24….

உயிரைக்

கொல்லாமல் கொள்ளும்

சாபத்தால்

தத்தளிக்கிறேன்

நானடி..

உயிர் காதலால்

என்னை மீட்டெடுப்பாயோ

நீயடி..

தேகம் உருத்தாத பட்டு வஸ்திரம் போர்த்திய மஞ்சத்தில் உறக்கமின்றி புரண்டு கொண்டிருந்தான் கீர்த்தி வர்ம தேசிங்கன்.

சில மாதங்களாய் தன் மக்களை அச்சுறுத்துக் கொண்டிருந்த கயவனை அடையாளம் கண்டு கொண்டு மரண தண்டனை விதித்ததால் இனி தன் ராஜ்யத்தின் மக்களுக்கு எந்த இன்னலும் நேராது என்று மனம் நிம்மதி கொள்வதற்கு பதிலாக ஏனோ சஞ்சலத்தில் சிதறிக் கொண்டிருந்தது.

இமை மூடி மஞ்சத்தில் சரிந்து உறக்கத்தை இழுத்துப் பிடிக்க கீர்த்தி வர்ம தேசிங்கன் முயற்சிக்க.. உறக்கம் வருவதற்கு பதிலாக, ” என் காதலுக்காக.. பெரும் தவறை நிகழ்த்தி விட்டேன். நான் செய்தது தவறு தான், இருப்பினும் அத் தவறை புரிவதற்கு சரியான காரணம் உள்ளது, என் தரப்பு நியாயத்தை விளக்கிக் கூற அவகாசம் வழங்கு நண்பா” என்று வேண்டி நின்றவனை சற்றும் மதியாது… “ யாரங்கே!,உடனே இவனை கைது செய்யுங்கள், பலரின் உயிரை பறித்த இக் கயவன் துடி துடித்து மடிய வேண்டும், இன்றிரவே இவனை பொதுமக்கள் முன்னிலையில் கழுவேற்றிற்றிட உத்தரவு பிறப்பிக்கிறேன்” என்று மன்னனாய் நீதி வழங்கினான் கீர்த்தி வர்மன்.

காவலர்கள் கரம் பற்றி இழுத்துச் சென்ற வேளையிலும்,“ உன் ஆருயிர் நண்பனுக்காக மனமிறங்கி மன்னித்து காத்தருள்வாய் தேசிங்கா. உன் மனம் கவர்ந்த வெண்புறாப் பெண் யார் எனும் ரகசியம் அறிந்தவன் நான் மட்டுமே!, என்னை மன்னித்து உயிர் வாழ அனுமதித்தால் அவள் யாரென்று உனக்கு அடையாளம் காட்டுவேன்! ” என்று காந்தாரன் கூறிட… “என் சுயநலத்திற்காக நீதியை விலை பேசும் நயவஞ்சகன் என்று என்னை எண்ணினாயா!, என் காதலை நானே தேடிக் கண்டுகொள்வேன், உன் உதவியை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை, அதே போல் நீயும் என்னிடம் கருணையை எதிர்பாராதே!” என்று சற்றும் மனம் இளகாமல் பேசிய கீர்த்தி வர்மனை வெறுப்புடன் பார்த்தபடி விலகி சென்ற காந்தாரன் முகம் மன திரையில் நிறைத்து நின்றது.

‘நயவஞ்சகன் உடன் இருந்தே எத்தகைய கொடும் பாவங்களை புரிந்திருக்கிறான். காந்தாரணுடன் உண்டான நட்பின் காரணமாக அவன் மீது ஏற்பட்ட அதீத நம்பிக்கையின் வெளிப்பாடாக அக்கயவன் இதுவரை செய்து கொண்டிருந்த அநியாயங்களை நான் கண்டுகொள்ளத் தவறிவிட்டேன். என் கவனக் குறைவால் இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானது.. ‘என்று இத்தனை நாட்களாக தன்னுடன் இருந்தவனின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ளாமல் போன தன்னையே எண்ணி நொந்து கொண்ட படி படுக்கையை விட்டு எழுந்து சாளரத்தின் வழி.. மேகத்தின் நடுவினில் மறைந்து விளையாடும் முகிலை வேடிக்கை பார்த்தபடி நின்று இருந்தான் கீர்த்தி வர்ம தேசிங்கன்.

‘அவன் செய்த தவறுக்கான தண்டனை தான் கொடுத்துள்ளேன், இருந்தும் என் மனம் ஏன் சஞ்சலம் கொள்கிறது. நான் அவன் மீது கொண்ட உண்மையான நட்பின் காரணமாய் என் மனம் நிம்மதி இன்றி அலைபாய்கிறதோ!, நண்பனாய் இருப்பினும் தவறு தவறு தானே.. நட்பின் மீது கொண்ட அன்பினால் பாரபட்சம் காட்டினால் நான் எப்படி சிறந்த மன்னனாக என் ராஜ்ஜிய மக்களை காத்தருள முடியும். இல்லை நான் காந்தாரனுக்கு வழங்கியது சரியான தண்டனையே. உடனிருந்தே சூழ்ச்சி செய்து இத்தனை காலம் என்னை ஏய்த்ததற்கு இதைவிட கொடிய தண்டனை கொடுத்திருக்க வேண்டும். என் செயல் சரி எனும் போது, இந்த சஞ்சலம் எதற்காக? ஒருவேளை என் உயிர்க் காதலை இன்னும் கண்டு கொள்ளாததால் என் மனம் அமைதியின்றி தவிக்கின்றதோ! ஆம் நிச்சயமாக என் அது மட்டுமே என் சஞ்சலத்தின் காரணமாக இருக்க முடியும், என் காதலியை கண்டு கொண்டால் காலப்போக்கில் இந்தச் சஞ்சலம் காணமல் போகும் ‘என்று தன் மன அமைதியின்மைக்காண தனக்குள்ளேயே விவாதித்துக் கொண்டான் கீர்த்தி வர்மன்.

குளிரின் தாக்கமோ!, இல்லை மனம் கொண்ட தவிப்பின் வெளிப்பாடோ கீர்த்தி வர்மனுக்கு நா வறண்டு போனது..

மஞ்சத்தின் அருகில் இருந்த தண்ணீர் குவளையை எடுத்து முழுதாய் பருகி முடித்த பின்பும்.. அவன் தாகம் தீரவில்லை.. “யாரங்கே!, தாகம் அதிகமாக உள்ளது, உடனே பருக நீர் கொண்டு வாருங்கள்..” என்று அறையின் வாயிலில் காவலுக்கு நின்றிருந்த காவலாளிக்கு உத்தரவு பிறப்பித்தான் கீர்த்தி வர்ம தேசிங்கன்.

“உத்தரவு அரசே!” என்று பணிவுடன் உரைத்த காவலாளி உடனடியாக நீர் எடுத்து வர அங்கிருந்து ஓடினான்.

மனம் கொண்ட வேதனையின் காரணமாக இரவு உணவை நிராகரித்து வந்தவன் இப்போது இரு மடங்கு பசியுடன் வாடத் துவங்கினான்.

தாகம் ஒருபுறம் அளவில்லா பசி மறுபுறம் என்று கீர்த்தி வர்ம தேசிங்கன் வார்த்தையில் வருணிக்க இயலாத தவிப்புடன் இறை தேடித் திரியும் காட்டரசன் அரிமா போல் அறையை அளந்து கொண்டிருந்தான் நாட்டின் அரசன்.

தாகத்திற்கு தண்ணீர் எடுத்து வர சென்ற பணியாள் கையில் நீர் குவளையுடன் அறைக்கு திரும்பினான்.

இறையை தேடி அலையும் மிருகம் போல்.. அமைதி இன்றி அலைந்து கொண்டிருந்த அரசனை கண்டு அச்சத்துடன்..”அரசே!, தங்கள் தாகத்திற்கு நீர் எடுத்து வந்துள்ளேன். இதோ இதை பருகுங்கள்”என்று கையில் இருந்த நீர் குவளையை மன்னரிடம் கொடுத்தான்.

அதீத தாகத்துடன் இருந்தவன் கையில் கிட்டிய நீர் குவளையை அடுத்த நொடியே தீர்த்து முடித்தான். அப்போதும் தாகம் தீராத உணர்வுடன்..”இல்லை எனக்கு இன்னும் தாகம் தீரவில்லை, அளவில்லா பசியும் சேர்த்து என்னை வாட்டுகிறது, விரைவாக சென்று பூசிக்க ஏதாவது எடுத்து வரச் சொல்” என்று அளவில்லா கோபத்துடன் கர்ஜித்தான் கீர்த்தி வர்ம தேசிங்கன்.

“இதோ உடனே செல்கிறேன் அரசே!” என்று பணிவுடன் வணங்கி விட்டு அங்கிருந்து விரைந்து ஓடினான் பணியாள்.

சற்று நேரத்தில் பலவகை பழங்கள் நிறைந்த பல கூடைகளை கையில் ஏந்தியபடி சில சேவகர்கள் அங்கு வந்து சேர்ந்தனர்.

மஞ்சம் தவிர்த்து… அமைதி இழந்து தரையில் அமர்ந்திருந்த அரசனைக் கண்டு குழப்பமும் தவிப்பமாய் செய்வது அறியாது திகைத்து நின்றனர் வந்திருந்த சேவகர்கள்.

“என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றீர், எனக்கு பசிக்கிறது என்றது உங்கள் காதில் விழவில்லை, உடனே புசிக்க ஏதாவது கொடுங்கள்..”என்று பரபரத்தான் கீர்த்தி வர்மன்.

அரசனின் அவசரத்தை புரிந்து கொண்ட சேவகர்கள் குறு வாள் கொண்டு பழங்களை கூறு போட… அதில் ஒருவன் கையில் காயம் ஏற்பட்டு இரத்தம் சொட்டத் துவங்கியது.

அதுவரை பசியிலும் தாகத்திலும் நாவறண்டு கிடந்தவனுக்கு பணியாளின் சொட்டும் உதிரத்தை கண்டதும் நாக்கில் நீர் சுரந்தது.

உள்ளுக்குள் பசியின் வேகம் அதிகரித்தது…” விரைவாக புசிக்க கொடுங்கள்..” என்று அரக்கத் தன்மையுடன் அலற துவங்கினான் கீர்த்திவர்மன்.

எப்போதும் கணியுடன் பேசும் அரசனிடம் உண்டான மாற்றத்தை எண்ணி குழம்பியபடி…. பழத்தின் துண்டுகளை சேவகர்கள் நீட்டிட.. அவசரமாய் அதை இரு கைகளாலும் பறித்துக் கொண்டு வேக வேகமாய் உண்ணத் துவங்கினான் கீர்த்திவர்மன்.

பழங்களை புசித்த அடுத்த நொடியே நெருப்பிலிட்ட புழுபோல் துடிதுடிக்க துவங்கினான் கீர்த்திவர்மன்.

தேகம் எங்கும் அக்கினி பரவியது போல்..”எரிகிறதே என் தேகம் எரிகிறதே என்று ஆவேசத்துடன் அலறத் துவங்கினான் கீர்த்தி வர்மன்.

மன்னரின் விசித்திர செயலின் காரணம் புரியாமல் ஒதுங்கி நின்ற சேவகர்களில் கையில் காயத்துடன் இருந்தவனை அரக்கத் தனத்துடன் நெருங்கியவன், எவரும் சற்றும் எதிர்பாராத விதமாய் சேவகனின் கையில் ஏற்பட்டிருந்த காயத்தில் படிந்திருந்த ரத்தத்தை உறிஞ்சிக் குடித்தான்.

மேலும் மேலும் ரத்த தாகம் ஏற்பட.. தன்னை சுற்றி இருந்த சேவகர்களின்… தேகத்தில் ஓடும் சூடான உதிரத்தை பருகிக் குடித்திட வேண்டும் என்ற வெறி அவனுள் ஏற்பட்டது.

தன் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை எண்ணி மிரண்டு போனவன்… தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளும் வழி அறியாது, தன்னை எண்ணியே நொந்தபடி ஆவேசத்துடன். “உடனே இங்கிருந்து செல்லுங்கள், எவரும் என் கண் பார்வையில் நிற்கக்கூடாது. ” என்று உத்தரவு பிறப்பித்து.. ரத்த வெறி கொண்டு உதிரம் பருகத் துடிக்கும் தன்னிடம் இருந்து சேவகர்களை காக்கும் பொருட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தான் கீர்த்தி வர்மன்.

சில உதிரத் துளிகள் உள்ளுக்குள் சென்றதும் உடல் கொண்ட உஷ்ணம் தனிந்திட… அப்படியே மயங்கி சரிந்து கீழே விழுந்தான் கீர்த்தி வர்மன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ரத்த தானம் கொடுக்கும் முன்பு மேற்கொள்ள வேண்டிய சோதனைகள்

வயது (18-55), எடை(45கி)லோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவர் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச்சோதனைகள் அவசியம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~