Advertisement

24…

மாலையும் இரவும் சங்கமிக்கும் பின் மாலை பொழுது… கட்டிடம் முழுவதும் வண்ண விளக்குகளும் தோரணங்களும் மேலும் அவ்விடத்தை ஒளியூட்டி அலங்கரிக்க…

மலர்கள் கொண்டு வண்ணமயமாய் அலங்கரிக்கப்பட்ட சொகுசு வாகனத்தில் மங்கை அவள் வந்திறங்கினாள்..

திருமண கலையற்று கலக்கம் நிறைந்திருந்த முகத்தை கண்டதும் அவள் அருகில் வந்த கண்மணி… “ எதுக்கு இப்போ முகத்தை உர்ன்னு வச்சிட்டு வர்ற, கல்யாண பொண்ணா லட்சணமா சிரிச்ச முகமா இரு” என்று மெதுவாய் கண்டிக்க.. “பிடிக்காத கல்யாணத்துக்கு இந்த எக்ஸ்பிரஷன்னே கொஞ்சம் ஓவர் தான். ” என்று சலித்துக் கொண்டபடி மணமகளுக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்று முடங்கினாள் மதுரிமா.

திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட உற்றார் உறவினர்கள் அவையில் வீற்றிருக்க… நிச்சய தாம்பூலத்தை மாற்றிக்கொள்ள மணமக்களின் தாய் மாமன்கள் மேடைக்கு வரும் படி… வயதில் மூத்த உறவினர் ஒருவர் குரல் கொடுக்க, “ ஹுக்கும்.. அனாதையா ஆசிரமத்துல வளர்ந்தவளுக்கு அண்ணன் தம்பி தான் குறைச்சல்.. “ என்று எல்லோர் காதுபடவும்.. அவமதித்து பேசுவது போல் கூறினார் கோமதி.

“ முறைப்படி பார்த்தா நான் கூட காவியனுக்கு மாமா முறை தான். “ என்றபடி… அவையில் முன் வந்து நின்றார் அனுராவின் தந்தையும் கோமதியின் உடன்பிறந்த சகோதரருமான கேசவன்.

“ நீங்க என்னோட அண்ணன், நீங்க எப்படி சபையில வந்து மாமன்னு உரிமை கொண்டாடிட்டு உட்கார முடியும்..” என்று தன் தமையனை கோமதி தடுத்திட… “கூட பிறந்தவங்க மட்டும் தான் அண்ணன் தம்பின்னு இல்ல, உறவா ஏத்துக்கிட்ட எல்லாருமே அண்ணன் தம்பி தான். என் அப்பா உங்களை மட்டும் இல்ல காவியனோட அம்மா இளவேனி அத்தையையும் அவரோட சொந்த தங்கச்சியா தான் நினைக்கிறாரு, அதனால சபையில் உட்கார அவருக்கு எல்லா அதிகாரமும் இருக்கு.” என்று தனது மாமியாரின் வார்த்தையை மறுத்துரைத்து தன் தந்தையை மேடை ஏற்றி உரிமையாய் அமரச் செய்தாள் அனுரா.

“உன் மனசு யாருக்கும் வராது, ரொம்ப நன்றிம்மா… நான் முன்ன நின்னும் என் பேரன் அனாதையா நிக்கிற மாதிரி ரொம்ப கஷ்டமா இருந்தது. இப்பதான் மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கு“ என்று நெகிழ்ச்சியுடன் நிலவேந்தன் கூறிட…” காவியன் எனக்கு செஞ்சதுக்கு முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமே இல்ல தாத்தா, நீங்க கவலைப்படாதீங்க அப்படியெல்லாம் காவியணை கைவிட்டுடமாட்டோம்..” என்று பெருந்தன்மையாய் கூறினாள் அனுரா.

மணமகனின் தாய்மாமன் முறையில் .. அனுராவின் தந்தை வந்து அமர்ந்து விட.., “பொண்ணோட தாய் மாமா எங்க?, சீக்கிரம் சபையில வந்து உட்கார சொல்லுங்கப்பா,நல்ல நேரம் முடியறதுக்குள்ள நிச்சயத் தட்டை மாத்தணும்” என்று மீண்டும் குரல் கொடுத்தார் வயதில் மூத்த உறவினர்.

“ கல்யாணமானக் கையோட எந்த ஒட்டும் இல்ல உறவும் இல்லன்னு என் அண்ணி வீட்டு ஆளுங்க எல்லாம் அவங்கள ஒதுக்கி வச்சுட்டாங்களே!, இப்போ திடீர்னு தாய் மாமன் வேணும்னா அவங்க எங்க போவாங்க?, ரெடிமேடா கொண்டுவர தாய் மாமன என்ன துணிக்கடையிலையா தொங்கவிட்டுருக்காங்க…” என்று குத்தலாய் கூறினார் காந்திமதி.

என்ன பதில் பேசுவது என்ற புரியாத தவிப்புடன் காசிநாதன் மற்றும் கண்மணி தம்பதியினர் தலை கவர்ந்து நின்று இருக்க அவர்களுக்கு உதவும் பொருட்டு அவசரமாய் முன் வந்த கதிர்வேந்தன், “உறவுமுறைப்படி பார்த்தா நீ எனக்கு தங்கச்சி முறை தானம்மா, நானே தாய் மாமனா உட்கார்ந்து தட்டை மாத்திக்கிறேன்” என்றார்.

“அது எப்படிங்க முடியும், நீங்க மாப்பிள்ளை வீடு, நீங்க எப்படி பொண்ணு வீட்டுக்காக போய் உட்கார முடியும்?..” என்று தன் கணவனிடம் மல்லுக்கு நின்றார் கோமதி.

“ நம்ம பையனோட கல்யாணத்துல பையனுக்கு தாய் மாமனா அனுராவோட அப்பா தான இருந்தாரு, அது மாதிரி தான் இதுவும். “என்று மனைவியை அடக்கியவர் சபையில் வந்து அமர்ந்தார்.

“அப்புறம் என்னப்பா ரெண்டு வீட்டு தாய் மாமன்களும் வந்தாச்சு.. பத்திரிகையை வாசிச்சு நிச்சய தாம்பூலத்த மாத்திக்கோங்க..” என்று ஒருவர் குரல் கொடுக்க.. அதன்படி இன்னார் வீட்டு மகளை இன்னார் வீட்டு மகனுக்கு திருமணம் செய்ய இரு வீட்டு பெரியவர்களும் ஒருமனதாய் முடிவெடுத்துள்ளதாக அறிவித்து நிச்சயதாம்பூல தட்டை மாற்றிக் கொண்டனர்.

மணமகளை மேடைக்கு அழைத்து பெண்ணின் தாய்மாமன் மாலை அணிவித்து… நிச்சய புடவையை அவள் கையில் வழங்கிட… தன் உள்ளத்தில் மன்றிக்கிடக்கும் விருப்பமின்மையை மறைத்துக்கொண்டு இன்முகமாய் அதனை பெற்றுக் கொண்டாள் மதுரிமா.

“சீக்கிரம் போய் இந்த புடவையை மாத்திட்டு வாம்மா…” என்று கண்மணி கூறிட… அதற்கும் சம்மதமாய் தலையை செய்து மெதுவாய் அங்கிருந்து நகர்ந்தவள், அவளுடன் இணைந்து அறைக்குள் நுழைய முயன்ற மற்ற உறவு பெண்களை வெளியிலேயே காத்திருக்கும் படி அறிவுறுத்திவிட்டு தனது ஆருயிர் தோழி சரிகாவை மட்டும் தன்னுடன் அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள் மதுரிமா.

“நிச்சயமே முடிஞ்சிடுச்சு.. இப்போ வரைக்கும் அவர் எதுவும் செய்யல, எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு தெரிஞ்சும் எந்த தைரியத்துல கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருக்காரு. மிடில் கிளாஸ் பொண்ணு தானே கழுத்துல தாலி கட்டிட்டா வேற வழியே இல்லாம எல்லாத்தையும் சகித்துக்கொண்டு அவர் கூட வாழ்ந்துடுவேன்னு நினைக்கிறாரா?, “என்று கோபமாய் உரைத்து தனது கழுத்தில் இருந்த மாலையை அவிழ்த்து அறையின் மூலையில் வீசி எறிந்தாள் மதுரிமா.

தோழியின் விசித்திர செயலைக் கண்டு மிரண்டு நின்ற சரிகா..”என்னாச்சுடி உனக்கு ஏன் இப்படி பைத்தியம் மாதிரி பிகேவ் பண்ற?, ” என்று அதட்டிட…. “ஆமா பைத்தியம் தான் பிடிச்சிருச்சு. “என்று வெறி பிடித்தவள் போல்.. நிச்சய புடவையை கையில் எடுத்து அதனையும் வீசி எறிய முற்பட…”இங்க பாரு பிடிக்காத விஷயத்தை ஏத்துக்க முடியாது தான், உன்னோட சிச்சுவேஷனை என்னால புரிஞ்சிக்க முடியுது. கொஞ்சம் பொறுமையா இரு, நீ இங்க இருந்து கிளம்பி போறதுக்கு வேண்டிய எல்லா ஏற்பாட்டையும் நான் பண்ணிட்டேன். இப்போ உன் மேல யாருக்காவது கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் போதும் நாம போட்டு வைச்ச திட்டமெல்லாம் வேஸ்ட்டா போயிடும். இந்த நிச்சயம் முடியட்டும்… அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியா இரு. ” என்று தன் தோழியை அமைதி அடைச் செய்தாள் சரிகா.

தோழியின் அறிவுரையை ஏற்று அமைதி கொண்டவள், நிச்சய புடவையை மாற்றிக் கொண்டு மனம் மேடைக்கு வந்து சேர்ந்தாள்.

பெண்ணவள் வருகைக்காகவே காத்திருந்தது போல்… மலர்ந்த புன்னகையுடன் மண மேடையில் நின்றிருந்த காவியன், மதுரிமாவைக் கண்டதும்… அழகாய் புன்னகைத்து, ஒரு கரம் நீட்டி ஆர்வமாய் வரவேற்க, காவியன் நீட்டிய கரத்தை அவமதித்து.. அவனை நிமிர்ந்தும் பாராமல்.. அலட்சிய தோரணையுடன் அவன் அருகில் சென்று நின்றாள் மதுரிமா.

மதுவின் அவமதிப்பை எதிர்பார்த்து இருந்த காவியன்.. அதை பெரிது படுத்தாது.. தன் தாத்தாவின் முகம் நோக்க அவரோ எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் எனும் முகபாவனையுடன் கையசைத்து ஆறுதல் கூறினார்.

மணமேடையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஊமை நாடகம் எதையும் கண்டு கொள்ளாத அனுரா, மணமகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வைரம் பதித்த தங்கக் கணையாழியை காவியன் கையில் கொடுத்து… ” மதுவுக்கு போட்டு விடுங்க கொழுந்தனாரே!” என்றாள்.

மீண்டும் ஒருமுறை தன் தாத்தாவை திரும்பிப் பார்த்த காவியன்.. தயக்கத்துடன் கணையாழியை பெற்றுக் கொண்டு மதுரிமாவின் இடக்கரம் பற்றி இனி இவள் என்னவள் என்று அறிவிக்கும் விதமாய் கணையாழியை கண்ணியவள் விரலில் சூட்டினான்.

 

Advertisement