Advertisement

21…

மகன் தன்னை முதல்முறையாக எதிர்த்து பேசியதும் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேற சொன்னதை எண்ணி உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த வேலம்மாள் தன் மனக்குமுறலை இறக்கி வைக்க மகளின் இல்லம் நாடி சென்றார்.

” என்னைக்கும் என்ன எதிர்த்து பேசாத உன் அண்ணன் இன்னைக்கு என்னை என்ன சொல்லிட்டான் தெரியுமா?” என்று மகனுடன் நடந்த விவாதங்களை விவரித்து முடித்தார் வேலம்மாள்.

” உண்மையிலேயே அண்ணன் அப்படியா சொன்னாங்க?, அவருக்கு இந்த அளவுக்கு தைரியம் எங்க இருந்து வந்தது?” என்று தாயின் நிலை குறித்து கவலை கொண்ட படி வினவினார் காந்திமதி.

” வேற யார் கிட்ட இருந்து வந்திருக்கும், எல்லாத்துக்கும் அந்த ஊமைக்கொட்டான் தான் காரணம். அது மட்டும் இல்ல அவனுக்கு உன் பையனை பத்தி ஏதோ தெரிஞ்சிருக்கு. அதான் அவசரமா பொண்ணுக்கு வேற இடத்துல மாப்பிள்ளை பார்த்திருக்கான். “என்று வேலம்மாள் தனது சந்தேகத்தை கூறிட.. ” மதி கூட ஒரு நாள் யாரோ ஒருத்தர் அவனைப்பத்தி ஊருக்குள்ள விசாரிச்சதா சொல்லிட்டு இருந்தான். அது ஒருவேளை அண்ணனா இருக்குமோ?. இருக்குமோ என்ன இருக்குமோ… கண்டிப்பா அவராத் தான் இருக்கும், அதனால தான்.. அவசரமா வேற இடத்துல மாப்பிள்ளை பார்த்து கல்யாணத்தை பேசி முடித்திருக்கிறாரு.” என்று அன்னையின் சந்தேகத்தையும் உறுதிப்படுத்தினார் காந்திமதி.

“அவன் பேசி முடிச்சா… நாம அப்படியே விட்டுட முடியுமா? சொந்த வீட்டு போக கூடாது அதே நேரத்துல சொத்தும் நம்ம கைய விட்டு போக கூடாது. அதுக்கு என் பேரனுக்கும் அந்தக் கைகாரி மகளுக்கும் தான் கல்யாணம் நடக்கணும். ஆமா மதி எங்க போனான், கல்யாணத்த நிறுத்தறதுக்கு என்ன திட்டம் வச்சிருக்கான்னு கேட்டுட்டு போகலாம்னு தான் வந்தேன். ” என்றார் வேலம்மாள்.

” கழுத கெட்டா குட்டிச் சுவரு வேற எங்க போயிருப்பான், அந்தக் கேடுகெட்டவ வீட்ல தான் கிடையா கிடப்பான். அந்த குணம் கெட்டவ சவகாசத்தை விட்டுடுடா, இதனால தான் உனக்கு உன் மாமா மகளே கிடைக்காம போயிட்டான்னு நானும் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன்.என் பேச்சை கேட்டா தானே. அங்க போனா தான் அவன் மூளை ஒழுங்கா யோசிக்கவே செய்யுமாம்!, ” என்று தன் மகன் நடவடிக்கை குறித்து கவலை கொண்டபடி பேசினார் காந்திமதி.

” கல்யாண தேதி நெருங்கி கிட்டு இருக்கு ,இப்பக் கூட இவன் புத்தி இல்லாம சுத்திட்டு இருந்தா என்ன அர்த்தம்?, “என்று வேலம்மாள் சலித்துக் கொள்ள… “அதான் நீங்க வந்துட்டீங்கல… நீங்களே உங்கப் பேரனுக்கு நாலு வார்த்தை நல்லவிதமா எடுத்து சொல்லிட்டு போங்க” என்றார் காந்திமதி.

” எடுத்துச் சொன்னா மட்டும் கேட்கிற ஆளா உன் பையன்.” என்று வேலம்மாள் பொறுமை இழந்து பேசிக் கொண்டிருந்த நேரம்… அவர்கள் யாரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்களோ அவனே அங்கு வந்து சேர்ந்தான்.

” என்ன பாட்டி? திடீர்னு காத்து இந்த பக்கம் வீசுது.. என்ன விசேஷம் உன் பேத்தி கல்யாணத்துக்கு வெத்தல பாக்கு வச்சு அழைச்சிட்டு போக வந்தியா?” என்று கோபமும் கிண்டலுமாய் வினவினான் மதியழகன்.

” நான் அழைக்கிறது இருக்கட்டும் ஐயா எங்க போயிட்டு வரீங்க?” என்று வேலம்மாள் வினவ… தன் பார்வையை அன்னையின் புறம் திருப்பி அர்த்தமாய் ஒரு பார்வை பார்த்தவன்….” எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டே கேட்டா என்ன அர்த்தம்? அதான் உங்க மக வீட்டுக்கு வந்ததும் ஒப்பாரி வச்சிருப்பாங்களே!, இதுக்கு மேல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு?” என்று திமிராகவே பதில் தந்தான் மதியழகன்.

” ஏண்டா கூறு கெட்டவனே… கல்யாணத்தை நிறுத்துறேன்னு சொல்லிட்டு இப்படி கண்டவ வீட்டுல போய் உட்கார்ந்து இருந்தா கல்யாணம் எப்படிடா நிக்கும்?, உன் மாமா மகளுக்கும் உனக்கும் கல்யாணம் நடக்கும்னு ஆசை இருக்கா இல்லையா?.. இந்த கல்யாணத்தை நிறுத்த என்ன ஏற்பாடு பண்ணி வச்சிருக்க? ” என்று பேரனின் திமிரான பேச்சில் உண்டான கோபத்துடன் வினவினார் வேலம்மாள்.

” திட்டமெல்லாம் கைவசம் இருக்கு, அதுக்கு செலவழிக்க காசு தான் இல்ல. கல்யாணம் நம்ம ஊர்ல நடக்கிறதா இருந்தா இந்நேரம் நடக்கிற கதையே வேற… என் கூட சுத்திட்டு இருக்க வெட்டி பசங்கள வெச்சே ஆக வேண்டிய காரியத்தை பாத்துக்குவேன். ஆனா மாமா தான் கல்யாணத்தை மாப்பிள்ளை வீட்டுல நடத்த முடிவு பண்ணிட்டாரே!. இவனுங்கள எல்லாம் அங்க கூட்டிட்டு வர ரொம்ப செலவாகும், அதுக்கு என்ன பண்றதுன்னு தெரியாம தான் முழிச்சிட்டு இருக்கேன் .”என்று தன் வறுமை நிலை குறித்து குறைபட்டான் மதியழகன்.

” என்னடா செய்ய சொல்ற, அவன் தான் பொண்டாட்டி பேச்சைக் கேட்டு புத்தி கெட்டு போய் திரியுறானே!, பொண்ண கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணி வைக்கிறது முறை இல்ல, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தேடி வந்து நம்ம பொண்ண கட்டிட்டு போகணும் அதுதான் முறை..அப்ப தான் ஊரும் உறவும் நம்மள மதிப்பாங்கன்னு சொன்னா எங்க கேக்குறான், மாப்பிள வசதியான குடும்பத்தை சேர்ந்தவங்க, அவங்களுக்கு இந்த சின்ன ஊரு சரிப்பட்டு வராது, நம்மளாலையும் அவங்க வசதிக்கு தகுந்த மாதிரி கல்யாணத்தை இழுத்து பிடிச்சு செய்ய முடியாது, அது இதுன்னு கதை சொல்லி கடைசில கல்யாணத்தை மாப்பிள்ளை வீட்டிலேயே பண்ணிக்கலாம்னு சொல்லிட்டான். ” என்று மகனின் முடிவு குறித்து குறைபட்டார் வேலம்மாள்.

” ஏன்மா அப்போ கல்யாணத்துக்கு என்னைக்கு கிளம்பறது….” என்று இடையில் காந்திமதி சந்தேகம் வினவ…..” இப்போ அதுதான் முக்கியமாக்கும். நானே இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடனும்னு யோசிச்சிட்டு இருக்கேன். “என்று வெடிக்கென்று பதில் தந்தார் வேலம்மாள்.

” எனக்கு மட்டும் இந்த கல்யாணம் நடக்கணும்னு ஆசையாவா இருக்கு?, எப்படியாவது இந்த கல்யாணம் நின்னுடனும் தான் நானும் குலசாமியை கும்பிட்டுட்டு இருக்கேன். நான் எதுக்கு கேட்டேன்னா, கல்யாணத்துக்கு இன்னும் நாலு நாள் தான் இருக்கு, இன்னும் ஊருக்கு கிளம்புறத பத்தி அண்ணன் எதுவும் பேசலையே அதான் கேட்டேன்.” என்று தாயின் கோபத்தை பொருட்படுத்தாமல் மீண்டும் அதே கேள்வியை வினவினார் காந்திமதி.

” மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கல்யாணத்துக்கு முதல் நாளே நிச்சயத்த வச்சுக்கலாம்னு சொல்லிட்டாங்களாம், அதனால நிச்சயத்து அன்னைக்கு விடியக் காலைல கிளம்பி சாயந்திரம் அங்க இருக்கிற மாதிரி போனா போதும்னு சொல்லிட்டு இருந்தான். முன்னாடியே போயி மாப்பிள்ளை வீட்டில ஓசி சாப்பாடுக்கு உட்கார முடியுமா? அதான் அப்படி யோசிச்சிருக்கான் போல.நம்ம சொந்தக்காரங்கள எல்லாம் கூட கூட்டிட்டு போற மாதிரி பெரிய பஸ் பேசி வச்சிருக்கான் போல. உன்கிட்ட போன்ல சொன்னாலும் சொல்லுவான். நேர்ல வர கூட வாய்ப்பு இருக்கு. “என்று தான் அறிந்த விபரத்தை கூறினார் வேலம்மாள்.

” அது சரி..நேர்ல வரட்டும் பாத்துக்குறேன், இன்னும் பத்திரிகை கூட வைக்கல…என்ன? ஏதுன்னு? நானும் நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்டா தான் என் மனசு ஆறும். “என்று காந்திமதி பதில் தர இருவரையும் கோபமாய் முறைத்துக் கொண்டிருந்த மதியழகன், ” நான் இந்த கல்யாணத்தை நிறுத்த முடியுமா முடியாதானு யோசிச்சு யோசிச்சே பைத்தியம் பிடிச்சு அலைஞ்சிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா கல்யாணத்துக்கு எப்ப போறது?, எப்படி போறதுன்னு பேசிட்டு இருக்கீங்க?. வர கோபத்துக்கு உங்க ரெண்டு பேரையும் இங்கேயே கொன்னு புகைச்சுடுவேன் “என்றான்.

” இப்ப ஏண்டா எங்க மேல பாயுற?, நீ தாண்டா இந்த கல்யாணத்தை நிறுத்துறேன்னு சொன்ன , முதல்ல அதுக்கான ஏற்பட்ட கவனி, கல்யாணம் நடக்கிறதுக்கு முன்னாடியே உன் மாமன் அவன் பொண்டாட்டி பேச்சை கேட்டுட்டு என்னை வீட்டை விட்டு வெளியே போனு சொல்லாம சொல்லிட்டான். இப்பவே அவ அந்த ஆட்டம் போடுறா அவ ஆசைப்பட்ட மாதிரி கல்யாணமும் முடிஞ்சா உன் அத்தைய கையில பிடிக்க முடியாது.”என்று மருமகள் மீது இருந்த வன்மத்தை கக்கினார் வேலம்மாள்.

” நானும் பணத்துக்கு தான் ஏற்பாடு பண்ணிட்டு இருக்கேன், நாலு அஞ்சு இடத்துல கேட்டு வச்சிருக்கேன், பணம் கைக்கு கிடைக்கவும் பசங்கள கூட்டிட்டு சென்னைக்கு வந்துடுவேன். ” என்று மதிகலன் கூறிக் கொண்டிருக்க இடையில் நுழைந்த காந்திமதி. ” பசங்கள கூட்டிட்டு வந்து பந்திலயா உட்கார வைக்க உட்கார போற? திட்டம் என்னன்னு ஒழுங்கா சொல்லுடா?” என்று பொறுமை இழந்து வினவினார்.

” பெருசா ஒன்னும் இல்ல நான் கூட்டிட்டு வர பசங்கள வச்சு மதுவ அங்க இருந்து கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணிக்குவேன். முகூர்த்த நேரத்துல சரியாமண்டபத்துக்கு மாலையும் கழுத்துமா வந்து நின்னா எங்களை யாரு என்ன செய்ய முடியும்? “என்று தனது திட்டத்தை எளிமையாக விவரித்து முடித்தான் மதியழகன்.

” எல்லாம் சரிதான்…. மண்டபத்துல அத்தனை பேர் இருக்கும் போது உன்னால எப்படி மதுவை கடத்திட்டு போக முடியும்?” என்று தனது சந்தேகத்தை வினவினார் வேலம்மாள்.

” அது பெரிய விஷயம் இல்லை, அவ சாப்பாட்டுல மயக்க மருந்து கலந்து கொடுத்து, சாக்கு மூட்டையில கட்டி, யாருக்கும் தெரியாம மண்டபத்தை விட்டு வெளியே கூட்டிட்டு போயிருவேன்” என்றான் மதியழகன்.

” என் ராசா… இத மட்டும் சரியா செஞ்சு முடிச்சிட்டேனா, உன் மாமன் சொத்து எல்லாம் உனக்கு தான். அதுக்கப்புறம் ஆத்தாளும் மகளும் வேற வழி இல்லாம நம்ம கிட்ட அடங்கி கிடக்குங்க…” என்று ஆர்வமாய் கூறினார் வேலம்மாள்.

” அதான் சொன்னேன்ல நாலு இடத்துல பணம் கேட்டிருக்கேன். தேவைப்பட்ட பணம் கிடைக்கவும் எல்லாத்தையும் பக்காவா செஞ்சு முடிச்சிடுவேன்.” என்று மதியழகன் கூறிக் கொண்டிருக்க, சற்றும் யோசிக்காமல் தனது கையில் இருந்த தங்க வளையலை கழட்டி மதி அழகன் கையில் திணித்தவர்… “என் பேரன் எதுக்கு காசுக்காக நாலு பேர் கிட்ட கையேந்தனும் , இந்தா ராசா இந்த வளையல வச்சுக்கோ, இது அடகு வைப்பையோ வித்து தொலைப்பையோ..அதப்பத்தி எனக்கு கவலை இல்லை, எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தி.. நீயே அவளை கல்யாணம் பண்ணிக்கோ” என்றார் வேலம்மாள்.

” என்னம்மா கொஞ்சம் கூட யோசிக்காம வளையல கழட்டி கொடுத்துட்ட… அண்ணே வளையல் எங்கன்னு கேட்டா என்ன பதில் சொல்லுவ?”என்று காந்திமதி வினவிட….

“நான் என்னத்தையோ சொல்லி சமாளிச்சுக்கிறேன் முதல்ல இந்த கல்யாணம் நிக்கணும்.”என்று பேரன் கூறிய திட்டம் பழிக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் அங்கிருந்து கிளம்பி சென்றார் வேலம்மாள்.

 

Advertisement