Advertisement

34.. உறவில் விரிசல் நேருமோ!!

காயங்கள்.. கண்ட போதும்…
காதல் மனம்.. உன்னைத் தேடும்…
உன் அருகினில்.. அன்பினில்
நான் கொண்ட காயங்கள் மாறும்…

மணப்பெண்ணின் உறவினர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பங்களாவிற்கு பிரச்சனையை பெரிதாக்க கூடிய சில முக்கிய உறவினர்களை அழைத்து வந்த வேலம்மாள், தன் மகன் குடும்பத்தையும் அவ்விடத்திற்கு உடனே வரும்படி அழைப்பு விடுத்தார்.

உடனே வரும்படி தனக்கு அழைப்பு விடுத்த வேலம்மாளை எதிர்கொண்ட காசிநாதன், “ சுதன் ஹாஸ்பிடல்ல இருக்குற விஷயம் யாருக்கும் தெரிய வேணாம்னு உங்ககிட்ட சொன்னேனே, அப்புறம் எதுக்கு தேவையில்லாம எல்லாத்தையும் இங்க கூட்டி வச்சிருக்கீங்க, “என்றார்.

மகனின் கேள்விக்கு பதில் கூறாது, மதுரிமாவைக் வாஞ்சையாய் அணைத்துப் பிடித்துக் கொண்டு, ” இப்படி நடக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலையே!, யாருக்கும் தீங்கு நினைக்காத நமக்கு இந்த நிலைமையா?” என்று காலம் காலமாய் அக்கறை கொண்டவர் போல் பேசினார்.

“பாட்டி அண்ணனுக்கு ஒன்னும் இல்ல, ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு டாக்டர் சொல்லிட்டாங்க.. பயப்படாதீங்க!” என்று வந்தவர்களின் எண்ணம் புரியாது கலங்கி நின்றவர்களுக்கு ஆறுதல் கூறினாள் மதுரிமா.

“உன் அண்ணனை பத்தி கவலைப்பட என்ன இருக்கு?, அவன் ஆம்பளப் பிள்ளை எப்படி வேணாலும் பிழைச்சுப்பான், ஆனா நீ அப்படியா?. உன் வாழ்க்கை இப்படி சூனியமா மாறிடுச்சே!, கவலைப் படாத கண்ணம்மா.. உன் பாட்டி இருக்கேன், நீ என்ன முடிவு எடுத்தாலும் நானும் உன் அத்தையும் உனக்கு உறுதுணையா இருப்போம். என் பேரன் மதி உன்னைப் ரொம்ப நல்லாப் பாத்துக்குவான்.” என்று எதிரில் இருந்தவர்களின் முகபாவனையைக் கூட கண்டுகொள்ளாது பேசிக் கொண்டே சென்றார் வேலம்மாள்.

தந்தையைப் பெற்றவர் என்ன பேசுகின்றார் என்று புரியாத குழப்பத்துடன் தன் தாயின் முகத்தை நோக்கினாள் மதுரிமா.

மகளின் பார்வைக்கு பொருள் புரிந்தது போல… “நீங்க ஆள் மாத்தி ஆறுதல் சொல்லிட்டு இருக்கீங்க அத்தை!,” என்றார் கண்மணி.

” அதெல்லாம் எங்க அம்மா சரியா தான் பேசிட்டு இருக்காங்க… வறட்டு கௌரவம் பார்த்து பெத்தப் பொண்ணோட வாழ்க்கையை பாழாக்கிட்டு எங்களுக்கு அறிவுரை சொல்ல வந்துட்டாங்க, ” என்று வெடுக்கென்று பதில் தந்தார் காந்திமதி.

” அண்ணன் ஆஸ்பத்திரில இருக்கும்போது தங்கச்சிக்கு ஆறுதல் சொல்றீங்கன்னு சொன்னேன் இதுல தப்பு என்ன இருக்கு?, இதுக்கு எதுக்கு தேவையில்லாம வறட்டு கவுரவம் அது இதுன்னு வார்த்தை விடுறீங்க?.” என்று கண்மணி பதில் கேள்வி கேட்க..

” பண்றது எல்லாம் பண்ணிட்டு என்ன தப்பு இருக்குனா கேக்குறீங்க?, மதுவுக்கும் என் மகனுக்கும் கல்யாணம் நடந்துடுமோன்னு பயந்துட்டு, என் பையனப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி என் அண்ணன் மனச கலைச்சு, அவச அவசரமா வெளியில மாப்பிள்ளை பார்க்க வச்சிங்களே அது தப்பு இல்லையா?, பார்த்தது தான் பாத்தீங்க!, கொஞ்சம் பொறுமையா நல்ல இடமா பார்த்திருக்கக் கூடாது, வசதி இருக்குன்னு மாப்பிள்ளைய பத்தி கொஞ்சம் கூட விசாரிக்காம.. கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டிங்களே!, நாளப் பின்ன நம்ம வீட்டு பொண்ணு வாழ்க்கையை தொலைச்சிட்டு வாழா வெட்டியா வீட்ல வந்து கிடந்தா யாருக்கு நஷ்டம்?” என்று பேசிக்கொண்டே சென்றார் காந்திமதி.

” கல்யாணம் முடிஞ்சு இன்னும் முழுசா ஒரு நாள் கூட முடியல, அதுக்குள்ள வாழாவெட்டின்னு வாய்க்கு வந்தபடி பேசுறீங்களே உங்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா?, உங்களுக்கு என்னையும் என் பிள்ளைகளையும் பிடிக்காது தான் அதுக்காக இப்படி எல்லாம் சாபம் கொடுக்கிறது கொஞ்சம் கூட சரியில்ல.” என்று தனது பெண் வாழ்க்கை என்னாகுமோ என்ற கலக்கத்துடன் பேசினார் கண்மணி.

“பிறந்ததுல இருந்து பாராட்டி சீராட்டி வளர்த்த என் அண்ணன் மகளுக்கு நானே சாபம் கொடுப்பேனா!, உங்களுக்கு எங்கள பிடிக்காது தான், அதுக்காக இந்த அளவுக்கா மோசமாவா நினைப்பீங்க!, நீங்க எப்படியோ நான் என் அண்ணன் குடும்பத்து மேல என் உசுரையே வச்சிருக்கேன். இப்ப கூட உங்க மேல இருக்கிற அக்கறையில தான் ஆதங்கப்பட்டு பேசிட்டு இருக்கேன். மாப்பிள்ளை வீட்டாளுங்க பணத்தை கணக்குப் போடத் தெரிஞ்ச உங்களுக்கு பையனோட குணத்தை பாக்கணும்னு தெரியாம போச்சே!. குணம் சரியில்லாத பயல கட்டிக்கிட்டா நம்ம பொண்ணு வாழ்க்கை எப்படி சந்தோசமா இருக்கும்!. ” என்று வராத கண்ணீரை வம்படியாய் துடைத்தபடி பேசினார் காந்திமதி.

போலியான கண்ணீருடன் உறவினர்களை ஏய்க்கும் தன் கணவரின் தங்கையை வெறுப்புடன் பார்த்தபடி, “ எங்க மாப்பிள்ளை குணத்துக்கு எந்த குறையும் இல்ல. ” என்று அவசரமாய் அறிவித்தார் கண்மணி.

“பண கணக்கு பாக்குறவங்களுக்கு குறை எங்க கண்ணுக்குத் தெரியப்போகுது” என்று காந்திமதி துவங்க.. தங்கை பேச வரும் விபரம் என்னவென்று ஓரளவு புரிந்து கொண்ட காசிநாதன், “ போதும் காந்தி இதுக்கு மேல எதுவும் பேச வேணாம்” என்று தடுத்தார்.

“இனிமே தான் நிறைய பேச வேண்டியது இருக்கு..” என்று வேலம்மாள் துவங்க, ” எதுவும் பேச வேணாம்னு சொல்றேன்ல, கல்யாணத்துக்கு வந்து பொண்ணு மாப்பிள்ளை மனசார வாழ்த்துனோம்மா ஊர பார்த்து கிளம்பினோமான்னு இல்லாம, எதுக்கு இப்ப தேவை இல்லாம இங்க கூட்டம் கூட்டிட்டு இருக்கீங்க?, நேரத்துக்கு போனா தான் பொழுது சாய்ரதுக்குள்ள ஊருக்கு போய் சேர முடியும். கால காலத்துல கிளம்புங்க.. ” என்று தன் தாய் தங்கையுடன் வந்திருந்த உறவினர்களையும் அங்கிருந்து வெளியேற்ற முயன்றார் காசிநாதன்.

“உனக்கு உதவி பண்ணனும் வந்ததுக்கு நீ தர மரியாதை இது தானா ?” என்று ஒருவர் கோபம் கொள்ள… ” அட கொஞ்சம் பொறுப்பா காசிக்கு இன்னும் உண்மை என்னன்னு முழுசா தெரியாதுல, அதான் அப்படி பேசுது,” என்று கோபம் கொண்டவரை அடக்கி விட்டு, காசிநாதன் புறம் திரும்பி, “ மாப்பிள்ளை வீட்டுக்காரங்க நம்மள நல்லா ஏமாத்திட்டாங்க காசி, நடந்த அநியாயத்துக்கு நியாயம் கேக்காம.. எப்படி இங்க இருந்து கிளம்புறது?. அவங்களையும் இங்க வர சொல்லிட்டு தான் வந்திருக்கோம், வரட்டும் இன்னைக்கே பேசி எல்லாத்தையும் முடிச்சிடுவோம், ” என்றார் மற்றவர்.

“சித்தப்பா நீங்க எதையோ தப்பா புரிஞ்சுட்டு பேசிட்டு இருக்கீங்க, இங்க எங்களுக்கு எந்த அநியாயமும் நடக்கல, இந்தக் கல்யாணம் நல்லபடியா நடந்து முடிஞ்சதுல நாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கோம்.” என்று அவசரமாய் விளக்கம் கொடுத்தார் காசிநாதன்.

” ஏமாத்தி பைத்தியக்காரப் பயல நம்ம தலையில கட்டிட்டாங்கன்னு நாங்களே கொதிச்சுப் போய் வந்திருக்கோம்… நீ என்னடான்னா கல்யாணம் நடந்ததுல சந்தோஷமா இருக்குன்னு உளறிட்டு இருக்க, அரை மெண்டல கட்டிவச்சதுல என்னய்யா சந்தோசம் உனக்கு. “என்று முன்னவர் ஆவேசத்துடன் பேசிட… “இங்க பாரு காசி நம்ம பொண்ணக் கட்டின பையன் மனநிலை சரியில்லாதவனாம், எந்த நேரத்துல யார்கிட்ட எப்படி நடந்துக்குவான்னு யாருக்குமே தெரியாதாம். நீ உடனே மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை இங்க வர சொல்லு ரெண்டுல ஒன்னு பேசி முடிச்சுக்கலாம். ” என்று இன்றுடன் எல்லாவற்றையும் முடித்துக் கொள்ளும் முடிவுடன் பேசினார் மாமன் முறையில் இருந்த ஒருவர்.
தன் மருமகனுக்கு பைத்தியக்காரப் பட்டம் சுமத்தும் உறவினர்களின் வார்த்தையை மறுத்துக் கூறாமல் அமைதியாய் இருந்த கணவரை குழப்பத்துடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “வேண்டாதவங்க சொன்ன கட்டுக்கதைய நம்பி எங்க வீட்டு மாப்பிள்ளை பத்தி தப்பா பேசாதீங்க! ” என்று தவிப்புடன் பேசினார் கண்மணி.

“யார வேண்டாதவங்கன்னு சொல்ற?” என்று வேலம்மாள் கோபமாய் குரலை உயர்த்த… “நம்மள தான் சொல்லுறாங்க வேற யாரச் சொல்லுவாங்க?” என்று தாயின் கோபத்திற்கு தூபம் போட்டார் காந்திமதி.

“ நம்ம வீட்டுக்குள்ள எத்தனையோ பிரச்சனை இருக்கலாம், அதுக்காக எல்லார் முன்னாடியும் நம்ம வீட்டு மாப்பிள்ளைய பத்தி தப்பா பேசுறது கொஞ்சம் கூட நல்லா இல்ல அத்தை, அவர மாதிரி ஒரு நல்ல பையன் கிடைக்க நாம கொடுத்து வச்சிருக்கணும்.” என்று மீண்டும் மருமகனைத் தாங்கி பேசினார் கண்மணி.

“ நீ சொல்ற நல்ல பையன் தான் அவன் அப்பா அம்மா சாவுக்கே காரணமாம். பெத்தவங்கள கொன்னுட்டு கேஸ்ல இருந்து தப்பிக்கிறதுக்காக கொஞ்ச நாள் மெண்டல் ஹாஸ்பிடல்ல கூட இருந்திருக்கான். எதுவும் தெரியாம பெருசா பேச வந்துட்டா…” என்றார் வேலம்மாள்.

“உங்க பேரனுக்கு என் மகளை கட்டி கொடுக்கலங்கிற கோவத்துல வாய்க்கு வந்தபடி பேசாதீங்க… “ என்று மூத்தவர் வார்த்தையில் உண்மை இருந்திட கூடுமோ என்ற கலக்கத்துடன் பேசினார் கண்மணி.

“ நாங்க ஒன்னும் கோபத்துல கதை கட்டல, மாப்பிள்ளையோட பெரியம்மா தான்.. மனசு கேட்காம எங்க கிட்ட புலம்புனாங்க, ” என்றவர் தன் மகளின் புறம் திரும்பி.. ” என்ன காந்தி சும்மா வாய் பார்த்துட்டு நிக்கிற?, அந்த வீடியோவை இவங்களுக்கு போட்டுக் காட்டு அப்படியாவது இவர்களுக்கு உண்மை என்னன்னு புரியுதான்னு பார்ப்போம்” என்று மகளுக்கு உத்தரவு பிறப்பிக்க, அன்னையின் வார்த்தையை ஏற்ற காந்திமதியோ உடனே தனது அலைபேசியில் இருந்த காணொளியை ஒளிபரப்பி காட்டினார்.

கோபமாய் தன் கைக்கு எட்டிய அனைத்து பொருட்களையும் ஆக்ரோஷத்துடன் கத்தியபடி காவியன் உடைத்துக் கொண்டிருந்த காணொளியை முழுதாய் பார்த்து முடித்த கண்மணி அதிர்ச்சியுடன் தன் கணவர் புறம் திரும்பி, “என்னங்க இது மாப்பிள்ளையை பத்தி நல்லா விசாரிச்சீங்களா?, ” என்று கலக்கத்துடன் வினவினார்.

“அதெல்லாம் விசாரிச்சிட்டேன் கண்மணி.,” என்று காசிநாதன் தன் மனைவிக்கு விளக்கம் தந்து கொண்டிருக்க… ” என்னன்னு விசாரிச்சிருப்ப, மாப்பிள்ளைக்கு தெரிஞ்சவங்க சொந்தக்காரங்க அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட இன்னார் வீட்டு பையன் எப்படின்னு விசாரிச்சிருப்ப, நாம விசாரிப்போம்னு முன்னாடியே எல்லார்கிட்டயும் யார் வந்து கேட்டாலும் அந்த பையன பத்தி நல்லவிதமா சொல்லுங்கன்னு சொல்லி வச்சிருப்பாங்க, அதனால தான் நீ போய் கேட்டதும் யாரும் உண்மைய சொல்லாம ரொம்ப நல்ல பையன்னு பொய் சொல்லி அந்த பைத்தியத்தை நம்ம வீட்டு பொண்ணு தலையில கட்டிட்டாங்க. ” என்று இதுதான் நடந்திருக்கும் என்ற கணிப்புடன் பேசினார் வேலம்மாள்.

“அம்மா என்ன நடந்ததுன்னு தெரியாம பேசாதீங்க.. நான் மாப்பிள்ளைய பத்தி விசாரிக்க ஆரம்பிக்கும் போதே மாப்பிள்ளையோட அண்ணனும் தாத்தாவும் நேரடியா என்கிட்ட வந்து எல்லா உண்மையும் சொல்லி தான் பொண்ணு கேட்டாங்க. ” என்றார் காசிநாதன்.

“என்ன உண்மை? ” என்று குழப்பத்துடன் மதுரிமா வினவ… ” மது அப்பா எது செஞ்சாலும் அது உன் நல்லதுக்கு தான். “என்று விபரம் என்னவென்று கூறாமல் காசிநாதன் சுத்தி வளைக்க… ” சுத்தி வளைக்காம விஷயம் என்னன்னு சொல்லுங்க… “ என்று மகளின் வாழ்க்கை குறித்து உண்டான கவலையுடன் விசாரித்தார் கண்மணி.

“இவங்க சொல்ற மாதிரி நம்ம மாப்பிள்ளை ஒன்னும் பைத்தியம் இல்ல, கொஞ்சம் கோபக்காரர் அவ்வளவுதான். சின்ன வயசுல அவர் கண்ணு முன்னாடியே அப்பா அம்மா இறந்ததை பார்த்து மனசளவுல ரொம்பவே பாதிக்கப்பட்டு, அதிர்ச்சியில இருந்து வெளியே வர முடியாம யார்கிட்டயுமே பேசாம தனியாவே இருந்தவர கொஞ்ச நாள் ஹாஸ்பிடல்ல சேர்த்து ட்ரீட்மென்ட் எடுத்திருக்காங்க, எல்லாம் நார்மலாகவும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. மத்தபடி இவங்க சொல்ற மாதிரி மாப்பிள்ளைக்கு வேற எந்த பிரச்சினையும் இல்லை, இது யாரோ நம்ம மாப்பிள்ளைக்கு வேண்டாதவங்க அவரை பிரச்சனையில மாட்டி விடணுங்கிறதுக்காகவே எடுத்த வீடியோ மாதிரி இருக்கு” என்று மாப்பிள்ளை வீட்டினர் மறைக்காமல் தெரியப்படுத்திய அனைத்து விபரத்தையும் கூறி முடித்தார் காசிநாதன்.

“அடடா அப்போ எல்லாம் உனக்கு தெரிஞ்சு தான் நடந்திருக்கா?, பைத்தியமா இருந்தா என்ன பணக்காரனா இருக்கான்னு பொண்ணோட வாழ்க்கையை பத்திக் கூட யோசிக்காம இந்த கல்யாணத்தை பண்ணி வச்சுட்ட அப்படித்தானே!, நீ எல்லாம் என்னடா மனுஷன் உண்மையிலேயே நீ எனக்கு பிறந்தவன் தானா..?, பெத்த பொண்ணுக்கு இப்படி ஒரு துரோகம் பண்ண உனக்கு எப்படி மனசு வந்துச்சு?” என்று என்னவோ தான் மட்டுமே தனது பேத்திக்கு நல்லது நினைப்பது போல் பாசாங்கு காட்டி பேசினார் வேலம்மாள்.

ஏற்கனவே திருமண பந்தத்தின் மீது வெறுப்பில் இருந்த மதுரிமா… கண்ட காணொளியையும் தந்தை அறிவித்த செய்தியையும் எண்ணி தனக்குள் குழம்பிக் கொண்டாள், ‘பைத்தியக்காரனா?.. அதனாலதான் எனக்கு பிடிக்கலன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் பிடிவாதமா கல்யாணம் பண்ணிக்கிட்டானா!, ஒரு பிராப்ளம் வந்ததும் அதுக்கான சொலுஷன் என்னவா இருக்கும்னு யோசிக்கிறவன் எப்படி பைத்தியமா இருக்க முடியும்?, ’ என்று தனக்குள்ளேயே காவியனின் செயல்பாடுகள் குறித்து ஆராயத் துவங்கிய.. மகளின் முகத்தில் படிந்த உணர்வை படித்த காசிநாதன், அவசரமாய் அவள் அருகில் சென்று ஆதரவாய் கரம் பற்றி கொண்டு “மது… மாப்பிள்ளை ரொம்ப நல்லவர், உன்னை ரொம்ப ரொம்ப நல்லா பாத்துக்குவாரு, அப்பா உனக்கு நல்லது தான் செய்வேன் என்னை நம்பு.” என்று கவலையுடன் கலங்கி இருந்த மகளுக்கு ஆறுதல் கூறினார்.

” நம்பனுமா?, எந்த நம்பிக்கையில நான் உங்களை நம்புவேன்னு நினைக்கிறீங்க!. இதுவரைக்கும் நீங்க எங்களுக்கு எந்த நல்லதுமே செய்யலையே அப்பா. அப்புறம் எப்படி என்னால உங்களை நம்ப முடியும்?” என்று கலக்கத்துடன் வினவினாள் மதுரிமா.

இதுவரை தன் பிள்ளைகளிடம் நல்ல விதமாக நடந்து கொள்ளாத தனது தவறு புரிந்து காசிநாதன் தவித்து நிற்க… “அப்படி கேளு என் ராஜாத்தி.. இத்தனை நாள் இல்லாத பாசம் திடீர்னு எங்க இருந்து வந்துச்சு? பணக்கார சம்பந்தம் கிடைக்கவும் உன்னைப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம ஒரு பைத்தியக்காரன் தலையில் கட்டி வச்சிட்டான். பெத்த பிள்ளையா இருந்தாலும் என் பையன் செஞ்சது பெரிய தப்பு!, இனி நீ இங்க இருக்க வேணாம் பாட்டி கூட கிளம்பி ஊருக்கு வந்துரு.” என்றார் வேலம்மாள்.

“அதே கேள்வியை தான் உங்ககிட்ட கேட்கிறேன்.. இத்தனை நாளா எங்க மேல இல்லாத அக்கறையும் பாசமும் இப்ப மட்டும் எப்படி திடீர்னு வந்தது?. எங்க அப்பா எப்பவும் உங்களுக்கு பிள்ளையா மட்டும் தான் இருந்தாரே தவிர, ஒரு நாள் கூட எங்க அம்மாவுக்கு புருஷனாவோ எங்களுக்கு அப்பாவாவோ நடந்துக்கிட்டதே இல்ல, சப்போஸ் அவரே எங்கள பத்தி யோசிக்கணும்னு நினைச்சா கூட அதுக்கு நீங்க அலோப் பண்றது இல்ல.. அவர் எங்களை விட்டு மூணாவது மனுஷன் மாதிரி விலகி இருந்ததுக்கே நீங்க தான காரணம். அப்படி இருக்கும் போது உங்களை நம்பி உங்க கூட எப்படி வருவேன்னு நினைக்கிறீங்க!. ” என்று வெடுக்கென்று வினவினாள் மதுரிமா.

“என்ன மது இப்படி கேட்டுட்ட.. பாட்டிக்கு எப்பவுமே உன் மேல தான் பாசம் அதிகம் என்கிட்ட கூட எப்பவும் உன்னைப் பத்தி தான் பேசிட்டே இருப்பாங்க.. ” என்று காந்திமதி கூறிட , மகளின் வார்த்தையை ஆமோதிப்பது போல் மகன் வழி பேத்தி அருகில் வந்த வேலம்மாள்.. பரிவாய் அவள் கன்னம் வருடி” உன் அம்மா மாதிரியே நீயும் இந்த பாட்டியோட பாசத்தை புரிஞ்சுக்காம பேசுறியே மது!, பைத்தியக்காரனை கட்டிட்டு வாழப் போற இந்த நரக வாழ்க்கை உனக்கு வேணாம் தங்கம், இது எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு பாட்டி கூட வந்துடு, நான் உனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கிறேன்” என்றார் வேலம்மாள்.

” மதி தான் நீங்க சொல்லுற நல்ல வாழ்க்கையா இருந்தா அந்த எண்ணத்தை இப்பவே இங்கேயே மறந்திடுங்க… அந்த ரவுடிய நம்பி வர்றதுக்கு பதிலா நான் இந்த பைத்தியத்துக்கு கூடவே வாழ்ந்திடுவேன், “என்று தன் பாட்டிக்கு பதிலடி தரும் வேகத்தில் கூறினாள் மதுரிமா.

“ அம்மாடி நீ அப்படி ஒன்னும் சகிச்சிட்டு எங்க பிள்ளை கூட வாழ வேண்டாம். இப்பவே உன் வீட்டுக்கு கிளம்பு. “ என்று அனைவரையும் முந்திக்கொண்டு அவசரமாய் குரல் கொடுத்தார் கோமதி.
குரல் வந்த திசையில் காவியன் குடும்பம் மொத்தமும் நின்று இருக்க… “பைத்தியக்காரன நம்பி எங்க பொண்ண விட்டுட்டு போக நாங்க என்ன பைத்தியமா? நீங்க சொன்னாலும் சொல்லலனாலும் எங்கப் பொண்ண கூட்டிட்டு கிளம்ப தான் போறோம். “ என்று பெண் வீட்டினரை முந்திக்கொண்டு பதில் கூறினார் காந்திமதி.

“பாருங்க மாமா என்ன பேச்சு பேசுறாங்கன்னு, இதுக்குத்தான் சொன்னேன் நம்ம அந்தஸ்துக்கு ஏத்த இடமா பாப்போம்னு, எங்க கேட்டீங்க?, பையன் ஆசைப்படுறான்னு சொல்லி ஒரு பஞ்சப் பரதேசி கூட்டத்துல இருந்து பொண்ணு எடுத்தீங்க இப்ப பாருங்க அவங்க புத்தியை காட்டிட்டாங்க..” என்று பெண் வீட்டினரை அவமானப்படுத்தும் விதமாய் பேசினார் கோமதி.

“ஏய் இந்தம்மா நிறுத்து… என்ன விட்டா வாய்க்கு வந்தபடி பேசிட்டே போற… பொண்ணு குடுத்துருக்கோம்னு தான் பொறுமையா பேசிட்டு இருக்கோம். இல்லனா நீங்க செஞ்ச வேலைக்கு இங்க நடக்கிறதே வேற“என்று ஒரு சிலர் கோபத்துடன் குரலை உயர்த்த, “எங்க வீட்ல நின்னுட்டு எங்களையே மிரட்டுறீங்களா?,” என்று பிரச்சனையை பெரிது படுத்தும் விதமாய் பேச துவங்கினார் கோமதி.

“போதும் கோமதி நிறுத்து…” என்று நிலவேந்தன் தன் மூத்த மருமகளை அடக்கிட.. காசிநாதன் தன் உறவினர்களை அடக்க முயன்றார்.

“என்ன சம்மந்தி இது?, நாங்க எல்லாம் உண்மையை சொல்லிட்டு தான கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினோம். இப்ப வந்து இதை ஒரு பிரச்சினையா பேசினா என்ன அர்த்தம்?, அதுவும் சொந்தக்காரங்களை எல்லாம் கூட்டி வச்சிருக்குது கொஞ்சம் கூட சரியில்ல ” என்று சங்கடத்துடன் பேசினார் கதிர்வேந்தன். “ மன்னிச்சிடுங்க சம்மந்தி. இவங்க எல்லாம் என் மேல இருக்கிற அக்கறைல உண்மை என்னன்னு புரியாம பேசிட்டு இருக்காங்க.. இதுக்கு மேல இது பிரச்சனையாகாது நான் பார்த்துக்கிறேன்.” என்று உத்திரவாதம் வழங்கினார் காசிநாதன்.
“ அட நீ என்னடா இந்த ஏமாத்துக்காரங்க கிட்ட கெஞ்சிகிட்டு இருக்க, “ என்று வேலம்மாள் பேசிட… “இங்க யாரும் யாரையும் ஏமாத்தல எல்லா உண்மையும் தெரிஞ்சுதான் கல்யாணம் நடந்திருக்கு. இது என் பொண்ணோட வாழ்க்கை அவ சந்தோசம் எனக்கு ரொம்ப முக்கியம், உங்க எல்லார்கிட்டயும் கெஞ்சி கேட்டுக்குறேன் தயவு செஞ்சு இதுக்கு மேல இதை பிரச்சினையாக்காதீங்க..“என்று கூடி நின்ற அனைவரும் முன்னிலையிலும் கையெடுத்து கும்பிட்டு வேண்டிக்கொண்டார் காசிநாதன்.
“உனக்கு பொண்ணுனா அவ எனக்கு பேத்தி டா…அவ மேல எனக்கும் அக்கறை இருக்கு. ஒரு பைத்தியத்தை நம்பி என் பேத்தியை இங்க விட்டுட்டு போக என்னால முடியாது.. மது உன் அப்பன பணத்தாசைப் பிடிச்சு ஆட்டுது. அதனால தான் உன்னைப் பத்தி கூட கவலைப்படாம இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கான். உன் வாழ்க்கையை பத்தி யோசிக்காதவன பத்தி நீயும் யோசிக்காத. “என்று குழப்பத்தில் இருந்தவளை மேலும் குழப்பினார் வேலம்மாள்.

அதே நேரம் மதுரிமாவின் கையில் இருந்த அலைபேசி குறுஞ்செய்தி வந்திருப்பதாக சிறு ஓசை ஒன்றை எழுப்பியது, செய்தி அனுப்பி வைத்திருப்பது காவியன் என்று அறிந்ததும், சற்றும் தாமதிக்காது உடனே வந்திருக்கும் செய்தி என்னவென்று திறந்து பார்க்க துவங்கினாள், ‘ நவ் ஷீ இஸ் சேஃப் வித் அஸ்… எவ்ரிதிங் இஸ் அவர் கண்ட்ரோல், டோன்ட் ஃபாணிக்… ‘ எனும் வரிகளில் இருக்கும் சூழ்நிலை மறந்து அவளையும் மீறிய ஒரு நிம்மதி புன்னகை இதழில் பரவியது..

“என்ன மது இங்க என்னென்னமோ நடந்துட்டு இருக்கு.. நீ என்னடான்னா சிரிச்சிட்டு இருக்க…” என்று மகளின் புன்னகைக்கான காரணம் புரியாது கலக்கத்துடன் கண்மணி வினவிட… “இந்த மாதிரி சூழ்நிலையில உன்னால எப்படி சிரிக்க முடியுது மது, புருஷன் பைத்தியக்காரன்னு தெரிஞ்சதும் நீயும் பைத்தியம் ஆயிட்டியா?” என்று குதர்க்கமாய் வினவினார் காந்திமதி.

“அளவுக்கு அதிகமாக கோபப்படுறவங்களுக்கு பைத்தியக்கார பட்டம் கொடுக்கிறதா இருந்தா, இந்த உலகத்துல பாதிக்கு பாதி பேர் பைத்தியங்கிற பட்டத்தோட தான் அலைவாங்க… எங்கிட்ட அவர் பேசினதையும் நடந்துக்கிட்டதையும் வச்சு சொல்றேன் கண்டிப்பா அவரு பைத்தியம் இல்லை. “ என்று தன் வாழ்வில் இணைந்தவனுக்காக பரிந்து பேசினாள் மதுரிமா.

“நீ சொல்றது சரிதான் போல காந்தி, இந்த பிள்ளைக்கு பைத்தியம் தான் புடிச்சு போச்சு, கண்ணுக்கு முன்னாடியே சாட்சிய காட்டுறோம் அப்புறமும் அவன் பைத்தியம் இல்லைன்னு சொல்றா!.” என்று வேலம்மாள் தன் பேத்தியை சாடிட…” அம்மா அவ தெளிவா தான் இருக்கா நீங்க தான் தேவையில்லாம பேசிக் குழப்ப பாக்குறீங்க. “ என்று மகளின் மனதை கலைக்க முயற்சிக்கும் தனது அன்னையை அடக்கினார் காசிநாதன்.

“நீ நிறுத்துடா… பணக்காரங்கற ஒரே காரணத்துக்காக பெத்த பிள்ளை வாழ்க்கையை பணைய வச்ச நீ பேசாத!” என்று வேலம்மாள் பதிலடி கொடுக்க.. வெளிப்படையாக பாசத்தை காட்டி வளர்க்காத தந்தையின் முகம் வாடப் பொறுக்காமல், “ காவியன் கிட்ட இருக்கிற பணத்தை மட்டுமே பார்த்து இந்த கல்யாணம் நடக்கல… அத முதல்ல புரிஞ்சுக்கோங்க. எனக்கும் அவன புடிச்சிருக்கு. என் முழு சம்மதத்தோடு தான் இந்த கல்யாணம் நடந்திருக்கு. இது என்னோட வாழ்க்கை நான் யார் கூட வாழனும்னு நான் முடிவு பண்ணிக்கிறேன்.” என்று தன் தந்தைக்கு சாதகமாக பேசினாள் மதுரிமா.

யார் வாழ்க்கைக்காக பரிந்து பேச வந்தனரோ அவளே இந்த வாழ்க்கை அவளது சம்மதத்துடன் தான் அமைத்துக் கொடுக்கப்பட்டது என்று வாக்குமூலம் வழங்கவும்… “அந்த பொண்ணோட சம்மதத்தோடு தான் கல்யாணம் நடந்து இருக்கு, இருந்தாலும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சொன்ன சங்கதியை நீ உன் அம்மா தங்கச்சி கிட்ட சொல்லிருந்தா இந்நேரம் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது.” என்ற உறவினர்கள் தங்கள் உடமைகளை சரி பார்த்தபடி அங்கிருந்து கிளம்ப தயாராகினர்.

“அட இருங்கப்பா அதுக்குள்ள எங்க கிளம்புறீங்க.. அது ஏதோ சின்ன புள்ள அறியாம பேசிட்டு இருக்கு. அதுக்காக இதை இப்படியே விட முடியுமா, நீங்கதான் பேசி என் பேத்திக்கு நியாயம் வாங்கி தரணும்.” என்று மீண்டும் உறவினர்களை பிடித்து வைக்க முயன்றார் வேலம்மாள்.

“அந்தப் பையன பிடிக்கப் போய் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு உங்க பேத்தியே சொல்லும் போது இதுக்கு மேல பேச என்ன இருக்கு..?” என்றனர் உறவினர்கள்.

“ நடந்த அநியாயத்தை தட்டி கேப்பீங்கன்னு உங்களையெல்லாம் கூட்டிட்டு வந்தேன் பாருங்க என்னச் சொல்லணும். இதுக்கு மேல உங்களை நம்பி பிரயோஜனம் இல்ல. நான் போலீசுக்கு போறேன். “ என்றார் வேலம்மாள்.

“போலீஸ்ன்னு சொன்னதும் பயந்துருவோமா என்ன?, மிலிட்டரியே வந்தாலும் சரி எங்க பையன மதிக்காத உங்க வீட்டு பொண்ணுக்கு இனி எங்க வீட்டில இடம் இல்லை.” என்று பதிலடி தந்தார் கோமதி.

“நீ எதுக்கு இப்ப தேவை இல்லாம வார்த்தை விட்டுட்டு இருக்க?, என்ன சொன்னேன்னு மறந்துடுச்சா?” என்று தன் மனைவியை அடக்கினார் கதிர்வேந்தன்.

“ இங்க பாருங்க ஆரம்பத்துல இருந்து உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். தேவையில்லாம பிரச்சனையை பெருசாக்காதீங்க.. போலீஸ் அது இதுன்னு போனா தேவையில்லாம உங்களுக்கு தான் கஷ்டம்.” என்று வேலம்மாளை அமைதிப் படுத்த முயன்றார் நிலவேந்தன்.

“எங்களுக்கு என்ன கஷ்டம்?, பைத்தியக்கார பயலே ஏமாத்தி எங்க பொண்ணுக்கு கட்டி வச்ச உங்களுக்கு தான் கஷ்டம், என்ன காந்தி இன்னும் வேடிக்கை பார்த்துட்டு நிக்கிற? சீக்கிரம் உன் மகன் மதியழகனுக்கு போன் பண்ணு வரும்போது கையோட போலீசையும் கூட்டிட்டு வரட்டும்” என்றார் வேலம்மாள்.

உடனே வருவதாக சொன்ன மகன் இன்னும் வந்து சேராததால் அவனை அலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்து தோற்றுக் கொண்டிருந்தார் காந்திமதி.

“ஆரம்பத்துல இருந்து உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லன்னு எங்களுக்கு ரொம்ப நல்லாவே தெரியும் பாட்டி, சும்மா உங்க பேத்தி மேல அக்கறை இருக்கிற மாதிரி நடிக்காதீங்க!, “என்று அதுவரை மௌனமாய் இருந்து அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அனுரா எரிச்சலுடன் பேசினாள்.
“ஆமா எனக்கு புடிக்கல தான்.. இவ்வளவு வசதிய வச்சுட்டு தேடி வந்து பொண்ணு கேட்கும் போதே இதுல ஏதோ பெரிய சிக்கல் இருக்கும்னு தோணுச்சு. அதனால தான் உங்க கூட சம்பந்தம் பண்ண கூடாதுன்னு நினைச்சேன். நான் ஒன்னும் என் பையன் மாதிரி பணம் காசு பார்த்து மயங்கர ஆள் இல்லை. பணம் இருந்தா போதும் பையன் எப்படி இருந்தாலும் என் பேத்தி வாழ்க்கை நாசமா போகட்டும்னு விட்டுட்டு போக என்னால முடியாது இந்த பிரச்சனையை நான் இதோட விடமாட்டேன் கண்டிப்பா போலீசுக்கு போவேன்.” என்று விடாமல் பிடிவாதம் பிடித்தார் வேலம்மாள்.

பிரச்சனையை பெரிதாக்க வேண்டும் என்றே பேசிக் கொண்டிருப்பவர்களை எவ்வாறு சமாளிப்பது என்று புரியாத குழப்பத்துடன் மணமக்கள் குடும்பத்தினர் மௌனமாய் நிற்க, அனுராவின் அலைபேசியின் மெதுவாய் சிணுங்கியது.. அதன் சிணுங்களை அடக்கி காதில் வைத்தவள் எதிர் திசையில் பேசிய பரத்தின் வார்த்தையில் திகைப்பும் கலக்கமுமாய் நிற்க.. “என்னாச்சு அனு, ஏன் உன் முகம் ஒரு மாதிரி இருக்கு யார் பேசுனது?”என்றார் நிலவேந்தன்.

“அவர்தான் பேசினார் தாத்தா பொண்ணு வீட்டுக்காரங்க எங்க இருக்காங்கன்னு கேட்டாரு. பக்கத்துல தான் இருக்காரு போல கொஞ்ச நேரத்துல போலீசை கூட்டிட்டு வந்துடுறேன்னு சொன்னாரு.” என்றாள் அனுரா.

குழப்பத்துடன் அனைவரும் திகைத்து நிற்க, “ வழக்கம்போல நம்ம வீட்டு பையன் யார்கிட்டயாவது வம்பு பண்ணி இருப்பான். அவன விசாரிக்கிறதுக்காக வருவாங்களா இருக்கும். நம்ம குடும்பத்துக்கு இது என்னப் புதுசா?” என்று இது வழமையாக நடக்கும் செயல்தான் என்பது போல் மிகைப்படுத்தி பேசினார் கோமதி.

எள்ளலுடன் மதுரிமாவை நோக்கி… “என் பையன ரவுடின்னு சொன்னிங்க இப்ப இதுக்கு என்ன சொல்றீங்க?” என்றார் காந்திமதி.

“என்ன நடந்ததுன்னு தெரியாம பேசாதீங்க அத்த..!” என்று அனுரா கூறிட… “என்ன நடந்ததுன்னு தெரியாது ஆனா நம்ம வீட்டு பையன பத்தி நல்லா தெரியும் அத வச்சு தான் சொல்றேன் இது தான் நடந்திருக்கும்ன்னு..” என்றார் கோமதி.

“போலீஸ் அடிக்கடி வீட்டுக்கு வந்து விசாரிக்கிற அளவுக்கு மாப்பிள்ளை குணத்துல சொக்கத்தங்கம் போல…,”என்று கிண்டலாய் கூறியவர், கிளம்ப தயாரான உறவினர்கள் புறம் திரும்பி, “ இப்பவாவது நாங்க சொல்றது உண்மைதான்னு உங்களுக்கு புரிஞ்சிருக்குமே!, நமக்கு சிரமம் வைக்காம அவங்களே போலீஸோட வராங்க இப்பவே இங்கேயே எல்லாத்தையும் பேசி முடிச்சுட்டு என் பேத்தியையும் கூட்டிட்டு எல்லாரும் ஒன்னாவே ஊருக்கு போகலாம். “ என்றார் வேலம்மாள்.

தன் மகளின் நிலை என்ன ஆகுமோ என்ற தவிப்புடன் இருந்த கண்மணி மதுவின் அருகில் வந்து, “எனக்கு அமைஞ்ச மாதிரி மோசமான வாழ்க்கை உனக்கு அமைஞ்சிடுமோன்னு பயந்துட்டு நீ கல்யாணமே வேணாம்னு சொன்ன,.. அப்படியெல்லாம் நடக்காதுன்னு நம்பிக்கை கொடுத்து நானே உன்னை இப்படி ஒரு நரகத்துக்குள்ள தள்ளிட்டேனே மது என்னை மன்னிச்சிடு. உன் அப்பா பேச்சைக் கேட்டு நீ இருந்தாலும் இருந்தாலும் கஷ்டம், உன் பாட்டி விருப்பப்படி எங்க கூட கிளம்பி வந்தாலும் கஷ்டம். தீக்குச்சிக்கு பயந்து தீப்பந்தத்தை கையில புடிச்ச மாதிரி இருக்கு நம்ம நிலைமை. என்னைக்குமே நம்மள பத்தி யோசிக்காத மனுஷன் உன் விஷயத்துல நல்லது பண்ணி இருக்காருன்னு சந்தோஷப்பட்டேன். இதுக்கு அவர் எப்பவும் போல நம்மள பத்தி யோசிக்காமலேயே இருந்திருக்கலாம். “ என்று விரத்தியுடன் பேசினார்.

“ நீங்க பயப்படுற மாதிரி என் வாழ்க்கை இன்னும் மோசமாகல… கவலைப்படாதீங்க… “ என்று அடுத்து என்ன நிகழும் என்று ஓரளவு அனுமாணித்தபடி அன்னைக்கு ஆறுதல் கூறினாள் மதுரிமா.

Advertisement