சூழ்நிலைகள்
என்னை சுற்றி வளைத்து
சூழ்ச்சி செய்கிறது..
மீட்சி கண்டு
மீள்வேனோ…
அதன் சூழ்ச்சியில்
வீழ்வேனோ
விடை காலத்தின் கையில்..
தன் சம்மதம் இல்லாமலேயே தன் விஷயத்தில் முடிவெடுக்கும் உறவுகளை எண்ணி கொதித்துப்போனான் விதுரன். அதே கோபத்துடன் வீடு திரும்பி தன் உடமைகளை எடுத்துவைக்கத் தொடங்கினான்.
பையனை சம்மதிக்கவைக்க வேண்டியது உன் பொறுப்பு என்ற அண்ணனின் வார்த்தை மீண்டும் மீண்டும் மனதில் எழுந்திட கோபமாய் ஊருக்கு கிளம்ப தயாராகும் மகனை எப்படி சமாதானப்படுத்துவது என்று புரியாமல் குழம்பி நின்றவர், இந்த வாய்ப்பை தவறவிட்டால் மகன் எப்போதும் திருமணத்திற்கு சம்மதிக்கமாட்டான் என்ற உண்மை புரியவும் குழப்பத்தை பின்தள்ளிவிட்டு மகனைத் தேடி வந்தவர், “ எங்க கிளம்பிட்ட, உன் மாமா கேட்ட கேள்விக்கு பதில் என்ன?” என்று உள்ளுக்குள் இருக்கும் உதறலை மறைத்துக்கொண்டு பேசினார்.
“என் பதில் என்னன்னு அங்கேயே சொல்லிட்டு வந்துட்டேன்” என்று பேச்சை வளர்க்காமல் உடைகளைப் பையில் திணித்துக் கொண்டிருந்தவன் தன் மொபைலை எடுத்து அவசரமாய் யாரையோ அழைத்து, “இல்ல சார், இதுக்கு மேல எங்களால இங்க இருக்க முடியாது. அந்த லேண்ட் விஷயமா இனி என்ன பேசுறதா இருந்தாலும் போன்லயே சொல்லுங்க. இல்ல, இல்ல எனக்கு உடனே இடத்தை விக்கணும்னு எந்த அவசியமும் இல்லை, நீங்க பொறுமையாவே பாருங்க”, என்று ஊரில் இருந்த கிளம்புவதை உறுதிப்படுத்தினான் விதுரன்.
சரியான பதில் கூறாமல் நழுவும் மகனை விடாமல் பின்தொடர்ந்து, “கடைசி வரைக்கும் தனிமரமா நிற்கிறது தான் உன்னோட பதில்னா எனக்கு அந்த பதில் பிடிக்கல” என்று மகன் அடுக்கிய துணிகளை பையில் இருந்து வெளியே எடுத்து வீசினார் தேன்மொழி.
“ கல்யாண வாழ்க்கை கசந்துடுச்சு அம்மா. இன்னோரு கல்யாணத்தை பத்தி யோசிக்க கூட விருப்பம் இல்ல. இதுதான் என் முடிவு, இதுல எந்த மாற்றமும் இல்லை!” என்று விதுரன் பிடிவாதம் பிடிக்க, “ அப்போ சரி, நான் என் முடிவ சொல்லிடுறேன், நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிற வரைக்கும் நான் உன்கூட எங்கயும் வரமாட்டேன்”, என்று பிடிவாதத்தில் மகனுக்கு சளைத்தவள் இல்லை என்பது போல கையைக் கட்டிக்கொண்டு கோபமாய் கட்டிலின் ஓரம் அமர்ந்தார் தேன்மொழி.
“ நீங்க தலைகீழா நின்னாலும் சரி இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கமாட்டேன். உங்க பிடிவாதத்துக்காக ஒரு பொண்ணோட வாழ்க்கைய கெடுக்க முடியாது” என்ற மகனை கோபமாய் முறைத்து, “ உன்னை கல்யாணம் பண்ற பொண்ணோட வாழ்க்கை கெட்டுப் போகிற அளவுக்கு, எனக்கே தெரியாம அப்படி என்னென்ன கெட்ட பழக்கம் வைச்சிருக்க ?” என்று குத்தலாக வினவினார் தேன்மொழி.
“கல்யாண வாழ்க்கை நல்லா இல்லாம போறதுக்கு ஒரு ஆணுக்கு கெட்ட பழக்கம் இருக்கணும்னு அவசியம் இல்ல, ரெண்டு மனசும் ஒத்துப்போகாம இருக்கிறது கூட காரணமா இருக்கலாம்”, என்று விதுரன் நிறுத்த, “ஒத்துப்போகாத விஷயம் இங்கே வர வாய்ப்பில்லை” என்று வார்த்தைக்கு வார்த்தை வாயாடும் மகனை அடக்கினார் தேன்மொழி.
“அப்படி நினைச்சு தான் இவ அக்காவ கல்யாணம் பண்ணுனேன் கடைசில என்னாச்சு…?” என்று எதையோ சொல்லத் துவங்கியவன் சட்டென்று சுதாரித்து, “இப்ப சரின்னு தெரியுறது நாளைக்கு தப்பா தெரியும் போது எதையும் மாத்தமுடியாது, வீணா விதண்டாவாதம் பண்ணாம இந்த விஷயத்தை இப்படியே விட்டுடுங்க ” என்றான் விதுரன்.
“ நான் விதண்டாவாதம் பண்ணறேன்னா நீ செய்றதுக்கு பேரு என்ன?” என்று மகனின் கேள்விக்கும் பதில் கேள்வி கேட்டார் தேன்மொழி.
“இவ்வளவு பேசுறீங்களே, நீங்க இந்த விஷயத்தை யோசிச்சீங்களா, ஹனி வயசு என்ன, என் வயசு என்ன ? கிட்டத்தட்ட பத்து வயசு வித்தியாசம். கல்யாண வீட்ல வச்சு எவனோ என்னவோ சொன்னான்னு கொஞ்சம்கூட யோசிக்காம, அவரோட வறட்டு கௌரவத்தை காப்பாத்திக்க திடீர்னு கல்யாணம்னு சொல்லுறாரு. ஹனி யோசிக்க கொஞ்சம் கூட நேரம் தராம, என் பொண்ணுக்கு சம்மதம் எனக்கு சம்மதம் அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம்னு பெருமையா எல்லார் முன்னாடியும் அறிவிக்கிறாரே! ஒரு நிமிஷம் அந்த பொண்ணப்பத்தி யோசிச்சாரா?, இந்த வயசுல கல்யாணத்தை பத்தி எத்தனையோ கனவு இருக்கும், அதையெல்லாம் கலைச்சுட்டு என்கூட விருப்பமே இல்லாம வாழ சொல்லுறது எந்த விதத்துல நியாயம்? நான் அவளுக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாதவன் அம்மா! ” என்று அழுத்தமாய் அறிவித்தான் விதுரன்.
“அண்ணா இதெல்லாம் யோசிக்காமலா முடிவு எடுத்திருப்பாரு, ஹனிகிட்ட சம்மதம் கேட்டுட்டு தான் கல்யாண விஷயத்தை எல்லார்க்கிட்டயும் சொல்லிருப்பாரு” என்று தன் அண்ணனுக்காக பேசினார் தேன்மொழி.
“என்ன யோசிச்சாரு! முதல வேற ஒரு பொண்ணு கூட தான் எனக்கு கல்யாணத்தை முடிவு பண்ணிருந்தாரு உங்க பாசமலர், அதை மறந்துடாதீங்க. அது நடக்காதுன்னு தெரிஞ்சதும், ஊருக்குள்ள அவர் பேரு கெட்டுடும்னு அவசர அவசரமா எனக்கும் ஹனிக்கும் சம்மந்தம் பேசுறாரு, ஒருத்தர் கௌரவத்தை காப்பத்துறதுக்காக நடக்கிறதுக்கு பேரு கல்யாணம் இல்ல அம்மா, கவுரவக் கொலை! என் கண்ணு முன்னாடி இன்னொரு கவுரவக்கொலை நடக்கிறத என்னால அனுமதிக்க முடியாது” என்று வலியுடன் விதுரன் பேசிட, “இன்னொரு கௌரவ கொலையா? எதைப் பத்தி பேசுற?” என்று தேன்மொழி புரியாமல் வினவ, “நாட்டுல நடக்குறத பத்தி தான் பேசுறேன்”, என்று பேச்சை மாற்றினான் விதுரன்.
“ என்னவோ போ”, என்று தலையில் அடித்துக்கொண்டவர், “இப்போ முடிவா என்ன தான் சொல்லுற?” என்று மீண்டும் ஆரம்பித்தார் தேன்மொழி. “ஹனி ஒரு குழந்தை, அவ வாழ்க்கைய கெடுக்க முடியாதுன்னு சொல்லுறேன்” என்று முடித்தான் விதுரன்.
“ எனக்கும் மேல வளர்ந்து நிக்கிறா, அவளா குழந்தை?” என்றவர், விதுரன் கோபமாய் முறைக்க அதை கண்டும் காணாமல் தனது வாதத்தை தொடர்ந்தார், “ஹனிகுட்டி சந்தியா மாதிரி இல்ல, தைரியமான பொண்ணு தனக்கு தேவையானதை நிறைவேத்திக்க தெரிஞ்ச புத்திசாலின்னு, பலதடவை என்கிட்டயே ஹனி தைரியத்தை பாராட்டி பேசியிருக்க, சந்தியாவும் அவ தங்கச்சி மாதிரி தைரியமான பொண்ணா இருந்திருந்தா நல்லா இருக்கும்னும் சொல்லி இருக்க, அப்படிப்பட்ட தைரியமான பொண்ணு அவ கல்யாண விஷயத்துல அப்பா வார்த்தைக்காக சரின்னு சொல்லி இருப்பானு நினைக்கிறியா? அவளுக்கு விருப்பம் இல்லாம எதுவும் நடக்காது” என்றார் தேன்மொழி.
“ அப்போ இந்த கல்யாணத்துல ஹனிக்கும் விருப்பம் இல்லனு தெரிஞ்சா இதுக்கு மேல என்னை தொந்தரவு பண்ணாம விட்டுவீங்க, அப்படித்தானே!” என்று உறுதியுடன் வினவினான் விதுரன்.
“ ஹனிக்கு விருப்பம் இல்லாம என் அண்ணனோட கவுரவத்துக்காக மட்டும்தான் இந்த கல்யாணம் நடக்குதுன்னு தெரிஞ்சா இந்த கல்யாணத்தை நிறுத்துற முதல் ஆள் நானாத்தான் இருப்பேன். அதே சமயம் ஹனிக்கு உன்னை பிடிச்சு அவ சம்மதத்தோடுதான் இந்த கல்யாணம் நடக்குதுன்னு உறுதியா தெரிஞ்சதுனா அதுக்கு அப்புறம் இந்த கல்யாணத்த நிறுத்த நீ எந்த முயற்சியும் பண்ணாம, எந்த மறுப்பும் சொல்லாம இந்த கல்யாணத்தை பண்ணிக்கணும்” என்று மகனின் அதே உறுதியுடன் பேசினார் தேன்மொழி.
தன் வார்த்தையாலே வசமாக மாட்டிக்கொள்ளப்போகிறோம் என்று தெரியாமல், “ஹனிக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம் இருந்தா, நானும் இந்த கல்யாணம் பண்ணிக்கிறத பத்தி மறுபடியும் யோசிக்கிறேன்”, என்று தன் அன்னையுடன் சமாதானம் பேசி நின்ற நேரம் வாசலில் வந்து நின்ற உறவினர் ஒருவர் சற்று பதட்டமான குரலில், “அம்மாடி தேன்மொழி, என்ன ஏதுன்னு விவரம் தெரியல, உன் அண்ணன் மக கையில பூச்சிமருந்து எடுத்துட்டு கோபமா ரூமுக்குள்ள அடைஞ்சுகிடக்கு, யார் என்ன சொன்னாலும் கதவு திறக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்குது, இருக்கிற ஒரு பிள்ளையும் தப்பான முடிவு எடுத்து கைய விட்டு போயிடுமோன்னு உன் அண்ணன் பயந்துட்டு கிடைக்காரு”, என்று விவரம் கூறி சென்றிட, “ இப்போ சந்தோசமா? இதுக்கு தான் எதுவுமே வேண்டாம்ன்னு சொன்னேன்” என்று வலியை குரலில் தேக்கி குற்றவுணர்வுடன் பேசியவன் நொடியும் தாமதியாது தன் தாய் மாமன் வீட்டை நோக்கி செல்லலானன்.
மகன் வாழ்வில் நல்லது நடக்கவேண்டும் என்ற எண்ணத்தில் சிறுபெண்ணின் மனநிலையை புரிந்துகொள்ளாமல் சுயநலமாக நடந்துகொண்டோமோ என்ற குற்றவுணர்வுடன், ‘ பையன் சொன்னது சரிதான், ஹனிக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல போல, இனி இந்த கல்யாணத்தைப் பத்தி பேசவேகூடாது’ என்ற தீர்மானத்துடன் மகனை பின்தொடர்ந்தார் தேன்மொழி.
இனி எந்த காரணம் கொண்டும் இந்த வீட்டின் முன் வந்து நிற்க கூடாது என்று தான் கொண்ட தீர்மானம் மனதில் வந்து போனாலும் தன் தீர்மானத்தை விட ஒரு பெண்ணின் உயிரைக் காப்பது பெரிது என்று மனதில் உண்டான உணர்வை மறைத்து அவசரமாய் வீட்டினுள் நுழைந்தவன், கூடியிருந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தவன், ஹனிகா அடைந்து கிடந்த அறைக்கு முன் வந்து அவசரப்படுவதாலோ ஆத்திரப்படுவதாலோ நிலைமை இன்னும் மோசமாகும் என்பதை உணர்ந்து, பொறுமையாக “ஹனி நீ பயப்படற மாதிரி எதுவும் நடக்காது, உன் மாமா மேல உனக்கு நம்பிக்கை இல்லையா உனக்கு பிடிக்காத விஷயத்தை என்னைக்கும் செய்யமாட்டேன்னு உனக்கு தெரியாதா? குழந்தை மாதிரி பிடிவாதம் பிடிக்காம வெளிய வா!” என்று சிறு குழந்தைக்கு எடுத்துச் சொல்வது போல் நிதானமாக பேசினான் விதுரன்.
அவன் முன் வந்து கையெடுத்து கும்பிட்டு, “ எம்பொண்ணு உயிர் எனக்கு முக்கியம். இவளாவது குழந்தை குட்டின்னு எங்க கண்ணு முன்னாடி சந்தோசமா வாழுறத பாக்கணும், “என்று வசுந்தரா கண்ணீருடன் பேசிக் கொண்டிருக்க, அவர் சொல்ல வருவது என்ன என்று முழுதாய் கேட்காமல் “ எனக்குதான் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லனு அங்கயே சொல்லிட்டேனே! அப்புறம் எதுக்கு அவளை தொந்தரவு பண்ணுறீங்க? யார் என்ன சொன்னாலும் சரி இந்த கல்யாணம் நடக்காது, இதுக்கு மேலயும் ஹனிய யாரும் கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்தக்கூடாது ”, என்று தன் மாமன் குடும்பத்துடன் பேச விருப்பம் இல்லாமல் கூடி நின்றவர்களுக்கு அறிவுறுத்துவது போல அடுத்தவர்களுக்கு செய்தி சொல்லிவிட்டு அறையின் கதவை ஓங்கி தட்டியவன், “இந்த கல்யாணம் பிடிக்கலைன்னு வாயில சொன்னா போதாதா எதுக்கு இப்படி பயமுறுத்துற? அவசரப்பட்டு உயிரை விடுற அளவுக்கு நீ கோழையோ முட்டாளோ இல்லன்னு எனக்கு தெரியும் சும்மா பூச்சாண்டி காட்டாம வெளிய வா”, என்று குரலை உயர்த்தி பெரியவனாய் கட்டளையிட்டான் விதுரன்.
விதுரனின் பேச்சை கேட்டு பதற்றமான பெண்ணைப் பெற்ற இருவரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு, “மாப்பிளை கோபத்துல பேசுறாரு, பொறுமையா எடுத்துச் சொன்னா புரிஞ்சுக்குவாரு, நீ தப்பான முடிவு எடுத்துடாத” என்று மகளின் அறைக் கதவின் முன் நின்று மன்றாடினார் வசுந்தரா.
‘ மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை, பொல்லாத மாப்பிள்ளை, இவனை என்னைக்குமே நான் மாப்பிள்ளைன்னு கூப்பிடமாட்டேன்’ என்று பகடி பேசிய மாமியார் இன்று தன்னை மாப்பிள்ளை என்று அழைத்ததும் இல்லாமல் பொறுமைக்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத அவரே இன்று பொறுமையாக பேசுவோம் என்று கூறவும், நடப்பது என்னவென்று புரியாமல் குழம்பி நின்றான் விதுரன்.
கதறி துடித்துக்கொண்டிருந்த வசுந்தரா அருகில் வந்த தேன்மொழி, “விது சொல்லுற மாதிரி ஹனி தைரியமான பொண்ணு, எந்த தப்பான முடிவுக்கும் போகமாட்டா அண்ணி அழாதீங்க” என்று ஆறுதல் கூறிட “அவ தைரியத்தையும் பிடிவாதத்தையும் நினைச்சு தான் பயமா இருக்கு, கல்யாண மண்டபத்திலிருந்து வந்ததுலயிருந்து, இந்த கல்யாணம் நடக்கக்கூடாதுன்னு பிரச்சனை பண்ணிட்டே இருந்தேன். அப்பாவும் பொண்ணும் என் பேச்சை மதிக்கவேயில்ல, யார் தடுத்தாலும் இந்த கல்யாணம் நடக்கும்னு ஒரே பிடிவாதமாக நின்னாங்க, இவங்க மனச மாத்துறதுக்கு வேற வழி தெரியாம வயலுக்கு தெளிக்க வைச்சிருந்த பூச்சி மருந்து எடுத்து குடிச்சு செத்துடுவேன், என் பிணத்து மேல தான் இந்த கல்யாணம் நடக்கும்னு மிரட்டுனேன். இவர் கூட என் மிரட்டலுக்கு பயந்து இந்த கல்யாண எண்ணத்த விட்டுடுறேன்னு சொல்லிட்டாரு. ஆனா இந்த பிடிவாதக்காரி என் கையில இருந்த பூச்சிமருந்த பிடிங்கி, இந்த கல்யாணம் நடக்கலைன்னா நான் செத்துருவேன்னு பதிலுக்கு என்னையே மிரட்டிட்டு உள்ள போயி கதவை அடைச்சுக்கிட்டா. ஜன்னல் கதவு கூட திறக்க முடியல, உள்ள பக்கமா பூட்டி இருக்கு. பெரியவ மாதிரி ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு செஞ்சு ஒரேடியா எங்களை விட்டுப் போய்விடுவாளோன்னு பயமா இருக்கு” என்று நடந்தவைகளை விவரித்து பதறினார் வசுந்தரா.
“சந்தியா மாதிரி பயந்தவ இல்ல ஹனி, பயப்படாதீங்க” என்று மீண்டும் ஆறுதலை துவங்கிட, “பெரியவ மாதிரி இவளும் பயந்த சுபாவமா இருந்தா நான் எதுக்கு இவ்வளவு பயப்பட போறேன் தேனு, தனக்கு வேணுங்கறத வாய்விட்டு கூட கேக்க தெரியாதவ சந்தியா, அவ்வளவு அமைதி, பொறுமைசாலி. ஆனா இவ பொறுமைனா என்ன விலைன்னு கேட்பா. நினைச்சது நடக்கிறதுக்காகவும் பிடிச்சது கிடைக்கிறத்துக்காகவும் எந்த எல்லைக்கும் போவா. இப்போ இந்த கல்யாணம் நடக்கணும்னு முடிவெடுத்துட்டா. இனி யார் பேச்சும் அவ காதுல ஏறாது, எனக்கு என் பிடிவாதத்தை விட என் பிள்ளை தான் முக்கியம். உன் பையனை எப்படியாவது இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சிடு தேனு” என்று கதறலுடன் கெஞ்சினார் வசுந்தரா.
‘குற்றவுணர்ச்சில என் கூட வாழ முடியாதுன்னு செத்துட்டா ஒருத்தி, இன்னொருத்தி என்கூட வாழ முடியாம போனா செத்துருவேன்னு மிரட்டுறா, இப்போ என்ன செய்யுறது’, என்று உள்ளுக்குள் புலம்பித் தவித்தவன் அருகில் வந்த தேன்மொழி, “ஹனிக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்குன்னு தெரிஞ்சா கல்யாண விஷயமா மறுபடியும் யோசிக்கிறேன்னு, சொன்ன, இப்போ நீதான் வேணும்னு பிடிவாதம் பிடிச்சுட்டு இருக்கிற இவளுக்கு என்ன பதில் சொல்ல போற?” என்று மகனிடம் நியாயம் கேட்டார் தேன்மொழி.
“அம்மா இதப்பத்தி இப்ப பேசவேணாம்”, என்று மெதுவாய் தன் அன்னையை அடக்கிவிட்டு என்ன செய்வது என்று புரியாமல் தவித்தபடி நின்ற கூட்டத்தின் புறம் திரும்பி, “என்ன எல்லாரும் வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறீங்க? யாராலயும் நுழைய முடியாத இருப்பு கோட்டையா இது? கதவை உடைச்சுட்டு உள்ள நுழைய வேண்டியதுதான!”, என்று கேட்டுக்கொண்டே அறையின் கதவை தன் தோள் கொண்டு பலமாய் இடிக்கத் தொடங்கினான் விதுரன்.
“தம்பி சொல்றது சரி தான். நாம தயங்கி நிற்க்கிற ஒவ்வொரு நிமிஷமும் அந்த புள்ள உசுருக்கு ஆபத்து”, என்று கூட்டத்தில் இருந்தவர்கள் சலசலத்தப்படி விதுரனுடன் தோள் கொடுக்க, அடுத்தடுத்த மோதல்கள் தாங்காமல் கதவு தானாக திறந்து, தன்னை உடைத்தெறிய துணிந்தவர்களுக்கு வழிவிட்டு நின்றது.
அறையின் மூலையில் தலை குனிந்தபடி அமர்ந்திருந்தவள் அருகில் வந்த வசுந்தரா, “ஹனிகுட்டி அம்மா கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டேன், மாப்பிள்ளை கைல கால்ல விழுந்தாவது இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சுடுறேன், எனக்கு உன்னை விட வேற எதுவும் முக்கியம் இல்லடா”, என்று கொஞ்சலான கெஞ்சலுடன் மகளை நெருங்கிட கணபதிநாதனும் கலங்கிய விழிகளுடன், “உன் மனசுல இப்படி ஒரு விருப்பம் இருக்குன்னு தெரியாம வேற இடத்துல மாப்பிள்ளைக்கு பொண்ணு பார்த்தது தப்புதான், தயவுசெய்து இந்த அப்பாவ மன்னிச்சுடுடா செல்லகுட்டி” என்று மன்னிப்பு வேண்டி மன்றாடினார்.
“ இன்னும் இங்க நின்னு என்ன வேடிக்கை பாக்குறீங்க, இது அவங்க குடும்ப விஷயம் அவங்களுக்குள்ள பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்” என்ற முதியவர் ஒருவர் கூடி நின்று வேடிக்கை பார்த்த கூட்டத்தை கலைத்து அனுப்பிடஅவரை நன்றியுடன் பார்த்தனர் விதுரன் மற்றும் அவன் மாமன் குடும்பத்தினர்.
ஹனிகா அருகில் வந்த விதுரன், “எல்லாரையும் கலங்கடிச்சிட்டு நீ உள்ள ஹாயா உட்கார்ந்து இருக்கியா?” என்று கோபமாய் அவள் கையில் இருந்த பூச்சி மருந்து பாட்டிலை தட்டிவிட்டவன், “உன்ன புத்திசாலி பொண்ணுன்னு நினைச்சேன், நீயே இப்படி முட்டாள் தனமா நடந்துகிட்டா என்ன அர்த்தம்?” என்றான் கோபம் குறையாத குரலில்.
“ காதல் வந்துட்டா எவ்வளவு பெரிய புத்திசாலியும் முட்டாள் தான் மாமா, உங்களை யாருக்கும் நான் விட்டுத்தரமாட்டேன், எனக்கு நீங்க வேணும்” என்று பிடிவாதம் குறையாமல் பேசினாள் ஹனிகா.
“ காதலா? இத சொல்ல உனக்கு அசிங்கமா இல்ல, நான் உன் அக்கா புருஷன்” என்று அருவருப்புடன் பேசினான் விதுரன்.
“அக்கா உயிரோடு இருந்து நான் உங்கள எனக்கு சொந்தமாக்கிக்க நினைச்சா தான் அசிங்கம் மாமா. அக்கா இறந்து ஐஞ்சு வருஷம் ஆச்சு. இப்போ நீங்க என் அக்காவுக்கு சொந்தம் இல்ல. வேற யாரோ வந்து சொந்தம் கொண்டாடிக்கட்டும்னு விட எனக்கு விருப்பம் இல்ல” என்று தெளிவாக அதேசமயம் தீர்மானத்துடன் பேசினாள் ஹனிகா.
“பைத்தியம் மாதிரி உளறாத. கல்யாண ஆசை வந்துருச்சுன்னா வீட்ல சொல்லி நல்ல பையன பாக்க சொல்லு, அத விட்டு என் தலைய உருட்டாத”, என்று விதுரன் குரலை உயர்த்த, “கல்யாணம்னு நடந்தா அது உங்க கூட தான், இல்ல கடைசி வரைக்கும் நான் இப்படியே தனியாதான் இருப்பேன், இவ என்ன சொல்றது நாம என்ன கேட்கிறதுனு எனக்கோ உங்களுக்கோ வேற இடத்துல கல்யாணம் முடிவு பண்ணுணாங்கன்னா சத்தியமா சொல்லுறேன் நான் உயிரோட இருக்கமாட்டேன். தற்கொலைக்கு எத்தனையோ வழி இருக்கு, அதுல ஏதாவது ஒரு வழியில் என் வாழ்க்கைய முடிச்சுக்குவேன்“ என்றாள் ஹனிகா.
“ என்ன மிரட்டி காரியம் சாதிக்க பாக்குறியா?” என்று விதுரன் வினவிட, “உங்கள மிரட்டல மாமா, என் முடிவு இதுதான்னு சொல்றேன்” என்றாள் ஹனிகா.
“இது வேண்டாத பிடிவாதம், எல்லா நேரமும் நாம நினைக்கிறது மட்டுமே நடக்காது, என்ன நடக்குதோ அது சந்தோஷமா ஏத்துக்க கத்துக்கோ, அப்பதான் வாழ்க்கை நல்லா இருக்கும்” என்று விதுரன் ஹனிகாவிற்கு அறிவுரை வழங்கிட, “அதையேதான் நான் உன்கிட்ட சொல்றேன் உன் பிடிவாதத்துல இருந்து இறங்கி வா, ஹனிக்கும் இந்த கல்யாணத்துல முழு விருப்பம்னு தெரிஞ்சிடுச்சு, இப்போ உன் முடிவை மாத்திக்கிறத தவிர வேற வழி இல்ல விதுரா” என்றார் தேன்மொழி.
“இந்த கல்யாணம் மட்டும் நடக்கலைன்னா என் பொண்ணோட வாழ்க்கை கெட்டுப் போனதுக்கு நானே காரணமாயிருந்தேங்கிற குற்றவுணர்வே என்னை கொல்லாம கொன்னுடும். எங்க வீட்டுக்கு மாப்பிள்ளையான பிறகும்கூட உங்ககிட்ட நான் என்னைக்கும் மரியாதையோட நடந்துகிட்டதில்ல. அந்த கோபத்தை இன்னும் மனசுல வச்சிக்கிட்டு தானே என்னோட பொண்ண கல்யாணம் பண்றதுக்கு சம்மதிக்க மாட்டேங்கிறீங்க. நான் பண்ணின தப்புக்கு உங்க கால்ல விழுந்து கூட மன்னிப்பு கேட்கிறேன். தயவுசெய்து இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுங்க”, என்ற வசுந்தரா கண்ணீர் விட்டபடி விதுரன் கால்களில் விழ சென்றிட வேகமாய் இரண்டடி பின் நகர்ந்து நின்றவன், எது நடந்து விடுமோ என்ற அச்சத்தில் உடனே ஊரை விட்டு கிளம்பினானோ அதுவே நடந்துகொண்டிருக்க, நடப்பது எதையும் தடுக்கவும் முடியாமல் முழுமனதாய் சம்மதமும் சொல்லமுடியாமல் முள் மீது நிற்பதுபோல் உணர்ந்தவன், “எப்பவும் உங்க விருப்பத்தை என் மேல திணிச்சு பழகிட்டீங்க, எனக்கு பிடிச்சாலும் பிடிக்கலனாலும் நான் அதை சகிச்சுட்டு வாழனும் அப்படித்தானே!” என்றவன் உச்சகட்ட வெறுப்பின் வெளிப்பாடாய் அருகில் இருந்த இரும்பு அலமாரியை ஓங்கி அடித்திட, அதிலிருந்த கூறிய முனை அவன் கையை கிழித்து பதம் பார்த்தது. விதுரன் கரத்தில் வழிந்த இரத்தத்தை கண்டதும் அங்கிருந்தவர்களை விட அதிகமாய் துடிதுடித்துப்போன ஹனிகா வேகமாய் அவன் அடிபட்ட கரத்தினை பரிவாய் தடவியபடி, “என்னை சகிச்சுக்கோன்னு சொல்லல மாமா, நீ இல்லாத வாழ்க்கைய என்னால சகிக்கமுடியாதுன்னு சொல்லுறேன். இங்க யாரும் உன்னை கட்டாயப்படுத்தமாட்டாங்க. நீ உன்னை காயப்படுத்திக்காத மாமா, எனக்கு வலிக்குது” என்று உள்ளத்தின் வேதனையை வெளிப்படையாக காட்டும் கண்ணாடி முகத்தில் கண்ணீருடன் நின்றாள் ஹனிகா.
தனக்காக கலங்கும் பெண்ணவள் கண்ணீரில் அதுவரை இருந்த குழப்பம் மெதுவாய் கரைந்திட “இந்த கல்யாணம் நடக்கிறதுல தான் உங்களுக்கெல்லாம் சந்தோஷம்னா எனக்கு சம்மதம்” என்று கூறி அடுத்த நொடி அங்கிருந்து விலகி சென்றான் விதுரன்.
சூழ்நிலைக் கைதியாய்
என்னை சிறைபிடித்து…..
சிரிக்கிறது விதி..
காலத்தின் கட்டாயத்தில்..
மீள வழியறியாது
மீண்டும் மீண்டும்
வீழ்கிறேன் அதன் சதியில்..