Advertisement

 

23…

திருமணத்திற்கு முதல் நாள் மாலை பூக்கும் வேளையில் ஊர் விட்டு ஊர் வந்து இறங்கிய பெண் வீட்டார்களை மரியாதையுடன் வரவேற்றனர் காவியன் குடும்பத்தினர்.

“வாங்க வாங்க சம்மந்தி…. நேத்தே வந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.” என்று காசிநாதன் தம்பதியினரை வரவேற்ற நிலவேந்தன்..” அப்புறம் இது என்னோட பெரிய பையன், மாப்பிள்ளையோட பெரியப்பா,கதிர்வேந்தன். இது அவனோட மனைவி கோமதி” என்று வந்தவர்களுக்கு தன் மூத்த மகனையும் மருமகளையும் அறிமுகம் செய்து வைத்தார்.

” இவங்கள தான் ஏற்கனவே பார்த்திருக்கோமே, முகூர்த்த புடவை எடுக்க கூட வந்திருந்தாங்கல.. மூத்தவரை இப்ப தான் முதல் தடவையா பார்க்கிறோம். பொண்ணு பாக்க கூட வரலையே!” என்று வரவேற்பை ஏற்றுக் கொண்டதன் வெளிப்பாடாய் புன்னகை செய்தபடி கூறினார் காசிநாதன்.

” சாரி அன்னைக்கு வர முடியல வேற முக்கியமான வேலைல மாட்டிக்கிட்டேன். அப்பாவும் பரத்தும் கல்யாண வேலையில பிஸியா இருந்ததால முழு ஆபீஸ் ஒர்க்கையும் நான் தான் சிங்கிளா ஹேண்டில் பண்ண வேண்டியதா இருந்தது அதனால தான் முகூர்த்த புடவை எடுக்கப் போனப்ப கூட என்னால வர முடியல… ” என்று வருத்தம் தெரிவித்தார் கதிர்வேந்தன்.

” இதுல என்ன இருக்க சம்மந்தி, இப்போ தான் சொந்தம் ஆகிட்டோமே இனி அடிக்கடி பார்த்துக்க வேண்டியது தான். ” என்று உறவுக் கரம் நீட்டினார் காசிநாதன்.

மதுரிமா அருகில் வந்த நிலவேந்தன்…. ” என்னம்மா? எப்படி இருக்க? ஏன் முகம் வாடிப்போய் இருக்கு. டிராவல் பண்ணுனது டயர்டா இருக்கோ?, அதோ அங்க பாரு அதுதான் உன்னோட ரூம்..கொஞ்ச நேரம் அங்க போய் ரெஸ்ட் எடு..” என்றவர் சரி என்று தலை அசைத்து அங்கிருந்து நகர முற்பட்ட மதுவின் கரம் பற்றி தடுத்து, ” தேவையில்லாத விஷயத்தை யோசிச்சு மனசப் போட்டு குழப்பிக்காத, நடக்கிறது எல்லாம் நல்லபடியா நடந்துட்டு இருக்கு, நல்லதே நடக்கும்னு நம்பு, நல்லது தான் நடக்கும்…” என்று சித்தாந்தம் பேசினார்.

‘இவர் என்ன சொல்ல வராரு, எதை நல்லதுன்னு சொல்றாரு. ஒருவேளை காவியன் தாத்தா கிட்ட எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லங்கிற விஷயத்தை சொல்லி இருப்பாரோ, அப்படி சொல்லி இருந்தா கல்யாணத்தை நிறுத்துறத விட்டுட்டு எதுக்கு தேவையில்லாம நல்லது நடக்கும்னு சொல்றாரு’என்று பெரியவரின் வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் தனக்குள்ளேயே குழம்பியவள்..தனது குழப்பத்துக்கான விடையை அவரிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்ற எண்ணத்துடன், “என்ன சொல்றீங்க தாத்தா எனக்கு புரியல?”என்று விளக்கம் கேட்டாள் மதுரிமா.

” அது வந்து மா… புதுசா கல்யாணமாகப் போற பொண்ணுகளுக்கு பொதுவாகவே பொறந்த வீட்டு பிரிய போறோங்கிற பயமும் தயக்கமும் இருக்கும். உன் முகத்திலயும் அந்த பயம் நல்லாவே தெரிஞ்சது. அதான் ஒன்னும் பயப்படாத எல்லாம் நல்லா நடக்கும்னு ஆறுதல் சொன்னேன். கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம வாழ்க்கை எப்படி இருக்குமோ? புகுந்த வீடு எப்படி இருக்குமோன்னு உனக்கு கொஞ்சம் கூட பயம் வேணாம். நீ பொறந்த வீட்டை விட நம்ம வீட்ல ரெண்டு மடங்கு சந்தோஷமா இருப்ப… அதுக்கு இந்தக் கிழவன் கேரண்டி… ” என்று புன்னகையுடன் கூறினார் நிலவேந்தன்.

” ஓ நீங்க அப்படி சொல்றீங்களோ!, நான் கூட வேற என்னமோன்னு நினைச்சேன். ” என்று ஒருவித சோர்வுடன் மதுரிமா கூறிட… அவள் நினைத்தது என்னவாக இருக்கும் என்று ஓரளவு யூகித்த நிலவேந்தன்… அதற்கு மேல அவளை சிந்தனை செய்ய விடுவது நல்லதல்ல என்று புரிந்து… ” பாரு உன் குரலே ரொம்ப சோர்ந்து போய் தெரியுது. ரூம்ல போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னை அலங்காரம் பண்றதுக்காக பார்லர்ல அனு ஏற்பாடு பண்ண ஆளுங்க வந்துருவாங்க அதுக்கப்புறம் உனக்கு நேரமே இருக்காது. வேற எதைப் பத்தியும் யோசிக்காம போய் ரெஸ்ட் எடு”. என்று தன் பேரனுக்கு மனைவியாக போகின்றவளை நிற்க கூட விடாமல் அங்கிருந்து அவசர அவசரமாய் அவளது அறைக்கு அனுப்பி வைத்தார் நிலவேந்தன்.

” மதுக்கு பக்கத்து ரூமை நீங்க எடுத்துக்கோங்க, ஆன்ட்டி… ” என்று பரத் கூறிட, ” அப்புறம் என்னம்மா, இன்னும் எதுக்கு வேடிக்கை பாத்துட்டு நிக்கிறீங்க உங்க ரூமுக்கு போய் நல்லா ரெஸ்ட் எடுங்க” என்று கண்மணியையும் உடன் அனுப்பி வைத்தார் நிலவேந்தன்.

ஒருவித தயக்கத்துடன் தடுமாறியபடி நடந்து சென்ற மதுவை… பார்த்தவர், ‘உனக்கு விருப்பம் இல்லன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் இந்த கல்யாணத்தை நிறுத்தாம நடத்தி வைக்கிறதுக்கு என்னை மன்னிச்சிடுமா. என் பேரன் மேல இருக்குற பாசத்துல ரொம்பவே சுயநலமா யோசிக்கிறேன். எனக்கு வேற வழி தெரியல என் பேரனோட சந்தோஷம் உன் கிட்ட தான் இருக்கு.கண்டிப்பா உனக்கு இந்த கல்யாணம் சந்தோஷத்தை மட்டும் தான் தரும் ‘என்று தனக்குள்ளேயே திருமணம் வேண்டாம் என மறுகிக் கொண்டிருப்பவளிடம் மன்னிப்பு வேண்டினார் நிலவேந்தன்.

” சரி சம்பந்தி அப்புறம் நாங்க கிளம்புறோம் நீங்களும் நேரத்துக்கு கிளம்பி மண்டபத்துக்கு வந்துடுங்க.” என்று காசிநாதனிடம் கூறிய நிலவேந்தன் தனது பேரன் பரத் புறம் திரும்பி..” நீ கூடவே இருந்து இவங்களுக்கு என்ன வேணும்னு பாத்து செஞ்சு குடுத்துட்டு வா” என்று உத்தரவு பிறப்பித்து விட்டு நிலவேந்தன் மற்றும் கதிர்வேந்தன் இருவரும் அங்கிருந்து கிளம்பத் தயாராகினர்.

பெண் வீட்டாரிடம் தனிமையில் பேசிட வாய்ப்பு கிடைத்தால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் தானும் தன் மகனுடன் இருந்து வருவதாக கூறினார் கோமதி.

கோமதி பின்வருவதாக சொன்னதும் சற்று சுதாரித்த நிலவேந்தன் பரத்தை மட்டும் தனியே அழைத்து… ” உன் அம்மா மேல ஒரு கண்ணு இருக்கட்டும் பரத். ” என்று எச்சரித்திட, கதிர்வேந்தனோ தன் மனைவி அருகில் வந்து மெதுவாய் அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் ” ஏதாவது குட்டிக் கலாட்டா பண்ணுன.. நான் சொன்னது ஞாபகம் இருக்குல, தயவு தாட்சனையே பாக்காம வீட்டை விட்டு வெளியே அனுப்பிடுவேன்” என்று மிரட்டலுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

“நீங்களும், உங்களுக்கு ரொம்ப நெருக்கமான சொந்தக்காரங்களும் இங்க இந்த வீட்ல ஸ்டே பண்ணிக்கோங்க. மத்தவங்களுக்கு மண்டபத்துலயே ரூம் அரேஞ்ச் பண்ணி இருக்கோம். ரூம் இன்னும் தேவைப்படுதுனா சொல்லுங்க, மண்டபத்துக்கு பக்கத்துல இருக்கிற ஹோட்டல்லையே இன்னும் எக்ஸ்ட்ரா ரூம்ஸ் அரேஞ்ச் பண்ணிடலாம்.” என்றான் பரத்.

” உங்களுக்கு எதுக்கு தம்பி சிரமம் நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம்.” என்று காசிநாதன் கூறிட..” ஐயோ அங்கிள் இதுல என்ன சிரமம் இருக்கு?, நீங்க எங்க வீட்டுக்கு வந்திருக்க கெஸ்ட், உங்கள நல்லபடியா கவனிச்சுக்க வேண்டியது எங்களோட கடமை” என்று சிரித்த முகமாய் கூறினான் பரத்.

” ஆமா இது இந்த சினிமாவுக்கு எல்லாம் வாடகைக்கு விடுவாங்களே அந்த வீடு தானே.. நாள் வாடகை எவ்வளவு?” என்று அறியாமையுடன் வினவினான் மதியழகன்.

” இல்ல இது சினிமால வர வீடும் இல்ல, இத நாங்க வாடகைக்கும் எடுக்கல, இது எங்களோட ஓன் கெஸ்ட் ஹவுஸ்…” என்றான் பரத்.

” எது? இந்த விருந்தாளிங்க எல்லாம் வந்தா தங்க வப்பாங்களே அந்த கெஸ்ட் ஹவுஸ்ஸா? ” என்று வாய் பிளந்தபடி மதியழகன் வினவிட… ” ஆமா அதே கெஸ்ட் ஹவுஸ் தான்…” என்று பதில் தந்தான் பரத்.

” அப்போ உங்க வீடு? ” என்று காந்திமதி வினவ… ” அது வேற ஏரியால இருக்கு. நம்ம கல்யாண மண்டபமும் இங்க பக்கத்துல வாக்கபில் டிஸ்டன்ஸ்ல தான் இருக்கிறதால நீங்க எல்லாரும் தங்குறதுக்கு இங்கேயே ஏற்பாடு பண்ணிட்டோம் ” என்று பொறுமையாகவே பதில் தான் பரத்.

” என்ன தம்பி நம்ம கல்யாணம் மண்டபம்னு சொந்தம் கொண்டாடுறீங்க?, மண்டபத்துக்கு சொந்தக்காரருக்கு விஷயம் தெரிஞ்சா…என் மண்டபத்தையா சொந்தம் கொண்டாடுறீங்க ஓடுங்கடா வெளியன்னு அடிச்சு துரத்திட போறாங்க!” என்று கேலியும் கிண்டலுமாய் கூறினார் வேலம்மாள்.

பெண் பார்க்க சென்ற தினத்திலேயே வேலம்மாளின் குதர்க்க புத்தியையும், அவருக்கு இந்த திருமணம் நடப்பதிலும் விருப்பமில்லை, தன் தம்பியையும் பிடிக்கவில்லை என்பதை நன்கு புரிந்து கொண்ட பரத்.. ” அப்படி எல்லாம் யாரும் துரத்த முடியாது பாட்டிமா. நான் ஒன்னும் சும்மா அது நம்ம மண்டபம்னு சொல்லல. உண்மையிலேயே அது நமக்கு சொந்தமான கல்யாண மண்டபம் தான். நமக்குன்னு சொல்றதை விட என் தம்பி, அதான் உங்க வீட்டு மருமகன் இருக்காரே காவியன் அவருக்கு சொந்தமான கல்யாண மண்டபம். அது மட்டும் இல்ல இந்த கெஸ்ட் ஹவுஸ் கூட அவன் பேர்ல தான் இருக்கு.அதனால அவ்வளவு ஈஸியா யாரும் எங்க காவியன எதுவும் செய்ய முடியாது.” என்று தன் தம்பியின் சொத்து மதிப்பை விவரித்து தனது தம்பியை இனி வார்த்தையால் நோகடிக்க முயற்சிக்காதீர்கள் என்று சொல்லாமல் சொன்னான் பரத்.

“என்னது சொந்தமாக கல்யாண மண்டபம் வேற இருக்கா?, மாசத்துக்கு நாலு முகூர்த்தம் வந்தாலே கல்லா கட்டிடுமே. !” என்று வெளிப்படையாகவே வாய்ப்பு பிளந்து அதிசயித்தார் வேலம்மாள்.

“எதுக்கு இப்போ இப்படி வாயப் பிளக்குறீங்க?, சொத்து மதிப்ப பார்க்கவும் உங்க பேத்திய இவனுக்கே கட்டிக் வச்சிடலாம்னு எண்ணம் வந்துடுச்சோ ! ” என்று வேலம்மாளுக்கு மட்டும் கேட்கும் விதமாய் கடுகடுத்தான் மதியழகன்.

‘ இவன் என்ன நம்ம மனசுல நினைச்சத அப்படியே சொல்லிட்டான்.’ என்று தனக்குள்ளேயே எண்ணிக்கொண்டவர், “அதெல்லாம் ஒன்னும் இல்ல, நான் என் பேரனுக்கே துரோகம் பண்ண நினைப்பேனா..!, மது கண்டிப்பா உனக்கு தான்.”என்று உள்ளுக்குள் உணர்ந்த தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு உறுதி அளித்தார் வேலம்மாள்.

என்னதான் மெதுவாய் பேசிக் கொண்டாலும் இருவரின் முகபாவனையை வைத்தே இருவருக்கும் இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்பதை புரிந்து கொண்ட கோமதி. அவர்களை கண்காணிக்க முடிவெடுத்தார்.

“இது மட்டுமில்ல இன்னும் நிறைய பிராப்பர்ட்டீஸ் காவியன் பேருல தான் இருக்கு”…என்று மேலும் சில விவரங்களை பரத் சொல்லிக் கொண்டே செல்ல…. “இப்போ இந்த விபரம் எல்லாம் உன்கிட்ட கேட்டாங்களா?, நமக்கு சொந்தமான சொத்துன்னா முடியப்போகுது அது என்ன? என் தம்பிக்கு சொந்தமானதுன்னு பிரிச்சு சொல்ற?, நம்ம வீட்ல இப்படி பிரிச்சு பேசி பழக்கம் இல்லையே!” என்று தம்பியின் புகழ் பாடிய தன் மகனை அடக்கினார் கோமதி.

” நம்ம வீட்ல பழக்கம் இல்ல தான், இருந்தாலும் பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு காவியனுக்கு இருக்கிற சொத்து மதிப்பு என்னன்னு தெரியப்படுத்துறது நம்ம கடமை தானே!” என்றான் பரத்.

” நீ சொத்து மதிப்பை எல்லாம் புள்ளிவிபரமா சொல்றத பாத்தா,அவங்க என்னமோ நம்ம சொத்தை பார்த்து தான் பொண்ணு குடுக்குற மாதிரி இல்ல இருக்கு.” என்று குத்தலாய் பேசினார் கோமதி.

” நீங்க சொன்னாலும் சொல்லலனாலும் அதுதான் உண்மை. என் பையனுக்கு தான் அவர் பொண்ணுன்னு பேசி வச்சிட்டு கடைசி நேரத்துல, உங்க வீட்டு பையனுக்கு பொண்ண கட்டிக் கொடுக்குறதுக்கு வேற என்ன காரணமா இருக்கும். ” என்று வெடிக்கென்று காந்திமதி பதில் தர.. அவரை வெறுமையாய் பரத் பார்த்திருக்க…. ‘ இவங்க கிட்ட ஏதோ ஒன்னு சரியில்ல…ஒருவேளை இவங்களுக்கும் இந்த கல்யாணம் நடக்கிறது இல்ல விருப்பம் இல்லையோ’என்று தனக்குள்ளேயே எண்ணிக்கொண்டார் கோமதி.

பெண் பார்க்க சென்ற போதே மூவரும் நடந்து கொண்ட விதத்தை வைத்தே அவர்களுக்கு நடக்கும் திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதை புரிந்து கொண்ட பரத், இதற்கு மேலும் இவர்களிடம் பேசி எந்த பிரயோஜனமும் இல்லை என்பது போல் அங்கிருந்த மற்ற விருந்தினர்கள் புறம் திரும்பி, ” நமக்கு ஆயிரத்தி எட்டு வேலை இருக்கு, எதுக்கு இங்க தேவையில்லாம வெட்டி கதை பேசிட்டு நிக்கணும், வாங்க உள்ள போகலாம். ” என்று கூடி நின்ற ஒரு சிலரை வீட்டிலிருந்த மற்ற அறைகளுக்கு அழைத்துச் சென்றான்.

முரண்பட்டு நின்ற மூவரும் அவர்களுக்கான அறைக்கு சென்று முடங்கிட…. மெதுவாய் அவர்களை பின் தொடர்ந்து சென்றார் கோமதி, மூவருக்கும் நடக்கும் விவாதங்களை மறைவாய் நின்று கண்காணிக்க துவங்கினார்.

“சொத்தை பார்த்ததும் சொந்தப் பேரனை மறந்துட்டீங்களே பாட்டி.ஒரு நிமிஷம் அந்த பணக்காரனுக்கே என் மதுவை கட்டிக் கொடுக்கணும்னு முடிவு எடுத்துட்டீங்கல” என்று கோபமாய் வினவினான் மதியழகன்.

“இங்க பாரு மதி…நீ சொல்ற மாதிரி நான் நினைச்சது உண்மை தான் . ஆனா நீயே கொஞ்சம் நல்லா யோசிச்சு பாரு இந்த பணக்காரன் கூட மதுவுக்கு கல்யாணம் நடக்கிறதுனால எனக்கு என்ன லாபம் கிடைக்க போகுது. ஆத்தாளும் மகளும் தான் இந்த சொத்தை எல்லாம் ஆண்டு அனுபவிக்க போராளுங்க. அதுவே நீ மதுவை கல்யாணம் பண்ணிக்கிட்டா… காலம் முழுக்க ரெண்டு பேரும் நமக்கு அடிமையா கிடப்பாளுங்க, அதை விட பெரிய சந்தோசம் எனக்கு என்ன இருக்கு?” என்றார் வேலம்மாள்.

“அம்மா சொல்றது சரிதான் மதி. நான் கூட வசதியான இடம்னு தெரிஞ்சதும் பேசாம கல்யாணம் பண்ணி வச்சுட்டு கொஞ்சம் கொஞ்சமா காச கரந்திடலாம்னு யோசிச்சேன், ஆனா எத்தனை நாளைக்கு காசு பிடுங்க முடியும். இதுவே அந்த கழுதை நம்ம வீட்டுக்கு மருமகளா வந்துட்டா. என் அண்ணன் சேர்த்து வச்சிருக்கிறது கொஞ்சம் சொத்தானாலும் முழுசா நம்ம கைக்கு வந்துடும்ல.” என்று தனது எண்ணத்தை கூறினார் காந்திமதி.

” சரி சரி பேசுனதெல்லாம் போதும். நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல, மண்டபத்துல நம்ம பசங்க ரெடியா இருப்பாங்க நிச்சயம் முடிஞ்ச கையோட ஏதாவது காரணம் சொல்லி மதுவை மட்டும் தனியா இங்க அனுப்பி வச்சிடுங்க, அடுத்து ஆக வேண்டிய காரியத்தை நான் பார்த்துக்கிறேன். ” என்றான் மதியழகன்.

” அது எப்படி டா கல்யாண பொண்ணு மட்டும் தனியா அனுப்பி வைப்பாங்க.” என்று தனது சந்தேகத்தை வினவினார் வேலம்மாள்.

” நீங்க எதுக்கு இருக்கீங்க ஏதாவது வேலை சொல்லி அத்தையையும் மாமாவையும் மண்டபத்திலேயே இருக்க வச்சிருங்க,அப்புறம் நான் கொடுத்த மயக்கம் மருந்து கையோட கொண்டு வந்து இருக்கீங்கல…மண்டபத்துல இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி மதுவுக்கு எப்படியாவது அதை கொடுத்துடுங்க.. ” என்று தனது திட்டத்தை விவரித்தான் மதியழகன்.

‘நான் நினைச்சது சரி தான். அம்மா மகன் பேரன் மூணு பேருக்கும் இந்த கல்யாணம் நடக்கிறதுல விருப்பமில்லை, அப்போ நான் செய்ய நினைக்கிறத இவங்களே செஞ்சு முடிச்சிடுவாங்க !, நம்ம வேலை ஈஸி ஆயிடும் போலையே… என்ன நடக்குதுன்னு வேடிக்கை பார்க்க வேண்டியது மட்டும் தான் இனி நம்மளோட வேலை’என்று தன் எண்ணத்துடன் ஒத்துப் போகும் மூவரை எண்ணி தனக்குள்ளேயே மகிழ்ந்து கொண்டார் கோமதி.

ஊரில் இருந்து கிளம்பியதில் இருந்தே இந்த திருமணம் நடக்குமா நடக்காதா என்ற குழப்பத்தில் இருந்த மது தனது அறைக்கு வந்ததும் அவசரமாய் தனது தோழி சரிகாவை அலைபேசியில் தொடர்பு கொண்டு.. ” நாங்க இங்க வந்துட்டோம், உனக்கு லொகேஷன் ஷேர் பண்றேன்.சீக்கிரம் கிளம்பி இங்க வந்துடு. நீ வந்ததுக்கப்புறம் தான் நான் இங்க இருந்து கிளம்ப முடியும்” என்றாள்.

” இன்னொரு தடவை நல்லா யோசிச்சுக்கோ மது. அதான் காவியம் கல்யாணத்தை நிறுத்துறேன்னு சொல்லி இருக்காருல… கண்டிப்பா எதாவது பண்ணுவாரு கொஞ்சம் வெயிட் பண்ணி பார்ப்போம்…”என்று கெஞ்சலுடன் பேசினாள் சரிகா.

” இல்ல எனக்கு அவர் மேல நம்பிக்கை இல்லை, இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தாத்தாவை பார்த்தேன். அவர் பேசுறத பார்த்தா அவருக்கு இன்னும் எந்த விஷயமும் தெரியலன்னு தோணுது. இனிமே நான் யாரையும் நம்ப போறதில்ல, என் வாழ்க்கையை பத்தி இனிமே நான் தான் முடிவு எடுக்க போறேன். சர்டிபிகேட்ஸ் எல்லாம் கையோட எடுத்துட்டு வந்துட்டேன். பெங்களூர்ல நம்ம கூட படிச்ச பவித்ரா இருக்கா அவகிட்ட ஏற்கனவே நான் போன்ல பேசிட்டேன். நான் பெங்களூர் போய் கொஞ்ச நாள் அவள் கூட ஸ்டே பண்ணிட்டே அங்கேயே எனக்கு ஒரு வேலையும் தேடுகிறேன். ” என்றாள் மதுரிமா.

“ஏண்டி உனக்கு இவ்ளோ பிடிவாதம்.. எப்பவும் யார் மனசு நோகடிக்க கூடாதுன்னு சொல்ற நீ இன்னைக்கு செய்ய போற காரியத்தால மொத்த குடும்பமும் நொந்து போக போறாங்க அத பத்தி உனக்கு கவலை இல்லையா நீ எப்போ இருந்து இப்படி சுயநலமா யோசிக்க ஆரம்பிச்ச… ” என்று தோழியின் நடவடிக்கையில் உண்டான மாற்றத்தை குறைபாட்டாள் சரிகா.

“அடுத்தவங்கள கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நினைக்கிறவங்க தான் இங்க அதிகமா கஷ்டத்தை அனுபவிக்கிறாங்க.. என்னால என் அம்மா மாதிரி எல்லாத்தையும் சகிச்சுட்டு வாழ முடியாது.” என்று தனது முடிவில் பிடிவாதமாக நின்றாள் மதுரிமா.

 

Advertisement