Advertisement

4. பிடிவாதம் வெல்லுமோ!!!

நம் நெருங்கிய

உறவுகளே..

நம் நெஞ்சத்தின்

உணர்வுகளை..

அலட்சியப்படுத்தும் போது..

இன்னும் ஏன் உயிர்

சுமந்து இருக்கின்றோம்

எனும் உணர்வு

தோன்றி விடுகிறது..

“ அப்பாதான் எப்பவும் போல புரிஞ்சுக்காம பேசுறாருன்னா, நீங்களும் ஏன் அம்மா என்னை புரிஞ்சுக்காம காட்டாயப்படுத்துறீங்க..” என்று தன் விருப்பத்திற்கு செவி மடிக்காத தந்தையிடம் செல்லுபடியாகாத விவாதத்தை தாயிடம் தொடர்ந்து கொண்டு இருந்தாள் மதுரிமா.

“ நான் கட்டாயப் படுத்தல மது, நம்ம வீட்டு சூழ்நிலையை உனக்கு புரிய வைக்க முயற்சி பண்ணுறேன். உனக்கே தெரியும் இந்த வீட்ல உன் பாட்டி சொல்றது தான் நடக்கும், இப்போ உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு அவங்க முடிவு எடுத்துட்டாங்க, அதை எப்படியாவது நடத்தியும் காட்டிடுவாங்க, அதனாலதான் சொல்றேன் உன் பிடிவாதத்தை விட்டுட்டு இப்பவே கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிடு.. “ என்று தன் மகளுக்கு பொறுமையாக எடுத்துக் கூறி புரிய வைக்க முயற்சி செய்தார் கண்மணி.

“என்னையும் உங்கள மாதிரி கல்யாணம் பண்ணிட்டு வீட்டுக்குள்ள அடங்கி கிடக்கணும்னு சொல்லுறீங்களா?, என்னால உங்கள மாதிரி அடிமை வாழ்க்கை வாழ முடியாது அம்மா. நான் பி.ஜி முடிச்சிருக்கேன், என் படிப்புக்கு தகுந்த வேலை கிடைச்சு, என் சொந்தக் காலுல நிக்கிற வரைக்கும் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கிற எண்ணமே எனக்கு இல்ல. “ என்று தொடர்ந்து பிடிவாதமாக மறுத்து கொண்டிருந்தாள் மதுரிமா.

“ எனக்கு கிடைச்ச மாதிரி அடிமை வாழ்க்கை தான் உனக்கும் கிடைக்கும்னு ஏன் நினைக்கிற?, பையன் வீட்டுக்காரங்க உன்னை எங்கேயோ பார்த்து பிடிச்சுப்போய், அவங்களே தேடி வந்து பொண்ணு கேட்டாங்க. தேடி வந்து கல்யாணம் பண்ணுறவங்க எதுக்கு அடிமை மாதிரி நடத்த போறாங்க, நீ வேணா பாரு போற இடத்துல உன்னை மகாராணி மாதிரி பார்த்துக்குவாங்க “ என்று தனக்கு கிடைக்காத நிம்மதியான வாழ்க்கை மகளுக்கும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையுடன் ஆருடம் கூறினார் கண்மணி.

“ ஓ தேடி வந்தாங்களா?, உடனே நீங்களும் சரின்னு சொல்லிட்டீங்க.. என்னைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சு பாத்தீங்களா..!” என்று ஆதங்கமாய் துவங்கியவள் அன்னை முகத்தில் தோன்றிய விரக்தியை கவனித்து, “ அது சரி இந்த வீட்ல நம்மள பத்தி யோசிக்க யாரு இருக்கா?, “ என்று தாயின் முகத்தில் தோன்றிய விரக்தியை தனதாக்கிக் கொண்டு பேசினாள் மதுரிமா.

“ இந்த வீட்ல தான் நீ ஆசைப்பட்டது எதுவும் உனக்கு கிடைக்கல மது, நீ போற இடத்தில கண்டிப்பா உனக்கு பிடிச்ச மாதிரி தான் வாழ்க்கை இருக்கும் என்னை நம்பு, இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு.. “ என்று விடாமல் தன் முயற்சியை தொடர்ந்து கொண்டிருந்தார் கண்மணி.

தன் மறுப்பை தெரிவிக்க மதுரிமா வாய் திறக்க…” வீட்ல எம்புட்டு வேலை கிடக்கு, அதை எல்லாம் கிடப்புல போட்டுட்டு இங்க என்ன ஆத்தாளும் மகளும் வெட்டி அரட்டை அடிச்சிட்டு நிக்கிறீங்க?, “ என்று அதிகாரக் குரலில் வினவிய படி அறையினுள் நுழைந்தார் வேலம்மாள், மதுரிமாவின் தந்தை வழி பாட்டி.

“ அது வந்து அத்தை… காலேஜ் படிப்பு எல்லாம் எப்படி இருந்ததுன்னு கேட்டுட்டு இருந்தேன்..” என்று பயமும் தயக்கமுமாய் கண்மணி பதில் தர… “அதான் ஸ்கூல் டீச்சரை விட்டு பேசச் சொல்லி, என் மகன் மனசை கரைச்சு, அவ நினைச்ச படிப்பு படிக்க ஊர் எல்லை தாண்டி போயிட்டாளே!, புடிச்சு தானே படிக்கப் போனா அதுக்கு என்ன குறை வரப் போகுது,” என்று மதுரிமா முதல் முறை தனது படிப்பிற்காக செய்த முயற்சிகளை குத்திக்காட்டி பேசினார் வேலம்மாள்.

“ நான் படிக்க நினைச்சது வேற… அதுக்கு தான் இந்த வீட்டுல யாரும் ஃஅலோ பண்ணலயே!.. அப்புறம் எப்படி பிடிச்சு படிக்க முடியும்!” என்று பாட்டியின் குத்தல் பேச்சிற்கு குதர்க்கமாக பதில் தந்தாள் மதுரிமா.

“ பொம்பள பிள்ளைகளுக்கு பொருத்தமா இருக்கிற டீச்சர் வேலைக்கு படிக்காம… ஆம்பள பசங்க மாதிரி ஒன்னுத்துக்கும் ஆகாத சினிமா படம் எடுக்கிற பாடம் படிக்கிறேன்னு சொன்னா யாரு தான் விடுவாங்க, நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணுங்க படிக்கிற படிப்பா அது!… “ என்று மதுவின் விருப்பத்திற்கு தடை விதித்ததற்கான காரணத்தை விளக்கினார் வேலம்மாள்.

“ படிப்புல என்ன பசங்க படிக்கிறது பொண்ணுங்க படிக்கிறதுன்னு, திறமை இருக்கிறவங்க படிச்சு முன்னேறப் போறாங்க. “ என்று பாட்டியின் காரணத்திற்கு மதுரிமா அலுத்துக்கொள்ள.. “ படிப்பு ஏற ஏற.. மனுஷ மக்களுக்கு கொடுக்கிற மரியாதை குறைஞ்சிடும் போல, பெரியவங்கங்கிற மட்டு மரியாதை இல்லாம எப்படி பேசுறா பாரு உன் மக, இதே திமிரோட தான் என் மகன் கிட்ட கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு வந்திருக்கா, இவளோட படிச்ச திமிரை எல்லாம் என்கிட்ட காட்டக்கூடாதுன்னு சொல்லி வை. அவ அப்பன் பார்த்திருக்கிற பையன் வேணம்னா, என் மகளோட மகன் மதியழகனை கட்டிக்கிட்டு வீட்டோட கிடைக்கச் சொல்லு. “ என்று தன் மருமகளிடம் அதிகாரமாய் அறிவித்துவிட்டு அங்கிருந்து விலகிச் சென்றார் வேலம்மாள்.

பாட்டியின் அதிகார தோரணைக்கு அதுவரை இருந்த திடம் மறைந்து.. அதிர்ச்சியுடன் மதுரிமா தன் அன்னையை பார்க்க… “ இப்ப புரியுதா நான் எதுக்கு இந்த கல்யாணத்துக்கு உன்னை கட்டயப்படுத்துறேன்னு, உனக்கு கல்யாண பேச்சு ஆரம்பிச்சதுல இருந்து உங்க அத்தை அடிக்கடி வீட்டுக்கு வந்து, உன்னை அவங்களோட பையனுக்கு கட்டி கொடுக்கச் சொல்லி கேட்டுட்டே இருக்காங்க, மக என்ன கேட்டாலும் மறுப்பு சொல்லாத உன் பாட்டியும் உடனே உன் அப்பா கிட்ட இதைப் பத்தி பேசினாங்க, எப்பவும் அம்மா பேச்சை மீறாத உன் அப்பா இந்த விஷயத்துல என்ன நினைச்சார்னு தெரியல, சொந்தத்துல கல்யாணம் பண்ண கூடாதுன்னு என்னென்னவோ காரணம் சொல்லி உன் பாட்டியை சரிக்கட்டி வெளி இடத்துல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாரு… இப்போ நீ அவர் பேச்சைக் கேட்கலனா, உன் பாட்டி சொன்னது தான் நடக்கும். “ என்றார் கண்மணி.

“ என்னம்மா கல்யாணம் வேணாம்னா விட வேண்டியது தானே.. அதுக்காக அந்த பொறுக்கி மதியே இல்லாத மதியழகனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி மிரட்டுவாங்களா!, விட்டா கைய காலக் கட்டி கட்டாயக் கல்யாணம் பண்ணி வைச்சுடுவாங்க போல!” என்று எரிச்சலுடன் வினவினாள் மதுரிமா.

“ நீ எடுக்கிற முடிவை பொறுத்து அதுவும் நடக்க வாய்ப்பு இருக்கு, என்ன அப்படி பாக்குற?, எனக்கும் உன் அப்பாவுக்கும் கல்யாணம் வேற எப்படி நடந்துச்சுன்னு நினைக்கிற?” என்றார் கண்மணி.

“ உங்க வீட்டுல இருக்குறவங்க கல்யாணத்துக்கு விருப்பம் இல்லைன்னு சொன்னதுக்கு அப்புறமும் உங்களை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்ததா பாட்டி ஒரு தடவை சொல்லிருக்காங்க… “ என்று விபரம் முழுதாய் அறியாத குழப்பத்துடன் கூறினாள் மதுரிமா.

“கவர்மென்ட் ஸ்கூல் டீச்சர்ரா இருந்த என் அப்பா அப்போ தான் ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு இந்த ஊருக்கு வந்த புதுசு. உன் பாட்டி என்னை பொண்ணு கேட்டு வந்ததும், எங்க வீட்ல இருக்கிறவங்க பெருசா எதுவும் விசாரிக்காம, பொண்ணு கேட்ட வந்த அன்னைக்கே பரிசம் போட்டுட்டாங்க, வேலம்மா வீட்டுக்கு மருமகளாக போறதும் உசுரோட இருக்கும்போதே நரகத்துக்கு போறதும் ஒன்னு தான்னு, ஊருக்குள்ள இருக்கிறவங்க அரசல் புரசலா பேசிக்கிட்டது அதுக்கப்புறம் தான் எங்க வீட்டு ஆட்களுக்கு தெரிய வந்துச்சு. நல்லவேளை கல்யாணத்துக்கு முன்னாடியே மாமியாரோட குணம் தெரிஞ்சிடுச்சுன்னு சந்தோஷப்பட்டு கல்யாணத்த நிறுத்திட்டாங்க. அதை கௌரவக் குறைச்சலா எடுத்துக்கிட்ட உன் பாட்டி, கோயிலுக்கு சாமி கும்பிட போனவள பிடிச்சு வைச்சு, அங்கேயே உன் அப்பா கையால தாலி கட்ட வைச்சுட்டாங்க… “ என்று தனது திருமணம் நடந்த விதத்தை விவரித்து முடித்தார் கண்மணி.

“ஓ… அதனால தான் ஆட்சி தாத்தா மாமா யாரும் பாட்டிகிட்டையும் அப்பா கிட்டையும் முகம் கொடுத்து பேசுறது இல்லையா?” என்று இதுவரை அறிந்திடாத விபரம் அறிந்த அதிர்ச்சியுடன் வினவினாள் மதுரிமா.

“ அதை விடு, உன் பாட்டி இருக்கிற வேகத்தை பார்த்தா, உன் அத்தை பையனை வீட்டுக்கே வர வச்சு கட்டாய கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்கன்னு தோணுது அதனால தான் சொல்றேன் பேசாம உங்க அப்பா பார்க்கிற பையனுக்கு ஓகே சொல்லிடு. “ என்றார் கண்மணி.

“ கட்டாய கல்யாணம் பண்ணி வச்சா நான் என்ன உங்கள மாதிரி அமைதியா இருந்துடுவேன்னு நினைக்கிறீங்களா?, கட்டின தாலியை கழட்டி அவன் மூஞ்சிலேயே விட்டு எறிஞ்சிடுவேன். “ என்று ஆவேசமாக பேசினார் மதுரிமா.

“ பேசும் போது எல்லாம் நல்லாதான் இருக்கும் நடைமுறைக்கு ஒத்துவராது மது. பொண்ணுங்க தைரியமா இருக்கணும்னு சொல்லுவாங்க ஆனா புரட்சிகரமாக ஏதாவது பேசினா முதுகுல தட்டி உட்கார வச்சிருவாங்க. அம்மா உன் நல்லதுக்கு தான் சொல்றேன். திரும்ப திரும்ப என்னை சொல்ல வைக்காத” என்று வற்புறுத்தலுடன் வலியுறுத்தி விட்டு அங்கிருந்து சென்றார் கண்மணி.

‘ என்ன இப்படி கட்டாயப்படுத்துறாங்க, இந்த கல்யாணத்துல இருந்து நான் எப்படி தப்பிக்கிறது, இதுக்கு சரியான சொல்யூஷன் சகா தான் சொல்லுவா. ‘ என்று எண்ணிக் கொண்டவள் தனது நெருங்கிய தோழியை அலைபேசியில் அழைத்து விவரம் கூறினாள்.

“ ஏய் என்னடி பொண்ணு பாக்க தானே வராங்க அதுக்கு எதுக்கு இப்படி புலம்பி தள்ளுற!, சிட்டி பையன்னு சொல்லுற!, விருப்பம் இல்லைன்னு சொல்ற பெண்ணை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணுற அளவுக்கு அவன் ஒன்னும் உன் வீட்டு ஆளுங்க மாதிரி பட்டிக்காட்டு காட்டுமிராண்டியா இருக்க வாய்ப்பு இல்லை. கண்டிப்பா நல்லா படிச்சு ஒரு பொசிஷன்ல இருக்கிற ஆளா தான் இருப்பான். அதனால பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை பையனை தனியா தள்ளிட்டு போயி, உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லிடு, சிம்பிள் பிரச்சனை முடிஞ்சது. “ என்று மிக எளிதாக யோசனை கூறினாள் சரிகா.

“ வரப்போற மாப்பிள்ளையை ஓட விடுறது இருக்கட்டும், வீட்டிலேயே ரெடிமேடா ஒரு மாப்பிள்ளை இருக்கான் அவனை என்ன செய்றது” என்றாள் மதுரிமா.

“ அவன் தலையில நாலு தட்டு தட்டி… எனக்கு உன்னை பிடிக்கல, என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்கு நரகத்தை காட்டிடுவேன்னு மிரட்டி விடு” என்றாள் சரிகா.

“ இந்த மாதிரி மிரட்டலுக்கு எல்லாம் அவன் அசருற ஆள் இல்ல.. “ என்று மதுரிமா அலுத்துக்கொள்ள… “ அப்போ சாப்பாட்டுல விஷத்தை வச்சு ஒரேடியா போட்டு தள்ளிடு” என்று கொலையையும் ஒரு கலை போல் கூறினாள் சரிகா.

“ உன்கிட்ட கல்யாணத்தை நிறுத்த ஐடியா கேட்டா, ஜெயிலுக்கு போய் களி தின்னவா ஐடியா குடுக்கிற?, உன்கிட்ட போய் ஐடியா கேட்டேன் பாரு என்னை சொல்லணும்.. மதியை நானே கவனிச்சுக்கிறேன்“ என்று அழைப்பை துண்டித்து விட்டு… அடுத்து செய்ய வேண்டியதை திட்டமிட துவங்கினாள் மதுரிமா.

 

 

 

Advertisement