காங்க, கார்ல போகும்போது இவங்க மூணு பேரும் எடுத்துக்கிட்ட செல்ஃபி.. இதெல்லாம் தான் அந்த நேரத்துல அந்த பொண்ணு அவங்க கூட இருந்ததுக்கான சாட்சி. இந்தப் பொண்ணு தப்பு பண்ணலன்னு நிரூபிக்க உங்ககிட்ட என்ன சாட்சி இருக்கு?” என்றார் காவல் அதிகாரி.
“அது வந்து…!” என்று தடுமாறிய வழக்கறிஞர், சுஹனி புறம் திரும்பி , ” உனக்கு ஹெல்ப் பண்ணவர் வர வாய்ப்பே இல்லையா?” என்றிட… சோகமாய் இல்லை என்பது போல் தலையசைத்தாள் சுஹனி.
” பாருங்க சாட்சி இல்லாம எதுவும் பண்ண முடியாது. ஒன்னு இந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணுன ஆள் இங்க வந்து நடந்தது என்னன்னு சொல்லணும் , இல்லைனா அந்த பசங்க உண்மைய ஒத்துக்கணும், இது ரெண்டுல ஏதாவது ஒன்னு நடந்தாலும் போதும், அந்தப் பசங்க கொடுத்த கேஸை தூக்கி ஓரமா வச்சுட்டு இந்த பொண்ணு குடுக்குற கம்ப்ளைன்ட்க்கு ஆக்சன் எடுக்க நான் ரெடி. ” என்றார் காவல் அதிகாரி.
” சார் சொல்றதும் சரிதான், உனக்கு ஹெல்ப் பண்ணவர் வர மாட்டார்னா, நாம அந்த பசங்க கிட்ட ஒரு தடவை பேசி பார்க்கலாம்” என்று யோசனை கூறினார் வழக்கறிஞர்.
” இது சரியா வருமா?” என்று சந்தேகமாய் சுஹனியின் தோழி வினவ… ” கம்ப்ளைன்ட் பண்ணினது அவங்க தான் அப்படி இருக்கும் போது அவங்க எப்படி உண்மையை சொல்லுவாங்க, அது அவங்களுக்கே பிரச்சனையா வந்துடும்னு யோசிக்க மாட்டாங்களா?” என்றாள் சுஹனி.
” சரி உண்மைய சொல்லலைனாலும் கேஸையாவது வாபஸ் வாங்க சொல்லி கேட்டு பார்ப்போம். ” என்று வழக்கறிஞர் கூடிக் கொண்டிருக்க…
” சுஹனி மேல எந்த தப்பும் இல்ல, இந்த கேஸை நாங்க வாபஸ் வாங்கிக்கிறோம்.. ” என்று சுஹனியின் மீது வழக்குத் தொடர்ந்த இருவரும் அங்கு வந்து நின்றனர்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர். வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்ததை உறைய வைக்கக்கூடிய காரணிகள், புரதப் பொருள்கள் இருக்கும். தீக்காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~