Advertisement

 

28…

திருமணத்திற்கு முதல் நாள் இரவு…

மணமகள் அறையில் தோழியுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த மகளை தேடி வந்த கண்மணி… “என்ன மது சரியா சாப்பிடாம பாதில எழுந்து வந்துட்ட போல.. ” என்று அக்கறையுடன் வினவிட.. ” வயிறு நிறைய சாப்பிடுற அளவுக்கு என் மனசுக்கு நிறைவா ஒன்னும் நடக்கலையே!, ” என்று விரக்தியுடன் பதில் தந்தாள் மதுரிமா.

” இவ ஒருத்தி எப்ப பாத்தாலும் ஏதாவது புலம்பிக்கிட்டே இருப்பா.., பிள்ளைகளுக்கு என்ன செய்யணும் செய்யக்கூடாதுன்னு பெத்தவங்க எங்களுக்கு நல்லாவே தெரியும். யார் கூட வாழ்ந்த உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்ன்னு ஒரு தடவைக்கு பத்து தடவை நல்ல யோசிச்சு தான் இந்த கல்யாணத்தை பேசி முடிச்சிருக்கோம். அதனால சும்மா நைய நையன்னு புலம்பிட்டே இருக்காம.. சீக்கிரம் ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு.. நாளைக்கு சீக்கிரம் எந்திரிச்சு கிளம்பனும்.” என்று அன்னையாய் அதிகாரக் குரலில் அறிவுறுத்தினார் கண்மணி.

“எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலைன்னு சொல்றேன்… யாராவது காதுல வாங்குறீங்களா?” என்று கோபத்துடன் இருக்கையை விட்டு மது எழுந்து கொள்ள…” நம்ம நாட்டுல பாதிக்கு பாதி கல்யாணம்… கல்யாண பொண்ணுங்களுக்கு பிடிக்காம தான் நடக்குது. என் கல்யாணத்தை எடுத்துக்கோ எனக்கு பிடிச்சா நடந்தது. என்னோட சம்பந்தத்தை கேட்டுட்டா உன் அப்பா என் கழுத்துல தாலி கட்டினாரு, நடந்த எல்லாத்தையும் மறந்துட்டு நான் உங்க அப்பாவை ஏத்துக்கிட்டு இரண்டு பிள்ளைகளை பெத்துக்கல, போகப்போக எல்லாம் சரியாயிடும். “என்று மகளுக்கு அறிவுரை வழங்கியவர் , அவள் அருகில் நின்றிருந்த சரிகாவின் புறம் திரும்பி..”

உன் பேர் தான் சரிகாவா மா!, மது உன்னைப் பத்தி நிறைய சொல்லிருக்கா. இப்ப தான் நேர்ல பார்க்க வாய்ப்பு கிடைச்சிருக்கு, இருந்தும் பாரு உன் கூட கொஞ்ச நேரம் கூட நின்னு பேச வாய்ப்பு கிடைக்கல, மண்டபத்தில் நிறைய வேலை கிடக்கு, ஒன்னு பண்ணு நீயும் மது கூடவே அவ ரூம்லயே தங்கிக்கோ.. நாளைக்கு கல்யாணம் முடியவும் நிதானமா பேசலாம். “என்று மகளின் தோழியை உபசரித்தார் கண்மணி.

“அய்யய்யோ… நான் இங்க ஸ்டே பண்ணனுமா, அதுக்கு வாய்ப்பே இல்லமா, அப்புறம் நாளைக்கு என் தலை உருளும்..”என்று நாளை நடக்கப் போகும் விபரீதம் அறிந்திருந்தவள் பதட்டத்துடன் மறுத்துக் கூறினாள் சரிகா.

அவளின் பதட்டத்தின் காரணம் புரியாத கண்மணியோ!, ” என்னமா ஏதாவது தப்பா சொல்லிட்டேனா…” என்று தயக்கத்துடன் வினவிட.. ” அது வந்து… அவளுக்கு நாளைக்கு வேற முக்கியமான வேலை இருக்கு அதை தான் அப்படி சொல்லுறா.. அப்படித் தானே சகா” என்று தோழியின் தவறை திருத்திக் கூறினாள் மதுரிமா.

” ஓ.. அப்படியா” என்று சோகமாய் கண்மணி கூறிட… ” என்னமா ஒரு மாதிரி இருக்கீங்க?, ” என்று காரணம் வினவினாள் மதுரிமா.

” கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லாம நடந்து முடியனும் அது வரைக்கும் எனக்கு நிம்மதியே இருக்காது. ” என்று கண்மணி காரணம் கூறிட… ” அதான் நீங்க நினைச்ச மாதிரி கல்யாணம் நடக்கப்போகுதே அப்புறம் எதுக்கு உங்களுக்கு தேவையில்லாத கவலை”என்று சலித்துக் கொண்டபடி கூறினாள் மதுரிமா.

” உன் பாட்டி நடந்துக்கிற விதத்தை பார்த்தா கவலைப்படாம வேற எப்படி இருக்க முடியும், இப்ப கூட பாரு உன் கூடவே நானும் கிளம்புறதா இருந்தது. ஆனா உன் பாட்டி என்னை இங்கே இருந்து நாளைக்கு கல்யாணத்துக்கான ஏற்பாட கவனிக்க சொல்றாங்க… மாப்பிள்ளை அழைப்புக்கு ஆரத்தி தட்டை வெளியே சொல்லி ரெடி பண்ணி கொண்டு வந்துட்டேன். இப்போ கடைசி நேரத்துல வந்து வெளியே சொல்லி செய்றதெல்லாம் சரியா வராது.. நீயே உன் கையால ஆரத்தி தட்டை ரெடி பண்ணுன்னு சொல்றாங்க.. ” என்றார் கண்மணி.

“அப்போ நீங்க இப்ப என் கூட வரப் போறது இல்லையா!” என்று குதூகலமாய் வினவியவள், தனக்குள்ளேயே.. ‘ அம்மா நம்மக் கூட வரலைன்னா.. நாம எஸ்கேப்பாரதுல எந்த பிரச்சினையும் இருக்காது. ‘என்று எண்ணிக் கொண்ட படி..” பாட்டி சரியா தானே அம்மா சொல்றாங்க.. முதல்ல எல்லாம் ஆராத்தி தட்ட கல்யாணத்துக்கு முதல் நாள் மண்டபத்தில் உட்கார்ந்து பொண்ணு வீட்டுக்காரங்க தானே ரெடி பண்ணுவாங்க. இப்போ தான் சோம்பேறித்தனப் பட்டு அதெல்லாம் ஓல்டு ஃபேஷன்னு சொல்லிட்டு பியூட்டி பார்லர்ல ஆர்டர் கொடுத்து ரெடிமேடா வாங்கிக்கிறோம். பாரம்பரியமான முறைப்படி என் கல்யாணம் நடக்கணும்னு பாட்டி ஆசைப்படுறாங்க.. அவங்க ஆசைப்படியே நீங்க இங்கேயே இருந்து ஆராத்தித் தட்ட ரெடி பண்ணுங்க. நான் ரூமுக்கு போறேன். நீங்க சொன்ன மாதிரி நான் சீக்கிரம் போய் தூங்கினா தானே காலையில பிரெஷா ரெடியாக முடியும்” என்றபடி அங்கிருந்து நகர முயன்றாள் மதுரிமா.

‘என்ன இது? இங்க என்ன நடக்குது? கல்யாணத்தை நிறுத்தனும்னு துடிச்சிட்டு இருந்தவங்க ஆரத்தி தட்டு ரெடி பண்ண சொல்றாங்க, கல்யாணமே வேணாம்னு கத்திட்டு இருந்தவ காலையில பிரெஷா ரெடி ஆகுறேன்னு சொல்றா ஒருவேளை பூமி தலைகீழா சுத்த ஆரம்பிச்சிடுச்சோ!’ என்று தனக்குள்ளேயே குழம்பிக் கொண்டவர்.. ” ஒரு நிமிஷம் நில்லு, எனக்கு என்னமோ சரியா படல.. நீ ஒன்னு பண்ணு ரூமுக்கு போனதும் எனக்கு போன் பண்ணு.” என்றவர் மகள் அவசரமாய் சரி என்பது போல் சம்மதமாய் தலையசைக்கவும்…, “அப்புறம் மண்டபத்துல வேலையெல்லாம் முடிச்சுட்டு அங்க வந்ததும் நான் உன் ரூமுக்கு வருவேன் நீ அங்க இருக்கியான்னு செக் பண்ணிட்டே இருப்பேன். ” என்று கண்டிப்புடன் கூறிய மகளை அங்கிருந்து அனுப்பி வைத்தார் கண்மணி.

மதுரிமா தோழியுடன் தனியாக மண்டபத்தை விட்டு கிளம்பும் செய்தியை தன் பேரனுக்கு அறிவித்துவிட்டு இனி எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையுடன் இருந்தார் வேலம்மாள்.

மணமகள் நெருங்கிய உறவினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டிற்கு தோழியுடன் வந்து சேர்ந்த மதுரிமா சற்றும் தாமதிக்காது தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானாள், அவளுடன் சரிகாவும் புறப்பட…. ” ஹே ப்ளீஸ் சகா.. கொஞ்ச நேரம் நீ இங்கேயே இருந்துட்டு அதுக்கப்புறம் கிளம்பி போ..” என்றாள் மதுரிமா.

” எதுக்கு உன்னைக் காணோம்னு தெரிஞ்சதும் எனக்கு டின்னு காட்டுறதுக்கா?, ” என்று நக்கலாய் வினவிட… “அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது பயப்படாத!, நீ ரொம்ப நேரம் எல்லாம் இங்க இருக்க வேணாம்.. என் அம்மா மண்டபத்துல இருந்து திரும்பி வந்ததும் நான் இங்க இருக்கேனான்னு செக் பண்ண வருவாங்க… அப்போ ஏதாவது சொல்லி அம்மாவ சமாளிச்சுட்டு அதுக்கப்புறம் இங்க இருந்து கிளம்பி போயிடு..” என்றாள் மதுரிமா.

” ஒருவேளை உன் அம்மா நான் சொல்றத நம்பாம என்னை இங்கயே பிடிச்சு வைச்சுட்டாங்கன்னா?, என்னோட ஹெல்ப்ல தான் நீ இங்க இருந்து போனேன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சுன்னா?, ஆன்ட்டி ஹீரோ கதையில வர மாதிரி என்னை பழி வாங்கணும்னு காவியன் உனக்கு பதிலா என்னைக் கல்யாணம் பண்ணி கொடுமைப்படுத்தினா.?..” என்று அடுக்கடுக்காய் கற்பனை கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றாள் சரிகா.

” கண்ட கண்ட கதை படிக்காதன்னு சொன்னா கேட்கிறியா?, இப்போ பாரு மூளை முட்டாள் தனமா கண்டதையும் கற்பனை பண்ணிட்டு இருக்கு. உன்னை யாராவது கட்டாயப்படுத்த முடியுமா? இல்ல கொடுமைப்படுத்த தான் முடியுமா ?, நீ அடுத்தவங்கள கொடுமைப் படுத்தாம இருந்தா சரி… ” என்று தோழியை கேலி செய்தபடி.. குளியல் அறைக்குள் சென்று, ,.

தான் உடுத்தி இருந்த உடையிலிருந்து சாதாரண உடைக்கு மாறினாள்.

தனக்கு பதிலாக தன் அறையில் தோழியை தங்கும்படி செய்துவிட்டு.. உறவினர்கள் வருவதற்கு முன்பே அங்கிருந்து கிளம்பி சென்றாள் மதுரிமா.

ஆள் உயர கண்ணாடியின் முன் நின்று மது கழட்டி வைத்த நகைகளை எடுத்து தன் மீது வைத்து அழகு பார்த்து கொண்ட சரிகாவிற்கு அதை அணிந்து பார்க்கும் ஆசையும் வந்தது.

ஒவ்வொரு ஆபரணத்தையும் அணிந்து கொண்டு தன்னைத் தானே ரசித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

சில மணித்துளிகள் நகர்ந்திருந்த நிலையில் குளிர்பானத்தில் கலந்திருந்த மயக்கம் மருந்து வேலை செய்யத் துவங்கிட நின்ற இடத்திலேயே தடுமாறத் துவங்கினாள் சரிகா.

‘என்னடா இப்படி தலை சுத்திட்டு தூக்கம் தூக்கமா வருது. ஒருவேளை மதுவோட பாட்டி உண்மையிலேயே கூல் ட்ரிங்க்ல ஏதாவது கலந்திருப்பாங்களோ!’ என்று சந்தேகத்துடன் எண்ணிக் கொண்டவள், ‘சேச்சா அப்படி எல்லாம் இருக்காது. நாம தான் சரியான தூங்கு மூஞ்சியாச்சே, பத்து மணிக்கு மேல படையே திரண்டு வந்தாலும் நம்மளால நம்ம தூக்கத்தை கண்ட்ரோல் பண்ண முடியாது, இப்ப மணி பத்தை தாண்டி ரொம்ப நேரமாச்சு..

  நல்ல குளு குளு ஏசி.. சொகுசா தூங்க மெத்து மெத்துன்னு பஞ்சு மெத்தைய பார்த்ததும் தூக்கம் கண்ட்ரோல் இல்லாம போகுது போல. இப்ப என்ன பண்றது.. இன்னும் மதுவோட அம்மா வேற வரல.., சரி கொஞ்ச நேரம் படுத்திருப்போம். மதுவோட அம்மா வந்து கதவை தட்டவும் எந்திரிச்சு ஏதாவது காரணத்தை சொல்லி அவங்களை அனுப்பி வச்சிட்டு நாமளும் அப்படியே இங்க இருந்து கிளம்பி போயிடலாம்..’என்று எண்ணிக் கொண்டவள் அப்படியே கட்டிலில் சரிந்தது குளிருக்கு இதமாய் போர்வையை போர்த்திக் கொண்டு உறக்கம் எனும் மயக்க நிலைக்கு சென்றாள் சரிகா.

திருமணத்திற்கான ஏற்பாடுகளையும் முடித்துக் கொண்டு மண்டபத்தில் இருந்து திரும்பி வந்த கண்மணி மகளின் அறையின் கதவை மெதுவாய் தட்டினார். சில நிமிடங்கள் கடந்தும் உள்ளிருந்து எந்த பதிலும் இல்லாமல் போக..’ என்ன ரொம்ப நேரமா தட்டிட்டு இருக்கோம் யாரும் கதவை திறக்கலை, அச்சச்சோ நான் பயந்த மாதிரியே ஓடிப் போயிட்டா உலகில் இனி நான் என்ன பண்ணுவேன்.. ‘என்று பதறியவர் அறையின் சாளரத்தின் வழியாக மகளின் அறையை நோட்டமிட்டார்.

முழுதாய் போர்த்திய நிலையில் ஒரு உருவம் கட்டிலில் படுத்திருக்க.. வலது கரம் மட்டும் போர்வையை விட்டு வெளியே நீட்டிக் கொண்டு இருந்தது.

கரத்தில் இருந்த வளையலை அடையாளம் கண்டு கொண்டவர்..’ரொம்ப டயர்டா இருந்திருக்கும் அதான் அசந்து தூங்கிட்டா போல, நாளைக்கு காலைல வந்து எழுப்புவோம்’ என்று மகளின் தோழியை தனது மகளென தவறாக எண்ணிக்கொண்டு தனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று ஓய்வெடுக்க துவங்கினார் கண்மணி.

பெற்ற அன்னைக்கே மகள் யார் மகளின் தோழி யார் என்று வித்தியாசம் கண்டு கொள்ள முடியாமல் போகும்போது வேற்று மனிதர்கள் குறித்து சொல்லவா வேண்டும். மதுரிமாவை கடத்துவதற்காக மதியழகன் ஏற்பாடு செய்திருந்த ஆட்கள் மணமகள் அறைக்குள் நுழைந்து கட்டிலில் மயக்கத்தில் கிடந்த சரிகாவை மது என்று தவறாக எண்ணிக்கொண்டு.. அவள் முகத்தை முகமூடி. கொண்டு மூடி, கையோடு கொண்டு வந்த சாக்குப் பையில் கட்டி அங்கிருந்து கடத்திச் சென்றனர்.

நான்கு பேர் வீட்டினுள் இருந்து.. எதையோ தூக்கிச் செல்வதை கவனித்த மதுரிமாவின் சகோதரன் மதுசூதன்.. அவர்களை வழிமறித்து விசாரிக்க… ” கல்யாண மண்டபத்துக்கு காய்கறி மூட்டைய தூக்கிட்டு போறோம்” என்று பொய்யான காரணம் கூறி அங்கிருந்து நகர முயல.. “கல்யாணம் மண்டபத்துக்கா!, நீங்க மதியழகன் கூட வந்தவங்க தானே!, ஆமா இந்த வேலையெல்லாம் நீங்க எதுக்கு செய்யுறீங்க!” என்று குழப்பமாய் வினவினான் மதுசூதன்.

” அது.. அது.. வந்து மதி எங்கப் ஃப்ரெண்ட் தான். அவன் தான் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு வேண்டிய உதவி எல்லாம் கூட இருந்து செய்யச் சொன்னான். நாளைக்கு சமையலுக்கு வேண்டிய காய்கறி மூட்டை மண்டபத்துக்கு போறதுக்கு பதிலா இங்க வந்து இறங்கிடுச்சு அதான் மறுபடியும் மண்டபத்துக்கே தூக்கிட்டு போயிட்டு இருக்கோம் ” என்று எதிரில் நின்றிருந்தவன் நம்பும் படியாக பொய்யுரைத்து அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

வந்தவர்களின் நடவடிக்கையின் மீது முழுதாக நம்பிக்கை கொள்ளாத மதுசுதன் தன் தங்கையின் அறைக்கு சென்று சோதனையிட்டான் அங்கு அவள் இல்லாமல் போக.. அவசர அவசரமாய் அந்த நால்வரை தேடிச் சென்றான்.

எப்படியோ விருப்பம் இல்லாத திருமணத்தில் இருந்து தப்பித்தோம் என்ற மனநிறைவுடன்… நடந்து சென்ற மதுரிமாவை ஒரு கருப்பு நிற சொகுசு வாகனம் பின்தொடர்ந்து வந்தது.

வெகு நேரமாய் தன்னைப் பின் தொடர்ந்து வரும் வாகனத்தின் சொந்தக்காரன் யார் என்பதை ஓரளவுக்கு யூகித்த மதுரிமா தனது நடையை வேகப்படுத்திக் கொள்ள.. அவளுக்கு முன் வந்து நின்றது ஒரு மூவுருளி உந்து ( ஆட்டோ) அதில் ஏற்கனவே இருவர் அமர்ந்திருக்க.. ” எங்கமா போகணும், ஷார் ஆட்டோ தான்.. உன் கையில இருக்கிற காசைக் குடு போதும்.. ” என்றார் வாகன ஓட்டுநர்.

பின் தொடர்ந்து வருபவனிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று முன் யோசனை எதுவும் இன்றி மூவுருளி உந்தில் ஏறி அமர்ந்தாள் மதுரிமா. அப்போதும் அவளை விடாமல் பின் தொடர்ந்தது அந்தக் கருப்பு வாகனம்.

ஆள் அரவம் இல்லாத சாலைக்குள் ..மூவுருளி உந்து நுழைந்ததும்.. ஏதோ தவறாக இருப்பதை புரிந்து கொண்ட மதுரிமா… ” ஆட்டோ வேற ரூட் போற மாதிரி இருக்கு, நான் பஸ் ஸ்டாண்ட் போகணும்.. சோ என்னை இங்கேயே இறக்கி விட்டுடுங்க”என்றிட…

ஓட்டுநர் இருக்கையின் அருகில் இருந்த ஒருவன் மதுவின் புறம் திரும்பி, ” அதுகுள்ள என்ன அவசரம், கொஞ்ச நேரம் கொஞ்சிட்டு பொறுமையாவே பஸ் ஸ்டாண்ட்ல கொண்டு போய் இறக்கி விட்டுடுறோம் ” என்று விஷமமாய் புன்னகை செய்தான். அவன் வார்த்தையை ஆமோதிப்பது போல் மதுரிமாவின் இருக்கையின் மறு மூலையில் அமர்ந்திருந்தவன் மெதுவாய் அவளை நெருங்கிட… பெண்ணவள் மனதிற்குள் பயம் பற்றிக் கொண்டது.

என்ன செய்வது என்று புரியாத மிரட்சியுடன்… ” வேண்டாம் நான் யாருன்னு தெரியாம என்கிட்ட தப்பா பேசிட்டு இருக்கீங்க!, நான் யார் தெரியுமா என் அப்பா யார் தெரியுமா?” என்று தனக்குள் உணர்வும் பயத்தை வெளிக்காட்டாமல் பேசினாள் மதுரிமா.

” தோடா.. பாப்பாவுக்கு அவங்க அப்பா யாருன்னு தெரியல போலடா.. நம்மக்கிட்ட வந்து அதோட அப்பா டீடைல் விசாரிச்சிட்டு இருக்கு.” என்று ஒருவன் கிண்டல் செய்ய..” என்னடா கிண்டல் பண்ணுறீங்களா?, என் அப்பா போலீஸ் ஆபீஸர்.. அவருக்கு மட்டும் நீங்க என்கிட்ட மிஸ் பிஹேவ் பண்ண ட்ரை பண்ணுன விஷயம் தெரிஞ்சா.. உங்களை எல்லாம் என்கவுண்டர்ல போட்டு தள்ளிடுவாரு.. ஒழுங்கு மரியாதையா ஆட்டோவ நிறுத்து” என்று மது எச்சரிக்கை விடுக்க,” சும்மா பூச்சாண்டி காட்டாத பாப்பா, நீ விடுற ரீலை நம்புறதுக்கு வேற ஆளப் பாரு..” என்று பதில் தந்தபடி வாகன ஓட்டி நிறுத்தாமல் சென்று கொண்டிருக்க, அதுவரை அவர்களை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த கருப்பு வாகனம் சற்றென்று வேகம் எடுத்து, எவரும் எதிர்பாராத விதமாய் மூவுருளி உந்துவை மறைத்தபடி முன் வந்து நின்றது.

” எவண்டா இவன் சாவு கிராக்கி..” என்று வசை பாடியபடி வாகனத்தில் இருந்து ஒருவன் இறங்கிக் கொள்ள.. மற்றொருவன் தங்களிடம் சிக்கிக் கொண்டிருக்கும் பெண் தப்பி விடக்கூடாது எனும் எண்ணத்துடன் அவளது கரத்தை இறுகப் பற்றிக் கொண்டான்.

” கார்ல வந்தா பெரிய பருப்பா நீ?, “என்று மரியாதை இல்லாமல் பேசியவன் மறுநொடி மண்ணில் சரிந்து விழ… கீழே விழுந்து கிடந்தவன் மார்பில் மிதித்து அவனைக் கடந்து மதுவிடம் நெருங்கி வந்தான் காவியன்.

இவனுக்கு பயந்து தான் இருள் என்றும் பாராது அவசரமாய் ஓடி வந்தோம் என்ற நினைவு சிறிதும் இன்றி.. ” காவியன்” என்று கதறி துடித்தபடி.. மது அவனை நோக்கி எழுந்து வர முயல.. அதற்கு தடை விதிப்பது போல.. கரம் பற்றி இருந்தவன்.. ” என்னடி… காவியன் ஓவியன்னு ஓவரா துள்ளுற?.. ” என்று அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தான்.

அதே நேரத்தில் வாகன ஓட்டுநர்… வேகமாய் தனது இருப்பிடத்தில் இருந்து எழுந்து வந்து..”என்னடா ஒரு ஆள அடிச்சுட்டா பெரிய இவனா நீ?” என்று கோபமாய் கேட்டபடி கையை ஓங்கிக் கொண்டு காவியனை நெருங்கினான்.

ஓங்கிய கையை முறுக்கிப் பிடித்து.. பின்புறம் கொண்டு வந்தவன்… ” ஆமாம் டா.. நான் பெரிய இவன் தான்டா.. என்னடா பண்ணுவ…?” என்று கேட்டுக் கொண்டே சரமாரியாக.. அவன் முதுகில் குத்திக் கொண்டே இருக்க. … தனது கூட்டாளியை காப்பதற்காக மதுவின் கரத்தை விலக்கி விட்டு. அவர்களிடம் ஓடி வந்தான் மற்றொருவன்.

பற்றி இருந்த கரத்திற்கு விடுதலை கிட்டியவுடன்.. அவசரமாய் காவியன் அருகில் வந்து நின்று கொண்டாள் மது.

கோபமாய் வந்தவனை லாவகமாய் தடுத்து நிறுத்தி.. அவன் வலக் கரத்தை பற்றி..மூவுருளி உந்தின் முன் கண்ணாடியில் ஓங்கித் தட்டினான்.

அவன் தட்டிய வேகத்தில் உடைந்து சிதறிய கண்ணாடித் துகள்கள் மதுவை காயப்படுத்தி விடக் கூடாது என்பதற்காக அருகில் நின்றிருந்தவள் புறம் வேகமாய் திரும்பி அவளை அணைத்துப் பிடித்தபடி நின்றான் காவியன்.

அடிபட்டவன் வழியில் பதறி துடித்துக் கொண்டிருக்க.. அவனை சிறிதும் கண்டுகொள்ளாத காவியன் மதுவின் கன்னத்தை அக்கறையாய் பற்றி கொண்டு ” உனக்கு ஒன்னும் இல்லேல மதுமா.. நீ நல்லாத் தான இருக்க..?” என்று பரிவுடன் வினவினான்.

” எனக்கு ஒன்னும் இல்ல.. ” என்ற மது தன் கன்னத்தை பற்றி இருந்த கரத்தை விலக்க முயல.. அவள் முயற்சியை முறியடித்து தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டவன்…” கொஞ்ச நேரத்துல உனக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு பயந்து போயிட்டேன். ” என்று அவள் நெற்றியில் இதழ் பதிக்க.. அவர்கள் எதிர்பாராத நேரத்தில்.. கையில் கூர்மையான கண்ணாடித் துண்டு ஒன்றை ஏந்திய ஒருவன் காவியனை பின் இருந்து தாக்க முயற்சி செய்தான்.

அந்த நேரத்தில் சரியாக அங்கு வந்து சேர்ந்த மதுசுதன் காவியனுக்கு வைத்த குறியில் குறுக்கிட, கூர்மையான கண்ணாடித் துண்டால் குத்துப் பட்டு அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தான்.

இருவரின் கவனம் கீழே விழுந்தவன் மீது பதிந்திருக்க…

தாங்கள் நினைத்தது வேறு நிகழ்ந்து கொண்டிருப்பது வேறு என்று புரிந்து கொண்ட மூவரும்… அவசர அவசரமாய் தாங்கள் வந்த மூவுருளி உந்துவை உயிர்ப்பித்து அங்கிருந்து தப்பித்து ஓடினர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement