3

உணர்வுகளின் போராட்டம்…

உயிர் பிரிந்தும்
உணர்வில் கலந்த
உறவு நீ..
உயிர் வாழ்ந்தும்
உன் நினைவில் மடியும்
உணர்வில் நான்..

“ அம்மா நீங்க  என்ன வேணும்னாலும் சொல்லிக்கோங்க, என்னால இன்னைக்கு வர முடியாது, என்னை  விட்டுடுங்க எனக்கு  முக்கியமான வேலை இருக்கு, இன்னைக்கு ஒரு பார்ட்டி லேண்ட் பார்க்க வராங்க, அவங்க ஓகேன்னு சொல்லிட்டா.. நாளைக்கு ஊருக்கு கிளம்பிடலாம்.  மத்த வேலையெல்லாம் புரோக்கர் பார்த்துக்குவாரு.” என்று   திருமணத்திற்கு வர மறுத்துக் கொண்டிருந்தான் விதுரன். 

“என்னடா இப்படி சொல்ற?, இப்படியே விலகி விலகிப் போனா என்னைக்குத்தான் சொந்தபந்தத்தோட சேருறது,” என்று தேன்மொழி புலம்பிட… “ஒரு காலத்துல உங்கள அவமானப்படுத்தி அழுகவச்சு பார்த்தவங்க  தான் இந்த சொந்தபந்தம்…  எல்லாத்தையும் மன்னிச்சு மறந்துட்டு ஒன்னுமே நடக்காத மாதிரி இவங்க கூட ஒட்டி உறவாடுறதுனால எந்த நல்லதும் நடக்கப்போறது இல்ல.  இருக்கிற மனநிம்மதி தான் கெட்டுப்போகும்”, என்று விதுரன் நீண்ட விளக்கம் கொடுக்க.. “ அப்போ இன்னைக்கு என் கூட நீ வரமாட்டியா?” என்று சிறு குழந்தை போல் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்தார் தேன்மொழி. 

“அம்மா..  என்னம்மா இப்படி அடம்பிடிக்கிறீங்க?  நிச்சயமா சொல்றேன் இனிமே இந்த ஊரு பக்கம்  உங்கள கூட்டிட்டு வரவேமாட்டேன்.. நம்ம வீட்டுல இருக்கும்போது சமத்து பிள்ளையா இருந்தீங்க. இந்த ஊருக்குள்ள வந்து உங்க சொந்த பந்தத்தோட காத்து பட்டதும்  அநியாயத்துக்கு பிடிவாதம் பிடிக்கிறீங்க.. “ என்று தன் அன்னையை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் அலுத்துக்கொண்டான் விதுரன்.

“என் அத்தைக்கு சொந்தம்னா உங்களுக்கு யாராம்?” என்று கேட்டபடி அழகாய் அலங்கரித்த முகத்தில் அரிதாரமாய்  சிறு கோபத்தை பூசிக்கொண்டு..  உண்டோ இல்லையோ என்று ஆராய்ச்சி மேற்கொள்ளத்தூண்டும்   மெலிதான   இடையில் கைவைத்து முறைத்தபடி நின்றிருந்தாள் ஹனிகா. 

 உருவம் வளர்ந்து இருந்தாலும் எப்போதும் தன்னுடன் உரிமையுடன் வம்பிழுத்து வாயாடும் சிறு பெண்ணை ரசிப்பது போலவே கண்களில் குறும்பு மின்ன.. மெலிதாய் விரிந்த புன்னகையுடன்  “அம்மா தாயே!.. நீ வந்தது  தெரியாம, உன் உறவுக்காரங்களை பேசிட்டேன், தயவுசெஞ்சு மன்னிச்சிடு.. கோபத்துல கடிச்சுடாத!” என்றான்  விதுரன்.

கள்ளனாய் சிரித்தவனை ரசனையாய் பார்த்தவள், “இப்படி அப்பாவியா முகத்தை வைச்சிருந்தா  யாரா இருந்தாலும் கடிக்கத்தான் தோணும்” என்று கன்னத்தை கடிப்பது போல செய்கை செய்தபடி உள்ளே வந்தவள், “எப்படி அத்தை இந்த மாமாவை சமாளிக்கிறீங்க? சரியான அம்மாஞ்சி அராத்து! ”  என்று  விதுரனை  கேலி செய்தபடி  உரிமையாய்  வீட்டினுள் வந்து அமர்ந்தவள், “ சரி சரி வெட்டிக்கதை பேசாம சீக்கிரம் கிளம்புங்க, லேட்டாச்சு” என்றாள் ஹனிகா.

“ஹே.. எங்க வந்து யாரை அதிகாரம் பண்ணுற?, உன்னை யாரு இங்க வரச்சொன்னது, உங்க ஒட்டும் வேணாம் உறவும் வேணாம்னுதான விலகி இருக்கோம், திரும்ப திரும்ப வந்து தொந்தரவு பண்ணுனா என்ன அர்த்தம்?”  என்று விதுரன் சிடுசிடுக்க… “நீங்க வேணும்னு அர்த்தம்!” என்றவள்  சட்டென்று சுதாரித்து நாக்கை கடித்துக்கொண்டு, “உங்க உறவு வேணும்னு அர்த்தம், “ என்று முடித்தாள் ஹனிகா.

ஒருநொடி அவள் விழியை கூர்ந்து கவனித்தவன், குழந்தை தனமான முகத்தில் கள்ளத்தனம் எதையும் படிக்க முடியாமல், “இங்க பாரு, ஹனி  நீ  குழந்தை இல்ல,  எது பேசுறதா இருந்தாலும் பார்த்து பேசணும். முதல இங்கயிருந்து கிளம்பு, யாராவது பார்த்தா பெரிய பிரச்சனையாகிடும்”, என்று தன் வீட்டில் வந்து உரிமையாய் அமர்ந்தவளை வெளியேற்ற முயன்றான் விதுரன்.

“அதை தான் நானும் சொல்ல வரேன் மாமா, நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்ல, இதை செய்யாத, அதை செய்யாதன்னு கட்டுப்படுத்துறதுக்கு, என்ன செய்றேன், எதுக்கு செய்றேன்னு எல்லாம் தெரிஞ்சு தான் செய்றேன்”,  என்று   கண்சிமிட்டி சிரித்தவள்,  “ நீங்க என்னை விட வயசுல பெரியவரு உங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியது இல்ல.  ஒருத்தவங்க நம்மளை மதிச்சு பத்திரிக்கை வைச்சா  அவங்களை மதிச்சு    கல்யாணத்துக்கு வரணும், அதுதான் நம்ம பாரம்பரியம்.. அதை விட்டுட்டு இப்படி சின்ன குழந்தை மாதிரி  அடம்பிடிக்ககூடாது, அது மரியாதை இல்ல.   என்ன அத்தை நான் சொல்லுறது சரிதானே?” என்று விதுரனை அடக்க அவன் அன்னையையே துணைக்கு அழைத்தாள் ஹனிகா.

“ என் மருமக சொன்னா எப்பவும் சரியா தான் இருக்கும்!” என்று மகனை மடக்க மருமகளுடன் கூட்டு சேர்ந்தார் தேன்மொழி.

“ அம்மா நீங்க தேவை இல்லாம இவளுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க..!, இதுனால தேவையில்லாத பிரச்சனை தான் வரும்” என்று அன்னையை அடக்கியவன் “உன் வீட்டுல தேடப்போறாங்க முதல கிளம்பு”, என்று ஹனிகாவிற்கு பதில் தந்தான்.

“முடியாது! நீங்க வராம எங்கேயும் நகரமாட்டேன்”, என்று இதழ் சுளித்து விதுரனை        வெறுப்பெற்றியவள்,  அவன் கோபமாய் முறைக்கவும்.. “முறைச்சா, பயந்துடுவோமா?  என்னை முறைச்சு எந்த பிரோஜனமும் இல்ல,  கல்யாண வீட்டுக்கு வந்து உங்க மாமாவை முறைங்க. அவரு தான் உங்களை கையோட கூட்டிட்டு வரச்சொன்னாரு”,  என்றாள் ஹனிகா.

“அண்ணனா!” என்று தேன்மொழி வார்த்தை வராமல் தடுமாறிட.. “என்ன திடீர்னு?” என்று ஒற்றை புருவம் உயர்த்தி  விதுரன் கேள்வியுடன் நிறுத்திட.. “என்னைக் கேட்டா  எனக்கு என்ன தெரியும்? நேத்து  நிச்சயம் முடியவும்  உங்ககிட்ட ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு  தேடுனாரு, நீங்கதான் யார்கிட்டயும் சொல்லாம கிளம்பிட்டீங்கல..   அதனால தான் இப்போ கையோட கூட்டுட்டு வரச்சொன்னாரு!”      என்று விபரம் கூறினாள் ஹனிகா.

“நீங்க வான்னு சொன்னதும் வரதுக்கும், போன்னு சொன்னதும் போறதுக்கும்  நான் ஆள் இல்லை”, என்று வெடுக்கென்று பதில் சொன்னவன், அங்கிருந்து நகல முயல.. அவன் கைப்பற்றி தடுத்தவள், “இப்படி பேசுனா  எப்படி மாமா? அக்காவை இழந்த சோகத்துல  என்னென்வோ பேசிட்டாங்க,  அது தப்புனு புரிஞ்சு  அவரே வழிய வரும்போது விறைச்சுட்டு நிக்கிறது நல்லாவா இருக்கு? ஒன்னும் இல்லன்னு  வெட்டிவிட நமக்குள்ள இருக்குறது என்ன சாதாரண உறவா?” என்றவள் விதுரன் பதில் ஏதும் பேசாமல் யோசனையாய் நிற்க.. “ப்ளீஸ் மாமா,  எனக்காக வாங்க,” என்று கெஞ்சலுடன் முடித்தாள் ஹனிகா.

“கைய விடு!” என்று வெடுக்கென்று கையை விலக்கிகொண்டவன், வார்த்தையில் வர்ணிக்க இயலாத கவலையை சுமந்த  நிலையில் நின்றவள் முகத்தில் எதை உணர்ந்தானோ, “இப்படியே வரமுடியுமா?” என்று குரலை தனித்து கூறியவன், “இப்போ சந்தோசமா?,  பேசிப்பேசியே    உங்க வழிக்கு கொண்டு வந்துடுறீங்க!” என்று மறுக்க முடியாமல் சம்மதம் சொன்னதை வெளிப்படையாகவே காட்டிக்கொண்டவன், “உங்க பாசமலர் அப்படி என்ன தான் சொல்லப்போறார்னு பார்க்கலாம், ஏதாவது ஏடாகூடமா பேசட்டும் அப்புறம் இருக்கு  உங்க எல்லாருக்கும்”, என்று பொதுவான எச்சரிக்கை கொடுத்து தனது அறைக்கு சொன்று கிளம்பி வந்தான் விதுரன்.

விதுரன் விலகி சென்றதும் ஹனிகா அருகில் வந்த தேன்மொழி, “அண்ணா எதுக்கு திடீர்னு வரச்சொல்லணும்,  ஒன்னும் பிரச்சனை இல்லையே?”   என்று கவலையுடன் வினவினார். நடந்ததை மறக்க முயன்று கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் ரணமாகிவிடக்கூடாது என்று வருத்தம் அவர் குரலில் தெளிவாய் தெரிந்தது.

“அத்தை நீங்க கவலைப்படுற மாதிரி ஒன்னும்  இல்ல, ஒரு முக்கியமான விஷயம் பேசுனும், நேத்து உன் அம்மா பேசுன பேச்சுக்கு உன் மாமனும் அத்தையும் இன்னைக்கு  கல்யாணவீட்டுக்கு வரமாட்டாங்கன்னு நினைக்கிறேன், நீ போய் பார்த்து கூட்டிட்டு வான்னு, அப்பா தான் என்னை இங்க அனுப்பிவைச்சார்.  அவர் நினைச்சது சரிதான்… நான் வரும் போது முதல்நாள் ஸ்கூலுக்கு போற பையன் மாதிரி மாமா அடம்பிடிக்க நீங்க அவரை சமாதானப்படுத்திட்டு இருந்தீங்க!,” என்று  அந்த காட்சியை  எண்ணி மீண்டும்  ரகசிய ரசனை புன்னகை செய்தாள் ஹனிகா.

“இது எப்பவும் நடக்குறது தான் உன் மாமாவை ஒரு விஷயத்துக்கு  சம்மதிக்கவைக்கிறதுக்குள்ள போதும்போதும்னு ஆகிடும், ஒரு பட்டிமன்றமே நடத்தனும்” என்று மகனின் பிடிவாதத்தை   அங்கலாய்த்துக்கொண்டவர், “ அவன் கிடக்குறான்! நீ இந்த அத்தைக்கு மட்டும் என்ன முக்கியமான விசயம்னு சொல்லு கண்ணு” என்று கொஞ்சிக் குலவியபடி தன் அண்ணன் மகளிடம் விபரம் அறிய முயன்றார் தேன்மொழி.

“எனக்கு தெரிஞ்சா உங்களுக்கு சொல்லாம இருப்பேனா அத்தை,  எனக்கும் என்ன விபரம்னு தெரியல. ஒருவேளை நம்ம குலதெய்வ கோவில் திருவிழா சம்மந்தமா  இருக்கும்னு நினைக்கிறேன்” என்று தன் யூகத்தை கூறினாள் ஹனிகா.

தன்   அறைக்கு சென்றவன்  சற்று நேரத்தில் எளிமையான அதே நேரத்தில் மிகவும் நேர்த்தியாக உடையணிந்து வர,  ஒருநொடி உலகம் மறந்து தன் மாமனின் அழகில் லயித்து நின்றாள் ஹனிகா.

ஒருநொடி சுயம் இழந்து நின்றவள் மறுநொடி சுதாரித்து, “ மாமா.. சேம் பிஞ்ச்” என்று குழந்தை போல குதித்து “என் டிரஸ் கலர்லயே தேடிப்பிடிச்சு டிரஸ் பண்ண தான் இவ்ளோ நேரமாச்சா மாமா?” என்று அவளின் வழமையான குறும்புடன் விதுரனை வம்பிழுக்க துவங்கினாள் ஹனிகா.

அப்போது தான் இருவரின் உடை நிறத்தை கவனிதவன், அவள்  புடவையின் நிறமான அடர்சிகப்பு நிறத்தில்  அவன்  மேல் சட்டை  இருக்க, “ உன் டிரஸ் கலர் என்னன்னு நான் கவனிக்கவே இல்ல,  இந்த டிரஸ் தான்  அயன் பண்ணி ரெடியா இருந்தது,  அதான்  எடுத்துப்போட்டேன்” என்று அசட்டையாகவே பதில் தந்தான் விதுரன்.

“இப்படியெல்லாம் சொல்லி எஸ்கேப் ஆகக்கூடாது, எனக்கு கண்டிப்பா ட்ரீட் வேணும்” என்று விடாமல் வம்பு செய்தவளை சமாளிக்க சரியென்று சம்மதம் சொல்லி ஒருவழியாய் அவளையும் அழைத்துக்கொண்டு கல்யாண மண்டபம் வந்து சேர்ந்தான் விதுரன்.

காரில் இருந்து ஜோடியாக  இறங்கிய இருவரை கண்டு பாதி கண்கள் மலைத்தும் மீதி கண்கள் திகைத்தும் போனது.. “இவ எப்படி இவன் கூட?” என்று வசுந்தரா புரியாமல் கோபமும் குழப்பமுமாய் மகளை பார்க்க, அவர்கள் வந்ததும் தேடி வந்த கணபதிநாதன், “கல்யாணம் முடியவும் முக்கியமான விஷயம் பேசணும், நேத்து மாதிரி சொல்லாம கிளம்பிடாதீங்க”, என்று யாரோ ஒருவர் போல  தகவல் கூறி விலகி சென்றார். அதுவே தேன்மொழிக்கு உவப்பாக இருக்க விதுரன் முகம் வெளிப்படையாக விரக்தியை காட்டியது.

இத்தனை நாட்களாய் இல்லாமல் வழிய சென்று பேசிய தன் கணவரையும் ஒன்றாய் இணைந்துவரும் மகளையும்  எரிக்கும் பார்வை பார்த்தார் வசுந்தரா. அதை எதையும் கண்டு கொள்ளாது  என்னவோ விதுரனுடன் ஒன்றாய் ஒட்டி நடப்பது மட்டுமே தன் வாழ்நாள் லட்சியம்  என்பதுபோல சுற்றம் எதையும் கண்டுகொள்ளாது, ஒவ்வொரு எட்டிற்கும் அவனோடு ஒட்டி உரசி நடந்தாள் ஹனிகா.

வசுந்திரா முகத்தில் இருந்த கோபத்தை கவனித்த வாணி மெதுவாய் அவரை நெருங்கி “ஒரு பொண்ண இழந்தது போதும், இவளையும் இழந்துடாத, ஜாக்கிரதையா இரு! எதையாவது பேசி உன் புருஷன் மனசை மாத்தி மறுபடியும் காரியம் சாதிச்சுக்க போறாங்க. ஏற்கனவே  கொஞ்சம் கொஞ்சமா கரைய ஆரம்பிச்சுட்டார், வழிய போய் பேசுறதுலயே அது நல்லா தெரியுது.   உன் பொண்ணு நடவடிக்கையும் சரியில்ல, கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம எப்படி ஒட்டி உரசி நடந்து வரா பாரு,   காலகாலத்துல கால்காட்டு போடு, இல்லை, எல்லாம் கை மீறி போயிடும்!” என்று சாத்தான் வேதம் ஓதிய கதையாய் ஏற்கனவே பகையில்  புகைந்து கொண்டிருக்கும் மனத்திற்கு    தூபம் போட்டார்.

அதன் பின் தன் மகளை அழைத்து  தன் கண்பார்வையிலேயே வைத்துகொண்டாள்  வசுந்திரா. தன் கணவர் செய்கையையும் கூர்மையாய் கவனிக்க துவங்கினார், தன் தங்கை குடும்பத்தின் மீது கோபம் இருப்பது போல காட்டிகொண்டாலும் தனக்கு தெரியாமல் ஏதோ ஒன்று செய்கிறார் என்ற எண்ணம்  வலுப்பெற, “ நானும் வந்ததுலயிருந்து பார்க்கிறேன், இந்த வெங்கடேசன் மாமா  உங்க தங்கச்சி குடும்பத்தை  விழுந்து விழுந்து கவனிக்கிறாரு, இதுல உங்க பங்கு ஏதாவது இருக்கா?” என்று நேரடி தாக்குதலுக்கு தயாராக, “நான் சொல்லி தான் கல்யாணத்துக்கு வந்திருக்காங்கன்னு நேத்தே உன்கிட்ட சொல்லிட்டேன், இதுக்கு மேல என்ன சொல்லனும்னு எதிர்பார்க்கிற, நடந்ததுல என் தப்பும் இருக்கு, மறந்திடாத!” என்று நிதானமாக அதே நேரம் தீர்மானமாக கூறினார் கணபதிநாதன்.

“ என்ன உங்க தப்பு?” என்று வசுந்தரா புருவம் சுருக்க “என்ன விபரம்னு முழுசா தெரிஞ்சுக்காம ஜெயிலுக்கு அனுப்புனது”, என்றார் கணபதிநாதன்.

‘ஒருவேளை தப்பை சரி செய்யுறேன்னு  இரண்டாவது பெண்ணை இரெண்டாம் தாரமா கட்டிக்கொடுத்துடுவாரோ’,  என்ற பயம் தொற்றிக்கொள்ள “காலையில உங்க கூடத்தான  நம்ம பொண்ண அனுப்பிவைச்சேன், பிறகு எப்படி உங்க தங்கச்சி குடும்பத்துக்கூட  வந்து இறங்குறா?” என்று சந்தேகக் குரலில் நிறுத்த, “என் தப்பை திருத்திக்கிறதுக்கும் விதுரனுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுக் குடுக்குறதுக்கும் ஒரு வழி கிடைச்சிருக்கு, நீ நேத்து நடந்துகிட்ட விதத்துல இன்னைக்கு வரமாட்டாங்கன்னு நான் தான் நம்ம பொண்ண போய் கூட்டிட்டு வரச்சொன்னேன்!”, என்றவர் அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் விலகி சென்றார்.

கணவரின் தீர்மானக்குரலில் தடுமாறியவர், கண்கொத்தி பாம்பாய் தன் மகளை இருமடங்கு கவனத்துடன் கண்காணித்தார். அன்னையின் கட்டுப்ப்பாட்டுக்கு கட்டுப்பட்டு ஹனிகா விலகி இருந்தாலும் அவள் பார்வை மட்டும் விதுரனை வருடியபடியே இருந்தது.

பலநாள்  காணாத உறவுகளிடம்  தேன்மொழி  அளவளாவிக்கொண்டிருக்க,  எதற்கு வம்பென்று விதுரன் எவரையும்  கவனியாது  ஓரமாய் அமர்ந்திருக்க, அவன் வயதை ஒட்டிய உறவினன்  நலம்  விசாரிக்க அருகில் வந்து, “என்ன மாப்பிள பார்த்து பலநாள் ஆச்சு எப்படி இருக்க? கார்ல வந்து இறங்கும் போதே தெரியுது நல்லாத்தான் இருக்கன்னு”, என்று இடக்காக பேசியவன், விதுரன் அசட்டையாக உச்சு கொட்டி, ‘இப்போ உனக்கு என்ன வேணும்?’ என்பது போல பார்க்க, “நேத்து  பேசலாம்னு வந்தேன், அதுக்குள்ள நீ  கிளம்பி போயிட்ட” என்று பேச்சை வளர்க்க முயன்றான் வந்தவன்.

வம்புக்கார உறவிடம் வார்த்தை வளர்க்க விருப்பமின்றி “ஒரு முக்கியமான வேலை அதான் உடனே கிளம்பிட்டோம்”,  என்று வார்த்தையை கத்தரித்து இடத்தை விட்டு நகர முயல, விதுரனின் அலட்சியத்தை கண்டு கொதித்துப்போனவன், “அந்த முக்கியமான வேலை அடுத்த கல்யாணமா மாப்பிள்ளை! பொண்ணு கூட பார்த்துட்ட போல? அக்கா கூட வாழ்ந்தாச்சு, அடுத்த டார்கெட் தங்கச்சியா?”, என்றவன் பார்வை ஹனிகாவை தொடர, அவன் வார்த்தையிலும் பார்வையிலும்   இருந்த விஷத்தை உணர்ந்தவன், “ இன்னொரு தடவை இந்த மாதிரி உளறுன.. அடுத்த தடவை  உளற வாய் இருக்காது!” என்று அடிக்குரலில் சீறியவன், சூழ்நிலை உணர்ந்து  “ உன் கேடுகெட்ட புத்தியால சின்ன பொண்ணு மேல சேற பூசாத, வாழ வேண்டிய பொண்ணு வாழ்க்கை உன் வார்த்தையால வீணாகக்கூடாது”, என்று விதுரன் எச்சரிக்கை விடுக்க.

“ சின்ன பொண்ணா?” என்று விதுரனின்  எச்சரிக்கையையும் ஏளனம் செய்தவன் “ நீ சொல்லுற சின்னப்பொண்ணோட பார்வைய பார்க்கும் போது, அது உன்கூட வாழணும்னு ஆசைப்படுற மாதிரி தெரியுதே?” என்று மேலும் விஷத்தை கொட்டினான்.

விதுரனின் அருவருப்பான பார்வையை பொருட்படுத்தாது  “உனக்கு  இரெண்டாவது கல்யாணத்துக்கு  பொண்ணு தேடுறாங்கன்னு கேள்விப்பட்டேன், கையில வெண்ணைய வைச்சுட்டு நீயேன்  நெய்க்கு வெளியுல   அலையுற?,  பேசாம இவளையே பிடிச்சு மூணு முடிச்சு போட்டுடு! நல்லா அல்வா மாதிரி  இருக்கா! உனக்கு என்ன கசக்கவா போகுது!” என்றவன் வார்த்தை எல்லைமீறிட..   இம்முறை கட்டுப்பாடு இழந்து கைநீட்டிவிட்டான் விதுரன்.   

ஏதோ விபரீதம் என்று உணர்ந்த உறவுகள் கூடி நின்றிட சிலர்  இருவருக்கும் இடையில் வந்து  நின்றிட  சுற்றம் உணர்ந்து அமைதியானான் விதுரன்.

“என்ன விதுரா? என்னாச்சு?” என்று பதறியபடி தேன்மொழி மகனை நெருங்கிட, “ கல்யாணம் முடிஞ்சிடுச்சுல,  வாங்க கிளம்பலாம்!” என்று அன்னையை அழைத்தான் விதுரன்.

ஏதோ முக்கியமான விஷயம் என்று அழைத்த  அண்ணனிடம் சொல்லாமல் எப்படி கிளம்புவது என்று தேன்மொழி தயங்கி நின்றிட, விபரம் அறிந்து அங்கு வந்து சேர்ந்த கணபதிநாதன்  தன் மருமகனுடன்  மல்லுக்கு நிற்கும் நபரை பார்த்து  புருவம் சுருக்கி எதையோ யோசித்து,  உடனிருந்த பெரியவர்களை பேச்சுவார்த்தை நடத்தும்படி  கண்களில் செய்கை செய்திட, அவர் பார்வையின் பொருள் புரிந்ததுபோல ,“ஏய் என்னப்பா மருது, பட்டப்பகலுலையே குடிச்சுட்டு கல்யாண வீடுன்னு கூட பாக்காம உன் வம்பு சண்டைய ஆரம்பிச்சிட்டியா?” என்றார் ஒரு பெரியவர்.

“யாரு வம்பு பண்றது? உண்மைய  சொன்னதுக்கு துரைக்கு கோபம் வருது”, என்று அவரிடமும் வம்புக்கு நின்றான் அந்த மருது.

“ என்ன உண்மை?” என்று பெரியவர் வினவிட “அதை அவன்கிட்ட கேட்கவேண்டியது தான! கேட்கமாட்டீங்க உங்க வாய் சவடால் எல்லாம் வசதி இல்லாத எங்ககிட்ட தான எடுபடும்!” என்று நீட்டி முழக்கினான் மருது.

“ என்ன கண்ணா,  கை நீட்டுற அளவுக்கு என்ன பிரச்சனை?”  என்று கலவரக்குரலில்  வினவினார் தேன்மொழி.

“ஒன்னும் இல்ல அவன் ஏதோ குடிச்சுட்டு உளறுறான், நீங்க கிளம்புங்க” என்று பிரச்சனையை முடிக்க முயன்றான் விதுரன்.

“என்ன உளருனேன்னு சேர்த்து சொல்ல வேண்டியது தான? நீ சொல்லமாட்ட வெளிய சொன்னா உன் மானம் போயிடாது, என்ன நடந்ததுன்னு நான் சொல்லுறேன் நியாயத்தை நீங்க சொல்லுங்க!” என்று கூடி நின்றவர்களை பொதுவாய் நிறுத்தி மேலும் தொடர்ந்தான்,  “நீ எதுக்கு இரெண்டாவது கல்யாணத்துக்கு ஊரு முழுக்க பொண்ணு தேடுற, உன் பொண்டாட்டியோட தங்கச்சியையே இரெண்டாம் தாரமா கட்டிக்க வேண்டியது தானன்னு கேட்டேன், நான் கேட்டதுல என்ன தப்பு? நம்ம ஊரு உலகத்துல நடக்காததா இது!  பொண்டாட்டி தவறிட்டா அவ தங்கச்சியை கட்டிகிறது தானே நம்ம வழக்கம்?”   என்று தன் வார்த்தைக்கு விளக்கம் கொடுத்தான் மருது.

“இன்னொரு தடவை பழக்கவழக்கம்னு பஞ்சாங்க கதை  சொன்ன இங்கயே கொன்னு புதைச்சுடுவேன்” என்று மீண்டும் அடிக்க கையோங்கினான் விதுரன்.

கொஞ்சமும் அசராமல் “என்ன  கோபம் வருதா? உன் மாமன் மகளை கட்டிக்க சொன்னா  சின்ன பொண்ணுன்னு என் கழுத்தை பிடிக்கிறயே! அவளை விட இரண்டு வயசு சின்னவ என் தங்கச்சியை  இரெண்டாம் தாரமா கேட்கும் போது  உன் நியாயமான புத்தி எங்கபோச்சு?” என்று கோபம் குறையாமல்  கத்தினான் மருது. 

“என்ன.. நான் உன் தங்கச்சிய  பொண்ணு கேட்டேனா?” என்று  விதுரன் புரியாமல் பார்க்க,  “ என் மருமகனுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, நான் தான் உன் அப்பாகிட்ட பொண்ணு கேட்டேன் அவரும் சரின்னு சொல்லிட்டாரு, இதுக்கு மேல என்ன பேசுறதா இருந்தாலும் நீ அவர்கிட்ட போய் கேளு” என்றார் கணபதிநாதன்.

“என்ன கேட்க சொல்லுறீங்க? அதான் உங்க பணத்தை வைச்சு அவர் வாயை அடைச்சுட்டீங்களே! உண்மையிலயே என் தங்கச்சிக்கு நல்லது பண்ண நினைக்கிறவரு நல்ல பையனுக்காக    கல்யாணம் பேசணும், முதல் பொண்டாட்டி சாவுக்கு காரணமா இருந்த காட்டுமிராண்டிக்கு கட்டிவைக்க நினைக்கக்கூடாது” என்றான் மருது.

“என் மருமகன் மேல எந்த தப்பும் இல்ல”, என்று கணபதிநாதன் குரலை உயர்த்த “அப்போ அந்த உத்தம புத்திரருக்கு உங்க பொண்ணை கட்டிக்குடுக்க வேண்டியதுதான, இரெண்டாம் தாரமா!” என்று மருது கூறிட அங்கு பெரும் அமைதி நிலவியது.

“ஏய் என்ன பேசுற?, என் பொண்ணை  எதுக்கு ரெண்டாம் தாரமா குடுக்கனும்?” என்று  அதுவரை அமைதியாய் இருந்த வசுந்தரா  அதிகாரத்துடன் வினவிட, “அதானே ?  உங்க பொண்ணுக்கு எதுக்கு அந்த நிலைமை வரப்போகுது. அந்த  நிலைமை எல்லாம் எங்கள மாதிரி வசதி இல்லாதவங்களுக்கு தான வரும்” என்று  சற்றும் சளைக்காமல் பதில் தந்தான் மருது.      

ஊர் பார்க்க  காட்சிப்பொருளாய் நிற்க விரும்பாமல், நடந்ததில் மருது  தவறு எதுவும் இல்லை என்று புரிந்ததும் அவன் அருகில் வந்து, “ஒரு அண்ணனா உன் கோபம் நியாயமானது,  தெரிஞ்சோ தெரியாமலோ உன் கோபத்துக்கு நானும் ஒரு காரணம், என்னை மன்னிச்சுடு.  இனி உன் தங்கச்சி விசயத்துல என்னால எந்த தப்பும் நடக்காது”, என்று உறுதி அளித்துவிட்டு, கூடியிருந்த உறவை பார்த்து “நல்லது நடக்குற இடத்துல என்னால வீண் பிரச்சனை, நான் பண்ணுன தப்புக்கு உங்க எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்று கையெடுத்து கும்பிட்டு அங்கிருந்து நகர்ந்தான் விதுரன்.

தன் இளைய மகளை அர்த்தமாய் கணபதிநாதன் பார்த்திட, அவர் பார்வையின் பொருள் புரிந்ததுபோல   தலையசைத்து சிறுவெட்கத்துடன் தலை குனிந்து கொண்டாள் ஹனிகா.

 அவள் செயலை சம்மதமாய் ஏற்றவர் மனதில் உண்டான தெளிவுடன், விதுரன் முன்வந்து “ நீ மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்ல! எல்லாம் என் தப்பு தான், உனக்கு நல்லது நடக்கனும்னு” என்று எதையோ கூறத் துவங்க, “இது தான் நீங்க சொன்ன முக்கியமான விசயமா? எனக்கு கல்யாணம்  பண்ணிவைங்கன்னு உங்ககிட்ட கேட்டேனா? இன்னும் எத்தனை தடவை தான் என்னை அவமானப்படுத்த போறீங்க?” என்று கணபதிநாதனிடம் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு வேதனை குரலில் விதுரன் வினவிட, “அண்ணா நமக்கு நல்லது செய்யதான் நினைச்சிருப்பாரு கண்ணா”, என்று மகனை அமைதிப்படுத்த முயன்றார் தேன்மொழி. 

“எனக்கு எந்த நல்லதும் நடக்க வேணாம், என்னை இப்படியே விட்டுடுங்க அதுதான் எனக்கு செய்யுற பெரிய உதவி”, என்று கணபதிநாதனிடம் கேட்டுக்கொண்டவன் முன் நடக்க,  “ஒருநிமிஷம் மாப்பிள்ள.!” என்று விதுரனை அழைத்தவர், “நீ  வேணாம்னு சொன்னாலும்  உனக்கு  ஒரு நல்லது நடத்திவைக்க வேண்டியது என் கடமை,” என்று அழுத்தமாய் கூறி,  “மருது சொன்ன முறை தப்பா இருக்கலாம், ஆனா சொன்ன விஷயம் சரி, அடுத்து  வர முகூர்த்ததுல என் இரண்டாவது பொண்ணுக்கும் என் தங்கச்சி பையனுக்கும் கல்யாணம்!”, என்று கூடியிருந்த உறவுகள் மத்தியில் அதிரடியாய் அறிவித்தார் கணபதிநாதன்.

“என்ன பேசுறீங்க, நீங்க சொன்னா போதுமா? இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கணும், உங்க பொண்ணு சம்மதிக்கணும்!” என்றான் விதுரன். “என் பொண்ணு  சம்மதம் சொன்னதும் தான் நான் இந்த பேச்சை எடுத்தேன்”, என்று கணபதி விளக்கம் தர, கோபமாய் திரும்பி ஹனிகாவை வெறித்தவன், “உங்க பொண்ணு சந்தியாவ நீங்க வேணா மறந்திருக்கலாம், நான் என் தியாவை மறக்கல, என் வாழ்கையில இரண்டாவது கல்யாணங்கிற பேச்சுக்கே இடமில்ல!” என்று திட்டவட்டாமாக அறிவித்து  வெளியேறினான் விதுரன்.

மகனுடன் செல்லத்தயங்கி நின்ற தேன்மொழியிடம், “நடந்த கல்யாணப்பேச்சு வார்த்தையில எந்த   மாற்றமும்  இல்ல, என் முடிவுல நான் தெளிவா இருக்கேன்.  உன் மகனை சம்மதிக்க வேண்டியது உன் பொறுப்பு”, என்று பெரும் பொறுப்பை தங்கையின் தலையில் கட்டிவிட்டு நிம்மதியடைந்தார் கணபதிநாதன்.

வசுந்தரா  மறுத்துபேச முன்வர, “ யார் தடுத்தாலும் இந்த கல்யாணம் நடக்கும்”, என்று தீர்மானத்துடன் விதுரன் ஹனிகா திருமணத்தை முடிவு செய்தார் கணபதிநாதன்.

அன்பெனும் ஆயுதத்தை
கையில் எடுத்து
நம்முடன் உரிமை
போர் தொடுக்கும்
உறவுகள் கிடைப்பதும்
ஒரு வரமே…