6

இணைசேரும்   நாள்  அறிவிப்பு…

உன் கரம் கோர்க்கும்
நாளுக்கு தான்..
தவம் கிடக்கின்றேன்..
உன் வாழ்வில்
இணைந்திடவே
வரம் கேட்கின்றேன்..
என் தவமும்  தவத்தின்
வரமும் நீயே.. 

 குலதெய்வ கோவில்  திருவிழா நாளில்  திருமணம் நிச்சயம் செய்வதற்கு சம்மதம் சொன்ன விதுரன் மறுநாளே தன்  தொழிலை கவனிக்க  ஊருக்கு  சென்று விட தேன்மொழி மட்டும் நிச்சய ஏற்பாட்டை கவனிக்க சொந்த ஊரிலேயே தங்கிக்கொண்டார்.

திருமணத்திற்கு சம்மதம் சொன்னதும் தன்னை அழைத்து   சந்தோஷத்துடன்   பேசுபவள் துள்ளலான குரலை கேட்க  எதிர்பார்ப்புடன்  விதுரன் காத்திருக்க, தன்னிடம் மறுத்துப்பேசியவன்  தந்தையிடம் திருமணத்திற்கு சம்மதம் சொல்லவும் வேண்டுமென்றே விதுரனை தவிர்த்து  போக்கு காட்டினாள் ஹனிகா.  

நிச்சயப்புடவை எடுக்க என்று தேன்மொழி மகனிடம் பணம் கேட்க, அவர் வேண்டிய பணத்தை வங்கி கணக்கில் செலுத்தியவன்  பணம் செலுத்தப்பட்ட விபரத்தை கூற அன்னையை அழைத்து அவர் பேச துவங்கும் முன்   “நீங்க கேட்டத விட அதிகமா தான்  அனுப்பியிருக்கேன் அம்மா! உங்க மருமகளுக்கு எடுக்கும்போது நீங்களும் உங்களுக்கு பிடிச்ச மாதிரி  புடவை எடுத்துக்கோங்க. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், புடவை எடுக்கப்போகும்போது ஹனியையும் கூட கூட்டிட்டு போங்க, அவளுக்குப் பிடிச்சத எடுத்துக்கட்டும்,  இல்லைனா இதுக்கும் பெண்ணுரிமை  அது இதுன்னு  பக்கம் பக்கமாக வசனம் பேசுவா“ என்று  எதிரில் இருப்பவர்  பேசத்துவங்கும் முன்பே  பேசி முடித்தவன்,   “ ஹனி எப்படி இருக்கா அம்மா. இப்போ சந்தோசமா இருக்காளா? நான் ஊருக்கு வந்ததுக்கு பிறகு என்னை பத்தி ஏதாவது கேட்டாளா?” என்று தனக்குள் உண்டாகும் ஆர்வத்தை  வெளிக்காட்டாமல்  விதுரன் விசாரிக்க  அதற்கும்  பதில் வராமல் போக “அம்மா நான் பேசுறது கேக்குதா?  அந்தப்பக்கம் இருக்கீங்களா இல்லையா? ஏன் அமைதியாவே இருக்கீங்க?” என்று சற்று அழுத்தத்துடன் விசாரிக்க அழைப்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் அதே எண்ணிற்கு  அழைத்தவன். “என்ன அம்மா பேசிட்டு இருக்கும் போதே போனை வச்சுட்டீங்க?” என்று குறைபட “ நான் எங்கடா உன்கூட பேசினேன்? இப்போதான் போனை எடுக்கிறேன்!” என்றார் தேன்மொழி. 

“அப்போ இதுக்கு முன்னாடி போன்  அட்டென் பண்ணது யாரு?” என்று  குழப்பத்துடன் விதுரன் வினவிட அருகில்  நின்றிருந்த ஹனிகாவை  ஒரு பார்வை பார்த்தவர் “வாசல்ல யாரோ கூப்பிட்ட   மாதிரி இருந்தது யாருன்னு  பார்க்கப்போனேன், உள்ள வரும்போது  ஹனி  தான் கையில் போன் வச்சிருந்தா அவதான் அட்டென் பண்ணி இருப்பாளா இருக்கும், உன்கூட பேசலையா?” என்றார் தேன்மொழி.

“ இல்ல அம்மா! மேடம் இன்னும் என் மேல கோபமா இருக்காங்க போல”, என்றிட, “ இரு நான் என்னன்னு கேட்குறேன்”   என்றார்  தேன்மொழி. “அதெல்லாம் கேட்க  வேணாம்.   அந்த வாயாடி அஞ்சு நிமிஷம் அமைதியா  இருக்கிறதே பெரிய விஷயம். இந்த கோபத்தை மட்டும் எத்தனை நாள் பிடிச்சு  வைக்க முடியும்? நான் கோபமா இருந்தா நீங்க  வந்து சமாதானப்படுத்த மாட்டீங்களான்னு   கேட்டு அடுத்த  சண்டைக்கு ரெடியாகுவா! அப்போ கவனிச்சுக்கிறேன்”,  என்று  சிரித்தவன் தான் அழைத்ததன் காரணம் கூறி அழைப்பை  துண்டித்தான்.

மகன் கேட்க வேண்டாம் என்றாலும் விஷயத்தை  அப்படியே விட மனமில்லாமல், “விது மாமா தான் வேணும் அவரத்தான் கட்டிக்கிவேன்னு ஒத்தக்கால்ல நிக்கிறவளுக்கு   எதுக்கு  இந்த வேண்டாத வீரப்பு, அன்னைக்கு கோபத்துல ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு வார்த்த விட்டிருப்பான், அதையே நினைச்சுட்டு இருந்தா என்ன அர்த்தம்? ” என்று ஒன்றுமே நடவாதது போல் அமைதியாய் அமர்ந்திருந்த ஹனிகா கன்னத்தில் இடித்து விசாரித்தார் தேன்மொழி.

“உங்க பையன்  வேண்டா வெறுப்பா சம்மதம்  சொல்லும்போதே  இப்படி சொல்லுறீங்களே! அவர் மட்டும் முழுமனசோட  சம்மதம் சொல்லியிருந்தா உங்கள கையில பிடிக்க முடியாது போல” என்று குறைபட்டாள் ஹனிகா. 

“என் பையன் இந்த அளவுக்கு இறங்கி வந்ததே பெரிய விஷயம் ஹனிமா” என்று இதற்கு முன் இடித்த கன்னத்தை பரிவாய்  வருடினார் தேன்மொழி. 

“ அதனால தான் அமைதியா ஒதுங்கி இருக்கேன் அத்தை.  கட்டிக்கப்போறவர்னு உரிமையா ஆசையா  ஏதாவது பேசுவேன், அதுக்கு உங்க பையன் ஏதாவது ஏடாகூடமா பதில் குடுப்பாரு, அதுக்கு நான் கோபப்படுவேன், இது தான்  சாக்குன்னு  கல்யாணத்த நிறுத்த திட்டம் போடுவாரு , இதெல்லாம் நடக்க   வேணாம்னு  தான் ஒதுங்கி இருக்கேன், கல்யாணம்  மட்டும் முடியட்டும் உன் பையன் குடுமி என் கையில, ஒரு பிடி பிடிச்சுடுறேன்” என்று  கண்ணடித்து சிரித்தாள் ஹனிகா.

“என் பையன படாதபாடுபடுத்துவேன்னு  என்கிட்டயே சொல்ற உனக்கு தைரியம் தான்” என்று  தேன்மொழி அடிப்பதுபோல் கையோங்க “என்  திட்டத்துக்கு உதவப்போற  பார்ட்னரே நீங்கள் தான் அத்தை” என்று  ஓங்கிய கையை பிடித்து, “ஜென்டில் வுமன் அக்ரிமெண்ட்”,  என்று     சமரசமாய் கை குலுக்கினாள் ஹனிகா.

“ என் பையன் முகத்தில் பழைய சந்தோஷம் வந்தா போதும்,  அதுக்கு உன்  அடாவடி வாலுத்தனம் தான் சரிப்பட்டு வரும்” என்று தேன்மொழியும்  சம்மதித்தார். 

தன்   வேலைகளை முடித்துக்கொண்டு  நிச்சயதார்த்தத்திற்கு  முதல்நாள் ஊர் வந்து சேர்ந்த விதுரனிடம், ஹனிகாவிற்கு   எடுத்த நிச்சய புடவையை  தேன்மொழி காட்டிட, சந்தியாவுடன்  நடந்த திருமண நிகழ்வு  மனதில் படமாய் ஓடியது.  தன் உள்ளத்தில் உண்டாகும் வலியை வெளியில்  காட்டாமல் “ ஹிம், நல்லா இருக்கு” என்று பொதுவான வார்த்தை கூறி விலகி சென்ற மகனை விசித்திரமாய் பார்த்தவர், ‘ஹனிக்கு பிடிச்ச மாதிரி  எடுங்கன்னு அத்தனை தடவை பாடம் எடுத்தான்,  இப்போ  புடவைய  சரியாக்கூட பார்க்காம நல்லா இருக்குன்னு சொல்லிட்டு போறான்,  எந்த நேரத்துல என்ன யோசிக்கிறான்னு ஒன்னும் புரியல’  என்று தனக்குள்  புலம்பியபடி அடுத்தநாள்  நிச்சய தாம்பூலத்திற்கு வேண்டிய ஏற்பாட்டை கவனிக்க  சென்றார் தேன்மொழி. 

இந்த திருமணம் தனக்கு தேவைதானா என்று முதல்நாள் இரவு முழுவதும் சிந்தித்துக் கொண்டிருந்த விதுரன் மறுநாள் விடிந்ததும் தெரியாமல் உறங்கிக் கொண்டிருக்க, மகனைத் தேடி வந்த தேன்மொழி “ சரியா போச்சு! கோவிலுக்கு கிளம்பனும் நேரமாச்சு, குளிச்சு புது  மாப்பிள்ளை மாதிரி புது ட்ரெஸ் போட்டு ரெடியா இருப்பன்னு வந்தா இப்படி கும்பகர்ணன் மாதிரி குப்புறப்படுத்து தூங்கிட்டு இருக்க, என் மருமக சொன்னது சரிதான் என்னை  விட அவ தான் உன்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்கா” என்று திட்டிக்கொண்டே மகனை எழுப்பினார்.

“ அப்படி என்ன சொன்னா  உங்க மருமக,  என்னை வந்து  இந்த  வறுவறுக்குறீங்க?” என்று கேட்டபடி எழுந்து அமர்ந்தான் விதுரன். 

“ நேத்துல இருந்து இப்போ வரைக்கும் ஆயிரம் தடவைக்கு மேல போன் பண்ணிட்டா, மாமா வந்துட்டாங்களா?,  சாப்பிட்டாங்களா?,  புடவை பார்த்தாங்களா?, மாமாவுக்கு புடிச்சிருக்கா?, அந்த கலர்  எனக்கு நல்லா இருக்கும்னு   சொன்னாங்களா? காலைல சீக்கிரமா எழுந்திரிக்க சொல்லுங்க, இப்படி ஒவ்வொரு தடவையும் பேசும்போதும் விதவிதமா கேள்வி கேட்டு குடைஞ்சு எடுத்துட்டா, இப்ப கூட  இன்னும் தூங்கிட்டு  தான் இருப்பார்னு சரியா சொன்னா, நான்தான் என் பையன் மேல இருக்குற நம்பிக்கைல,   அதெல்லாம் இல்ல என் பிள்ளை நேரத்துக்கு எந்திரிச்சு கிளம்பி இருப்பான்னு வீராப்பு பேசிட்டு வந்தேன்,  இங்க வந்து பார்த்தா தான் தெரியுது உன்னோட சங்கதி” என்று  மூச்சு விடாமல் பேசிய தேன்மொழியை வியப்புடன் பார்த்த விதுரன், “இந்த ஹனி கூட சேர்ந்ததுக்கு அப்புறம் உங்க நடவடிக்கை  கூட மாறிப்போச்சு. வாயத் திறந்தா மூச்சு விடக்கூட மறந்து பேசிக்கிட்டே போறீங்க!  காலம் முழுக்க உங்க ரெண்டு பேரையும் எப்படி சமாளிக்க போறேன்னு பயமா இருக்கு!” என்று பயந்தவன் போல் பேசினான்.

“அதே பயம் தான் எங்களுக்கும், இவ்ளோ பேசுனதுக்கு அப்புறமும் கல்லு மாதிரி கட்டில்ல உட்கார்ந்து கதை கேட்டு இருக்கியே,  உன்னை எல்லாம் என்ன செஞ்சு திருத்துறது, நானும் என் மருமகளும் பாவம் தான்”, என்றவர்  “இன்னும் பத்து நிமிஷம் தான் உனக்கு டைம்,    அதுக்குள்ளே கிளம்பி கீழே வர, இல்ல….” என்று தேன்மொழி இழுக்க, “ இல்லனா?” என்றான் விதுரன்.

“ இல்லன்னா உன்னை நான் என்ன செய்ய முடியும், நான் தான் உன்னை சரியா வளர்க்கத் தெரியாம செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கேன்ல ,  என் மருமகளுக்கு  போன் பண்ணுவேன், அவ வந்து உன் காதை பிடிச்சு தரதரன்னு இழுத்துட்டு போவா”, என்று மகன் முகத்தை பார்த்தபடியே தேன்மொழி கூறிட, அவர் வார்த்தையில் விவரித்த  விஷயத்தை கற்பனை செய்து பார்த்தவன்,  வாய் விட்டு சிரித்தபடி, “அந்த வாலு செஞ்சாலும்  ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல, ஆளை விடுங்க சாமி”  என்று தலைக்கு மேல் கும்பிடு போட்டுவிட்டு  இடத்தை காலி செய்தான் விதுரன்.

தன் மனம் கவர்ந்த மாமனுக்கு   ஹனிகா தேர்வு செய்த புது பட்டுவேட்டி  சட்டையில் கம்பீரமாக இறங்கி வந்த மகனை கண் இமைக்காமல் பார்த்து இருந்தவர், “ என் கண்ணே பட்டுடும் போல,  வீட்டுக்கு வந்ததும் முச்சந்தில  காலடி மண்ணெடுத்து சுத்தி போடணும்” என்று அன்னை மகனின் அழகை புகழ்ந்து கொள்ள “ நீங்க தான் மெய்ச்சிக்கனும், இதை கட்டிக்கிட்டு நான் படுற அவஸ்தை எனக்கு தான் தெரியும், எனக்கு புது டிரஸ் எடுக்க வேணாம்னு  உங்க கிட்ட  சொன்னேன்ல, என்னைக் கேட்காம  எடுத்ததும்  இல்லாம எனக்கு கொஞ்சம் கூட செட் ஆகாத வேஸ்டி சட்டைய வேற எடுத்து வைச்சிருக்கீங்க, இத  கழறாம  கட்டுறதுக்குள்ள உயிர் போய் வந்துடுச்சு” என்று  சோர்வுடன்  அலுத்துக்கொண்டான் விதுரன்.

“ நானும் ஹனிக்கிட்ட  எவ்வளவோ எடுத்துச்சொன்னேன் என் பையனுக்கு வேஷ்டி சட்டை செட்டே ஆகாது, அன்னைக்கு ஒருநாள்  கட்டுனத்துக்கே படுத்தி எடுத்துடான்னு. ஆனா உன் மாமன் மகள் யார் பேச்சைக் கேட்டிருக்கா, என் மாமனுக்கு வேஷ்டி சட்டை தான் அழகு.  நான் ஆசைப்பட்டு எடுத்துக்கொடுத்தேன்னு சொல்லுங்க ஒன்னும் சொல்லாம கட்டிக்கிவார்ன்னு  முடிச்சுட்டா”, என்று தேன்மொழி கூறிட, “அது சரி அவ செலக்ட் பண்ணுனதா, இதுக்குமேல இதப்பத்தி கமெண்ட் சொன்னேனா என் கதி அதோகதிதான்”,  என்று அதற்கு மேல் வாதம் செய்யாமல் விதுரன் கிளம்பிட, ‘அடப்பாவி ஹனி பேரை கேட்டதும் பெட்டிப்பாம்பா அடங்கிட்டானே’ என்று மகனின் மாற்றத்தை எண்ணி உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார் தேன்மொழி. 

நெருங்கிய சொந்தபந்தங்களுடன் குலதெய்வக் கோவிலை வந்தடைந்தபோது கணபதிநாதன் குடும்பம் ஏற்கனவே அங்கு  மாப்பிள்ளை வீட்டாரின் வருகைக்கு காத்திருந்தது.

குலம் காக்கும் காமாட்சி அம்மனை வழிபட்டு சொந்தபந்தம் கூடி இருந்த அவையில் இருவீட்டு பெரியோர்களால் நிச்சயத்தாம்பூலம் மாற்றப்பட்டு திருமணத்திற்கான தேதியும் குறிக்கப்பட்டது. நிச்சயதாம்பூலம் மாற்றிய  கையோடு மாப்பிள்ளை வீட்டார்  கொடுத்த தங்க நிறபுடவையை நேர்த்தியாய் உடுத்தி வானுலக தேவதை தான் நம்முன் வலம் வருகிறதோ என்று பார்ப்பவர்கள் கண்கள் ஐயம் கொள்ளும் எழிலான அழகுடன் வந்து நின்றவளை விழியகலாமல் வெறித்தான் விதுரன்.

 அவன் பார்வையில் வித்தியாசத்தை உணர்ந்த ஹனிகா குறும்பாய் புருவம் உயர்த்தி என்ன என்பது போல கண்களால் ஜாடை பேசிட, சூழ்நிலை உணர்ந்து பார்வையை விலக்கி கொண்டான்.

தன் காதல் கைகூடப் போகும் கனவில் ஹனிகா மிதக்க, தன் மகனின் வாழ்வில் இனி  எல்லாமே  நல்லதாய் நடக்கும் என்ற எண்ணத்தில்   தேன்மொழி மனம் நிறைய, மகளின் விருப்பத்திற்காக வசுந்தரா எதையும் பெரிதுபடுத்தாமல் அமைதியாய் அனைத்தையும் கவனிக்க, தான் அறியாமல் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்தது போல் குற்ற உணர்வு அகன்று மன நிம்மதியை உணர்ந்தார் கணபதிநாதன். 

எதிலும் முழு ஈடுபாடு இல்லாமல் ஒதுங்கி நின்ற விதுரனை  தேடிவந்து பேச்சு கொடுத்தனர் வசுந்தராவின் பிறந்த வீட்டு உறவுகள். “அப்புறம் புது மாப்பிள்ளை எப்படி இருக்கீங்க?” என்று வசுந்தராவின் அண்ணனின் இளைய மகன் நலம் விசாரிக்க, “அவருக்கு என்ன குறை நல்லா தான் இருப்பாரு, முதல்ல நான் கட்டிக்கப்போற பொண்ண  தட்டிப்பறிச்சு  கல்யாணம்  பண்ணிட்டாரு, இப்போ நீ கட்டிக்க வேண்டிய பொண்ணு  மனசை மாத்தி புது மாப்பிள்ளை ஆகிட்டாரு”,  என்று சந்தியாவை  கல்யாணம் செய்ய முடியாமல் போன  விரக்தியை  விஷமாய் கக்கினான் பெரியவன். 

“ சரியா சொன்ன அண்ணா,  உங்களுக்கும் சந்தியாவுக்கு கல்யாணப்  பேச்சு   நடக்கும் போது என்னவோ  சதி செஞ்சு  முடிவான  நிச்சயத்தை நிறுத்திட்டு  இவன் மாப்பிளை ஆகிட்டான். இப்பவும் என்னவோ மந்திரம் போட்டு  ஹனிகா மனசை  கலைச்சிட்டான்” ,  என்று அவன் பங்கிற்கு வார்த்தையில் காயம் கொடுத்தான்  ஹனிகா மீது ஒருதலையாய்  காதல் கொண்ட  சின்னவன்.

“ மாயம் இல்லடா, மச்சம்! சாருக்கு எங்கயோ  அதிர்ஷ்ட மச்சம் இருக்கு,  அதான் ஒரே வீட்டுக்கு இரண்டு தடவை மாப்பிள்ளை ஆகுறாரு”, என்றான் பெரியவன்.    

மகளுக்காக  தன்னை சகித்துக்கொண்டாரே தவிர, தன் மாமியாருக்கு  இந்த கல்யாணத்தில் சம்மதம் இல்லை என்று ஏற்கனவே புரிந்து கொண்ட விதுரன்,  உறவுகள் கூடியிருக்கும்  சபையில் அவரின்   அண்ணன் மகன்களை   அவமானப்படுத்தினால்  இருக்கும் பொறுமை இழந்து பிரச்சனை செய்வார் என்று புரிந்து   பல்லைக்கடித்து தன்னை அடக்கிக்கொண்டிருக்க, “இவ்ளோ  பேசுறோம், கொஞ்சமாவது    வாய் திறக்கிறானா பாருங்க. சரியான அழுத்தகாரன், சொல்லுடா,  என்ன சொல்லி எங்க  அத்தை பொண்ணுங்கள மயக்குன ?” என்றான் பெரியவன். “இதுக்கு என் மாமா பதில் சொல்லுறத விட, எப்படி மயங்குனேன்னு நான் சொன்னா  சரியா இருக்கும்னு நினைக்கிறேன்,  உங்க அசிங்கம் பிடிச்ச கேள்விக்கு  அர்த்தமான  பதில் நான்  சொல்லட்டுமா? ” என்று கேட்டபடி  அங்கு வந்து  நின்ற ஹனிகா கோபத்தில்   இறுக மூடியிருந்த  விதுரன் கைகளை  பிரித்து அதில் இதமாய் தன் கரம் கோர்த்துக்கொண்டு, “அடுத்தவங்க உணர்வை மதிக்க தெரிஞ்ச நல்லவரு என் மாமா. அன்பால அடுத்தவங்கள அடக்கத் தெரிஞ்ச பாசக்காரரு அத பார்த்துதான்  மயங்குனேன் போதுமா?”, என்று   பதில் கொடுத்தாள். 

“அந்த பாசக்காரார் கூட தான்  வாழ முடியாம உன் அக்கா தூக்குல தொங்கிட்டா மறந்துட்டியா?” என்று பழையதை நியாபகப்படுத்தினான் ஒருவன்.

“ தங்கத்தோட மதிப்பு எல்லாருக்கும் தெரியுறது  இல்ல”, என்று ஹனிகா பதில் தர,  இணைந்திருந்த கரங்களை   ஏளனமாக வெறித்து, “ நீ உரசி பார்த்து கண்டு பிடிச்சிட்ட போல” என்றான் ஒருவன். 

அதுவரை அமைதியாய் நின்றிருந்த விதுரன்  சட்டென்று கோபத்துடன் அவன் சட்டையை பிடிக்க, “மாமா இவன் தப்பா பேசுறதால நான்  தப்பானவளா  ஆகிடுவேனா? ஊர் ஆயிரம் பேசும் அதுக்கு பதில் சொல்ல ஆரம்பிச்சா பதில் சொல்லிட்டே இருக்க  வேண்டுயது தான்”, என்று விதுரன் கரத்தினில் இருந்து எதிரில்  இருந்தவனுக்கு   விடுதலை வாங்கிக்கொடுத்தவள்,  “எதைப் பார்த்து மயங்குனேன்னு கேட்டேல,   என்  விது மாமா   மீசைய முறுக்கிக்கிட்டு மல்லுக்கு நிக்கிறது கூட   அழகு தான்.  இவ்ளோ நேரம் அவரை   என்னென்னமோ பேசுனீங்க, அதுக்கெல்லாம் கோபத்தை அடக்கிட்டு அமைதியா இருந்தவரு, என்னைப்பத்தி தப்பா ஒரு வார்த்தை சொன்னதும் உன் சட்டையை பிடிச்சாரே  அந்த அக்கறை தான் என்னை மயக்குனது.  அவர் ஒன்னும் உங்களை  மாதிரி பயந்தாங்கோலி பையன் இல்லடா,    முதுகுக்கு பின்னாடி   பொரணி பேசுறதுக்கு, இப்போ கூட உங்க  கேள்விக்கு பல்லை உடைச்சு பதில் சொல்லிருப்பாரு, ஏதாவது ஏடாகூடம் நடந்தா என் அம்மா சங்கடப்படுவாங்கன்னு தான்  அமைதியா இருக்காரு, அவர் பொறுமைய சோதிக்காம ஒழுங்கா ஊரு போய் சேருங்க” என்று சளைக்காமல்  பதில் தந்தாள் ஹனிகா.

“ ஹே! என்ன ஓவரா வாய் பேசுற? பேசவே தெரியாத உன் அக்கவையே  பரலோகம் அனுப்பிவைச்சவன் இவன், ஜாக்கிரதையா இரு, இல்லன்னா உன்னையும் பார்சல் பண்ணிடுவான்” என்று விதுரன் கோபத்தை பொருட்படுத்தாது துள்ளினான் இளையவன். 

“ இப்படி பேசுற உங்க   வாயடைக்கிற மாதிரி சந்தோசமா வாழ்ந்து காட்டுறது தான் நாங்க   திருப்பி கொடுக்குற  சரியான பதிலடி”,    என்று விடாமல் ஹனிகா வாதம் செய்திட, “  நீங்க எப்படி வாழுறீங்கன்னு நாங்களும் பாக்குறோம், இப்படி தான் ஒருத்தி என் அண்ணனை விட்டுட்டு இவன் பின்னாடி போனா!  கடைசில பிணமா தான் வந்தா, அதே மாதிரி தான் நீயும்!”  என்று சொல்லி முடிப்பதற்குள்  கோபமாய் முறைத்து முன் வந்த விதுரன் “ஒரு பொண்ணுகிட்ட எப்படி பேசனும்னு தெரியாது?” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே  ஒருவன் கன்னத்தில் ஓங்கி அடித்து, இன்னொருவன் சட்டையை  பற்றி,  “எனக்கு மாமன் பொண்ணுன்னா  உனக்கு யாருடா  ?, பரதேசி! வாய்க்கு வந்த படி பேசுற !, இப்போ சொல்லுறேன் கேட்டுக்கோ, நீ இல்ல இந்த ஊரே மூக்குல விரலை  வைக்கிற மாதிரி என் ஹனிய    மகாராணி மாதிரி  பார்த்துக்குவேன்,  அவ கூட சந்தோசமா வாழுவேன்! அதை பார்த்து வயிறு எரிஞ்சு  சாகப்போறது நீங்க தான்!” என்று இன்னொருவன் கன்னத்தை பதம் பார்த்தவன், “இதுக்கு மேல ஒரு நிமிஷம் நின்னா  சொந்த பந்தம்ன்னு பார்க்கமாட்டேன், இங்கயே கொன்னு புதைச்சுடுவேன்”, என்று மீசை முறுக்கிக்கொண்டு எச்சரிக்கை கொடுக்க,  கைகலப்பை வேடிக்கை பார்க்கக்  கூடிய சில உறவுகள் நடக்கும் வாதத்தை கணபதிநாதனுக்கு எட்டும்படி செய்தது.

பிரச்சனை பெரியதாகி விடுமோ என்ற அச்சத்துடன்  சில நெருங்கிய உறவுகள்  பயந்தபடி நிற்க,  விதுரன் தன் அண்ணன் பிள்ளைகள் சட்டையை பிடிக்கவும் என்ன பிரச்சனையோ என்று  பதற்றத்துடன் வசுந்தரா  பார்த்திட, கூடியிருந்த சொந்தபந்தங்கள் காதில்  இவர்களின் வார்த்தை  தெளிவாய் விழுந்தது.

“என்ன  வசு அமைதியா இருக்க? உன் கண்ணு முன்னாடியே  என் பசங்கள  அடிக்கிறான், நீ வேடிக்கை பார்த்துட்டு இருக்க, இந்த ரவுடி பையனுக்கா உன் பொண்ணை குடுக்கப்போற? உன் நல்லதுக்கு சொல்லுறேன், இந்த கல்யாணத்தை  நிச்சயத்தோட நிறுத்திடு!,  உன் பொண்ணுக்கு என் சின்ன  பையன் வாழ்க்கை கொடுப்பான்”, என்று நல்லவர் போல நயவஞ்சகமாக பேசிய  அண்ணனை  பார்த்து கைகூப்பி நின்றவர், “ பெரியவள உங்க பையனுக்கு கட்டிக்கொடுக்க  விடாம அவர் தங்கச்சி பையனுக்கு கட்டிக்கொடுத்துட்டார்னு, பெத்த பொண்ணுன்னு கூட பாக்காம, நீ எப்படி சந்தோசமா  வாழுறன்னு பாக்குறேன்னு சாபம் விட்டேன்,  எங்களோட கெட்ட நேரம் அது பழிச்சிடுச்சு. சின்னவளாவது  சந்தோசமா வாழனும்னு  பழசெல்லாம் மறந்துட்டு இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருக்கேன். இவ வாழ்க்கையையும் கெடுத்துடாதீங்க, தயவுசெய்து உங்க பிள்ளைகள கூப்பிட்டு கிளம்புங்க”, என்றார் வசுந்தரா.

இதற்குமேல் அங்கு நின்று எந்தப் பலனும் இல்லை என்று புரிந்த வசுந்தராவின்  அண்ணன் குடும்பம் இடத்தை காலி செய்ய, மனைவி அருகில் வந்த கணபதிநாதன், “  சரியான நேரத்துல சரியான முடிவு எடுத்திருக்க” என்று பாராட்டிட, “ என் பொண்ணு   வாழ்க்கைய விட வேற எதுவும் எனக்கு முக்கியமில்லை. உங்க தங்கச்சி பையன் நிச்சயம் நம்ம பொண்ணை நல்லபடியா பார்த்துக்குவான்” , என்று முதன் முறையாய் விதுரன் மீது நம்பிக்கை கொண்டு பேசினார் வசுந்தரா.

நிச்சயத்திற்கு வந்திருந்த விதுரனின்  அப்பா வழி பெரியப்பா மகள், விதுரனை தனிமையில் சந்தித்து “ நல்லவேளை விதுரா, இந்த பொண்ணும் இவ அக்கா  மாதிரியே உன்னை புரிஞ்சுக்காம போயிடுவாளோன்னு கலங்கிப்போயிட்டேன், இப்போ தான் நிம்மதியா இருக்கு. அத்தனை பேருக்கு முன்னாடி  தைரியமா உன்னை  எப்படி   தாங்கிப்பேசுறா?  இவ   கண்டிப்பா சந்தியா மாதிரி இல்ல, உன்னை நல்லா பார்த்துக்குவா”, என்று சந்தியாவை பற்றி நன்கு அறிந்தவர் போல பேசிட, “ஹனி சந்தியா இல்ல தான், அதுக்காக என்  சந்தியாவும் இவளுக்கு  எந்த  விதத்துலயும் குறைஞ்சவ இல்ல” என்று  தன் முதல் மனைவியை விட்டுக்கொடுக்காமல்  பேசினான் விதுரன்.

“  குறைச்சல் இல்லன்னு நீ தான் மெச்சிக்கனும்,  கல்யாணம் முடிச்சு முதல்   ராத்திரிக்கு ரெடியாக சொல்லுறேன்.  முடியவே முடியாதுன்னு அழுகிறா.. என்னன்னு புரியாம நானும்   விஷயத்தை  உன்   அத்தைகிட்ட   சொல்லுறேன், என் பேச்சை கேட்காம அவ அப்பா வார்த்தை தான் பெருசுன்னு கல்யாணம்  பண்ணிக்கிட்டாள்ள! அவ  எக்கேடு  கெட்டா எனக்கு என்னன்னு சொன்னதும், சரி இவளை எப்படியாது  சரிக்கட்டலாம்னு ரூம்க்கு வரேன்,  யார்கிட்டயோ  போன்ல  என் குடும்பத்தை எதிர்த்துட்டு என்னால எதுவும் செய்ய முடியாது, எனக்கு என் குடும்பம் தான் முக்கியம், உனக்கு ஒன்னுனா அந்த குற்றயுணர்ச்சில  நானும் செத்துருவேன், அது இதுன்னு ரொம்ப நேரம் நியாயம் பேசுறா.  இவ்ளோ நியாயம்  பார்க்கிறவ கல்யாணத்துக்கு முன்னாடியே  எல்லாத்தையும் சொல்லி கல்யாணத்தை நிறுத்தியிருக்கனும், அதை விட்டுட்டு முதல்   ராத்திரியில வந்து கண்ணை கசக்கிட்டு உட்கார்ந்திருந்தா என்ன அர்த்தம்?,  எனக்கு அப்பவே தெரிஞ்சிடுச்சு, இவனால உன் வாழ்க்கை பாழாப்போகும்னு” என்று விதுரனின் அக்கா முறையில் இருந்த பெண் தான் அறிந்த விபரங்களை அடுக்கிட, சுற்றும் முற்றும் யாரும் இருக்கின்றார்களா என்று கவனித்த விதுரன், “இந்த  விஷயத்தை யார்கிட்டயும் சொல்லலேல?” என்று பதற்றமாகிட,  “உன் மாமாவுக்கு  தெரியும்” என்றார் அந்த பெண்மணி.

 “ உன்  வீட்டுக்காரர் தானே, இனி யார்கிட்டயும் சொல்லாத” என்று  அதிகாரமாய் அறிவுறுத்த, “ அவருக்கு இல்ல,  ஒரு தடவை  இந்த ஊருக்குள்ள  ஒரு கல்யாண வீட்டுக்கு வந்துருந்தேன், அப்போ உன் மாமா, அதான் சந்தியா அப்பா,  உன்  தம்பியால தான் என் பெரிய பொண்ணு வாழ்க்கையே போச்சுன்னு  புலம்பினார்,  மனசு கேட்காம எல்லாத்தையும் சொல்லிட்டேன், “ என்றார் அவர்.

தன் தலையிலேயே  ஓங்கி தட்டிக்கொண்ட விதுரன், “தயவு செஞ்சு உன்னை  கெஞ்சி கேட்குறேன், இந்த விஷயத்தை இனிமே யார்கிட்டயும் சொல்லாத.  எல்லாரும் சந்தியாவ தப்பா பேசுவாங்க அதை என்னால தாங்க முடியாது” என்று விதுரன் வேண்டுதல் விடுக்க, “உன்னை தப்பா பேசுனா பரவாயில்லையா?” என்றார் வந்தவர். “ நான் ஆம்பள, என்னை பத்தி என்ன பேசினாலும் கவலையில்லை. ஒரு பொண்ணு செத்ததுக்கு பிறகும் தப்பா பேசினா அது அவளோட குணத்துக்கு தான்  அசிங்கம். என் சந்தியாவ யாரும் தப்பா பேசக்கூடாது. அதுக்காக தான்  எல்லா பழியையும் நான் சுமந்துட்டு நின்னேன்”,  என்று  அழுத்தத்துடன் கூறி இனி யாரிடமும் சொல்வது இல்லை என்று  உறுதி வாங்கிக்கொண்டே  அவரை விட்டான்  விதுரன். 

கோவிலில் இருந்து வீடு திரும்பும் முன் கணபதிநாதனிடம் சொல்ல வந்த விதுரன்.  ஒரு நிமிடம் என்று அவரை தனியே அழைத்து சென்று, “ வீணா மனசை போட்டு குழப்பிக்காதீங்க! நடந்ததுல உங்க தப்பு  எதுவும் இல்லை”, என்று  தனக்கு விபரம் தெரியும் என்பது போல ஆறுதல் கூறிட “எல்லாம் உங்க விருப்பம் அப்பான்னு சொல்லும் போதே அவளுக்கு விருப்பம் இல்லன்னு     சுதாரிச்சு இருக்கனும்.  அவசரப்பட்டு கல்யாணத்தை பண்ணிவைச்சு உன் வாழ்க்கையையும் சேர்த்து அழிச்சுட்டேன்”, என்று கணபதிநாதன் மன்னிப்பு கேட்க.   “எப்பவும் தலை  குனிஞ்சே இருக்கிற பொண்ணு வெட்கத்துக்கு தலை குனியுதா, தன்  கவலைய மறைக்க குனியுதான்னு தெரிஞ்சுக்காம போனது தான் நாம செஞ்ச பெரிய தப்பு. நடந்தது நடந்து போச்சு இனி அதை பத்தி யோசிக்காதீங்க”, என்று தயங்கியவன், “வீட்டுல யாருக்கும்…” என்று இழுக்க, “இந்த உண்மைய தாங்கும் சக்தி உன் அத்தைக்கு இல்ல, அவளை பொறுத்தவரைக்கும் அவ பொண்ணு சொக்கத் தங்கம். நடந்த உண்மைய  சொன்னாலும் உனக்காக பொண்ணை தப்பா சொல்லுறேன்னு சொல்லுவாளே தவிர பொண்ணை தப்பா நினைக்கமாட்டா”, என்றார் கணபதி. 

“சந்தியா முடிவு தப்பு தான், அவ அந்த முடிவுக்கு வரதுக்கு நானும் ஒரு காரணம். அவ மனசுல என்ன இருக்குன்னு  தெரிஞ்சுக்காம இருந்தது என் தப்பு. இதை இதோட விட்டுடுங்க.  எதுவும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க”, என்று பெருந்தன்மையாய்  விதுரன் பேசிட, “ என் பொண்ணு சாகும் போதே உனக்கு  எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்கு, உன்னை பத்தி  தப்பு தப்பா பேசும் போது கூட உங்க பொண்ணு தான்  பிடிக்காம கல்யாணம் பண்ணுனா,  நீங்க தான் என்னை ஏமாத்திட்டீங்கன்னு ஒரு வார்த்தை சொல்லல, அந்த நேரம் மட்டும் நீ உண்மைய சொல்லி இருந்தா  யாரும் உன்னை அந்தளவுக்கு கேவலப்படுத்திருக்க மாட்டாங்க!”,  என்று உண்மை வருத்தத்துடன் பேசினார் கணபதி. 

“ என்னை தப்பா பேசமாட்டாங்க, என் சந்தியாவ பேசியிருப்பாங்க.  எனக்கு இதை விட  அது தான் ரொம்ப வலிக்கும். தயவு செஞ்சு  இந்த பேச்சை விடுங்க மாமா”,  என்று கேட்டுக்கொண்டு ஹனிகாவிடம் சொல்லாமல்  விடை பெற்று சென்றான்  விதுரன்.

கலவரமான
நிலவரமெனிலும்….
இதயத்தின் நடுவே
மழை சாரலை உணர்கிறேன்…
இதம் தரும் நிலை
என்றும் நிலைக்குமா..!
என்னை நிலைகுலைய செய்யுமா!