5….
வேண்டாமென்று வெறுக்கவும் இயலவில்லை…
வேண்டுமென்று நெருங்கவும் முடியவில்லை..
புதிரான உணர்வுகள் என்னை ஆட்கொள்ள…
புரியாமல் பின் தொடர்கிறேன் உன்னை..
கல்லூரி மாணவிகளுக்கும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் அடைக்கலம் கொடுக்கும் தனியார் விடுதி அது. வழக்கம் போல் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த விடுதியின் பொறுப்பாளர் அறைக்குள் நுழைந்த இரு காவல் அதிகாரிகள், ” உங்க ஹாஸ்டல்ல தங்கி எம்.ஏ சைக்காலஜி படிக்கிற சுஹனிய தேடி வந்திருக்கோம்.” என்றனர்.
” என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று பொறுப்பாளர் வினவ… ” அந்தப் பொண்ணு பேர்ல ஒரு கம்ப்ளைன்ட் பைல் ஆயிருக்கு. அது விஷயமா விசாரிக்கணும்.” என்றனர் காவல் அதிகாரிகள்.
” காலேஜ் லீவு தான் ஹாஸ்டல்ல தான் இருக்கா கூட்டிட்டு வர சொல்றேன் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. ” என்ற விடுதி பொறுப்பாளர் அவ்வழியாக சென்ற பெண் ஒருத்தியை அழைத்து, ” சுஹனிய ஆபீஸ் ரூம் வர சொன்னேன்னு சொல்லு” என்று செய்தி சொல்லி அனுப்பினார்.
” சுஹனி, உன்னை வார்டன் மேம் வர சொன்னாங்க” என்று தகவல் சொல்லிவிட்டு சென்றாள் ஒரு பெண்.
‘ வார்டன் எதுக்கு நம்மள வரச் சொல்லி இருக்காங்க!’ என்று தனக்குள் எண்ணியபடி விடுதியின் பொறுப்பாளரை காணச் சென்றாள் சுஹனி.
சற்று தொலைவிலேயே பொறுப்பாளர் அறைக்குள் காவல் அதிகாரிகள் இருப்பதை கவனித்தவள், ‘போலீஸ் வந்திருக்கிற மாதிரி இருக்கே!, ஒருவேள போலீஸ் தான் நம்மள வரச் சொல்லி இருப்பாங்களோ!’ என்று பயமும் தயக்கமுமாய் நடையை தளர்த்தி யோசித்தபடி முன்னேறினாள் சுஹனி.
தங்களை கண்டதும் தயக்கத்துடன் நடந்து வந்த பெண்ணை கண்டதும் காக்கி உடையில் இருந்த காவல் அதிகாரிகளுக்கு சந்தேகம் மேலும் அதிகரிக்கத் துவங்கியது. அர்த்தம் பொதிந்த பார்வையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
இருவரின் பார்வை பரிமாற்றத்தை கவனித்த சுஹனி மனதில் மேலும் அச்சம் அதிகரித்தது. நடுக்கத்துடன் நகர மறுத்த கால்களை கடினத்துடன் கட்டுப்படுத்திக் கொண்டு அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைத்து காவலர்கள் முன் வந்து நின்றாள் சுஹனி.
” நீ தான் சுஹனியா?, விக்னேஷ், சதீஷ் உன் பிரண்டு தானே!, அவங்க இப்போ சீரியஸான கண்டிஷன்ல ஹாஸ்பிடல்ல அட்மிட்டாயிருக்காங்க அது தெரியுமா உனக்கு?” என்றார் ஒரு காவல் அதிகாரி.
தெரியும் என்பது போல் சுஹனி தலையசைக்க, ” இதுவரைக்கும் இந்த நியூஸ் வெளிய யாருக்கும் தெரியாது அப்புறம் எப்படி உனக்கு மட்டும் தெரிஞ்சது?” என்று சந்தேகத்துடன் மற்றொரு காவல் அதிகாரி வினவிட…
” அவங்களுக்கு அடிபட்டு இருக்கிற விஷயத்தை சொல்லி அந்த இடத்துக்கு ஆம்புலன்ஸ் அனுப்பி வச்சதே நான் தான்… ” என்றாள் சுஹனி.
” அப்போ அந்த ரெண்டு பசங்களோட இந்த நிலைமைக்கு நீ தான் காரணம்னு ஒத்துக்குற அப்படித்தானே” என்று ஒருவர் வினவிட…
அச்சத்துடன் அவசரமாய் மறுத்து தலை அசைத்தவள், ” நான் அந்த இடத்துல இருந்தேன் அவ்வளவு தான், நீங்க நினைக்கிற மாதிரி எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றாள் சுஹனி.
” சோ நீ சம்பவம் நடந்த இடத்துல , அந்த நேரத்துல இருந்தன்னு ஒத்துக்குற அப்படித்தானே!, அப்போ நடந்தது என்னன்னு விளக்கமா சொல்லு, உயிர் போற அளவுக்கு அந்த ரெண்டு பேர அடிச்சது யாரு?” என்று வந்திருந்த காவல் அதிகாரிகள் தங்களது விசாரணையை துவங்கினர்.
” அன்னைக்கு ஈவினிங் விக்கி அவனோட பர்த்டேக்கு பார்ட்டி இருக்குன்னு சொன்னான். ஃபிரண்ட்ஸ் எல்லாரும் அவங்கவங்க கார்ல பார்ட்டி நடக்கிற இடத்துக்கு வந்துருவாங்க, உனக்கு தான் கார் ஓட்ட தெரியாதுல, சோ எங்க கூட ஜாயின் பண்ணிக்கோன்னு சொல்லி விக்கியும் சதீஷும் என்னை அவங்களோட கார்லயே கூட்டிட்டு போனாங்க. நானும் அவங்க சொன்னதை நம்பி நம்ம பிரெண்ட்ஸ் தானேனு கூடப் போனேன். கார் சிட்டி அவுட்டரை கிராஸ் பண்ணுன கொஞ்ச நேரத்துல காரை ஓரமா நிறுத்திட்டு ஏற்கனவே கார்குள்ள வாங்கி வச்சிருந்த ட்ரிங்க்ஸ் பாட்டிலை எடுத்து ரெண்டு பேரும் பயங்கரமா ட்ரிங் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு பயமா இருந்தது, சோ என்னை ஹாஸ்டல்ல டிராப் பண்ணச் சொல்லி அவங்க கிட்ட கெஞ்சினேன். ஆனா அவங்க என்கிட்ட தப்பா நடந்துக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்போ தான் புரிஞ்சது இது அவங்களோட பிளான்னு. அவங்க கிட்ட இருந்து தப்பிக்கனும்னு கார்ல இருந்து இறங்கி பக்கத்துல இருந்த காட்டுக்குள்ள ஓட ஆரம்பிச்சேன். விடாம துரத்திட்டு வந்தவங்க என்னை அப்யூஸ் பண்ண ட்ரை பண்ணும் போது, என் சத்தம் கேட்டு அந்த வழியா கார்ல போயிட்டு இருந்த ஒருத்தர் வந்து எனக்கு ஹெல்ப் பண்ணாரு. அவர் தான் என்ன ஹாஸ்டல்லையும் டிராப் பண்ணிட்டு போனாரு” என்று தனக்கு நடந்ததை விவரித்து முடித்தாள் சுஹனி.
” இதான் நடந்ததா?” என்று சந்தேகத்துடன் ஒரு காவலாளி வினவ… ஆமாம் என்பது போல் அவசரமாய் தலை அசைத்தாள் சுஹனி.
” நீ இப்படி சொல்லுற ஆனா அடிபட்டு ஹாஸ்பிடல்ல இருக்கிற பசங்க வேற கதை சொல்லுறாங்களே!. நீயா விருப்பப்பட்டு தான் அவங்க கூட போனதாகவும், காட்டுக்குள்ள அப்படி இப்படின்னு இருந்துட்டு, கொடுத்ததுக்கும் மேல பணம் கேட்டு பிரச்சனை பண்ணி அடியாளை விட்டு அடிச்சுட்டேன்னு அந்த பசங்க சொல்றாங்களே, இதுல எந்த கதையை நாங்க நம்புறது” என்றனர் காவல் அதிகாரிகள்.
” ஐயோ சார் அவங்க சொல்றது எல்லாம் பொய் நம்பாதீங்க, ஃபிரண்ட்ஸ்னு நம்பி கூட போனதுக்கு எனக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலயும் வேணும்” என்று மனம் தாங்காமல் கண்ணீருடன் கதறத் துவங்கினாள் சுஹனி.
” சும்மா நீலிக்கண்ணீர் விட்டு நடிக்காத.. கண்ட நேரத்துல பசங்க கூட சேர்ந்துகிட்டு கண்ட இடத்துக்கும் சுத்துறது.. மாட்டிக்கிட்டதும் பத்தினி வேஷம் போடுறது. உன்னை மாதிரி எத்தனை பொண்ணுங்கள நாங்க பார்த்திருக்கோம். ஒழுங்கா தப்பை ஒத்துக்கிட்டு சரண்டர் ஆயிடு அதுதான் உனக்கு நல்லது. ” என்று ஆலோசனை வழங்குவது போல் அதிகாரத்துடன் அறிவித்தார் ஒரு காவல் அதிகாரி.
அடுத்து என்ன செய்வது என்று புரியாத குழப்பத்துடன், ” நான் சொல்றது உண்மை சார் என்னை நம்புங்க” என்று கதறி அழுதிடத் துவங்கினாள் சுஹனி.
நடந்த விவாதங்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த விடுதி பொறுப்பாளர் சுஹனி அருகில் வந்து ஆறுதலாய் அணைத்துப் பிடித்துக்கொண்டு, ” நானும் நடந்ததை பார்த்துட்டு தான் இருந்தேன், ஃபர்ஸ்ட் கம்ப்ளைன்ட் கொடுத்ததால அவங்க சொல்றது தான் உண்மையா இருக்கணும்னு அவசியம் இல்ல. சுஹனி இந்த ஹாஸ்டல்ல ரெண்டு வருஷமா இருக்கா, எனக்கு அவளை பத்தி ரொம்ப நல்லாவே தெரியும். அவ ரொம்ப நல்ல பொண்ணு.” என்று தனது விடுதி மாணவிக்கு ஆதரவாக பேசினார் விடுதி பொறுப்பாளர் அகிலா.
” நல்ல பொண்ணா!, நல்ல பொண்ணு தான் கண்ட நேரத்துல கண்ட பசங்க கூட வெளியே சுத்துவாளா!” என்று இளக்காரமாக பேசினார் ஒரு காவல் அதிகாரி.
” போதும் நிறுத்துங்க சார்.. பிரெண்ட்ஸ்னு நம்பி கூட போன பொண்ணை தப்பு சொல்றீங்களே!, தன்னை நம்பி கூட வந்த பொண்ணுக்கு உண்மையா இல்லாம நம்பிக்கை துரோகம் பண்ணுனாங்களே அந்த பொறுக்கி ராஸ்கலை ஏன் தப்பு சொல்ல மாட்டேங்கறீங்க!. ” என்று ஆவேசத்துடன் வினவினார் விடுதி பொறுப்பாளர்.
” இந்த பொண்ணு மேல தப்பு இல்லைன்னா முதல்ல வந்து கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கணும், அத விட்டுட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி இங்க வந்து ஒளிஞ்சிகிட்டா வேற எப்படி நினைக்க தோணும்!” என்று நியாயவாதி போல் பேசினார் ஒரு காவல் அதிகாரி.
” கம்ப்ளைன்ட் குடுத்தா மட்டும் அப்படியே ஆக்ஷன் எடுத்துடுவீங்க. பேப்பர்ல பக்கம் பக்கமா நியூஸ் போட்டு இந்த பொண்ணோட பேர டேமேஜ் பண்றது தவிர வேற என்ன நடக்கும், இதுல இந்த நியூஸ படிச்ச பொதுமக்களும் நடந்த உண்மை என்னன்னு தெரியாம, சோசியல் மீடியால, இந்தப் பொண்ணையும், வளர்ப்பு சரியில்லன்னனு பொண்ண பெத்தவங்களையும் சேர்த்து அசிங்க அசிங்கமா விவாதம் பண்ணி இன்னும் காயப்படுத்த தான் செய்வாங்க. நியாயம் கிடைக்கும்னா கம்பளைண்ட் பண்ணலாம், இருக்கிற காயத்தை இன்னும் குத்தி கிழிக்கிறதுக்கு நாங்க எதுக்கு சார் கம்ப்ளைன்ட் பண்ணனும். ” என்று உலக நடப்பை எடுத்துரைத்தார் அகிலா.
” நீங்க பேசுறதெல்லாம் உண்மையா இருந்தாலும், சட்டத்துக்கு சாட்சியும் ஆதாரமும் தான் முக்கியம். அந்த பசங்க கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காங்க அதுக்கான ஆக்ஷன் நாங்க எடுக்கணும். ஒருவேளை இந்த பொண்ணு சொல்றது உண்மையா இருந்தா, அந்த பசங்களை அடிச்சு போட்டு இந்த பொண்ணை காப்பாத்தி ஹாஸ்டல்ல டிராப் பண்ணுன ஆள் வந்து நடந்த உண்மை என்னன்னு சொல்லணும், அப்பதான் இந்த கேஸ் ஒரு முடிவுக்கு வரும். சீக்கிரம் அந்த ஆள கண்டுபிடிச்சு ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வாங்க.” என்று யோசனை கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினர் காவல் அதிகாரிகள்.
கண்ணீருடன் அமர்ந்திருந்த சுஹனி அருகில் வந்த அகிலா, ” இப்போ அழுது என்ன பிரயோஜனம் அவங்க கூட தனியா போறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும். ” என்று கண்டிப்புடன் பேசத் துவங்கியவர், சுஹனி முகத்தில் பரவி இருந்த கலக்கத்தை கவனித்து தனது உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு, ” இந்த காலத்துல நம்ம நிழல கூட நம்ப முடியாது. ஏதோ உன் நல்ல நேரம் உனக்கு ஹெல்ப் பண்ண ஒருத்தர் வந்திருக்காரு. சரி இனி நடக்கப் போறத பத்தி யோசிப்போம். உனக்கு ஹெல்ப் பண்ணுன ஆள் யாருன்னு தெரியுமா? அவர போய் மீட் பண்ணி பேசு, ” என்று யோசனை கூறினார் அகிலா.
நம்பிக்கையற்ற சோகத்துடன் தலையசைத்தவள், ” நான் அவரோட கார் நம்பரை வைச்சு அட்ரஸ் கண்டுபிடிச்சு தேங்க்ஸ் சொல்றதுக்காக அவர் வீட்டுக்கு போனேன் மேம், ஆனா அவர் என்னை தெரியவே தெரியாதுன்னு சொல்லிட்டாரு. இனிமே அவர தேடி வரக்கூடாதுன்னும் சொல்லிட்டாரு” என்றாள் சுஹனி.
“ஓ… ஒருவேளை இப்படி எல்லாம் நடக்கும்னு யோசிச்சு தான் உன்னை அவாய்ட் பண்றாரு போல. நீ ஏன் உன் பேரன்ட்ஸ்க்கு இன்பார்ம் பண்ண கூடாது!” என்றார் அகிலா.
” இப்படி எல்லாம் பிரச்சனை நடந்ததுன்னு தெரிஞ்சா, என்னை ஊருக்கு கூட்டிட்டு போயிடுவாங்க அப்புறம் என்னால என் ஸ்டடிசை கன்டினியூ பண்ண முடியாது. ” என்று சோகமாய் கூறினாள் சுஹனி.
” அதுக்காக இத இப்படியே மறைக்க முடியுமா?, என்னைக்கா இருந்தாலும் பெத்தவங்களுக்கு தெரிஞ்சு தான் ஆகணும். பயந்துட்டு உண்மைய மறைக்கிறதால பிரச்சனை இன்னும் பெருசாக தான் செய்யும். அதனால பேசாம நீ உன் அப்பா அம்மாகிட்ட எல்லாத்தையும் சொல்லி அவங்க கிட்ட ஹெல்ப் கேளு.. ” என்று ஆலோசனை வழங்கினார் அகிலா.
மறுத்துக் கூற மனம் இல்லாமல் சோகமாய் தலையசைத்து விட்டு, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு இல்லாத மனநிலையுடன் தனது அறையை நோக்கி சென்றாள் சுஹனி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ரத்த வெள்ளை அணுக்களை படைவீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போராடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~