Advertisement

29…

காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல்  சிகிச்சை அளிக்க முடியாது என்று ஒரு சில மருத்துவமனைகள் மதுசுதனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து விட அடுத்து என்ன செய்வது என்று புரியாத தவிப்புடன்.. ” அதான் இந்த ஹாஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்கல இன்னும் என்ன யோசிச்சிட்டு இருக்க, காரை எடு வேற ஹாஸ்பிடல் போவோம். ” என்றாள் மது.

” இல்ல மது இந்த சுச்சுவேஷன்ல எங்க போனாலும் உடனே ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ண மாட்டாங்க. போலீஸ் கம்ப்ளைன்ட் ஸ்டேட்மெண்ட் காட்டினா தான் யாரா இருந்தாலும் நம்மள ஹாஸ்பிடல்  உள்ளேயே அலோ பண்ணுவாங்க..” என்று பொறுமையாகவே சூழ்நிலையை எடுத்துக் கூறினான் காவியன்.

“அப்ப வா போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளைன்ட் கொடுப்போம், ” என்று அவசரப்படுத்தினாள்  மதுரிமா.

” புரிஞ்சு தான் பேசுறியா?, போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் என்னன்னு கம்ப்ளைன்ட் கொடுப்ப… கல்யாணம் பிடிக்காம மண்டபத்துல இருந்து ஓடி வந்தேன், அப்ப நாலு அஞ்சு ரவுடி என்கிட்ட கலாட்டா பண்ணுனாங்க, அதுல ஒருத்தன் என் அண்ணனை கண்ணாடியால குத்திட்டான்னு சொல்ல போறியா?, இப்படி சொன்னா.. பிடிக்காத கல்யாணம் பண்ணி வைக்கிறாங்கன்னு முதல்ல உன் அப்பா அம்மாவை தான் போலீஸ் அரெஸ்ட் பண்ணும்” என்றான் காவியன்.

” என் அப்பா அம்மாவை எதுக்கு அரெஸ்ட் பண்ணனும், கல்யாணம் பிடிக்கலைன்னு சொல்லியும் நீ தானே கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ண நினைக்கிற, அதனால உன்னை தான் அரெஸ்ட் பண்ணுவாங்க. ஓ அதுக்கு பயந்துட்டு தான் நீ போலீஸ் ஸ்டேஷன் போகாம இங்கேயே சுத்திட்டு இருக்கியா?” என்று கோபமாய் பேசியவள் வலியில் முனங்கிய மதுசுதன்  கரத்தினை இறுக்கமாய் பற்றுக் கொண்டு, “இங்க பாரு என் அண்ணனுக்கு ஏதாவது ஆச்சுன்னா உன்னை சும்மா விட மாட்டேன், ஒழுங்கு மரியாதையா போலீஸ் ஸ்டேஷனுக்கு போ..” என்று மிரட்டல் விடுத்தாள் மதுரிமா.

முன் இருக்கையில் இருந்து திரும்பி மதுசுதன் முகத்தை ஒரு நொடி கூர்ந்து கவனித்தவன் அவன் உண்மையில் வேதனையில் துடிப்பது புரிந்து, “கொஞ்சம் வெயிட் பண்ணு மச்சான் எனக்கு தெரிஞ்ச ஒரு இடம் இருக்கு கண்டிப்பா அவங்க நமக்கு  ஹெல்ப் பண்ணுவாங்க, “என்று அதற்கு மேலும் தாமதிக்காமல் அவசரமாய் காரை கிளப்பிக்கொண்டு அங்கு இருந்து நகர்ந்தான் காவியன்.

” எங்கள எங்க கூட்டிட்டு போற?,தேவை இல்லாம எங்கள அங்க இங்கன்னு சுத்த விட்டு டார்ச்சர் பண்ணாத , உனக்கு போலீஸ் ஸ்டேஷன் போக பயமா இருந்தா எங்கள இங்கேயே இறக்கி விட்டுடு,  நானே என் அண்ணனை கூட்டிட்டு போய் நடந்தது என்னன்னு போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிடுறேன். ” என்று பொறுமை பொரிந்து தள்ளினாள்  மதுரிமா.

” புரியாம பேசாத மதுமா.. நான் தான் சொல்றேன்ல,  எனக்கு தெரிஞ்சவங்க கண்டிப்பா நமக்கு ஹெல்ப் பண்ணுவாங்க. கொஞ்ச நேரம் அமைதியா இரு, நீ டென்ஷனாகி, உன் அண்ணனையும் டென்ஷனாக்காத” என்று மதுவை அமைதிப்படுத்தி விட்டு சிறிது தூரம் சென்றதும் ஒரு பெரிய வீட்டின் முன்பு வந்து காரை நிறுத்தினான்.

காயம் கண்ட இடத்திலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருக்க கை தாங்கலாய் மதுசுதனை அழைத்துக் கொண்டு மதுரிமா  தயக்கத்துடன் வீட்டினுள் நுழைய, அவசரமாய் அவர்களை முந்திச் சென்று அழைப்பு மணியை அழுத்திவிட்டு வீட்டின் உரிமையாளர்களின் வருகைக்காக காத்திருந்தான் காவியன்.

” இது யார் வீடு? ஹாஸ்பிடல் போகாம இப்ப எதுக்கு இங்க வந்திருக்கோம், ?” என்று குழப்பத்துடனும் வேண்டி வந்த உதவி கிடைக்குமா என்ற தயக்கத்துடனும் வினவினாள் மதுரிமா.

” சொல்லுறேன் பொறு” என்று மதுவை பொறுமையாக இருக்கச் சொல்லி விட்டு தன் பொறுமைய இழந்து மீண்டும் மீண்டும் அழைப்பு மணியை திரும்பத் திரும்ப அழுத்தினான்.

நடு இரவில் அழைப்பு மணியை மீண்டும் மீண்டும் அழுத்தி  ஆழ்ந்த உறக்கத்தை கலைத்தது யார் என்று அறிய.. உரக்க கலக்கத்தை போக்கும் விதமாய் கண்களை தேய்த்துக் கொண்டே கதவை திறந்த கிரிதரன்.. “யாருப்பா இது நேரம் கெட்ட நேரம் வந்து இத்தனை தடவ காலிங் பெல் அடிக்கிறது..” என்று எரிச்சலுடன் வினவினார்.

“சாரி அங்கிள்..”என்று அவசரமாய் காவியன் மன்னிப்பு வேண்ட..” அட காவியன் நீயா?, என்னப்பா புது மாப்பிள்ளை நாளைக்கு கல்யாணத்தை வச்சுட்டு இந்த நேரம் என் வீட்டுல வந்து நிக்கிற?, ஏதாவது பிரச்சனையா?” என்று அக்கறையுடன் விசாரித்தார் கிரிதரன்.

“அங்கிள் ஒரு எமர்ஜென்சி நீங்க தான் எங்களுக்கு ஹெல்ப் பண்ணும்…” என்று தனக்கு பின் நின்றிருந்த மதுசுதனை சுட்டிக்காட்டி… ” இவர் என் மச்சான், நான் கல்யாணம் பண்ணிக்க போற மதுவோட அண்ணன்.  முதுகுல கண்ணாடி  குத்திருச்சு, எந்த ஹாஸ்பிடல் போனாலும் ட்ரீட்மெண்ட் செய்ய மாட்டேங்கிறாங்க. போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளைன்ட் பண்ணிட்டு வர சொல்றாங்க. அதுக்கெல்லாம் இப்ப எங்களுக்கு நேரம் இல்லை உடனே ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணனும் அதான் என்ன பண்றதுன்னு தெரியாம உங்க கிட்ட கூட்டிட்டு வந்தேன்.” என்று நடந்ததை சுருக்கமாக விவரித்து முடித்தான் காவியன்.

காயத்துடன் நின்றவனையும் அவனை கை தாங்கலாய் தாங்கிப் பிடித்து நின்றவளையும் ஒரு முறை ஏற இறங்க பார்த்தவர், ”  சரி சரி இன்னும் எதுக்கு வெளியவே நிக்கிறீங்க, உள்ள கூட்டிட்டு வா, தாரணி கிட்ட என்னன்னு பாக்க சொல்லலாம். ” என்றவர் வந்தவர்களை உள்ளே அழைத்துச் சென்று  அமர வைத்துவிட்டு.. மருத்துவம் பயின்று ஒரு மருத்துவமனையை நிர்வகித்து வரும் தனது மகளை தேடிச் சென்றார் கிரிதரன்.

தந்தையின் பதற்றத்தை உணர்ந்து உடனே  வந்த தாரணியும் மறுத்து எதுவும் கூறாமல் மதுசுதனை பரிசோதித்து விட்டு, வீட்டில் இருந்து இரண்டு கட்டிடம் தள்ளி இருந்த தனது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடனடியாக வேண்டிய சிகிச்சை தொடங்கினாள்.

கிரிதரன் மூலம் விபரம் அறிந்த நிலவேந்தன்,  மதுசுதன் நிலை குறித்து அவனது பெற்றோருக்கு அறிவித்து அவர்களையும் தன்னுடைய அழைத்துக் கொண்டு கிரிதரன் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

மதுசுதனுக்கு வேண்டிய சிகிச்சை அளித்துவிட்டு வந்த  தாரணி… கலங்கிய விழிகளுடன் அமர்ந்திருந்த மதுரிமா அருகில் வந்து, ”  டோன்ட் ஒரி, பயப்பட அளவுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல, ரொம்ப பக்கத்துலயே இருந்து குத்திருப்பாங்க போல அதனால காயம் ரொம்ப ஆழமா போகல… எலும்பு இல்லாத சதை பக்கத்துல தான் அடிபட்டிருந்தது, ஒன்னு ரெண்டு கிளாஸ் பீஸ்  இருந்தது அதை ரிமூவ் பண்ணி ஸ்டிச்சஸ் போட்டு இருக்கேன், இன்னும் டூ த்ரீ டேஸ் ஹாஸ்பிடல்யே ஸ்டே பண்ணி அப்சர்வேஷன்ல இருந்தா பெட்டரா இருக்கும்.” என்றாள்.

” ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்.. கரெக்ட் டைம்ல ஹெல்ப் பண்ணி இருக்கீங்க..” என்று நன்றியுடன் மது கூறிக் கொண்டிருக்க.. பயமும் பதட்டமுமாய்  மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர் காசிநாதன் மற்றும் கண்மணி தம்பதியினர்.

மதுசுதனுக்கு மருத்துவம் பார்த்த தாரணியை அணுகி மகனின் நிலை குறித்து கேட்டு அறிந்து கொண்ட பின் மதுரிமாவின் முன்  வந்து நின்றனர் இருவரும்.

” என்ன நடந்தது மது?”என்று காசிநாதன் கேள்வி எழுப்ப,” அது வந்து…. அப்பா ஆட்டோல..   மூனு ரவுடிங்க..” என்று என்ன சொல்வது என்ற புரியாத தவிப்புடன் முழுவதும் சொல்ல நேர்ந்தால் தானும் மாட்டிக்கொள்வோம்  என்ற தயக்கத்துடனும் தட்டுத் தடுமாறி கேட்ட கேள்விக்கு பதில் தராமல் பாதியில் நிறுத்தினாள் மதுரிமா.

மகள் தடுமாறுவதில் இருந்தே அவள் மீது தவறு இருப்பதை புரிந்து கொண்ட கண்மணி, “என்ன ஆட்டோ.. முதல்ல நீ எப்படி இங்க வந்த?,  மண்டபத்துல வேலை முடிச்சுட்டு வந்து பார்க்கும்போது நீ உன் ரூம்ல தூங்கிட்டு தான இருந்த!,  அப்புறம் எப்படி இங்க வந்த?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை அடுக்கி கொண்டே சென்றார்.

தன்னை நோக்கி எழுப்பப்பட்ட எந்த கேள்விக்கும் பதில் கூற முடியாத தவிப்புடன் மதுரிமா அமைத்துக் கொள்ள அவசரமாய் அவளுக்கு முன் வந்து நின்ற காவியன், “ஆக்சுவலி.. ஆன்ட்டி மது மேல எந்த தப்பும் இல்லை. நடந்த எல்லாத்துக்கும் நான் தான் காரணம், கல்யாணத்துக்கு முன்னாடி மதுவுக்கு ஒரு கிப்ட் கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன், அதுக்காக அவளை தனியா மீட் பண்ணனும்னு வரச்சொன்னேன். தனியா வரத் தயங்கிட்டு சுதனை துணைக்கு கூட்டிட்டு வந்தா.. வந்த இடத்துல இப்படி ஆயிடுச்சு” என்று தான் மணக்கப் போகும் பெண்ணின் மீது எந்த தவறும் இல்லை என்பது போல் பேசி மொத்த பழியையும் தன் மீது சுமத்திக் கொண்டான் காவியன்.

மாப்பிள்ளையே முன்வந்து வாக்குமூலம் கொடுத்து விட இதற்கு மேல் மகளிடம் கேள்வி கேட்டு பயனில்லை என்று புரிந்து கொண்ட கண்மணி அமைதியாகிட…

” இன்னைக்கு ஒரு நாள் ராத்திரி காத்திருக்க முடியாதபடி அப்படி என்ன அவசரம்?, நாளைக்கு தாலி கட்டி பொண்டாட்டி ஆனதுக்கப்புறம்   நீங்க ஆசைப்பட்ட மாதிரி எத்தனை கிப்ட் கொடுத்தாலும் உங்களை யாரு எதுவும் கேட்க போறது இல்ல.  இங்க பாருங்க மாப்பிள்ளை.. இந்த மாதிரி நேரம் கேட்ட நேரத்துல பொம்பள பிள்ளைங்க வெளியே சுத்துறது எங்க குடும்பத்து வழக்கம் இல்ல,  இந்த விஷயம் நாளைக்கு வெளியே தெரிஞ்சா வந்த சொந்த பந்தம் எல்லாம் என் பொண்ண தான் தப்பா பேசுவாங்க. ” என்று தன் மகள் மீது மொழிதாய் நம்பிக்கை கொண்ட காசிநாதன் காவியனை கடிந்து கொண்டிருந்தார்.

சூழ்நிலை புரியாது கோபமாய் பேசிக் கொண்டிருந்த தன் கணவனின் கரம் பற்றி, “கொஞ்சம் என் கூட வாங்க உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும்” என்று  தனியே அழைத்துச் சென்ற கண்மணி தங்கள் மகள் மீது அதிக அளவு தவறு இருக்க வாய்ப்பு உள்ளது என்பதை விளக்கிக் கூறி மதுவிற்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்ற விவரத்தையும் முழுதாய் கூறி முடித்தார்.

” என்ன சொல்ற அப்போ  பொண்ணு பாக்க வந்தப்போ மாப்பிள்ளை காதலிக்கிறதா சொன்னது?” என்று குழப்பமாய் வினவினார் காசிநாதன்.

” அது எந்த அளவுக்கு உண்மை எனக்கு தெரியாது ஆனா நம்ம பொண்ணுக்கு மாப்பிள்ளைய புடிச்சிருக்கு கல்யாணம் தான் புடிக்கல” என்று குழப்பத்தில் இருந்தவரை மேலும் குழப்பும்படி பேசினார் கண்மணி.

” என்ன சொல்ற கண்மணி கொஞ்சம் தெளிவா சொல்லு!” என்று காசிநாதன் விளக்கம் கேட்க, “நம்ம கல்யாண வாழ்க்கையை பார்த்து வளர்ந்த நம்ம பொண்ணுக்கு கல்யாணத்து மேல இருந்த நம்பிக்கை போயிடுச்சு. கல்யாணம் பண்ணிக்க பயப்படுறா!” என்று முன்பு தன்னிடம் மது கூறிய விபரங்களை கூறி முடித்தார் கண்மணி.

“என்ன கண்மணி கடைசி நேரத்துல வந்து இப்படி சொல்ற? முன்னாடியே என்கிட்ட இதெல்லாம் சொல்லி இருந்தா நான் ஏதாவது செஞ்சு இருப்பேன்ல” என்று மகளுக்கு விருப்பம் இல்லாத திருமணத்தை இனி எவ்வாறு தடுப்பது என்ற புரியாத தவிப்புடன் பேசினார் காசிநாதன்.

” என்ன செஞ்சிருப்பீங்க உங்க தங்கச்சி பையனுக்கு பேசி முடிச்சிருப்பீங்க அதானே!, அதனால தான் உங்க கிட்ட எதையும் சொல்லல, இப்ப கூட நீங்க மாப்பிள்ளைய தப்பா புரிஞ்சுக்கிட்டு கண்டபடி பேசுறது பொறுக்க முடியாம தான் உண்மைய சொல்லிட்டேன்” என்றார் கண்மணி.

“என்ன கண்மணி புரியாம பேசுற?, நானே நம்ம பொண்ணுக்கு பிடிக்காத கல்யாணத்தை பண்ணி வைக்கிறோம்ன்னு தவிச்சிட்டு இருக்கேன், நீ என்னடான்னா கண்டதையும் பேசிட்டு இருக்க?” என்று  எரிச்சலுடன் பேசினார் காசிநாதன்.

“பொதுவா கல்யாண பேச்சு எடுத்ததும் எல்லா பொண்ணுங்களுக்கும் வர பயம் தான்  இது,  சுதந்திரமா சுத்திட்டு இருந்துட்டு திடீர்னு  மொத்த குடும்ப பாரத்தையும் சுமக்கனும்னா யாரா இருந்தாலும் பயப்படத் தானே செய்வாங்க!,  அது மட்டும் இல்ல புது வீடு புது மனுஷங்க அந்த வீட்டில நம்ம  வாழ்க்கை எப்படி இருக்குமோ இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் யோசிக்கும் போது பயம் வரது இயல்பு தானே!    கல்யாணம் ஆனதும் எல்லாம் சரியா போயிடும். “என்று சமாதானம் செய்தார் கண்மணி.

“நான் வேற விஷயம் புரியாம மாப்பிள்ளை கிட்ட கண்டுபிடி பேசிட்டேன்.” என்று தவிப்புடன் காசிநாதன் கூறிட..” அதிகப்படியா பேசவும் தான் பயந்துட்டு உங்களை தனியா இழுத்துட்டு வந்தேன்,  இப்ப போய் மாப்பிள்ளை கிட்ட பேசின விதம் தப்புன்னு மன்னிப்பு கேட்டுட்டு மதுவை கூட்டிட்டு கிளம்புவோம்” என்றார் கண்மணி.

“என்ன கண்மணி கிளம்புவோம்னு சொல்ற?, நாம இங்க இருந்து கிளம்பிட்டா  சுதனை யாரு பார்த்துக்கிறது?, அது மட்டும் இல்ல,  இந்த மாதிரி சூழ்நிலையில இப்போ இந்த கல்யாணம் அவசியமா?” என்றார் காசிநாதன்.

“அவசியம் தான்!, இந்த கல்யாணம் எப்ப நிக்கும், ஒண்ணுத்துக்கும் உதவாத உங்க தங்கச்சி பையனுக்கு எப்ப நம்ம பொண்ண கட்டி வைக்கலாம்னு உங்க அம்மாவும் தங்கச்சியும் காத்துட்டு இருக்காங்க, இப்ப இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா இதையே ஒரு காரணமா சொல்லி கல்யாணத்தை நிறுத்திட்டு அதே மேடையில நம்ம பொண்ணுக்கும் உங்க தங்கச்சி பையனுக்கும் கல்யாணத்தை நடத்தி வச்சிடுவாங்க. உங்க அம்மா கிட்டயும் தங்கச்சி கிட்டயும் நான் பட்ட பாடு போதாதா?,  என் பொண்ணும் அந்த கஷ்டத்தை அனுபவிக்கனுமா?, ஒன்னு செய்யலாம் நான் மதுவை கூட்டிட்டு இங்க இருந்து கிளம்புறேன். நீங்க சுதன் கூட இருங்க நாளைக்கு முகூர்த்த நேரத்துக்கு கல்யாண மண்டபத்துக்கு வந்துடுங்க. கல்யாணம் முடியற வரைக்கும் வேற யாருக்கும் இந்த விஷயம் தெரிய வேணாம். நம்ம பொண்ணுக்கு நல்லபடியா கல்யாணம் முடியட்டும் அதுக்கப்புறம் உங்க அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் விஷயத்த சொல்லிக்கலாம்” என்று முதல் முறையாக தன் கணவருக்கு கட்டளை  விதித்தார் கண்மணி.

“நீ இப்படி சொல்ற,  ஆனா மாப்பிள்ளை வீட்ல என்ன யோசிச்சு வச்சிருக்காங்கன்னு தெரியலையே!, ஒருவேளை அவங்க இந்த கல்யாணத்தை தள்ளி வைக்கலாம்னு சொன்னா என்ன செய்றது?, ” என்று குழப்பத்துடன் காசிநாதன்  வினவ… “இவ்வளவு தூரம் சொந்த பந்தத்தை எல்லாம் கூட்டி வந்துட்டு இப்போ கல்யாணத்தை தள்ளி வச்சா நல்லா இருக்காதுன்னு சொல்லுவோம். அவங்க கிட்ட சொல்றது மட்டுமில்ல நீங்களே யோசிச்சு பாருங்க பொண்ணுக்கு கல்யாணம்னு சொந்த ஊரை விட்டு சொந்த பந்தத்தை எல்லாம் கூட்டிட்டு இவ்வளவு தூரம் வந்துட்டோம், இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து கல்யாணத்தை தள்ளி   வச்சுட்டாங்கன்னு பொண்ண  கூட்டிட்டு ஊருக்கு போனா நாலு பேர் நாலு விதமா பேச மாட்டாங்க..” என்று திருமணம் நடக்க வேண்டியதற்கான நியாயமான காரணத்தை விளக்கினார் கண்மணி.

மனைவியின் வார்த்தையில் உண்மை இருப்பதால் சரி என்று உடனே சம்மதித்த காசிநாதனும் காவியனிடம் வந்து தான் பேசிய வார்த்தைகளுக்காக மன்னிப்பு வேண்டினார்.

” இதுக்கெல்லாம் எதுக்கு சாரி கேக்குறீங்க நான் பண்ணது தப்புதான். “என்று பெருந்தன்மையாக ஒப்புக்கொண்டான் காவியன்.

  தன்னிடம் கடிந்து பேசியவர்களிடம் முதல் முறையாக பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்த காவியனை வியப்புடன் பார்த்தார் கிரிதரன்.

“உங்க பையனுக்கு இப்படி நடந்தது வருத்தமா இருக்கு அடுத்து என்ன செய்யலாம்னு நீங்களே சொல்லுங்க!, நீங்க எப்படி சொல்றீங்களோ அதுபடியே நடந்துக்கலாம்” என்று பெற்றவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து திருமணத்தை தள்ளி வைப்போமா வேண்டாமா என்ற முடிவை அவர்களிடமே ஒப்படைத்தார் நிலவேந்தன்.

” நாங்களும் இப்போ அத பத்தி தான் பேசிட்டு இருந்தோம். இவ்வளவு தூரம் வந்ததுக்கு அப்புறம் கல்யாணம் நடக்காம ஊருக்கு போனா சொந்த பந்தம் ஒரு மாதிரி பேசும்.. அதனால உங்களுக்கு ஆட்சியபனை இல்லனா.. கல்யாணத்தை தள்ளி போடாம நாளைக்கே வச்சுக்கலாம். ” என்றார் காசிநாதன்.

எப்படியோ தன் விருப்பம் நிறைவேற போகிறது என்ற மகிழ்வுடன் காவியன் மதுவை பார்த்திட… தனக்கு விருப்பமில்லை என்றாலும் விதி ஏன் தன்னை இவனுடன் இணைத்து வைக்க முயற்சிக்கிறது என்று புரியாத குழப்பத்துடனும் கோபத்துடனும் காவியனை எதிர்கொண்டாள் மதுரிமா.

” நீங்க சொல்றதும் சரிதான் எவ்வளவு தூரம் வந்துட்டு கல்யாணம் நின்னா நல்லா இருக்காது, அடுத்து என்ன செய்யலாம். ” என்று பெண்ணைப் பெற்றவர்களின் விருப்பத்திற்கு செவிமடித்தார் நிலவேந்தன்.

” நான் இங்க சுதன் கூட ஹாஸ்பிடல்ல தங்கிக்கிறேன், மதுவை கூட்டிட்டு கண்மணி வீட்டுக்கு போகட்டும்.” என்று காசிநாதன் கூறிட.. “என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு சொல்லலாமா..?” என்று தனது யோசனையை கூறிட அனுமதி வேண்டினான் காவியன்.

” சொல்லுங்க மாப்ள..” என்று காசிநாதன் சம்மதிக்க.. ” இஃப் யூ டோன்ட் மைண்ட்..   நானும் தாத்தாவும் மதுவை  கூட்டிட்டு போய் அனு கூட  ஸ்டே பண்ண வச்சிடுறோம். முகூர்த்த நேரத்தில நீங்க உங்க போய் கிளம்பி மண்டபத்துக்கு வந்துடுங்க. மதுவ அனு கூட்டிட்டு வரட்டும். ” என்று தனது யோசனையை கூறினான் காவியன்.

காயத்துடன் கிடக்கும் மகனுடன் தங்க வாய்ப்பு கிடைத்ததும் காவியன் திட்டத்திற்கு சரி என்று உடனே சம்மதித்த காசிநாதன் மற்றும் கண்மணி… மதுசுதனிடம் சென்று விட, மதுரிமாவை  அழைத்துக் கொண்டு  நிலவேந்தன் மற்றும்  காவியன் கிளம்பத் தயாராகினர்.

மருத்துவமனை விட்டு வெளியே வந்த மூவரும் காரில் ஏறி அமர்ந்த நேரம்  அங்கு வந்து சேர்ந்த கிரிதரன்,   சற்று தனியாக பேச வேண்டும் என்று நிலவேந்தனை மட்டும் தனியா அழைத்துச் சென்றார்.

“என்னப்பா எதுவும் பிரச்சனையா?, ” என்று தன்னை தனியே அழைத்து வந்தவரிடம் பதற்றத்துடன் நிலவேந்தன் வினவிட… “இனி எந்த பிரச்சனையும் இல்லன்னு சொல்ல தான் உங்களை தனியா கூட்டிட்டு வந்தேன்.  காவியன் விருப்பப்படுறான்னு தான்  நான் கூட இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன். இருந்தாலும் இது சரியா வருமா வராதான்னு எனக்குள்ள ஒரு கேள்வி இருந்துகிட்டே இருந்தது.  எனக்குள்ள அப்படி ஒரு சந்தேகம் இருந்ததே தப்புன்னு இன்னைக்கு உங்க பேரன் நிரூபிச்சிட்டான்.  ” என்று ஆச்சரியத்துடன் கூறினார் கிரிதரன்.

” எனக்கும் அந்த நம்பிக்கை இருக்க போய் தான் எப்படியாவது இந்த கல்யாணத்தை நடத்திடனும்னு தவிச்சிட்டு இருக்கேன். நான் உன்கிட்ட ஏற்கனவே சொன்னேன்ல பொண்ணு பார்க்க போனப்ப கூட பொண்ணோட பாட்டி ஏடாகூடமா பேசினப்ப கூட காவியன் கோபப்படாமல் பொறுமையாவே பதிலடி கொடுத்தான். ” என்றும் முன்பு பெண் பார்க்கும் போது நடந்த சம்பவத்தை மீண்டும் ஒருமுறை நினைவு கூர்ந்தார் நிலவேந்தன்.

” நீங்க சொன்னப்ப கூட எனக்கு அந்த அளவுக்கு முழுசா நம்பிக்கை வரல இப்ப என் கண்கூட பார்க்கும்போது என் கண்ணை என்னாலேயே நம்ப முடியல, யாராவது ஒரு வார்த்தை தப்பா பேசிட்டா போதும் உடனே கோபப்பட்டு கத்தி கையில கிடைக்கிற பொருளை எல்லாம் தூக்கி எரியிற காவியன் இன்னைக்கு அந்த பொண்ணோட அப்பா கிட்ட எவ்ளோ பொறுமையா பேசிட்டு இருக்கான். இனிமே என்னோட கவுன்சிலிங் எதுவும் உங்க  பேரனுக்கு தேவைப்படாது.” என்று நம்பிக்கையுடன் பேசினார் கிரிதரன்.

பெரியவர்கள் இருவரும் விலகிச் சென்றதும் கிட்டிய தனிமையில்… மதுவை நெருங்கி அவள் கரத்தை பற்றி கொண்டவன், “ஒரு நிமிஷம் உன்னை இழந்திடுவோம்ன்னு பயம் வந்துருச்சு” என்று தவிப்புடன் கூறிட.. பற்றி இருந்த கரத்தை கோபமாய் தட்டி விட்டு, “சும்மா என் மேல அக்கறை இருக்கிற மாதிரி நடிக்காத, நீ மட்டும் என்னை பாலோ பண்ணி வராம இருந்தா என் அண்ணனுக்கு இந்த நிலைமை வந்திருக்காது” இன்று அதுவரை அடக்கி வைத்திருந்த கோபத்தை வெளிப்படுத்தினாள் மதுரிமா.

” நீ வீட்டை விட்டு கிளம்பாம இருந்திருந்தால் நான் எதுக்கு உன்னை ஃபாலோ பண்ணிட்டு வர போறேன்” என்று வெடுக்கென்று பதில் தந்தான் காவியன்.

காவியன் கூறிய வார்த்தையில் உண்மை இருப்பது புரிந்தாலும் அதை ஏற்க மனம் இல்லாமல், “ஓ இப்ப நீ என் மேலேயே பழி போடுறியா?, உன்னை எல்லாம் மனுசன்னு மதிச்சு பேசிட்டு இருக்கேன் பாரு அது என்னோட தப்பு தான். சரியான சுயநலவாதி நீ?” என்று பதிலுக்கு கோபத்தை காட்டினாள்
மதுரிமா.

” சுயநலவாதியா?  யாரு நானா சுயநலவாதி.    உன்னைப் பத்தி மட்டும் யோசிச்சு கல்யாண மண்டபத்துல இருந்து ஓடிப்போக நினைச்சயே! உன் அப்பா அம்மாவை பத்தி கொஞ்சமாவது யோசித்து பார்த்தியா?, நாளைக்கு மண்டபத்துல பொண்ண காணோம்னு வந்த சொந்த பந்தத்துக்கு முன்னாடி அவங்க தலை குனிஞ்சு நிப்பாங்களே அத பத்தி கொஞ்சமாவது யோசித்து பார்த்தியா?. இப்படி யாரைப் பத்தியும் யோசிக்காம கிளம்பின நீ    சுயநலவாதியா இல்ல நான் சுயநலவாதியா?” என்று மதுரிமாவின்  தவறை சுட்டிக் காட்டினான் காவியன்.

” ஆமா நான் தான்  சுயநலவாதி, அதுனால தான்.. அடிபட்டு நடு ரோட்டுல கிடந்தவனை எக்கேடோ கெட்டுப்போன்னு விட்டுட்டு போகாம ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் சேர்ப்பேன் பாரு நான் சுயநலவாதி தான்.  கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்ற பொண்ணு கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்க நினைக்கிற நீ பொதுநலவாதி தான் போதுமா சந்தோஷமா.. அதான் நீ நினைச்ச மாதிரி எல்லாம் நடக்குதே இன்னும் எதுக்கு வார்த்தையால என்னை குத்தி கிழிக்கிற?. சகா அன்னைக்கே சொன்னா தொல்லையை தூக்கி  தோள்ல போட்டுக்காதன்னு நான் தான் கேட்காம உனக்கு உதவி பண்ணினேன்.  முன்ன பின்ன தெரியாத உனக்கு ஓடி வந்து உதவி பண்ணினேன் பாரு  எனக்கு இது தேவை தான் ” என்று  சுரக்கத் துவங்கிய கண்ணீர் துளிகளை கட்டுப்படுத்திக் கொண்டு பேசினாள் மதுரிமா.

கலங்கிய பெண்ணவள்  முகம் காண பொறுக்காமல்.. “மதுமா ப்ளீஸ் உன்னோட அர்த்தமில்லாத பயத்தை தூக்கி எரிஞ்சிட்டு முழு மனசோட இந்த கல்யாணத்தை பண்ணிக்கோ.. கண்டிப்பா நான் உன்னை ரொம்ப சந்தோஷமா பாத்துக்கணும்” என்று உறுதி அளித்தான் காவியன்.

“யார் நீ?, கல்யாணத்துல கொஞ்சம் கூட விருப்பம் இல்லைன்னு சொன்னதுக்கு அப்புறமும் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ண நினைக்கிற நீ என்னை சந்தோஷமா பாத்துக்குவ?, கேக்கவே காமெடியா இருக்கு!” என்று கிண்டலுடன் கூறினாள் மதுரிமா.

இருவரின் காரசாரமான விவாதத்திற்கு இடையூறாக வந்து சேர்ந்தார் நிலவேந்தன். அதற்கு மேல் வாதம் புரிவது சரியல்ல என்று புரிந்து இருவரும் அமைதியாகிட காவியன் திட்டப்படி மதுவை அணுவிடம் ஒப்படைத்து விட்டு தனது இடத்திற்கு சென்றான் காவியன்.

மறுநாள் காலையில் மருத்துவமனையில் இருந்து காசிநாதன் மற்றும் கண்மணி தம்பதியினர் அவர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு வந்து உடைகளை மாற்றிக்கொண்டு திருமண  மண்டபத்திற்கு வந்துவிட அனுராவுடன் மணமகள் அலங்காரத்தில் மண்டபம் வந்து சேர்ந்தாள் மதுரிமா.

நடக்காது நடக்கவும் கூடாது என்று எதிர்பார்த்த ஒரு சிலரின் எதிர்பார்ப்பை முறியடித்து ஒரு சிலரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாய் திருமணம் நல்ல விதமாக நடந்து முடிந்தது.

Advertisement