3….

விதி விளையாடுவது

என் வாழ்வோடு..

அவள் விளையாடுவது

என் மனதோடு…

‘ சென்னையில் தொடர்ந்து நடக்கும் மர்ம கொலைகள்: கழுத்து நரம்பு பகுதியில் பற்கள் தடத்துடன் கிடைக்கும் சடலங்கள்: தன்னை டிராகுலா போல் சித்தரிக்க முயலும் சைக்கோ கொலையாளி: விரிவான செய்திகளை ஒரு சிறு விளம்பர இடைவெளிக்கு பின் காண்போம்’ என்று தொலைக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்பாகி கொண்டிருக்க.. அலட்சியமாய் அதை பார்த்தபடி தனது அறையின் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து சேகரித்து வைக்கப்பட்டிருந்த மனித ரத்தத்தை எடுத்து கண்ணாடி குடுவையில் நிறைத்து மெது மெதுவாய் ரசித்து சுவைக்கத் துவங்கினான் அவன்.

ஒவ்வொரு மிடறு அருந்தும் போதும் உடலின் சோர்வு அனைத்தும் விலகுவது போல் உள்ளுக்குள் உற்சாகத்தை உணர்ந்தவன், அதை அனுபவிக்கும் விதமாய் அமர்ந்திருந்த இருக்கையிலேயே கண்மூடி சாய்ந்தான்.

அவன் அமைதியை குழைப்பது போல் அறையின் கதவு தட்டப்பட, எரிச்சலுடன் கண் திறந்தவன் அவசரமாய் அருந்தி முடித்து அருகில் வைத்திருந்த கண்ணாடி குடுவையை தண்ணீரில் கழுவி கவிழ்த்தி வைத்தான்.

பொறுமை இழந்தது போல் மீண்டும் அறையின் கதவு வேகமாய் தட்டப்பட, ” கொஞ்சம் பொறு வரேன்.. ” என்று சத்தமிட்டபடியே அறையின் கதவை திறந்தான்.

” பாஸ் நல்லா தானே இருக்கீங்க?, ரொம்ப நேரம் கதவை தட்டிட்டே இருந்தேன். உங்ககிட்ட இருந்து எந்த பதிலும் இல்லையா… அதான் பயந்துட்டேன். ” என்று அறையின் வாசலில் காத்திருந்த சித்தேஷ் வினவினான்.

” நான் நல்லா தான் இருக்கேன்.. ” என்றவன் அவன் கையில் இருந்த கோப்பையை கவனித்து.. ” என்ன இது?” என்றான்.

” என்ன பாஸ் புதுசா கேக்குறீங்க?, ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது இந்த பீட்ரூட் ஜூஸ் குடிக்கணும்னு டாக்டர் சொல்லி இருக்காரே மறந்துட்டீங்களா?, ” என்றான் சித்தேஷ்.

“ஆ…!” என்று புரிந்தும் புரியாதது போல் முகபாவனையுடன் நின்றிருந்த தனது முதலாளியின் முக பாவனையை படித்தவன், ” என்ன பாஸ் அப்படி முழிக்கிறீங்க?, அன்னைக்கு ஒரு நாள் நீங்க கூட உங்க ரூம்ல குடிச்சிட்டு இருந்தீங்களே!, நான் கூட பாக்குறதுக்கு ரத்தம் மாதிரியே இருக்குன்னு சொன்னேனே!, அன்னைக்கு தான் உங்களுக்கு ஹீமோகுளோபின் பிராப்ளம் இருக்கு, ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது பீட்ரூட் ஜூஸ் குடிக்கணும்னு டாக்டர் சொன்ன விஷயத்தை என்கிட்ட சொன்னீங்க!, அதுக்குள்ள மறந்துட்டீங்களா?” என்றான் சித்தேஷ்.

” ஞாபகம் இருக்குடா ஆனா இப்போ எதுக்கு நீ இந்த ஜூஸை இங்க கொண்டு வந்த ?, வழக்கமா எனக்கு நானே தானே ஃபிரிப்பேர் பண்ணிக்குவேன்.” என்று முன்னவன் கூறிட….

” என்னமோ தெரியல இன்னைக்கு காலையில சீக்கிரமாவே எந்திரிச்சிட்டேன், என்ன பண்றதுன்னு தெரியாம கிச்சன் பக்கம் போனேன், மஞ்சுமா பிரேக்ஃபாஸ்ட் ரெடி பண்ணிட்டு இருந்தாங்க, பாஸுக்கு பீட்ரூட் ஜூஸ் போட்டுட்டீங்களானு கேட்டேன். ஜூஸா என்ன ஜூஸ்?, நான் இதுவரைக்கும் அப்படி எதுவும் தம்பிக்கு செஞ்சு கொடுத்தது இல்லையேன்னு சொன்னாங்க, என்னடா இப்படி சொல்றாங்க நம்ம பாஸ் வேற டெய்லி பீட்ரூட் ஜூஸ் குடிக்கணுமே, இப்ப என்ன பண்றதுன்னு யோசிச்சேன், சரி நாம சும்மா தானே இருக்கோம்னு, இந்தக் கையாலேயே பீட்ரூட் டிரெஸ்ஸ பரபரன்னு உரிச்சு, கத்தியை வச்சு கரகரன்னு வெட்டி, மட மடன்னு மிக்ஸியில போட்டு, சட சடன்னு சக்கையா அரைச்சு, தடதடன்னு தண்ணிய மட்டும் வடிச்சு எடுத்துட்டு வந்திருக்கேன். நீங்க இப்ப என்ன பண்றீங்க கண்ண மூடிட்டு கடகடன்னு குடிக்கிறீங்க. ” என்று தனது கையில் இருந்ததை வம்படியாக தனது முதலாளியின் கையில் திணித்தான் சித்தேஷ்.

” டேய்.. சித்து ஏன்டா என்னை இப்படி டார்ச்சர் பண்ற?” என்று கையில் இருந்ததை அவன் குடிக்க மறுக்க..

” பாஸ் குடிங்க பாஸ் உங்களுக்கு எனர்ஜி வேணும்ல, சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடிக்காம குடிங்க, இப்போ இதை நீங்க குடிக்கலனா டாக்டர வர வச்சுருவேன்” என்று வற்புறுத்தினான் சித்தேஷ்.

வேண்டா வெறுப்பாக.. கையில் இருந்த காய்கறிச் சாற்றை முகம் சுளித்தபடி அருந்திவிட்டு காலி கோப்பையை சித்தேஷ் கையில் கொடுத்தவன் அவசரமாய் தனது அறைக்குள் சென்று கதவை சாற்றிக் கொண்டான்.

‘ என்ன பாஸ் ஒண்ணுமே சொல்லாம உள்ள ஓடிட்டாரு… என்னவா இருக்கும். ஒருவேளை நான் ப்ரிப்பேர் பண்ணின ஜூஸ் பிடிக்கலையோ? ‘ என்று தனக்குள் யோசித்துக் கொண்டவன் மீண்டும் அறைக் கதவை ஓங்கி தட்டிட, ” கொலை காண்டுல இருக்கேன் ஒழுங்கா ஓடிடு..” என்று உள்ளிருந்தபடியே குரல் கொடுத்தான் அவன்.

‘ ஜூஸ் தான கொடுத்தேன், இதுக்கு எதுக்கு இவர் காண்டாகணும்… ‘ என்று புரியாமல் புலம்பியபடி அங்கிருந்து நகர்ந்து சென்றான் சித்தேஷ்.

அறைக்குள் சென்றவனோ.. அவசரமாய் குளியல் அறைக்குள் ஓடிச் சென்று குடித்த காய்கறிச் சாற்றை ஒரு சொட்டு விடாமல் வெளியேற்றி முடித்தான்.

‘ச்சே.. இந்த மனுஷங்க மத்தில வாழ்றது எவ்வளவு கொடுமையா இருக்கு, இப்போ தான் ரசிச்சு ருசிச்சு மனுஷ ரத்தத்தை குடிச்சு முடிச்சேன் அந்த டேஸ்ட் உள்ள இறங்குறதுக்குள்ள வந்து கெடுத்துட்டான் ராஸ்கல். இருடா உன்னை வெளியே வந்து கவனிச்சுக்கிறேன்.’ என்று உள்ளுக்குள் கறுவிக் கொண்டே.. மீண்டும் மனித ரத்தத்தை கோப்பையில் நிறைத்து ரசித்து ருசித்துப் பருகத் துவங்கினான் அவன்.

சோர்வான முக பாவனையுடன் தனக்குள்ளே புலம்பியபடி வந்த சித்தேஷை கண்டதும், “என்ன சித்து கண்ணா!, தம்பி என்ன சொல்லுச்சு?.. ஏன் இப்படி மூஞ்சிய தொங்க போட்டுட்டு வர?.. ” என்று விசாரித்தார் மஞ்சு அவ் வீட்டின் சமையல் பணிப்பெண்.

” நான் அவருக்கு நல்லது தானே செஞ்சேன் மஞ்சுமா. என் நல்ல மனசு புரியாம என் முகத்தை கூட பாக்காம ரூமுக்குள்ள போய் கதவை சாத்திட்டு காண்டா இருக்கேன்னு கத்துறாரு. நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன். ” என்றான் சித்தேஷ்.

” நீ என்ன பண்ணுனன்னு சொல்லு அது தப்பா சரியான்னு நான் சொல்றேன்” என்று மஞ்சு வினவிட..

” பீட்ரூட் ஜூஸ் போட்டு கொடுத்தேன், இதுல தப்பு என்ன இருக்கு?” என்றான் சித்தேஷ்.

” ஜூஸா அதுவும் பீட்ரூட்டிலயா.. தம்பி உன்னை சும்மா விட்டுச்சேன்னு சந்தோசப்பட்டுக்கோ. பத்து வருஷமா தம்பியை பார்த்துட்டு இருக்கேன், . இத்தனை நாள்ல ஒரு தடவை கூட தம்பி காய்கறி சாப்பிட்டு நான் பார்த்ததே இல்ல. தம்பியோட தாத்தாவும் இப்படித் தான்னு என் அப்பா சொல்லிருக்காரு.. அவருக்கும் அசைவம் மட்டும் தான் பிடிக்குமாம்.. நாள் கிழமை பாக்காம அசைவம் செஞ்சு குடுக்க சொல்லி தான் கேட்பாராம்.. நடக்கிறது தாவரது ஓடுறது நீந்துறது இப்படி எதையும் விட்டு வைக்காம வெளுத்து கட்டுர அக்மார்க் அசைவப் பிரியர்கள் கிட்ட போயி பீட்ரூட் ஜூஸ் கொடுத்தா காண்டாகம வேற என்ன செய்வாங்க..? ” என்று நக்கலாய் சிரித்தபடி கூறினார் மஞ்சு.

” நம்ம பாஸுக்கு அசைவம் மட்டும் தான் பிடிக்கும்னு எனக்கும் தெரியும். நீங்க பத்து வருஷம்னா,. நான் அஞ்சு வருஷம். எனக்கும் அவரைப் பத்தி நல்லாவே தெரியும் மஞ்சுமா” என்று கர்வமாக அறிவித்தான் சித்தேஷ்.

“அதான் தெரியுதுல எல்லாம் தெரிஞ்சிருந்தும் எதுக்கு ஜூஸ் கொண்டு போகணும்?, திட்டு வாங்கிட்டு வரணும்..” என்று கிண்டலாய் பேசினார் மஞ்சு.

” நானா ஒன்னும் கொண்டு போகல, அன்னைக்கு ஒரு நாள் நான் பாஸ்ஸோட ரூமுக்கு போயிருந்தப்போ பாஸ் தான் பீட்ரூட் ஜூஸ் குடிச்சிட்டு இருந்தாரு எதுக்குன்னு கேட்டதுக்கு ஹீமோகுளோபின் ப்ராப்ளம் இருக்குன்னு டெய்லி ஒரு பீட்ரூட் ஜூஸ் குடிக்கணும்னு டாக்டர் சொன்னதா அவர் தான் என்கிட்ட சொன்னாரு. அதனால தான் அவருக்காக என் கையாலேயே ஜூஸ் போட்டு கொடுத்தேன். ” என்று விவரித்தான் சித்தேஷ்.

” அப்படியா சொல்ற ஆனா தம்பி இதுவரைக்கும் என்கிட்ட இத பத்தி எதுவும் சொல்லலையே!, நானும் ஜூஸ் போட்டு கொடுத்தது இல்ல,” என்றார் மஞ்சு.

” நீங்க கொடுத்தது இல்லைன்னு தெரியும், பாஸே அவருக்கு வேணுங்குறத அவரே ப்ரிப்பேர் பண்ணிக்குவேன்னு தான் சொன்னாரு.” என்று சித்தேஷ் கூறிட…” அதான் தம்பி தன் வேலையை தானே பாத்துக்குறேன்னு சொல்லிடுச்சுல அப்புறம் எதுக்கு நீ தலையிடுற, அதனால தான் கோவப்பட்டு இருக்கும், வாசல்ல யாரோ கூப்பிடுற சத்தம் கேட்குது போய் யாருன்னு பாரு ” என்று சோகத்தில் நின்றவனை தேற்றி அனுப்பி வைத்தார் மஞ்சு.

யாரோ அழைக்கும் குரல் கேட்டு வாயிற் புறம் வந்தவன், அங்கு இளம் பெண் நிற்க கண்டு, ” யார் நீங்க?, யாரை பார்க்கணும்?” என்றான் சித்தேஷ்.

” என் பெயர் சுஹனி, நான் கீரத்தன் சாரை பார்க்கணும்” என்றாள்.

‘ என்னடா இது?, என்னைக்கும் இல்லாத அதிசயமா!, நம்ம பாஸ்ஸை தேடி ஒரு பொண்ணு வந்திருக்கு, இதுக்கெல்லாம் அவர் சரிப்பட்டு வர மாட்டாரே!’ என்று தனக்குள் எண்ணி கொண்டவன், ” யாருங்க நீங்க?, பாஸ்ஸை எதுக்கு பாக்கணும்?, அவரை எப்படி தெரியும் உங்களுக்கு?” என்று அடுத்த அடுத்த கேள்விகளை அடுக்கி கொண்டு சென்றான் சித்தேஷ்.

” என் பேரை சொல்லுங்க அவரே எப்படி தெரியும்னு சொல்லுவாரு..” என்று அதிகாரமாய் அறிவித்தாள் சுஹனி.

” நீங்க வேற அட்ரஸ் மாறி தப்பா இங்கு வந்து நிக்கிறீங்கன்னு நினைக்கிறேன், என் பாஸ் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.” என்றான் சித்தேஷ்.

” ஹலோ, நான் சரியான அட்ரஸ்க்கு தான் வந்திருக்கேன். நான் என்ன நினைக்கிறேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?, முதல்ல போய் உங்க பாஸ்கிட்ட என் பேரை சொல்லி, நான் அவரை பார்க்க வந்திருக்கிற விஷயத்தை சொல்லுங்க” என்று அதே அதிகாரக் குரலில் கூறினாள் சுஹனி.

‘ இந்த அதிகாரத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல, ‘என்று எண்ணியவன், தன் முதலாளி இருக்கும் இடத்திற்கு தகவல் தெரிவிக்க சென்றான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள்,பிளேட்லட்டுகள் உற்பத்தியாகின்றன.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~