Advertisement

3… எண்ணம் நிறைவேறுமா…?

சினமெனும் புயலில்

சிக்கி நாளும்

சிதைந்து கொண்டிருகின்றேன்

நானடி…

பூந்தென்றலாய்

புன்னகை செய்து

என் வாழ்வில்

புதுமை செய்திட வேண்டும்…

நீயடி..

“அந்தப் பொண்ணைப்பத்தி விசாரிச்சேன் தாத்தா.. பெயர் மதுரிமா ஊர் மதுரை பக்கம் தேவக்கோட்டை, இங்க ஒரு ஹாஸ்ட்டல்ல தங்கிப்படிக்கிறா. அப்பா காசிநாதன் அம்மா கண்மணி, மதுசுதன்னு ஒரு அண்ணன். ஊருல விவசாயம் தான் தொழில், நல்ல குடும்பம் அந்த பொண்ணுக்கு மாப்பிளை பார்க்குற விஷயம் தெரிஞ்சது, படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ண நினைக்கிறாங்க போல.. நானும் நம்ம காவியன் ஜாதகத்தை அவங்களுக்கு அனுப்பி வைச்சுருக்கேன் பொண்ணு வீட்டுல இதுல ரொம்ப நம்பிக்கை போல.. ஜாதகம் பொருந்தினா மத்த விசயம் பேசலாம்னு சொல்லிடாங்க.. நானும் சரின்னு சம்மதம் சொல்லிட்டேன், “ என்று நிறுத்தினான் பரத்.

“அதுவும் நல்லது தான் பரத்.. உன் சித்தப்பா எழில் காதல்னு சொல்லிட்டு உன் சித்திய கூட்டிட்டு வந்து நின்னதும் மகன் சந்தோசம் தான் முக்கியம்னு நானும் மறுக்கம சம்மதம் சொல்லிட்டேன்.. அந்த நேரம் எனக்கும் ஜாதகம் பொருத்தம் எதுவும் பார்க்க தோணல” என்று நிலவேந்தன் பேசிக்கொண்டிருக்க..

“அப்படியே பொருத்தம் பார்க்கணும்னு நினைச்சாலும் இல்லாத ஜாதகத்துக்கு எங்க போறது!.. ஆசிரமத்துல வளருற அனாதைக்கெல்லாம் ஜாதகம் எழுதி வைப்பாங்களா என்ன?” என்று அதுவரை நடந்த விசயங்களை மறைந்திருந்து கவனிந்து கொண்டிருந்த கோமதி நடுவில் நுழைந்து பேசிட.. “என்னைக்கு என் மகன் வாழ்கையில ஒண்ணா கலந்தாளோ அன்னைக்கிருந்து வேணி அனாதை இல்ல… அவளுக்கு எல்லாமுமா என் மகன் இருந்தான்..“ என்று கோமதியின் அனாதை என்ற வார்த்தைக்கு பதில் தந்தார் நிலவேந்தன்.

“ இருந்தாரு இருந்தாரு.. எல்லாமுமா என்னேரமும் நகமும் சதையுமா கூடவே சந்தோசமாத் தான் இருந்தாரு, அந்த பாசத்தை பார்த்து மயங்கித் தான் போகும்போது உங்க மகனையும் துணைக்கு இழுத்திட்டு போயிட்டா வந்த மகராசி?” என்று குத்தலாய் சாடினார் கோமதி.

“அம்மா.. கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா? நல்ல விசயம் பேசும் போது ஏன் தேவையில்லாத விசயத்தை பேசி தாத்தா மனசை கஷ்டப்படுத்துறீங்க?” என்று தன் தாயை அடக்கினான் பரத்.

“எதை நல்ல விசயம்னு சொல்லுற.. ஒரு பைத்தியத்துக்கு கல்யாணம் பண்ணி வைச்சு அப்பாவி பொண்ணு வாழ்க்கைய கெடுக்கிறது தான் நீ சொன்ன நல்ல விசயமா?” என்று கோமதி கோபமாய் துவங்கிட.. “ என் பேரன் பைத்தியம் இல்ல” என்று குரலை உயர்த்தினார் நிலவேந்தன் தாத்தா.

“ உலகத்த விட்டு போன அம்மாவையே உலகம்னு நினைச்சுட்டு வாழ்ந்துட்டு இருக்கான். இவனை பைத்தியமுன்னு சொல்லாம வேற என்னன்னு சொல்லுவாங்க..?, நாளைக்கு உங்க சின்ன மகன் மருமகளுக்கு ஏற்பட்ட நிலமை வரப் போற பொண்ணுக்கும் ஏற்படாதுன்னு என்ன நிச்சயம்?, செல்லப்பேரன் மேல இருக்குற கண்மூடித்தனமான பாசத்துல ஒன்னும் தெரியாத அப்பாவி பொண்ணு வாழ்க்கைய அழிக்க நினைக்கிறீங்களே! அந்த பாவத்தை எங்க போய் தொலைப்பீங்க..” என்று மேலும் விடாமல் வாதாடினார் கோமதி.

“வர பொண்ணு வாழ்க்கை கெட்டுதான் போகும்னு என்ன இருக்கு..? அம்மா மேல இந்தளவுக்கு பாசம் வைச்சிருக்கிறவன் நிச்சயம் பொண்டாட்டியையும் நல்லாதான் பார்த்துப்பான்” என்று தன் தம்பிக்காக எதிர்வாதம் செய்தான் பரத்.

“ உங்க பையன் சொல்லுற விஷயம் உண்மை தான அத்தை.. அம்மா மேல பாசம் வைச்சிருக்கிற பிள்ளை வர பொண்டாட்டியையும் நல்லா பார்த்துப்பான்.. என் புருஷன் என்னை விழுந்து விழுந்து கவனிக்கிற விதத்திலயே உங்களுக்கு புரியல உங்க பையன் உங்க மேல வைச்சிருக்கிற பாசத்தோட அளவு.. “ என்று குத்தலாய் பதில் தந்தபடி அங்கு வந்தாள் அனுரா பரத்தின் மனைவி.

எப்போதும் தனக்கு சாதகமாக பேசும் மனைவி இன்று தன் அன்னைக்கு பரிந்து பேசுவதன் காரணம் புரியமல் பார்த்தவன் , “ நீ வேற எரியிற நெருப்புல எண்ணைய ஊத்தாத அனு!, இப்போ காவியன் கல்யாண விஷயத்தைப் பத்தி பேசிட்டு இருக்கோம் நீ தேவையில்லாத விஷயத்தை பேசி பிரச்சனையை வேற பக்கம் திசைத் திருப்பாத.. “ என்று மனைவியை கடிந்து கொள்ள.. கண் ஜாடையில் எதையோ கணவனுக்கு உணர்த்திவிட்டு.. “ நல்லது சொன்னா உங்க பிள்ளை எப்படி புரிஞ்சுப்பார் அத்தை” என்று அவருக்கு சாதகமாக பேசுவது போல பேசினாள் அனுரா.

தன்னைக் கண்டாலே ஒதுங்கிச்செல்லும் மருமகள் இன்று தானாக வலிய வந்து தனக்கு பரிந்து பேசிட.. அவளை புதிராய் பார்த்தார் கோமதி.

தன்னை விசித்திரமாய் பார்த்தவரை மெல்ல நெருங்கி “ஆனா இப்படி ஒரு கல்யாணம் நடக்குறது கூட ஒரு விதத்துல நல்லது தான். அந்த பைத்தியத்தை சமாளிக்கிற தொல்லை இனி உங்களுக்கு இருக்காதுல” என்று மெதுவாய் ரகசியம் பேசியவள், “ நீங்க இந்த கல்யாணத்துக்கு சரினு சொன்னா மட்டும் அவருக்கு பொண்ணு கிடைச்சுடுமா என்ன? அந்த பொண்ணு வீட்டுலயும் சம்மதம் சொல்லனும்ல” என்று கோமதியை சம்மதம் சொல்லவைக்கும் முயற்சியில் இறங்கினாள் அனுரா.

தன் மனைவி ஏதோ திட்டத்துடன் தான் இப்படி நடந்து கொள்கிறாள் என்று உணர்ந்து கொண்ட பரத்.. ” யார் சரின்னு சொன்னாலும் சொல்லலனாலும் இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும்” என்று மனைவியை அடக்குவது போல தன் அன்னைக்கும் சேர்த்து அறிவுறுத்தினான் பரத்.

“ அவளை ஏன்டா அடக்குற, அவ சொல்றதும் நியாயம் தான!… இல்லாத அம்மாவை நினைச்சு உருகிட்டிருக்கான் ஒருத்தன்… நீ என்னடானா கண்ணு முன்னாடி அம்மா இருந்ததும் கொஞ்சம் கூட மதிக்கிறது இல்ல. எப்போ பாரு உன் தாத்தாவுக்கும் புத்தி தடுமாறி இருக்குற தம்பிக்கும் சாதகமா பேசிக்கிட்டு இருக்கிற, இந்த ஒரு தடவையாவது என் பேச்சை கேளு, இப்போ நீ பார்த்துட்டு இருக்குற வேலையை இத்தோட நிறுத்திடு, இவனை கட்டிகிட்டு அந்த பொண்ணு என்ன சந்தோசத்தை அனுபவிக்க முடியும்னு நினைக்கிற? ஒரு பொண்ணுக்கு தன் கல்யாணத்த பத்தி நிறைய கனவும் எதிர்பார்ப்பும் இருக்கும்… அதெல்லாம் இந்த கல்யாணம் நடந்தா அந்த பொண்ணுக்கு வெறும் கனவாவே முடிஞ்சுடும் ” என்று எதார்த்தத்தை பேசினார் கோமதி.

“ஒருவேளை வர பொண்ணு காவியனுக்கு அம்மாவா இருந்தா அந்த பொண்ணு எதிர்பார்த்ததைவிட சந்தோசமான வாழ்க்கைய அவன் கொடுப்பான் “ என்று நம்பிக்கையாய் பேசினான் பரத்.

”கொடுப்பான் கொடுப்பான், ஒருதடவை வாய் தவறி ஒருவார்த்தை அவன் அம்மா அப்பாவை பத்தி என்னமோ சொன்னதுக்கு எனக்கு கொடுத்த மாதிரி தினமும் வரவளுக்கும் கொடுப்பான்” என்று குத்தலாய் கூறினார் கோமதி.

“அந்த பொண்ணு நிச்சயம் உங்கள மாதிரி என் தம்பிய காயப்படுத்த நினைக்கமாட்டா” என்றான் பரத்.

“உன் கணிப்பு தப்பா இருந்து, அந்த பொண்ணும் பாசம் காட்டத் தெரியாதவளா இருந்தா என்ன செய்வ? அந்த பொண்ணு வாழ்க்கை மட்டும் இல்ல உன் பாசக்கார தம்பி வாழ்க்கையும் சேர்ந்து பாழப்போகிடும்” என்று கோமதி குத்தலாய் கேட்டிட… “ நீங்க நினைக்கிற அளவுக்கு… மோசமாக வாய்ப்பில்லை, காவியன் பாசத்துக்கு ஏங்கிற பச்சை குழந்தை மாதிரி, உண்மையான பாசம் கிடைச்சா போதும் அவன் பிரச்சனையெல்லாம் தீர்ந்திடும்” என்று அவர்களுக்கு பின்னருந்து குரல் கொடுத்தார் காவியனுக்கு கவுன்சிலிங் வழங்கும் மருத்துவர் கிரிதரன்.

“ வா.. கிரி உனக்காக தான் காத்திட்டு இருந்தேன்… நீ போய் காவியன் கூட பேசு… நீ சொல்றத வச்சு தான் அடுத்தக் கட்ட ஏற்பாட்ட கவனிக்கணும்“ என்று நிலவேந்தன் தாத்தா மருத்துவரை ஆர்வமாய் வரவேற்க… “ ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுக்காதீங்கனு சொன்னா யாரு கேக்குறா…? நல்லா படிச்ச டாக்டரே இந்த பாவத்துக்கு துணையா இருக்கும் போது என்னத்த சொல்றது !“ என்று பொதுப்படையாக கூறுவதுபோல் கோமதி புலம்பிட.. இவர்களை திருத்தவே முடியாது என்பதுபோல் அலட்சியமாய் பார்த்துவிட்டு… காவியனை தேடி சென்றார் கிரிதரன்.

“ஹலோ காவியன்.. எப்படி இருக்க….? காயம் ஆறிடுச்சா.. இல்லை இன்னும் வலி இருக்கா?” என்று கேட்டபடி காவியனை நெருங்கி… அவன் காயங்களை கவனித்துவிட்டு, “ எனக்கு என்னவோ உன்கிட்ட ஏதோ வித்தியாசம் தெரியுதே!” என்று கேலியான கேள்வியுடன் நிறுத்த.. “ தாத்தா சொன்னாரா?” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான் காவியன்.

  ஒரு வார்த்தையில் எல்லாவற்றையும் புரிந்துகொள்பவனை பைத்தியம் என்று சாடும் உறவை எண்ணி கசந்து கொண்டவர் மேலும் பேச்சை வளர்க்க, “ ஒரே பார்வையில பிடிச்சுடுச்சு போல, இதுக்கு பேர் தான் கண்டதும் காதலா?” என்று கேலியை விடாமல் தொடர்ந்தார் கிரிதரன்.

“காதலா?” என்று ஒருநொடி தயங்கியவன், “ நான் அந்த பொண்ணோட முகத்தை கூட பார்க்கலையே! அது எப்படி கண்டதும் காதல் ஆகும்” என்று தீர்க்கமாய் வினவினான் காவியன்.

“ என்ன காவியன் சொல்லுற?, உனக்கு அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னேன்னு உன் தாத்தா சொன்னாரு, “ என்று கிரிதரன் குழப்பமாய் வினவ, “ ஆமாம் அங்கிள், எனக்கு அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு, என் அம்மா அளவுக்கு.” என்று மேலும் குழப்பினான் காவியன்.

“ அப்போ அதுக்கு பேரு என்ன?” என்று கிரிதரன் நிறுத்த.. “ இது தான் காதலா? அங்கிள்” என்று குறும்பான குரலில் வினவினான் காவியன்.

“காவியன் டோன்ட் பீ சில்லி, உன் பேச்சை கேட்டு.. உனக்கும் அந்த பொண்ணுக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணுறாங்க!, நீ என்னடான்னா இதுதான் காதலான்னு குழப்பிட்டு இருக்க..? இது ஒரு பொண்ணு வாழ்க்கை சம்மந்தப்பட்டது ” என்று சற்று அழுத்தத்துடன் அதே நேரத்தில் நிதானத்தை கைவிடாமலும் பேசினார் கிரிதான்.

“ அங்கிள் நான் தெளிவா தான் இருக்கேன் நீங்க தான் குழம்பிப் போய் இருக்கீங்க.. நான் அந்த பொண்ணு முகத்தை பார்க்கால, அதனால இது கண்டதும் காதல் இல்ல. இதுக்கு முன்னாடி காதலிச்ச அனுபவம் இல்ல அதனால காதல் வந்தா இப்படி தான் இருக்குமான்னு தெரியல. “ என்றவன் இடையில் என்னவோ பேசிட கிரிதரன் வாய்திறக்க, “ ஒரு நிமிஷம் அங்கிள் நான் முழுசா பேசி முடிச்சிடுறேன். வீட்டுக்கு வந்ததுல இருந்து எனக்குள்ள பலதடவை அலசி பார்த்ததுல நான் புரிஞ்சுகிட்ட ஒரு விஷயம், அந்த பொண்ணு என் பக்கத்துல இருக்கும்போது அம்மாவே என் பக்கத்துல இருக்குற மாதிரி உணருறேன், அவளை இழக்ககூடாதுன்னு தோணுது, என் வாழ்கை முழுக்க அந்த பொண்ணு என்கூட இருக்கனும் அதுக்கு கல்யாணம் தான் வழின்னு புரிஞ்சது அதனால தான் தாத்தாகிட்ட சொல்லி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண வைச்சேன்,” என்று நீண்ட விளக்கம் கொடுத்து தன் செயலை நியாயபடுத்தினான் காவியன்.

“ கல்யாண பந்தத்துக்கு இந்த காரணம் மட்டும் போதாதே காவியன், அடிப்படை அன்பு இல்லாத உறவு எத்தனை நாள் நீடிக்கும்?. நாளைக்கே உன் எண்ணம் மாறலாம், அப்போ அந்த பொண்ணு நிலைமை என்னாகும்?” என்று ஆதங்கத்துடன் பேசினார் கிரிதரன்.

“ என்ன அங்கிள் இப்படி சொல்லுறீங்க? இதுதான் காதலானு தெரியலன்னு தான் சொன்னேன் இது காதலே இல்லன்னு அடிச்சு சொல்லலையே!.. ஒருவேளை இப்போ என்னகுள்ள இருக்குற உணர்வு காதலா இல்லாம இருக்கலாம், அதுக்காக அந்த பொண்ணு மேல இனி காதலே வராதுன்னு அர்த்தம் இல்லையே!” என்றவனை புரியாமல் பார்த்த கிரிதரன், “ சொல்லுறத கொஞ்சம் எனக்கு புரியுற மாதிரி சொன்னா நல்லா இருக்கும்” என்றார் இறுக்கமான குரலில்.

அவர் குழம்பிய முகம் கண்டு விரக்தியான புன்னகை செய்தவன், “ நீங்களும் மத்தவங்க மாதிரியே, என்னை அடுத்தவங்க உணர்வை புரிஞ்சிக்க முடியாத பைத்தியம்னு நினைக்கிறீங்க! அப்படித்தானே அங்கிள்” என்று என்னவென்று உணரமுடியாத வெறுமை குரலில் வினவியவன், “ நான் கொஞ்சம் கோபக்காரன் தான் அங்கிள், அம்மாவை இழந்ததுக்கு பிறகு யார்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு வரைமுறை இல்லாம எல்லார்கிட்டயும் கோபப்பட்டுயிருக்கேன், இப்பவும் சிலசமயம் கட்டுப்படுத்த முடியாம என் கோபத்தை காட்டிடுறேன், அதுக்காக நான் பைத்தியம்னு அர்த்தம் இல்ல…. கல்யாண உறவுக்கு அர்த்தம் தெரியாத பச்சை குழந்தையும் இல்ல. என்கூட வாழவந்தவளை காதலிக்க தெரியாத ஜடமும் இல்ல. “ என்று வேதனையை மறைத்து தன் வழமையான கோபத்தை கட்டுபடுத்திய குரலில் பேசினான் காவியன்.

குரலும் முகமும் அவன் மனதின் வலியை பிரதிபலிக்க, அவன் கரத்தை ஆதரவாய் பற்றியவர், “இங்க யாரும் உன்னை பைத்தியம்னு நினைக்கல, நீயேன் தேவையில்லாம யோசிச்சு உன் மனநிம்மதியை கெடுத்துக்குற…” என்று கண்டிக்கும் குரலில் பேசியவர், காவியன் முகம் இன்னும் தெளிவில்லாமல் இருக்க, அதை சரிசெய்யும் விதமாய் “ நீ விளையாட்டு தனமா பேசவும், நான் கொஞ்சம் டென்சன் ஆகிட்டேன். அந்த பொண்ணை என்னோட பொண்ணா நினைச்சு பார்த்து ஒரு பொண்ணோட அப்பாவா ஆதங்கப்பட்டுடேன். எனக்கு இப்போ முழுநம்பிக்கை வந்திடுச்சு.. உன்னை நம்பி வந்த பொண்ண நீ எந்த விதத்திலும் கைவிடமாட்ட..” என்று கிரிதரன் முடிப்பதற்குள் இடையில் புகுந்த காவியன், “ என்னை நம்பி இல்ல, என்னோட வாழ்க்கைய பகிர்ந்துக்க வந்தவ” என்று திருத்தினான்.

இருந்த கொஞ்ச நஞ்ச குழப்பத்தையும் துடைத்தெறிந்து முகம் மலர்ந்த புன்னகையுடன், “ அடுத்து உன் கல்யாணத்துல சந்திக்கலாம்” என்று சந்தோசமாய் கூறி விடைபெற்று சென்றார் கிரிதரன்.

காவியன் வாழ்வில் இணைவதால் அந்த பெண்ணின் வாழ்வு எந்தவிதத்திலும் பாதிக்கபடாது என்று கிரிதரன் உறுதி வழங்கிட.. மனம் நிறைந்த நிம்மதியுடன் திருமணத்திற்கு வேண்டிய வேலையில் மும்மரமாய் இறங்கினர் ஆண்கள் இருவரும்.

வீட்டில் உள்ளவர்கள் தன்னை எந்தவிதத்தில் யோசிக்கின்றார்கள் என்று நினைத்து கொதித்த காவியன் அடக்கமுடியா கோபத்துடன், அருகில் இருந்த பூஜாடியை உடைத்து தன் கோபத்தை வெளிப்படுத்தி கட்டுப்படுத்த முடியா உணர்வில் கண்மூடி அமர்ந்திருக்க.. அடிபட்ட அன்று ஆதரவாய் வருடிய குரல் மீண்டும் அவன் மனதில் எதிரொலித்தது, அவனையும் மீறி இதழ் தானாய் புன்னகை சாயல் சூடிக்கொள்ள, “ நீ என் பக்கத்துல வந்துட்டா எல்லாம் சரியாகிடும் “ என்று உள்ளுக்குள் கூறிக்கொண்டு அமைதியானான் காவியன்.

 

 

Advertisement