Advertisement

22 ….

வேலம்மாள் சொல்லிச் சென்றது போலவே மறுநாளே கையில் வெத்தலை பாக்கு தட்டுடன் பத்திரிக்கையை ஏந்தி நின்ற தனது அண்ணனை வீட்டிற்குள் நுழைய அனுமதிக்காமல்…” இப்போ எதுக்கு இங்க வந்தீங்க? இருக்கோமா செத்தோமான்னு பாத்துட்டு போக வந்தீங்களா?, “இன்று கோபமாய் வினவினார் காந்திமதி.

” பெரிய வார்த்தை எல்லாம் பேசாத காந்தி. நல்ல விஷயத்துக்காக வந்திருக்கேன். “என்று தங்கையின் கோபத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்து பொறுமையாகவே பதில் தந்தார் காசிநாதன்.

” என் பையனுக்கு பொண்ணு தர மாட்டேன்னு எங்கள அசிங்கப்படுத்திட்டு உங்க பொண்ணுக்கு வேற வசதியான இடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறது உங்களுக்கு வேணா நல்ல விஷயமா இருக்கலாம். எங்களை பொறுத்த வரைக்கும் இது எங்களுக்கு நடந்த அவமானம்”என்று கோபம் குறையாமல் காந்திமதி பேசிக் கொண்டே செல்ல…”உன் கோபத்துல இருக்கிற நியாயத்தை என்னால புரிஞ்சுக்க முடியுது காந்தி. ஒரு தகப்பனா என் நிலைமையில இருந்து யோசிச்சு பாரு என் முடிவு சரின்னு தான் உனக்கு தோணும்.”என்று சமாதானம் செய்ய முயன்றார் காசிநாதன்.

” உங்க நிலைமையில இருந்து யோசிச்சு பார்த்து தான், நீங்க வேற இடத்துல மாப்பிள்ளை பார்த்திருக்க விஷயம் தெரிஞ்சதும் அதை பெரிய விஷயமா எடுத்துக்காம மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்த அன்னைக்கு நானும் என் பிள்ளையும் சபையில வந்து நின்னோம். அதுக்கு நன்றி கடனா நீங்க என்ன செஞ்சீங்க?, அத்தனை பேருக்கு முன்னாடி நானும் என் பையனும் அவமானப்பட்டு வீட்டை விட்டு வெளியே போனப்ப கூட நீங்க தடுத்து நிறுத்த கூட முயற்சி பண்ணலையே!, எங்கள பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம, எங்கள அவமானப்படுத்தினவங்க கூடயே சம்பந்தம் பேசி முடிச்சிருக்கீங்க. இந்த கல்யாணத்துக்கு நாங்க எப்படி வருவோம்னு எதிர்பார்க்கிறீங்க?” என்றார் காந்திமதி.

” என்ன பேசுற காந்தி…உனக்கே நல்லா தெரியும், அங்க என்ன நடந்ததுன்னு?, மதி கொஞ்சம் தேவை இல்லாம பேசி பிரச்சனைய வளர்க்க பார்த்தான். ” என்று நடந்த தவறில் இருந்த நியாயத்தை காசிநாதன் விவரிக்க முயல… ” ஓ அப்போ எல்லா தப்பும் என் பையன் மேல தான் உங்க மேல எந்த தப்பும் இல்ல அப்படித்தானே !, உங்க பொண்ணு யாரையோ காதலிக்கிறேன்னு உங்ககிட்ட சொல்ல முடியாம தயங்கி கிட்டே மதி கிட்ட சொல்லி இருக்கா. உங்க பொண்ணுக்கு நல்லது நடக்கணும்னு பேசின என் பையன் மேல தான் தப்பு இருக்குன்னு புரிஞ்சிகிட்ட உங்களுக்கு, அதுல அவன் உங்க பொண்ணு மேல வச்சிருக்க அக்கறை தெரியலையா?” என்று தன் மகனுக்காக பரிந்து பேசினார் காந்திமதி.

தங்கையுடன் குடும்ப பிரச்சனை குறித்து விவாதித்துக் கொண்டிருந்தவர் அப்போது தான் இருக்கும் சூழ்நிலை புரிந்து சுற்றும் முற்றும் பார்த்திட அக்கம் பக்கத்து அண்டை வீட்டினர் தங்களையே வெறுத்து பார்ப்பதை உணர்ந்து, “இப்படி தெருவுல வச்சு நாலு பேரு முன்னாடி நம்ம வீட்டு விஷயம் பேசுறது கொஞ்சம் கூட நல்லா இல்ல காந்தி. பாரு உன் பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் இங்கே தான் வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறாங்க, எதுவா இருந்தாலும் வீட்டுக்குள்ள போய் பேசுவோம்.”என்று வாசல் படி ஏறி நின்றார் காசிநாதன்.

” எந்த உரிமையில என் வீட்டுக்குள்ள வரீங்க?, உங்க உறவே எனக்கு தேவையில்லை என்று சொல்வது உங்களுக்கு புரியலையா?” என்று அவமானப்படுத்தும் விதமாக பேசினார் காந்திமதி.

அவமானத்தில் தலை குனிந்த படி நின்றிருந்த காசிநாதன் அடுத்து என்ன செய்வது என்று புரியாத தயக்கத்துடன் அங்கிருந்து நகர முற்பட…. அதுவரை வீட்டினுள் சாவகாசமாய் அமர்ந்து கொண்டு நடக்கும் விவாதங்களை காது குளிர கேட்டுக் கொண்டிருந்த மதியழகன் தன் தாய் மாமன் அங்கிருந்து விலகிச் செல்வதை புரிந்து கொண்டு அவசரமாய் மேல் சட்டையை சரி செய்து கொண்ட படி ஓடி வந்து… ” வாங்க மாமா, எப்ப வந்தீங்க? உள்ள குளிச்சிட்டு இருந்தேன். அதனால நீங்க வந்தது கவனிக்க முடியல ஏன் மாமா வாசல்லயே நிக்கிறீங்க? வீட்டுக்குள்ள வாங்க. ” என்று நல்லவன் போல் பாசாங்கு காட்டி பேசினான்.

மருமகனின் போலியான பாசாங்கு வார்த்தைகளை உண்மையான பாசம் என எண்ணிக்கொண்ட காசிநாதன்… “இருக்கட்டும் மதி.. உனக்கு என் மேல கோபம் இல்லையே!, அதுவே சந்தோஷம்.. பொண்ணு கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க வந்தேன். குடும்பத்தோட கல்யாணத்துக்கு வந்துடுங்க” என்று கையில் இருந்த வெத்தலை பாக்கு தட்டை மதியழகன் புறம் நீட்டினார்.

” என்ன மாமா நீங்க?, பத்திரிகைய வாசல்லயே நீட்டுறீங்க?, வீட்டுக்குள்ள வாங்க மாமா” என்று காசிநாதன் கையை பற்றி அழைத்தான் மதியழகன்.

தயக்கத்துடன் நின்றிருந்தவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவன் தன் அன்னை புறம் திரும்பி..” இதெல்லாம் உங்க வேலை தானா?, வந்ததும் வராதுமா மாமாவ கண்டபடி பேசி காயப்படுத்திட்டீங்களா?, மதி எனக்கு தான்னு ஜோடி போட்டு பேசாதீங்கன்னு, நான் உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது!, மதி படிப்பு என்ன?, அவ அழகு என்ன? அவளுக்கும் எனக்கும் ஏதாவது ஒரு பொருத்தம் இருக்கா?, ஏணி வைச்சாக் கூட எட்டாது, அந்த அளவுக்கு அவ உசந்தவ. அப்படிப்பட்டவள எனக்கு கல்யாணம் பண்ணி வச்சு அவ வாழ்க்கையை பாழாக்க நினைக்கிறீங்களே! இது நல்லாவா இருக்கு” என்று தன் தாய் மாமனுக்கு பரிந்து பேசி தாயிடம் கோபம் காட்டினான் மதியழகன்.

திடீரென்று கோபம் காட்டி பேசும் மகனின் மனநிலை புரியாது குழம்பிப்போனவர்..” என்னடா இது?” என்று அதிர்ச்சியுடன் துவங்க… ஏதாவது பேசி தன்னை காட்டி கொடுத்து விடுவாரோ என்று அஞ்சிய மதியழகன் அவசரமாய் அன்னையின் வார்த்தையை பாதியில் தடுத்து நிறுத்தும் விதமாய்…” பேசாதீங்க நடுவுல எதுவும் பேசாதீங்க நான் உங்க மேல கொலை காண்டுல இருக்கேன். மாமா இல்லனா நாம இல்ல, நாம இந்த நிலைமையில, நாலு பேர் மதிக்கிற மாதிரி வாழுறதுக்கு அவர் தான் காரணம் அதை மறந்துடாதீங்க!,மதியை என் கூட ஜோடி போட்டு பேசினது உங்க தப்பு. நீங்க எதிர்பார்த்தது நடக்கலன்னா அதுக்காக உங்க கோபத்தை அவர்கிட்ட காட்டுவீங்களா?. முதல்ல மாமா கிட்ட மன்னிப்பு கேட்டு வீட்டுக்குள்ள கூப்பிடுங்க. ” என்று குரலை உயர்த்தி அதட்டினான்.

ஏதோ திட்டத்துடன் தான் மகன் இவ்வாறு பரிந்து பேசுகிறான் என்பதை புரிந்து கொண்ட காந்திமதி..” என்ன செய்ய உன் மாமா மகளை கட்டினா உன் வாழ்க்கை நல்லா இருக்கும்னு யோசிச்சேன், அது நடக்கல என்கிற கோபத்துல என்னென்னமோ வாய்க்கு வந்தபடி பேசிட்டேன். ஏமாந்த நீயே எல்லாத்தையும் எதார்த்தமா எடுத்துக்கும் போது எனக்கு என்ன வந்தது?. ” என்று மகனிடம் கூறியவர் தன் அண்ணன் புறம் திரும்பி, “ஏதோ கோபத்துல கண்டபடி பேசிட்டேன் எதையும் மனசுல வச்சுக்காதீங்க!, நான் பேசுனது எல்லாம் தப்பு தான், என்னை மன்னிச்சிடுங்க, வீட்டுக்குள்ள வாங்க” என்றார்.

மதியழகனின் வார்த்தையையும் கோபத்தையும் உண்மை என நம்பிய காசிநாதன்..’ நல்லவேளை மதுவுக்கு மதி மேல எந்த விருப்பமும் இல்லை.. தங்கச்சியும் அம்மாவும் தான் தேவை இல்லாம ஆசை வளத்திட்டு இருக்காங்க போல’ என்று தன் தங்கை மகன் மீது தான் கொண்ட தவறான எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.

காந்திமதி வீட்டுக்குள் வந்த காசிநாதன் பத்திரிக்கையை எடுத்து நீட்ட… முகம் மாறாத புன்னகையுடன் அதைப் பெற்றுக் கொண்ட மதியழகன், ” நீங்க கவலையே படாதீங்க மாமா, இது நம்ம வீட்டு கல்யாணம் ஜாம் ஜாம்ன்னு நடத்திடுவோம். என்ன வேலையா இருந்தாலும் கூச்சப்படாம என்கிட்ட சொல்லுங்க சிறப்பா செஞ்சு கொடுத்துடறேன். அப்புறம் மாமா கல்யாணத்துக்கு என் ஃப்ரெண்ட்ஸ் ஒரு நாலு பேர கூட்டிட்டு வரலாமா?, அவனுக வந்தா கூடமாட கல்யாண வேலைக்கு ஒத்தாசையா இருப்பானுங்க..” என்று தயங்கியபடி வினவினான்.

“இதெல்லாம் நீ என்கிட்ட கேக்கணுமா மதி நடக்க போறது உன் வீட்டு கல்யாணம். நீ யாரை வேணாலும் தாராளமா கூட்டிட்டு வரலாம்.” என்று தயங்காமல் சம்மதித்தார் காசிநாதன்.

“நீ சொன்னது சரிதான் நடக்க போறது என் வீட்டு கல்யாணம் தான். இந்தக் கல்யாணம் எப்படி தடபுடலாம் நடக்க போகுதுன்னு நீங்க பாத்துக்கிட்டே இருங்க…”என்று உள்ளுக்குள் வன்மத்தை சுமந்து கொண்டு வெளியில் புன்னகையுடன் கூறினான் மதியழகன்.

“நான் கூட நீயும் என் மேல கோவமா இருப்பியோன்னு நினைச்சு தயங்கிட்டே தான் வந்தேன், நல்ல வேலை நீ என்னை புரிஞ்சுகிட்ட அது போதும் எனக்கு” என்று கவலை அகன்ற புன்னகையுடன் கூறிய காசிநாதன் வந்த வேலை முடிந்த நிம்மதியுடன் விடைச்பெற்று சென்றார்.

” என்னடா திடீர்னு இப்படி நல்லவன் வேஷம் போடுற?, நீ பட்டுனு மாத்தி பேசவும் எனக்கு என்ன பண்றதுன்னு புரியல, குழம்பி போயிட்டேன், ஆமா திடீர்னு எதுக்கு இப்படி உன் மாமா கிட்ட நல்லவனாக முயற்சி பண்ற?”என்று அதுவரை தனக்கு இருந்த குழப்பத்தை வினவினார் காந்திமதி.

“அப்புறம் என்னையும் உங்கள மாதிரி முட்டாள் தனமா கோபப்பட்டு காரியத்தை கெடுத்துக்க சொல்றீங்களா?, நான் நினைச்சது நடந்து முடியுற வரைக்கும் மாமாவுக்கு என் மேல நம்பிக்கை குறையாம இருக்கிறது ரொம்ப முக்கியம். “என்று மதியழகன் கூறிட..”என்னடா சொல்ற எனக்கு ஒன்னும் புரியல?, அண்ணன் உன்னை நம்புறதுக்கும் நீ நினைச்சது நடக்கிறதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?” என்று குழப்பம் விலகாமல் வினவினார் காந்திமதி.

“மாமா என் மேல வைக்கிற நம்பிக்கைதான் எல்லாத்துக்கும் அஸ்திவாரமே. ஒருவேளை அவருக்கு என் மேல சந்தேகம் வந்து, எங்க என்னால கல்யாணம் நின்னுடுமோங்கிற பயம் வந்தா என்ன செய்வார்?” என்று மதியழகன் கேள்வியாய் நிறுத்த…” என்ன செய்வாரு உன்னை கல்யாணத்துக்கே வர வேணாம்னு சொல்லிடுவாரு” என்று மகனின் கேள்விக்கு பதில் தந்தார் காந்திமதி.

  “கரெக்ட் இப்போதான் நீங்க என்னோட பாயிண்டுக்கே வந்திருக்கீங்க, என் மேல சந்தேகம் வந்து, கண் கொத்தி பாம்பா எந்நேரமும் என்னை கண்காணிச்சுட்டு இருந்தா என்னால எப்படி கல்யாண மண்டபத்துல இருந்து கல்யாண பொண்ணை தூக்க முடியும். இப்போ அவருக்கு என் மேல நம்பிக்கை இருக்கிறதால மதி காணாம போன கூட என்னை சந்தேகப்பட மாட்டாரு. நான் மதியை கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னாலும்.. அவருக்கு இப்ப என் மேல இருக்கிற நம்பிக்கைல என்னை மன்னிச்சு ஏத்துக்க கூட நிறைய வாய்ப்பு இருக்கு.” என்று விளக்கம் கொடுத்தான் மதியழகன்.

“அது மட்டுமா.. அவரோட செலவிலேயே உன் ஆட்களை கூட்டிட்டு போய்.. எந்த செலவும் இல்லாம, கஷ்டமும் இல்லாம கல்யாணத்தை நிறுத்திடலாம். என் பையன் எவ்வளவு புத்திசாலியா இருக்கான். பொழைக்க தெரிஞ்ச புள்ள உன்னைப் போய் வேணாம்னு சொல்லிட்டு வேற இடத்துல மாப்பிள்ளை பார்த்திருக்காங்க பாரு. இந்தக் கல்யாணம் மட்டும் முடியட்டும் மொத்த குடும்பத்தையும் ஆட்டி படைக்கிறேன்..”என்று எதிர்கால திட்டம் குறித்து பேசிய காந்திமதி, சட்டென்று ஏதோ நினைவு வந்தவராக…”ஆமா அந்த வளையல் எங்க?” என்றார்.

“எந்த வளையல்? நீங்க எத பத்தி பேசுறீங்க?” என்று ஒன்று அறியாதவன் போல் வினவினான் மதியழகன்.

“என்னடா எந்த வளையல்னு கேக்குற, அதான் பாட்டி நேத்து குடுத்தாங்களே கல்யாண செலவுக்காக அந்த வளையல தான் கேட்கிறேன். அதான் இப்போ மாமா ஏற்பாடு பண்ணி இருக்கிற வண்டியிலேயே எல்லாரும் போயிடுவோம்ல, உனக்குன்னு தனி செலவு எதுவும் இருக்காது… தேவையில்லாம எதுக்கு அந்த வளையல அடகு வைச்சுட்டு. இங்க பாரு அம்மாவுக்கு ரொம்ப நாளா தங்க வளையல் போடணும்னு ஆசையா இருக்கு. அந்த வளையல கொடு இந்த கண்ணாடி வளையல கழட்டிட்டு அதை போட்டுகிறேன்” என்றும் ஆசையுடன் பேசினார் காந்திமதி.

“அந்த வளையல் இப்ப வரைக்குமா என் கையில இருக்கும். அதெல்லாம் எப்பயோ வித்து செலவழிச்சிட்டேன்…”என்று அசட்டையாக கூறியவன் அங்கிருந்து விலகி சென்று விட..

‘அடப்பாவி.. வித்து செலவழிச்சிட்டேன்னு எவ்வளவு அசால்ட்டா சொல்லிட்டு போறான்.. இவன போய் பொழைக்க தெரிஞ்சவன்னு புகழ்ந்துட்டு இருந்தேன் பாரு… என் புத்திய செருப்பால அடிக்கணும். வித்து செலவழிச்சியோ… இல்ல அந்த வித்தைக்காரிக்கு அள்ளிக் கொடுத்தாயோ யார் கண்டா..?’ என்று தன் மகனை எண்ணி தனக்குள்ளேயே அங்கலாய்த்துக் கொண்டார் காந்திமதி.

Advertisement