Advertisement

37.. அனுராவின் நினைவலைகள்..

தங்கள் காதலின் அடையாளமாய் கருவாய் உருவாகி உயிர் பெற காத்திருந்த சிசுவை பற்றி தன் கணவனுக்கு அறிவிக்க வேண்டும் என்ற ஆவலுடன் பரத்தின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள் அனுரா.

சில தினங்களாகவே மருமகளிடம் உண்டான மாற்றத்தை கவனித்துக் கொண்டிருந்த கோமதிக்கு அனுராவின் முகமலர்சிக்கான காரணம் அவள் சொல்லாமலேயே புரிந்து போனது.

அவர் நினைத்தது சரிதானா என அறிந்து கொள்ள அனுராவை மெதுவாய் நெருங்கியவர், “என்னமா அனு முகம் ரொம்ப பிரகாசமா தெரியுது ஏதாவது விசேஷமா என்ன?” என்று வினவிட.. , தன் அத்தையின் சுய ரூபத்தை அதுவரை முழுதாய் அறிந்திறாத அனுரா, “அது வந்து அத்தை.. அவர்கிட்ட தான் முதல்ல சொல்லணும்னு ஆசைப்படுறேன்..”என்று இழுத்தடிக்க.. கோமதிக்கு அவரது சந்தேகம் உறுதியாகி போனது.

“கொஞ்சம் என் கூட உள்ள  வா, நான் உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்”என்று மருமகளை  தனியே தனது அறைக்கு அழைத்துச் சென்றார் கோமதி.

“ஏதோ முக்கியமா பேசணும்னு சொன்னிங்களே அத்தை,  சீக்கிரம் சொல்றீங்களா.. அவர் வர்ற நேரமாச்சு அவர்கிட்ட நான் ஒரு சந்தோஷமான விஷயத்தை சொல்லணும் ” என்று எப்படி சொல்வது என்று புரியாமல் தயங்கிக் கொண்டிருந்தவரை அவசரப் படுத்தினாள் அனுரா.

“நீ ஒன்னும் இப்போதைக்கு பரத் கிட்ட எதையும் சொல்ல தேவையில்லை, இது அதுக்கான நேரமும் இல்லை” என்று கோமதி கூறிட, “உங்களுக்கு இன்னும் விஷயம் என்னன்னு முழுசா புரியலை…, ” என்று சிறு  வெட்கத்துடன் கூறினாள் அனுரா.

”  அதெல்லாம் எனக்குப் புரியாம இல்ல,  உன் வயித்துல குழந்தை உருவாகி இருக்கிற விஷயத்தை இப்போதைக்கு பரத் கிட்ட சொல்லாத.. ஏன்னா   இது ரொம்ப  நாளைக்கு நிலைக்கப் போறது இல்ல.” என்று மகவை  சுமந்திருந்தவள் தலையில் இடியை இறக்கினார் கோமதி.

” நல்ல விஷயம் நடக்க போகுதுன்னு  சந்தோஷத்துல இருக்கேன்,    இப்படி அபசகுனமா பேசுனா என்ன அர்த்தம்!”என்று  கலக்கத்துடன்  வினவினாள் அனுரா.

” அபசகுணமா பேசல, நம்ம வீட்டுக்கு அதிர்ஷ்டம்  வரணும்னு தான் பேசுறேன் கொஞ்ச நாளைக்கு முன்னாடி  ஒரு ஜோசியரை பார்த்தேன், அவர் உங்க ரெண்டு பேரோட ஜாதகத்தை பார்த்துட்டு உங்களுக்கு ஐஞ்சு வருசத்துக்கு அப்புறம்  தான் குழந்தைக்கான யோகம் இருக்கு, அதுக்கு இடையில உருவாகுற எந்தக் கருவும் தங்காதுன்னு சொன்னாரு ” என்றார் கோமதி.

” என்ன அத்தை நீங்க!, இந்தக் காலத்துல போய்  இதெல்லாம் நம்பிட்டு இருக்கீங்க !, வழி விடுங்க, நான் போகனும்..   பரத்துக்கு நான் கன்சீவ் ஆகி இருக்கிற விஷயம் தெரிஞ்சா ரொம்பவே சந்தோஷப்படுவார் ” என்று கோமதியின் எண்ணம் புரியாது  பேசினாள் அனுரா.

” உன் புருஷன் மட்டுமா சந்தோஷப்படுவான்,  மொத்தக் குடும்பமும் சந்தோசத்துல துள்ளிக் குதிக்கும். அதனால தான் வீட்டில யாருக்கும்  விஷயம் தெரியக் கூடாதுன்னு நினைக்கிறேன்.     பாவம் நிலைக்காத குழந்தைக்காக யாரும்  ஆசையை வளத்துக்க  கூடாதுல, ” என்றார் கோமதி.

”  நிலைக்காதுன்னு எப்படி சொல்லுறீங்க?, ஓ…  அந்த ஜோசியக்காரர் சொன்னதை வைச்சு   பயப்படுறீங்களா,  கவலைப் படாதீங்க அத்தை

தப்பா எதுவும் நடக்காது,  குழந்தை  நல்லா ஆரோக்கியமா தான் இருக்கும்.    ” என்று சமாதானம் கூறிவிட்டு  அலுவலகத்தில்  இருந்து வீடு திரும்பிய கணவனை வரவேற்க அங்கிருந்து விலகினாள்.

விபரம் அறிந்ததும் மொத்தக் குடும்பமும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது.

அனைவரும்  மகிழ்ச்சியில் திளைத்திருக்க.. அவர்களின் மன நிறைவு வெகு காலம் நிலைக்காதபடி…  அடுத்த சில   தினங்களிலேயே.. அனுராவின் கருவில் உருவான குழந்தை இருந்த இடம் தெரியாமல் கலைந்து போனது.

உறவினர்களின் ஆறுதல் மொழிகளிலும்   பரத்தின் கனிவான அன்பிலும் கோமதியின் கூடுதல் கவனிப்பிலும் குழந்தையை இழந்த சோகத்தில் இருந்து கொஞ்சம்  கொஞ்சமாய் வெளியே வந்தாள் அனுரா.

அடுத்து சில மாதங்களில் அனுரா மீண்டும் கருவுற, இம்முறை முன்பு நேர்ந்தது போல் எதுவும் தவறாகி விடக் கூடாது எனும் எண்ணத்தில் இருமடங்கு கவனத்துடன்  இருந்தாள்.  கோமதியும் மருமகளை மகள் போல் பாவித்து எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.   இருந்தும்  சென்ற முறை போல் இந்த முறையும் கரு வந்த சுவடே இல்லாமல் கரைந்து போனது.

இருமுறை நேர்ந்த சோகத்தில் இருந்து மீள  முடியாமல்    தவித்துக்   கொண்டிருந்த அனுராவை தனிமையில் சந்தித்த காவியன்.. ” எனக்கு என்னவோ நடக்கிறது எல்லாம் தற்செயலா நடக்குற மாதிரி தெரியல,  ஏதோ ஒன்னு தப்பா இருக்கு அனு. ” என்றான்.

” என் தலையெழுத்து தான் தப்பா இருக்கு” என்று தன் தலைவிதியை நொந்து கொண்டாள் அனுரா.

” அனு…     எனக்கு  உன் அத்தை மேல தான் சந்தேகமா இருக்கு, அடுத்தவங்க சந்தோஷமா இருந்தா  அவங்களுக்கு பிடிக்காது.  இந்த மாதிரி நேரத்துல நீ கொஞ்சம் அவங்களை விட்டு விலகியே இரு, முடிஞ்சா உன் அம்மா வீட்டில போய் தங்கிக்கோ நல்லபடியா பேபி பிறந்ததும் இங்க வா” என்று அக்கறையுடன் ஆலோசனை வழங்கினான் காவியன்.

“இங்க பாரு காவியன் உனக்கு உன் பெரியம்மாவை பிடிக்காதுன்னு தெரியும் அதுக்காக அவங்க மேல  அபாண்டமா பழி   போடுறது நல்லா இல்ல,” என்று அனுரா வெடிக்கென்று பதில் தர.. கோபமாய் முகம் திருப்பி சென்றவன், மீண்டும்  எதையோ யோசித்து, தன் கோபத்தை கட்டுப் படுத்திக் கொண்டு, ” இங்கப்  பாரு  உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன்,  நீ உன் அத்தையை ரொம்ப நம்புற அது நல்லதுக்கு இல்ல” என்றான் காவியன்.

”  காவியன் நீ எப்படி எங்களுக்கு நல்லது தான் நினைப்பியோ அதே மாதிரி என் அத்தையும் எங்களுக்கு நல்லது தான் நினைப்பாங்க. நான்  கன்சீவ் ஆன விஷயம் தெரிஞ்சதும் அவங்க என்னை எவ்வளவு நல்லா பார்த்துக்கிட்டாங்க தெரியுமா?, இப்படி ஆனதும் முதல்ல வருத்தப்பட்டதும்  அவங்க தான். அத்தை கிட்ட ஏற்கனவே ஒரு ஜோசியர் சொல்லி இருக்காரு எங்களுக்கு  ஐஞ்சு வருஷம் கழிச்சு தான் குழந்தை கிடைக்கும்ன்னு..   இப்படி அடிக்கடி கரு கலையுறது நல்லது இல்ல, பேசாம ஜோசியர் சொன்ன மாதிரியே கொஞ்ச வருஷத்துக்கு  குழந்தை பெத்துக்கிறது தள்ளி போடுன்னு சொன்னாங்க. ” என்று தன் மாமியாரை விட்டுக் கொடுக்காமல் பேசினாள் அனுரா.

“அப்படியா சந்தோசம், இது உன் வாழ்க்கை இதுல தலையிட எனக்கு என்ன உரிமை இருக்கு. ஏதோ தோணுச்சு சொல்லிட்டேன். இதுக்கு மேல உன் அத்தையை நம்புறதும் நம்பாததும் உன் விருப்பம்” என்று கோபமாய் கூறி அங்கிருந்து செல்ல முற்பட… “கோபப்படாதீங்க கொழுந்தனாரே!, அத்தை உன்  அம்மாவுக்கு வேணா வில்லியா இருந்திருக்கலாம் எனக்கு அப்படி இருக்கணும்னு அவசியம் இல்லையே. நான் அவங்களோட சொந்த அண்ணன் மக.. நான் சுமக்கிறது அவங்க சொந்தப் பையனோட குழந்தை இத போய் கலைக்கணும்னு அவங்களுக்கு எப்படி மனசு வரும் சொல்லு.. “என்று நியாயமாய் கேள்வி எழுப்பினாள் அனுரா.

ஏளனமாய் விரிந்த இதழ் மெதுவாய் சோகத்தை பூசிக் கொள்ள… “பரத் என் அம்மா மேல ரொம்ப பாசமா  இருப்பான். என் அம்மாவும் அவனத்தான் தன்னோட முதல் பிள்ளைன்னு சொல்லுவாங்க. ” என்றிட… ” இளவேனி அத்தை ரொம்ப அன்பானவங்ன்னு பரத் சொல்லி இருக்காரு,” என்றாள் அனுரா.

மகிழ்வின் சாயலாய் விரிந்த இதழ் மீண்டும் சோகமாய் இறுகிக் கொள்ள, ” என் அம்மாவைப் பத்தி சொன்னவன்  அவன் முதுகுல இருக்கிற  தழும்புக்கான காரணத்தை சொன்னானா?” என்றான் காவியன்.

“சூடு பட்ட தழும்பு இருக்குன்னு தெரியும், ஆனா அதுக்கான காரணம் என்னன்னு இதுவரைக்கும் சொன்னதில்லையே!” என்று  குழப்பமாய் பதில் தந்தாள் அனுரா.

“அடிக்கடி சித்தி சித்தின்னு அவகிட்டையே ஏண்டா ஓடுற, உனக்கு சித்தி பைத்தியம் பிடிச்சிருக்கு அதை எப்படி தெளிய வைக்கணும்னு எனக்கு தெரியும்னு தோசை கரண்டியோட பின்பக்கத்தை நல்லா பழுக்க காய வைச்சு பரத் முதுகுல சூடு வச்சாங்க.  அந்த இன்சிடென்ட்க்கு அப்புறம் பரத்தே அம்மாகிட்ட பேச வந்தாலும் அம்மா அவன்கிட்ட இருந்து விலகிப் போக ஆரம்பிச்சாங்க. தனக்கு பிடிக்காததை செஞ்சதால பெத்த பிள்ளைக்கே பாசத்தோட சூடு வச்ச ரொம்ப நல்லவங்க தான் உன் அத்தை. அவங்களுக்கு ஒன்னு நடக்கணும்னா அதை நடத்திக்க என்ன வேணும்னாலும் செய்வாங்க..” என்றவன் அதற்கு மேலும் விவாதம் புரியாமல் அங்கிருந்து விலகி நடந்தான்.

காவியன் வார்த்தைகள் அனுராவின் மனதிற்குள் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது. காவியன் சொன்னதில் உண்மை இருக்கும் எனில் ஜோசியர் குறிப்பிட்ட ஐந்து வருடம் வரை தனக்கு இதே நிலைதான் நேரும் என்று எண்ணி கலங்கிப் போனவள், முதலில் அவன் வார்த்தை உண்மையா என அறிந்து கொள்ள தன் மாமியாரை நாடி சென்றாள்.

தலை சுற்றுவது போன்றதொரு பாவனையுடன் மெதுவாய் நடந்து வந்தவளை அலட்சியமாய் எதிர்கொண்ட கோமதி, “என்ன வழக்கம்போல இந்த மாசமும் நாள் தள்ளி போயிடுச்சா.. ஏண்டி கிறுக்கச்சி  ஜோசியர் சொன்ன மாதிரி ஒரு அஞ்சு வருஷத்துக்கு பிள்ளை பெத்துக்கறத தள்ளி போட்டா குறைஞ்சா போயிடுவ..  உனக்கு என்ன வயசா போயிடுச்சு நல்லா புருஷன் கூட  சந்தோசமா பீச் பார்க் சினிமா தியேட்டர்ன்னு சுத்திட்டு அதுக்கப்புறம் பிள்ளை பெத்துக்க வேண்டியது தானே!, குழந்தை பிறந்ததுக்கு நினைச்சாலும் எங்கயும் நகர முடியாது. ” என்றார் கோமதி.

“என்னை என்ன செய்ய சொல்றீங்க அத்தை உங்க பையனுக்கு குழந்தை பைத்தியம் பிடிச்சிருக்கு, நான் இப்போதைக்கு வேணான்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாரு..” என்று அனுரா  கூறிட… “அவனுக்கு என்ன ஆம்பள அப்படித்தான் சொல்லுவான், நீதான் அவனுக்கு சொல்லி புரிய வைக்கணும்,  அத விட்டுட்டு அவன் இஷ்டத்துக்கு எல்லாம் வளைஞ்சு கொடுத்துட்டு ஒவ்வொரு தடவையும்    தல பாரத்தோட வந்து என் தலையில பாவத்தை ஏத்துற..” என்று.. கடுகடுத்துக் கொண்டார் கோமதி.

“எத பாவம்னு சொல்றீங்க!” என்று குழப்பத்துடன் அனுரா வினவ… “அது அது வந்து உன்னைத்தான்  சொல்றேன். உன்னைப்  பாத்தாலும் பாவமா தான் இருக்கு,  பரத் கிட்ட உன்னால சொல்ல முடியலன்னா சொல்லு நான் பேசுகிறேன். ஐஞ்சு வருஷம் கழிச்சு அழகான ஆண் வாரிச பெத்துக்கொடு அது போதும் எனக்கு” என்று சமாளித்தார் கோமதி

“ஏன் அத்தை ஊர் உலகத்துல எல்லா மாமியாரும் எப்ப பிள்ளை பெத்து கொடுப்பன்னு மருமகள போட்டு டார்ச்சர் பண்றாங்க.  நீங்க என்னடான்னா குழந்தை வேணும்னு ஆசைப்படுற என்கிட்ட கொஞ்ச நாள் கழிச்சு பெத்துக்க சொல்லி  கேட்கிறீங்க இது ரொம்ப விசித்திரமா இருக்கு அத்தை.. ” என்று குறுகுறுப்பாய்   வினவினாள் அனுரா.

“இதுல என்ன விசித்திரம் இருக்கு,  அடிக்கடி மருந்து எடுத்துக்கிட்டா… மலட்டுத் தன்மை வந்தாலும் வந்துடும்.. ” என்றார் கோமதி.

“எந்த மருந்தை பத்தி சொல்றீங்க?, “என்று கேள்வியுடன் அனுரா நிறுத்த.. “அதான் ஹாஸ்பிடல் ஒவ்வொரு தடவையும் உன் கர்ப்பப்பை வீக்கா இருக்குன்னு சொல்லி கண்ட மாத்திரை மருந்த குடுக்கறாங்களே அத பத்தி தான் சொல்றேன்.” என்று உடனே பதில் தந்தார் கோமதி.

“ஓ!… “என்று கோமதியின் வார்த்தையை ஏற்றுக் கொண்டது  போல் அனுரா தலையசைக்க, “சரி சரி வெளியவே எவ்வளவு நேரம் நின்னுட்டு  இருப்ப,  வா கொஞ்ச நேரம் ரூமுக்குள்ள வந்து உட்காரு,  நான் உனக்கு பால் கலந்து எடுத்துட்டு வரேன்” என்று அனுராவை தன் அறையில் அமரச் செய்துவிட்டு  உடை அலமாரியில் இருந்து எதையோ ரகசியமாய் எடுத்து புடவையில் மறைத்துக் கொண்ட கோமதி சமையலறை நோக்கி சென்றார்.

தன் அத்தையிடம் ஏதோ வேறுபாட்டை உணர்ந்த அனுரா அவர் அறியாமல் மெதுவாய் அவரைப் பின் தொடர்ந்து சென்றாள்.

சமையலறைக்குள் நுழைந்த கோமதி..  புடவையில் மறைத்துக் கொண்டு  வந்த சிறு வேர் ஒன்றை உள்ளங்கையில் வைத்து கசக்கிவிட்டு அனுராவிற்காக கலந்து வைத்த பாலில்  கலக்கினார்.

கோமதி கவனிக்கும் முன் தன் பழைய இடத்திற்கு வந்து சேர்ந்த அனுரா, எதுவும் அறியாதது போல் அமைதியாய் அமர்ந்து கொள்ள.. மருமகளிடம் வந்த கோமதி தான் கலந்து கொண்டு வந்த பாலை அவள் கையில் கொடுத்துவிட்டு, “கண்ண மூடிட்டு ஒரு சொட்டு கூட மிச்சம் வைக்காம மருந்து மாதிரி குடிச்சிடு.”என்று உத்தரவு பிறப்பித்தார்.

“ஏன் அத்தை கொஞ்சம் மிச்சம் வச்சாலும், கரு கலையாம போயிடுமோ?” என்று வெறுப்பு நிறைந்த குரலில் வினவினாள் அனுரா.

“என்ன சொல்ற?” என்று  ஒன்றும் அறியாதது போல்  கோமதி வினவ… ” நீங்க  பால்ல எதையோ கலந்தீங்க .  ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காதீங்க… இன்னும் எத்தனை குழந்தையை  கொல்லுவீங்க அத்தை, இது உங்க பையனோட குழந்தை,   இதைக் கலைக்க உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு!” என்று வெறுப்பும் விரத்தியுமாய்  வினவினாள் அனுரா.

“பேரனா இருந்தா சந்தோஷமா பெத்துக்கோன்னு சொல்லிருப்பேன் பேத்தியா இருந்தா!,  ” என்று  என்னவென்று  கணிக்க முடியாத குரலில்  வினவினார் கோமதி.

”  அப்போ நீங்க தான் ஆண் வாரிசுக்காக  கருவை  கலைச்சிட்டு இருக்கீங்கன்னு ஒத்துக்கிறீங்க அப்படித்தானே!” என்று அதுவரை அடக்கி வைத்திருந்த கோபத்தை வெளிப்படுத்தினாள்   அனுரா.

“ஆமா இத்தனை நாளா உனக்கு குழந்தை இல்லாம போனதுக்கு நான்தான் காரணம்.  இப்ப அதுக்கு என்னங்கற?”என்று இதற்கு மேலும் எதையும் மறைக்க முடியாது என்ற முடிவுடன் உண்மையை ஒப்புக் கொண்டார் கோமதி.

“இத சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்ல.. ஆண் குழந்தை தான் வேணும்னு எவ்வளவு கேவலமான வேலை பார்த்து இருக்கீங்க!, அப்போ அஞ்சு வருஷம் கழிச்சு தான் குழந்தை கிடைக்கும்னு ஜோசியர் சொன்னார்னு  சொன்னது எல்லாம் பொய்.. உங்க சுயநலத்துக்காக என் குழந்தைகளை கொன்னுட்டு  இருக்கீங்க .  “என்று கோபம் மிகுதியில்  வினவினாள் அனுரா.

” உங்களுக்கு அஞ்சு வருஷம் கழிச்சு தான் ஆண் வாரிசுக்கான யோகம் இருக்கு. அதுக்கு நடுவுல எத்தனை குழந்தை பிறந்தாலும் அது பொட்டப் பிள்ளைகளா தான் இருக்கும்னு ஜோசியர் சொன்னாரு. உண்மையான காரணம் தெரிஞ்சா நீ பிள்ளையை கலைக்க விடமாட்ட அதான் உண்மையை சொல்லாம  உன் வயித்துல உருவான கருவை எல்லாம் கலைச்சு விட்டேன். “என்று  தன் செயல்பாடுகளுக்கான காரணத்தை அறிவித்தார் கோமதி.

”  பரத்துக்கு பெண் குழந்தை தான் பிடிக்கும்… அவர் விருப்பம் உங்களுக்கு முக்கியம் இல்லையா?” என்று ஆற்றாமையுடன் அனுரா வினவிட…

” அவனுக்கு மட்டும் இல்ல, அவன் அப்பா, அப்பாவுக்கும் அப்பா எல்லாருக்கும் பொண் குழந்தைகள தான் பிடிக்கும், அதனால தான் நான்  தடுத்தும் கேட்காம உன்னை இங்கக் கூட்டிட்டு வந்து தன் சொந்த பொண்ணு மாதிரி வளர்த்தாங்க..   உங்க கல்யாண விஷயத்துல தான் நான் ஆசைப்பட்டது எதுவுமே நடக்காம போச்சு,   பேரக் குழந்தையாவது என் இஷ்டப்படி பெறக்கட்டும்.” என்றார் கோமதி.

” நான் ஒன்னும்  நானா ஆசைப்பட்டு இங்க வந்து வளரல  அத்தை, மாமாவும் தாத்தாவும் தான் பாட்டி இறந்ததுக்கு அப்புறம்  வீடே  கலை இழந்து போச்சுன்னு, மூணாவது நாள் காரியத்துக்கு வந்தவங்க கிட்ட பேசி பொண்ணு இங்கேயே வளரட்டும்னு  கெஞ்சிக் கேட்டுக்கிட்டாங்க, “என்று ரோஷத்துடன் அனுரா பதில் தர, “ஆமா அவங்க தான் கேட்டாங்க யார் இல்லைன்னு சொன்னா, ஆனா உன் அப்பாவை தனியா கூட்டிட்டு போய் இவங்கள நம்பி பொம்பள பிள்ளையை விடாதன்னு நானும் பொறுமையா எடுத்து சொன்னேனே, நல்லது சொன்ன என் பேச்சைக் கேட்காம   வளர்க்க வசதி இல்லன்னு  உன்னை இங்க கொண்டு வந்து தள்ளிட்டு போய்ட்டாரு. ” என்று குறைபட்டார் கோமதி.

” அப்பாவ பத்தி தப்பா பேசாதீங்க”என்று கலங்கிய குரலில் பேசினாள் அனுரா.

“உனக்கு அப்பாவாகுறதுக்கு முன்னாடியே அவர் எனக்கு அண்ணன், அவரை பத்தி பேச எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. நான் இப்போ என்ன தப்பா சொல்லிட்டேன்னு நீலிக் கண்ணீர் விடுற, உன்னை  நல்ல ஸ்கூலுக்கு அனுப்பி படிக்க வைக்கிற அளவுக்கு உன் அப்பா கிட்ட வசதி இருந்துச்சா, இல்லேல, அதனால தானே இவங்க உன்னை  வளத்துக்குறோம்னு சொன்னதும்  மறுத்து பேசாம தலையாட்டிட்டு உன்னை எங்க தலையில கட்டிட்டு போயிட்டாரு.”என்று நாக்கில் நரம்பில்லாமல் தன் சொந்த அண்ணனைப் பற்றியே தவறாக பேசினார் கோமதி.

“எங்க அப்பாவும் ஒரு காலத்துல நல்லா வாழ்ந்தவர் தான் அத்தை..” என்று அனுரா துவங்க.. “நல்லா வாழ்ந்தவர் தான் யாரு இல்லன்னு சொன்னா, நான் போதும் போதும்னு சொல்ற அளவுக்கு எனக்கு சீர் செனத்தி செஞ்சவர் தான், அதெல்லாம் உன் அண்ணன் உயிரோட இருந்த வரைக்கும். என்னைக்கு வீட்டுக்கு தல பிள்ளையா பிறந்த ஆண் வாரிசு அல்பாய்ஸ்ல போச்சோ அன்னைக்கே அவர்கிட்ட இருந்த எல்லா அதிர்ஷ்டமும் போயிடுச்சு. அடுத்து நீ பொறந்த, பொட்ட பிள்ளை பிறந்து போன அதிர்ஷ்டத்தை எல்லாம் திருப்பக் கொண்டு வருவன்னு பார்த்தா… இருந்த கொஞ்ச நஞ்சத்தையும் வாரிசு உருட்டிடுச்சு உன்  பொல்லாத ராசி. இப்படிப்பட்ட ராசிக்காரிய வீட்டுக்குள்ள விடக்கூடாதுன்னு தான்.. உன்னை வளக்குறேன்னு சொன்னப்பவும் தடுத்தேன்,  என் பிள்ளைக்கு கட்டி வைக்கணும்னு ஆசைப்படும்போதும் தடுத்தேன். யாரு என் பேச்சைக் கேட்டா.. இப்ப பாரு எங்க அண்ணன் வீட்டில இருந்த துரதிர்ஷ்டம் இப்ப என் வீட்டுக்கு வந்ததும் இல்லாம என்னையே கேள்வி கேட்டுட்டு நிக்குது…  எல்லாம் என் நேரம் என் பையனுக்கு வசதியான வீட்ல இருந்தெல்லாம் பொண்ணு தர ரெடியா இருந்தாங்க.  ஆனா இந்த முட்டாள் உன்னைத் தான் கட்டிப்பேன்னு ஒத்த கால்ல நின்னான், வீட்டு பெரியவரும் மறுப்பு சொல்லாம  உன்னை என் மகன் தலையில கட்டிட்டாரு  ” என்று  சுயரூபத்தையும் வெளிப்படுத்தினார் கோமதி.

” என்னவோ பாவம் பார்த்து எனக்கு வாழ்க்கை கொடுத்த மாதிரி பேசுறீங்க.. நீங்க ஒன்னும் உங்க பையனுக்கு என்னை சும்மா கட்டி வைக்கவில்லையே, காவியன் அவனுக்கு சேர வேண்டிய சொத்துல பாதிய என் பேர்ல எழுதி வச்சதுக்கு அப்புறம் தான எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டீங்க, “என்றாள் அனுரா.

“ஆமா சொத்துக்காக தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்.  நான் ஒன்னும் அதை இல்லைன்னு சொல்லலையே!, இப்பவும் சொல்றேன் எனக்கு நீ இந்த வீட்டுக்கு மருமகளா வந்தது புடிக்கல, இருந்தாலும் நான் சகிச்சுட்டு போகல,   அதே  மாதிரி நீயும் இந்த  அத்தைகாக ஆம்பளப் பிள்ளையை  பெத்துக் குடு. ” என்று வெளிப்படையாகவே உத்தரவு பிறப்பித்தார் கோமதி.

” முடியாதுன்னு சொன்னா என்ன செய்வீங்க!” என்று நிமிர்வுடன் வினவினாள் அனுரா.

“கருவை கலைக்க மருந்து கலக்க தெரிஞ்ச எனக்கு அதேப் பால்ல விஷத்தை கலக்க எவ்ளோ நேரம் ஆகும்னு  நினைக்கிற,போனாப் போகுது என் அண்ணன் மகளா போயிட்ட அதனால தான் பொறுமையா பேசிட்டு இருக்கேன்,  இதே வேற  வீட்டுப் பொண்ணா இருந்திருந்தா நடக்கிறதே வேற. ” என்று அதிரடியாக மிரட்டல் விடுத்தார் கோமதி.

” என்ன அத்தை  மிரட்டுறீங்களா?, நீங்க செஞ்ச காரியத்தை உங்கப் பையன் கிட்ட சொன்னா என்ன நடக்கும்னு கொஞ்சம்  யோசிச்சு பேசுங்க…” என்று அனுரா பதிலுக்கு மிரட்டல் விடுக்க, ” நீ போய் சொன்னதும் அப்படியே என் பையன்  நம்பிடுவான்னு நினைக்கிறாயா?, முட்டாள் எந்தப் பிள்ளையும் பெத்த அம்மாவை சந்தேகப்படமாட்டான். அதுவும் என் மகன் சுத்தமா உன்னை  நம்ப மாட்டான். வேணும்னா    டிரை பண்ணிப் பாரு. அப்புறம் இன்னொரு விஷயம் நான் இப்போ உனக்கு குடுக்குற நாட்டு மருந்து ரொம்ப பவர்ஃபுல்லானது இத ரொம்ப எடுத்துக்கிட்டா மலட்டு தன்மை கூட வந்துடும், அதனால அடிக்கடி என்னை பிள்ளையை கொல்ற பாவத்தை செய்ய வைக்காமல் கொஞ்சம் சூதானமா இரு” என்று என்று எந்தவித அச்சமும் இல்லாமல் பேசினார் கோமதி.

இதற்கு மேல் அவரிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று புரிந்து கொண்ட அனுரா நேராக தனது அறைக்கு வந்து கணவனின் வருகைக்காக காத்திருக்க தொடங்கினாள்.

வீடு திரும்பிய பரத்  நேராக அனுரா அருகில் வந்து அவள் பேசுவதற்கு முன்பாகவே சற்று கோபத்துடன், “உனக்கு என்ன பிரச்சனை அனு , ஏன் தேவையில்லாம அம்மா கூட சண்டை போட்டுட்டு இருக்க, ஐ திங்க்  நீ  டிப்ரசன்ல இருக்கன்னு நினைக்கிறேன்… அதனால தான் பாக்குறது எல்லாம் உனக்கு தப்பா தெரியுது” என்றான்.

“என்னங்க நான் சொல்றத நம்புங்க ஆண் வாரிசுக்காக உங்க  அம்மா  பால்ல எதையோ கலந்து கொடுத்து நம்ம குழந்தையை கொல்லுறாங்க…”என்று அனுரா  நடந்த விவரம் அனைத்தையும் கூறி முடித்து ஆறுதலாய் கணவன் தோளில் சாய முற்பட… அருவருப்பான முகபாவனையுடன் இரண்டடி தள்ளி நின்றவன், “என் அம்மா எனக்கு பிள்ளை பிறக்க கூடாதுன்னு சதி பண்றாங்கன்னு சொல்ற அப்படித்தானே..” என்று கோபமான குரலில்  வினவினான் பரத்.

“அப்ப நீங்க என்னை நம்பலையா!” என்று விரக்தியான முக பாவனையுடன் விலகி  நின்றாள் அனுரா

“பாடி ஹீட் அதிகமாக இருந்தா குழந்தை தங்காதுன்னு யாரோ சொல்லி இருக்காங்க போல  அதனால தான்  பால்ல நன்னாரி வேரை கலந்து உனக்கு குடிக்க கொடுத்திருக்காங்க… அத போய் தப்பா புரிஞ்சுகிட்டு என்னென்னமோ உளறிட்டு இருக்க,  உனக்கு அறிவு இருக்கா இல்லையா!,     உனக்கும் காவியன் மாதிரி கிரி அங்கிள் கிட்ட சொல்லி சைக்காடிஸ்ட் ட்ரீட்மென்ட் கொடுக்கணும் போல.     ” என்றிட, தனக்கு முன்பாகவே தன் அத்தை அனைத்தையும் மாற்றி ஒப்பித்து விட்டார் என்பதை புரிந்து கொண்ட அனுரா..  ” உங்க அம்மாகிட்ட இருக்கிற தப்பை சுட்டி காட்டுனா உடனே எங்களுக்கு பைத்தியக்கார பட்டம் கட்டிடுவாங்க அப்படித்தானே, இப்படித்தான் நல்லா இருக்குற காவியன  பைத்தியம்னு சொல்லி  ஊர் உலகத்தை நம்ப வச்சுட்டு இருக்காங்க, அதே மாதிரி எனக்கும் பைத்தியக்கார பட்டம் கட்டி ஒரு மூலையில் உட்கார வச்சுட்டு அவங்க ஆசைப்பட்ட மாதிரி பணக்கார வீட்டு பொண்ண உங்களுக்கு இரண்டாம் தாரமா கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறாங்க  அது உங்களுக்கு புரியலையா!” என்று வெறுப்புடன் வினவினாள் அனுரா.

“காவியனும் நீயும்  ஒன்னா, அம்மாவுக்கு சித்திய பிடிக்காது அந்த கோபத்தை காவியன் மேல காட்டுறாங்க, ஆனா நீ அப்படியா நீ அவங்க சொந்த அண்ணன் மக… உனக்கு எப்படி அவங்க கெடுதல் நினைப்பாங்க” என்று தன் அன்னைக்காக பரிந்து பேசினான் பரத்.

” நீங்க சொன்ன மாதிரி சொந்த அண்ணன் மகங்கிற பாசம் இருந்தா காவியனோட பாதி சொத்தை எழுதி வாங்காமலேயே நம்ம கல்யாணத்துக்கு சம்மதித்து இருக்கலாம்ல, உங்க அம்மாவுக்கு பந்த பாசத்தை விட பணத்து மேல தான் ஆசை அதிகம்.  சொத்துக்காக  சொந்தப் பையன் உங்கள கூட கொல்ல தயங்க மாட்டாங்க உங்க அம்மா.” என்று வெடுக்கென்று  கூறினாள் அனுரா.

” பைத்தியம் மாதிரி உளறாதடி  ” என்று பரத் குரலை உயர்த்த.. “பாத்தீங்களா நீங்களே உங்க வாயால என்னை பைத்தியம்னு சொல்லிட்டீங்க, இன்னும் கொஞ்ச நாள்ல மத்தவங்களும் அப்படி சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க அப்புறம் உங்க அம்மா நினைச்சது ஈசியா நடந்திடும்..” என்று கணவனின் கோபத்தை பொருட்படுத்தாமல் பேசிக் கொண்டே சென்றாள் அனுரா.

“நீ ரொம்ப டிஸ்டர்பா இருக்க இதுக்கு மேல இத பத்தி ஆர்க்யூ பண்ணுனா நல்லா இருக்காது நீ கொஞ்ச நாளைக்கு உங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வா மைண்ட் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும், அதுக்கப்புறம் நீ பேசுனது தப்புன்னு உனக்கே புரியும்” என்று அனுராவின் சம்மதத்தை கூட  வினவாது அடுத்த சில மணி நேரத்திலேயே அவளை அழைத்துக்கொண்டு கிளம்பினான் பரத்.

மகளின் முக வாட்டத்தை கவனித்த  அனுராவின் பெற்றோர்கள் ஏதோ தவறாக இருப்பதை புரிந்து கொண்டனர்.. மகளிடம் மெதுவாய் பேச்சு கொடுத்து விஷயம் என்னவென்று அறிய முற்பட, அனூராவும் எதையும் மறைக்காமல்… நடந்த விபரங்களை கூறி முடித்தாள்.

“இங்க பாருமா அனு, கோமதிக்கு ஜோசியம் ஜாதகம் இது மேல எல்லாம்  நம்பிக்கை அதிகம்,  என் தங்கச்சி சொன்ன மாதிரி நம்ம குடும்பத்துக்கு ஆண் வாரிசு தான் ராசிங்கிறது நூத்துக்கு  நூறு உண்மை.  உன் அண்ணன் இறந்ததுக்கு அப்புறம் ஒரு பரிகாரம் பண்ணிட்டா அடுத்து பிறக்கிற குழந்தை ஆண் வாரிசா இருக்கும்னு உன் அத்தை எத்தனையோ தடவை எடுத்துச் சொன்னா, உன் அம்மா தான் பரிகாரம் எல்லாம் பண்ண மாட்டேன் பிறக்கிறது எந்த குழந்தையா இருந்தாலும் சந்தோசம் தான்னு சொல்லி உன்னை பெத்துக்கிட்டா , நீ பிறந்த கொஞ்ச நாள்லயே  நம்ம கிட்ட இருந்த சொத்து எல்லாம்  கொஞ்சம் கொஞ்சமா கரைய ஆரம்பிச்சுடுச்சு, தொட்டதெல்லாம் நட்டமாச்சு, தொழில் எல்லாம் முடங்கி போச்சு… வசதியா வாழ்ந்த நாம அடுத்த வேலை சாப்பாட்டுக்கு வக்கில்லாம போனோம். அதனால உன் அத்தை பேச்சை கேட்டு அஞ்சு வருஷம் கழிச்சு குழந்தை பெத்துக்கோ.. அதுதான் உனக்கும் உன் குடும்பத்துக்கும் நல்லது. ” என்று தன் சகோதரிக்காக பரிந்து பேசிய மகளை சமாதானம் செய்துவிட்டு அங்கிருந்து விலகிச் சென்றார் அனுராவின் தந்தை.

“என்னம்மா இவர் இப்படி சொல்லிட்டு போறாரு!” என்று தந்தையின் வார்த்தைகளை ஏற்க முடியாமல் தாயிடம் புலம்பினாள்  அனுரா .

” நீ இங்க வரதுக்கு முன்னாடியே உன் அத்தை  போன் பண்ணி எல்லா விஷயத்தையும் அவங்களுக்கேத்த மாதிரி சொல்லிட்டாங்க அனு.  உன்கிட்ட என்ன நடந்ததுன்னு கேட்டது சும்மா நீ என்ன மன நிலையில இருக்கன்னு தெரிஞ்சுக்கத்தான். “என்றார் அனுராவின் தந்தை.

” ஏன்  அம்மா இந்த ஆம்பளைங்க எல்லாம் ஒரே மாதிரி இருக்காங்க.  அப்பா மாதிரியே தான் பரத்தும்  அத்தைக்கு சப்போர்ட் பண்ணி என்னை பைத்தியம்னு சொல்றான்” என்று விரத்தியுடன் பேசினாள் அனுரா.

“இவங்க இப்படித்தான் அனு, இவங்கள திருத்தவே முடியாது,  நமக்கு நேரம் சரியில்ல அதுக்காக பிறந்த பிள்ளை மேல பழி போடுறது தப்புன்னு நானும் எத்தனையோ தடவை உன் அப்பாவுக்கு புரிய வைக்க முயற்சி பண்ணிட்டேன்,  ஆனா  அவர் என் பேச்சை மதிக்கிறதே இல்ல,  இத்தனை வருஷம் ஆச்சு இன்னும் உன் அத்தையோட முட்டாள்தனமான மூடநம்பிக்கையே கட்டிட்டு அழுகிறாரு. இந்த ஆம்பளைகளுக்காக நாம எல்லாத்தையும் விட்டுட்டு வந்தாலும் இவங்களுக்கு நம்மள விட அவங்க சொந்தக்காரங்க தான் பெருசா தெரியும். ” என்றார் அனுராவின் அன்னை.

”  ஆம்பள புள்ள தான் ராசின்னு இவ்ளோ பேசுறாங்களே!, அத்தை பிறந்ததும் அவங்க வீட்டு ராசி  போயிடுச்சா என்ன?” என்று குதர்க்கமாய் அனுரா கேள்வி எழுப்ப…” நானும் இத பத்தி உங்க அப்பா கிட்ட பேசி இருக்கேன், அதுக்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?, அவங்க வீட்டு அதிர்ஷ்டமா அவர் இருந்ததால அவர் தங்கச்சியோட துரதஷ்டம் வொர்க் அவுட் ஆகாம போயிடுச்சாம் ” என்ற அனுராவின் அன்னை கேலியாய் சிரித்திட..” இப்ப நான் என்னம்மா செய்றது பேசாம காவியன் சொன்ன மாதிரி இங்க இருந்தே பிள்ளையை பெத்துக்கவா!”  என்றாள் அனுரா.

“அந்த தப்பு மட்டும் பண்ணாத அனு.. உன் அப்பா பேசிட்டு போறத பாத்தேல, அவரோட சப்போர்ட் எப்பவும் அவர் தங்கச்சிக்கு தான், ஒருவேளை நீ இங்க இருந்தேனா உன் அப்பாவை வைச்சே  அவங்க நினைச்சத சாதிச்சுப்பாங்க.. “என்றார் அனுராவின் அன்னை.

“இப்போ நான் என்னம்மா பண்றது?” என்று அடுத்து என்ன செய்வது என்றே புரியாத குழப்பத்துடன் வினவினாள் அனுரா.

” உன் அப்பாவுக்கு அவர் தங்கச்சி செய்றது தப்புன்னு தெரிஞ்சே சப்போர்ட் பண்றாரு,  ஆனா மாப்பிள்ளை அப்படி இல்லை, ஒருவேளை அவருக்கு அவங்க அம்மாவோட சுயரூபம் தெரிய வந்தா… அவர் கண்டிப்பா உனக்கு தான் சப்போர்ட் பண்ணுவாரு, அதனால  அவர் கூடவே இருந்து அவங்க அம்மாவோட கெட்ட எண்ணத்தை அவருக்கு புரிய வை, அவர் கொஞ்சம் கொஞ்சமா அவங்க அம்மாவ புரிஞ்சுகிட்டு உன் பேச்சை நம்ப ஆரம்பிக்கும் போது நடந்த உண்மை எல்லாம் எடுத்து சொல்லு, அதுக்கப்புறம் அவரே உனக்கு பக்க பலமா இருந்து உன் பிள்ளையை பாதுகாப்பாரு” என்று ஆலோசனை வழங்கினார் அனுராவின் அன்னை.

அன்னையின் ஆலோசனைப்படி தன் கணவனுக்கு அவன் அன்னையின் சுயரூபத்தை புரிய வைக்க முயற்சி செய்து மூன்று வருடம் கடந்து விட்டது, இன்னும் அவள் எண்ணம் ஈடேறவில்லை, பரத்தும்  தன் அன்னையை விட்டுக் கொடுப்பதாக இல்லை… காவியனுக்கு எதிராக  தன் அன்னை சதி செய்யக்கூடும் என்று  இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாய் நம்ப தொடங்கி இருக்கும்  பரத் என்று தன் அன்னை தனக்கே துரோகம் செய்திருக்கிறார் என்று புரியப் போகிறதோ தெரியவில்லை. அந்த நாளுக்காக தான் அனுராவும்  காத்திருக்கிறாள்.

தன் கடந்த கால கசந்த நினைவுகளிலிருந்து  மீண்ட அனுரா, மீண்டும் நிகழ்கால பிரச்சனை குறித்தும் தன் மாமியாரின் சதி வேலையை எவ்வாறு முறியடிப்பது  என்றும் தனக்குள்ளேயே ஆலோசிக்கத்  துவங்கினாள்.

Advertisement