20…

உனை நினைத்தே…

என் நாட்கள் நீளுதடி..

என்றும் எனை நீங்காமல்

நீ இருந்திட வேண்டுமடி..

அந்த நேரத்தில் கீர்த்தனை சற்றும் எதிர்பார்த்திராத சுஹனி.. தயக்கத்துடன் பேச்சை நிறுத்திக் கொள்ள.. “என்ன பாஸ் இவ்ளோ ஈசியா ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டீங்க, உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு, அதை என்னாலேயே புரிஞ்சுக்க முடியுது உங்களுக்கு புரியலையா!” என்று வியப்புடன் வினவினான் சித்தேஷ்.

“அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிற எல்லாரையும் லவ் பண்ணனும்னு அவசியம் இல்லையே!, அப்படி பார்த்தா முதல்ல நான் உன்னை தான் லவ் பண்ணனும் உனக்கும் எனக்கும் தான் அண்டர்ஸ்டாண்டிங் அவுட் ஸ்டாண்டிங் ரேஞ்சுல இருக்கு.”என்று எரிச்சலான குரலில் பதில் தந்தான் கீர்த்தன்.

“ஏதாவது இருக்கான்னு தானே கேட்டேன், அது லவ்வா இருக்கணும்னு அவசியம் இல்லையே!, அண்ணன், தங்கச்சி; அப்பா, பொண்ணு; ஸ்டுடென்ட், டீச்சர்; இப்படி எது வேணாலும் இருக்கலாமே!, நீங்களா ஏன் அதை லவ் தான்னு கமிட் பண்ணிக்கிறீங்க?..”என்று நியாயமாய் கேள்வி எழுப்பினான் சித்தேஷ்.

” நீ எந்த அர்த்தத்துல கேட்டேனு உனக்கே நல்லா தெரியும் அத நான் உனக்கு சொல்லி புரிய வைக்கணும்னு அவசியம் இல்லை , போ போய் சுஹனியை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணுவாங்கன்னு கேட்டுட்டு வா, நாம உடனே இங்க இருந்து சென்னைக்கு கிளம்பனும்..” என்று உத்தரவு பிறப்பி தான் கீர்த்தன்.

“மேடம் கிட்ட தனியா பேசணும் அதுக்கு நான் டிஸ்டர்பா இருக்க கூடாது அவ்வளவு தானே இதோ கிளம்பிட்டேன். “என்ற சித்தேஷ் அறையை விட்டு வெளியேறும் நோக்கில் அடி எடுத்து வைக்க.. அவன் முதுகில் ஓங்கி தட்டிய கீர்த்தன்.. “வர வர உனக்கு கொழுப்பு அதிகமாயிடுச்சு.. ஊருக்கு வா உன்னை தனியா கவனிச்சிக்கிறேன்..” என்று கோபம் போல் கூறினான்.

” கமிட் ஆனதுக்கு ட்ரீட் வைக்கப் போறீங்களா பாஸ்..!” என்று துள்ளலுடன் சித்தேஷ் வினவிட..”உன் எலும்ப எடுத்து சூப் வைக்க போறேன்.. போடா போய் முதல்ல சொன்ன வேலையை செஞ்சுட்டு வா..”என்று அதிகாரமாய் குரலை உயர்த்த.. முதலாளியின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு அமைதியாய் அங்கிருந்து நகர்ந்தான் சித்தேஷ்.

சுஹனி அருகில் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தவன்.. “அவன் அப்பப்போ இப்படி தான் லூசு மாதிரி ஏதாவது உளறிட்டு இருப்பான்..நீ அவன் பேசுறத எல்லாம் பெருசா எடுத்துக்காத,”என்றவன் ஒரு நொடி தயங்கி, சுஹனியின் வலது கையில் இருந்த கட்டை கவனித்து.. “ஆர் யூ பெட்டர் நவ், பெயின் எதுவும் இல்லையே!, ஏதாவது சாப்பிட்டியா, கைல கட்டுப் போட்டதோட எப்படி சாப்பிட்டு இருப்ப..”என்று அக்கறையுடன் பேசியவன், ஏற்கனவே மேஜையில் வாங்கி அடுக்கி வைக்கப்பட்ட காலை உணவை பிரித்து சுஹனிக்கு ஊட்டி விட துவங்கினான்.

வாயில் புகட்டப்பட்ட உணவை மென்று விழுங்கியபடி.. “ஒன்னும் இல்லன்னு சொன்னீங்க!, அப்போ இந்த அக்கறைக்கு என்ன அர்த்தம்?” என்று குதர்க்கமாய் சுஹனி வினவ..

கையில் ஏந்திய உணவை கீழே வைத்தவன், “இங்க பாரு உனக்கு ஒரு பிரச்சனைன்னு வார்டன் மேம் வீடு தேடி வந்து சொன்னதும் மனசு கேட்காம ஹெல்ப் பண்ண வந்தேன். இதுக்கு வேற எந்த அர்த்தமும் இல்லை, நீயா எதையாவது கற்பனை பண்ணிட்டு உன் வாழ்க்கையை கெடுத்துக்காத!,”என்றபடி எழுந்து கொண்டவன், புகட்டிய உணவை அவள் உண்ட வேகத்திலேயே அவளின் பசியை புரிந்து கொண்டு, மீண்டும் பழைய இடத்திலேயே அமர்ந்து உணவை அள்ளிப் புகட்டத் துவங்கினான்.

“அப்போ இந்த அக்கறை என் மேல இருக்கிற அன்புனால வந்தது இல்லையா?” என்று விடாமல் மீண்டும் வினவினாள் சுஹனி.

” யாராவது கண் முன்னாடி கஷ்டப்படும் போது மனசு ஒரு மாதிரி வலிக்கும், உடனே போய் நம்மளால முடிஞ்ச உதவி பண்ணுவோம்ல அந்த மாதிரி தான். மத்தபடி நான் உன் மேல காட்டுற அக்கறைக்கு வேற எந்த அர்த்தமும் இல்லை. நீயும் இதற்கான அர்த்தத்தை தேட முயற்சி பண்ணாத அது அபத்தமா தான் முடியும் “என்று அறிவுரை வழங்கியபடியே அடுத்தடுத்து உணவை கொடுத்துக் கொண்டே சென்றான் கீர்த்தன்.

“எந்த அர்த்தமும் இல்லாம தான் என்ன கட்டிப்புடிச்சுட்டு ஒரே ஒரு தடவை என்னை பாரு, என் கூட பேசுன்னு கெஞ்சிட்டு இருந்தீங்களா?” என்று வெடுக்கென்று வினவினாள் சுஹனி.

‘மயக்கத்துல இருந்தவளுக்கு இதெல்லாம் எப்படி ஞாபகம் இருக்கு?’ என்று ஒரு நொடி திகைத்தவன், அடுத்த நொடியே சுதாரித்து..”என்ன உளறுற?, நான் எங்க உன்னை கட்டிப்பிடிச்சேன், கனவு எதுவும் கண்டியா?”என்று சிடுசிடுப்புடன் கூறியபடி தன் தடுமாற்றத்தை மறைக்கும் விதமாய், கையில் இருந்த உணவு பொட்டலத்தை அப்படியே கீழே வைத்து விட்டு கை கழுவி விட்டு வந்தான் கீர்த்தன்.

“பொய் சொல்லாதீங்க! என்னால உங்களை உணர முடிஞ்சது.. “என்று சுஹனி விடாமல் வாதம் செய்திட..

“என்ன உணர முடிஞ்சது ஊறுகாய் போட முடிஞ்சதுன்னு லூசுத்தனமா பேசிட்டு இருக்க… நான் உன்னை தேடி வந்தப்போ நீ மயக்கத்துல இருந்த, உன் பக்கத்துல ஒரு அரவேக்காடு இருந்தான். அவன் பெயர் கூட.. ஆங்..தீபேந்திரன், உன்னை சுத்தி ஏதேதோ வரைஞ்சு வைச்சு, உன் கையை கிழிச்சு ரத்தத்தை எடுத்து ஏதோ நவசக்திக்கு பூஜை பண்ண போறேன்னு உளறிட்டு இருந்தான், எப்படியோ அவன் கிட்ட இருந்து உன்னை காப்பாத்தி ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தா, உன் கையில இருந்த காயத்தையும் தூக்க மாத்திரையால நீ மயக்கத்துல இருந்ததையும் பாத்துட்டு சூசைட் பண்ண ட்ரை பண்ணிருக்கியோன்னு சந்தேகப்பட்டு ட்ரீட்மெண்ட் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க, ஒரு வழியா நான் தான் என்னோட இன்புளுயன்ஸ் யூஸ் பண்ணி.. டாக்டரை சரி கட்டி ட்ரீட்மென்ட் பாக்க வச்சிருக்கேன். “என்று தான் சுஹனியை அணுகியதை அணு அளவும் ஒப்புக்கொள்ள மனம் இல்லாமல் பேசினான் கீர்த்தன்.

“இதெல்லாம் வெறும் அக்கறையால மட்டும் தான் பண்ணுறீங்களா கீர்த்து, அதைத் தவிர வேற ஒண்ணுமே இல்லையா?” என்று ஏமாற்றத்துடன் வினவினாள் சுஹனி.

சுஹனியின் சுருக்க அழைப்பில் தடுமாறிய மனதை எண்ணி கோபம் கொண்டான் கீர்த்தன்.

தன்னை தடுமாற செய்தவள் மீதே தனக்குள் உண்டான கோபத்தை திருப்பி “வேற என்ன இருக்கணும்னு நீ எதிர்பார்க்கிற?” என்று துவங்கியவன், சுஹனியின் முகத்தில் பிரதிபலித்த வேதனையை கவனித்து தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு.. “இங்க பாரு இப்போ வரைக்கும் உன்னோட பிரச்சனை முழுசா தீரல.. உன் அரை மெண்டல் அத்தை பையன் எப்ப வேணாலும் உன்னை தேடி வரலாம். அவன் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கலாம்னு மட்டும் யோசி. தேவையில்லாததை யோசிச்சு உன்னை நீயே குழப்பிக்காத!” என்று பிரச்சனையின் தீவிரத்தை எடுத்துரைக்க முயன்றான் கீர்த்தன்.

“என்னது தீபன் திரும்பி வருவானா?”என்று பயத்துடன் வினவினாள் சுஹனி.

“கண்டிப்பா வருவான்.. அவன் உன் மேல பைத்தியமா இருக்கான், சோ நீ எங்க போனாலும் உன்னை தேடி வருவான்” என்றான் கீர்த்தன்.

“அப்போ நான் ஹாஸ்டல் போனாலும் அங்கேயும் என்னைத் தேடி வந்துருவானா?” என்று பதற்றமாய் வினவினாள் சுஹனி.

“நிச்சயமா வருவான், அவன் உன் மேல பைத்தியமா இருக்கான்னு சொல்றதை விட உன்னை அடைஞ்சே தீரனும்னு வெறியோட அலையுறான். சோ இனி நீ ஹாஸ்டல்ல இருக்கிறது சேஃப்டி இல்ல. உனக்கு வேற ஒரு பாதுகாப்பான இடத்தை ஏற்பாடு பண்ணனும். ” என்று தீவிரமாக பேசிக்கொண்டே சென்றான் கீர்த்தன்.

” அவ்வளவு தான, இங்க இருந்து போனதும் உடனே வேற ஹாஸ்டல் மாறிடுறேன்,” என்று ஒருவித அலட்சியத்தோடு கூறினாள் சுஹனி.

” என்ன அவ்வளவு தானான்னு ஈஸியா சொல்லிட்ட?, உன் அத்தை பையன பத்தி இன்னும் உனக்கு முழுசா தெரியல ஹனி, உன்னை அடையுறதுக்காக எந்த லெவலுக்கு வேணாலும் இறங்குவான்.” என்று ஆதங்கத்துடன் பேசினான் கீர்த்தன்.

தனது பெயரின் சுருக்கத்தை தன்னை மறந்து அழைத்தவனை ஒரு நொடி கூர்ந்து கவனித்த சுஹனி “அது என்னோட பிரச்சனை மிஸ்டர் நீங்க தலையிட தேவையில்லை..” என்று வெடுக்கென்று கூறினாள்.

‘உன்னோட பிரச்சனைனா.. என்னை எதுக்கு தேவையில்லாம இந்த பிரச்சனைக்குள்ள இழுத்து விட்ட,’என்று கோபம் கொள்வான் என்று சுஹனி எதிர்பார்த்துக் கொண்டிருக்க அதற்கு எதிர்மறையாய்.. அமைதியான முகபாவத்துடன் சுஹனியை நெருங்கி.. “இங்க பாரு தெரிஞ்சோ தெரியாமலோ என்னை இந்த பிரச்சனைக்குள்ள இழுத்து விட்டுட்ட, இதுக்கு மேல நானே இதுல இருந்து விலகிப் போகணும்னு நினைச்சாலும் என்னால முடியாது. உன்னை உன் சைக்கோ அத்தை பையன் கிட்ட இருந்து காப்பாத்த வேண்டியது என்னோட கடமை, சோ இனி நீ என் வீட்டிலேயே வந்து ஸ்டே பண்ணிக்கோங்க” என்றான் கீர்த்தன்.

தன் செவிகளை எட்டிய செய்தியை நம்ப முடியாமல் திகைப்புடன் கண்களை உருட்டி எதிரில் இருந்தவனை வெறித்து நோக்கினாள் சுஹனி.

அப்பாவித்தனமாய் அகண்டு விரிந்த விழிகளுக்குள் மூழ்க துடித்த மனதை கடினப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டவன், ” இந்த பிரச்சனை தீருற வரைக்கும் நீ என்னோட வீட்டிலேயே இருந்துக்கலாம். இந்த விஷயத்துல நான் உன்னை கட்டாயப்படுத்தறேன்னு நினைக்க வேண்டாம் நான் உன் நல்லதுக்கு தான் சொல்றேன். பிகாஸ் ஹி இஸ் வெரி டேஞ்சரஸ் ஃபெல்லோ ” என்று தன் முடிவை தீர்மானமாக அறிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான் கீர்த்தன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்த வேண்டுமானால். நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைப்பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்கவேண்டும்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~