Advertisement

26…

” இந்தாப் பொண்ணே நில்லு” என்று எதிர் திசையில் சென்று கொண்டிருந்தவளை உரக்க அழைத்தார் வேலம்மாள்.

“என்னையா கூப்பிட்டீங்க?” என்று நின்ற இடத்திலிருந்து அசையாமல் வினவியவளை, ஏற இறங்க பார்த்தவர்,”உன்னை சுத்தி வேற யாராவது இருக்காங்களா என்ன?, இல்லேல அப்போ உன்னை தானே கூப்பிட்டு இருப்பேன்” என்று பெரியவர் கூறிட…’பெருசுக்கு நக்கல் கொஞ்சம் தூக்கலா இருக்கே!’ என்று தனக்குள் எண்ணிக்கொண்டவள், “என்ன விஷயம்?” என்றாள் அவள்.

” அங்கிருந்தே பேசினா என்ன அர்த்தம்? கொஞ்சம் இங்க பக்கத்துல வா” என்று வேலம்மாள் அழைப்பு விடுக்க வேண்டா வெறுப்பாக அவர் அருகில் சென்றாள் சரிகா.

கையில் இருந்த குளிர் பானம் இரண்டில் ஒன்றை அவள் புறம் நீட்டி, ” இந்தாக் குடி” என்றார் வேலம்மாள்.

நீட்டியதை வாங்காமல் சந்தேகமாய் பார்த்திருக்க, ” என்னப் பொண்ணு அப்படிச் சந்தேகமா பார்க்குற?, முன்ன பின்ன தெரியாதவங்க கொடுக்கிறத எப்படி வாங்குறதுன்னு யோசிக்கிறியா?,நீ என் பேத்தி மது கூடப் படிச்ச பொண்ணு தான, நான் மதுவோட பாட்டி தான், தயங்காம வாங்கிக் குடி” என்று பரிவுடன் பேசினார் பெரியவர்.

“அட மது அடிக்கடி சொல்லுற முசுடு பாட்டி நீங்க தானா? ” என்று உளறியவள் சூழ்நிலை புரிந்து நாக்கை கடித்துக் கொண்டு அமைதியானாள்.

‘ முசுடு பாட்டியா?, இருடி இரு என் பேரனுக்கும் உனக்கும் கல்யாணம் ஆகட்டும், அப்புறம் தெரியும் நான் யாருன்னு?’ என்று தனக்குள்ளேயே கறுவிக்கொண்டவர், உள்ளம் உணரும் வெறுப்பை வெளியில் மறைத்து, ” அது இந்த காலத்து பிள்ளைகளுக்கு நல்லது சொன்னா எங்க புடிக்குது?, அதான் என்ன முசுடுன்னு சொல்லிருப்பா.. நீ அதெல்லாம் ஒன்னும் பெருசா எடுத்துக்காத… இந்தா இந்த கூல் ட்ரிங்க்கை கொண்டு போயி உன் பிரண்டு கிட்ட கொடுத்து குடிக்க சொல்லு. ஒரு சொட்டு மிச்சம் இல்லாம மொத்தத்தையும் மது குடிச்சு முடிச்சிடனும், அதுக்கு நீ தான் பொறுப்பு ” என்று அதிகாரமாய் கட்டளையிட்டார் வேலம்மாள்.

“இத நான் போய் எதுக்கு கொடுக்கணும்?, நீங்க அவ பாட்டி தானே நீங்களே போய் குடுங்க”என்று அலட்சிய தோரணையுடன் சரிகா கூறிட.. “நான் தான் சொன்னேனேமா… நான் நல்லது சொன்னா அவளுக்கு பிடிக்காது, அதனால சின்ன வயசுல இருந்தே என்னை பார்த்தாலே கடுகடுன்னு இருப்பா.. இப்ப போய் நான் இதை கொடுத்தேன்னு வை என் மேல இருக்குற கோவத்துல குடிக்க மாட்டா.. இதே நீ போய் கொடுத்தா மறுக்காம குடிச்சிடுவா” என்றார் வேலம்மாள்.

“அப்படிங்கிறீங்க!, சரி குடுங்க நானே அவகிட்ட கொடுத்துடறேன். “என்றவள் மதுவுக்காக நீட்டிய குளிர் பானத்தை முதலில் வாங்கிக் கொண்டு, “அது எனக்கு தானே!,. அதையும் குடுங்க.. நாங்க ரெண்டு பேரும் ஒன்னாவே குடிச்சிக்கிறோம்”என்று தனக்கானதை பெற்றுக்கொள்ள கரம் நீட்டினாள் சரிகா.

” சரி இந்தா பிடி” என்று மற்றொன்றையும் வேலம்மாள் நீட்டிட, அதுவரை இருவரின் அருகில் நின்று நடப்பதை கவனித்துக் கொண்டிருந்த காந்திமதி, ‘அய்யய்யோ இதையும் கொண்டு போகப் போறேன்னு சொல்றாளே?ஒருவேளை மாறி போச்சுன்னா என்ன செய்றது?’ என்று பயத்துடன் தன் அன்னையின் கரத்தை தடுத்து பிடித்தார்.

“என்னம்மா நீங்க, கல்யாண பொண்ணு தான் ரொம்ப டயர்டா இருக்கா முதல்ல அவ தான் இத குடிக்கணும்… ” என்று எதையோ நினைவுறுத்த… “ஆமால” என்று மகளின் வார்த்தையை ஆமோதித்தவர்.. சரிகா தங்களையே கவனித்துக் கொண்டிருப்பதை உணர்ந்து.. வேகமாய் தன் முகத்தையும் குரலையும் சரி செய்து கொண்டு இயல்பாய் பேசுவது போல், ” இது எங்கம்மா போயிடப் போகுது, என்னன்னு தெரியல மது சரியா சாப்பிட கூட இல்லை, முதல்ல போயி இதை அவகிட்ட குடுத்து, அவ முழுசா குடிச்சு முடிச்சதுக்கு அப்புறம் வந்து உன்னோடத வாங்கிக்கோ..”என்றார் வேலம்மாள்.

“ஏன் இரண்டையும் ஒன்னா கொண்டு போனா என்ன தப்பு?” என்று சரிகா சந்தேகமாய் வினவிட, என்ன பதில் சொல்வது என்ற புரியாத குழப்பத்துடன் வேலம்மாள் தயங்கி நிற்க, காந்திமதி சட்டென்று அவர் அன்னையின் கையில் இருந்த குளிர் பானத்தை பிடுங்கி மடமடவென்று குடித்து முடித்துவிட்டு, “அடடா உனக்கு குடுக்க வச்சிருந்தது இப்ப தீர்ந்து போச்சே!, ரொம்ப நேரமா தாகமா இருந்துச்சா அதான் எல்லாத்தையும் குடிச்சிட்டேன், இப்போ ஒன்னும் கெட்டு போகல.. நீ போய் முதல்ல உன் கைல இருக்கிறத மதுவுக்கு குடுத்துட்டு கூடவே இருந்து குடிக்க வச்சிட்டு வா, நான் உனக்கு வேற ஒரு கூல்ட்ரிங்க் எடுத்து வைக்கிறேன் “என்றார் காந்திமதி.

“ஒன்னும் வேணாம் தேங்க்ஸ்.. ” என்று கடுப்புடன் கூறியவள், ‘ ஆளப் பாரு… நல்லா காஞ்ச மாடு கழனித் தண்ணிய குடிச்ச மாதிரி ஒரே மடக்குல எல்லாத்தையும் குடிச்சு முடிச்சுட்டு.. வேற கொண்டு வராங்களாம்,.’என்று தனக்குள்ளையே திட்டி தீர்த்தவள்… கையில் இருந்த குளிர் பானத்துடன் மதுவை தேடிப் புறப்பட்டாள் சரிகா.

“என்னம்மா நீங்க.. விவரம் புரியாம இரண்டையும் அவகிட்ட குடுக்குறீங்க?, தப்பி தவறி மயக்கம் மருந்து கலந்த கூல்ட்ரிங்க மது குடிக்கிறதுக்கு பதிலா இந்தப் பொண்ணு குடிச்சிட்டா என்ன ஆகும்னு தெரியும் தானே!, என் பையன் போட்டு வெச்ச திட்டமெல்லாம் மக்கி மண்ணாப் போயிடும். ” என்றார் காந்திமதி.

“மறந்துட்டேன் காந்தி… ” என்று மழுப்பலாய் புன்னகை செய்தவர்.. “நல்லவேளை சரியான நேரத்துல தடுத்து நிறுத்திட்ட.. இல்லைனா உன் பையனுக்கு பதில் சொல்ல முடியாது” என்று அங்கலாய்த்து கொண்டார் வேலம்மாள்.

“சரி சரி வாங்க அந்த பொண்ணுக்கு பின்னாடியே போயி மது கூல்ட்ரிங்க குடிக்கிறாளான்னு பாத்துட்டு வந்துருவோம்..”என்று தாயும் மகளும் சரிகாவை பின்தொடர்ந்து சென்றனர்.

உண்டேன் என்று சொல்லிக் கொள்ள பல வகையில் இருந்த உணவு வகைகளில் சிலவற்றை மட்டும் கொறித்து முடித்த மதுரிமா.. மீண்டும் மணமகள் அறைக்குள் வந்து முடங்கிக் கொள்ள… தோழியை தேடி வந்த சரிகாவும் அவ்விடம் வந்து சேர்ந்தாள்.

சரிகாவை பின் தொடர்ந்து வந்த வேலம்மாள் அறைக்குள்ளும் நுழைய முயல.. அவசரமாய் அவரை தடுத்து நிறுத்திய காந்திமதி, “இருங்க எங்க போறீங்க?, கொஞ்சம் தூரமா இருந்தே ரெண்டு பேரையும் கவனிப்போம். பக்கத்துல போனா நம்ம மேல சந்தேகம் வந்துரும் “என்று என்று சற்று தொலைவிலேயே விலகி நின்று இருவரையும் கண்காணிக்க துவங்கினர்.

இரு ஜோடி கண்கள் தங்களை கண்காணித்துக் கொண்டிருக்கும் விபரம் அறிந்திடாத தோழிகள் இருவரும்.. தங்களது ரகசியங்களை பகிர்ந்து கொள்ள துவங்கினர்.

“சரி தான் நான் நினைச்ச மாதிரி மூல முடுக்க தான் முறைச்சு பார்த்துட்டு இருக்கியா?, உனக்கு என்ன தான் பிரச்சனை அதான் இங்க இருந்து எஸ்கேப் ஆகுறதுக்கு வேண்டிய எல்லா பிளானும் போட்டு வச்சாச்சுல அப்புறம் எதுக்கு தேவையில்லாம எதையாவது யோசிச்சுட்டே இருக்க?,

ஜேம்ஸ் பாண்ட் கூட உன் அளவுக்கு பிளான் பண்ணிருக்க மாட்டாரு..” என்று கிண்டலுடன் பேசியபடி மதுவின் அருகில் வந்து அமர்ந்தாள்.

“இன்னைக்கு என்னவோ காவியனோட பேச்சு நடவடிக்கை எல்லாம் வித்தியாசமா இருக்கு. வழக்கமா என்கிட்ட பேசும்போது ரொம்ப ஃசாப்டா பேசுவான். அத எப்படி சொல்றது ஹாங்.. ஒரு அம்மா கிட்ட குழந்தை எப்படி கொஞ்சி கெஞ்சி பேசும் அது மாதிரி பேசுவார். ஆனா இன்னைக்கு பேசும்போது அதுல கொஞ்சம் கூட பாசமோ பரிவோ தெரியல.. ” என்றாள் மதுரிமா.

“நாளைக்கு கல்யாணத்தை வச்சுட்டு இன்னைக்கு எஸ்கேப் ஆகி ஓடணும்னு நினைக்கிற உன்கிட்ட வேற எப்படி பேசணும்னு நினைக்கிற…?” என்று எரிச்சலுடன் சரிகா வினவ…”ம்ச்.. அது இல்ல சகா.. எப்படியாவது தாத்தா கிட்ட பேசி கல்யாணத்தை நிறுத்துறேன்னு சொல்லிட்டு இருந்த ஆளு, இப்போ தாத்தா கிட்ட பேசிட்டு என்ன முடிவுன்னு சொல்றேனு சொல்லுறான். எனக்கு என்னமோ சரியா படல.. ஒருவேளை வேற ஏதாவது பிளான் வச்சிருப்பானோ!, ” என்று தனக்குள் இருக்கும் சந்தேகத்தை கூறினாள் மதுரிமா.

“விருப்பமில்லன்னு சொல்ற பொண்ண கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ற அளவுக்கு அவர் டெரர் பிசா இருப்பார்னு எனக்கு தோணல.. “என்று சரிகா மதுரிமாவின் வார்த்தையை மறுக்க.. “அப்படியா சொல்ற?, ஆனாலும் என்னமோ இன்னைக்கு அவன் பேச்சுல திமிரு தெரிஞ்சது.”என்றாள் மது.

” எனக்கு என்னமோ அப்படி ஒன்னும் தோணல!” என்று மீண்டும் மறுத்தாள் மது.

“உனக்கு எப்படி தோணும், நீயா அவன் பக்கத்துல இருந்த?, “என்று வெடிக்கென்று கூறினாள் மது.

“ஹே… வெயிட் என்ன நீ… நான் அவரை அன்னைக்கு அவன்னு சொன்னதுக்கு மரியாதையா பேசு அப்படி இப்படின்னு ஓவரா பேசின!, இன்னைக்கு நீயே அவரை அவன் இவன்னு மட்டு மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க ?” என்று அதிர்ச்சியுடன் வினவினாள் சரிகா.

“அவன் பண்ணுன வேலைக்கு இந்த மரியாதையே அதிகம் தான், அவனை அன்னைக்கு காப்பாத்தி ஹாஸ்பிடல் சேர்த்த போ நீ ஒன்னு சொன்னியே தொல்லையை தூக்கி தோல்ல போட்டுக்காதன்னு… அது இன்னைக்கு நூத்துக்கு நூறு உண்மை ஆயிடுச்சு. “என்று புலம்பித் தீர்த்தாள் மதுரிமா.

” உனக்கு தான் இந்த கல்யாணம் வேணாம்னு தெளிவான முடிவுல இருக்கயே!, அப்புறம் எதுக்கு தேவையில்லாம புலம்பிட்டு இருக்க?” என்று சரிகா வினவ…

“தெளிவான முடிவுல தான் இருக்கேன் ஆனாலும் என்னவோ தப்பா நடந்துடுமோனு பயமா இருக்கு. இதோ இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி டைனிங் ஹால்ல என்ன நடந்தது தெரியுமா? அவன் என்னைப் பாத்து என்ன சொன்னான் தெரியுமா?,”என்று மது துவங்கிட.. இடையில் நுழைந்து,”எனக்கு எப்படி தெரியும், நான் தான் உங்கப் பக்கத்துல இல்லையே!” என்று கிண்டலாக கூறினாள் சரிகா.

” தெரியும் நீ பக்கத்துல இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆமா என் பக்கத்திலேயே இருக்கிறது விட்டுட்டு நீ எங்க போன?”என்றாள் மதுரிமா.

“அது அது வந்து வேற ஒரு முக்கியமான விஷயமா போயிருந்தேன். அதுவா இப்போ முக்கியம் நீ என்னமோ சொல்ல வந்தியே அதை முதல்ல சொல்லு. ” என்று பேச்சை திசை திருப்பினாள் சரிகா.

“அந்தக் காவியன் காண்டாமிருகம் இருக்கே..” என்று மதுரிமா துவங்க…” என்னது காண்டாமிருகமா?, என்ன இருக்க இருக்க மரியாதை தேஞ்சிக்கிட்டே போகுது..” என்று நமட்டு சிரிப்புடன் வினவினாள் சரிகா.

“அதெல்லாம் அப்படித்தான், இப்போ நான் சொல்றத காது கொடுத்து கேட்கிறதா இருந்தா இங்க இரு, இல்லனா கிளம்பி போயிட்டே இரு, சும்மா நடுவுல நடுவுல பேசி எனக்கு இருக்கிற டென்ஷனை அதிகமாக்காத…”என்று மதுரிமா சிடுசிடுக்க.. “சரி சரி இனி நடுவுல பேச மாட்டேன் நீ என்ன நடந்ததுனு சொல்லு” என்று தோழியை சமாதானம் செய்து விபரம் அறிய முயன்றாள் சரிகா.

” பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடும் போது.. இந்த போட்டோகிராபர் இருக்கான்ல சும்மா இல்லாம.. இப்படியே அமைதியா சாப்பிட்டு இருந்தா என்ன அர்த்தம் போட்டோக்கு போஸ் குடுங்கன்னு சொல்லி அவனை எனக்கு ஊட்டி விட சொன்னான் ” என்று மீண்டும் மது கூறத் துவங்க… இடையில் நுழைந்த சரிகா..”அடடா இப்படி எல்லாம் கூட ரொமான்ஸ் சீன் நடந்ததா? நான் மிஸ் பண்ணிட்டேனே..!” என்று கேலியும் கிண்டலுமாய் கூறிட நறுக்கென்று அவள் தலையில் கொட்டியவள்…”நடுவுல பேசக் கூடாதுன்னு சொன்னது மறந்துடுச்சா?, இதுக்கு மேல பேசினா இப்படித்தான் அடி கிடைக்கும்..”என்று எச்சரித்துவிட்டு மேலும் தொடர்ந்தாள் மதுரிமா.

” லைப் லாங் இப்படி நீ எனக்கு ஊட்டி விடணும்னு ஆசைப்படுறேன் நீ என்னடான்னா பாதியிலேயே கழண்டு ஓட நினைக்கிறன்னு குத்தலா சொல்லிட்டு, உனக்கு கல்யாணம் தானே புடிக்கல பேசாம கல்யாணமே பண்ணிக்காம லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்ல வாழலாமான்னு கேக்குறான்.” என்றாள் மது.

“அவர் சரியாத் தானே கேட்டிருக்காரு, இதுல என்ன தப்பு இருக்கு?, உனக்கு அவர பிடிச்சிருக்கு, இந்த கல்யாணம் தான் புடிக்கல அப்போ கல்யாணம் பண்ணிக்காம அவர் கூட சேர்ந்து வாழ வேண்டியது தானே..” என்று காவியன் கூறியது சரி என்பது போல் ஆமோதித்தாள் சரிகா.

“இவ்வளவு நாள் எனக்கு இந்த கல்யாணம் மட்டும் தான் பிடிக்காம இருந்துச்சு, இன்னைக்கு அவன் என்கிட்ட நடந்துகிட்ட முறையில அவனையும் பிடிக்காம போயிடுச்சு, இனி யார் தலைகீழா நின்னாலும் சரி என்னால இந்த கல்யாணத்தை பண்ணிக்க முடியாது எனக்கு இந்த கல்யாணமும் வேணாம் அவனும் வேணாம்..” என்று பிடிவாதமாக அறிவித்தாள் மதுரிமா.

“என்னடி நீ என்ன நடந்ததுன்னு முழுசா சொல்லாம சும்மாச் சும்மா கல்யாணம் வேணாம், அவன் வேணாம்னு அலப்பறை பண்ணிட்டு இருக்க!,”என்று சலிப்புடன் சரிகா வினவ… கன்னம் சிவக்க.. நடந்ததை நினைத்துப் பார்க்கத் துவங்கினாள்.

புகைப்படக் கலைஞர் உணவை பகிர்ந்து கொள்ளச் சொன்னதும் தனக்காக பரிமாறப்பட்ட இருந்த இனிப்பு பதார்த்தம் ஒன்றை எடுத்து அருகில் இருந்த மதுவிற்கு தன் கையாலேயே புகட்டியவன், ” கடைசியா ஒரு தடவை உன்கிட்ட கெஞ்சி கேட்கிறேன் மது… என்னை விட்டு விலகிப் போகாத.. என்னை கல்யாணம் பண்ணிக்கோ என் கூடவே இரு. ” என்று கெஞ்சலாய் வினவினான் காவியன்.

” என் முடிவுல எந்த மாற்றமும் இல்லை” என்று பிடிவாதமாக அறிவித்தாள் மதுரிமா.

அதுவரை கொண்ட சாந்தமான முகம் மறைந்து… வில்லத் தனமான புன்னகை ஒன்றை இதழில் ஏந்தியவன்… “என்னமோ தெரியல உன் பிடிவாதம் கூட எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு மதுமா. ” என்றவன்.. இன்னும் சற்று நெருங்கி அமர்ந்து கொண்டு… “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?, நான் உன்னை விட பயங்கரமான பிடிவாதக்காரன். இதுவரைக்கும் நான் நினைச்ச எதையும் நடத்திக் காட்டாம விட்டதே இல்லை. இப்போ இந்த கல்யாணம் நடக்கணும்னு நினைக்கிறேன். இத மட்டும் அவ்வளவு ஈஸியா விட்டுடுவேனா என்ன?. சரி உனக்கும் எனக்கும் ஒரு பெட்.. நீ நினைச்ச மாதிரி இந்த கல்யாணம் நின்னுடுச்சுன்னா, இனி நான் என்னைக்கும் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன், உன் முகத்துல கூட முழிக்க மாட்டேன். அதே நேரத்துல நான் ஆசைப்பட்ட மாதிரி இந்த கல்யாணம் நடந்திருச்சுன்னா!..அதுக்கப்புறம்.” என்றவன்… மெதுவாய் ஒரு விரல் கொண்டு அவள் இதழ். வருடிய விரலை தன் இதழில் பதித்து முத்தமிட்டு கொண்டே… எதையோ அறிவிப்பது போல் கள்ள புன்னகையுடன் காதலாய் கண்ணடித்தான் காவியன்.

காவியன் அறிவிப்பது என்னவென்று அறிந்து கொண்ட கோபத்துடன் பின் நகர்ந்து கொண்டவள்.. ” உன் மனசுல என்ன ரொமான்ஸ் ஹீரோன்னு நினைப்பா!, இப்படி எல்லாம் கண்ணடிக்கிறதால நான் உன்கிட்ட மயங்கிடுவேன்னு தப்பு கணக்கு போடாத!” என்று அதே கோபத்துடன் பேசினாள் மதுரிமா.

இருவருக்குமான இடைவெளியை குறைத்து மீண்டும் அவளை நெருங்கி சென்றவன், “உனக்கு ரொமான்ஸ் ஹீரோ பிடிக்காதுன்னா அப்போ ஆன்ட்டி ஹீரோ ஓகேவா?” என்று குறும்புடன் காவியன் வினவ…” என்னமோ எனக்கு விருப்பமில்லாத எதுவும் நடக்காதுங்குற மாதிரி தாத்தா கிட்ட பேசி கல்யாணத்தை நிறுத்துறேன்னு சகா கிட்ட சொல்லிட்டு, இப்போ கல்யாணத்தை நடத்தி காட்டுறேன்னு பெட் கட்டுற!, என்ன திமிரா?”என்று கோபமாய் பேசினாள் மதுரிமா.

“இப்பவும் நான் எதையும் மாத்தி பேசல மதுமா!, உனக்கு பிடிக்காத எதுவும் நடந்துடக் கூடாதுன்னு தான் கல்யாணமே இல்லாம லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்ல வாழலாம்னு சொல்றேன்!” என்று காவியன் பதில் தர இதற்கு மேல் அவனிடம் பேசிப் பயனில்லை என்பது போல் பாதி உணவிலிருந்து எழுந்து அங்கிருந்து விலகி வந்து தன் அறைக்குள் முடங்கினாள் மதுரிமா.

“பார்ரா இந்த பூனையும் பால் குடிக்குமாங்குற மாதிரி சமத்து புள்ளையா இருந்துட்டு என்னம்மா பேசுது அந்த பீசு. சரி அவர் சொன்ன பெட்டுக்கு நீ ஓகே சொல்லிட்டியா?,” என்று ஆர்வமாய் வினவினாள் சரிகா.

“அவன் தான் முட்டாள் தனமா பேசிட்டு இருக்கானா நீயும் ஏண்டி அவன மாதிரியே லூசு தனமா உளறிட்டு இருக்க?, என் லைஃப வச்சு பெட் வைக்க அவனுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு?, அவன் இவ்வளவு தைரியமா பேசுறானா அப்ப ஏதோ பிளான்ல இருக்கான்னு தான அர்த்தம்?. ” என்று மதுரிமா கூறிட..

“யார் என்ன பிளான் போட்டா என்ன கடைசில நீ நினைச்சத தான் செய்யப் போற, அப்புறம் எதுக்கு தேவையில்லாம அடுத்தவங்கள பத்தி யோசிக்கிற?. அந்த காண்டாமிருகம் காண்டாக்குனதுல.. சரியா சாப்பிட்டு இருக்க மாட்டேல, இந்த கூல் ட்ரிங்க்கை குடி, “என்று வேலம்மாள் கொடுத்து அனுப்பிய குளிர்பானத்தை மதுவின் கையில் கொடுத்தாள் சரிகா.

“தேங்க்ஸ் டி..” என்றவள் கையில் வாங்கிய குளிர்பானத்தை இரு மிடறு அருந்திவிட்டு, ” என்கிட்டயே எவ்வளவு திமிரா பேசுறான்!, நாளைக்கு கல்யாணம் நின்னு மணமேடையில அசிங்கப்பட்டு நிற்கும்போது இந்த திமிர் எங்க போகுதுன்னு நானும் பார்க்கிறேன். நீ நாளைக்கு இங்க நடக்கிறத எல்லாம் வீடியோவா ரெக்கார்ட் பண்ணி எனக்கு அனுப்பி வை, அந்த திமிர் பிடிச்சவன் திரு திருன்னு முழிச்சிட்டு இருக்குதா பாக்கணும்னு ஆசையா!” என்றாள் மதுரிமா.

“என்னது நான் வீடியோ எடுத்து அனுப்பனுமா?, நீ ஓடிப்போன விஷயம் தெரிஞ்சதும் எல்லாரும் ஒன்னு கூடி என்னை ஓட விடுறதுக்கா.. நாளைக்கு என்னை இங்க இருக்க சொல்ற?, நீ இங்க இருந்து எஸ்கேப் ஆன அடுத்த நிமிஷமே நானும் இங்கிருந்த எஸ்கேப் ஆயிடுவேன்.” என்றாள் சரிகா.

“அப்போ நான் அந்த திமிரு புடிச்சவன் நோஸ்கட் ஆகி உட்கார்ந்து இருக்கிற கண்கொள்ளா காட்சியை பார்க்க முடியாதா?, ப்ளீஸ் டி எனக்காக இந்த ஒரு ஹெல்ப் பண்ண மாட்டியா?” என்று ஏமாற்றத்துடன் வினவினாள் மதுரிமா.

“கண் கொள்ளா காட்சியை பார்க்கணும்னா நீயே நேர்ல வந்து பாத்துக்கோ.. என்னை ஆள விடு சாமி” என்றாள் சரிகா.

தோழியின் செய்கையில் உண்டான புன்னகையுடன் மேலும் இரு மிடறு அருந்திட…”அப்பாடா நல்ல வேலை மது மயக்க மருந்து கலந்து கொடுத்த கூல்ட்ரிங்கை குடிச்சிட்டா, இனி நாம் ஆசைப்பட்ட மாதிரி மது மதி கல்யாணம் நடந்துடும்..” என்றார் காந்திமதி.

“அவ கூல்ட்ரிங்ஸ் குடிச்சது இருக்கட்டும் ரெண்டு பேரும் ரொம்ப நேரமா என்னமோ பேசுறாங்களே உனக்கு ஏதாவது காதுல விழுந்துச்சு?” என்றார் வேலம்மாள்.

“எனக்கு ஒன்னும் கேக்கல… அதுக என்ன பேசினா நமக்கு என்ன?. நாம வந்த வேலை முடிஞ்சது மதி கிட்ட போயி மது கூல்டிரிங்ஸ் குடிச்ச விஷயத்தை சொல்லலாம் வாங்க” என்று தன் அன்னையை அங்கிருந்து அழைத்துச் சென்றார் காந்திமதி.

“பரவாயில்லையே நான் சாப்பிடாம இருப்பேன்னு தெரிஞ்சுகிட்டு கூல்ட்ரிங்க் எல்லாம் கொண்டு வந்து இருக்க…”என்று மதுரிமா வினவிட… “நான் எங்க கொண்டு வந்தேன். உன் பாட்டி தான் உன் கிட்ட குடுக்க சொல்லி குடுத்த அனுப்பினாங்க, நீ உன் பாட்டிய பத்தி என்னென்னமோ சொன்ன, ஆனா பாரு அவங்க உன் மேல எவ்வளவு அக்கறையா இருக்காங்க!” என்று வேலம்மாளின் பெருமை பேசினாள் சரிகா.

“என்னது என் பாட்டி கொடுத்ததா…?, அவங்க சவகாசமே வேணாம்னு தான எல்லாத்தையும் உதறி தள்ளிட்டு போக போறேன். அப்புறம் எதுக்கு தேவையில்லாம என் மேல அக்கறை இருக்கிற மாதிரி நடிக்கணும்.” என்று கோபமாய் தன் கையில் இருந்த குளிர்பானத்தை சரிகாவிடமே ஒப்படைத்தாள் மதுரிமா.

” கூல் ட்ரிங்க் தானே கொடுத்தாங்க என்னமோ விஷத்தை கொடுத்த மாதிரி இந்த குதி குதிக்கிற..?, கடைசியா கேட்கிறேன் இது உனக்கு வேணுமா வேணாமா?” என்று கேள்வியாய் சரிகா நிறுத்த… “வேணாம்” என்று உறுதியாக அறிவித்தாள் மதுரிமா.

“வேணாம்னா போ நான் குடிச்சிக்கிறேன்…”என்று சிறிதும் யோசிக்காமல் பாதிக்கு மேல் இருந்த குளிர்பானத்தை மிச்சம் வைக்காமல் மொத்தமாய் குடித்து முடித்தாள் சரிகா.

” கொஞ்சம் கூட யோசிக்காம எல்லாத்தையும் குடிச்சு முடிச்சிட்ட?,” என்று மது வினவிட.. “அது வந்து உன் பாட்டி எனக்கும் சேர்த்து ரெண்டு கொடுத்தாங்க அதுல எனக்கு கொடுத்ததை உன் அத்தை பிடுங்கி குடிச்சிட்டாங்க.. உனக்கு வேணாம்னா நானே குடுச்சுடலாம்ன்னு தான் வந்தேன் அதான் நீ வேணாம்னு சொன்னதும் மொத்தத்தையும் குடிச்சிட்டேன்.” என்றாள் சரிகா.

“என் பாட்டி காரண காரியம் இல்லாம எதையும் செய்ய மாட்டாங்க, இப்போ இதை கொடுத்த அனுப்பி இருக்காங்கன்னா இதுலயும் ஏதாவது உள்குத்து இருக்கும்..” என்றாள் மதுரிமா.

“என்னடி இப்படி குண்ட தூக்கி போடுற?, ஒருவேளை உண்மையிலேயே விஷத்தை தான் கலக்கி இருப்பாங்களோ?” என்று அச்சத்துடன் வினவினாள் சரிகா.

” யாருக்கு தெரியும்?, நாளைக்கு நீ உயிரோட இருந்தேனா கொடுத்தது விஷமா இல்லையான்னு தெரிஞ்சிடப் போகுது.” என்று கிண்டலாய் கூறியவள் தோழியின் முகம் போன போக்கை கவனித்து, “அட சும்மா சொன்னேன்… விஷத்தை கலக்கி குடுத்துட்டு.. அவங்க பேரனுக்கு யாரை கட்டி வைப்பாங்களாம். சும்மா என்னை ஐஸ் வைக்க இத கொடுத்து அனுப்பி இருப்பாங்க. என் பாட்டி கிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால தான் இதை வேணாம்னு சொன்னேன்.” என்று பயத்துடன் இருந்த தோழியை சமாதானம் செய்தாள் மதுரிமா.

“அப்பாடி சும்மா கிண்டலுக்கு தான் சொன்னியா? நான் கூட உண்மையோனு நினைச்சு பயந்துட்டேன். “என்று நிம்மதி பெரும் மூச்சை வெளியேற்றினாள் சரிகா.

 

Advertisement