Advertisement

36…

நம் உணர்வுகளை
புரிந்து கொள்ளும் போது..
உறவுகள் சுகமாகிறது..
உணர்வுகள் உதாசீனப்படுத்தப்படும் போது அதே உறவுகள்
சுமையாகிப் போகிறது..

“ என்ன நினைச்சுட்டு தாத்தா இப்படி ஒரு முடிவு எடுத்தாரு. கேட்டா காவியனுக்காகன்னு காரணம் வேற., “என்று தன் விரக்தியை மனைவியிடம் பகிர்ந்து கொண்டிருந்தான் பரத்

“தாத்தா என்ன நினைச்சு செய்றாருன்னு தெரியல. ஆனா அவர இப்படி செய்ய வச்ச உங்க அம்மா ஏதோ திட்டத்தோட தான் இதெல்லாம் செஞ்சிட்டு இருக்காங்க “என்றாள் அனுரா.
“பழையபடி ஆரம்பிச்சுட்டியா! இந்த வீட்ல என்ன நடந்தாலும் அதுக்கு காரணம் என் அம்மா தானா!, இன்னைக்கு அப்பா ஒரு வார்த்தை சொன்னதும் பிரச்சனையை பெருசாக்காம அமைதியா நின்னாங்க பார்த்தேல!, நான் ஒத்துக்கிறேன் என் அம்மா ரொம்ப நல்லவங்க இல்ல தான் அதுக்காக எல்லாத்துக்கும் அவங்களையே குறை சொல்றது நல்லா இல்ல அனு. “என்றான் பரத்.

“நான் அவங்கள குறை சொல்லணும்னு சொல்லல, அவங்க கிட்ட இருக்கிற குறையை தான் சொல்றேன். தனக்கு ஆதாயம் இல்லைன்னா ஒரு துரும்பக் கூட அசைக்க மாட்டாங்க உங்க அம்மா!, அப்படிப்பட்டவங்க எதுக்கு சம்பந்தமே இல்லாம மதுவோட அத்தை பையனுக்கு சப்போர்ட் பண்ணனும், சரியான ஆதாரம் இல்லனாலும் அவன் தான் மதுவை கடத்த திட்டம் போட்டிருந்தான்னு இங்க இருக்குற எல்லாருக்குமே புரிஞ்சது, அப்படி இருந்தும் அவனை அரெஸ்ட் பண்ண விடாம உங்க அம்மா எதுக்கு தடுத்தாங்க?, பொண்ணு வீட்டுக்காரங்க இங்க இருந்து போறதுக்கு முன்னாடி மதுவோட பாட்டியையும் அத்தையையும் தனியா மீட் பண்ணி பேசிட்டு இருந்தாங்களே அப்படி இவங்களுக்குள்ள பேச என்ன இருக்கு!, சரி இதெல்லாம் கூட பொண்ணு வீட்டுக்காரங்க மேல இரக்கப்பட்டு உங்க அம்மா செஞ்சாங்கன்னு வச்சுக்கலாம், சரியா கல்யாணம் முடிஞ்சதும், காவியனோட பிரச்சனை எப்படி பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு தெரிஞ்சது, அதுவும் யாரு கல்யாணத்தை நிறுத்தணும்னு துடிச்சிட்டு இருந்தாங்களோ அவங்களே நேரடியா வந்து பிரச்சனையை பெருசாக்குறாங்க, இந்த அளவுக்கு தைரியமா பேசணும்னா அப்ப அவங்க கைல ஏதோ ஒரு ஸ்ட்ராங் எவிடென்ஸ் இருக்குனு தானே அர்த்தம். காவியனோட வீடியோவைக் காட்டி தான் பிரச்சனைய ஆரம்பிச்சதா மதுவோட அம்மா சொன்னாங்க, காவியன் வீடியோ எப்படி அவங்க கைக்கு போயிருக்கும், எனக்கு என்னமோ உங்க அம்மா தான் எல்லாத்துக்கும் பிளான் போட்டு கொடுத்திருப்பாங்கன்னு தோணுது.“என்று மாமியார் நடவடிக்கையில் உண்டான மாற்றத்தை சரியாக கனித்துக் கூறினாள் அனுரா.

“இது எல்லாமே உன்னோட கெஸ்ஸிங் மட்டும் தான், தேவை இல்லாம யோசிக்கிறதை விட்டுட்டு மது பேரன்ட்ஸ் இங்க ஸ்டே பண்றதுக்கு வேண்டிய அரேஞ்ச்மெண்ட்ஸ் வேலையை கவனி! ”என்று பரத் கூறிட, “உங்க அம்மாவை பத்தி பேசவும் உடனே பேச்ச மாத்துறீங்க!, “என்று கோபமாய் இடையில் கை வைத்து முறைத்தபடி வினாவினாள் அனுரா.

“அப்படி எல்லாம் இல்ல என் செல்ல பொண்டாட்டி.. “என்று கொஞ்சியபடி மெல்ல அவளை நெருங்கியவன்.. “கேஸ் விஷயமா இன்னும் கொஞ்சம் வேலை பாக்கி இருக்கு, அதையெல்லாம் முடிச்சிட்டு வரேன், அதுக்கப்புறம் நாம நிதானமா இத பத்தி டிஸ்கஸ் பண்ணலாம் ஓகேவா.., “என்று கேட்டுக் கொண்டே செல்லமாய் அவள் நெற்றி முட்டினான் பரத்.

“ நமக்கு இருக்கிற நிதானம் உங்க அம்மாவுக்கு இருக்காது, என்ன செய்யப் போறாங்களோன்னு நாம யோசிச்சிட்டு இருக்கிற இதே நேரத்துல மது காவியனை பிரிக்கிற வேலையை ஆரம்பிச்சிருப்பாங்க அவங்க.“என்று அனுரா உறுதியாய் கூறிட…” வர வர நீ என் அம்மாவ சீரியல் வில்லி மாதிரி போர்ட்ரேட் பண்ணுற.. ” என்று வருத்தத்துடன் கூறினான் பரத்.

“ சீரியல் வில்லிங்க எல்லாம் உங்க அம்மா கிட்ட பிச்ச வாங்கணும் அந்த அளவுக்கு டெரர் பீஸ் உங்க அம்மா.. “ என்று அனுரா பதில் தர,” ஆரம்பிச்சிட்டியா!, உனக்கும் என் அம்மாவுக்கும் அப்படி என்னதான் பிரச்சனை, எப்போ பாரு அவங்களக் குறை சொல்லிட்டே இருக்க!, உங்களுக்கு நடுவுல ஏதோ ஒரு கோல்ட் வார் போயிட்டு இருக்குன்னு புரியுது, என்கிட்ட இருந்து எதையாவது மறைக்கிறியா அனு “ என்று சந்தேகப் பார்வையுடன் வினவினான் பரத்.

“ இல்லையே!, நான் எதையும் மறைக்கலையே!, “ என்று பதட்டத்துடன் பதில் தந்தாள் அனு.

“ என்ன கேட்டுட்டேன்னு இப்போ இவ்வளவு டென்ஷன் ஆகுற!, கண்டதையும் யோசிச்சு உடம்ப கெடுத்துக்காம நீ ரிலாக்ஸா இரு. “ என்றான் பரத்.

“ என்னால எப்படி ரிலாக்ஸா இருக்க முடியும் பரத். காவியன் நமக்கு செஞ்ச உதவி மறந்திடுச்சா!, நாம இப்ப வாழ்ந்துட்டு இருக்க வாழ்க்கையே அவனால தான் கிடைச்சது. நீங்க என்ன சொன்னாலும் சரி என்னால ஒதுங்கி இருக்க முடியாது” என்று அனுரா பிடிவாதம் பிடிக்க, “ இங்க யாரும் எதையும் மறக்கல அனு, காவியன் மேல எனக்கும் அக்கறை இருக்கு. சரி நீ ஒதுங்கி இருக்க வேண்டாம், நீ என் சரிபாதி இல்லையா, இனி நீ செய்யுற சதியில என் பங்கு பாதி இருக்கும் போதுமா!” என்று கேலி செய்தபடி சம்மதித்தான் பரத்.

“என்னது சதியா! நல்லது செய்ய திட்டம் போடுறத சதின்னு சொன்னா, உங்க அம்மா செய்யுற வேலைக்கு என்னப் பேர் வைக்கிறது, “ என்று கோபம் கொண்டாள் அனுரா.

“ அட .. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் அனு, “ என்று மீண்டும் சமாதானம் செய்தான் பரத்.

“ உங்களுக்கு இன்னும் சீரியஸ்னஸ் புரியல பரத், “ என்று அனுரா கூறிட .. அவளைத் தன் புறமாய் இழுத்து தோளோடு சேர்த்து அணைத்துப் பிடித்துக் கொண்டவன், “ நீ என் தம்பிக்காக இவ்வளவு யோசிக்கும் போது, நான் யோசிக்காம இருப்பேனா அனு. அம்மா விஷயத்துல எனக்கு என்ன நாலேஜ் இருக்குனு நீ நினைக்கிறாயோ அதைவிட நிறைய விஷயம் என்னால புரிஞ்சுக்க முடியும். அம்மாங்கிற ஒரே காரணத்துக்காக தான் நிறைய விஷயத்தை சகிச்சிட்டு போறேன். நீ என்ன செய்ய நினைக்கிறியோ அதை செய் உனக்கு சப்போர்ட்டா நான் இருக்கேன். “என்று உறுதியளித்தான் பரத்.

” அப்படி உங்க அம்மாவைப் பத்தி என்ன ரகசியம் உங்களுக்குத் தெரியும்” என்று ஆர்வத்துடன் வினவினாள் அனுரா.

ஒரு நொடி தயங்கியவன், பின் நீண்ட நெடு மூச்சை வெளியேற்றி, ” பொதுவா புதுசா கல்யாணம் முடிஞ்சு வரப் பொண்ணுகள அக்சப்ட் பண்ண முடியாம மாமியார் தான் டார்ச்சர் பண்ணுவாங்க, ஆனா சித்திக்கு நடந்ததே வேற ” என்று பரத் நிறுத்த, ” ஒரகத்தி கொடுமை” என்றாள் அனுரா.

ஆமாம் என்பது போல் மெதுவாய் தலையசைத்தவன், “ஆஸ்ரமத்துல சொந்த பந்தம் இல்லாம வளர்ந்ததாலோ என்னவோ சித்தி இங்க வந்து கொஞ்ச நாளிலேயே எல்லார்கிட்டயும் ஈசியா அட்டாச் ஆயிட்டாங்க, அதுவே எங்க அம்மா அவங்களை வெறுக்க காரணமா மாறிடுச்சு, அந்த வெறுப்பை கொஞ்சம் கொஞ்சமா சித்திக்கிட்ட காட்ட ஆரம்பிச்சாங்க, அம்மாவோட கோபத்தை தாங்க முடியாம சித்தி பல நாள் தனியா அழுது இருக்காங்க, அப்போ எனக்கு விவரம் தெரியாத வயசு, அவங்க அனுபவிச்ச வேதனை என்னன்னு புரியலனாலும் அவங்க கண்ணீருக்கு காரணம் என் அம்மான்னு மட்டும் புரிஞ்சது. ஒரு நாள் சித்தி மாடி படியில் இருந்து தவறி கீழே விழுந்துட்டாங்க, அப்போ அவங்க நாலு மாசக் குழந்தை கருவில சுமந்துட்டு இருந்தாங்க, அந்த விபரீதத்துக்கு அப்புறம் அவங்க வயித்துல இருந்த குழந்தை கலைஞ்சதும் இல்லாம இனி குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லைனு சொல்லிட்டாங்க..” என்று பரத் தவிப்புடன் நிறுத்த.. ” அதுக்கு காரணம் அத்தையா!” என்று அதிர்ச்சியுடன் வினவினாள் அனுரா.

” ஏய் இப்போ தான் சொன்னேன், என் அம்மாவை சீரியல் வில்லி மாதிரி பாக்காதன்னு, அவங்களுக்கு சித்தியை பிடிக்கலங்கிறது உண்மை தான், அதுக்காக கருவுல இருக்கிற குழந்தையை கொல்லுற அளவுக்கு சைக்கோ இல்ல, சித்தி கீழ விழும் போது அம்மா அவங்கப் பக்கத்துல தான் இருந்தாங்க, ஆனா அவங்களால எதுவும் பண்ண முடியல” என்றான் பரத்.

“இது தான் நீங்க உங்க அம்மாவை புரிஞ்சு வைச்சிருக்கிற லட்சணமா!, நான் அடிச்சு சொல்றேன் அந்த பாவத்தை செஞ்சது உங்க அம்மா தான். ” என்று அத்தையின் குணம் அறிந்தவள் உறுதியாய் கூறினாள்.

“உண்மை என்னனு தெரியாம நீயா கண்டதையும் கதைக் கட்டாத அனு.. “ என்று பரத் குரலை உயர்த்த, “ சரி எனக்கு தான் உண்மை புரியல, அன்னைக்கு நீங்க அங்க தான இருந்தீங்க, என்ன நடந்ததுன்னு நீங்க சொல்லுங்க!” என்றாள் அனுரா.

“ இப்பவும் சொல்றேன் என்ன நடந்ததுன்னு எனக்கும் முழுசா தெரியாது. ஆனா அம்மா மேல தப்பு இல்லைன்னு சித்தி சொன்னாங்க…” என்றான் பரத்.

“குடும்பத்துக்குள்ள பிரச்சனை வரக்கூடாதுன்னு உண்மையை மறைச்சிருப்பாங்களா இருக்கும், நம்ம நாட்டுல பாதி பொண்ணுங்க இப்படித் தான் குடும்பத்துக்காக யோசிச்சு யோசிச்சு பல கொடுமைகள பொருத்துப் போறாங்க.. “என்று விரக்தியும் வெறுப்புமாய் கூறினாள் அனுரா.

மனைவியின் முகத்தில் படிந்த வெறுப்பின் காரணத்தை தவறாக புரிந்து கொண்டவன், அதை மாற்றும் முயற்சியாய் … தோள்களை வருடிய கைகளை மெதுவாய் இறக்கி இடை வளைத்து இருக்கியவன் “ என் அம்மாவை கவுத்துறதுக்கு பிளான் போடுறதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், நம்ம விஷயம் என்ன ஆச்சு?” என்று காதலாய் பார்த்து கண்ணடித்தான் பரத்.

“இப்போதைக்கு காவியனையும் மதுவையும் சேர்த்து வைக்கிறது மட்டும்தான் நம்ம பிளான். அத மொத கரெக்ட்டா செய்ங்க மத்ததெல்லாம் ஆட்டோமேட்டிக்கா நடக்கும்..” என்று கணவனின் கண்ணம் தட்டி உத்தரவு பிறப்பித்தாள் அனுரா.

“பிடி கொடுக்க மாட்டியே!, உன்னை மாதிரி அழகான அறிவான மினி அனுவை கையில வச்சு கொஞ்சனும்னு எனக்கும் ஆசை இருக்காதா?” என்று தன் ஆசையை தெரிவித்தான் பரத்.

“மினி அனுவா?, தன் குடும்பத்துக்கு ஆண் வாரிசு தான் வேணும்னு உங்க அம்மா என்னென்னமோ வில்லத்தனம் செஞ்சிட்டு இருக்காங்க, அவங்க கிட்ட போய் பெண் குழந்தையை நீட்டினா அவங்க நெஞ்சே வெடிச்சிடும். ” என்று அனுரா கூறிட… குழப்பத்துடன் ஆராயும் பார்வைப் பார்த்தான் பரத்.
கணவனின் குழப்பப் பார்வையில் தன் உளறிய வார்த்தையின் விபரீதத்தை புரிந்து கொண்ட அனுரா..” அது வந்து அத்தை வந்து ஆண் வாரிசு தான் வேணும்னு ஆசைப்படறாங்க அதைத்தான் அப்படி சொன்னேன்!” என்றாள்.

“எந்தக் குழந்தையா இருந்தா என்ன?, பெண் குழந்தையா இருந்தா எனக்கு இன்னும் சந்தோஷமா இருக்கும்“ என்று தன் விருப்பத்தை அறிவித்தான் பரத்.

கணவனின் விருப்பம் என்றும் நிறைவேற வாய்ப்பில்லை என்பது போல் விரக்தியாக புன்னகைத்தவள், “சரி நம்ம விஷயத்தை விடுங்க.. இப்போ மது காவியன் விஷயத்துல அடுத்து என்ன செய்யலாம்னு யோசிங்க, மதுவை எப்போ நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போறதுன்னு தாத்தா கிட்ட பேசி முடிவெடுங்க.. “ என்று எதிர்கால குழந்தையின் மீது இருந்த கணவனின் கவனத்தை திசை திருப்பினாள் அனுரா.

“பாத்தியா குழந்தையை பத்தி பேசவும் நீயும் பேச்சை மாத்துற!” என்று சலித்துக் கொண்டான் பரத்.

“குழந்தையை பத்தி பேச இது சரியான நேரம் இல்ல பரத், இப்போதைக்கு காவியன் லைஃப்ல எந்த பிராப்ளமும் வராம பாத்துக்கணும். என்ன தான் பொண்ணோட அப்பா கிட்ட ஏற்கனவே உண்மையை சொல்லி இருந்தாலும் இதை மது கிட்ட மறைச்சது ரொம்பப் பெரிய தப்பு. கண்டிப்பா மதுவுக்கு காவியன் மேல கோபம் இருக்கும். காவியனுக்கு இப்போ வீட்ல நடந்த பிரச்சனையை பத்தி தெரியணும் அப்பதான் அவனால மதுவை பேஸ் பண்ண முடியும். எதையும் மறைக்காம எல்லாத்தையும் சொல்லிடுங்க” என்றாள் அனுரா.
“ சரிங்க மேடம்.. “ என்று சம்மதித்து விட்டு, தனக்காக ஒதுக்கப்பட்ட வேலைகளை செய்து முடிக்க அங்கிருந்து நகர்ந்தான் பரத்

‘உங்க ஆசை ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே நிறைவேறி இருக்க வேண்டியது பரத், அன்னைக்கு மட்டும் உங்க அம்மா ஏதோ ஒரு ஜோசியர் பேச்சைக் கேட்டு என் வயித்துல இருந்த குழந்தையை கலைக்காம இருந்திருந்தா இந்நேரம் நம்ம குழந்தை உங்க விரல் பிடிச்சு நடந்துட்டு இருக்கும். நீங்க உங்க அம்மாவ ரொம்ப நம்புறீங்க, ஆனா நீங்க நம்புற அளவுக்கு அவங்க நல்லவங்க இல்ல, இத நான் எப்படி உங்களுக்கு புரிய வைப்பேன். ’ என்று விலகி நடந்த கணவனின் முதுகை வெறித்தபடி கலங்கிய விழிகளை துடைக்க மனமின்றி, ஆசை ஆசையாய் தான் கருவில் சுமந்த முதல் குழந்தையை பறிகொடுத்த நாளை எண்ணிப் பார்க்க துவங்கினாள்.

Advertisement