26..
மரணத்தை வேண்டி தவிக்கிறேன்…
நானடி..
காதலோடு என் மார்பில் தஞ்சம் புகுந்திட தவிக்கிறாய்
நீயடி…
இது விதியின் செயலோ..
இல்லை நம்மை படைத்தவன்
சதியோ!
விடை நான் அறியேன்..
சேவகர்கள் விலகிச் சென்றதும்.. மன்னிப்பு வேண்டும் விதமாய் தலை தாழ்த்தி நிமிர்த்தவர், “இரவு பொழுது என்பதால் எதையோ கற்பனை செய்து கொண்டு கண்டதையும் உளறி விட்டார்கள் பைத்தியக்காரர்கள், அவர்களின் உளறலை நம்பி உங்கள் உறக்கத்தை கெடுத்ததற்கு என்னை மன்னியுங்கள் அரசே!, தாங்கள் அனுமதி வழங்கினால் நான் இங்கிருந்து வெளியேறிச் செல்கிறேன்”என்ற அரண்மனை வைத்தியரும் அங்கிருந்து நகர்ந்திட..” சற்று காத்திருங்கள் வைத்தியரே நான் தங்களிடம் தனிமையில் சில சந்தேகங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்.”என்றான் கீர்த்தி வர்மன்.
“கண்டிப்பாக அரசே!, இங்கு நம்மைத் தவிர வேறு எவரும் இல்லை, ஆகையால் இப்போதே பேசலாமே!” என்று அரண்மனை வைத்தியர் கூறிட…
தனக்குள் உருவாகி இருக்கும் மாற்றத்தை எப்படி விவரிப்பது என்று புரியாமல் குழம்பிப் போன கீர்த்தி வர்மன் சிறு தயக்கத்துடன்…”தங்களிடம் எப்படி விவரிப்பது என்று எனக்கு விளங்கவில்லை.”என்றான்.
மன்னரின் தயக்கத்தை புரிந்து கொண்ட அரண்மனை வைத்தியர், “எதுவாய் இருப்பினும் தயங்காமல் கேளுங்கள் அரசே!, நான் அறிந்த விவரங்கள் எதுவாகினும் தயங்காமல் தங்களுக்கு விவரிக்கிறேன்”என்று மன்னரின் தயக்கத்தை தகர்க்கும் விதமாய் பேசினார்.
” உதிரம் பருகும் மனிதர்கள் குறித்து தங்களுக்கு ஏதேனும் தகவல் தெரியுமா..?, “என்று கீர்த்தி வர்மன் வினவிட.. “என்ன உதிரம் பருகும் மனிதர்களா!” என்று அதிர்ச்சி அடைந்தவர் ஒரு நொடி தயங்கி பின் மீண்டும், ” நான் இதுவரை இப்படிப்பட்ட ஒன்றை கேள்விப்பட்டதே இல்லை அரசே!” என்றார் அரண்மனை வைத்தியர்.
“ஒருவேளை உதிரம் சம்பந்தப்பட்ட மர்ம நோய் எதுவும் மனிதர்களை தாக்கினால் அவர்களுக்கு மற்ற மனிதர்களின் உதிரத்தை பருகத் தோன்றுமா?.. அதாவது நான் என்ன கேட்க வருகிறேன் என்றால் உடலில் உதிர பற்றாக்குறை நேர்ந்தால் இதுபோல் விசித்திர நோய் தாக்க கூடுமோ?, ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் உதிரத்தை பருகும் செயல் நிகழ்ந்திடக் கூடுமோ?” என்று தனது சந்தேகத்தை வினவினான் கீர்த்தி வர்மன்.
“அப்படி இருக்க வாய்ப்பு இல்லை அரசே!,” என்று மன்னனுக்கு பதில் தந்தவர், ‘ஆமாம் இவர் ஏன் இப்படி கொஞ்சம் கூட அர்த்தம் இல்லாத கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றார், ஒருவேளை சேவகர்கள் சொன்னது உண்மை தானோ.. மன்னரின் நடவடிக்கையில் மாற்றம் நிகழ்ந்திருக்க கூடுமோ?’ என்று தனக்குள் எண்ணிக்கொண்டே எதிரில் இருந்த கீர்த்தி வர்மனை மேலும் கீழுமாய் ஆராயும் பார்வை பார்த்தார் அரண்மனை வைத்தியர்.
வைத்தியரின் பார்வையில் வேறுபாட்டை உணர்ந்தவன்… இதற்கு மேலும் அவரை அங்கு நிறுத்தி வைப்பது நல்லதல்ல என்று புரிந்து கொண்டு, “நான் மனிதர்களுக்கு ஏற்படும் விசித்திர நோய் குறித்து அறிந்து கொள்ளவே அவ்வாறு வினவினேன், வேறு ஒன்றும் இல்லை. எனக்கு வேண்டிய பதில் கிடைத்து விட்டது. ஆகையால் தாங்கள் இப்போதே இங்கிருந்து செல்லலாம்.”என்று அரண்மனை வைத்தியர் அறையை விட்டு வெளியேற அனுமதி வழங்கினான் கீர்த்தி வர்மன்.
தன் உண்மையை மறைக்கும் முயற்சியால் முகத்தில் பதற்றத்தைத் தேக்கி கொண்டு பேசிய மன்னரை விசித்திரமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “உத்தரவு அரசே!” என்று மரியாதை நிமித்தமாய் தலை வணங்கி அங்கிருந்து வெளியேறினார் அரண்மனை வைத்தியர்.
அந்தப்புர பணிப் பெண்ணின் அகோர மரணத்தை கேள்வியுற்ற அரண்மனை ஆலோசகர் மரணம் நிகழ்ந்த இடத்திற்கே நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின் மன்னரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக கீர்த்தி வர்ம தேசிங்கனின் அறைக்கு நேரில் சென்றார் அரண்மனை ஆலோசகர்.
கீர்த்தி வர்மனிடம் தனிமையில் ஆலோசித்து விட்டு, தன் இருப்பிடம் திரும்பிக் கொண்டிருந்த அரண்மனை வைத்தியரை இடையில் சந்தித்த ஆலோசகர், ” வைத்தியரே!, தாங்கள் இங்கு தான் உள்ளீரா?, தங்களை அழைத்து வரும்படி உத்தரவு பிறப்பித்து சில காவலர்களை தங்கள் இருப்பிடத்திற்கு அனுப்பி வைத்தேன். நல்ல வேலையாக தாங்களே எதிரில் வந்து விட்டீர்..”என்றார்.
“என்னைத் தேடி ஆட்களை அனுப்பி வைத்திருக்கின்றீரா ஏன் எதற்கு?” என்று வைத்தியர் கேள்வி எழுப்ப…” தங்களுக்கு இன்னும் அக் கோரச் செய்தி கிட்டவில்லை போலும், “என்று மந்திரி ஒருவர் கூறிக் கொண்டிருக்க… இடையில் நுழைந்த வைத்தியர்..”என்ன கோரச் செய்தி..?, நம் மன்னரின் நடவடிக்கையில் உண்டான மாற்றம் குறித்து தான் தாங்களும் பேச வந்துள்ளீர்கள் என்றல்லவா நான் எண்ணினேன். ” என்றார்.
“மன்னர் நடவடிக்கையில் என்ன மாற்றம்?, சற்று நேரத்திற்கு முன்.. நிகழ்ந்த பணிப் பெண்ணின் மர்ம மரணம் குறித்து அல்லவா நாங்கள் அனைவரும் மன்னரிடம் விவாதிக்க வந்தோம்” என்றார் நிதி அமைச்சர்.
” சேவகர்களுடன் மன்னர் அறைக்கு செல்லும்போது ஒரு பெண்ணின் அலறல் குரல் கேட்டது, அலறிய பெண் தான் மரணமடைந்தாளா?” என்று வினவினார் வைத்தியர்.
“ஆம் வைத்தியரே!, அந்தப் பெண் தான் மரணித்தது.. அது குறித்து ஆலோசிக்கவே மன்னரின் அறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். ஆமாம் தாங்கள் என்னவோ மன்னரின் நடவடிக்கையில் மாற்றம் என்றீர்களே அது என்ன?” என்று வைத்தியர் கூறிய வார்த்தைக்கு விளக்கம் கேட்டார் ஆலோசகர்.
” என்ன நடந்ததெனில்..”என்று துவங்கியவர், சேவகர்கள் தெரிவித்த விபரத்தையும், மன்னரை பரிசோதித்த பின் அவர் எழுப்பிய கேள்வி குறித்தும் விளக்கமாக கூறி முடித்தார் வைத்தியர்.
“என்ன ?” என்று வந்திருந்த அத்தனை பிரமுகர்களும் அதிர்ச்சியுடன் ஒரே குரலில் கேள்வி எழுப்ப..
“என்ன நேர்ந்தது? ஏன் இப்படி அனைவரும் அதிர்ச்சி அடைகின்றீர்?” என்று நடந்தது என்னவென்று புரியாத குழப்பத்துடன் வினவினார் வைத்தியர்.
“சொல்கிறோம் சற்று எங்களுடன் வாருங்கள்..”என்று இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை காண வைத்தியரையும் தங்களுடன் அழைத்துச் சென்றனர் முக்கிய பிரமுகர்கள்.
அங்கங்கு சிதறி கிடந்த உதிரத்தின் நடுவே உயிரற்ற நிலையில் கிடந்த சடலத்தை உற்று கவனித்தார் வைத்தியர். .. “எனக்கு என்னவோ நடந்தது சாதாரண செயல் போல் தெரியவில்லை, இந்த மரணத்தை நிகழ்த்தியது ஒரு மனிதனாக இருக்கக்கூடும் என்று இப்பொழுதும் என்னால் நம்ப இயலவில்லை , இப்பணிப் பெண்ணின் மரணத்தில் பெரும் மர்மம் மறைந்துள்ளது. இது குறித்து தங்கள் கருத்து என்ன வைத்தியரே!, “என்று தனது சந்தேகத்தை கூறி வைத்தியரின் அபிப்பிராயத்தை வினவினார் ஆலோசகர்.
” நன்றாக கவனித்து பாருங்கள் அந்தப் பெண்ணின் கழுத்தில் படிந்திருக்கும்.. பற்களின் தடம் மனிதனின் பற்களின் தடத்தை ஒத்துள்ளது.. நகக் கீறல்களை சற்று உற்று கவனித்து பாருங்கள், விலங்குகளின் நகக் கீறல்கள் இவ்வாறு அதிக அழுத்தம் இல்லாமல் இருக்காது. இது நிச்சயம் ஒரு மனிதனின் வெறிச் செயல் தான். இப்பெண்ணின் கழுத்துப் பகுதியை கடித்து உடலில் உள்ள உதிரத்தை பருகி இருக்கிறார்கள்.”என்று அடித்துக் கூறினார் வைத்தியர்.
” மனிதனின் வெறிச் செயல் என்று எவ்வாறு உறுதியாக கூறுகின்றீர், ஒருவேளை தாங்கள் உரைப்பது போல் இது சாதாரண மானுடனின் செயல் எனில், இத்தகைய கொடும் செயலை செய்தது யாராக இருக்க கூடும் “என்று ஆலோசகர் சந்தேகமாய் கேள்வி எழுப்ப…
“நம் மன்னர்..” என்று கேட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி தரக்கூடிய பதிலை கூறினார் வைத்தியர்.
“என்ன நம் மன்னரா?, என்ன சொல்கின்றீர் வைத்தியரே!, இது எப்படி சாத்தியமாகும். அடுத்தவருக்கு தீங்கு நினைக்காத நம் மன்னரா ஒரு பெண்ணின் உயிரை பறித்தது. உணவிற்காக கூட பிற உயிர்களை வதைக்காது சைவ உணவை மேற்கொள்ளும் நம் மன்னரா ஒரு அபலைப் பெண்ணின் உதிரம் குடித்தது. பொழுது போக்கிற்கு கூட வன வேட்டைக்கு செல்லாது பிற உயிரினங்களை சமமாய் மதிக்கும் நம் அரசரா இத்தகைய அசுரச் செயலை புரிந்தது.”என்று நம்பிக்கை இன்றி வினவினார் ஆலோசகர்.
“மன்னர் என்னிடம் எழுப்பிய கேள்விகள் குறித்து நான் தங்களிடம் கூறியது மறந்ததா?, மனித உதிரத்தை மற்றொரு மனிதன் பருக வாய்ப்பு உள்ளதா?, அப்படி இதுவரை ஏதேனும் நிகழ்ந்துள்ளதா? என்று தான் அவர் என்னிடம் வினவினார். அவருக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்து ஆலோசிக்கவே என்னை தனிமையில் சந்தித்தார். ஆகையால் இது மன்னரின் செயலாகத் தான் இருக்கக்கூடும். “என்று தனக்குள் எழுந்த சந்தேகத்தை சுற்றி இருந்தவர்கள் மீதும் திணித்தார் வைத்தியர்.
“இன்னும் என்னால் இதை ஏற்க் இயலவில்லை” என்று நிதி அமைச்சர் வைத்தியரின் வார்த்தையை ஏற்க மறுக்க.. “காந்தாரனின் சாபம் பழிக்கத் துவங்கி விட்டது. “என்று ஒற்றை வரியில் தன் வார்த்தையை ஏற்க மறுத்தவர்களை வாயடைக்க செய்தார் வைத்தியர்.
“என் வார்த்தையில் நம்பிக்கை இல்லை எனில் இந்த மரணம் குறித்து மன்னரிடம் எதுவும் தெரிவிக்காமல் ரகசியம் காத்திடுங்கள். என் சந்தேகம் சரி என்றால் நாளையும் ஒரு மரணம் நிகழும்..” என்று உறுதியாக அறிவித்தார் வைத்தியர்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்தம் தானம் செய்தாலே,ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~