21…

தேவைகள் தீர்ந்ததும்

தேடுதல் தீர்ந்திடுமோ…

உண்மை

காதலைத் தேடியே

என் வாழ்வின் பயணம்

நீண்டிடுமோ..

தீபேந்திரனிடம் இருந்து சுஹனியை காக்க வேண்டி தனது இல்லத்திற்கே அழைத்து வந்திருந்தான் கீர்த்தன்.

தன் இல்லத்தில் தஞ்சம் புகுந்தவளுக்கு எந்நேரமும் பாதுகாப்பாய் இருக்கும் படி சித்தேஷிற்கு வெளிப்படையாகவே உத்தரவு பிறப்பித்து இருந்தான் கீர்த்தன்.

முதலாளியின் உத்தரவை ஏற்று சுஹனியின் நிழலாகவே அவளை பின்தொடர்ந்து கொண்டிருந்தான் சித்தேஷ்.

கீர்த்தன் வீட்டில் தங்கிட முடிவெடுத்த பின்.. இதற்கு முன் தங்கி இருந்த விடுதியில் இருந்து தனது உடைமைகளை எடுத்து வர சுஹனி சென்றிட.. அவளுக்கு உதவியாகவும் பாதுகாவலனாகவும் உடன் சென்றான் சித்தேஷ்.

தன் இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளப் போவதாக விடுதியின் பொறுப்பாளர் அகிலாவிடம் சுஹனி தெரிவித்திட.. இத்தகைய சூழலுக்கு தான் தான் காரணம் என்ற குற்ற உணர்வுடன் இருந்த விடுதி பொறுப்பாளர், “சாரி சுஹனி… இப்படி நடக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. நான் உனக்கு ஹெல்ப் பண்ணனும்னு தான் நினைச்சு தான் நீ வேணாம்னு சொல்லியும் கேட்காம உன் வீட்டுக்கு இன்பார்ம் பண்ணினேன், ஆனா அதுவே உனக்கு பிரச்சனையா முடிஞ்சிடுச்சு. “என்று உண்மையான வருத்தத்துடன் பேசினார் அகிலா.

“இட்ஸ் ஓகே மேம். இதுல உங்க தப்பு எதுவும் இல்ல, நான் தான் யார் கிட்டயும் என்னை பத்தின விஷயத்தை தெளிவா சொல்லாம மறைச்சிட்டேன். ” என்று ஒரு நொடி நிறுத்தியவள், தயக்கமான குரலில் மீண்டும் தொடர்ந்தாள், “அப்பா அம்மா இல்லங்கிற விஷயம் தெரிஞ்சா ஒரு சிலர் அனுதாபமா பார்ப்பாங்க, இன்னும் சிலர் அதையே அட்வான்டேஜா எடுத்துப்பாங்க. என்னை யாரும் பாவமா பாக்குறது எனக்கு புடிக்கல. அதே சமயத்துல என்கிட்ட அத்துமீறி நெருங்க நினைக்கிறவங்கள அவாய்ட் பண்ணவும் நினைச்சேன். அதனால தான்.. என்னை பத்தின உண்மையை யார்கிட்டயும் சொல்லல, அதுவே எனக்கு பேக் ஃபயர் ஆயிடுச்சு.. “என்று புன்னகை மாறா முகத்துடனே சமாதானம் கூறினாள் சுஹனி.

” நான் கூட உனக்கும் உன் பேரன்ஸ்க்கும் ஏதோ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் அதனால தான் அவங்க கூட பேசாம அவாய்ட் பண்றேன்னு நினைச்சேன். நான் மட்டும் இல்ல இந்த ஹாஸ்டல்ல இருக்கிற நிறைய பேர் இப்படித்தான் பேசிக்கிட்டாங்க.. மத்தவங்க பேசறது எல்லாம் கேட்டு அது தான் உண்மையா இருக்குமோன்னு நானும் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். உன் பேரண்ட்ஸ் இல்லாதது மட்டும் இல்ல, வீட்லயும் உனக்கு ஏதோ பெரிய பிரச்சனை இருக்குன்னு.. உன் அத்தை பையன் இங்க வந்து நிக்கும் போது தான் எனக்கே புரிஞ்சது. அதனால தான் இங்க இருந்த இந்த ரெண்டு வருஷத்துல எந்த லீவுக்கும் ஊருக்கு போகாம ஹாஸ்டல்லையே ஸ்டே பண்ணிட்டு இருந்திருக்க..!,”என்று அகிலா கூறிக் கொண்டிருக்க இடையில் நுழைந்த சுஹனி, “அப்பா அம்மாவை தவிர சொந்தம்ன்னு சொல்லிக்க அத்தை பையன தவிர பெருசா வேற யாரும் இல்ல மேம், அவனோட ஆக்டிவிட்டீஸ் எனக்கு புடிக்கல, அதனால தான் வீட்டுக்கு போக பிடிக்காம வேற எங்கேயும் போக வழி இல்லாம இங்கேயே இருந்திடுவேன்.” என்றாள்.

“அப்பா அம்மா இல்ல, சொந்த பந்தமும் இல்ல அப்புறம் எப்படி உன்னோட காலேஜ் ஃபீஸ் ஹாஸ்டல் ஃபீஸ் இதெல்லாம்…” என்று குழப்பத்துடன் அகிலா வினவ..”யூஜி படிக்கும்போதே அப்பா என் பேருல ஒரு பெரிய அமௌன்ட் டெபாசிட் பண்ணி வச்சிருந்தாரு. அதிலிருந்து எனக்கு மாசம் மாசம் இன்டெரெஸ்ட் வந்துக்கிட்டே இருக்கும். அதை வச்சு தான் என்னோட ஹாஸ்டல் காலேஜ் பீஸ் மேனேஜ் பண்ணிட்டு இருந்தேன். அந்த அக்கவுண்ட் டீடைல் பத்தி என் அத்தை பையனுக்கு எதுவும் தெரியாது. அதனால தான் இப்ப வரைக்கும் அவனால என்னை கண்டு பிடிக்க முடியல. “என்று விளக்கம் கொடுத்தாள் சுஹனி.

“ஓ.. உன் அத்தை பையன் உன்னை கண்டுபிடிக்க கூடாதுன்னு தான் பிஜி ஸ்டடிசை கூட வேற காலேஜ்க்கு மாத்திகிட்டயோ..”என்றார் அகிலா.

ஆமாம் என்பது போல் சுஹனி தலை அசைக்க.. ” அது சரி உனக்கு தான் சொல்லிக்கிற மாதிரி சொந்தம் எதுவும் இல்லைன்னு சொன்னியே? அப்போ இப்ப இங்க இருந்து வேற எங்க போகப் போற..?”என்றார் அகிலா.

“இதுவரைக்கும் இருந்ததில்லை இனி எனக்குன்னு புது சொந்தம் கிடைச்சிருக்கு..!”என்று வெட்கம் கலந்த புன்னகையுடன் கூறினாள் சுஹனி.

“புது சொந்தமா! நீ யார சொல்ற?” என்று புரியாத குழப்பத்துடன் ஒரு நொடி யோசித்தவர் நினைவில் கீர்த்தன் எண்ணம் தோன்றிட ..” நீ அந்த கீர்த்தனையா சொல்ற?, நல்லா யோசிச்சு தான் பேசுறியா? ” அதிர்ச்சியுடன் வினவினார் அகிலா.

“நான் நல்லா யோசிச்சு தான் முடிவு எடுத்து இருக்கேன். இனிமே நான் அங்க தான் அவர் கூட தான் இருக்க போறேன்” என்று தனது முடிவை தீர்மானமாக அறிவித்தாள் சுஹனி.

” கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் அவரை உனக்கு தெரியும். அதுக்குள்ள எப்படி?. முன்ன பின்ன தெரியாதவங்க வீட்ல போய் எப்படி உன்னால ஸ்டே பண்ண முடியும் சுஹனி”என்றார் அகிலா.

“முன்ன பின்ன தெரியாத அவர் தான், எனக்காக அவ்வளவு தூரம் வந்தாரு மேம் ” என்று கீர்த்தனுக்காக பேசினாள் சுஹனி.

” நீ சொல்றதும் சரி தான், நீ அவரோட அட்ரஸ் எழுதி கொடுத்து ஹெல்ப் கேட்க சொன்னதும், முதல்ல எனக்கு நம்பிக்கையே இல்லை, போலீஸ் ஸ்டேஷனுக்கே வர மாட்டேன்னு சொன்னவரு, இப்போ எப்படி இந்த விஷயத்தில் ஹெல்ப் பண்ணுவாருன்னு தயங்கி கிட்டே தான் அவரோட வீட்டுக்கு போனேன். நான் நினைச்ச மாதிரியே முதல்ல அவரு என்கிட்ட பேச கூட தயாரா இல்லை. நீ பிரச்சினையில இருக்கிற விஷயத்தை சொல்லி, உனக்கு ஹெல்ப் பண்ணுங்கன்னு எவ்வளவோ கெஞ்சி பார்த்தேன், கொஞ்சம் கூட அவர் என் பேச்சை காது கொடுத்து கேட்கவே இல்லை. கடைசியா வீட்டை விட்டு கிளம்பும்போது அவரோட அசிஸ்டன்ட் கிட்ட என்ன பிரச்சனைன்னு தெளிவா சொல்லிட்டு வந்தேன். அதுக்கப்புறம் மனசு கேட்கல நீ அங்க எந்த நிலைமையில் இருக்கிறாயோனு தவிப்பாவே இருந்தது. எதுக்கும் இன்னொரு தடவை அவர் கிட்ட பேச முயற்சி பண்ணி , ஒருவேளை அவர் ஹெல்ப் பண்ண முடியாதுன்னு மறுத்துட்டா போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளைன்ட் பண்ணிடுவோம்ன்னு யோசிச்சுட்டே தான். மறுபடியும் அவர் வீட்டுக்கு போனேன் அந்த வீட்டில் வேலை பார்க்கிற சமையல் அம்மா.. அவங்க ரெண்டு பேரும் அவசரமா கிளம்பி வெளியூருக்கு எங்கேயோ போனதா சொன்னாங்க.. எந்த ஊருன்னு என்ன ஏதுன்னு விசாரிச்சதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது உனக்கு ஹெல்ப் பண்றதுக்காக தான் அவசர அவசரமா கிளம்பி போயிருக்காங்கன்னு. அதுக்கப்புறம் தான் எனக்கு நிம்மதியா இருந்தது. “என்று உதவி கேட்க சென்ற அன்று நடந்ததை விவரித்தார் அகிலா.

தனக்காக கீர்த்தன் துடிப்பது போல் கற்பனை செய்து பார்த்தவள் மனதுக்குள் மகிழ்ச்சி கொண்டபடி அமைதியாய் அமர்ந்திருக்க, எதிரில் இருந்தவள் முகத்தை வைத்தே அவள் எண்ணத்தை படித்த அகிலா..”இந்த வயசுக்கு நீ எப்படி என்ன மாதிரி யோசிப்பன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது சுஹனி. உனக்கு ஒன்னுனதும் ஓடி வந்து ஹெல்ப் பண்றாரு தான். அதுக்காக நீ அவர் வீட்டுக்கு போய் தங்கறது சரியா இருக்குமா?. ஆயிரம் தான் இருந்தாலும் அவர் மூணாவது மனுஷன். உன் மனசுல முளைச்சிருக்குற ஆசையால அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காத!” என்று அறிவுரை வழங்கினார்.

“இது அவசரத்தால எடுத்த முடிவு இல்லை மேம். நான் அவர் கூட தங்குறது தான் எனக்கு சேப்டி. அவரால மட்டும் தான் என் அத்தை பையன் கிட்ட இருந்து என்னை காப்பாத்த முடியும். அது மட்டும் ரீசன் இல்ல.. எனக்கு அவரை பிடிச்சிருக்கு அவர் மேல அளவுக்கு அதிகமாக நம்பிக்கை இருக்கு அந்த நம்பிக்கையில் தான் அவர் கூட தங்க என் கூடவே இருந்துக்கோன்னு சொன்னதும் நானும் உடனே ஓகே சொல்லிட்டேன்.”என்று தனது மனநிலையை விளக்கினாள் சுஹனி.

இதற்கு மேல் வற்புறுத்தி எந்த பயனும் இல்லை என்று புரிந்து கொண்ட அகிலா, மறுத்து எதுவும் கூறாமல் சுஹனியின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்து அதற்குண்டான வேலைகளை உடனே கவனிக்க துவங்கினார்.

வேண்டிய ஆவணங்களில் கையெழுத்திட்ட பின் தனது உடைமைகளுடன் அதுவரை அடைக்கலம் கொடுத்த விடுதியை விட்டு வெளியேறினாள் சுஹனி.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கணவன்-மனைவி இருவரும் ரத்தப்பிரிவை சோதனை செய்வது அவசியம். கணவன்-மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தரித்தவுடனேயே மகப்பேறு மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~