Advertisement

30…

தன் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிவடைய… தனக்கு உதவி புரிவதற்காக அழைத்து வந்தவர்கள் யாரை கடத்தி வைத்துள்ளனர் என்று அறிந்து கொள்ள அவசர அவசரமாய் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறிச் சென்றான் மதியழகன்.

“டேய் மதி நில்லுடா நானும் உன் கூட வரேன்..” என்று மகனை பின்தொடர்ந்து காந்திமதியும் சென்றிட, “காந்தி நீ எங்க போற?. மதி போய் அங்க என்ன குழப்பம் நடந்தது மது எப்படி கல்யாண மண்டபத்துக்கு வந்தான்னு பாத்துட்டு வரட்டும், நீ என் கூடவே இரு. “என்று தடுத்து நிறுத்தினார் வேலம்மாள்.

“என் பையன் இருக்க வேண்டிய இடத்துல கண்டவனும் உட்கார்ந்திருக்கான், இந்த கன்றாவியெல்லாம் சகிச்சுக்க என்னால முடியாது. நான் என் பையன் கூட கிளம்புறேன்.” என்று தாயின் கரத்தை தட்டி விட்டு நடந்தார் காந்திமதி.

மீண்டும் மகளின் முன் சென்று தடுத்து நிறுத்திய வேலம்மாள், ” உன் அண்ணன் உன்னை எங்கன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்லுறது? ” என்றார்.

“அவர் விருப்பப்படி தான் எல்லாம் நடந்துடுச்சே , இனி எதுக்கு எங்களத் தேவை இல்லாமத் தேடப் போறாரு… ” என்று அலட்சியமாய் கூறிய காந்திமதி மீண்டும் நடக்க…..

தாயும் தந்தையும் எங்கோ கிளம்பி கொண்டிருப்பதை கவனித்த காசிநாதன் மணமேடையில் இருந்து அவசரமாய் ஓடி வந்து, ” அம்மா…., காந்தி கொஞ்சம் என் கூட வாங்க, உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்று தாயையும் தங்கையும் தன்னுடன் வரும்படி அழைத்து விட்டு முன் நடந்தார்.

” இவன் எதுக்கு இப்போ நம்மள தனியா கூப்பிடுறான்?ரொம்ப பதட்டமா வேற இருக்கானே!, ஒருவேளை உன் பையன் செஞ்ச தில்லு முல்லு வேலை தெரிஞ்சிருக்குமோ!” என்று மகளுக்கு மட்டும் கேட்கும் குரலில் ரகசியமாய் வினவினார் வேலம்மாள்.

“என்னன்னு தெரியலையே!, ஒருவேளை உண்மை தெரிஞ்சிருந்தா உருப்படியா ஊர் போய் சேர முடியாது, நான் வரல நீ மட்டும் உன் பையன் கூட போ நான் என் பையனைத் தேடி போறேன்.” என்று தயங்கியபடியே காந்திமதி பின்வாங்கிட.. அவசரமாய் அவர் கரம் பிடித்து, ” என்ன என்னை மட்டும் மாட்டிவிட்டுட்டு ஆத்தாளும் மகனும் தப்பிக்க பாக்கறீங்களா?, அதெல்லாம் ஒன்னும் நடக்காது ஒழுங்கா என்கூட வா. எந்த பிரச்சனை வந்தாலும் ஒன்னா சமாளிப்போம். ” என்று மகளையும் தன்னுடனையே இழுத்துச் சென்றார் வேலம்மாள்.

தாயையும் தங்கையையும் மணமகள் அறைக்கு அழைத்து வந்த காசிநாதன்….அவசரமாய் கதவை மூடிவிட்டு தாழ்போட, “வசமா மாட்டிக்கிட்டோம் போலயே!…, “என்று இருவரும் ஒருசேர வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டனர்.

“நாம எதிர்பாக்காத நிறைய விஷயம் நேத்து நடந்திடுச்சு, எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல” என்று தயக்கத்துடன் காசிநாதன் நிறுத்திட..

” அப்படி என்ன நடக்க கூடாதது நடந்துடுச்சு. ஏதோ சின்னப் பையன் தெரியாம பண்ணிட்டான். அதுக்காக நம்ம வீட்டுப் பிள்ளையை ஒதுக்கி வைக்க முடியுமா?, அதான் நீ ஆசைப்பட்ட மாதிரியே கல்யாணம் நல்லபடியா நடந்து முடிஞ்சிடுச்சுல . இப்போ எதுக்கு தேவையில்லாம விஷயத்தை பெரிசாக்குற? ” என்று பதட்டத்துடனேயே பேசினார் வேலம்மாள்.

” என்ன சொல்றீங்க?, நீங்க எதை பத்தி பேசிட்டு இருக்கீங்க? யாரை நான் ஒதுக்கி வைக்கப் போறேன்? ” என்று குழப்பமாய் காசிநாதன் வினவ…

” அது வந்து மதி.. மதுவ… ” என்று வேலம்மாள் துவங்கிட… அவசரமாய் அவர் கரம் பற்றி தடுத்து நிறுத்திய காந்திமதி, ” இன்னும் எந்த விஷயமும் அவருக்கு முழுசா தெரியலன்னு நினைக்கிறேன், நீ கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு அமைதியா இரு, ” என்று வேலம்மாளுக்கு மட்டும் கேட்கும் குரலில் மெதுவாய் கூறி தாயை அடக்கிவிட்டு, தன் சகோதரன் புறம் திரும்பி ” ஆசைப் பேத்திக்கு கல்யாணம் நல்லபடியா முடிஞ்ச சந்தோஷத்துல என்ன பேசுறோம்ன்னு புரியாம பேசிட்டு இருக்காங்க?, நீ அவங்கப் பேச்சை எல்லாம் பெரிசா எடுத்துகாத, ஆமா நீங்க ஏதோ சொல்ல வந்தீங்கல!…” என்று பேச்சை மாற்றினார்.

” அது வந்து காந்தி… நேத்து நைட்டு சுதனுக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட், அவன் இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கான் . ” என்று நடந்ததை சுருக்கமாய் கூறி முடித்தார் காசிநாதன்.

மகன் வழிப் பேரன் காயத்துடன் அடிபட்டு கிடப்பதை விட மகள் வழிப் பேரனுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தையே பெரிதாக எண்ணிய வேலம்மாள்.. ” ஏண்டா கூறு கெட்டவனே! பெத்த பிள்ளை ஹாஸ்பிடல் அடிபட்டு கிடக்கும் போது இப்படி ஒரு கல்யாணம் அவசியம் தானா?, இந்த விஷயம் மட்டும் எனக்கு நேத்தே தெரிஞ்சிருந்தா இந்த கல்யாணத்தை நிறுத்திருப்பேன்!” என்று அப்போதும் கல்யாணத்தை நிறுத்துவது குறித்து தான் பேசினார்.

‘ நீ இப்படி சொல்வீங்கன்னு தெரிஞ்சு தான் உங்க கிட்ட சொல்லல, ‘என்று காசிநாதன் அருகில் இருந்த கண்மணி தனக்குள்ளேயே எண்ணிக்கொள்ள, “பேசி முடிச்ச கல்யாணம் பாதில நின்னா நல்லா இருக்காது அம்மா… அதனால தான் யார்கிட்டயும் சொல்லாம கல்யாணத்தை நடத்திட்டோம். “என்று காரணம் கூறினார் காசிநாதன்.

” என்னடா பெருசா காரணம் சொல்ற.. இப்போ இந்த கல்யாணம் நடக்காம போனா குடியா முழுகிடப் போகுது. இந்த மாப்பிள்ளை இல்லனா இன்னொருத்தன். கட்டுடா தாலியன்னு ஒரு வார்த்தை சொன்னா போதும்,ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்காம என் சிங்கக்குட்டி பேரன் என் பேத்திய கல்யாணம் பண்ணிக்குவான்” என்று வேலம்மாள் கூறிக் கொண்டிருக்க.. ” இப்ப எதுக்கு மா தேவையில்லாத விஷயத்தை பேசிட்டு இருக்கீங்க . அதான் கல்யாணம் நல்லபடியா நடந்து முடிஞ்சிடுச்சுல ” என்றார் காசிநாதன்.

“என்ன நீ மடத்தனமா பேசிட்டு இருக்க, பொண்ணோட அண்ணனுக்கு அடிபட்டு ஹாஸ்பிடல்ல இருக்கிற விஷயத்தை மறைச்சு தான் கல்யாணம் பண்ணி வச்சிருக்கோங்கிற உண்மை மட்டும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு கொஞ்சம் யோசிச்சு பாரு. ராசி இல்லாத பொண்ண அவங்க பையன் தலையில கட்டி வைச்சுட்டோம்னு சண்டைக்கு வர மாட்டாங்க. ” என்று மகன் செயலை கண்டித்து கோபமாய் பேசினார் வேலம்மாள்.

“அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க அம்மா.” என்று காசிநாதன் சமாதானம் செய்ய முயல.. “எப்படி நினைக்காம இருப்பாங்க, அதெல்லாம் நினைக்க தான் செய்வாங்க, நீ வேணும்னா பாரு இது பெரிய பிரச்சனையாகி, நம்ம பொண்ணோட வாழ்க்கை தான் நாசமாப் போக போகுது. ” என்று என்ன நடக்க வேண்டும் என்று தன் மனதில் எண்ணிக் கொண்டிருக்கின்றாரோ அதையே வார்த்தையாய் கூறினார் வேலம்மாள்.

” இப்பதான் கல்யாணம் ஆயிருக்கு அந்த பொண்ணு நல்லா இருக்கணும்னு வாழ்த்துறத விட்டுட்டு, ஏன் இப்படி தேவை இல்லாம வார்த்தை விடுறீங்க?” என்று அதுவரை அமைதியாக இருந்த கண்மணி கோபமாய் வினவிட.. ” நான் என்ன ஊர் உலகத்துல நடக்காததையா சொல்லிட்டேன். அவன்தான் ஊரு உலக விவரம் புரியாம பேசிட்டு இருக்கான். வீட்டு பொம்பளை நீ நல்லது எடுத்து சொல்றத விட்டுட்டு கூட சேர்ந்து திருட்டு கல்யாணமா பண்ணி வைக்கிற?” என்று மருமகள் மீது பாய்ந்தார் வேலம்மாள்.

” நடந்தது ஒன்னும் திருட்டு கல்யாணம் இல்லை” என்று வெடுகென்று கண்மணி பதில் தர… ” என்னடி வாய் ரொம்பத்தான் நீளுது.. குளிர் விட்டு போச்சா?” என்று மாமியார் மருமகள் சண்டைக்கு அஸ்திவாரம் இட்டார் வேலம்மாள்.

“அம்மா தயவுசெஞ்சு கொஞ்சம் நேரம் அமைதியா இருங்க என்ன பிரச்சனை நடந்துட்டு இருக்குன்னு புரியாம ஏன் எததையோ பேசிட்டு இருக்கீங்க.. நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் தப்பா நடக்காது, ஏன்னா சுதனை ஹாஸ்பிடல்ல கொண்டு போய் சேர்த்ததே நம்ம மாப்பிள்ளை காவியன் தான். முழுசா எதையும் தெரிஞ்சிக்காம வாய்க்கு வந்தபடி வார்த்தையை விடாதீங்க.” என்று குரலை உயர்த்தி கண்டித்தார் காசிநாதன்.

மாமியாரின் அதிகப்படியான வார்த்தையால் கலங்கி நின்ற கண்மணிக்கு ஆதரவாய் அவர் வலக்கரம் பற்றி, ” அதான் பையனுக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாங்கல, அப்புறம் எதுக்கு தேவையில்லாம இன்னும் கண் கலங்கிட்டே இருக்க…, கல்யாண வீட்டுக்கு வந்த பாதி பேர் எதுக்கு உன் பொண்டாட்டி இப்படி மூஞ்சியை தூக்கி வச்சிட்டு இருக்கான்னு என்கிட்ட கேக்குறாங்க இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பம் இல்லையான்னு கூட கேக்குறாங்க. கொஞ்சம் முகத்தை சிரிச்ச மாதிரி வச்சுக்கோ… ” என்று அறிவுரை வழங்கினார் காசிநாதன்.

” அட இதுதான் விஷயமா இதுக்காக தான் ரெண்டு பேரும் மூஞ்சிய தூக்கி வெச்சிட்டு இருந்தீங்களா?, நாங்க கூட கல்யாண பொண்ணு ஓடிப் போயிட்டா போல, அதை எப்படி சமாளிக்கணும்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கீங்கன்னு நினைச்சோம்” என்று கிண்டலாய் கூறினார் காந்திமதி.

கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அர்த்தமாய் பார்த்துக் கொண்டு, ” இப்போ நாங்க பொண்ணு மாப்பிள்ளை ரெண்டு பேரையும் கூட்டிட்டு சுதனை பார்க்க போறோம். யாராவது ஏதாவது கேட்டா மாப்பிள்ளை வீடு வரைக்கும் போய் இருக்காங்கன்னு சொல்லுங்க. கல்யாணத்துக்கு கூட்டிட்டு வந்த சொந்தக்காரங்கள நல்லபடியா கவனிச்சுக்கோங்க. ஆமா மதி எங்க.. ?, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் உங்க கூட தானே இருந்தான்” என்றார் காசிநாதன்.

” அவன் கூட்டாளி பசங்க வந்திருந்தாங்கல, அவங்க கூட பக்கத்துல எங்கேயோ போய் இருப்பான், நீ கெளம்பு சொந்தக்காரங்கள நாங்க பார்த்துக்கிறோம்” என்று மகனையும் மருமகளையும் மணமக்களுடன் பேரனை காண அனுப்பி வைத்தார் வேலம்மாள்.

“நல்லா வேணும் இவங்களுக்கு, என் பையன ஏமாத்திட்டு வேற இடத்துல சம்பந்தம் பேசி முடிச்சாங்கல அதான் கடவுளே அவங்கள தண்டிச்சுடுச்சு ” என்று வன்மத்துடன் பேசினார் காந்திமதி.

“நீ சொல்றதும் சரிதான் ஆனா அந்த தண்டனை.. அந்த ஊமக்கொட்டானுக்கு கிடைச்சிருந்தா இன்னும் சந்தோஷமா இருந்திருக்கும்” என்றார் வேலம்மாள்.

” நாம கஷ்டத்தை அனுபவிக்கிறத விட, நமக்கு பிடிச்சவங்க கஷ்டத்தை அனுபவிக்கும் போது தான் ரெண்டு மடங்கு வலிக்கும். உன் மருமகளுக்கு அடிபட்டு இருந்தா கூட இந்த அளவுக்கு துடிச்சிருக்க மாட்டா.. இப்ப பார்த்தீங்கல அவ முகத்துல எவ்வளவு வேதனையும் வலியும் தெரிஞ்சதுன்னு, இதுதான் அவளுக்கு சரியான தண்டனை” என்றார் காந்திமதி.

காந்திமதியின் வார்த்தையில் இருக்கும் உண்மையை உணர்ந்து கொண்டது போல் வேலம்மாள் மௌனமாய் தலையசைத்து நின்று இருக்க… ” அதான் உன் பையனும் மருமகளும் போய்ட்டாங்களே!, என் பையனும் கிளம்பிட்டான், இனி இங்க எனக்கு என்ன வேலை?, நானும் கிளம்புறேன். ” என்றார் காந்திமதி.

“கொஞ்சம் பொறு காந்தி.. வந்தவங்கள கவனிக்கணும்ல” என்று வேலம்மாள் மகளை தடுத்து நிறுத்த.. ” கல்யாண வீட்டுக்காரங்களுக்கே அக்கறை இல்லாம கிளம்பி போயிட்ட்டாங்க.. நான் மட்டும் வந்தவங்கள கவனிக்கணுமாக்கும். என்னால முடியாது நான் கெளம்புறேன், நீ மட்டும் எதுக்கு இங்க சும்மா நின்னு வாய் பார்த்துட்டு நிக்க போறியா?, உன் மருமக நம்மள பார்த்து பார்வையில் எவ்வளவு திமிர் இருந்தது கவனிச்சியா?, இனி அந்த வீட்ல உன் மருமக வச்சது தான் சட்டம். உன் பவுசு இனி அங்க செல்லுபடி ஆகாது. நான் சொல்றதை கேளு நீ இப்பவே என் கூட கிளம்பி வந்துடு, இருக்கிற கொஞ்சநஞ்ச மரியாதையையாவது நாம காப்பாத்திக்கலாம். ” என்றார் காந்திமதி.

“அட இரு.. நான் இங்கே எதுக்காக இருக்கணும்னு சொல்லுறேன்னு முதல்ல புரிஞ்சிட்டு பேசு, நான் என்ன கல்யாணத்துக்கு வந்தவங்கள கவனிக்கனும்னா இங்க இருக்கணும்னு சொல்றேன். சுதனை ஹாஸ்பிடல்ல சேர்த்தது வேணா மாப்பிள்ளையா இருக்கலாம் ஆனா இந்த விஷயம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு தெரியுமான்னு தெரியலையே, ஒருவேளை தெரியலனா நாம தெரியப்படுத்துவோம்.” என்று தன்னால் இயன்ற அளவிற்கு கலகம் ஏற்படுத்த தீர்மானித்தார் வேலம்மாள்.

மணமக்களுடன் மணமகளின் பெற்றோரும் எங்கோ அவசரமாய் கிளம்பி செல்வதை கவனித்த கோமதி.. யாரிடம் கேட்டால் விவரம் தெரிந்து கொள்ள முடியும் என்று புரியாத தவிப்புடன் திருமண மண்டபத்தை சுற்றி வந்து கொண்டிருந்த நேரம்.. மணப்பெண்ணின் பாட்டி வேலம்மாள் அவர் கண்ணில் பட்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement