Advertisement

20…

‘ கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டேன், ஆனா அவர் எந்த பதில் சொல்லாம போன வச்சிட்டாரே!. இந்த சகா வேற போன் நம்பர் வாங்கிட்டு போனா!, அவர்கிட்ட பேசினாளா இல்லையான்னு தெரியலையே!, எந்த பதிலும் சொல்லாம இருக்கா… இப்ப என்ன தான் பண்றது… ‘ என்று குழப்பமும் தவிப்பமாய் இருந்தவள் அலைபேசி மெதுவாய் சினுங்கியது.. தொடு திரையில் தெரிந்த எண்ணைக் கண்டதும் குழப்பத்தை விடுத்து ஆவலுடன் அலைபேசியின் சினுங்களை நிறுத்தி காதில் வைத்து…. ” சொல்லு சகா அவர்கிட்ட பேசுனியா?, என்ன சொன்னாரு?, கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடுவாரு தானே?, ” என்று எதிரில் இருந்தவள் பேசிட இடம் கொடுக்காமல் அடுக்கடுக்காய் கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றாள் மதுரிமா.

” அடடடடா கல்யாணத்தை நிறுத்துறதுல எவ்வளவு ஆர்வம்!,கொஞ்சம் என்னையும் பேச விடு…”என்று தோழியை அடக்கியவள்., சில நொடி மவுனத்தின் பின்..” நீ ஏன் இந்த கல்யாணத்தை பண்ணிக்க கூடாது மது. அவர் ரொம்ப நல்லவரா தெரியுறாரு. . ” என்று காவியனுக்காக பரிந்து பேசினாள் சரிகா.

” நீ ஒன்னும் அவருக்கு கேரக்டர் சர்டிபிகேட் கொடுக்க வேணாம். காவியன் நல்லவன்னு எனக்கே தெரியும். அவர் என்ன சொன்னாரு அதை மட்டும் சொல்லு” என்று தோழியின் அறிவுரையை ஏற்க மனமற்று அவசரப்படுத்தினாள் மதுரிமா.

” சொல்றதுக்கு என்ன இருக்கு..உனக்கு விருப்பமில்லாத கல்யாணத்தை எப்படி நிறுத்துறதுன்னு தான் அவரும் யோசிச்சுட்டு இருக்காரு. ” என்று சரிகா கூறிட… ” இதுல யோசிக்க என்ன இருக்கு ?, கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு அவர் தாத்தா கிட்ட சொல்லிட்டா போதுமே எல்லாம் ஏற்படும் தானா நின்னுடும்” என்று வெகு இயல்பாய் கூறினாள் மதுரிமா.

” எவ்வளவு ஈசியா சொல்லிட்ட… நீ உன் வீட்ல இருக்கவங்க கிட்ட இதே மாதிரி சொல்லி கல்யாணத்தை நிறுத்த வேண்டியது தானே” என்றாள் சரிகா.

” என்ன நீ புரியாத மாதிரி பேசுற?, உனக்கு என் வீட்டு சூழ்நிலை தெரியாதா? இந்த கல்யாணத்தை இப்போதைக்கு நான் நிறுத்தினா… அடுத்த முகூர்த்தத்திலேயே எனக்கும் என்னோட அத்தை பையனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க ரெடியா இருக்காங்க என் பாட்டி. அதுக்கு பயந்துட்டே என் அம்மா என்னை இந்த கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்தறாங்க..அது மட்டும் இல்ல எல்லா விஷயத்துலயும் என் பாட்டியோட பேச்சை கேட்டு நடக்கிற என் அப்பா என்னமோ தெரியல இந்த கல்யாண விஷயத்துல ரொம்பவே பிடிவாதமா இருக்காரு. சோ இந்த கல்யாண விஷயத்துல காவியன் தான் ஏதாவது செய்யணும். ஆனா அவர் ஏன் தேவையில்லாம இவ்ளோ யோசிக்கிறாரு.” என்று தனது சூழ்நிலையை விளக்கி முடித்து, காவியன் குறைத்து குறைபாட்டாள் மதுரிமா.

“நீ உன்னோட பாயிண்ட் ஆப் வியூ ல இருந்து மட்டும் யோசிக்காம கொஞ்சம் அவரோட சிச்சுவேஷனையும் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு. உனக்கு உன் வீட்டில பிரச்சனை இருக்கிற மாதிரி.. அவருக்கும் பிரச்சனை இருக்கும்ல” என்று சரிகா கூறிக் கொண்டிருக்க..” அவருக்கு அப்படி என்ன பிரச்சனை?, ” என்று குழப்பமாய் வினவினாள் மதுரிமா.

” அவரோட தாத்தா தான் அவருக்கு இருக்கிற பெரிய சிக்கல்.ரொம்ப நாளா கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்டுட்டே இருந்த தாத்தா கிட்ட உன்னை பார்த்ததும் பிடிச்சிருக்குன்னு போயி காவியன் சொல்லவும், உடனே அவரும் வேற எதைப் பத்தியும் யோசிக்காம கல்யாணத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாட்டையும் பண்ண ஆரம்பிச்சுட்டாரு. பேரனோட கல்யாணத்துல ரொம்ப ஆர்வமா இருக்குற தாத்தா கிட்ட போய்… இந்த கல்யாணம் நடக்காது. எல்லா ஏற்பாட்டையும் உடனே நிறுத்துங்கன்னு எப்படி சொல்றதுன்னு தெரியாம தயங்கிட்டு இருக்காரு. ” என்று காவியனின் சூழ்நிலையை விவரித்தாள் சரிகா.

“அப்போ இந்த கல்யாணம் நிக்க வாய்ப்பே இல்லேல?” என்ற மதுரிமாவின் குரலில் அவளையும் மீறி ஒருவித நிம்மதி வெளிப்பட்டது.

தோழியின் குரலில் இருந்த வேறுபாட்டை உணர்ந்த சரிகா…” ஒரு பக்கம் இந்த கல்யாணத்தை நிறுத்துறதுக்காக எடக்கு மடக்கு வேலையெல்லாம் பண்ற, இன்னொரு பக்கம் கல்யாணம் நின்னுடுமோன்னு பயப்படவும் செய்ற?,உனக்கு என்ன தான் பிரச்சனை?, ஏன் இப்படி ரெண்டு மனசா இருக்க?” என்று மதுவின் மனநிலையை சரியாக கனித்துக் கூறினாள் சரிகா.

தோழி தன் தடுமாறும் மனதை கண்டு கொண்டதை அறிந்து கொண்ட மது உடனே தனது தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு, “நான் ஒன்னும் ரெண்டு மனசா இல்ல, உன்கிட்ட நான் பல தடவை சொல்லிட்டேன்..எனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ண விருப்பம் இல்லை, நான் வேலைக்கு போய் நல்லா சம்பாதிச்சு. என் சொந்தக் காலுல நிக்கனும், அதுக்கப்புறம் ஒருவேளை என்னை புரிஞ்சுகிட்ட, எனக்கு பிடிச்சமானவர பார்த்தேனா கல்யாணத்தை பத்தி யோசிப்பேன்” என்றாள்.

” சொந்த காலுல நிக்கணுமா?, இப்போ மட்டும் என்ன கால வாடகைக்கு எடுத்தா நிக்கிற?, ” என்று வெடிக்கென்று வினவியவன், ஒரு நொடி தயங்கி…” நீ சொன்ன மாதிரி உன் சொந்த காலுல நின்னதுக்கு அப்புறம் இந்த மாதிரி ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்குமான்னு சந்தேகம் தான் மது. காவியன் அந்த அளவுக்கு விரும்புறாரு, உன்னை புரிஞ்சுகிட்டவர், உனக்கு பிடிச்சமானவர பார்த்தா கல்யாணத்தை பத்தி யோசிக்கிறேன்னு சொன்னயே!, காவியனை விட யாரும் உன்னை சரியா புரிஞ்சுக்க முடியாது. நீ பேசுறத எல்லாம் வச்சு பார்க்கும்போது உனக்கும் அவரை புடிச்சிருக்குன்னு தெளிவா தெரியுது அப்புறம் ஏன் தயங்குற பேசாம இந்த கல்யாணத்தை சந்தோஷமா ஏத்துக்கோ … “என்று மீண்டும் மதுரிமாவின் மனதை மாற்றும் முயற்சியில் இறங்கினாள் சரிகா.

” என்ன திடீர்னு இப்படி காவியனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுற?,அன்னைக்கு ஆக்சிடென்ட் நடந்தப்போ நீ தானே அவர் குடிச்சிட்டு விழுந்து கிடக்காரு அது இதுன்னு வீண் பழி போட்ட, அதுமட்டுமில்ல அவரால எனக்கு பெரிய பிரச்சனை வந்துடுமோன்னு பயமுறுத்த வேற செஞ்ச !, இப்ப என்னடா இப்படி ஒரு மனுஷனை பார்க்கவே முடியாதுங்கிற மாதிரி இந்த தாங்கு தாங்குகிற?, ” என்று குழப்பமாய் வினவினாள் மதுரிமா.

“அன்னைக்கு அவர பத்தி முழுசா தெரிஞ்சுக்காம தப்பா பேசிட்டேன்.இன்னைக்கு அவர்கிட்ட பேசுனதுக்கு அப்புறம் தான் அவர் எவ்வளவு நல்லவரு, உன்னை எந்த அளவுக்கு காதலிக்கிறார்னு புரிஞ்சது. என்கிட்ட பேசும்போது உன்னை இழந்துடுவோமோங்கிற வேதனையும் வலியும் அவர் குரல்ல நல்லாவே தெரிஞ்சது. நீ தான சொன்ன அவருக்கு அம்மா இல்ல, உன்னை இன்னொரு அம்மாவா இருக்க சொன்னாருன்னு. அம்மா ஸ்தானத்துல வச்சு உன்னை பார்க்கிறவரு எப்படி உன்னை கஷ்டப்படுத்துவாரு மது. கண்டிப்பா அவர கல்யாணம் பண்ணா உன் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கும். கல்யாணத்துக்கு அப்புறம் தாராளமா நீ வேலைக்கு போ.. காவியன் கண்டிப்பா உன்னை தடுக்க மாட்டாரு.” என்று தோழியின் மனதை கரைக்க முயன்றாள் சரிகா.

” இங்க பாரு நான் என் முடிவுல தெளிவா இருக்கேன். காவியன் நல்லவர் தான் அதுக்காக கல்யாண பந்தத்துக்குள்ள சிக்கிக்க எனக்கு விருப்பமில்லை. கடைசியா அவர் என்ன தான் சொன்னாரு, கல்யாணத்த எப்படியாவது நிறுத்திடுவார் தானே!” என்று காவியன் புறம் சாயத் துவங்கிய மனதை கட்டுப்படுத்திக் கொண்டு பிடிவாதமாக வினவினாள் மதுரிமா.

” உன்னை எல்லாம் திருத்தவே முடியாது. இந்த பிடிவாதம் உன்னை எங்க கொண்டு போய் நிறுத்த போதுன்னு தெரியல.” என்று தோழியின் பிடிவாதத்தை எண்ணி சலித்துக் கொண்டவள், ” உனக்கு பிடிக்காத எதுவும் நடக்காதுன்னு ப்ராமிஸ் பண்ணிருக்காரு. எப்படியாவது அவர் தாத்தா கிட்ட பேசி கல்யாணத்தை நிறுத்திடுவேன்னு சொல்லிருக்காரு. நீ நினைச்ச மாதிரி இந்த கல்யாணம் நின்னுடும் இப்போ உனக்கு சந்தோஷமா?, பாவம் அந்த மனுஷன் தான் ரொம்ப உடைஞ்சு போயிருக்காரு. அவர் குரல்லயே அது நல்லா தெரிஞ்சது. எப்பவும் நீ சொல்லுவியே உனக்கு அடுத்தவங்களை காயப்படுத்த பிடிக்காதுன்னு, இப்ப நீ அந்த தான் செஞ்சுகிட்டு இருக்க மது. நீ நினைச்சிருந்தா ஆரம்பத்திலேயே இந்த கல்யாணத்தை நிறுத்தி இருக்கலாம். தேவையில்லாம இத இவ்வளவு தூரம் இழுத்துட்டு வந்து அந்த மனுஷனை ரொம்பவே கஷ்டப் படுத்திட்ட. உனக்கே தெரியும் நான் கொஞ்சம் சுயநலவாதின்னு, எனக்கு எப்பவும் என்னோட பீலிங் தான் முக்கியம் . லைஃப்ல ஃபர்ஸ்ட் டைம் நான் இன்னொருத்தருக்காக பீல் பண்றேனா அது காவியனுக்காக மட்டும் தான். ” என்று ஆவேசமாக பேசினாள் சரிகா.

” இவ்வளவு நாள் என் கூட நல்லா பழகிட்டு, நீ கூட என்னை சரியா புரிஞ்சுக்கலையே சகா. எனக்கு கல்யாணம் பந்தத்துக்குள்ள நுழைய பயமா இருக்கு. எனக்குள்ள இருக்கிற பயம் முழுசா போனா தான் என்னால கல்யாணத்த பத்தி யோசிக்க முடியும். நானே ஏற்கனவே காவியன நினைச்சு கஷ்டப்பட்டு இருக்கேன். நீயும் என்னை வார்த்தையால நோகடிக்காத…” என்று வேதனை குரலில் கூறினாள் மதுரிமா.

” சரி விடு நடந்தது நடந்து போச்சு இனி அத பத்தி பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. நீ ஆசைப்பட்ட மாதிரி இந்த கல்யாணம் நின்னுரும், அதுக்கப்புறம் உன் அத்தை பையன் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு யோசி” என்றவள் அலைபேசி அழைப்பை துண்டித்தாள்.

தான் கூறிய ஒரு வார்த்தைக்காக தன் விருப்பத்தை விட்டுக் கொடுக்கத் துணிந்த காவியனை எண்ணி உள்ளுக்குள் கலங்கி போனவள்… ‘ சாரி காவியன் கண்டிப்பாக உங்களுக்கு உங்கள புரிஞ்சுகிட்ட நல்ல பொண்ணு கிடப்பா…’என்று எங்கோ இருக்கும் காவியனிடம் மனதார மன்னிப்பு வேண்டினாள் மதுரிமா.

 

Advertisement