4…

விழி தேடும் கனவின் தேடல்கள்

விடிந்ததும் விலகிவிடும்…

மனம் தேடும் வாழ்வின் தேடல்கள்

உயிர் மடிந்தாலும் மறையாது…

” பாஸ்… ” என்று சித்தேஷ் குரலுக்கு கண் விழித்தவன், ” இப்போ எதை கொண்டு வந்து குடிக்க சொல்லி என் உயிரை வாங்கப் போற…?” என்று உள்ளிருந்தபடியே எரிச்சலுடன் வினவினான் கீர்த்தன்.

” எதையும் கொண்டு வரல பயப்படாம வெளிய வாங்க… ” என்று சித்தேஷ் கூறிட, கதவை திறந்து கொண்டு தலையை மட்டும் வெளியே நீட்டியவன், ” என்ன வேணும் உனக்கு?, ” என்றான்.

” உங்கள பாக்க ஒரு பொண்ணு வந்திருக்காங்க பாஸ்” என்றான் சித்தேஷ்.

” பொண்ணா!, என்னை பார்க்கவா? சான்சே இல்ல” என்று கீர்த்தன் மறுக்க… ” நானும் அப்படி நடக்க வாய்ப்பே இல்லைன்னு தான் நினைச்சேன். பட் அவங்க உங்க பேரை தெளிவா சொல்லி கேக்குறாங்க பாஸ். ” என்றான் சித்தேஷ்.

” பேர சொல்லி கேட்கிறதெல்லாம் ஒரு விஷயமா?, அதெல்லாம் பார்க்க முடியாதுன்னு சொல்லி அனுப்பிடு” என்று மீண்டும் அறைக்குள் சென்று கதவை மூடினான்.

” வந்தவங்க உங்க பேரு சொல்லி மட்டும் விசாரிக்கல பாஸ், அவங்க பேரையும் சொல்லி, உங்களுக்கு அவங்களை ரொம்ப நல்லாவே தெரியும்னு கான்ஃபிடன்ட்டா சொல்லுறாங்க. ” என்று பூட்டிய அறைக்குள் இருப்பவனுக்கு கேட்கும் படி சத்தமாய் கத்தினான் சித்தேஷ்.

மீண்டும் கதவை திறந்து கொண்டு தலையை மட்டும் வெளியே நீட்டியவன், ” கான்ஃபிடன்ட்டா சொன்னா உடனே நீ வீட்டுக்குள்ள விட்டுடுவியா, நானும் கான்ஃபிடன்ட்டா யாரையும் பார்க்க முடியாதுன்னு சொல்லுறேன், போய் வீட்டை விட்டு வெளியே அனுப்பு… ” என்று உத்தரவு பிறப்பித்து மீண்டும் அறைக்குள் முடங்கினான் கீர்த்தன்.

‘ இவர் என்ன எதைக் கேட்டாலும் தலைய மட்டும் வெளியே நீட்டி பதில் சொல்லிட்டு முட்டை வச்ச கோழி மாதிரி திரும்பத் திரும்ப ரூமுக்குள்ளேயே போயி அடைஞ்சுக்கிறாரு.. ‘ என்று சலிப்புடன் தனக்குள் எண்ணிக் கொண்டவன், ” அவங்க பேரு சுஹனின்னு சொன்னாங்க, உண்மையிலே உங்களுக்கு அப்படி யாரையும் தெரியாதா?.. அப்போ கன்ஃபார்மா அவங்களை வெளியே அனுப்பிடவா… ” என்று குரலை உயர்த்தி சத்தமாய் வினவினான் சித்தேஷ்.

சட்டென்று கதவை திறந்து வெளியே வந்தவன், ” என்ன பேரு சொன்ன?” என்று பரபரப்புடன் வினவினான் கீர்த்தன்.

தன் முதலாளியின் முகத்தில் இருந்த பதற்றத்தை கவனித்தவன் இதில் ஏதோ விஷயம் உள்ளது என்பதை யூகித்து, எதிரில் இருந்தவனை வெறுப்பேற்றும் விதமாக, ” பேரா பாஸ் முக்கியம் அதான் நாம அவங்கள பாக்க போறது இல்லன்னு முடிவாகிடுச்சுல, இதுக்கு மேல பேர தெரிஞ்சுகிட்டு என்ன பண்ணப் போறோம். சரி சரி நான் போய் பாஸ் உங்கள பாக்க முடியாதுன்னு சொல்லிட்டாருன்னு சொல்லி, அவங்கள வெளியே அனுப்பிட்டு வரேன். நீங்க இங்கேயே வெயிட் பண்ணுங்க” என்று இதழ் விரியா நக்கல் புன்னகையுடன் பேசினான் சித்தேஷ்.

” அந்தப் பொண்ணோட பேரு என்னன்னு கேட்டேன்?” என்று சற்று அழுத்தமாக கீர்த்தன் வினவ, அவன் குரலில் தெரிந்த அதிகாரத்திற்கு பணிந்து ” சுஹனின்னு சொன்னாங்க பாஸ்” என்றான் சித்தேஷ்.

” சுஹனியா!… அந்தப் பொண்ணுக்கு எப்படி என் பேரு தெரிஞ்சது?. ” என்று குழப்பத்துடன் கீர்த்தன் வினவ, ” , நீங்கதான் சொல்லி இருப்பீங்க, நீங்க சொல்லாம உங்க பேர் எப்படி அவங்களுக்கு தெரியும்?” என்று குதர்க்கமாய் பதில் தந்தான் சித்தேஷ்.

‘நான் தான் அவளை ஹிப்னோடைஸ் (hypnotize) பண்ணுனேனே! கார்ல இருந்து இறங்கும் போதும் கூட ஓகேன்னு சொல்லிட்டு தானே இறங்கினா, அப்புறம் எப்படி அவ என்னை தேடி வர முடியும். ஒருவேளை இது வேற பொண்ணா இருக்குமோ!’ என்று தனக்குள் யோசித்தான் கீர்த்தன்.

” என்ன பாஸ் யோசிக்கிறீங்க?” என்று கீர்த்தனியின் சிந்தனைக்கு நடுவில் குரல் கொடுத்தான் சித்தேஷ்.

” அது ஒன்னும் இல்ல நான் என்னோட டீடைல் எதுவுமே சொல்லல, அப்புறம் எப்படி என் பேரை சொல்லி நான் இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சு கரெக்டா வந்து நிக்கிறானு யோசிச்சேன்!” என்று குழப்பம் அகலாமல் வினவினான் கீர்த்தன்.

“எனக்கு எப்படி பாஸ் தெரியும்?” என்றான் சித்தேஷ்.

” அவளைப் பத்தி வேற ஏதாவது சொன்னாளா?” என்று கீர்த்தன் வினவ.. ” அதெல்லாம் ஒன்னும் சொல்லல பாஸ். உங்க பேரை சொல்லி விசாரிச்சாங்க, அவங்க பேர சொன்னா அவங்கள எப்படி தெரியும்னு நீங்களே சொல்லுவீங்கன்னு சொன்னாங்க ” என்றான் சித்தேஷ்.

” எனக்கு அந்த பொண்ணத் தெரியவே தெரியாது. இதுக்கு முன்னாடி பார்த்ததும் இல்லை இனிமே பாக்கவும் விருப்பமில்லை. இனி எப்பவும் என்னை தேடி வரக்கூடாதுன்னு மறக்காம வார்னிங் குடுத்துடு. இங்க இருந்து அனுப்பி வச்சிடு ” என்று கீர்த்தன் கூறிட, “இதுக்கு தான் இவ்வளவு ரியாக்ஷனா ?” என்று வாய்விட்டு புலம்பியபடி சித்தேஷ் அங்கிருந்து நகர..

” அப்புறம் இது தான் உனக்கான லாஸ்ட் வார்னிங், இனி என்னை தேடி எந்த பொண்ணு வந்தாலும் நான் இல்லைன்னு சொல்லிடு, முக்கியமா சுஹனி, இவள மட்டும் என்னைக்கும் நீ வீட்டுக்குள்ள ஃஅலோ பண்ணவே கூடாது… ” என்று உத்தரவு பிறப்பித்தான் கீர்த்தன்.

” போச்சு எல்லாம் போச்சு, ” என்று சித்தேஷ் சத்தமாய் புலம்ப.. “என்ன போச்சு?” என்று எரிச்சலுடன் வினவினான் கீர்த்தன்.

“என் சந்தோஷம், நிம்மதி தான் வேற என்ன!, எப்படியோ நீங்க ஒரு வழியா ஒரு பொண்ணை பார்த்து காதல்ல விழுந்து கமிட் ஆகிட்டீங்க… இனி என் ரூட் கிளியர்னு சந்தோசமா இருந்தேன். அந்த சந்தோசம் தான் போச்சுன்னு சொன்னேன். ” என்றான் சித்தேஷ்.

” காதல் மட்டும் தான் வாழ்க்கையா?… அதை தவிர எத்தனையோ உருப்படியான விஷயம் இருக்கு அத பத்தி யோசி…” என்று அறிவுரை வழங்கினான் கீர்த்தன்.

” நம்மள மாதிரி யங்ஸ்டர்ஸ்க்கு காதல தவிர யோசிக்க வேற என்ன பாஸ் இருக்கு.. ” என்று வெட்கம் கலந்த குரலில் கூறினான் சித்தேஷ்.

‘ என்ன யங்ஸ்டரா… நான் உன் பாட்டன் முப்பாட்டன் பூட்டனுக்கும் மூத்தவன் டா. ‘ என்று தனக்குள் எண்ணிக் கொண்டவன் முகத்தில் அவனையும் மீறிய ஓர் மெல்லிய புன்னகை படர்ந்தது.

” என்ன பாஸ் சிரிக்கிறீங்க?” என்று சித்தேஷ் காரணம் வினவ.. ” உன்னோட லிஸ்ட்ல என்னையும் சேர்க்கிறேல அத நினைச்சு சிரிச்சேன். ஆமா எனக்கு என்ன வயசு இருக்கும்னு நினைக்கிற?” என்றான் கீர்த்தன்.

” ஒரு இருபத்தியெட்டுல இருந்து முப்பத்தி இரண்டுக்குள்ள..” என்று தயங்கியபடி சித்தேஷ் கூறிட… ஆச்சரியத்துடன் புருவம் உயர்த்தினான் கீர்த்தன்.

எதிரில் இருந்தவன் முகபாவனையை படித்த சித்தேஷ் ” என்ன பாஸ்… சரியா சொல்லிட்டேனா !” என்றான்.

ஆம் என்றும் ஆமோதிக்காமல் இல்லை என்றும் மறுக்காமல் அமைதியாய் நின்றிருந்தான் கீர்த்தன்.

சிறு தயக்கத்துடன், ” பாஸ்.. நீங்க தப்பா எடுத்துக்கலனா நான் உங்கள ஒன்னு கேட்கலாமா?” என்று தயக்கத்துடன் அனுமதி வேண்டினான் சித்தேஷ்.

சம்மதமாய் கீர்த்தன் தலையசைத்து நிற்க, ” உங்களுக்கு லவ் ஃபெயிலியரா பாஸ். ஏன் கேட்கிறேன்னா.. நான் பார்த்த வரைக்கும் நீங்க எந்த பொண்ணையும் உங்க பக்கத்துல நெருங்க விட்டது இல்ல அதனால தான்” என்று தட்டு தடுமாறி பல நாள் தன் மனதில் இருந்த சந்தேகத்தை வினவினான் சித்தேஷ்.

சில நொடி மௌனத்திற்கு பிறகு மெதுவாய் தலை அசைத்தவன், ” என்னை உண்மையா காதலிக்கிறேனு சொன்ன யாரும் என்கூட நிலைச்சு இருந்தது இல்ல..” என்று கசந்த புன்னகையுடன் கூறியவன், ‘ உண்மையான காதலும் கிடைக்கல என்னோட சாபமும் தீரல..’ என்று தனக்குள் எண்ணிக்கொண்டான்.

” பாஸ் எல்லாரையும் ஒரே மாதிரி நினைச்சு ஒதுக்கிட முடியாதுல. ஒருவேளை உங்களுக்கான உண்மையான காதலை நீங்க இதுவரைக்கும் சந்திக்காம இருந்திருக்கலாம், நீங்க ஏன் இன்னொரு தடவை ட்ரை பண்ணி பார்க்க கூடாது. ” என்றான் சித்தேஷ்.

” நான் என் லைஃப்ல எத்தனையோ தடவை, எத்தனையோ பேருக்கு வாய்ப்பு கொடுத்துட்டேன்.. ஆனா எனக்கான உண்மையான காதல என்னால இன்னும் கண்டுபிடிக்க முடியல. அது சொன்னாலும் உனக்கு புரியாது. இப்போ போய் அந்த பொண்ண வீட்டை விட்டு வெளியே போக சொல்லு, கூடவே என்னைக்கும் என்னை மீட் பண்ண ட்ரை பண்ண கூடாதுன்னு சேர்த்து சொல்லு. ” என்று அமைதியான குரலிலேயே உத்தரவை பிறப்பித்து விட்டு அறைக்குள் சென்று முடங்கினான் கீர்த்தன்.

‘ இந்த சின்ன வயசுலயே பாஸுக்கு எவ்வளவு பெரிய சோகம், ஏதோ ஒரு பொண்ணு நம்ம பாஸ் கிட்ட பயங்கரமா பாசம் காட்டி மோசம் பண்ணிட்டு போயிட்டாங்க போல, அதனால தான் இப்படி வாழ்க்கையே வெறுத்து போய் தனியாவே இருக்காரு. கடவுளே எப்படியாவது என் பாஸ்க்கு அவரோட உண்மையான காதல் கிடைச்சு, அவர் வாழ்க்கையில நிம்மதி கிடைக்கணும் அதுக்கு நீதான் கருணை காட்டணும்’ என்று தனக்குள் மனதார வேண்டிக் கொண்டவன் சுஹனி இருக்கும் இடம் வந்து சேர்ந்தான்.

” நான் வந்திருக்கேன்னு சொல்லிட்டு வரதுக்கு இவ்வளவு நேரமா?” என்று சலித்துக் கொண்டவள், ” என்னை எப்படி தெரியும்னு சொன்னாரா?” என்று ஆர்வத்துடன் வினாவினாள் சுஹனி.

” சொன்னாரு சொன்னாரு உங்கள தெரியவே தெரியாதுன்னு சொன்னாரு. அவர் இதுவரைக்கும் உங்கள பார்த்ததும் இல்லையாம், இனிமே பார்க்க விருப்பமும் இல்லையாம். அது மட்டும் இல்ல இனிமே அவரத் தேடி நீங்க எப்பவும் இங்க வரக்கூடாதுன்னு ஸ்ட்ரிட்டா ஃவார்னிங் குடுத்தாரு. ” என்றான் சித்தேஷ்.

” என்ன என்னை தெரியாதுன்னு சொன்னாரா?, அதுக்குள்ள என்னை மறந்துட்டாரா?” என்று அதிர்ச்சியுடன் வினவினாள் சுஹனி.

” இங்க பாருங்க நான் தான் ஏற்கனவே சொன்னேன்ல எங்க பாஸுக்கு பொண்ணுங்கள பார்த்தாலே பிடிக்காது. அவர் பின்னாடி சுத்தி உங்க நேரத்தை வேஸ்ட் பண்றத விட்டுட்டு உருப்படியா ஏதாவது வேலை இருந்தா பாருங்க. ” என்று அறிவுரை வழங்கி கீர்த்தனை தேடி வந்தவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பி வைத்தான் சித்தேஷ்.

பூந்தோட்ட பகுதியை வேடிக்கை பார்த்தபடி வீட்டைக் கடந்து சென்றவளை தனது அறையின் சாளரத்தின் வழியாக பார்த்தவன், ‘ என்னோட ஹிப்னோடைஸ் இவகிட்ட ஏன் ஒர்க் அவுட் ஆகல!, இது என்னமோ வித்தியாசமா இருக்கே, இவ என்னை நெருங்கி வரும் போது எனக்குள்ள என்னவோ நடக்குது. ஒருவேளை என்கிட்ட இருக்கிற நெகட்டிவ் எனெர்ஜியை கண்ட்ரோல் பண்ணக் கூடிய பாசிட்டிவ் எனெர்ஜி இவக் கிட்ட இருக்குமோ! ‘ என்று தனக்குள் யோசித்தபடி வீட்டை கடந்து சென்றவளை பார்த்திருந்தான் கீர்த்தன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப் பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள்,முட்டைக் கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் ரத்த சோகை வராது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~