22….
முதல் பார்வையிலே
பற்றிக் கொள்ளும் காதல்..
என்ன வகை தீயோ…
உள்ளுக்குள் நுழைந்ததும்
உயிர் வரை உருக்கி குடிக்கும்..
என்ன வகை நோயோ!
விடுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த வேளையில், வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்த சித்தேஷிடம் மெதுவாய் பேச்சு கொடுக்கத் துவங்கினாள் சுஹனி. “அப்புறம் சொல்லுங்க மிஸ்டர் . சித்தேஷ், உங்க வீட்ல வேற யார் யார் இருக்கா, அப்பா அம்மா என்ன பண்றாங்க, நீங்க எந்த ஊரு?” என்று அடுக்கடுக்காய் கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றாள்.
சில நொடி பதில் ஏதும் கூறாமல் அமைதி காத்தவன், நீண்ட நெடுமூச்சு ஒன்றை வெளியேற்றிவிட்டு..”எனக்குன்னு யாரும் இல்ல, நான் ஒரு அனாதை.. கீர்த்தன் பாஸ் தாத்தா ஆரம்பிச்ச ஆசிரமத்துல தான் வளர்ந்தேன்.”என்றான் சித்தேஷ்.
“ஓ.. சாரி, நான் சும்மா ஏதாவது பேசிட்டு வரலாம்னு தான் கேட்டேன் ரியலி சாரி..”என்று உள்ளார்ந்த வருத்தத்துடன் மன்னிப்பு வேண்டினாள் சுஹனி.
“அட நான் அப்பா அம்மா இல்லாம அனாதையா வளர்ந்ததுக்கு நீங்க எதுக்குங்க இத்தனை சாரி கேக்குறீங்க, ” என்று சமாதானம் செய்தான் சித்தேஷ்.
” நமக்குன்னு யாருமே இல்லன்னு யோசிக்கும் போது எவ்வளவு வலிக்கும்னு நானே உணர்வு பூர்வமா உணர்ந்து இருக்கேன் சித்தேஷ்.
கூடவே இருந்து வளத்தவங்க இல்லாம போனதையே என்னால தாங்க முடியல!, யாருமே இல்லாம வளந்த உங்களுக்கு வலி இரண்டு மடங்கா இருக்கும்ல.அந்த வலிய இப்போ உங்களுக்கு ஞாபகம் படுத்திட்டேன். உங்க வேதனையைப அதிகப்படுத்தற மாதிரி கேள்வி கேட்டுட்டேன். ரியலி சாரி” என்று மீண்டும் மனம் வருந்தி மன்னிப்பு வேண்டினாள் சுஹனி.
“நீங்களா என்னை குப்பைத்தொட்டியில எறிஞ்சிட்டு போனீங்க.. தப்பு பண்ணுணவங்களே தைரியமா வெளியே சுத்துற காலங்க இது.. எல்லாரும் பார்த்ததும் கேட்கிற பொதுவான நாலு கேள்வி கேட்டுட்டு நீங்க எதுக்கு இவ்வளவு குற்ற உணர்ச்சியோட பேசுறீங்க?. இது நான் அடிக்கடி கேட்டு பழக்கப்பட்ட கேள்வி தான். எனக்கு இது பழகிப் போச்சு. நான் பீல் பண்ண மாட்டேன் நீங்க பீல் பண்ணாம இருங்க எனக்கு அது போதும்,. “என்று சிரித்தபடி கூறினான் சித்தேஷ்.
என்ன தான் சித்தேஷ் ஆறுதல் கூறினாலும்.. சுஹனியின் மனம் குற்ற உணர்வில் வாடியது.. தன் அன்னை தந்தையுடன் வளர்ந்த நாட்களை மனம் எண்ணிப் பார்க்க.. அவளையும் மீறி கண்கள் கலங்கியது…
ஒருமுறை திரும்பி சுஹனியை பார்த்தவன்.. அவள் மனநிலையை மாற்றும் விதமாய், ” அப்புறம் இன்னொன்னு என்னமோ சொன்னிங்களே?” என்று சித்தேஷ் யோசனையாய் நிறுத்த…
தன் சுய சிந்தனைக்குள் மூழ்கி இருந்தவள் எதை சொன்னோம் என்று நினைவில்லாமல் விழிக்க துவங்கினாள்.
“என்னங்க உங்க சொத்தை எழுதி கேட்ட மாதிரி அப்படி முழிக்கிறீங்க!, “என்று சித்தேஷ் வாய்விட்டு சிரித்திட… அவனது சிரிப்பை பின்பற்றி மென் முறுவல் செய்தவள்.. “என் சொத்து விஷயமா பேசணும்னா அதுக்கு நீங்க என் அத்தை பையன் தீபனை தான் அப்ரோச் பண்ணனும்.. அப்பா அம்மா இறக்குறதுக்கு முன்னாடி எப்படியோ அவங்க கிட்ட இருந்து எல்லா சொத்தையும் எழுதி வாங்கிட்டான். “என்றவள் முகம் மீண்டும் வாடியது..
” நீங்க என்னங்க ஜோக் சொன்னா கூட விளையாட்டா எடுத்துக்காம சீரியஸாகி உடனே சோகமாகிடுறீங்க…, நீங்க சொன்னது உங்களுக்கே மறந்துடுச்சு போல நானே ஞாபகப்படுத்துறேன்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அத்தனை தடவை சாரி கேட்டீங்களே.. அப்ப ஒரு வார்த்தை சொன்னீங்க.. யாருமே இல்லாம வளர்ந்தவங்களுக்கு வலி இரண்டு மடங்காக இருக்கும்னு !, உண்மைய சொல்லனும்னா என்னை மாதிரி ஆட்களுக்கு, நமக்குன்னு யாருமே இல்லங்கிற வலியை விட, நமக்கும் யாராவது இருந்திருந்தா நல்லா இருந்திருக்குமேங்கிற ஏக்கம் தான் அதிகமா இருக்கும். எனக்கும் ஆசிரமத்துல இருந்த வரைக்கும் அந்த ஏக்கம் நிறையவே இருந்தது. ஆனா இப்போ இல்ல, ஏன் தெரியுமா?”என்று கேள்வியாய் நிறுத்திய சித்தேஷ், விடை அறிந்திருக்க கூடுமோ என்ற ஆவலுடன் சுஹனியின் முகம் பார்த்தான்.
அவன் எதிர்பார்த்தது போலவே..” கீர்த்தன்…”என்று ஒற்றை வரியில் பதில் கூறினாள் சுஹனி.
“எஸ் யூ ஆர் ரைட், நான் என்னைக்கு பாஸ் கிட்ட வேலைக்கு சேர்ந்தேனோ அன்னைக்கு இருந்து நான் தனி ஆளா இருக்கிற மாதிரி பீல் பண்ணது இல்ல. நான் அவர பேருக்கு தான் பாஸ்ன்னு கூப்பிடுகிறேன், மத்தபடி அவர் எனக்கு அண்ணா மாதிரி.. என் மேல அவ்ளோ அக்கறையா இருப்பார். அதோட மஞ்சு அம்மா வேற , சொல்லப்போனா அவங்க என் அம்மா மாதிரி தான். எனக்கு ஒரு அம்மா இருந்திருந்தா கூட என்னை இந்த அளவுக்கு நல்லா பாத்துப்பாங்களான்னு தெரியல. சோ உங்களுக்கு யாரும் இல்லன்னு இனிமே பீல் பண்ணாதீங்க, உங்களுக்கு துணையா நாங்க இருக்கோம்.” என்று ஆறுதல் தரும் வகையில் நட்புடன் பேசினான் சித்தேஷ்.
“உங்க வயசு என்ன?” என்று சட்டென்று வாய் விட்டவள்.. கொஞ்சம் அதிக பிரசங்கித்தனமாக பேசுவது போல் தோன்றவும் நாக்கை கடித்துக் கொண்டு அமைதியானாள் சுஹனி.
அவளுக்குத்தான் தவறாக தோன்றியதோ என்னவோ சுஹனியின் கேள்வியை இயல்பாய் ஏற்ற சித்தேஷ்…”இருபத்தி ஐஞ்சு “என்றான்.
“ஓ…,” என்று அவனது பதிலை ஏற்றவள், சற்று தயங்கியபடியே..”உங்களுக்கு அண்ணன் மாதிரின்னு சொன்னீங்க அப்போ அக்மாக்கு அதாவது உங்க கீர்த்தன் பாஸுக்கு என்ன வயசு ?” என்று ஒரு வழியாக கேட்க நினைத்ததை கேட்டு முடித்தாள் சுஹனி.
“அதுக்கு நீங்க நேரடியாகவே பாஸ்ஷோட வயசு என்னன்னு கேட்டிருக்கலாம். எதுக்கு இப்போ தேவையில்லாம தலையை சுத்தி மூக்கை தொடணும்..” என்று சிரித்தபடி கூறியவன்..”பாஸ்க்கு எப்படியும் முப்பதுகுள்ள தான் இருக்கும். அவர் டேட் ஆப் பர்த் 23 மார்ச் ஆனா இயர் சரியா தெரியல..” என்றான் சித்தேஷ்.
“ஆமா இப்போ பாஸ்ஸை நீங்க என்ன சொல்லி கூப்பிட்டீங்க.. அக்மாவா! அப்படின்னா?” என்று சித்தேஷ் வினவிட..”அதெல்லாம் சொல்ல முடியாது” என்று அவசரமாய் மறுத்தாள் சுஹனி.
“சொல்லலேன்னா எனக்கு ஒன்னும் நஷ்டம் இல்ல. இனிமே நீங்க பாஸ்ஸை பத்தி என்ன டீடைல் கேட்டாலும் என்கிட்ட இருந்து பதிலே வராது” என்று சித்தேஷ் மிரட்டல் விடுக்க..” அட என்னங்க நீங்க.. இப்படி மிரட்டுறீங்க.. சரி உங்ககிட்ட மட்டும் சொல்றேன் கீர்த்தன் கிட்ட சொல்லிடக் கூடாது. இந்த டீலுக்கு நீங்க ஓகே சொன்னா தான் நான் அதுக்கு அர்த்தத்தை சொல்லுவேன்” என்றாள் சுஹனி.
சரி என்பது போல் வேகமாய் சித்தேஷ் தலை அசைக்க.. தயங்கியபடியே, “அக்மானா, கொரியன் லாங்குவேஜ்ல அரக்கன்னு அர்த்தம்.”என்றாள் சுஹனி.
“அரக்கனா..!, ஏங்க இப்படி?, எங்க பாஷை பார்த்தா உங்களுக்கு அரக்கன் மாதிரியா தெரியுது” என்று அதிர்ச்சியும் ஆச்சரியமாய் வினவினான் சித்தேஷ்.
“நான் அவரை மீட் பண்ணுன ஃபர்ஸ்ட் டே என்கிட்ட மோசமா நடந்துக்க ட்ரை பண்ணுன ரெண்டு பேரையும் அவர் அடிச்சு அடியை நீங்க பார்த்து இருக்கணும். நீங்க மட்டும் நேர்ல பார்த்திருந்தா, இவரா நம்ம பாஸ் இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்குமானு ஆடிப் போய் இருப்பீங்க.” என்று பெயருக்கான காரணத்தை கூறினாள் சுஹனி.
“ஓ நீங்க பயந்து போய் தான் அரக்கன்னு பேரு வைச்சீங்களா..” என்று சித்தேஷ் வினவிட..
“இல்லையே நான் அவரை பார்த்து பயப்படவே இல்லையே.. உண்மைய சொல்லனும்னா எனக்கு அந்த நேரம் அவரை பார்க்கும் போது ஹீரோ மாதிரி தெரிஞ்சாரு. ரவுடி ஹீரோ.. அப்போவே இம்ப்ரஸ் ஆகிட்டேன்.. ஆனா உங்க சிடு மூஞ்சி பாஸ்.. கொஞ்சம் கூட ரியாக்ட் பண்ணவே இல்ல.. ஹாஸ்டல்ல இறக்கி விடும்போது கூட.. நானா இன்றோ ஆக ட்ரை பண்ணுனேன். ஆனா என்னை நோஸ்கட் பண்ற மாதிரி.. என்னை நீ பார்த்ததே இல்ல, எனக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்லிட்டு போயிட்டாரு. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.” என்றாள் சுஹனி.
அடக்க முடியாத புன்னகையை கடினப்பட்டு அடக்க முயன்றவன் இதற்கு மேலும் தாங்காது என்பது போல் காரை ஓரமாய் நிறுத்திவிட்டு வாய்விட்டு சிரிக்கத் தொடங்கினான் சித்தேஷ்.
“ஹலோ நான் இப்ப என்ன காமெடி பண்ணிட்டேன்னு இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிறீங்க” என்று சிறு எரிச்சலுடன் சுஹனி வினவிட.. “இல்ல நீங்க சொல்லும்போதே அன்னைக்கு நடந்ததை கற்பனை பண்ணி பார்த்தேன் சிரிப்பை அடக்க முடியல.. பேர் பொருத்தமா தான் வச்சிருக்கீங்க” என்று பாராட்டுதலாய் கூறினான் சித்தேஷ்.
“சரி நீங்க சொல்லுங்க..” என்று ஆவலுடன் வினவினாள் சுஹனி.
“என்ன சொல்ல சொல்றீங்க?” என்று சிரிப்புடனேயே வினவினான் சித்தேஷ்.
“அக்மானா என்னன்னு சொல்லிட்டா உங்க பாஸ் பத்தி டீடைல் சொல்றேன்னு சொன்னீங்களே, சொல்லுங்க..” என்று ஆர்வம் மிகுதியாய் வினவினாள் சுஹனி.
” பாஸ் பத்தி உங்களுக்கு என்ன தெரியணும்?”எனும் சித்தேஷ் கேள்விக்கு..”எல்லாமே தெரியணும்!” என்று அவசரமாய் பதில் கூறினாள் சுஹனி.
“தேசிகன் ஐயாவோட.. கருணை டிரஸ்ட் பத்தி நீங்க கேள்விப்பட்டு இருக்கீங்களா?” என்றான் சித்தேஷ்.
“கேள்விப்படாம எப்படி இருக்க முடியும். அது எவ்வளவு பெரிய டிரஸ்ட்.. எத்தனை பேர் அந்த டிரஸ்ட் மூலமாக வாழ்ந்துட்டு இருக்காங்க!, பீஸ் கட்டி படிக்க முடியாம கூலி வேலைக்கு போயிட்டு இருந்த நாலஞ்சு பசங்கள நானே அந்த ட்ரெஸ்ல தான் சேர்த்து விட்டேன். அந்த டிரஸ்டுக்கும் கீர்த்தனுக்கும் என்ன சம்மந்தம்?” என்றாள் சுஹனி.
“சம்மந்தமில்ல, சொந்தம்… அதாவது அந்த டிரஸ்ட் ஓனர் தேசிங்கன் அய்யாவோட ஒரே பேரன் தான் கீர்த்தன் பாஸ். பல வருஷத்துக்கு முன்னாடி அவருக்கு சொந்தமான பல கோடி மதிப்பு சொத்தை அந்த டிரஸ்ட் பேர்ல எழுதி வச்சு, அது மூலமா வர வருமானத்தால டிரஸ்ட் என்னைக்கும் யாரோட தயவும் இல்லாம நடக்கிற மாதிரி ஏற்பாடு செஞ்சாரு தேசிங்கன் ஐயா. அவரோட ஒரே பேரன் தான் எங்க பாஸ். பணக்காரன்ங்கிற கர்வம் கொஞ்சம் கூட இல்லாம எல்லார்கிட்டயும் சகஜமா பழகக் கூடியவர். ஆஸ்ரமத்துல வளர்ந்த நான் படிப்ப முடிச்சு வெளிய வரும் போது என்னை மாதிரி பல பேர் படிக்க உதவி செஞ்ச தேசிங்கன் ஐயாவை நேர்ல பாக்கணும்னு அவரோட வீடு தேடி போனேன். ஆனா அங்க தேசிங்கன் ஐயா இல்ல, அவருக்கு பதிலா அவரோட பேரன் கீர்த்தன் இருந்தார். தன்னோட பேர்ல இருந்த சொத்தை எல்லாம் டிரஸ்ட்க்கு மாத்தி எழுதி வச்சிட்டு ஃபாரின் போய் செட்டிலான தேசிங்கன் ஐயா.. அங்கேயே இறந்துட்டாரு. அவரோட இறுதிச் சடங்க கூட இங்க இருக்கிற யாரும் பார்க்க முடியல, ஐயா இறந்த கொஞ்ச நாளிலேயே அவருடைய மகனும் மருமகளும் பிலைட் ஆக்சிடெண்ட்ல இறந்து போயிட்டாங்க.. தாத்தா பாதியில விட்டுட்டு போன பொறுப்பை கவனிச்சிக்க கீர்த்தன் பாஸ் ஃபாரின்ல இருந்து இங்க வந்துட்டாரு. என்னை படிக்க வச்ச உங்களோட படிப்பு அவங்களுக்கே உதவியாய் இருக்கட்டும்னு பாஸ்கிட்டயே அசிஸ்டன்ட்டா ஜாயின் பண்ணிட்டேன். “என்று கீர்த்தன் குறித்து தான் அறிந்த விபரங்களை கூறி முடித்தான் சித்தேஷ்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப்பிரிவு இருந்தால் என் இரு மடங்கு கவனமாக இருக்க வேண்டும்..கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் உற்பத்தியாக வழிவகுத்துவிடும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~