31….
தொலைவேன் என்றே
தெரியாமல் மொத்தமாய் தொலைந்து கொண்டிருக்கின்றேன்
உன்னில்…..
சுஹனியின் அரக்கன் எனும் வார்த்தை கீர்த்தன் மனதில் இருந்த பழைய நினைவுகளை மீட்டெடுக்க… பழைய நினைவில் மூழ்கினான் கீர்த்தன்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்.. வற்றாத வளத்துடன் செல்வ செழிப்புடன் இருந்த செங்கோட தேசிங்க புரத்தை.. கீர்த்தி வர்ம தேசிங்கன் சீரும் சிறப்புமாய் ஆட்சி புரிந்து வந்தான்.
கற்பனையில் கூட எவருக்கும் தீங்கு எண்ணாத கீர்த்தி வர்ம தேசிங்கன் பாலகனாய் இருந்தபோதே கொடுநோய் தாக்கத்தால் பல நாள் படுத்த படுக்கையாக இருந்த தந்தையை பறிகொடுத்தான்.
தந்தைக்குப் பின் அரியணை பதவி அவரது தனையனுக்கு வந்து சேர்ந்திட.. அனுபவ அறிவு இல்லாத சிறு பாலகனுக்கு பக்க பலமாய் நின்றவர் அரண்மனை ஜோதிடரும் கீர்த்திவர்மனின் தந்தையின் ஆருயிர் நண்பருமான கால பைரவர்.
காலபைரவரின் வழிகாட்டுதலின்படியும், தந்தை காலத்தில் இருந்தே அரசவையில் பணியாற்றும் முக்கிய அமைச்சர்களின் ஆலோசனைப்படியும் மக்களின் நலனையும், அரசவை பொறுப்பையும், நல்விதமாய் ஆட்சி புரிந்து வந்தான் கீர்த்தி வர்ம தேசிங்கன்.
பெரும்பாலும் பகையை வெறுக்கும் கீர்த்திவர்மன் தனது அண்டை நாடுகளுடன் இயன்ற அளவு நட்பு பாராட்டவே விரும்பினான் ஆகையால் செங்கோட தேசிங்க புரத்திற்கு பகை நாடுகள் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் நட்பு நாடுகள் எண்ணிலடங்காத வகையில் ஏராளமாய் இருந்தன.
பிற உயிர்களுக்கு தீங்கு எண்ணாத கீர்த்தி வர்மன் தனது உணவில் கூட எந்த உயிரையும் பலி கொடுக்காத சைவ வகைகளையே விரும்பி உண்ணுவான். நவ தானியங்கள் திணை வகைகள் மற்றும் பலவகை பழங்கள் கிழங்கு வகைகளே அவனது அன்றாட உணவாய் திகழ்ந்தது.
சில வருடங்கள் கடந்து பாலகன் இப்போது பருவ வயதை எட்டி இருந்தான்..
தந்தை இருவரும் எவ்வாறு பாலக பருவத்தில் இருந்தே பலகால நண்பர்களோ அதே போல் ஜோதிடரின் மகனான காந்தாரன் மற்றும் கீர்த்தி வர்ம தேசிங்கன் இருவரும் பாலக பருவத்தில் இருந்தே நெருங்கிய நட்புடன் பழகி வந்தனர்.
நட்பின் மீது கொண்ட அன்பினால் கீர்த்திவர்மன் காந்தாரனுக்கு அரசவையில் பதவி வழங்கிட முன்வர.. ” உன் நட்பினை பயன்படுத்தி அரச பதவியில் அமர்ந்ததாய் பேச்சு எழும். அத்தகைய ஏளன பேச்சுப் எனக்கு வேண்டாம் தேசிங்கா, எனக்கு உன் ஆருயிர் நண்பன் எனும் பதவியே போதுமானது.”என்று மறுத்தான் காந்தாரன்.
“அரசவைப் பதவியை வேண்டாம் என்கிறாய், அவ்வாறெனில் பலரது எண்ணத்தில் இருப்பது போல் நீயும் உன் தந்தையை பின்பற்றி… ஜோதிட சாஸ்திரங்களை கற்றுக்கொள்ள போகிறாயா !” என்று கீர்த்தி வர்மன் வினவ..
“எனக்கு ஜோதிட கலைகள் பயில்வதில் நாட்டமில்லை தேசிங்கா…”என்று நண்பனின் வார்த்தையை மறுத்து உரைத்தான் காந்தாரன்.
“பின் என்ன செய்வதாய் உத்தேசம்…?” என்று குழப்பத்துடன் வினவினான் கீர்த்தி வர்மன்.
“முன் நடந்ததையோ பின் நடக்கப் போவதையோ கனித்துக் கூறும் ஜோதிட சாஸ்திரங்களின் மீது எனக்கு இருந்த நம்பிக்கை மடிந்து பலகாலமானது, நம் விதியையே மாற்றி அமைக்கக்கூடிய மாய வித்தைகளை கற்று என் வாழ்வையே மாற்றி அமைக்க போகிறேன். “என்றான் காந்தாரன்.
“என்ன மாயவித்தைகளா?, எனக்கு என்னவோ நீ தவறான பாதையை நோக்கிச் செல்வதாக தோன்றுகிறதே நண்பா, இருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை நன்கு யோசித்து பெரியவர்களின் ஆலோசனை பெற்ற பின் உன் செயலில் இறங்கு” என்று அறிவுரை வழங்கினான் கீர்த்தி வர்மன்.
“பெரியோர்களின் ஆலோசனையா!, அது என்றும் நம்மை பின்னுக்கு இழுப்பதாகத் தான் இருக்கும் முன்னேறிச் செல்ல வழி வகுக்காது. “என்று அலட்சியமாய் காந்தாரன் கூறிட… “அப்படி கூறி விட இயலாது காந்தாரா, என் தந்தை மரணத்தின் பின் உன் தந்தையின் வழிகாட்டுதல் படி தான் இன்று வரை நான் அரசாட்சி புரிந்து வருகிறேன். ஆகையால் உன் விசித்திர எண்ணம் குறித்து உன் தந்தையிடம் ஒருமுறை நீ ஆலோசிப்பது சரியாக இருக்கும்”என்றான் கீர்த்தி வர்மன்.
“என் தந்தைக்கு என் ஆசைகள் எதுவும் புரியாது, அவர் விருப்பத்தையே என் மீது திணிக்க முயல்கிறார், ஜோதிட சாஸ்திரங்களை விட மாந்திரீகமே மகத்தானது என்னும் என் வாதத்தை ஏற்க அவர் தயாராக இல்லை, இனி நான் அவர் பேச்சுக்கு செவிமடிக்கப் போவது இல்லை, என் விருப்பப்படியே மாய வித்தைகள் கற்றுக் கொள்ளும் பயிற்சியில் இறங்கப் போகிறேன்.”என்று தனது முடிவை தீர்மானமாக அறிவித்தான் காந்தாரன்.
நண்பனின் நடவடிக்கை குறித்து கவலை கொண்ட கீர்த்திவர்மன் அது குறித்து.. காந்தாரனின் தந்தையான கால பைரவரிடம் ஆலோசனை மேற்கொண்டான்.
“நான் எத்தனையோ விதத்தில் ஆலோசனை வழங்கி விட்டேன் அரசே இருந்தும் அவன் பிடிவாதம் மாறுவதாக இல்லை. திருமண பந்தத்தில் இணைந்த பின் அவன் கொண்ட எண்ணம் மாறும் என்று எதிர்பார்க்கிறேன்.”என்று வருத்தமான குரலில் கூறினார் கால பைரவர்.
“இது நல்ல யோசனையாக தெரிகிறதே! விரைவாக காந்தாரனின் திருமண ஏற்பாட்டை கவனியுங்கள் .திருமணத்திற்குப் பிறகு அவனது எண்ணத்தில் மாற்றம் நிகழும் என்று எனக்கும் நம்பிக்கை உள்ளது. “என்றான் கீர்த்திவர்மன்.
“அப்படியே ஆகட்டும் அரசே!.”என்று கால பைரவர் சம்மதம் தெரிவிக்க.. அவர் குரலில் உண்டான மாறுதலை கவனித்த கீர்த்தி வர்மன், “என்ன தங்களின் குரலில் வருத்தம் மேலோங்கி இருக்கிறது. எங்கு சென்று பெண் தேடுவது என்று கலங்கி தவிக்கின்றீரோ! ” என்று அக்கறையுடன் வினவினான் கீர்த்தி வர்மன்.
“அவன் விருப்பத்திற்கு ஏற்ப பெண் தேடுவது சற்றுக் கடினம் என்று தோன்றுகிறது அது தான் என் கவலைக்கான காரணம்.”என்று தன் மன்னனின் வார்த்தையை ஆமோதித்தார் ஜோதிடர் காலபைரவர்.
“அது குறித்து தாங்கள் கவலை கொள்ள வேண்டிய அவசியமே இல்லை ஜோதிடரே! காந்தாரனுக்கான பெண் உங்கள் உறவிலே இருக்கிறாள்.”என்றான் கீர்த்திவர்மன்.
“என்ன என் உறவிலா?, தாங்கள் காதம்பரியையா கூறுகின்றீர்?” என்று புரியாத குழப்பத்துடன் காலபைரவர் வினவ.. “ ஆம் தங்களின் சகோதரியின் மகள் கதம்பரியை தான்.. குறிபிட்டு கூறுகின்றேன்,
அவனது சிறுவயதிலிருந்தே அத்தை மகள் மீது அதாவது உங்கள் சகோதரியின் மகள் காதம்பரியின் மீது அளவில்லா காதலுடன் இருக்கிறான். அந்தப் பெண்ணையே அவனுக்கு பேசி முடியுங்கள். அந்தப் பெண் அவன் வாழ்க்கையில் இணைந்த பின் நிச்சயம் அவன் கொண்ட கொள்கை மாறும்.”என்று உறுதியாக கூறினான் கீர்த்தி வர்மன்.
“இல்லை அது அவ்வாறு நடக்க வாய்ப்பே இல்லை” என்று அவசரமாய் மறுத்தார் காலபைரவர்.
“ஏன் நடக்க வாய்ப்பில்லை என்கின்றீர்?, காந்தாரன் பிடிவாதம் குறித்து நான் சொல்லி தங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. அவன் காதலிக்கும் பெண் அல்லாது வேறு ஒருவளை மணக்க ஒருபோதும் சம்மதிக்க மாட்டான்.” என்று நண்பனின் குணம் அறிந்து பேசினான் கீர்த்தி வர்மன்.
“ என் மைந்தன் குணம் குறித்து நான் அறியாததா அரசே!, அவன் பிரியமும் பிடிவாதமும் ஒருபுறம் இருக்கட்டும், காலம் அவன் காதலுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை அரசே!” என்றார் காலபைரவர்.
“ இங்கு தாங்கள் காலம் என்று குறிப்பிடுவது.. காலத்தையா.. இல்லை காந்தாரனின் தந்தையான தங்களையா?” என்று சந்தேகம் வினவினான் கீர்த்தி வர்மன்.
கசந்த புன்னகை செய்தவர், “ என் மைந்தன் விருப்பத்திற்கு நான் என்றும் தடையாய் இருந்தது இல்லை அரசே, நான் இங்கு காலம் என்று குறிப்பிட்டது நம் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் விதியை. காந்தாரனுக்குத் தான் காதம்பரி என்று பெரியவர்கள் அனைவரும் பேசி முடித்தது தான். இருப்பினும் இருவரின் பிறப்பின் ரேகைகளும், கட்டங்களும் வேறு கதை சொல்கிறது” என்று குழப்பமாய் நிறுத்தினார் காலபைரவர்.
“ விளங்கவில்லை.. சற்று விவரமாக கூறுங்கள்” என்று விளக்கம் கேட்டான் கீர்த்தி வர்மன்.
“ காந்தாரன் ஜாதக அமைப்பும், காதம்பரி ஜாதக அமைப்பும் கொஞ்சம் கூடப் பொருந்தவில்லை, காதம்பரி ஒரு நாட்டிற்கு ராணி ஆகக்கூடிய ஜாதக அமைப்பை கொண்டவள்.” என்று காலபைரவர் கூறிக் கொண்டிருக்க… “ அவ்வளவு தானே… என் ராஜ்ஜியத்தின் கீழ் உள்ள நாட்டை என் நண்பன் வசம் ஒப்படைத்து, அவனை மன்னனாக மாற்றி விடுகிறேன். இப்போது இருவருக்கும் பொருத்தும் உண்டு தானே!” என்றான் கீர்த்தி வர்மன்.
இல்லை என்பது போல் மறுப்பாய் தலையசத்தவர், “ தங்களுக்கு விஷயத்தின் வீரியம் புரியவில்லை, காதம்பரியின் காதல் கந்தாரனுக்கு மரணத்தை கொடுக்க வல்லது. அதாவது… காதம்பரியை காதலோடு அணுகினால் அது காந்தாரன் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்” என்றார் காலபைரவர்.
“ என்ன சொல்கின்றீர்? “ என்று குழப்பமாய் கீர்த்தி வர்மன் வினவ.. “ என் மைந்தன் இராவணன் போன்று… காதம்பரி சீதை போன்று, ராமனுக்கு சொந்தமான சீதையை காதலோடு அணுகிய ராவணனுக்கு என்ன நிகழ்ந்ததோ! அதுவே காந்தாரனுக்கும் நிகழும். இவர்கள் ஏழேழு பிறவியிலும் இணைய வாய்ப்பில்லை” என்று விரிவாய் விளக்கம் கொடுத்தார் கால பைரவர்.
“ இதற்கு வேறு வழியே இல்லையா?” என்று நண்பன் நலனை எண்ணி கவலையுடன் வினவினான் கீர்த்தி வர்மன்.
“இருவரும் ஒன்றாய் இணைந்து நாற்பத்தி எட்டு மண்டலம் சிவபார்வதி பூஜையில் கலந்து கொண்டு அவர்கள் கரத்தினால் இறைவனுக்கு அபிஷேக பூஜைகள் செய்து வர.. அவர்கள் விதிப் பலன் குறைந்து, இருவருக்கும் மனப் பொருத்தம் நிகழ வாய்ப்புள்ளது. மண்டல பூஜை நிறைவு தினத்தன்றே இருவருக்குமான திருமணத்தையும் நிகழ்த்தி விடலாம்” என்று யோசனை கூறினார் காலபைரவர்.
“ இப்படி ஒரு வழிமுறை உள்ள போது.. இன்னும் ஏன் தயக்கம், உடனே மண்டல பூஜைக்கு வேண்டிய ஏற்பாட்டை கவனியுங்கள்” என்றான் கீர்த்தி வர்மன்.
“ இது முழுமையான பலனைத் தரும் என்று என்னால் உறுதியாக கூற முடியாது அரசே!,” என்று தயக்கத்துடன் கூறினார் காலபைரவர்.
“ என்ன சொல்கின்றீர்?, உறுதியாக கூற முடியாது என்றால் என்ன அர்த்தம்?, அப்படியெனில் அவர்கள் வாழ்வில் இணைவே முடியாதா?” என்று சோர்வுடன் வினவினான் கீர்த்தி வர்மன்.
“ விதிப் பலன் குறைய வாய்ப்புள்ளது அவ்வளவே, பூஜை நல்லபடியாக நிறைவடைய வேண்டுமே.. காந்தாரன் மண்டல பூஜைக்கு ஒப்புக்கொள்ளவில்லை, ஏதேதோ மாந்திரீகத்தின் மூலமாக அவன் விதியையே மாற்றி அமைக்கப் போவதாகவும் இறை வழிபாட்டின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறித் திரிகிறான். “ என்று காலபைரவர் கூறிட…” எல்லாம் நல்லபடியாக நடந்தேறும்.. காந்தாரனை பூஜைக்கு சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு, நீங்கள் மண்டல பூஜைக்கு வேண்டிய ஏற்பாட்டை கவனியுங்கள்” என்று உத்தரவு பிறப்பித்தான் கீர்த்தி வர்மன்.
“அப்படியே ஆகட்டும் அரசே!” என்று இனி தன் மைந்தன் வாழ்வு நிறைவடையும் என்ற நிறைவுடன் அங்கிருந்து விலகிச் சென்றார் காலபைரவர்.
தந்தைக்கு வாக்களித்தது போலவே… அவர் தனையனை வரவழைத்து.. ஒருவழியாக மண்டல பூஜைக்கு சம்மதிக்க வைத்தான் கீர்த்தி வர்மன்.
இறை வழிபாட்டில் நம்பிக்கை இல்லை என்ற போதும்.. நண்பனின் வேண்டுகோளுக்கு செவி மடித்து… மண்டல பூஜைக்கு காந்தாரன் சம்மதித்த செய்தி அறிந்ததும்.. உடனடியாக பூஜைக்கு வேண்டிய ஏற்பாட்டை கவனித்த காலபைரவர், காதம்பரி மட்டும் அவளது பெற்றோரையும் தங்கள் ராஜ்யத்திற்கு அழைத்து வந்தார்.
மூகூர்த்த தினம் ஒன்றில் பூஜைக்கான ஏற்பாடு துவங்கியது, “ எனக்கு இறை வழிபாட்டில் நம்பிக்கை இல்லை எனும் போதும் உனக்காகத் தான் பூஜைக்கு சம்மதித்தேன் தேசிங்கா.. நாளை துவங்க உள்ள பூஜையில் நீயும் எங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்” என்று அன்புக் கட்டளை விதித்தான் காந்தாரன்.
“என்னைத் தவறாக எண்ணாதே!, இது உங்கள் இருவருக்குமான பூஜை, இதில் அன்னியர் தலையீடு இல்லாமல் இருப்பது நல்லது என்று தோன்றுகின்றது, மண்டல பூஜை நல்லபடியாக நிறைவடைந்ததும் நடைபெறும் உங்கள் திருமணத்தை நம் அரண்மனையில் என் தலைமையில் சீரும் சிறப்புமாக நிகழ்த்தி விடலாம்” என்று நண்பனுக்கு சமாதனம் கூறினான் கீர்த்தி வர்மன்.
“ அப்படியே ஆகட்டும்” என்று மகிழ்வுடன் சம்மதித்தான் காந்தாரன்.
அழகாய் விடிந்த அதிகாலைப்பொழுதில் தன் மஞ்சத்தில் உறங்கிக் கொண்டிருந்த.. கீர்த்தி வர்மன் அறையில் மயில் தொகை கொண்ட வெண்புறா ஒன்று அம்பு தைத்த காயத்துடன் வந்து விழுந்தது.
அதிகாலை அரை உறக்கத்தில் இருந்தவன் கவனத்தை வெண்புறா கலைக்க.. காயம் கண்ட புறாவிற்கு வேண்டிய மருத்துவ உதவி புரிந்து.. பறக்க இயலா நிலையில் கிடந்த புறாவிற்கு தனது அறையிலேயே அடைக்கலம் கொடுத்துப் பராமரித்து வந்தான் கீர்த்தி வர்மன்.
புதிதாய் வந்து சேர்ந்த புறாவிற்கு வேறு விலங்குகள் மற்றும் பறவைகளால் தொல்லை ஏற்படாத வகையில் பாதுகாக்க.. தங்கக் கூண்டு ஒன்று தயார் செய்து அதில் புறாவை சிறை பிடித்து பத்திரப்படுத்தி பாதுக்காத்து வந்தான்.
அரசவை இல்லாத நாட்களில் பெரும் பொழுதை தனது அறையில் வெண்புறாவுடன் செலவழித்த கீர்த்தி வர்மனிடம் பாசத்துடன் ஒன்றிப் போனது புறா.
கீர்த்தி வர்மனை காணும் வரை சோர்வுடன் கூண்டில் அடைபட்டுக் கிடக்கும் புறா அவனைக் கண்டதும் கூண்டை திறந்து விட வேண்டி அமைதி இன்றி கூண்டுக்குள்ளேயே அங்கும் இங்கும் அலைபாயும், அதன் செய்கையின் காரணம் புரிந்து கொண்ட கீர்த்தி வர்மனோ உடனே தங்கக் கூண்டைத் திறந்து
சில தினங்கள் கடந்த நிலையில் வெண்புறா காயம் குணமடைந்து, அடைக்கலம் கொடுத்தவனை விட்டு அதன் இருப்பிடத்தை நோக்கி பறந்து சென்றது. பாதுகாக்க நினைத்து கூண்டில் சிறை வைத்தது பிடிக்காமல் பறந்து போனதாய் கீர்த்தி வர்மன் எண்ணிக் கொண்டான். தங்கக் கூண்டே என்றாலும் சிறை சிறை தானே… விடுதலை வேண்டி வெண்புறா தன்னை விட்டு பறந்து சென்றதாய் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு தனது அன்றாடப் பணிகளில் கவனத்தைச் செலுத்த துவங்கினான்.
அரசவையில் இருக்கும் போது.. இயல்பாய் இருக்கும் கீர்த்தி வர்மன்.. அரசவை நீங்கி தனது அறைக்கு வந்ததும் வெண்புறாவின் நினைவில் மூழ்கி விடுவான், அவ்வாறு ஒரு நாள் வெறுமையான தங்கக் கூண்டை வெண்புறா நினைவுடன் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அவனது அறையின் சாளரத்தில் வந்து நின்றது அவன் மனம் தேடித் தவித்த புறா.
ஆசையாய் அதன் அருகில் சென்றவன்… தன் வலக்கரத்தை அதன் புறம் நீட்ட… சற்றும் தயங்காமல் பறந்து வந்து அவன் கரத்தில் நின்றது.
“ என்னைத் தேடி வந்துவிட்டாயா?, உன்னைக் காணாது தவித்துப் போனேன் தெரியுமா?” என்று தன் உணர்வை வெளிப்படுத்தி… அதன் தலையை இதமாய் வருடிக் கொடுத்தவன், கைகளில் அதன் கழுத்தில் இருந்த சிறு ஓலை தட்டுப்பட்டது, அதனை எடுத்து வாசிக்கத் துவங்கினான்..
‘ என் மயிலினியை காத்து.. பாதுகாப்பாய் மீண்டும் என்னிடம் சேர்த்ததற்கு மனமார்ந்த நன்றிகள்..’ எனும் வாசகத்தை வாசித்து முடித்தவன், மற்றொரு சிறு ஓலையில்… ‘ மயிலினி போன்றதொரு அருமையான தோழியை எனக்கு அறிமுகம் செய்து வைத்த தங்களுக்கு மனம் மகிழ்ந்த நன்றிகள்’ என்று வாசகத்தை எழுதி மீண்டும் புறாக் கழுத்தில் கட்டிவிட்டு அனுப்பி வைத்தான் கீர்த்தி வர்மன்.
மடல் ஏந்திச் சென்ற வெண்புறா… அடுத்த நாளும் ஒரு செய்தி தாங்கி வந்தது, இவனும் அதற்கு பதில் செய்தி அனுப்பி வைப்பான்.. இவ்வாறு.. புறாவின் உரிமையாளருக்கும், அதனை காத்தவனுக்கும் இடையில் முகம் காணா நட்பு மலர்ந்தது.
ஒருமுறை மடலில் தோழரே!, என்று கீர்த்தி வர்மன் குறிப்பிட்டு அனுப்பி வைக்க.. ‘ நான் தோழர் அல்ல, தோழியாவேன்!’ என்று பதில் வர.. கீர்த்தி வர்மன் மனம் ஏனோ அளவில்லா உவகை கொண்டது, ‘ தங்களைக் காண ஆவலாக உள்ளேன்!’ எனும் பதில் செய்தியை கீர்த்தி வர்மன் அனுப்பி வைக்க… ‘ அத்தகைய ஆவல் எனக்கில்லை’ எனும் வாசகம் பதிலாய் வந்தது.
‘ ஏன் என்னைக் காண தயக்கமா?, நான் அரக்கன் அல்ல!’ என்று கீர்த்தி வர்மன் அனுப்பி வைக்க.. ‘ அரக்கனோ அழகனோ நான் எங்கு கண்டேன்” என்று பதில் வந்தது.
‘ நேரில் வந்து பார்த்தால் தெரிந்து விடப் போகிறது’ என்று கீர்த்தி வர்மன் அனுப்பி வைக்க.. ‘ ஏன் என்னைக் காண இத்தனை ஆவல் என்று நான் அறிந்து கொள்ளலாமா?’ என்று பதில் அனுப்பி வைத்தாள் அவள்.
‘ என்னவென்று சொல்வது… ஏனோ மனம் உன்னைக் காண ஏங்குகின்றது.’ என்று கீர்த்தி வர்மன் அனுப்பி வைக்க.. ‘ பெண் என்றதும் மனம் ஏங்கத் துவங்கிவிட்டதோ!’ என்று பதில் வந்தது.
‘ இருக்கலாம், பெண் என்றால் பேயும் இறங்குமாம், நான் சாதாரண மானுடன்’ எனும் வாசகத்தை கீர்த்தி வர்மன் அனுப்பி வைக்க.. ‘ தாங்கள் மானுடன் என்று தாங்கள் தான் சொல்லிக் கொள்கிறீர்.. எனக்கு என்னவோ தாங்கள் என்னைக் காணத் தவிப்பதை எண்ணும் போது, மானுடர்களை வேட்டையாடும் அரக்கன் போல் தோன்றுகின்றது’ என்றும் வாசகம் பதிலாய் வந்தது.
‘ நான் அரக்கனாய் இருந்திருந்தால் உன் மயிலினி மீண்டும் உன் கரம் சேர்ந்திருக்காது’ என்று கீர்த்தி வர்மன் எழுதி அனுப்ப.. ‘ அவ்வாறெனில் தாங்கள் அழகானோ!’ எனும் பதிலை ஓலை தாங்கி வந்தது.
‘ பார்ப்பவர் மனங்களை பொருத்து, கருத்துகள் மாறுபடலாம்’ என்று கீர்த்தி வர்மன் பதில் தர…’ என்னைக் காண ஏன் இத்தனை ஆவல்’ என்று அவள் கேட்க.. ‘என் உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் உள்ளபடி உரைத்தால் என்னைக் காண வருவாயா?’ என்று கேள்வியை தாங்கிய ஓலையை அனுப்பினான் கீர்த்திவர்மன்.
‘ உங்கள் உள்ளம் உரைப்பது உண்மை என்று தோன்றினால்.. உங்கள் கோரிக்கை பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்’ என்று முகம் காணப் பெண் அனுப்பி வைக்க… ‘ என் உள்ளத்தில் நிறைந்து இருப்பது.. நீ மட்டுமே!, முகம் காணா உன்னை என் வாழ்வின் சரிபாதியாய் ஏற்கத் துவங்கி விட்டது என் மனம். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்… நான் உன்னைக் காதலிக்கிறேன், என் உயிரினும் மேலாக உன்னை நேசிக்கிறேன். உன்னை என் வாழ்வில் இணைத்துக் கொள்ளத் தவிக்கிறேன்’ என்று நீண்ட நெடுந் தொடராய் தன் விருப்பத்தை ஓலையில் எழுதி வெண்புறா மூலம் தூது அனுப்பினான் கீர்த்தி வர்மன்.
அடுத்து சில நாட்கள் மடல் எதுவும் இல்லாமல் போனது.
‘ என்ன நேர்ந்தது?, நான் என்னத் தவறாக கேட்டுவிட்டேன், ‘ என்று கீர்த்தி வர்மன் குழம்பித் தவித்துக் கொண்டிருக்க… அவன் தவிப்பை தீர்க்கும் விதமாய் மீண்டும் மடல் தாங்கி வந்தது வெண்புறா.
‘பெயர் கூட அறியாத ஒருவரின் வார்த்தையை ஏற்க என் மனம் தயக்கம் கொள்கிறது. உங்கள் காதலுக்கு சம்மதம் சொல்லும் வகையில் என் சூழல் இல்லை, என்னை மறந்து விட்டு தங்கள் பணியில் கவனம் செலுத்தவும்’ என்று காதலை மறுக்கும் விதமாய் பதில் மடல் அனுப்பி வைத்திருந்தாள் அவள்.
மறந்துவிடு என்று முகம் காணா மங்கை சொன்ன போதும் கீர்த்தி வர்மன் மனம் ஏனோ அவளையே எண்ணித் தவிக்கத் துவங்கியது, மனதால் அழகியான தன்னைக் கவர்ந்தவள் முக அழகைக் காண ஆவல் கொண்டான் கீர்த்தி வர்மன். நண்பனின் நடவடிக்கையில் மாற்றத்தை உணர்ந்த காந்தாரன், “ நானும் சில காலமாய் உன்னைக் கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றேன், உன் நடவடிக்கை எதுவும் சரியில்லை, அரசவையில் கூட உன் கவனம் எங்கோ உள்ளது, ஏன் இவ்வாறு பித்துப் பிடித்தது போல் அலைகிறாய் தேசிங்கா” என்று அக்கறையாய் வினவினான்.
“ காதல் பித்து என்னை ஆட்டிப் படைக்கிறது காந்தாரா..!” என்று தனக்கு நிகழ்ந்த அனைத்தையும் முழுதாய் கூறி முடித்தவன், தன்னை இந்த அளவிற்கு பாடாப் படுத்தும் மங்கையின் பெயர் அறியவில்லை என்றாலும் அவள் வளர்ப்பில் இருக்கும் மயில் தோகை கொண்ட வெண்புறா பெயரை நண்பனிடம் அறிவித்து, “ எனக்கு யாரிடம் உதவி கேட்பது என்று புரியவில்லை, எனக்கு நீ உதவி புரிவாயா நண்பா” என்றான் கீர்த்தி வர்மன்.
“நிச்சயமா!” என்று காந்தாரன் உறுதி கூறிட… நண்பனின் மீது கொண்ட நம்பிக்கையில் நிம்மதி கொண்டான் கீர்த்தி வர்மன்.
காதம்பரியைத் தேடி வந்தவன், அவள் கைப்பிடியில் இருந்த வெண்புறாவைக் கவனித்து, “ இது உன்னுடையதா?” என்று விசாரிக்க… “ ஆம் இவள் என் தோழி பெயர் மயிலினி” என்று அறிவித்தாள் காதம்பரி.
வெண்புறாவின் பெயர் அறிந்ததும் கீர்த்தி வர்மன் கூறிய பெண் இவளாக இருக்கக் கூடுமோ என்று சந்தேகம் கொண்ட காந்தாரன், அவள் அறையில் இல்லாத வேளையில் அவளது அனுமதி பெறாமலேயே அவள் உடமைகளை சோதனையிடத் துவங்கினான்.
பட்டாடை பாதுகாத்து வைக்கும் பெட்டகத்தில் வெண் பட்டு துணியில் சில ஓலைகள் இருக்க.. அதை வாசித்துப் பார்த்தவனுக்கு கீர்த்தி வர்மனின் காதலுக்கு சொந்தமானவள் காதம்பரியாக இருக்கக் கூடுமோ எனும் சந்தேகம் உறுதியானது.
இதற்கு மேலும் தாமதத்தால் தன் காதல் கைக்கு கிட்டாமல் போய்விடுமோ என்று அச்சம் கொண்ட காந்தாரன் அமைதி இழந்து உடனே திருமணத்திற்கு ஏற்பாடு செய்தான்.
காதலில் விருப்பம் இல்லை என்று அறிவித்தப் போதும்.. பெண்ணவள் மனம் கீர்த்தி வர்மன் நினைவிலேயே உழன்றுத் தவித்தது. மனதில் ஒருவன் நினைவை சுமந்து கொண்டு மற்றொருவனுக்கு மாலையிடுவது சரியல்ல என்று எண்ணிய காதம்பரி திருமணத்திற்கு மறுக்க… அவளை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்தான் காந்தாரன்.
வேறு வழியறியாத காதம்பரி நஞ்சுண்டு மணமேடையிலேயே தன் உயிரை நீத்தாள்.
தன் காதலியின் மரணத்திற்கு தான் தான் காரணம் என்பதை உணர்ந்து கொள்ளாமல் அவள் மனதை காதல் கொண்டு கலைத்த கீர்த்தி வர்மன் மீது முழு வன்மத்தை வளர்த்துக் கொண்டான்.
காதம்பரி பிரிவை ஏற்க மனம் இல்லாமல், மாந்திரீகத்தின் உதவியுடன் மடிந்தவளை மீட்டெடுக்க முடிவெடுத்தான், ராஜ்யத்தின் தென் திசையில் இருந்த வனத்தில் மாந்தீரீக செயல் பாடுகள் அதிகம் இருப்பதை அறிந்து கொண்ட காந்தாரன் அந்த வனத்தை நோக்கி சென்றான்.
கண்டோதரி எனும் துர்தேவதையின் சேவகர்களை நேரில் சந்தித்தவன் அவர்களிடம் நடந்ததை விவரிக்க… நடுநிசி பூஜையில் கண்டோதரியை வணங்கி அவளிடம் தன் ஆன்மாவை அடைக்கலமாய் ஒப்படைத்தான் காந்தாரன்.
நூற்றி எட்டு நிறைமாத கரு சுமந்து நிற்கும் கர்ப்பிணிப் பெண்களை துர்தேவதை கண்டோதரிக்கு பலி கொடுப்பதன் மூலம் மடிந்தவள் மீண்டு வருவதோடு அல்லாமல், புது ஜனனம் மனமும் காந்தாரனை விருப்பும் என்று பூஜையில் அசரீரியாய் ஒழிக்க அதன் படி தன் ராஜ்யத்தின் நூற்றி எட்டு கர்ப்பிணிப் பெண்களை கண்டோதரிக்கு பலி கொடுக்க முன் வந்தான் காந்தாரன்.
தன் ராஜ்யத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மர்மக் கொலைகள் குறித்து கவலை கொண்ட கீர்த்தி வர்மன் நடந்து கொண்டிருக்கும் கொலைகளுக்கு காரணமானவனை கண்டு பிடிக்கும் படி உத்தரவு பிறப்பித்தான்.
நூற்றி ஏழு பெண்களின் மர்ம மரணம் குறித்து ஆய்வு செய்த படைத் தளபதி காந்தாரன் மீது சந்தேகம் உள்ளதாக கீர்த்தி வர்மனிடம் அறிவிக்க.. காதலியின் மரணத்திற்கு பிறகு விசித்திரமாய் நடந்து கொண்ட நண்பனை கண்காணிக்கத் துவங்கினான்.
எல்லோரின் சந்தேகமும் உறிதியாக்கும் விதமாய் இறுதி உயிர் பலி நாளில் வசமாய் சிக்கிக் கொண்ட காந்தரனுக்கு மரண தண்டனை விதித்தான் கீர்த்தி வர்மன்.
முகம் காணாமல் காதலித்த பெண்ணின் நினைவில் கீர்த்தன் மூழ்கி இருக்க.. மீதம் இருந்த இரு தினங்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறக்க.. கீர்த்தனின் சாபத்தை போக்கக்கூடிய சந்திர கிரகணம் நாள் வந்தது.
இன்று முதல் சுஹனியைப் பிரிய போகிறோம் எனும் கவலை மேலோங்கி இருந்தாலும், தன் சாபம் தீர வேண்டும் என்னும் சுயநலத்துடன். .. சுஹனிக்காக சலனப்பட்ட மனதை கட்டுப்படுத்திக் கொண்டு.. நடு இரவு சுஹனியை எப்படி வெளியே அழைத்து செல்வது என்று திட்டமிட துவங்கினான்.
மதிய உணவு வேளையில் ஏதோ ஒரு யோசனையுடன் உணவு அருந்தி கொண்டிருந்தவளை.. மெதுவாய் அணுகியவன், ஒருவித தயக்கத்துடன், “இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்க.. உனக்கு போர் அடிக்கலையா?” என்று பேச்சை தூங்கினான்.
கீர்த்தனிடம் இருந்து இத்தகைய கேள்வியை எதிர்பார்த்து காத்திருந்தது போல முகம் மலர்ந்த புன்னகையுடன் “நானே உங்ககிட்ட கேக்கணும்னு இருந்தேன், வீட்டுக்குள்ளேயே இருக்கிறது ஒரு மாதிரி இருக்கு, வேண்டாத பழைய விஷயங்கள் யோசிச்சு யோசிச்சு பைத்தியம் பிடிச்சுடும் போல இருக்கு. என்னை எங்கேயாவது வெளியே கூட்டிட்டு போறீங்களா?,” என்றாள் சுஹனி.
தான் கேட்க நினைத்து வந்த கேள்வியை அவளே கேட்டுவிட.. கவலை அகன்ற நிம்மதியுடன், “நானே உன்கிட்ட எங்கயாவது வெளிய போகலாமான்னு கேட்கத் தான் வந்தேன், இங்கு இருந்தது ஒரு அஞ்சு ஆறு கிலோ மீட்டர் தூரத்துல எனக்கு இன்னொரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு… அங்க போய் இன்னைக்கு நைட் ஸ்டே பண்ணிட்டு வருவோமா?” என்றான் கீர்த்தன்.
சற்றும் தயங்காமல் உடனே சரி என்ற