20.   இனிதாய் ஒரு இணைவு..

சில நியாயங்கள் 

நமக்கு அநியாயமாய் தோன்றலாம்..

சில அநியாயங்கள் 

நியாயம் போல் 

பிம்பம் காட்டி நம்மை 

ஏய்க்கவும் செய்யலாம்..

எந்த நிலையிலும்

நடுநிலை தவறாமல்  சிந்தித்தால்.. 

உண்மையின் பக்கம்  சாயலாம்..

விதுரன் செயலின் மீது கொண்ட கோபத்தை வெளிப்படையாகவே காட்டியவள், வீட்டிற்கு வந்தும் வாசலில் நின்றிருந்த  தேன்மொழியையும்  கண்டும் காணாது அவசரமாய் தனது அறைக்குள் சென்று முடங்கினாள் ஹனிகா.

மருமகளின் அலட்சியத்தை கண்டு தேன்மொழி குழப்பமாய் பார்த்திருக்க அதற்குப் பின் வந்த ராதா, “ உங்களுக்கு எல்லாத்தையும் சொல்றேன் என்கூட வாங்க” என்று அவரையும் அவருடன் இருந்த குழந்தைகளையும் தேன்மொழி  அறைக்கு அழைத்துச் சென்று தான் அறிந்த வரை விபரங்களை கூறத் துவங்கினார். 

எந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது என்று மறைத்து வைக்க நினைத்தானோ,   அதே விஷயம் கொஞ்சம் கொஞ்சமாய் எல்லோருக்கும் தெரியவர குற்ற உணர்வுடன் ஹனிகா முன்வந்து  தலை கவிழ்ந்து நின்றான் விதுரன். 

“ நீங்க நல்லவர்ன்னு  தெரியும் அதுக்காக  கெட்டது செஞ்சவனுக்கும்  நல்லது செய்கிற அளவுக்கு அடிமுட்டாளான நல்லவர்ன்னு  எனக்கு தெரியாம போச்சு.. “ என்று ஹனிகா பொரிந்து தள்ள.. “ ஹனி ப்ளீஸ் என்னையும் கொஞ்சம் பேசவிடு.. “ என்று கெஞ்சலுடன் துவங்கினான் விதுரன்.

“ என்ன பேச போறீங்க  நீங்க செஞ்சது  நியாயம்ன்னு நான் நம்புறதுக்கு  ஏதாவது சப்பைக் கட்டு கட்டுவீங்க அத நான்  கேட்கணுமா?” என்று விடாமல்  ஹனிகா கோபமா காட்ட..” நான் என்ன சொல்ல வரேன்னு கேட்காம இப்படி தான் கோபப்பட்டுகிட்டே இருப்பேனா.. உன்னை மாதிரியே பதிலுக்கு கோபப்பட எனக்கும் தெரியும் ஹனி. பிரச்சனைய பேசும் போது ரெண்டு பேருமே ஈகோ பார்த்து சத்தமா பேச ஆரம்பிச்சா  பிரச்சினைக்கு முடிவே கிடைக்காது.  பொறுமையா உன் கேள்வியை கேளு நான் பதில்  சொல்லுறேன். என் பதில்ல உனக்குத் திருப்தி இல்லனா அதுக்கு அப்புறம் நீ உன்  கோபத்தைக் காட்டு” என்று விதுரன் அப்போதும் பொறுமையாகவே பேசினான். 

“ இதுக்கு மேல கேள்வி கேட்க என்ன இருக்கு.. எனக்கு முன்னாடியே அந்த பாலா யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கு. அவனாலதான் அக்கா தற்கொலை பண்ணிக்கிட்டா, அதனாலதான் எந்த தப்பும் செய்யாமலேயே நீங்க மூணு மாசம் ஜெயில் தண்டனை அனுபவிச்சீங்க..  நம்ம சொந்த பந்தமே  உங்கள தப்பா பேசுச்சு. அந்த அவமானத்தால எத்தனை வருஷம்  நம்ம ஊர் பக்கமே எட்டிப்பார்க்காம இருந்தீங்க,” என்று பழைய கதையை மீண்டும் படித்தாள் ஹனிகா.

“இப்பவும் சிலர் மேல எனக்கு கோபம் இருக்கத்தான் செய்யுது அதுக்காக எல்லாரையும் ஒதுக்கி வச்சுட்டு தனி மரமா நிக்க முடியுமா?,  நிறைகளை மட்டுமே கொண்ட மனுஷன்  யாருமே இல்லைன்னு எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கிட்டு இதை கடந்து வந்துட்டேன் . நீயும் பழச மறந்திட்டு இப்போ நடக்கிறத பத்தி மட்டும் யோசி,  “ என்றான் விதுரன். 

“எது பழைய விஷயம்..  நம்ம கல்யாணத்தப்ப கூட எத்தனை பேர் எத்தனை விதமா பேசுனாங்க.  நீங்க  எப்படி சந்தோஷமா வாழுறீங்கன்னு பார்க்கிறேன்னு, நம்ம முன்னடியே சவால் விட்டாங்க. உங்களுக்கு வேணா எல்லாத்தையும் மறந்துட்டு மன்னிக்கிற  பக்குவம் இருக்கலாம்  நான் அந்த அளவுக்கு பக்குவமான ஆள்  இல்லங்க, உங்கள தப்பா  பேசுனவங்க  வாயை அடக்கணும்,  உங்க மேல இருக்கிற கெட்ட பேரை போக்கணும்னு நான் போராடிட்டு இருக்கேன், நீங்க என்னடானா  உங்க வாழ்க்கைய அழிச்சு இந்த நிலைமைக்கு கொண்டுவந்தவன்  குடும்பத்துக்கு  நல்லது செஞ்சுகிட்டு இருக்கீங்க..  ஒரு பக்கம் உங்களை பார்த்தா கோபமாவும் இன்னொரு பக்கம் பரிதாபமாவும்  இருக்கு..   “ என்று வெறுப்புடன் பேசினாள் ஹனிகா. 

தனக்காக யோசிக்கும் மனைவியை எண்ணி உள்ளுக்குள் நெகிழ்ந்து கொண்டவன் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து, கோபத்தில் நடுங்கும் பெண்ணவள் தளிர் கரங்களை பற்றி தன் கன்னத்தில் பதித்துக் கொண்டு, “ நான் இவ்வளவு செய்யுறது தியாவுக்காக  தான்னு சொன்னா நம்புவியா ஹனி.. “ என்றான் விதுரன். 

நம்பமாட்டேன் என்பது போல   பார்த்து தன் கைகளை விலக்கிக்கொள்ள முயல..  இன்னும் அழுத்தமாய் பற்றிக்கொண்டவன், “ உன் கோபம் நியாயம் தான், உன் இடத்துல யார் இருந்தாலும் கோபம்  வரத்தான் செய்யும். ஆனா  என் செயலுக்கு பின்னாடி ஏதாவது காரணம் இருக்கும்னு உனக்கு தோணலையா? ” என்றான் இறைஞ்சும் குரலில். 

“ நீங்க என்ன காரணம் சொன்னாலும் சரி, சந்தியா சாவுக்கு காரணமா  இருந்தவனை   என்னால மன்னிக்க முடியாது. ”  என்று ஹனிகா பிடிவாதம் பிடிக்க.. “   ஓ..  அப்போ முதல்ல நீ தண்டிக்க வேண்டியது என்னையும்  உன் அப்பாவையும் தான்.. ஏன்னா உன்  அக்காவோட சாவுக்கு முதல் காரணம் நாங்க தான், அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்காம அவசரப்பட்டு கல்யாண ஏற்பாடு பண்ணுனது உன் அப்பாவோட தப்பு. எனக்கு அவளைப் பிடிச்சிருந்த மாதிரி அவளுக்கும்  என்னை  புடிச்சு இருக்கும்னு நினைச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டது என் தப்பு. அவ உணர்வுகளை புரிஞ்சுக்காம நடந்துகிட்ட எல்லாரும்தான் தியாவோட சாவுக்கு காரணம் அப்படி பார்த்தா நீ எங்களையும் தான் தண்டிக்கணும்.. “ என்று வாதாடினான் விதுரன்.

“அப்பா அக்காகிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் கேட்கும் போது நானும் அங்கதான் இருந்தேன், இந்த கல்யாணத்துக்கு உனக்கு சம்மதமா?,  விருப்பம் இல்லேன்னா சொல்லிடுன்னு   அப்பா திரும்பத் திரும்ப  கேட்டாரு, அக்கா அப்போ சரின்னு சந்தோஷமாதான் தலையாட்டினா, அதுனால இதுல அப்பா தப்பு எதுவும் இல்ல.   அப்புறம் நீங்க கல்யாணத்துக்கு முன்னாடி உங்ககிட்ட பேச அக்கா சங்கடப்பட்டது என்னவோ உண்மைதான், அவளுக்கு பதிலா உங்ககிட்ட என்னைய பேச வச்சிருக்கா, அதுக்குன்னு அக்காவுக்கு உங்கள பிடிக்கலன்னு அர்த்தம் இல்ல..  அந்த பாலாதான் அக்காவ டார்ச்சர் பண்ணிக்கிட்டே இருந்திருக்கான், அதனாலதான் அவ உங்க  கூட பேச தயங்கியிருக்கா,  கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் பாலாவோட தொந்தரவு இல்லாம இருக்கவும், உங்கள கொஞ்சம் கொஞ்சமா காதலிக்க ஆரம்பிச்சு  உங்களோட கல்யாண வாழ்க்கையை புதுசா ஆரம்பிச்சு சந்தோசமா வாழணும்னு  ஆசைப்பட்டா, இத  அவளே  என்கிட்ட வெளிப்படையா சொல்லவும்  செஞ்சா.  அதனால  அவளோட சாவுக்கு நீங்களும் காரணமில்ல .. முழுக்க முழுக்க அந்த பாலா  தான் காரணம்..  “ என்று நீண்ட விளக்கம் கொடுத்து  தனது குற்றத்திற்கு வலு சேர்த்தாள்  ஹனிகா. 

“ நீ எப்படி தியாவோட சாவுக்கு பாலா காரணம்ன்னு நினைக்கிறாயோ அதே மாதிரி தான், அவளும்  தன்னையே  குற்றம் சாட்டிட்டு.. அந்த குற்ற உணர்வுல   யாரைப் பத்தியும் யோசிக்காம தற்கொலை முடிவுக்கு வந்தா.  உண்மையை சொல்லனும்னா பாலாவோட தற்கொலைக்கும் தியாவோட தற்கொலைக்கும் யாருமே காரணமில்ல அவங்களோட எண்ணம் மட்டும் தான் காரணம். இவங்களுக்கு மட்டுமில்ல   இந்த உலகத்துல யார்  தற்கொலை பண்ண  முடிவு எடுத்தாலும் அதுக்கு வெளி ஆளுங்க   காரணம் இல்ல,  நாம   தான் இந்த பிரச்சினைக்கு காரணம் நாம செத்துட்டா எல்லா பிரச்சனையும் முடிஞ்சதுன்னு நினைக்கிற அவங்களோட முட்டாள்தனமான எண்ணம்தான் காரணம்,  ஒருத்தவங்களோட   எண்ணமும் செயலும் தான் அவங்க வாழ்க்கையை தீர்மானிக்கிது..  ” என்று சித்தாந்தம் பேசினான் விதுரன்.

“ உங்களுக்கே தெரியும் சந்தியா ரொம்ப சென்சிடிவ் அவளை யாராவது ஒரு வார்த்தை தப்பா பேசினா அவளால தாங்கிக்க முடியாது, இன்னைக்கு நம்ம முன்னாடியே சந்தியாவ  துரோகி பச்சோந்தி இப்படி வாய்க்கு  வந்த வார்த்தைய சொல்லி திட்டினாங்க. பாலாவோட தற்கொலைக்கு அவ தான்  காரணமா இருப்பாளோன்னு  குற்ற உணர்வுல,   ஒருவேளை இந்த விஷயம்    நம்ம சொந்தபந்ததுக்கோ, உங்களுக்கோ தெரிஞ்சா  நம்ம  குடும்பமானம் போயிடுங்கிற பயத்துல  தற்கொலை முடிவுக்கு வந்திருப்பா.. தற்கொலைங்கிறது தப்பான முடிவு தான் அத நான்  இல்லன்னு சொல்லல ஆனா அந்த முடிவுக்கு வரதுக்கு ஒரு தைரியம் வேணும்.. ஒரு தடவைக்கு பல தடவை யோசிச்சுதான்  அக்கா இந்த முடிவுக்கு வந்திருப்பா. என்னமோ ஒருத்தரோட தற்கொலைக்கு வேற யாரும் காரணமா இருக்க வாய்ப்பில்லைன்னு அடிச்சு சொல்லுறீங்க,  கடன் தொல்லை காதல் தோல்வி, பரீட்சையில தோல்வி, இப்படி எத்தனையோ காரணம் இருக்கு ஒருத்தரோட தற்கொலைக்கு இது எல்லாத்துக்கும் அவங்க மட்டும்தான் காரணமா?,  தற்கொலை பண்ண  நினைக்கிறவங்க என்ன சந்தோஷமாவா சாகுறாங்க, சந்தியா உங்க கூட வாழனும் நினைச்சா  ஆனா அவள   தற்கொலைக்கு  தூண்டினது  பாலாவோட  முட்டாள் தனம் தான்.“ என்று தங்களுடன் இல்லாமல் போன சந்தியாவிற்கு சாதகமாக பேசினாள் ஹனிகா. 

“ சரி அவன் முட்டாள்தனமா தற்கொலை பண்ணிக்கிட்டான்.. உன் அக்கா புத்திசாலி தான அவ எதுக்கு தற்கொலை பண்ணனும், இப்படி ஒரு முடிவுக்கு வர்றதுக்கு முன்னாடி இந்த முடிவால யார் யார் பாதிக்கப்படுவாங்கன்னு  ஒரு நிமிஷம் யோசிச்சுயிருந்தா இப்படி ஒரு முடிவுக்கு வந்திருப்பாளா?.  ஊருல உறவுல  அவ நடத்தைய தப்பா  பேசுவாங்கன்னு  பயந்துட்டு தற்கொலை பண்ணியிருப்பான்னு சொன்னியே, அப்படி நாலு பேரு தப்பா பேசினா தான் என்ன?, நாம என்ன செஞ்சாலும் இந்த உலகம் நம்மள நாலுவிதமா  விமர்சிக்கத்தான் செய்யும்.. நல்லது சொல்லும்போது பெருமையா ஏத்துக்க முடியும்போது கெட்டது சொல்லும் போது  அதைத்  தாங்கிக்க முடியாம தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு கோழையா இருக்கிறது  யாரோட தப்பு?. நாம வாழவே கூடாதுன்னு வார்த்தையால காயப்படுத்துறவங்களுக்கு   மத்தியில  நல்லா வாழ்ந்து காட்டுறதுல  தான் இருக்கு நம்மளோட கெத்து.  வரிசையா அடுக்கினியே காரணம் அதுல  எதுலயாவது அடுத்தவங்க தலையீடு இருக்கா.. !, இல்லை இவங்க  தற்கொலை பண்ணிக்கிறதுனால, கடன் வாங்குன பணம் அடைஞ்சிடுமா,  பரிட்சையில பாஸ் மார்க் கிடைச்சிடுமா?,   காதல் தோல்விதான் சரியாகிடுமா?.  எந்த பிரச்சினையும் இல்லாம ஸ்மூத்தா போறதுக்கு வாழ்க்கை என்ன கிரீஸ் போட்ட மிஷினா..?  சில ஏற்ற இறக்கம் இருக்கத்தான் செய்யும் அதுக்காக தற்கொலை பண்ண ஆரம்பிச்சா இந்த உலகத்துல எவனும் உயிரோடு இருக்கமாட்டான். “ என்று  எள்ளலாய்  கூறி சிரித்தவன், “எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு இல்லைன்னு அன்னைக்கு நீ தான் சொன்ன..  இன்னைக்கு உன் அக்காவுக்கு சாதகமா பேசனும்னு தப்பை சரின்னு சொல்லுற!.. தப்பு யார் பண்ணுனாலும் தப்பு தான் ஹனி, நமக்கு பிடிச்சவங்க பண்ணுனா மட்டும் தப்பு சரியாகிடாது.. ” என்றான் விதுரன்.

“ இதுல சந்தியாவோட தப்பு என்ன இருக்கு,  முழுக்க முழுக்க பாலா தான்  தப்பு. அவனோட காதல் உண்மையா இருந்தா என் அப்பாகிட்ட வந்து பேசி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணி இருக்கணும் அத விட்டுட்டு  அக்காவுக்கு  போன் பண்ணி இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லி டார்ச்சர் பண்ணிருக்ககூடாது, முட்டாள்தனமாக யாரைப் பத்தியும்  யோசிக்காம,  தன் குடும்பத்தை பத்தி  கூட யோசிக்காம அவன் எடுத்த தற்கொலை முடிவு தான் சந்தியாவையும் தற்கொலை பண்ண தூண்டிருக்கு.  உங்க தப்பை  சரின்னு நிரூபிக்கிறதுக்கு தேவை இல்லாம என் அக்கா  மேல பழி போடாதீங்க” என்று விதுரனின் விளக்கம் எதையும் காதில் வாங்காது மேலும் வாதம் புரிந்தாள்   ஹனிகா. 

விடாமல் பிடிவாதமாய் வாதம் புரிந்திடும் ஹனிகாவை வெறித்து  பார்த்தவன், “    இப்போ  நான் என்ன சொன்னாலும் கேட்குற மனநிலையில  நீ இல்ல,   என்  மேல  தான் தப்புன்னு உனக்குள்ள ஒரு முடிவு எடுத்து ஆர்க்கிவ் பண்ணிக்கிட்டு இருக்க,  நான் இப்போ என்ன விளக்கம் சொன்னாலும் புரியாது.. ஆனா உனக்கு வேண்டிய விளக்கம் கொடுத்து என் மேல தப்பு இல்லன்னு நிரூபிக்க வேண்டியது என்னோட கடமை.   இப்பவும் சொல்றேன் ரெண்டு பேரோட முடிவுக்கும் யாரும் காரணம் இல்லை அவங்களோட எண்ணம் தான் காரணம்.  சந்தியா சாகறதுக்கு முன்னாடி பாலாவோட குடும்பத்துக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு நினைச்சா,  அதை தான் நான் இப்போ செஞ்சுக்கிட்டு இருக்கேன்.. “ என்று எழுந்து சென்றவன், அதுவரை யாருக்கும் தெரியாமல்  பத்திரமாய் பாதுகாத்து வைத்திருக்கும்  சந்தியாவின்  மரண வாக்குமூல கடிதத்தை  எடுத்துவந்து  ஹனிகா கையில் திணித்து.. “  இதை படிச்சு பார்த்தா, பாலா குடும்பத்துக்கு நான் உதவி செய்றதுக்கான காரணமும்  உன்னோட எல்லா கேள்விக்கும் பதிலும் கிடைக்கும்” என்று   அறையை விட்டு வெளியேறி சென்றான் விதுரன்.

பலமுறை பிரித்து படித்ததற்கான அடையாளம் இருந்தாலும் பத்திரமாய் பாதுகாக்கப்பட்டு வைத்திருந்த  கடிதத்தை மெல்லத்திறந்து சந்தியாவின் முத்து முத்தான கையெழுத்தில்  இருந்த வரிகளை தனக்குள் வாசிக்கத் துவங்கினாள்  ஹனிகா.

அன்புள்ள விதுரா… 

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னை காதலித்தாய்.. நான்  காட்டிய பாராமுகத்திற்கும் இருமடங்கு காதலை திருப்பி தந்தாய். நீ என்னிடம் காட்டிய அன்புக்கு நான் கொஞ்சம் கூட தகுதி இல்லாதவள்..  திருமணமான நாள் முதல் நீ எனக்கு சந்தோஷத்தை மட்டுமே தர முயற்சித்தாய்.. ஆனால் நான் உனக்கு நிரந்தரமான கஷ்டத்தை மட்டும் தான் விட்டுச்செல்ல போகிறேன். என் முடிவை நீ எப்படி ஏற்றுக்கொள்வாய் என்று எனக்கு தெரியவில்லை, நாம் பிரியும் காலம் வந்துவிட்டது…  நான் உன்னிடம் ஒரு உண்மையை மறைத்துவிட்டேன்.. அந்த உண்மையை களங்கமில்லாத காதலை மட்டும் சுமந்து நிற்கும் உன் கண்களை பார்த்து சொல்லும் தைரியம் எனக்கு கொஞ்சம் கூட இல்லை.  அதனால் தான் இப்படி ஒரு முடிவுக்கு வருகிறேன்…… உன்னிடம் இந்த கடிதம் வந்து சேரும் முன் நான் நிரந்தரமாய் உன்னை விட்டு பிரிந்திருப்பேன். ஒருவரின் காதலை உதாசீனப்படுத்திய நான் உன் காதலுக்கு கொஞ்சமும்  தகுதி இல்லாதவள் விதுரா.

நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் பாலா என்பவர்   என்னை உயிருக்குயிராய் காதலித்தார்.   அப்பா காட்டும் நபரையே  மணப்பேன் என்ற தீர்மானத்தில் இருந்த  என்னால் பாலாவின் காதலை ஏற்கவில்லை.  எனக்கு அவர் மீது விருப்பம் இல்லை என்பதை அவரிடம் தெளிவாக கூறிவிட்டேன் இருந்தும் விடாமல் என்னை காதலிப்பதாக கூறி என்னை பின்தொடர்ந்து கொண்டே இருந்தார் .  என் மீது உள்ள காதலால் வெளிநாட்டில் கிடைக்க இருந்த நல்ல வேலை வாய்ப்பையும் தவறவிட்டார். இந்த நிலையில்தான் நம் திருமணம் முடிவானது, உண்மையை சொல்வது என்றால் ஆரம்பத்தில் எனக்கு இந்த திருமணத்தில்  முழு ஈடுபாடுயில்லை அப்பாவின் விருப்பத்திற்காக மட்டுமே சம்மதித்தேன்.  

நம் திருமண செய்தியை அறிந்த பாலா   எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தி விடும்படி பலவிதத்திலும் என்னிடம் கெஞ்சியும் மிரட்டியும் கேட்டுக் கொண்டார். முடிவான திருமணம் இடையில் நின்றால் என் பெற்றோருக்கு  அவமானம் என்று அவரிடம் எத்தனையோ விதத்தில் நானும் வாதாடி பார்த்தேன் ஆனால் என் வார்த்தையை அவர் செவிகளை  எட்டவில்லை, திருமணம் நடக்கும் மண்டபத்திற்கு வந்து திருமணத்தை  நிறுத்துவேன் என்று என்னிடம்  சண்டையிட்டார். நம் திருமணம் நல்லபடியாக நடந்து முடியும் வரை என் உயிர் என் கையில் இல்லை, நீங்கள் என் கழுத்தில் தாலி கட்டிய  அந்த நொடியைக் கூட  என்னால் உணர முடியவில்லை என்னுள் அத்தனை பதற்றம் .. ஒருவழியாக திருமணம் எந்த பிரச்சினையும் இல்லாமல் முடிவடைந்தது.

இனி அந்த பாலாவை பற்றிய கவலை கொள்ளவேண்டியதில்லை என்று நான் நிம்மதி அடைந்த நேரம்  அன்று இரவே பாலா என்னை தொடர்பு கொண்டார்.. நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது உன் நினைவுகளை சுமந்து கொண்டே சுகமாய் இறந்து விடுவேன் என்றார். தாங்கள் தற்கொலை முடிவுக்கு வந்தால் அந்த  குற்ற உணர்வுடன் நானும் தற்கொலை செய்து கொள்வேன்  என்று அவரை எச்சரித்தேன்.. அவர் காதலை நான் ஏற்காததால் என் வார்த்தையை அவர் ஏற்கவில்லை போலும் அன்றிரவே தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இப்போது ஊருக்கு வந்து கோவிலுக்கு சென்று இருந்த இடத்தில் எனது பழைய கல்லூரி நண்பர்கள் மூலம் அவரின் தற்கொலை விஷயம் எனக்கு தெரியவந்தது அது உண்மையா என்று அறிந்துகொள்ள அன்றே பாலாவின் வீட்டிற்கு சென்றேன்.

பாலாவிற்கு  அப்பா இல்லை,  அவர் அம்மா கூலி வேலை செய்பவர் பாலா ஈட்டி வரும் சொற்ப வருமானத்தில் தான் அந்த குடும்பமே தன் வாழ்வாதாரத்தை நடத்திக் கொண்டிருந்தது, வீட்டை தாங்கி நின்ற ஒற்றை ஆண் மகனை இழந்து குடும்பமே நிலைகுலைந்து போயிருக்கிறது . இவர்களின் இந்த நிலைக்கு நான் தான் காரணம், பள்ளிக்கூடம் சென்று படிக்க வேண்டிய பெண் அவள் அம்மாவுடன் கூலி வேலைக்கு செல்கிறாள், என் அலட்சியத்தால் ஒரு குடும்பமே அழிந்து போனது,  என்னால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒரு குடும்பத்தை நிலைகுலையச் செய்த குற்றவாளி நான்.. இதே குற்ற உணர்வுடன் என்னால் வாழ்ந்திட முடியாது விது,  மரணம் மட்டுமே எனக்கான தண்டனை.. இது முட்டாள்தனமான முடிவு என்று நான் அறிவேன், இருந்தும் அந்த முட்டாள்தனத்தை நான் செய்யத் துணிந்துவிட்டேன் காலம் முழுவதும் ஒருவரின் மரணத்திற்கு காரணம் நான் எனும்  குற்ற உணர்வுடன் கைதி போல் வாழ என்னால் முடியாது.. என் மரணம் மட்டுமே என்னை குற்ற உணர்விலிருந்து மீட்டுத்தரும். 

உன்னை விட்டு நிரந்தரமாய் பிரியும் முன் உன்னிடம் ஒரு ரகசியம் கூற வேண்டும் விது, நானும் உன்னை கொஞ்சம் கொஞ்சமாய் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்.. உன்னை விது   என்று உரிமையாய் அழைக்கும் போது உன் கன்னத்தில் குழிவிழ நீ சிரிக்கும் அழகை கண்டு ரசிக்க ஆவலாய் உள்ளது ஆனால் எனக்கு அதற்கான கொடுப்பினை இல்லை, நான் நிரந்தரமாய் உன்னை விட்டு போகிறேன்..

மனைவி என்ற உரிமையுடன்  உன்னுடன் ஒருநாள் கூட வாழாத நான்  உன்னிடம் இதைக் கேட்க சங்கடமாகத்தான் இருக்கிறது இருந்தாலும் எனக்காக நீ இதை செய்வாய் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன், பாலா குடும்பத்திற்கு வேண்டிய உதவி  செய்திடு அது ஒன்றே எனக்கு ஆத்ம  நிறைவு கொடுத்திடும்.

நான் சென்ற பிறகு உனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள் என் அப்பா அம்மாவை நல்லபடியாக பார்த்துக்கொள்.. என் இறப்பின் மூலம் உனக்கு ஏதாவது பிரச்சனை வந்தது என்றால் இந்த கடிதத்தை எனது இறுதி வாக்குமூலமாக காட்டி உன்னை குற்றமற்றவன் என்று நிரூபித்து கொள்..

இப்படிக்கு..

உன் தியா..

என்று கண்ணீருடன் கடிதத்தை படித்து முடித்து விதுரன் இருக்குமிடம் தேடி சென்றாள் ஹனிகா.

கடிதத்தைக் கொடுத்து வாசிக்கச் சொல்லி வந்தவன் மொட்டை மாடிக்கு வந்து மாதவனை தொடர்பு கொண்டான்.. “ அங்க ஒன்னும் பிரச்சனை இல்லையே ஹீரோ சார்.. “ என்று கவலையுடன் விதுரன் விசாரிக்க.. “ பெரிய பிரச்சினையில்ல.. விதுரா.  அவங்க  பையன் சாவுக்கு காரணமாக இருந்துட்டு இப்போ நல்லது  பண்ணுற மாதிரி நடிச்சு ஏமாத்த பார்க்கிறோம்னு  முதல்ல கோபப்பட்டாங்க, அதுக்கப்புறம் பாலா இறந்த செய்தி கேள்விப்பட்டு  சந்தியாவும் தற்கொலை பண்ணிக்கிட்டா.. அவளோட கடைசி ஆசை தான் இதுன்னு சொன்னதும் நிலைமையை  புரிஞ்சு  சமாதானம் ஆகிட்டாங்க.. அங்க ஒன்னும் பிரச்சனையில்லையே ஹனி கோபம் குறைஞ்சிடுச்சா..  “ என்று விசாரித்தார் மாதவன்.

“ எங்க நான்  என்ன சொன்னாலும் கேட்கிற மனநிலையில அவ இல்ல.. திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லி ஆர்க்கிவ் பண்ணிட்டே இருந்தா, வேற வழி இல்லாம  தியா எழுதின லெட்டரை கைல கொடுத்துட்டு  வெளியே வந்துட்டேன், “ என்றான் விதுரன்.

“ அப்போ பிரச்சனை தீர்ந்திடும்.. சந்தியா எல்லா விபரத்தையும் தெளிவா எழுதி வச்சுட்டு தானே போனா.. “ என்று நிம்மதி அடைந்தார் மாதவன்.

கண்ணீர் தேங்கிய விழிகளுடன்  கணவனைத் தேடி வந்த ஹனிகா.. ஆகாயம் வெறித்து  நின்றவன் அருகில் சென்று, “ சாரி மாமா.. சந்தியா தற்கொலைக்கு காரணமாக இருந்தவன் குடும்பத்துக்கு நீங்க ஹெல்ப் பண்றது தெரியவும்  கோபத்துல கண்டபடி பேசிட்டேன்.. “ என்று தயக்கத்துடன் பேச்சைத் துவங்கினாள்.

“ உன் கோபம் ஞாயம் தான் தப்பு சொல்ல முடியாது.. பாலா செஞ்ச முட்டாள் தனத்துக்கு அவன் குடும்பம் எதுக்கு  தண்டனை அனுபவிக்கனும்னு தான் அவங்களுக்கு உதவி செய்ய சொல்லி தியா என்னைக் கேட்டா, என்ன அவளும் அதே முட்டாள்தனத்தை செய்யாம.. கொஞ்சம் நிதானமா யோசிச்சுயிருந்தா தற்கொலை தப்புனு புரிஞ்சிருக்கும், அவளும் என்கூட சேர்ந்து  அந்த குடும்பத்துக்கு நல்லது செஞ்சிருக்கலாம், “ என்று ஏக்கப் பெருமூச்சை வெளியேற்றியவன், “அவ கடைசி ஆசையை நிறைவேத்த தான் நானும் நான் யாருன்னு காட்டிக்காமலேயே அந்த குடும்பத்துக்கு உதவி செஞ்சிட்டு  இருந்தேன்   “ என்று அமைதியாகவே பேசினான் விதுரன்.

“ அக்கா தற்கொலைக்கு நீங்க தான் காரணம்னு   சந்தேகப்பட்டு தப்பா பேசி.. கோர்ட் கேஸ்ன்னு அலைய வச்சாங்க அப்போ இந்த லெட்டரை காட்டியிருந்தா போதுமே உங்க மேல எந்த தப்பும் இல்லைன்னு நிம்மதியா வெளியே வந்திருக்கலாம்.  அத விட்டுட்டு ஏன் இதை யார்கிட்டயும் காட்டாம மறைச்சு வச்சு இவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சீங்க” என்றாள் ஹனிகா.

“ இந்த லெட்டரை காட்டியிருந்தா எனக்கு இருக்கிற பிரச்சினை முடிச்சிருக்கும்,  ஆனா புதுசு புதுசா உங்க குடும்பத்துக்கு பிரச்சனை வந்திருக்கும்.  எந்த அப்பா அம்மாவுக்காக     கல்யாணம் பண்ணிக்கிட்டாளோ அந்த அம்மா அப்பா சங்கடப்படுவாங்க,  தியா மேல அளவுக்கு அதிகமா பாசம் வைச்சிருந்த உன் அம்மாவால இந்த  உண்மைய தாங்கிக்க முடியாது. அது மட்டும் இல்ல எல்லாரும் என் தியாவை தப்பா பேசியிருப்பாங்க.. அதை என்னால தாங்கிக்க முடியாது அதைவிட இந்த கஷ்டம் ரொம்ப பெரிசு இல்ல” என்றான் விதுரன்.

“ எல்லா கஷ்டத்திலயிருந்தும் தப்பிக்கிறதுக்கு தன்னை தானே   கொன்னுக்கிறதுக்கு பேர் தான் தற்கொலை நினைச்சுகிட்டு இருக்காங்க.. தன்னை மட்டுமல்ல தன்னை சேர்ந்தவங்களோட நிம்மதியும் சேர்த்து கொல்லுறதுக்கு   பேருதான் தற்கொலை.. இந்த உண்மை புரிஞ்சா போதும் யாரும் இந்த முட்டாள்தனமான முடிவுக்கு போகமாட்டாங்க…”  என்றவள்  தன் அக்கா வாழ கொடுத்து வைக்காத வாழ்வு இனி தனக்கு சொந்தம் என்ற கனத்த மனதுடனும்..   ஒரு உயிர் இறந்த பிறகும் அதற்கு மரியாதை  செய்யும் நல்லவன் தன்னவன் என்ற கர்வத்துடனும்  விதுரன்  தோள்களில் சாய்ந்து கொண்டாள் ஹனிகா.

என்னாகுமோ ஏதாகுமோ என்று பதற்றம் அடைய செய்த பிரச்சனை சுகமாய் நிறைவடைந்த நிம்மதியுடன் தன் தோள்களில் தஞ்சம் புகுந்தவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டான் விதுரன்.

சில நாட்கள் கடந்து.. 

ஏற்கனவே ராதா மூலம் சில விபரங்கள் அறிந்திருந்த தேன்மொழிக்கு.. இன்னும் சில விபரங்கள் கூறி நடந்ததை விவரித்து  இது நம்மை தவிர   யாருக்கும் தெரியவேண்டாம்.. முக்கியமாய்   ஹனிகாவின் அம்மாவிற்கு தெரியக்கூடாது என்று  அறிவுறுத்தி இருந்தான் விதுரன். 

ஆகையால் விதுரனின் முதல் மனைவி சந்தியா குறித்த விபரங்கள் அவர்கள் குடும்பத்திற்குள்ளேயே ரகசியமாய் மறைத்து வைக்கப்பட்டது…

தன் மூத்த மகள் மறைவுக்கு காரணம் என்று எண்ணியிருந்தவனே  தன் இளைய மகள் மகிழ்வின் காரணமாய் மாறிட விதுரனின்  மீது இருந்த கோபத்தையும் வெறுப்பையும் குறைத்துக்கொண்டு பாசத்தை காட்ட துவங்கி இருந்தார் வசுந்தரா. 

தன் மகனின் முடிவால் ஒரு பெண்ணின் வாழ்வு அழிந்ததை  எண்ணி வருந்தியவர், இத்தனை நாளாய் சந்தியாவை தவறாக எண்ணியதற்கு வாய்விட்டு மன்னிப்பும் வேண்டிக்கொண்டார். 

.. தன் வாழ்வு அழிய  காரணமானவன் குடும்பத்திற்கு உதவ முன் வந்த விதுரனின் பெருந்தன்மையான குணத்தை எண்ணி பெருமிதம் கொண்டவர், “என் பையன் உங்க வாழ்க்கையும்  சேர்த்து அழிச்சிட்டு செத்துட்டான், இருந்தாலும் உங்க முதல்  மனைவியோட கடைசி ஆசைக்காக பெருந்தன்மையா எங்களுக்கு உதவி  செய்யுறீங்க.. உங்க  இடத்துல வேற யார் இருந்தாலும் இந்தளவுக்கு உதவி செஞ்சிருக்கமாட்டாங்க .” என்று வாயாரப் புகழ்ந்து தனது நன்றியைத் தெரிவித்தார் கனகா.

ஏற்கனவே  குறிக்கப்பட்டிருந்த தேதியில் பாலாவின் தங்கை பாக்யாவின் திருமணம் நடந்தேறியது.. பாலாவின் இடத்தில் அண்ணன் ஸ்தானத்தில் இருந்து எல்லா கடமையையும் எந்த குறையும் இல்லாமல் செய்து கொடுத்தான் விதுரன். முகம் கோணாமல் தன் கணவனுக்கு வேண்டிய உதவிகளை உடனிருந்து செய்து கொடுத்தாள் ஹனிகா. 

சில மாதம் கடந்து..

அலுவலகப் பணியில் மூழ்கியிருந்தவன் அலைபேசி அவசரமாய் சினுங்கியது… திரையில் தெரிந்த தன்னவள்    புகைப்படத்தை  கண்டு   துள்ளிகுதிக்காத குறையாக  எடுத்து பேசியவன்.. பதற்றம் அகலாத முகத்துடன் அவசரமாய் வீடு நோக்கி விரைந்தான்..

“ என்னாச்சு எதுக்கு மயக்கம் வந்துச்சு, அம்மா நீங்க வீட்டுல தான.. இருக்கீங்க, உங்க மருமக ஒழுங்கா சாப்பிட்டாளா இல்லையான்னு  பாத்துக்க கூடாது” என்று தேன்மொழியிடம் கோபம் காட்டினான் விதுரன்.

“ தப்புதான் ராசா இனிமே உன் பொண்டாட்டிய விட்டு ஒரு அடி நகரமாட்டேன் போதுமா…” என்றார் தேன்மொழி.

“ இந்த அக்கறை முன்னாடியே இருந்திருக்கணும், சரி ஹாஸ்பிடல் போனீங்களா டாக்டர் என்ன சொன்னாங்க.. ?” என்று விதுரன்  வினவிட.. “ என் மருமகள மட்டும் இல்ல.. இனி என் பேரப் பிள்ளையையும் நான் பத்திரமா பாத்துக்கணும்ன்னு சொல்லிட்டாரு” என்று  இன்பச்  செய்தியை அறிவித்தார் தேன்மொழி.

தன் செவி  கேட்ட செய்தியை நம்ப முடியாமல் ஹனிகாவின் கன்னம் பற்றி.. “ ஹனிக்குட்டி உண்மையாவா?” என்று   மகிழ்ச்சி ததும்பும் குரலில் விதுரன் வினவிட… “ அதென்ன உண்மையாவா.. நான் என்ன பொய்யா சொல்லுறேன்” என்று தேன்மொழி பொய் கோபம் காட்டிட..

“ அத்தை ..  உங்க பையனுக்கு சதோஷத்துல காது கேட்கல போல.. “ என்று கிண்டலாக சிரித்தவள்..  விதுரன் காதை பிடித்து  தன் அருகில் இழுத்து கொண்டு வந்தவள்.. “ அட விது மாமா.. உன் வாண்டு என் வயித்துல வளருது.. “ என்று  சத்தமாய் அறிவித்தாள்.  

கணவன் மனைவிக்கு நடுவில் நந்தியாய் இருக்க மனமில்லாமல்  தேன்மொழி விலகி சென்றிட.. அடுத்தநொடி தன்னவளை தன்னோடு சேர்த்து   மென்மையாய்  அணைத்து  கொண்டவன்.. “ எவ்ளோ சந்தோசமா  இருக்குன்னு வார்த்தையில சொன்னா புரியாது”  என்று அவள்  செவ்விதழில்   தன் இதழ் பதித்து  சந்தோஷ ராகம்  மீட்டினான் விதுரன்.

சில வருடம் கடந்து..

“ விது மாமா.. உன் பொண்ணு ரொம்ப வாலுத்தனம் பண்ணுறா.. நீ அவளுக்கு ரொம்ப தான் செல்லம்  கொடுக்கிற.. “ என்று அவர்களின் மகள் செய்த   செயலுக்கு நியாயம் கேட்டு வந்து நின்றாள் ஹனிகா.

“ என் தியா குட்டி என்ன பண்ணுனீங்க?” என்று மனைவியை விடுத்து மகளிடம் கேள்வி  கேட்டான் விதுரன்.

“ அது வந்து அப்பா..  அம்மா சொன்னாங்க… உங்களுக்கு அவங்களை தான் ரொம்ப பிடிக்குமாம்..  நான் சொன்னேன் என்னை தான் ரொம்ப பிடிக்கும்னு..  இல்லன்னு அம்மா விடாம அடம்பிடிச்சாங்க ..  அதான் தண்ணிய எடுத்து தலையில ஊத்திட்டேன், “ என்றாள்  ஏழு வயதான தியா. 

“ உன்னை யாரு என் தியா சிங்ககுட்டி கிட்ட சண்டைக்கு போக சொன்னது.. “ என்று மகளுக்கு சாதகமாய் விதுரன்  பேசியவன் மகளை அள்ளி அணைத்து பரிவுடன் நெற்றியில்  முத்தமிட்டு, “ என்ன இருந்தாலும் நீ  செஞ்சது தப்பு, அம்மாகிட்ட சாரி கேளு” என்று தந்தையின்  கண்டிப்புடன் கூறிட.  “ சாரி அம்மா” என்றாள் தியா. 

“ அதான் என் தியா குட்டி சாரி கேட்டுட்டால இன்னும் எதுக்கு முறைச்சுட்டு  இருக்க..   எனக்கு  முதல்ல பிடிச்சது தியா தான் அடுத்து தான் நீ,   இனி குட்டிமா கிட்ட இப்படி வம்பு பண்ணக்கூடாது.. என்ன புரியுதா..” என்று கறாரான குரலில் கூறினான் விதுரன்.

“  பாட்டி அப்பா எனக்கு சப்போர்ட் பண்ணி தான் பேசுனாங்க, இந்த தடவையும்  அம்மா தோத்துட்டாங்க..  அப்பாவுக்கு நான் தான் செல்லம் “ என்று  கத்திக்கொண்டே  தேன்மொழியை நோக்கி ஓடினாள் தியா.

“ எப்ப பாரு உங்க மகளுக்கே சப்போர்ட் பண்ணுங்க உங்களுக்கு நான்  முக்கியமில்லேல  நான் கோவமா போறேன்.. “ என்று விதுரனிடம் கோபம் காட்டி அவர்கள்  அறைக்குள் ஹனிகா சென்றிட.. திருட்டு பூனையாய் அவளை பின் தொடர்ந்து வந்தவன்,  பின்னிருந்து அணைத்து பிடிக்க.. “ கைய எடு மாமா.. “ என்று கோபமாய் விலகி  நின்றாள் ஹனிகா. 

மெய் தீண்டும் நேரம்.. 

பொய் கோபம் கொண்டு…

மெய்யாய் என்னை

கொல்லாதே.. 

என்று அவள் காதில் காதல் ரகசியம் பேசிட.. அதற்கும் ஹனிகா மசியாமல் பிடிவாதமாய்  நிற்க…

வாடிக்கிடந்த வாழ்வில்

வண்ண மலராய் பூத்தாய்

பொய் கோபத்தால் 

உதிர்ந்து விடாதே நீயும்..

உலந்துவிடுவேன் நானும்..

என்று மீண்டும் சரசம் பேசிட..இம்முறை அவன் வரிகளில் இருந்த வலியை உணர்ந்தவள் தன் கோபம் விடுத்து..   தன் வழமையான குறும்புடன்..  இரு கைகளை நீட்டி.. “ தூக்கு மாமா.. “ என்று செய்கை செய்திட.. மறுக்காமல் தன் உயரத்திற்கு தூக்கி  நெற்றி முட்டி கன்னத்தில்  தன் காதலின்   அடையாளத்தை முத்தமாய் பதித்தான்.

தன்னவன் வாழ்வில் இரண்டாவதாய் நுழைந்தாலும்  தன் காதல் கொண்டு   அவன் மனதில் நீங்காத இடம் பிடித்து   விதுரன் வாழ்வில்  ஒன்றென கலந்து போனாள் ஹனிகா. 

நம் வாழ்வில்

இணைசேரும் துணை.. 

நம்மை பிறரிடம் 

விட்டுக்கொடுக்காத உறவாகவும்.. 

என்றும் விட்டுப் பிரியாத 

மறு உயிராகவும்.. 

இருந்தால்  

வாழ்க்கை வாழும் போதே

சொர்க்கம் தான்..