Advertisement

32..

மதுசுதனை சந்திக்க மணமக்களுடன் வந்திருந்த காசிநாதன் மற்றும் கண்மணி தம்பதியினர் மகனை சந்தித்து விட்டு அறையின் வெளியில் காத்திருக்க… ” எப்ப டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு நான் போய் கேட்டுட்டு வரேன்..” என்று காவியன் மருத்துவரின் அறைக்குச் சென்றான்.

முதுகில் உண்டான காயத்தின் காரணமாக படுக்கையில் ஒருபுறமாய் சாய்ந்து படுத்திருந்த மது சுதன் அருகில் வந்த மதுரிமா.. ” சாரி சுதன் என்னால தான உனக்கு இப்படி ஆச்சு!, நான் மட்டும் அந்த நேரத்துல அங்க இருந்து கிளம்பாம இருந்திருந்தா இப்படி நடந்திருக்காதுல” என்று குற்ற உணர்வுடன் பேசினாள்.

“ஏய் லூசு எதுக்கு இதுக்கெல்லாம் சாரி கேட்டுட்டு இருக்க.. ” என்று தங்கையின் தலையை செல்லமாய் தட்டியவன், “அம்மா எல்லாம் சொன்னாங்க.. உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லனா முன்னாடியே என் கிட்ட சொல்லி இருக்கலாம்ல, நான் ஏதாவது ஸ்டெப் எடுத்து இருப்பேன், அத விட்டுட்டு தேவை இல்லாம எதுக்கு நடு ராத்திரி வீட்டை விட்டு கிளம்பி போய் எதுக்கு இந்த தேவையில்லாத ரிஸ்க்?, நல்ல வேலை மாப்பிள்ளை அந்த நேரத்துல வந்தார், அவர் மட்டும் சரியான நேரத்துக்கு வராம இருந்திருந்தா இந்நேரம் உன் நிலைமை என்ன ஆயிருக்கும் கொஞ்சம் யோசிச்சு பாரு..” என்று மூத்தவனாய் தங்கையின் தவறை சுட்டிக்காட்டினான் சுதன்.

” ஆமா உன்கிட்ட சொன்னா மட்டும் என்ன பெருசா நடந்திடப் போகுது?, நீயும் அம்மா மாதிரியே ஏதாவது சாக்கு போக்கு சொல்லி என்னை சமாதானப்படுத்தி இந்த கல்யாணத்தை நடத்தி வைசிருப்ப.. ” என்று அலுத்துக் கொண்டாள் மதுரிமா.

” ஆமா சின்ன பசங்க தப்பு பண்ணும் போது பெரியவங்க நீ செய்றது தப்புன்னு எடுத்துச் சொல்லி திருத்த தான முயற்சி பண்ணுவாங்க, புரிதல் இல்லாம நீ செய்யுற தப்புக்கு நானும் துணை போக முடியாதுல மது குட்டி” என்று சிரித்தபடி கூறினான் சுதன்.

” எனக்கு தெரியும் நீயும் இப்படித்தான் பேசுவன்னு, அதனால தான் நான் யார்கிட்டயும் எதுவும் சொல்றதில்லை

” என்று மதுரிமா கோபம் கொள்ள..” எதுக்கு இப்ப இப்படி கோபிக்கிற?, மாப்பிள்ளைக்கு என்ன குறை.. உனக்கு ஒன்னுனதும் எப்படி ஓடி வந்தாருன்னு பார்த்தேல, அவர மாதிரி ஒரு கேரிங் பர்சன் ஹஸ்பண்டா கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும். ” என்று தன் தங்கையின் கணவன் குறித்து பெருமையாக பேசினான் மது சுதன்.

“நீ தான் அவனை மெச்சிக்கணும், அவனை மட்டும் அன்னைக்கு நான் பாக்காம இருந்திருந்தா இன்னைக்கு என் லைஃப்ல இவ்ளோ பிரச்சனை வந்திருக்காது. ” என்றாள் மதுரிமா.

” மது… நீ எதுக்கு அவரை இந்த அளவுக்கு வெறுக்கிற? ” என்று சுதன் காரணம் வினவ… “உனக்கு ஒரு விஷயம் பிடிக்கலைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் உன்னை கட்டாயப்படுத்தி செய்ய வைக்கிறவங்கள உனக்கு பிடிக்குமா என்ன?” என்று மதுரிமா கூறிக் கொண்டிருக்க… ” சின்ன குழந்தைங்க மருந்து சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்கு, ம் அதுக்கு அம்மா கட்டாயப்படுத்தி மருந்து கொடுப்பாங்க அதுக்காக அந்த குழந்தை அதோட அம்மாவை வெறுத்திடுமா என்ன? ” என்று அவளுக்கு பின் இருந்து குரல் கொடுத்தான் காவியன்.

“என் அம்மாவும் நீயும் ஒண்ணா?” என்று கோபத்துடன் வினவி மதுரிமா எழுந்து கொள்ள… ” அது எனக்கு தெரியாது!, ஆனா நான் உன்னை என் அம்மா மாதிரி தான் பார்க்கிறேன்” என்று அமைதியாகவே பதில் தந்தான் காவியன்.

” சும்மா அம்மா அம்மானு சொல்லி டார்ச்சர் பண்ணாத அம்மாவோட இடத்தை யாராலயும் நிரப்ப முடியாது. ” என்று மதுரிமா கோபமாய் கூறிட… ஒரு நொடி கண்களை இறுக மூடி தன் கட்டுப்பாடற்ற கோபத்தை கடினத்துடன் கட்டுப்படுத்திக் கொண்டு. ” சரி நீ எனக்கு அம்மாவா இருக்க வேணாம், என்னோட பொண்டாட்டியா இரு போதுமா.. ?” என்று பதிலடி தந்தான் காவியன்.

” எப்படி எப்படி உனக்கு பொண்டாட்டியா இருக்கணுமா!, இத சொல்ல உனக்கு வெக்கமா இல்ல!, பிடிக்கலைன்னு சொன்னதுக்கு அப்புறமும் கல்யாணம் பண்ணிட்டு பொண்டாட்டியா இருன்னு சொல்ற.. நீ எல்லாம் என்ன ஜென்மமோ!” என்று எரிச்சலுடன் மதுரிமா பேசிட .. ” இனி காலம் முழுக்க என்னோட தானே வாழப் போற போகப் போக தெரிஞ்சுக்க நான் என்ன ஜென்மம்ன்னு, ” என்று அதற்கும் பதில் தந்தான் காவியன்.

” உன்னை” என்று காவியன் கழுத்தை நெரிப்பது போல் செய்கை செய்த மதுவை பார்த்து வாய் விட்டு சிரித்த சுதன்… ” மது என்ன இது? ஏன் இப்படி பிஹேவ் பண்ற?” என்றிட..” நீ சும்மா இரு சுதன், இவன பத்தி உனக்கு தெரியாது.. இவன் ஒரு பிராடு சைக்கோ.. தன்னோட சந்தோசத்துக்காக அடுத்தவங்களை கஷ்டப்படுத்தி பாக்குற சுயநலவாதி” என்று தன் அண்ணனை அடக்கி விட்டு தன் கணவனை சரமாரியாக திட்டி தீர்த்தாள் மதுரிமா.

” நான் சுயநலவாதி தான் உங்க குடும்பத்துக்காக தன் வாழ்க்கையே தியாகம் பண்ணத் துணிஞ்ச தியாகச் செம்மல் உங்க முன்னாடி நிக்கிறாங்க நல்லா பாத்துக்கோங்க மச்சான். ” என்று ஏளனத்துடன் கூறினான் காவியன்.

“இங்க பாரு தேவையில்லாம என்னைப் பத்தி பேசாத” என்று கோபமாய் கூறினாள் மதுரிமா.

“நான் ஏன் உன்னை பத்தி பேசக்கூடாது உன்னை பத்தி பேச எல்லாம் ரைட்ஸும் எனக்கு இருக்கு.. ” என்று காவியன் கூறிட…” ஃபிராடு தனம் பண்ணுனதால கிடைச்ச ரைட்ஸ்னு சேர்த்து சொல்லு” என்றாள் மதுரிமா.

புதிதாய் வாழ்வில் இணைந்த கணவன் மனைவி இருவரும் சிறு பிள்ளை போல் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுதன்.. இதற்கு மேல் தாங்காது என்று உணர்ந்து தான் அங்கு இருப்பதை மற்றவர்களுக்கு உணர்த்தும் விதமாய் ஒரு கையை உயர்த்தி..” அடப் போதும் நிறுத்துங்கப்பா , இப்போ தான் கல்யாணம் முடிஞ்சு இருக்கு அதுக்குள்ள இப்படி சின்னப் பிள்ளைத் தனமா சண்டை போட்டுட்டு இருக்கீங்க!, இங்க பாரு மது தப்பு உன் மேல தான். பொண்ணு பார்க்க வந்தப்பவே உனக்கு இந்த கல்யாணம் வேணாங்கிற விஷயத்தை நீ மாப்பிள்ளை கிட்ட தெளிவா சொல்லி இருந்தா இப்போ இவ்ளோ பிரச்சனை வந்திருக்காது . கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடும் மும்மரமா நடந்துட்டு இருக்கும்போது கல்யாணத்தை நிறுத்த சொல்லி கேட்டா அவரும் என்ன செய்ய முடியும். ” என்று காவியன் தரப்பு இருந்த நியாயத்தை எடுத்துக் கூற முயன்றான்.

” எதுவும் செய்ய முடியாதுன்னா அதை முன்னாடியே சொல்லி இருக்கணும் அதை விட்டுட்டு உன் விருப்பத்தை மீறி எதுவும் நடக்காதுன்னு நல்லவன் மாதிரி எதுக்கு சீன் போடணும்” என்று அப்போதும் காவியன் மீது தனக்கு இருந்த கோபத்தை வெளிப்படுத்தினாள் மதுரிமா.

” உனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லாத விஷயத்தை நீ உன் வீட்டில் சொல்லி இருக்கலாம்ல, உன்னை நீ நல்லவளா காட்டிக்க என்ன என் வீட்ல கெட்டவனா ஆக சொல்றியா?” என்று காவியன் பதில் தர… ” புதுசா கெட்டவன் ஆக என்ன இருக்கு நீ ஆல்ரெடி.. படுமட்டமான கெட்டவன் தானே!” என்றாள் மதுரிமா.

” போதும் மது.. கொஞ்ச நேரம் அமைதியா இரு, இப்படியே ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டே இருந்தா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. ” என்று தன் குரலை உயர்த்தி புரிதல் இல்லாமல் வார்த்தை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இருவரையும் அடக்கினான் சுதன்.

உடல்நிலை சரியில்லாதவனை நோகடிக்கிறோம் என்று புரிந்ததும் மது தன் கோபத்தை புறம் தள்ளி வைத்துவிட்டு அமைதி கொள்ள… அவளைப் பார்த்து கேலிப் புன்னகை செய்து விட்டு, மது சுதன் கரத்தை பற்றி கொண்டு… ” ரொம்ப தேங்க்ஸ் மச்சான்.நான் உங்க இடத்துல இருக்க வேண்டியது, நல்லவேளை நீங்க எங்களை பாலோ பண்ணிட்டு வந்தீங்க!, இல்லைனா இந்நேரம் கல்யாணம் ஹாஸ்பிடல்ல தான் நடந்திருக்கும். ” என்று தனது நன்றியை தெரிவித்தான் காவியன்.

” நான் எங்க உங்களை பாலோ பண்ணிட்டு வந்தேன். நான் மதி கூட வந்த அந்த நாலு பேர தான் பாலோ பண்ணிட்டு போனேன். “என்றான் மது சுதன்.

“நீ யார சொல்ற?, அந்த மட மதியோட பிரண்டுன்னு சொல்லிட்டு நாலு தடிமாடுக சுத்திட்டு இருந்ததே அதுகளையா சொல்ற?” என்றாள் மதுரிமா.

” ஆமா மது, அந்த நாலு பேர தான் ஃபாலோ பண்ணிட்டு போனேன். ” என்று மதுசுதன் ஆமோதிக்க..” அந்த அறவேக்காடுகளை எதுக்கு ஃபாலோ பண்ணிட்டு போன?” என்று குழப்பத்துடன் வினவினாள் மதுரிமா.

” நேத்து நாம தங்கி இருந்த வீட்டில் இருந்து ஒரு மூட்டையை தூக்கிட்டு போனாங்க, என்னன்னு விசாரிச்சதுக்கு காய்கறி மூட்டையை கல்யாண மண்டபத்துக்கு தூக்கிட்டு போறோம்னு சொன்னாங்க.. எனக்கு அவங்க மேல கொஞ்சம் சந்தேகமா இருந்தது.. அது மட்டும் இல்ல உன் ரூம் சைடுல இருந்து வேற வந்தாங்க, எதுக்கும் ஒரு தடவை செக் பண்ணி விடுவோம் என்று ரூமுக்கு வந்தேன் அங்க உன்னைக் காணோம். ஒருவேளை அந்த மூட்டையில உன்னை தான் மறைச்சு வச்சு கொண்டு போறாங்களோனு சந்தேகப்பட்டு தான் அவங்க போன ஆட்டோவை பாலோ பண்ணிட்டு போனேன். ஒரு சிக்னல்ல மிஸ் பண்ணிட்டேன். அதுக்கப்புறம் எந்த பக்கம் போனாங்கன்னு தெரியாம ஒவ்வொரு ரூட்லயும் தேடிட்டு வந்தப்ப தான் உங்கள பார்த்தேன். ” என்று முதல் நாள் இரவு நடந்ததை விளக்கமாக விவரித்தான் மது சுதன்.

” என்ன என் ரூம்ல இருந்து மூட்டையை தூக்கிட்டு போனாங்களா?..” என்று ஒரு நொடி குழப்பத்துடன் யோசித்தவள், “அச்சச்சோ அப்ப சகாவை கடத்திட்டாங்களா!” என்று அதிர்ச்சியுடன் கதறினாள் மதுரிமா.

” என்ன சொல்ற மது?” என்று ஆண்கள் இருவரும் குழப்பமாய் கேள்வி எழுப்ப…” நான் அங்க இருந்து கிளம்பினது தெரிஞ்சா எல்லாருக்கும் சந்தேகம் வரும்னு எனக்கு பதிலா சகாவை தான் அந்த ரூம்ல விட்டுட்டு வந்தேன், இப்போ நீ சொல்றத வச்சு பார்த்தா மதி ஆளுங்க சகாவை கடத்திட்டு போயிட்டாங்க போல…” என்று தன் தோழியின் நிலை எண்ணி கலங்கியபடி பேசினாள் மதுரிமா.

தன் மனைவியின் கவலை படிந்த முகத்தை கண்டு கலங்கிப் போனவன்.. அவசரமாய் அவள் அருகில் நெருங்கி… ஆறுதலாய் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு,” நீ கவலைப்படாத உன் பிரண்டுக்கு ஒன்னும் ஆகாது. அவளை பத்திரமா கூட்டிட்டு வர வேண்டியது என்னோட பொறுப்பு. ” என்று நம்பிக்கை வார்த்தை கூறிட… அதுவரை கொண்டிருந்த கோபம் மறந்து, ” ப்ளீஸ் காவியன் அந்த மதி ஏதாவது செய்றதுக்குள்ள எப்படியாவது சகாவை காப்பாத்திடுங்க” என்று மன்றாடினாள் மதுரிமா.

” என்ன நடந்ததுன்னு உறுதியா தெரியாம.. நாம ஏதாவது சொல்லப் போய், ஒருவேளை நாம சந்தேகப்பட்ட மாதிரி எதுவும் நடக்காம இருந்தா, பிரச்சனை வேற மாதிரி மாறிடும். அதனால இப்போதைக்கு இந்த விஷயம் வீட்ல யாருக்கும் தெரிய வேணாம். என்னை எங்கன்னு கேட்டா பிரண்ட்ஸை பார்க்க வெளியே போய் இருக்குன்னு சொல்லிடுங்க.” என்றவன் அண்ணனுடன் தங்கையை தங்கி இருக்கும் படி கூறிவிட்டு அவசரமாய் அங்கிருந்து வெளியேறினான்.

கணவன் சென்ற திசையையே நம்பிக்கை தேங்கிய விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்த தங்கையை பார்த்து பெருமிதமாய் புன்னகைத்துக் கொண்ட மது சுதன்…” நம்ம அம்மாவுக்கு அமைஞ்ச மாதிரி அடிமை வாழ்க்கை உனக்கு கிடைச்சிருமோன்னு பயந்து தானே நீ கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டு இருந்த.. நீ பயந்த மாதிரி எதுவும் நடக்காம உனக்கு ரொம்ப நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்குன்னு நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு மது” என்றான்.

“இன்னைக்கு தான் கல்யாணம் முடிஞ்சு இருக்கு அதுக்குள்ள எப்படி எனக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்குன்னு இவ்ளோ நம்பிக்கையா சொல்ற?” என்று தன் மூத்தவனின் வார்த்தைக்கு காரணம் வினவினாள் மதுரிமா.

“நம்ம அம்மா என்னைக்காவது அப்பா கூட சரிக்கு சமமா நின்னு பேசி பாத்திருக்கியா?, அம்மாவுக்கு மட்டும் இல்ல நமக்குமே அந்த வீட்டில பேச்சுரிமை இருந்தது இல்லை. ஆனா காவியன் கூட நீ எந்த அளவுக்கு சரிக்கு சமமா சண்டை போடுற!.. நீ என்னதான் எதிர்த்து பேசினாலும் உனக்கு பதிலுக்கு பதில் தராரே தவிர உன்னை பேசாம அடக்கி வைக்கணும்னு ஒரு நிமிஷம் கூட

அவர் நினைக்கவே இல்ல. இப்ப கூட நீ கவலைப்பட்டதும் அவர் கலங்கி போறாரு. உனக்கு கிடைச்சிருக்குறது நல்ல வாழ்க்கைன்னு நிரூபிக்க… இதுக்கு மேல வேற என்ன வேணும் மது.” என்று தான் உணர்ந்த காரணத்தை உரைத்தான் மது சுதன்.

தமையனின் வார்த்தையில் இருந்த உண்மை புரிய துவங்கவும்… முதன்முறையாக தனது திருமண வாழ்க்கை குறித்து நேர்மறையாக சிந்திக்க துவங்கினாள் மதுரிமா.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement