23….
கொஞ்சல் மொழியில்
என்னை கிறங்க செய்கிறாய்
நீயடி…..
கொஞ்சம் கொஞ்சமாய் உன்னிடம் நெருங்கிக் கொண்டிருக்கின்றேன் நானடி…
பல அறைகள் கொண்ட அந்த பங்களாவின் கீழ்தளத்தில் ஒரு பகுதி முழுவதுமாய் சுஹனிக்காக ஒதுக்கப்பட்டு அவளது உடமைகள் அவ்விடத்தில் சேர்க்கப்பட்டது.
பல வருடமாக வீட்டில் இருப்பவர்களுக்கு பசியாற்றிக் கொண்டிருந்த மஞ்சு சுஹனியை இரு மடங்கு பரிவுடன் கவனித்துக் கொண்டார்.
அவள் விரும்பும் உணவு வகைகளை முகம் சுளிக்காமல் செய்து கொடுத்து கூடவே நின்று பரிமாறி பசியாற செய்தார்.
அன்னையை இழந்த பெண்ணுக்கு, அன்னையின் மறு உருவாய் பரிவு காட்டிய மஞ்சுவை மிகவும் பிடித்துப் போனது.. மஞ்சு அம்மாவின் சின்ன சின்ன வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ள துவங்கினாள்.
சமையல் வேலை முடிந்து வீட்டின் பகுதிகளை மஞ்சு அம்மா சுத்தம் செய்ய.. அவருடன் பேச்சு கொடுத்தபடி உதவி செய்து கொண்டிருந்தாள் சுஹனி.
“உனக்கு எதுக்கு மா வீண் சிரமம், ஏற்கனவே உனக்கு உடம்பு சரியில்லாம போய் ஹாஸ்பிடல்ல சேர்த்திருந்தாங்கலாமே, சித்து தம்பி சொல்லுச்சு, நீ போய் உன் ரூம்ல ரெஸ்ட் எடும்மா”என்று கனிவுடன் கூறினார் மஞ்சு.
“அதெல்லாம் எனக்கு ஒன்னும் இல்ல மஞ்சுமா.. சின்ன காயம் தான் அதுக்கு போய் ஹாஸ்பிடல்ல படுக்க வச்சு ட்ரிப்ஸ் ஏத்திட்டாரு உங்க கீர்த்தன் பாஸ். நவ் ஐ அம் ஆல்ரைட்.. நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்” என்று மஞ்சுவின் வார்த்தையை ஏற்க மறுத்து மீண்டும் அவருக்கு உதவியாய் வீட்டில் அங்கங்கு இருந்த அலங்கார பொருட்களை சுத்தம் செய்யத் துவங்கினாள் சுஹனி.
“கீர்த்தன் தம்பி எப்பவும் அப்படித் தான் எல்லார் கிட்டயும் அன்பா அக்கறையா இருக்கும். அப்படியே பெரிய அய்யா மாதிரி”என்று தன் முதலாளியின் பெருமையை பேசினார் மஞ்சு.
“ஆமா மஞ்சுமா நானும் இங்க வந்ததுல இருந்து பாத்துட்டு இருக்கேன், நாள் கிழமை பார்க்காம நான்-வெஜ் தான் சமைக்கிறீங்க ஏன்?” என்று ஆர்வத்துடன் வினவினாள் சுஹனி.
” கீர்த்தன் தம்பிக்கு வெஜ் சாப்பாடே ஆகாது, என்னைக்காவது தான் வீட்ல சாப்பிடும்.. ஆனா அதுவும் அசைவம் தான் சாப்பிடும் . அதனால கீர்த்தன் தம்பிக்கு மட்டும் தினமும் அசைவம் செஞ்சிட்டு, எனக்கும் சித்தேஷ் தம்பிக்கு தனியா சைவம் சமைப்பேன்.” என்றார் மஞ்சு.
“கீர்த்தனை பத்தி ரொம்ப நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கீங்களே! இது கீர்த்தனோட தாத்தா கட்டின வீடு தானே, அப்போ நீங்க அவர் தாத்தா காலத்துல இருந்தே இங்க வேலை பாக்குறீங்களா?” என்றாள் சுஹனி.
“நான் இல்ல என் அப்பா தான் பெரிய ஐயா கிட்ட வேலை பார்த்தாரு. வீட்டுக்கு வேலைக்கு வரவங்கள அடிமையா நடத்துற ஒரு சிலருக்கு மத்தியில பெரியய்யா என் அப்பாவை அவர் வீட்ல ஒருத்தரா பாத்துக்கிட்டாரு. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம் பண்ணி வச்சதே பெரிய ஐயா தான். “என்றார் மஞ்சு.
“ஓ அப்போ நீங்க கீர்த்தனோட பாட்டி அப்பா அம்மா எல்லாரையும் பார்த்து இருப்பீங்கல..”என்று ஆர்வத்துடன் சுஹனி வினவ..”இல்லம்மா நான் பார்த்ததில்லை.. ஒருவேளை பெரிய ஐயாவோட சம்சாரத்தை என் அப்பா பார்த்து இருக்கலாம். ஆனா அவரும் பெரிய ஐயாவை பத்தி நிறைய சொல்லி இருக்கிறாரே தவிர அவரோட சம்சாரத்தை பத்தி ஒண்ணுமே சொன்னது இல்ல. “என்று புதிர் போட்டார் மஞ்சு.
” யாருக்குமே கீர்த்தனோட பாட்டிய பத்தியோ அப்பா அம்மாவ பத்தியோ ஒன்னுமே தெரியலையே ஏன்?, ” என்று குழப்பத்துடன் சுஹனி வினவ…
“அது சரியா தெரியலமா.. இந்த வீட்டை கட்ட ஆரம்பிக்கும் போது கட்டட வேலைக்கு தான் என் அப்பா வந்தாரு. அதுக்கப்புறம் பெரிய ஐயாவே என் அப்பாவுக்கு வேலை போட்டு கொடுத்து அவர் கூடவே வச்சுக்கிட்டாரு. அந்த நேரத்துல பெரிய ஐயாவுக்கு கல்யாணம் ஆன மாதிரி தெரியல.. நான் பிறந்து ரெண்டு மூணு வருஷம் பெரிய ஐயா இங்க தான் இருந்தாரு.. அப்பா வரைக்கும் அவருக்கு கல்யாணமானதுக்கான எந்த அடையாளமும் இல்லை, அதுக்கப்புறம் அவர் பேருல இருந்த சொத்தை எல்லாம் அனாத ஆசிரமத்து பேர்ல எழுதி வச்சிட்டு, எங்க போறேன் ஏன் போறேன்னு எதுவுமே சொல்லாம.. திடீர்னு ஒரு நாள் இங்க இருந்து கிளம்பி போயிட்டாரு. இங்க இருந்து போறதுக்கு ஒரு நாலு நாளைக்கு முன்னாடி என் அப்பாவை தனியா கூப்பிட்டு.. இந்த பங்களா மட்டும் என்னைக்கும் என் பேருல தான் இருக்கும்… இன்னும் சில வருஷம் கழிச்சு என் பையனோ, பேரனோ இங்க வருவாங்க, அப்படி யார் வந்தாலும் அவங்கள நல்லா பாத்துக்க வேண்டியது உன் பொறுப்புன்னு சொல்லிட்டு இந்த வீட்டை என் அப்பா பொறுப்புல விட்டுட்டு போயிட்டாரு. பெரியய்யா சொல்லிட்டு போன மாதிரியே பத்து வருஷத்துக்கு முன்னாடி.. கீர்த்தன் தம்பி இங்க வந்துச்சு. நானும் அன்னைக்கு இருந்து தம்பிக்காக வேலை பார்த்துட்டு இருக்கேன்” என்றார் மஞ்சு.
“கீர்த்தனோட தாத்தா இங்க இருந்து போகும் போது நீங்க சின்ன குழந்தைன்னு சொன்னீங்க, அப்போ உங்களுக்கு அந்த பெரியவரை ஞாபகம் இருக்க வாய்ப்பு இல்ல , அப்படி இருக்கும்போது வந்தது தேசிங்கன் ஐயாவோட பேரன் தான்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?” என்று சந்தேகமாய் வினவினாள் சுஹனி.
“என்னம்மா இப்படி கேட்டுட்ட… என் கூட வா”என்று சுஹனியின் கைப்பற்றி தன்னுடன் அழைத்துச் சென்றவர் தனது அறையில் தன் உடைமைகளுடன் பத்திரப்படுத்தி வைத்த தன் தந்தை மற்றும் கீர்த்தனின் தாத்தா என்று கூறப்படும் தேசிங்கன் ஒன்றாய் இருக்கும் புகைப்படத்தை எடுத்து காட்டினார்.
“இங்க பாரு இது 1962 ல இந்த வீட்டை கட்டி முடிக்கும் போது எடுத்த போட்டோ.. என் அப்பா பக்கத்துல இருக்குறது தான் பெரிய ஐயா. அப்போ அவருக்கு முப்பது வயசுக்குள்ள தான் இருக்கும்னு அப்பா சொல்லி இருக்காரு. கீர்த்தன் தம்பி அப்படியே அவர் தாத்தா ஜாடையிலேயே இருக்கு பாரு, இதுக்கு மேல வேற என்ன ஆதாரம் வேண்டியதிருக்கு.. “என்றார் மஞ்சு.
“அட ஆமா அப்படியே அச்சு அசலா ஒரே மாதிரி இருக்காங்க, கீர்த்தன் அப்படியே அவன் தாத்தாவோட ஜெராக்ஸ் தான். காஸ்ட்யூம் ஹேர் ஸ்டைல் தான் சேஞ்ச் ஆயிருக்கு.”என்று வியப்புடன் கூறியபடி மீண்டும் கையில் இருந்த புகைப்படத்தை உற்று நோக்கினாள் சுஹனி.
“இத பாத்தா கீர்த்தனு தான் மாறு வேஷம் போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்த மாதிரி இருக்கு. ரெண்டு பேருக்கும் கொஞ்சம் கூட வித்தியாசமே இல்ல..”என்று சிரித்துக் கொண்டு நின்றிருந்தவளை ஏக்கமாய் பார்த்து நின்றார் மஞ்சு.
அவர் முகத்தை நிமிர்ந்தும் பாராமல்..”ஆமா மஞ்சுமா உங்கள பத்தி ஒன்னும் சொல்லலையே, உங்களுக்கு எத்தனை பசங்க, இப்போ எங்க இருக்காங்க.. ?” என்றாள் சுஹனி.
” அப்பாவுக்கு ஒரே பொண்ணுமா. பெரிய ஐயாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாத்தணும்னு வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சம்மதிக்கிறவங்களுக்கு தான் பொண்ணு கொடுப்பேன்னு எங்க அப்பா பிடிவாதமா சொல்லிட்டாரு. எல்லாத்துக்கும் சரின்னு சொல்லிட்டு ஒரு மனுஷன் வந்தாரு.. குடி குடின்னு குடிச்சே அழிஞ்சு போயிட்டாரு. ஒரு வழியா பொண்ணையும் பையனையும் கட்டிக் கொடுத்துட்டு இங்கேயே நான் தங்கிட்டேன்.” என்றார் மஞ்சு.
“உங்கள மாதிரி நம்பிக்கையான ஆள் கிடைக்க கீர்த்தன் கொடுத்து வச்சிருக்கணும்..” என்று பெருமையாக பேசினாள் சுஹனி.
“அதுதான் என் கவலையும் எனக்கு அடுத்து தம்பிக்கு யாரு இருக்கா,?” என்று சோகமாய் கூறியவர், சில நொடி தயங்கி பின் மெதுவாய், “பாக்க நல்ல பொண்ணா தெரியுற.. சகஜமா பழகுற ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே..” என்றார் மஞ்சு.
“என்கிட்ட இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கும் பெர்மிஷன் கேட்டு பேசினா தான் தப்பா எடுத்துக்குவேன்.. என்னை உங்க பொண்ணு மாதிரி நினைச்சுக்கோங்கன்னு சொல்லி இருக்கேனா இல்லையா?, இப்போ இப்படி யார்கிட்டயோ பேசுற மாதிரி பேசினா என்ன அர்த்தம்?” என்று உரிமையுடன் கோபம் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் சுஹனி.
வயது ஏற்றத்தால் தோல் சுருங்கிய கை கொண்டு தன்னைப் பாராது திரும்பி இருந்த முகத்தை… பாசமாய் திருப்பிய மஞ்சு..” கோபம் கூட அப்படியே கீர்த்தன் தம்பி மாதிரி…” என்று பூரித்துப் போனார்.
ஏனோ தன்னையும் கீர்த்தனையும் ஒப்பிட்டு பேசுவதிலேயே உவகை கொண்ட சுஹனி.. முகம் மலர்ந்த புன்னகையுடன்..”என்னமோ கேட்கணும்னு சொன்னீங்களே!, தப்பா எடுத்துக்க மாட்டேன் தாராளமா கேளுங்க அம்மா..” என்று மஞ்சு கேட்க நினைத்ததை நினைவு படுத்தினாள் சுஹனி.
“நீ கீர்த்தன் தம்பியை கல்யாணம் பண்ணிக்கிறியா?, ” என்று தயங்கி தயங்கி கேட்டார் மஞ்சு.
பெண்ணவள் மனதின் விருப்பத்தை பெரியவர் வாய்மூலம் உரைக்க… வெட்கம் கொண்டு தலை தாழ்த்திக் கொண்டாள் சுஹனி.
பதில் எதுவும் கூறாமல் தலை தாழ்த்திக் கொண்டவள் வெட்கத்தை தவறாக புரிந்து கொண்ட மஞ்சு, ” உங்களுக்கு நடுவுல எதுவும் இல்லைன்னு… கீர்த்தன் தம்பி சொல்லுச்சு, இருந்தாலும் என் மனசு கேட்கல.. உன்னை மாதிரி ஒரு பொண்ணு எங்க கீர்த்தன் தம்பி வாழ்க்கைக்குள்ள வந்தா நல்லா இருக்கும்னு யோசிச்சேன், அதனால தான் மனசு கேட்காம கேட்டுட்டேன். நான் கேட்டது தப்பா இருந்தா என்னை மன்னிச்சுக்கம்மா”என்று பயமும் பதற்றுமுமாய் மன்னிப்பு வேண்டினார்.
‘இவங்க கிட்டயும் ஒன்னும் இல்லன்னு சொல்லி வச்சிருக்கான் அந்த அக்மா.. ஒன்னும் இல்லன்னா என்னை எப்படியோ போகட்டும் விட வேண்டியது தான எதுக்கு இங்க கூட்டிட்டு வந்து பாதுகாக்கணும்’என்று உள்ளுக்குள் புகைந்து கொண்டவள்.. உள்ளத்தின் புகைச்சலை மறைக்காமல் முகத்தில் காட்டியபடி..”அவன் ஒன்னும் இல்லன்னு சொன்னா எங்களுக்கு நடுவுல ஒன்னும் இல்லன்னு ஆயிடுமா மஞ்சுமா. சரி நீங்க இங்க எத்தனை வருஷமா வேலை பாக்குறீங்க?” என்று சம்பந்தமில்லாமல் கேள்வி எழுப்பினாள் சுஹனி.
“என்னம்மா இப்படி கேக்குற இப்ப தானே நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்க தான்னு சொன்னேன். ” என்று குழப்பமாய் கூறினார் மஞ்சு.
“கீர்த்தனை எத்தனை வருஷமா தெரியும்?” என்று மீண்டும் வினவ…
“பத்து வருஷத்துக்கு மேல இருக்கும் மா, ஏன் கேக்குற?” என்று பதில் தந்து பதிலுக்கு கேள்வி வினவினார் மஞ்சு…
“இந்த பத்து வருஷத்துல உங்க கீர்த்தன் தம்பி எத்தனை பொண்ணுங்க கூட பழகி பார்த்து இருக்கீங்க?.. வேற எந்த பொண்ணுக்காகவும் இப்படி ஊர் விட்டு ஊரு போய் ஹெல்ப் பண்ணி இருக்காரா?, இல்ல என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்த மாதிரி வேற எந்த பொண்ணையும் கூட்டிட்டு வந்து அடைக்கலம் கொடுத்திருக்காரா?, இதுல இருந்து உங்களுக்கு தெரிய வேணாம் எனக்கும் அவருக்கும் நடுவுல ஏதோ இருக்குன்னு. அவர் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டா எதுவுமே இல்லாம போயிடுமா!, “என்று படபடவென்று பொரிந்து தள்ளினாள் சுஹனி.”ரொம்ப சந்தோஷமா அப்போ இனி கீர்த்தன் தம்பி தனியாள்
இல்ல, இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு.. “என்று நிம்மதியுடன் பெருமூச்சை வெளியேற்றியவர் சுஹனிக்கு பின் கோபமாய் முறைத்தபடி நின்றிருந்த கீர்த்தனை கண்டு… கொஞ்சம் திகைத்தும்.. அதிகம் மிரண்டும் போனார் மஞ்சு.
” தம்பி நீங்களா?, நீங்க எப்போ வந்தீங்க?,” என்று தடுமாற்றத்துடன் பேசினார் மஞ்சு.
“நீங்க என் கல்யாணத்தை பத்தி பேசும்போதே வந்துட்டேன், ” என்று கோபமாய் துவங்கியவன், என்ன நினைத்தானோ சட்டு என்று குரலை தனித்து…”என் கல்யாணத்தை பத்தி யோசிக்காதீங்கன்னு நான் பல தடவை சொல்லிட்டேன். மறுபடியும் அதை பத்தியே பேசிட்டு இருந்தா என்ன அர்த்தம் மஞ்சு மா… அந்த பொண்ணு தான் சின்ன பொண்ணு ஏதோ புரியாம பேசுது, என்னை நல்லா புரிஞ்சுகிட்ட நீங்களும் இப்படி பேசுறது நல்லாவா இருக்கு. போங்க போய் கிச்சன்ல ஏதாவது வேலை இருந்தா பாருங்க..”என்று தன்னிடம் வெகுகாலமாக விசுவாசமாய் பணி புரியும் பணியாளை அங்கிருந்து அனுப்பி வைத்துவிட்டு சுஹனி அருகில் வந்தவன்,” உன் அத்தை பையனை பத்தி விசாரிச்சேன். இப்போ ஹாஸ்பிடல்ல அட்மிட்டாகி இருக்கான். சீக்கிரமே நார்மல் ஆகி உன்னை தேடி வருவான். அவனுக்கும் உனக்கும் இருக்கிற பிரச்சனை தீர்ந்ததும் உன்னை நானே இங்கிருந்து அனுப்பி வச்சிருவேன். இதுதான் நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்குற ரிலேஷன்ஷிப். ஏற்கனவே சொன்னது தான் திரும்பவும் சொல்றேன் தேவையில்லாத கற்பனை பண்ணி உன் வாழ்க்கையை கெடுத்துக்காத . நீ நினைக்கிறது என்னைக்கும் நடக்காது. என்னைப் பத்தி சித்தேஷ் கிட்ட விசாரிச்சு இருக்க, இப்போ மஞ்சு அம்மா கிட்டயும் என்னைப் பத்தி தான் பேசிட்டு இருந்த.. உனக்கு என்னைப் பத்தி என்ன தெரியணும்?” என்று கோபமாய் வினவினான் கீர்த்தன்.
“நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கணும் உங்க மனசுல என்னைப் பத்தி என்ன நினைச்சுட்டு இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கணும்” என்று சளைக்காமல் பதில் தந்தாள் சுஹனி.
” நான் யாரு என்ன ஏதுன்னு ஆராய்ச்சி பண்ணாத. அது உனக்கு நல்லது இல்ல” என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்து திரும்பி நடந்தான் கீர்த்தன்.
“ஒரு நிமிஷம்… “என்று முன் சென்றவன் வழியில் குறுக்கிட்டு நின்றவள்..” இந்த உலகத்துக்கிட்ட இருந்து என்ன மறைக்கிறீங்க?, உங்கள பாத்தா நார்மல் மனுஷன் மாதிரி தெரியல உங்களுக்குள்ள ஏதோ ஒரு ரகசியம் இருக்கு.. அது என்ன?” என்றாள் சுஹனி.
“நான் எதை மறக்கணும்னு நினைக்கிறேனோ அதை தான் மறைக்கிறேன். இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்காத..” என்றவன் மீண்டும் முன்னேறிட..”நமக்குள்ள எதுவும் இல்லன்னு ஏன் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருக்கீங்க. இல்லாததை இல்லைன்னு நிரூபிக்க வேண்டிய அவசியமே இல்லையே.” என்று சுஹனி கூறிக் கொண்டே இருக்க.. மின்னல் வேகத்துடன் அவள் அருகில் நெருங்கி சென்றவன்…”எனக்கானவ நீ இல்ல..”என்று கோபமாய் ஒரு விரல் நீட்டி கூறினான் கீர்த்தன்.
நீட்டிய விரலை பற்றி கொண்டு, “அதை நீங்க முடிவு பண்ண கூடாது மிஸ்டர் கீர்த்தன். கடவுள் ஏற்கனவே முடி போட்டு தான் வச்சிருப்பாரு. யாருக்கு யாருன்னு காலம் பதில் சொல்லும் அதுவரைக்கும் நான் பொறுமையா இருக்கேன். நீங்களும் ஒன்னும் இல்ல ஒன்னும் இல்லன்னு சொல்லி ஊர நம்ப வெச்சிட்டே இருங்க”என்று கிண்டலாய்க் கூறி அங்கிருந்து வெளியேறினாள் சுஹனி.
‘இன்னும் என்ன யோசிக்கிற அதான் அந்த பொண்ணு உன்னை பிடிச்சிருக்குன்னு சொல்லாம சொல்லிடுச்சுல, 48 வருஷம் கழிச்சு மறுபடியும் அந்த நாள் வரப்போகுது பேசாம இந்த தடவை இந்த பொண்ணையே பயன்படுத்திக்கலாம்!, ‘ என்று சுஹனியின் வார்த்தையை கேட்ட பின் கீர்த்தனின் ஆழ்மனது மெதுவாய் நச்சரித்தது..
இரு கொல்லி நெருப்பாய், காதல் மனதின் விருப்பப்படி சுஹனியை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், கயமை மனதின் யோசனைப்படி தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளவும் முடியாமல் தடுமாறிப் போனான் கீர்த்தன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிரிக்கப்படுகிறதென்றால்
ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்; இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~