ஆணின் கோபம் பெண்ணின் கண்ணீரிலும்.. பெண்ணின் கோபம்.. ஆணின் உண்மையான அன்பிலும் கரைந்து போகும்…
இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட… சுஹனிக்கு மீண்டும் கீர்த்தனை தேடிச் செல்வதை தவிர வேறு வழி தெரியவில்லை.
இனி என்றும் தன்னைத் தேடி வரக்கூடாது என்று கடுமையாக எச்சரிக்கை கொடுத்தவன் வீட்டின் வாசலிலேயே அடுத்த நாளும் காவல் இருந்தாள் சுஹனி.
“என்ன மேடம், உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா?, பாஸ் உங்களை பார்க்க முடியாதுன்னு நேத்து தானே சொல்லி அனுப்புனாரு மறுபடியும் வந்து நிக்கிறீங்க!, ” என்று எரிச்சலுடன் வினவினான் சித்தேஷ்.
” நான் இப்போ இக்கட்டான சூழ்நிலையில இருக்கேன் உங்க பாஸ்ஸால மட்டும் தான் எனக்கு ஹெல்ப் பண்ண முடியும், ப்ளீஸ் ஒரே ஒரு தடவை அவர் மீட் பண்ண அலோ பண்ணுங்க.. ” என்று கெஞ்சலுடன் பேசினாள் சுஹனி.
” பாருடா நேத்து வரும்போது அதிகாரம் தூள் பறந்தது, இப்போ என்னடானா அடக்கி வாசிக்கிறீங்க!” என்று கிண்டல் குரலில் சித்தேஷ் கேலி செய்திட..
” என் சிச்சுவேஷன் அப்படி, ப்ளீஸ் கீர்த்தன் சாரை ஒரே ஒரு தடவை பார்த்துட்டு போயிடுறேன்… ” என்று கிட்டத்தட்ட மன்றாடினாள் சுஹனி.
என்னதான் கேலி செய்தாலும் எதிரில் இருந்த பெண்ணவள் முகத்தில் பிரதிபலித்த தவிப்பு சித்தேஷ் மனதை கரைத்தது, ” உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பேன். என் பாஸுக்கு பொண்ணுங்கள கண்டாலே பிடிக்காது. நான் இங்க வேலைக்கு சேர்ந்து அஞ்சு வருஷமாச்சு, இதுவரைக்கும் என் பாஸை தேடி ஒரு பொண்ணு கூட வந்தது இல்ல. நீங்க தான் ஃபர்ஸ்ட் டைம் வீடு வரைக்கும் வந்து அவரை பார்த்தே ஆகணும்னு அடம் பிடிக்கிறீங்க. என் பாஸுக்கு இதெல்லாம் பிடிக்காது. ப்ளீஸ் வெளியே போங்க, இல்லைனா, உங்க மேல இருக்கிற கோபத்தை என் மேல காட்ட ஆரம்பிச்சிடுவாரு. ” என்று அதுவரை கொண்டிருந்த எள்ளல் தோரணையை கைவிட்டு கெஞ்சலுடன் அறிவுரை வழங்கினான் சித்தேஷ்.
” உங்க பாஸுக்கு பொண்ணுங்கள பாத்தாலே பிடிக்காதுன்னு அவரை ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ணும் போதே எனக்கு புரிஞ்சிடுச்சு. இருந்தாலும் அவரைத் தேடி வந்திருக்கேன்னா என் சூழ்நிலை எவ்வளவு மோசமா இருக்கும்னு புரிஞ்சுக்கோங்க. இப்போ அவர் மட்டும் எனக்கு ஹெல்ப் பண்ணலனா, யாரோ பண்ண தப்புக்கு போலீஸ் என்னை அரெஸ்ட் பண்ணிடுவாங்க. ” என்று தட்டு தடுமாறி தனது சூழ்நிலையை விவரித்தாள் சுஹனி.
பெண்ணவள் கெஞ்சலில் மனம் இறங்கிய சித்தேஷ் தன் எஜமானனை தேடிச் சென்றான்.
” பாஸ் அவங்க ரொம்ப கெஞ்சறாங்க… ஏதோ பெரிய பிரச்சனையில இருக்காங்க போல, உங்களால மட்டும் தான் அவங்களுக்கு உதவி பண்ண முடியும்னு சொல்றாங்க, அதனால தயவு செஞ்சு ஒரே ஒரு தடவை பார்த்து என்ன பிரச்சனைன்னு கேளுங்க” என்று சுஹனிக்கு ஆதரவாக தனது எஜமானனிடம் கெஞ்சினான் சித்தேஷ்.
” அவள ஒரு பிரச்சனைல இருந்து காப்பாத்துனது தான் இப்ப எனக்கு பிரச்சனையா வந்து நிக்குது. இதுக்கு மேலயும் அவ விஷயத்துல தலையிட எனக்கு விருப்பமில்லை. அவ பிரச்சனையை அவளையே தீர்த்துக்க சொல்லு.” என்று சிறிதும் மனம் இளகாமல் கண்டிப்புடன் பேசினான் கீரத்தன்.
” பாஸ் உங்க தாத்தா எத்தனையோ பேருக்கு உதவி செஞ்சவங்க, அவர் செஞ்ச உதவில வளர்ந்தவன் தான் நான். நான் மட்டும் இல்ல என்னை மாதிரி இன்னும் எத்தனையோ பசங்களுக்கு அவர் தான் தெய்வம். தேடி தேடி போய் உதவி செஞ்ச தெய்வத்தோட பேரன் நீங்க இப்படி இருக்கிறது கொஞ்சம் கூட சரியில்ல, உங்கள தேடி வந்து உதவி கேக்குறாங்களுக்கு உதவி செய்ய விருப்பம் இல்லைனாலும் அவங்க சொல்றதையாவது என்னன்னு கேட்கலாம்ல” என்று தாத்தாவின் பெயரைச் சொல்லி பேரனின் பிடிவாதத்தை மாற்ற முயன்றான் சித்தேஷ்.
எதுவும் சொல்லாமல் அமைதியாய் அமர்ந்திருந்த கீரத்தன் தனது மனதில், ‘ அந்த தாத்தாவே நான் தான். நான் செஞ்சத எனக்கே சொல்லி காட்டுறியா?’ என்று எண்ணிக் கொண்டு மெதுவாய் சிரிக்க… ” இப்ப என்ன ஜோக் சொல்லிட்டேனு சிரிக்கிறீங்க?” என்று கோபமாய் துவங்கியவன் சட்டென்று கூர்மையான கீர்த்தன் பார்வையில் குரலை தனித்து, “பாஸ் வாங்க பாஸ் ஒரு தடவ அந்த பொண்ணு கிட்ட வந்து பேசுங்க பாஸ்” என்று கெஞ்சலுடன் முடித்தான் சித்தேஷ்.
தொடர்ந்து நச்சரிக்கும் தனது உதவியாளனின் இம்சை தாங்காது தன்னை சந்திக்க காத்திருக்கும் பெண்ணை சந்திக்க சம்மதித்தான் கீர்த்தன்.
மாடி அறையில் இருந்து ஒவ்வொரு படியாய் கீழ் இறங்கியவன் பார்வை வரவேற்பில் கலங்கிய விழிகளுடன் அமர்ந்திருந்த பெண்ணவள்.. மீதே படிந்திருந்தது.
தன்னையும் சேர்த்து கலங்கடிக்கும் சுஹனியின் கண்ணீரை அலட்சியப்படுத்தி கம்பீரமாய் அவள் எதிரில் வந்து அமர்ந்தவன், ” என்னை எப்படி தெரியும் உனக்கு?” என்றான் கீர்த்தன்.
‘ என்கிட்ட பேசும்போது இந்த பொண்ண தெரிஞ்ச மாதிரி பேசினாரு இப்ப வந்து உனக்கு என்னை எப்படி தெரியும்னு கேட்கிறாரு இங்கு என்ன நடக்குது?’ என்ற எண்ணத்துடன் இருவரையும் குழப்பமாய் பார்த்திருந்தான் சித்தேஷ்.
” சார் உங்களுக்கு என்னை ஞாபகம் இல்லையா?, அன்னைக்கு கூட ரெண்டு பசங்க கிட்ட இருந்து என்னை காப்பாத்தி ஹாஸ்டல்ல டிராப் பண்ணுனீங்களே!, அதுக்குள்ள மறந்துட்டீங்களா?” என்று அதிர்ச்சியுடன் தான் யார் என்பதை நினைவுபடுத்த முயன்றாள் சுஹனி.
‘ அப்போ நான் நினைச்ச மாதிரி இவ கிட்ட என்னோட ஹிப்னாடிசம் வொர்க் அவுட் ஆகல, ஏன் இப்படி நடந்தது? ஒருவேளை என்னோட பவர் குறைய ஆரம்பிச்சிருச்சா?’ குழப்பத்துடன் கீர்த்தன் தனக்குள் யோசித்துக் கொண்டிருக்க,” நான் யாருன்னு சரியா ஞாபகம் இல்லாததால தான் நீங்க என்னை பாக்க முடியாதுன்னு சொல்லி இருக்கீங்க போல, நான் கூட உங்கள தப்பா நினைச்சுட்டேன் சாரி சார்” என்று அவன் சிந்தனையில் குறுக்கிட்டாள் சுஹனி.
” நீ என்னை பத்தி என்ன நினைச்சிருந்தாலும் அதை பத்தி எனக்கு கவலை இல்ல. ஆமா என்னோட அட்ரஸ் எப்படி உனக்கு தெரிஞ்சது?” என்று கீர்த்தன் வினவ.. ” அன்னைக்கு இருந்த அவசரத்துல உங்களுக்கு தேங்க்ஸ் கூட சொல்லாம போயிட்டேன். அதனால உங்க கார் நம்பரை வச்சு அட்ரஸ் கண்டுபிடிச்சு தேங்க்ஸ் சொல்லாம்ன்னு வந்தேன். ” என்றாள் சுஹனி.
” சரி சொல்லிட்டு கிளம்பு.. ” என்று அடுத்த வார்த்தை பேசிட இடம் கொடுக்காமல் கீர்த்தன் கூறிட.. ” அன்னைக்கு அவ்வளவு பெரிய இக்கட்டுல இருந்து என்னை காப்பாத்துனதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.. அப்புறம்…” என்று தற்போது தனக்கு இருக்கும் பிரச்சனையை விவரிக்க முயன்றாள் சுஹனி.
” அப்புறம் என்ன சொல்ல வேண்டியதை சொல்லிட்டேல கிளம்பு” என்று வாசலை சுட்டிக்காட்டி வெளியேறும்படி சைகை செய்தவன் இருக்கையை விட்டு எழுந்து கொள்ள… ” பிரச்சனை அதோட முடியல, எனக்கு நீங்க இன்னொரு ஹெல்ப் பண்ணனும்” என்று அவசரமாய் கூறினாள் சுஹனி.
“அன்னைக்கு கார்ல இருந்து இறக்கி விடும் போது என்ன சொன்னேன்?, இந்த நிமிஷத்துல இருந்து உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல, நீ என்னை பார்த்ததையே மறந்துடனும்னு சொல்லி தானே இறக்கிவிட்டு வந்தேன். அப்புறம் எதுக்கு திரும்பத் திரும்ப என்னை தேடி வந்து தொந்தரவு பண்ணிட்டு இருக்க?, இப்போ உனக்கு என்ன தான் வேணும்?” என்று கோபமாய் வினவினான் கீரத்தன்.
கோபமாய் கேட்கப்பட்ட போதிலும் தனக்கு இருக்கும் பிரச்சனையை முழுதாய் விவரித்து முடித்தாள் சுஹனி.
” இங்க பாரு அன்னைக்கு உனக்கு பண்ணுனதே பெரிய உதவி தான். போலீஸ் கேஸ் இதெல்லாம் உன்னோட பிரச்சனை அதை நீ தான் பாத்துக்கணும்.. இதுக்கு மேல வந்து தொந்தரவு பண்ணாத.. ” என்று அலட்சியமான குரலில் கூறி அவளை அவமதித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான் கீர்த்தன்.
” சார் ப்ளீஸ் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க, தப்பு பண்ண ரெண்டு பேரும் என் மேல கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காங்க. போலீசும் என்னை தான் வந்து விசாரிக்கிறாங்க, நடந்த உண்மை என்னன்னு நீங்க வந்து சொன்னா மட்டும் தான் என்னால இந்த கேஸ்ல இருந்து வெளியே வர முடியும். இந்த பிரச்சனையெல்லாம் என் வீட்டுக்கு தெரிஞ்சா என் ஸ்டடிஸ் பாழாகிடும். இப்போ உங்களால மட்டும் தான் எனக்கு உதவி பண்ண முடியும், போலீஸ் ஸ்டேஷன் வந்து நடந்த உண்மைய சொல்லுங்க ப்ளீஸ் சார்” என்று நகர்ந்து சென்றவன் பாதையை மறைத்தபடி அவனுக்கு முன் சென்று மன்றாடினாள் சுஹனி.
ஒருவிரல் கொண்டு தன் வழியை மறைத்து நின்றவளை விலக்கித் தள்ளியவன், தனது உதவியாளன் புறம் திரும்பி, ” வெளிய அனுப்பிடு..” என் உத்தரவை பிறப்பித்து விட்டு தனது அறையை நோக்கி நடந்தான் கீரத்தன்.
அதுவரை பொறுமையை கடைபிடித்தவள், தனது நிதானத்தை கைவிட்டு.. ” நீ எல்லாம் என்ன மனுஷனோ!, உன்னை மாதிரி சுயநலம் பிடிச்ச ஒரு ஜென்மத்தை நான் பார்த்ததே இல்லை. இதுக்கு நீ எனக்கு அன்னைக்கு ஹெல்ப் பண்ணாமலேயே இருந்திருக்கலாம், எப்படியாவது நானே அவங்க கிட்ட இருந்து தப்பிச்சிருப்பேன், தப்பிக்க முடியலன்னா தற்கொலை பண்ணிட்டாவது செத்து போயிருப்பேன். இப்போ செய்யாத தப்புக்கு கலங்கத்தை சுமந்துட்டு ஜெயிலுக்கு போகப் போறேன். நீ இங்க நிம்மதியா இரு.” என்று வேண்டி வந்த உதவி கிட்டாத வெறுப்புடன் கோபமாய் கத்தி விட்டு அங்கிருந்து வெளியேறினாள் சுஹனி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி”பிளேட்லட்”அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “கார்க்” போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தக் கசிவை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.