Advertisement

27….

‘மாப்பிள்ளை அழைப்புக்கு நேரமாச்சு பொண்ணு வீட்டுக்காரங்க எங்கப்பா வந்து சீக்கிரம் ஆரத்தி எடுங்க..’ என்று ஒருவர் குரல் கொடுக்க மண்டபத்தின் வாசலில் காத்திருந்த காவியனுக்கு பெண் வீட்டார் சார்பாக பலவகை பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட நூற்றியொறு வரவேற்பு ஆரத்தி எடுக்கப்பட்டது.

ஆலம் சுற்றி வரவேற்பு அளித்த உறவு பெண்களுக்கு திருமண நினைவுப் பரிசை வழங்கிய காவியன்… மண மேடைக்கு சென்று அமர்ந்தவன்… சில பல மந்திரங்கள் ஓதி சில சடங்கு சம்பிரதாயங்களை செய்யத் தொடங்கினான்.

மதியழகனை நெருங்கிய வேலம்மாள். “ஏண்டா மதி.. உண்மையாவே உன் ஆளுங்க மதுவ தூக்கிட்டாங்க தானே!” என்று சந்தேகத்துடன் வினவினார்.

“அதெல்லாம் பக்காவா தூக்கிட்டாங்க பாட்டி நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க.. பொண்ணு இப்ப நம்ம கையில” என்று திமிராக அறிவித்தான் மதியழகன்.

“நீ பொண்ண தூக்கிட்டேன்னு சொல்ற!, ஆனா இங்க யாரும் கல்யாணத்தை நிறுத்தின மாதிரி தெரியலையே!, அண்ணன் கூட ஸ்டேஜ்ல தான் நிக்கிறாரு. பொண்ண காணோங்குற விஷயம் இப்போ வரைக்கும் அவருக்கு தெரியாமலா இருக்கும்?” என்று குழப்பத்துடன் வினவினார் காந்திமதி.

“அதான் எனக்கு ஒன்னும் புரியல.. பசங்க பொண்ணு தூங்கிட்டேன்னு தான் சொன்னாங்க…”என்று மதியழகன் கூறிட…”என்னடா சொன்னாங்கன்னு இழுக்குற?, அப்போ நீ போய் இன்னும் மதுவை நேர்ல பாக்கலையா?” என்றார் வேலம்மாள்.

“நான் போய் நேர்ல பாக்கல பசங்க போன்ல சொன்னாங்க.. எதுக்கும் ஒரு தடவை கன்பார்ம் பண்ணிக்குவோம்னு நானும் மது ரூமுக்கு போய் பார்த்தேன் அங்க அவ இல்லை. “என்றான் மதியழகன்.

“சரி அதான் உன் திட்டப்படி மதுவை கடத்திட்டியே… போய் கல்யாணம் பண்றது விட்டுட்டு.. இங்க என்னடா பண்ணிட்டு இருக்க..?” என்று எரிச்சலுடன் வேலம்மாள் வினவிட…,”புரியாம பேசாத பாட்டி, மதுவ காணோம்னு தெரிஞ்சதும்… முதல்ல எல்லாருக்கும் என் மேல தான் சந்தேகம் வரும். இதை நான் இங்க இருந்தா.. அந்த சந்தேகத்துக்கே வாய்ப்பு இல்லாம போயிடும்ல” என்றான் மதியழகன்.

“எல்லாம் சரிதாண்டா இருந்தாலும்… இவங்க பேசி வச்ச முகூர்த்தத்திலேயே உங்க ரெண்டு பேரோட கல்யாணத்தை முடிச்சு மதுவோட இங்க வந்து நிப்பன்னு எதிர்பார்த்தேன்.” என்று தனது எதிர்பார்ப்பை வேலம்மாள் கூறிட…”நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன். என்னை வேணான்னு சொல்லிட்டு வெளியாளுக்கு கட்டி வைக்க நினைச்ச என் மாமா பொண்ண காணோம்னு பரிதவிக்கிறத கண்ணார பார்த்து ரசிக்கனும்னு தான்.. முடிவை மாத்திகிட்டு மதுவ கூட பார்க்க போகாம இங்க வந்தேன்.”என்றான் மதியழகன்.

” எனக்கு என்னமோ ஏதோ தப்பா தெரியுது!, ஏன் சொல்றேன்னா இங்க யாரும் கல்யாணத்தை நிறுத்த முயற்சி பண்ணுற மாதிரி தெரியல. ஒருவேளை மது உன் ஆளுங்க கிட்ட இருந்து தப்பிச்சு மண்டபத்துக்கு வந்திருந்தா?,நீ எதுக்கும் இன்னொரு தடவை அந்த பசங்க கிட்ட மது அங்க தான் இருக்காளான்னு கேட்டு பாரு, “என்றார் காந்திமதி.

“அதுவும் சரிதான்.. இருங்க இப்பவே பசங்க கிட்ட பேசிட்டு வரேன்” என்றவன்.. சற்று விலகிச் சென்று… அலைபேசியில் தனது ஆட்களை தொடர்பு கொண்டு மதுரிமா குறித்து விசாரித்து விட்டு.. “மது என் ஆளுங்க கிட்ட தான் பத்திரமா இருக்கா. நல்லா இறுக்கமா தான் கட்டி வச்சிருக்காங்களாம், முகத்துல மூடுன துணிய கூட கழட்டல.. ” என்றான் மதியழகன்.

” நீ இப்படி சொல்ற ஆனா இங்க கல்யாணம் ஏற்பாடு நடந்துட்டு தான இருக்கு” என்றார் காந்திமதி.

“ஒருவேளை பொண்ணக் காணோங்குற விஷயத்தை எப்படி மாப்பிள்ளை வீட்டுக்காரங்கக் கிட்ட சொல்றதுன்னு தெரியாம தயங்கிட்டு இருக்காங்களோ!” என்று தனது சந்தேகத்தை கூறினான் மதியழகன்.

“எனக்கும் அப்படித்தான் இருக்கும்னு தோணுது. அங்க பாரு என் பையன் முகமே சரி இல்ல. எதையோ பறி கொடுத்த மாதிரி நிக்கிறான். ஆசை ஆசையா பொண்ணுக்கு கல்யாண ஏற்பாடு பண்ணினவன், சந்தோஷமா இருக்கிறத விட்டுட்டு…. எதுக்கு மேடைல அழுது வடிஞ்சுட்டு நிக்கணும்?. மதி சொன்ன மாதிரி பொண்ண காணோங்கிற விஷயம் தெரிஞ்சு அதை எப்படி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட சொல்றதுன்னு தெரியாம பயந்துட்டு தான் ஓரமா பம்மிட்டு நிற்கிறான்.” என்று பேரனின் வார்த்தை சரி என்பது போல் பேசினார் வேலம்மாள்.

“நீங்க சொல்றதும் சரி தான் அம்மா அங்க பாருங்க அந்த ஊமைக் கொட்டன் முகமும் சரியில்ல, பேய் அறைஞ்ச மாதிரி நிக்குது. இந்த சுதனை வேற ரொம்ப நேரமா காணோம்… ஒருவேளை காணாம போன தங்கச்சியை தேடி அலைஞ்சிட்டு இருக்கானோ!. எப்படியாவது மகன் மகள கூட்டிட்டு வந்துருவாங்கிற குருட்டு நம்பிக்கையில தான் ரெண்டு பேரும் மேடைல நிக்கிறாங்கன்னு நினைக்கிறேன். ” என்று தாயின் வார்த்தையை ஆமோதித்தார் காந்திமதி.

” யாரு எங்க தேடினாலும் மதுவ கண்டுபிடிக்க முடியாது… இந்த கல்யாணமும் நடக்காது. மது எனக்கு மட்டும் தான்.. ” என்று கர்வமாய் மதியழகன் கூறிக் கொண்டிருக்க…

‘முகூர்த்தத்துக்கு நேரமாச்சு சீக்கிரம் பொண்ணை அழைச்சிட்டு வாங்க…’என்று மீண்டும் உரக்க ஒலித்தது ஒருவரின் குரல்.

‘ இல்லாத பொண்ணு எப்படி அழைச்சிட்டு வருவாங்களாம்.’ என்று கேலிப் புன்னகையுடன் மதியழகன் நின்றிருக்க…

மண்டப வாசலில் மேல தாளங்கள் முழங்க… அரங்கில் கூடியிருந்த அனைவரின் பார்வையும் வாயிற் புறம் திரும்பிட… நடன கலைஞர்கள் இசை வாத்தியங்களுக்கு ஏதுவாய் நடனம் புரிந்திட… அவர்களின் மத்தியில் மணப்பெண் கோலத்தில் அழகாய் அலங்கரிக்கப்பட்ட மதுரிமாவின் கரம் பற்றி அழைத்து வந்தாள் அனுரா.

” இவ எப்படி இங்க வந்தா?” என்று புரியாத குழப்பத்துடன்… மூவரின் விழிகள் வெறித்து விழித்திருக்க….

” இவள நாலு பேர் கடத்திட்டு போனத நானே என் கண்ணால பார்த்தேனே!, அப்புறம் எப்படி இவ இங்க வந்தா?, அந்த மூணு பேர நம்பி நான் எதுவும் பண்ணாம இருந்தது எவ்வளவு பெரிய தப்பா போச்சு..இந்த கல்யாணம் நடக்காதுன்னு ரொம்ப சந்தோஷமா இருந்தேனே!, ஐயோ நான் இப்ப என்ன பண்ணுவேன்?,”என்று செய்வதறியாத திகைப்புடன் நின்றிருந்தார் கோமதி.

நளினமாய் நடை பயின்று வந்த மதுரிமா காவியன் அருகில் சென்று அமர்ந்தாள்.

குனிந்த தலை நிமிராமல் அமர்ந்து இருந்தவள் கழுத்தில் தங்கச் சங்கிலியில் கோர்த்த மாங்கல்யத்தை சூட்டி.. தன் வாழ்வின் சரிபாதியாய் இணைத்துக் கொண்டான் காவியன்.

தன் எண்ணம் எதுவும் நிறைவேறாத விரக்தியுடன்.. அமைதியாய் அமர்ந்திருந்த மதுரிமாவின் அருகில் நெருங்கிச் சென்ற காவியன்.. ” நான் தான் சொன்னேன்ல.. நான் ரொம்ப பிடிவாதக்காரன்னு. இப்போ பெட்ல நான் தான் ஜெயிச்சிட்டேன்… அப்புறம் இனி எல்லாமே…” என்றவன் மெதுவாய் அவள் இடை வருடி..

“காமம் தவிர்த்த காதலோடு காலம் முழுவதும் இருப்பேன் நானடி!…

இன்ப துன்பம் எது வந்தாலும்

தாயாய் என்னை அரவணைத்துக் கொள்வாய்

நீயடி !…” என்று மெதுவாய் கிசுகிசுக்க…

” என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ற உன்கிட்ட என்னால தாரமா கூட நடந்துக்க முடியாது. அப்படி இருக்கும் போது நான் எப்படி உனக்கு தாயா இருப்பேன்னு எதிர்பார்க்கிற?” என்று கோபமும் வெறுப்புமாய் வினவினாள் மதுரிமா.

” நீ மாறுவ எனக்கு நம்பிக்கை இருக்கு..” என்று நம்பிக்கையுடன் கூறினான் காவியன்.

அது என்றுமே நடக்காது என்பது போன்ற முகபாவனையுடன் அமைதியாக அமர்ந்திருந்தாள் மதுரிமா.

 

Advertisement