28…

நான் பிறந்த போது

பிறப்பின் வலியை

உணரவில்லை…

ஆனால்

இறப்பின் வேதனையை

வாழும் நாட்களிலேயே…

அனுவனுவாய் அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன் …

“தங்கள் திட்டமெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது இருந்தாலும் இது நடைமுறைக்கு எப்படி சாத்தியமாகும். ” என்று ஒருவர் சந்தேகமாய் இழுக்க… “அறிவார்ந்தோரை ஆலோசகராய் வைத்துக் கொண்டு அறிவிலிகள் அரசாலும் முறை ஒழிந்து.. அறிவில் சிறந்தோரே இனி அதிகாரத்தை கையில் எடுப்போம்..(மதி நிறைந்தோரை ஆலசகராய் அமர்த்தி விட்டு மதி சிறுத்தோர் மன்னராய் முடி சூடும் முறை ஒழிந்து மதி வளம் பெற்றோர் இனி மணி மகுடம் சூடுவோம்)”என்று வீராவேசமாக பேசினார் ஆலோசகர்.

“மக்களின் முன் அவர்களின் மதிப்பிற்குரிய மன்னரை குற்றவாளியாக நிறுத்தினால் அவர்கள் ஒப்புக் கொள்வார்களா என்ன?, அவர்களின் அன்புக்குரிய அரசன் அமர்ந்த அரியணையில் தங்களை அமர்த்திட அவர்கள் எப்படி சம்மதிப்பார்கள்!”என்று தனது சந்தேகத்தை வினவினார் மற்றொரு அமைச்சர்.

“நீங்கள் கேட்பது சரிதான்.. வைத்தியர் கூறிய வார்த்தைகளை மட்டுமே வைத்துக் கொண்டு நாம் மன்னரை குற்றவாளியாக நிறுத்த முடியாது. இன்னொரு மரணம் நிகழும் வரை காத்திருப்போம். நம் மன்னரை கையும் களவுமாக பிடித்து மக்கள் முன் நிறுத்துவோம். காக்க வேண்டிய மன்னனே உயிரை பறிக்க தொடங்கி விட்டதாய் புகார் கூறுவோம். இதுவரை மனிதனாய் இருந்த நம் மன்னர் அரக்கனாய் மாறிவிட்டதாய் ஆதாரத்துடன் நிரூபிப்போம்.. அதன்பின் மக்களுக்கு வேறு வழியில்லை அவர்கள் நமக்குத் தான் ஆதரவு தெரிவித்தாக வேண்டும். “என்று தனது சூழ்ச்சி திட்டத்தை விவரித்தார் ஆலோசகர்.

சுற்றி நின்று திட்டத்தை கேட்டுக் கொண்டிருந்த மற்றவர்கள் ஆலோசகரின் திட்டத்தை ஒருமனதாய் சம்மதித்து ஆமோதிக்க…

“இவன் உடலை எந்த தடயமும் இல்லாமல் அப்புறப்படுத்தி விட்டு, உன் பொறுப்பில் இருக்கும் காவலாளிகளிடம் அரண்மனையையும் அந்தப்புரத்தையும் சுற்றி இருமடங்கு கவனத்துடன் பாதுகாக்கச் சொல், இம்முறை நிச்சயம் மன்னரை நாம் பிடித்தே தீர வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தார் ஆலோசகர்.

தனக்குள் நேர்ந்திருக்கும் மாற்றத்தை எண்ணித் தனிமையில் தவித்துக் கொண்டிருந்தான் கீர்த்தி வர்மன்.

கனவிலும் எவருக்கும் தீங்கு நினைக்காதவன் இன்று தான் உயிர் வாழ்வதற்காக இன்னொரு உயிரின் உதிரத்தை குடித்ததை எண்ணி உறக்கம் துறந்து அறைக்குள்ளேய அங்கும் இங்கும் அலைந்தபடி இருந்தான்.

நடுநிசி நெருங்கிக் கொண்டிருக்க பகலில் இருந்து உணவு எதுவும் உட்கொள்ளாத கீர்த்தி வர்மனுக்கு உதிரப் பசி உண்டானது.

எவ்வளவோ தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முயன்ற போதும்.. கீர்த்தி வர்மனால் தன் உணர்வுகளை அடக்க இயலவில்லை.. சைவ உணவுகளையோ நீரையோ அருந்தினால் அவன் தேகம் முழுவதும் நெருப்பில் இட்டது போல் தகிக்கத் துவங்கியது. உயிரினங்களின் சூடான உதிரத்தை பருகத் துடித்தது மனது..

கொஞ்சம் கொஞ்சமாய் தனக்குள் இருந்த மனித தன்மையை இழந்து மிருகம் போல் செயல்படத் துவங்கினான் கீர்த்தி வர்மன்… தனது அறையின் சாளரத்தின் வழியாக… அந்தப்புரம் விட்டு வெளியேறினான்.

தன் சுயத்தை இழந்த கீர்த்தி வர்மன் அங்கங்கு காவலுக்கு நின்றிருந்த காவல் பணியாளன் ஒருவன் மீது பாய்ந்து.. அவன் தப்பிச்செல்ல இயலாதபடி கழுத்தோடு சேர்த்து இறுக்கி பிடித்தான்.

உயிர் பயத்தில் காவல் பணியாளன் பதறி துடிக்க … அவன் எழுப்பிய கதறல் ஓசைக்கு ஆங்காங்கே காவலுக்கு நின்றிருந்த அனைத்து காவலாளிகளும் அவ்விடம் ஓடி வந்து கூடினர்.

என்ன நடக்கிறது என்று புரியாமல் அனைவரும் திகைப்புடன் நின்றிருக்க, அத்தகைய சூழலை எதிர்பார்த்து காத்திருந்த ஆலோசகர் மற்றும் அவருடன் சதி திட்டத்திற்கு ஒத்துழைத்த மற்ற பிரமுகர்களும் அங்கு வந்து கூடினர்.

தன்னை சுற்றி அத்தனை பேர் இருந்த போதிலும் தன்னை கட்டுப்படுத்துக் கொள்ள இயலாமல் மிருகம் போல் தன் கை பிடிக்குள் இருந்தவன் கழுத்தை கடித்து அவன் உதிரத்தை சிந்தாமல் சிதறாமல் அருந்தி முடித்தான் கீர்த்தி வர்மன்

உதிரப்பசி அடங்கியதும் தன் உணர்வு பெற்று, இயல்பு நிலைக்குத் திரும்பிய கீர்த்தி வர்மன் தன்னைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்களை எதிர்கொள்ள இயலாமல் குற்ற உணர்வுடன் தலை தாழ்த்திக் கொண்டான்.

“என்ன இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றீர், மனித உயிர்களை வேட்டையாடும் அந்த மிருகத்தை பிடித்து சிறையில் அடையுங்கள்..”என்று படைத்தளபதியின் காவலாளிக்கு உத்தரவு பிறப்பித்தார் ஆலோசகர்.

நாட்டின் மன்னரை எப்படி கைது செய்வது என்ற தயக்கத்துடன்.. காவலாளிகள் தயங்கி நிற்க… “சொன்னது செவியில் விழவில்லை, செல்லுங்கள் சென்று அந்த மிருகத்தை சிறை பிடியுங்கள்” என்று ஆலோசகரின் வார்த்தைக்கு கட்டுப்படாத தன் காவலாளிகளுக்கு தலைவனாய் உத்தரவு பிறப்பித்தான் படைத்தளபதி.

தங்கள் தலைவனின் உத்தரவை ஏற்று கீர்த்தி வர்மனை சுற்றி வளைத்து… பிடித்து சிறையில் அடைத்தனர் காவலாளிகள்.

இத்தனை சாட்சிகளை கண் எதிரே வைத்துக்கொண்டு கீர்த்தி வர்மன் நிகழ்த்திய அகோரக் கொலை நாடு எங்கும் பேசு பொருளானது.

கீர்த்தி வர்மன் அரசாட்சியில் கொலை குற்றம் செய்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்கினானோ அதையே அவனுக்கும் வழங்க முடிவு செய்தனர் முக்கிய பிரமுகர்கள்.

பல காலமாய் பண்புடன் தங்களை ஆட்சி செய்து வந்த மன்னனின் தற்போதைய நிலையை எண்ணியும், அவன் கொலைக்களம் காணப்போவதை எண்ணியும் நாட்டு மக்கள் பெரும் கவலை கொண்டனர்.

அப்பாவி மக்களை நரபலி எனும் பெயரில் கொலை செய்த காந்தாரன் கொடுத்த சாபமே தங்களின் மரியாதைக்குரிய மன்னனை பாதித்ததாக எண்ணிய மக்கள் அவன் மீது அனுதாபம் கொண்டனர். ஆகையால் அமலுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்தனர்.

கொடுக்கப்பட்ட சாபத்திலிருந்து தப்பிக்க வேற வழி இல்லை என்றும், இதற்கு மேல் மன்னனை மீட்டெடுக்க இயலாது என்றும், அவரை இப்படியே விட்டு வைத்தால் நாட்டு மக்களுக்கு தான் ஆபத்து என்றும் பல்வேறு காரணங்கள் கூறி மரண தண்டனையை ரத்து செய்ய மறுத்தனர் சதிகாரர்கள்.

இருப்பினும் கொடிய தண்டனை எதுவும் நிறைவேற்றப்படாமல், வலி அதிகம் கொடுக்காத விஷம் கொடுத்து கீர்த்தி வர்மனை கொலை செய்திட முடிவு செய்தனர்.

தண்டனை நிறைவேற்றும் நாளின் முதல் நாள் அதிகாரத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த ஆலோசகரை சந்தித்த காந்தாரனின் தந்தை கால பைரவர், தன் மகனை கொலை செய்தவனை இறுதியாய் ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பை வேண்டினார்.

மகனை பறிகொடுத்தவருக்கு மனம் இறங்கிய ஆலோசகர் கால பைரவரின் வேண்டுகோளை ஏற்று கீர்த்தி வர்மனை சந்திக்க அனுமதி வழங்கினார்.

பாதாள அறையில்… சிறைபிடிக்கப்பட்டு கிடந்த கீர்த்தி வர்மன் முன் வந்து நின்றவர்… சோர்வுடன் மூளையில் முடங்கிக் கிடந்தவனிடம், “என் மகன் செய்த பாவத்திற்கு தான் தாங்கள் தண்டனை வழங்கினீர்கள், அதற்கு தங்களுக்கு கிட்டிய சாபம் சற்றும் நியாயம் இல்லாதது. என் மகனின் முட்டாள் தனத்திற்கு நான் உங்களிடம் மன்னிப்பு வேண்டிக் கொள்கிறேன்.”என்றார் காலபைரவர்.

” என் தந்தையின் மறைவுக்கு பின் தந்தையின் பொறுப்பில் இருந்து என்னை முறையாய் வழி நடத்தி சென்றவர் என் முன் வருத்தத்துடன் தலை தாழ்ந்து நிற்பது சரியல்ல ஜோதிடரே! என் விதிப் பயனை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன், இதில் உங்கள் தவறு எதுவும் இல்லை. ஆகையால் தங்களின் மன்னிப்பு அவசியமற்றது. ” என்று கீர்த்தி வர்மன் பெருந்தன்மையாக பேசினான்.

“தங்களின் தந்தை காலத்தில் இருந்தே நான் இந்த ராஜ்யத்திற்கு பணியாற்றி வருகிறேன்.. உங்கள் தந்தையும் நானும் உற்ற நண்பர்கள்.. எங்களைப் போலவே நீங்கள் இருவரும் கூட நல்ல நண்பர்களாய் இருந்து வந்தீர்கள்.. இருந்தும் ஏன் இப்படி நேர்ந்தது என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை..”என்று தன் மைந்தனின் இறப்பை கூட பெரிது படுத்தாமல் கீர்த்தி வர்மனுக்காக இரக்கம் கொண்டு பேசினார் காலபைரவர்.

“காந்தாரன் சிறுவயதிலிருந்தே காதம்பரி மீது அளவில்லா காதல் கொண்டிருந்தான். என்னிடம் பேசும் பெரும்பொழுது காதம்பரியை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்பான். அத்தகைய காதலியின் இறப்பை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இறந்தவளை உயிருடன் மீட்க மாந்திரீகத்தை நாடி பெரும் தவறு இழைத்து விட்டான். நண்பன் என்று நான் பாரபட்சம் காட்டி இருந்தால் பலியான உயிர்களுக்கு நியாயம் கிட்டாமல் போயிருக்கும்… நல்ல அரசனாய் நடுநிலையான முடிவெடுக்க எண்ணினேன்!, இனி காந்தாரன் போல் எவரும் மாந்திரீகத்தின் வழி தவறான பாதைக்கு செல்லக்கூடாது என்று நாட்டு மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அத்தகைய கொடிய தண்டனையை என் ஆருயிர் நண்பனுக்கு வழங்கினேன்.”என்று தன் செயலுக்கான காரணத்தை விளக்கினான் கீர்த்தி வர்மன்.

“தங்கள் செயலுக்கான காரணத்தை நீங்கள் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. உங்கள் தரப்பு நியாயத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

திருமணத்திற்கான தேதி குறிக்கும் போதே காதம்பரி தனது விருப்பமின்மையை தெளிவாக கூறிவிட்டாள், இருந்தும் காந்தாரன் அவள் மீது கொண்ட காதலால் காதம்பரி வார்த்தையை ஏற்க மறுத்து.. கட்டாய திருமணத்திற்கு ஏற்பாடு செய்தான். எத்தனையோ விதத்தில் காதம்பரி திருமணத்தை நிறுத்த முயற்சித்த போதும் காந்தாரன் அவள் முயற்சியை முறியடித்துக் கொண்டே இருந்தான். விருப்பமில்லாத வாழ்க்கையை வாழ்வதைவிட மரணிப்பதே மேல் என்று எண்ணி, விருப்பமில்லாத திருமண தினத்தின் அன்றே விஷம் அருந்தி மடிந்து போனாள். விதியை ஏற்க இயலாத முட்டாள் தவறான பாதைக்கு சென்று விட்டான்.. “என்று திருமண தினத்தன்று மணப்பெண் மடிந்து போனதற்கான காரணத்தை விளக்கினார் காலபைரவர்.

“நடந்தது நடந்தாகிவிட்டது இனி அதைப்பற்றி பேசி எந்த பயனும் இல்லை, நானும் என் இறுதி நாளை எண்ணிக் கொண்டிருக்கின்றேன்.. இதுதான் விதி எனும் போது எதையும் மாற்ற இயலாது. அடுத்தவர் உயிர் குடித்து உயிர் வாழ எனக்கு விருப்பம் இல்லை, ஆகையால் என் மரணத்தை மனநிறைவுடன் ஏற்கும் மனநிலைக்கு நான் வந்துவிட்டேன் ஜோதிடரே!”என்று தன் விதியை எண்ணி வேதனையுடன் பேசினான் கீர்த்தி வர்மன்.

“தங்களின் விதி அவ்வளவு எளிதில் முடியப்போவதில்லை அரசே!.. காந்தாரன் தெரிந்தோ தெரியாமலோ தங்களுக்கு வழங்கிய சாபம் தான் இப்போது தங்களை மரணத்தில் இருந்து காக்கப் போகிறது..”என்று புதிர் போட்டார் கால பைரவர்.

“என்ன என் சாபம் என்னை காக்கப் போகிறதா!.. ஒன்றும் விளங்கவில்லையே தெளிவாக கூறுங்கள்.. ஜோதிடரே!”என்றான் கீர்த்தி வர்மன்.

“என் மைந்தன் மரணம் அடைந்த சோகம் தாளாமல் நான் இங்கிருந்து தேசாந்திரம் சென்றதாக அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தனர், ஆனால் உண்மை அதுவல்ல, என் மைந்தன் தங்களுக்கு வழங்கிய சாபத்தை விலக்குவதற்கான மார்க்கத்தை தேடியே நான் சென்றேன். நம் ராஜ்யத்தில் இருந்து வட திசையில் அமைந்திருக்கும் சித்தர் மலையில் ஆன்மீக ஞானிகள் பலர் உள்ளனர் அவர்களிடம் சென்று.. நடந்ததை விவரித்து, தங்களுக்கு வழங்கப்பட்ட சாபத்தை போக்குவதற்கான வழிமுறைகளை கேட்டு வந்துள்ளேன்.” என்றார் காலபைரவர்.

“என்ன மார்க்கம் அது?” என்று கீர்த்தி வர்மன் அத்தனை சோர்விலும் ஆர்வம் காட்டி வினவ…” காந்தாரன் கொடுத்த சாபத்திலேயே அதற்கான மார்க்கம் உண்டு அரசே!, மரணிக்கும் தருவாயில் காந்தாரன் கூறிய வார்த்தைகளை சற்று நினைவு படுத்தி கூறுங்கள்.. ” என்றார் கால பைரவர்.

காந்தாரன் மரணிக்கும் தருவாயில் கொடும் வேதனையை அனுபவித்தபடி உதிர்த்த வார்த்தைகளை நினைவு கூர்ந்தான் கீர்த்தி வர்மன்,

“என்னை வதைத்ததற்கான பலன்களை நீ கூடிய விரைவில் அனுபவிக்கப் போகிறாய் தேசிங்கா!, “என்று காந்தாரன் உச்சரித்த முதல் வார்த்தையை கூறிட..

“தற்போது தாங்கள் அனுபவிப்பதையே அவ்வாறு கூறினான். அடுத்த வரி?” என்று முதல் வார்த்தைக்கு விளக்கம் கொடுத்துவிட்டு அடுத்த வரியை வினவினார் கால பைரவர்.

“எவரும் வாழ விரும்பாத வாழ்க்கை, எவரும் அனுபவித்து பாராத வேதனைகளை நீ அனுபவிக்க போகிறாய். “என்று அடுத்த வார்த்தையை கீர்த்திவர்மன் கூறிட..

“எவரும் வாழ விரும்பாத வாழ்க்கை அடுத்தவரை சார்ந்து வாழ்வது.. அதாவது தாங்கள் நலமுடன் வாழ வேண்டும் எனில் அடுத்தவரின் உதிரத்தை பருகியாக வேண்டும். ஒட்டுண்ணி போல் அடுத்தவரை சார்ந்து வாழும் வாழ்க்கையே எவரும் வாழ விரும்பாத வாழ்க்கை. எவரும் அனுபவித்து பாராத வேதனை என்பது, இரக்க குணம் படைத்த தங்களுக்கு இன்னொரு உயிரை பறிப்பது என்பது மிகுந்த வேதனையை தரக்கூடியது. அதைக் குறிப்பிடும் விதமாய் கூறிய வார்த்தையை தான் எவரும் அனுபவித்து பாராத வேதனையை நீ அனுபவிப்பாய்..” என்று விளக்கம் கொடுத்தார்.

“உனக்கு வேண்டியவர்கள் எல்லோரும் உன் கண் முன் மடிந்து கொண்டிருக்க, அத்தகைய கொடிய வேதனையை அனுபவித்தபடி நெருப்பில் இட்ட அற்ப புழு போல் நீ பரிதவிக்கப் போகிறாய்.”என்று அடுத்த வரியை கீர்த்தி வர்மன் கூறிட…

“மரணம் என்பது உங்களை அவ்வளவு எளிதில் நெருங்காது என்பதை குறிக்கும் வார்த்தையே இது..” என்று விளக்கம் கொடுத்தார் காலபைரவர்.

“எந்த மக்களுக்காக என்னை வதைக்க துணித்தாயோ!, அதே மக்கள் உன்னை வெறுத்து ஒதுக்குவர், அன்புடன் உன்னை அணுகுபவர்கள் அனைவரும் உன் உண்மை அறிந்ததும் அச்சத்துடன் விலகி ஓடுவர். “என்றவன்..”இதற்கான அர்த்தத்தை நான் அனுபவித்து புரிந்து கொண்டேன் ஜோதிடரே!. ” என்று கசந்த புன்னகையுடன் கூறியவன், “வாழும் ஒவ்வொரு நாளும் நீ உன் மரணத்தை வேண்ட, நீ வேண்டும் மரணம் மட்டும் என்றும் உன்னை நெருங்காது.இறப்பை எதிர்பார்த்து காலம் முழுவதும் நீ காத்துக் கிடக்க போகிறாய், இதற்கான விளக்கமும் இப்போது எனக்கு தெளிவாக விளங்குகிறது.”என்றான் கீர்த்தி வர்மன்.

“இறுதி வரி அதுதான் உங்களுக்கான சாபத்தை விளக்குவதற்கான வழி, என் காதலின் அருமை புரியாது என்னை கொலை செய்த பாவத்திற்காக காலம் முழுவதும் உனது உண்மை காதலை தேடி அலையப் போகிறாய். அதாவது உங்கள் உண்மை காதல் தான் உங்களை சாபத்திலிருந்து காப்பாற்றும். “என்றார் கால பைரவர்.

“விளங்கவில்லை சற்று தெளிவாக கூறுங்கள் ஜோதிடரே!” என்று கீர்த்தி வர்மன் ஆர்வமாய் வினவிட ..

“காந்தாரன் மரணம் நிகழ்ந்த இடத்தில் அதே திதியில் 48 வருடங்களுக்கு ஒரு முறை வரும் சந்திர கிரகணத்தன்று … உங்களது உண்மை காதலின் உதிரம் சிந்த வேண்டும்.. அப்போதுதான் உங்களின் சாபம் தீரும்..” என்றார் கால பைரவர்.

தன் சாபத்திற்கான தீர்வு கிடியதும் நிம்மதி அடைந்தான் கீர்த்தி வர்மன்.

“மரணம் இல்லா வாழ்வு தான் தங்களுக்கான சாபமென்று புரியாமல் விஷம் வைத்து உங்களை கொலை செய்ய திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறது ஒரு முட்டாள் கூட்டம்.. நீங்கள் உடனே இங்கிருந்து தப்பித்து சென்று விடுங்கள்.. கூடிய விரைவில் உங்களுக்கான உண்மையான காதலை தேடி கண்டுபிடித்து சாப விமோசனம் பெற்றிடுங்கள்” என்றார் கால பைரவர்.

“கேட்க நன்றாக தான் இருக்கிறது ஆனால் நான் இங்கிருந்து எப்படி தப்பிச் செல்வது?” என்று குழப்பத்துடன் வினவினான் கீர்த்தி வர்மன்.

“யானை பலம் என்னவென்று யானைக்கே தெரியாதாம்? அது போல் உள்ளது தாங்கள் கூறுவது. அரசே! தங்களுக்கு இப்போது அலாதியான சக்தி இருக்கும். ரத்தக்காட்டேரி போல் பிறரின் உதிரம் பருகி வாழ்வதால் அவர்களைப் போன்றதொரு வேகமும் பலமும் தங்களுக்கும் இருக்கும். பிறவியில் மானிடராய் பிறந்து சாபத்தால் உதிரம் பருகும் நிலைக்குத் தள்ளப்பட்டதால் உங்களால் மரணிக்கும் எவரும் இரத்தக்காட்டேரியாக உருவெடுக்க மாட்டார்கள் மாறாக மடிந்து போவார்கள். மானிடர்கள் போல் தங்களால் சைவ உணவை உட்கொள்ள முடியாது அதற்கு பதில் பிற உயிர்களை வதைத்து உண்ணும் அசைவ உணவு உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கும், ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் நீங்கள் உதிரம் பருகியே ஆக வேண்டும் அப்போதுதான் உங்களால் சோர்வு இல்லாமல் இருக்க முடியும். உங்களுக்கு வேண்டிய பலமும் நீங்கள் பருகும் உதிரத்தில் இருந்து தான் உங்களுக்கு கிட்டும்..”என்று கீர்த்திவர்மன் குறித்து அவனே அறிந்திடாத பல விவரங்களை கூறினார் காலபைரவர்.

“எல்லாம் சரிதான்.. நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன். இப்போது நான் இருக்கும் சூழ்நிலையில் என்னால் இங்கிருந்து தப்பிச்செல்ல இயலாது..”என்றான் கீர்த்திவர்மன்.

பாதுகாவலர்களுக்கு தெரியாமல் மறைத்துக் கொண்டு வந்த குவளை ஒன்றை எடுத்து கீர்த்தி வர்மனிடம் நீட்டியவர்.. இதில்… வருடையின்.( வரையாடு என்பதன் மரூஉச்சொல் – மலையில் வாழும் ஆட்டு வகை.) உதிரம் உள்ளது.. இதை பருகி, உங்கள் பலத்தை மீண்டும் பெற்று இங்கிருந்து தப்பி சென்று விடுங்கள்”என்று யோசனை கூறினார் காலபைரவர்.

“தப்பி எங்கு செல்ல வேண்டும் என்கின்றீர்கள், என் நாட்டு மக்கள் நயவஞ்சகர்களின் பிடியில் சிக்கியுள்ளனர் அவர்களை நான் மீட்க வேண்டும்..”என்று தன் ராஜ்யத்தின் குடிமக்களை எண்ணி கவலை கொண்டான் கீர்த்தி வர்மன்.

“நல்லவர்களிடமிருந்து பறிக்கப்படும் வெற்றி என்றும் நிலைக்காது அரசே!, தங்களுக்கு நடந்த விபரீதம் குறித்து நமது நட்பு நாடுகளுக்கு ஓலை அனுப்பி உள்ளேன். உங்களுடன் நட்பு பாராட்டிய அண்டை நாட்டு மன்னர்கள் விரைவிலேயே நயவஞ்சகர்களை வீழ்த்தி நம் மக்களை இரட்சிப்பர்… தாங்கள் கவலை விடுத்து, சாபத்தை போக்க வேண்டிய வழிமுறைகளை கவனியுங்கள்..” என்று ஆலோசனை வழங்கினார் கால பைரவர்.

“என் பிரச்சனையை முடித்துக் கொண்டு விரைவிலேயே என் மக்களை ரட்சிக்க வருவேன், ” என்று உறுதி கூறிவிட்டு, கால பைரவர் கொடுத்த குவளை உதிரத்தை பருகி முடித்தவன் புத்துணர்வு பெற்று… சிறையின் இரும்பு கம்பிகளை ஆக்ரோஷமாய் உடைக்கத் துவங்கினான். தடுத்து நிறுத்த வந்த காவலர்களை தாக்கி விட்டு.. அந்நாட்டின் அரசன்.. தன்னைக் காத்துக்கொள்ள வேறு வழி அறியாது கயவன் போல் அங்கிருந்து தப்பி ஓடினான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?

நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்தம் தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. ரத்தம் தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~