2

இளமானின் அறிமுகம்

பாம்பென்று விலகவும்
முடியவில்லை..
பழுதென்று
பழகவும் முடியவில்லை
விளங்காத
பல புதிர்கள்
நிறைந்தது தான்
உறவுகள்..

“ அத்தை”, என்று ஆசையாய் கட்டிக்கொண்ட தன்   அண்ணன் மகளை வியப்புடன்  பார்த்த தேன்மொழி,   “அடி வாலு…. இவ்ளோ  வளர்ந்துட்ட” என்று அடையாளம் கண்டு கொண்ட  மகிழ்வில் சந்தோசமாய்  பேசிட.. “நீங்க என்ன பார்த்தே  ஐந்து வருஷத்துக்கு மேல ஆச்சு…   வளராம என்ன செய்வேனோம்?, கடைசியா நீங்க என்ன பார்த்தப்போ ப்ளஸ்டூ படிச்சிட்டு இருந்தேன்… இப்போ காலேஜ் முடிச்சுடேன்.” என்று வளர்ந்துவிட்டதாய் சொன்னாலும் அதே சிறுபிள்ளைத்தனத்துடன் பேசியவளை, ஆர்வமுடன் பார்த்தவர், “உனக்கு கொஞ்சம் உன் அக்கா சாயல், அவ மட்டும் இந்நேரம் நல்லபடியா  இருந்திருந்தா, நம்ம குடும்பத்துக்குள்ள எதுக்கு  இந்த பிரிவு..?” என்று தேன்மொழி சோகமாய் நிறுத்த, “இப்போ எதுக்கு பழைய விஷயம் அத்தை.   நடந்து முடிஞ்சதை விடுங்க. நீங்க மட்டுமா வந்தீங்க? மாமா வரலையா?”, என்று ஆர்வமாய் கேட்டவள் மான் விழிகள் மண்டபம் முழுவதும் வட்டமிட்டு ஒரு ஓரத்தில் தன் தேடலுக்கு பதில் கிடைத்த நிறைவுடன், “நான் மாமாகிட்ட பேசிட்டு வரேன் அத்தை”, என்று    சிறு துள்ளலுடன் சென்றாள்  அவள்.

திருமணத்திற்கு வந்திருந்த உறவுகள் மீது கவனம் செலுத்தாமல்  ஒதுங்கி அமர்ந்திருந்தவன் பின் வந்து  நின்றவள் இன்னும் அவன் தன்னை கவனிக்காமல் இருக்க, சத்தமில்லாமல் நெருங்கி பின்னிருந்து வளை பூண்ட தளிர் கரம் கொண்டு  விதுரன் கண்களை மென்மையாய் மூடி காது அருகில் மெதுவாய் குனிந்திட அவள் மூச்சுகாற்று அவன் காது மடலில் ரகசியம் பேசியது. தன்னை நெருங்கியிருப்பது  பெண் என்று அவள் தேக வாசம் கொண்டு கணித்தவன், அதிர்வுடன், “ஹே யாரு இது?” என்று பதற்றமான குரலில் வினவிட.. அவன் கண்களிலிருந்து  கைகளை விலக்கிக்கொண்டு  துள்ளிக்குதித்து முன்   வந்து நின்றவள், “என்ன மாமா  பயந்துட்டீங்களா? நான் தான் மாமா” என்று சந்தோசத்துடன் அறிவித்தாள் அவள்.

தன்னுடன் உரிமையாய் விளையாடுபவளை யாரென்று கண்டு கொண்ட விதுரன் முதலில் சந்தோசமாய் அவள் விழி நோக்கி, “ஏய், குட்டிமா நல்லா வளர்ந்துட்ட”, என்று மகிழ்வுடன் சிரித்தவன் முகம் மறுநொடி வாட “நீ இங்க என்ன பண்ணுற?, யாராவது உன்னை என்னோட சேர்த்து வைச்சு பாத்தா அவ்ளோதான், நான் இங்க இருந்து கிளம்புற வரைக்கும் என் பக்கமே தலைகாட்டாம ஓடிடு”, என்று  தன்னிடம் நெருக்கம் காட்டி நின்றவளை பயம்காட்டி விரட்ட முயன்றான் விதுரன்.

“யார் பார்த்து வத்திவைச்சா எனக்கு என்ன விது மாமா, நான் என் மாமா கூட பேசுறேன், என்னை யார் தடுப்பா?” என்று கொஞ்சமும் பயம் இல்லாமல்  இன்னும் அவனை நெருங்கி நின்று, “மாமா  உன் குள்ளக்கத்திரிக்கா இப்போ நல்லா வளர்ந்துட்டேன்ல”, என்று அவன் தோள்களை உரசியபடி நின்று தன் உயரத்தை அளந்து பார்த்தாள் ஹனிகா, விதுரனின் தாய் மாமன் மகள்.

“ஏய் என்ன பண்ணுற? நீ இன்னும் சின்ன குழந்தை இல்ல, இப்படி ஒட்டி ஒட்டி பேசாத”, என்று விதுரன் கூச்சத்துடன் விலகிட.. “ஹனிகா இங்க என்ன பண்ணுற?, கண்டவங்க கூட ஒட்டி உறவாடி குடும்ப மானத்தை  வாங்கத்தான் எல்லாருக்கும் முன்னாடி கிளம்பி வந்தியா?”, என்று அவர்களின் பின்னிருந்து  எல்லையில்லா கோபத்துடன் ஒலித்தது ஹனிகாவின் அம்மா குரல்.

“அம்மா, அவங்க ஒன்னும் கண்டவங்க இல்ல, என் மாமா,   உங்க மருமகன்”, என்று அன்னையை கண்டிக்க குரலை உயர்த்தினாள் ஹனிகா. 

“மகளே இல்லன்னு  ஆனதுக்கு அப்புறம் மாப்பிள்ளை உறவு மட்டும்  என்ன வாழுதாம்?” என்று குத்தலாக பேசினார் வசுந்தரா.

விதுரன் முகம் கோபத்தில் கடுக்க.. “இங்க யாரும் உங்க உறவு வேணும்னு தவம் கிடக்கல” என்று துவங்க,   அடுத்த வார்த்தை பேசும் முன்  அண்ணன் குடும்பத்தை கண்டதும்   வேகமாய்  அங்கு வந்து சேர்ந்த தேன்மொழி, “விது”, என்று மெதுவாய் அழைக்க.. அதற்கு மேலும் அங்கு நிற்க மனமில்லாமல்  தன் அன்னையுடன் விதுரன் விலகி செல்ல,   பெரும்  பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

“இப்போ தான் எல்லாத்தையும் மறந்துட்டு நிம்மதியா இருக்கோம்,  மறுபடியும் எதுக்கு தான் வந்தானோ?” என்று கசந்த குரலில் வசுந்தரா கூற.. “ அவங்களுக்கு சொந்தமான   இடத்தை விக்கிற  விஷயமா  வந்திருக்காங்க, இன்னும் ரெண்டு மூணு நாளுல கிளம்பிடுவாங்க”,  என்று தான் அறிந்த விபரம் கூறினார் கணபதிநாதன்.

“எல்லா விபரமும் தெரிஞ்சிருக்கு போல”,  என்று ஒருமாதிரி குரலில் கூறியவர்,  அதே சலிப்புடன் “இந்த  வெங்கடேசன் மாமாவுக்கு புத்தி குழம்பிடுச்சு போல,  இவங்களுக்கு  தேடிப்போய் பத்திரிக்கை வைச்சிருக்காங்க, இவன் வரான்னு   தெரிஞ்சிருந்தா நான் இந்த பக்கம் வந்திருக்கவேமாட்டேன்”, என்றார்.

 மகளை இழந்த ஆதங்கத்தில் பேசும் மனைவியின் நிலையை  புரிந்த  அவர் கணவர் அதிகம் வாதம் செய்யாமல், “வெங்கடேசன்  என்கிட்ட கேட்டு,  நான் சரின்னு சொன்னதும் தான்  என் தங்கச்சி  வீட்டுக்கு பத்திரிகை  வைச்சார் வசுந்தரா.  வந்த இடத்துல பிரச்சனை வேணாம்”, என்று  மனைவியை அடக்கிவிட்டு, “குட்டிமா இங்க வா, நீ இன்னும் சின்ன குழந்தை இல்ல, யார்கூட பேசணும் யார்கூட  பேசக்கூடாதுன்னு  உனக்கே தெரியும், புரிஞ்சு நடந்துக்கோ”, என்று பொதுப்படையாக  மகளுக்கு அறிவுரை வழங்கியவர்   விதுரன் இருக்கும் எதிர் திசைக்கு தன் குடும்பத்தை அழைத்து சென்றார் கணபதிநாதன்.

“இதுக்கு தான் இங்க வரவேணாம்னு சொன்னேன், என் பேச்சை எங்க கேட்டீங்க?. உங்க பாசமான அண்ணி நம்மள எடுத்தெறிஞ்சு பேச, வழக்கம்போல உங்க  பாசமலர் அண்ணன்   வேடிக்கை பார்க்கிறாரு”, என்று விதுரன் புகைந்து தள்ள.. “அவங்க  பொண்ண இழந்த துக்கத்துல  நாலு வார்த்தை கூடக்குறைய பேசுறாங்க! இதை பெருசா எடுத்துக்க வேணாம் கண்ணா”,  என்று மகனை சமாதானப்படுத்த முயன்றார் தேன்மொழி.

 “இங்க இருந்து அவமானப்பட்ட வரைக்கும் போதும் கிளம்புங்க”, என்று விதுரன் அவசரப்படுத்த, “இருடா.. இவ்ளோ தூரம் வந்துட்டு சொல்லாம கிளம்புனா நல்லா இருக்காது, ஒரு வார்த்தை வெங்கடேசன் அண்ணாகிட்ட சொல்லிட்டு வரேன், அப்புறம் கிளம்பலாம்”  என்று மணப்பெண்ணின் தந்தையை தேடிச்சென்றார் தேன்மொழி.

உறவினர்களை மரியாதையுடன் வரவேற்று கொண்டிருந்தவரை  நெருங்கி, “பையனுக்கு கொஞ்சம் வேலை இருக்கு அண்ணா, அவசரமா கிளம்பவேண்டிய சூழ்நிலை தப்பா எடுத்துக்காதீங்க”, என்று தயக்கத்துடன்  கூறிய தேன்மொழியை கூர்ந்து கவனித்த பெண்ணின் தந்தை, “உன் அண்ணன் ஏதாவது  நினைச்சுக்குவார்னு கிளம்புறியா தேனு?” என்று உண்மை  கண்டுகொண்டு வினவினார்.

“ இல்ல அண்ணா, அது வந்து…” என்று தேன்மொழி தடுமாறிட…” உன் அண்ணனுக்கு உன் மேலயோ உன் பிள்ளை  மேலயோ கோபம் இல்லம்மா… என்ன?  நான் சொல்லுறத நம்ப முடியலையா?, நீங்க ஊருக்கு வந்திருக்கிற விஷயம் தெரிஞ்சதும் கணபதி என்னை வரச்சொல்லி, இத்தனை நாள் செய்யாத தப்புக்கு ஊரைவிட்டு ஒதுங்கி  சொந்தபந்தத்தை பிரிஞ்சிருந்தது போதும் தேன்மொழிக்கும் பத்திரிக்கை வை, அவளும் மாப்பிள்ளையும் விஷேசத்துல   கலந்துக்கிட்டும்னு சொன்னாரு.  அவரு சொன்னதுக்கு அப்புறம் தான் உன் வீடு தேடிவந்து பத்திரிகை வைச்சேன். நீ மறுபடியும் நம்ம சொந்த பந்தத்தோட சேரனும்ங் கிறது தான் உன் அண்ணனோட ஆசை, அண்ணா பழைய மாதிரி பேசலன்னு நினைக்காத.. ஒதுங்கியே இருக்குறதுனால எந்த பிரச்னையும் தீராது,  அடிக்கடி நம்ம சொந்தபந்த விஷேசத்துக்கு வந்துட்டு போ.. கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் சரியாகும்”, என்றவர் விளக்கம் கொடுத்து அறிவுரை வழங்க.. தன்னை மீறி வழிந்த கண்ணீரை துடைத்தபடி மகன் இருக்கும் இடம் வந்து சேர்ந்தார் தேன்மொழி.

சம்பிரதாயத்துக்கு சொல்லிவிட்டு வருவதாக சென்ற அன்னை கண்ணீர் படித்த விழிகளுடன் வருவதை கண்ட விதுரன்  பதற்றத்துடன்… “ என்னாச்சு அம்மா? யாரும் ஏதாவது சொன்னாங்களா?” என்று கோபக்குரலில் வினவிட.. “உன் மாமா தான் நம்மள கல்யாணத்துக்கு வரவைச்சிருக்காரு  கண்ணா” என்று சந்தோஷ மிகுதியில் குரல் நடுங்க கூறினார் தேன்மொழி.

“எதுக்கு மறுபடியும்  அசிங்கப்படுத்தவா?”, என்று சீறினான் விதுரன். “அண்ணனுக்கு நம்ம மேல கோபம் குறைஞ்சிடுச்சு விதுரா.. “ என்ற அன்னையை புரியாமல் பார்த்து, “ அதான் வேணுங்கிற அளவுக்கு அன்னைக்கே அவமானப்படுத்தி பார்த்துட்டாங்கல, இதுக்கு மேல  கோபம் கூடுனா என்ன குறைஞ்சா என்ன?”, என்று அசட்டையாக பேசியவன், “ உங்க பாசமலர் படத்தை ஒட்டிமுடிச்சுட்டீங்கன்னா கிளம்புங்க”, என்று மண்டபத்தில் இருந்து கிளம்புவதிலேயே  குறியாக இருந்தான் விதுரன்.

“ எங்க கிளம்ப சொல்லுற?,  நான் இந்த கல்யாணத்துக்கு வரணும்னு என் அண்ணன் ஆசைபட்டிருக்காரு, நான் வரமாட்டேன்ப்பா”, என்று உள்ளம் கொண்ட உவகையில்  சிறுகுழந்தை போல அடம்பிடித்து  அமர்ந்துகொண்டார் தேன்மொழி.

“அம்மா வரவர நீங்க சின்னப்பிள்ளைய விட மோசமா அடம்பிடிக்கிறீங்க!” என்று சலிப்புடன் அருகில் அமர்ந்தவன், “உங்க பாசமலர் யாரோ ஒருத்தர் கல்யாணத்துக்கு  வரச்சொன்னதுக்கே இந்த குதி குதிக்கிறீங்க… இதே அவர் வீட்டுக்கு வெத்தலை பாக்குவைச்சு அழைச்சா உங்கள கையிலயே பிடிக்கமுடியாது போல”, என்று அன்னையின் சந்தோசத்தை  தானும்  உணர்ந்ததாய் இறுக்கம் தளர்ந்து கேலி செய்தபடி உடன் அமர்ந்தான் விதுரன்.

“அதுவும் ஒருநாள் நடக்கும் பாரு!” என்று தேன்மொழி  கூறிட.. “அவங்க வெத்தலைப்பாக்கு வைச்சு அழைச்சாலும் அந்த வீட்டுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்ல..  ” என்று மெதுவாய் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான் விதுரன்.

நிச்சயத்தாம்பூலம் மாற்றப்பட்டு  கல்யாண பெண்ணிற்கு  ஆசிவழங்க.. உறவுகளில் உள்ள பெரியவர்கள் குடும்பத்துடன்  மேடை ஏறி சந்தனம் குங்குமம் வைக்க,  தேன்மொழி அண்ணன் குடும்பமும் மேடை ஏறியது, இளமையும் குழந்தைத்தனமும் ஒருசேர பெற்ற ஹனிகாவை  பார்த்து.. “இந்த குட்டி வாலு நல்லா வளர்ந்துட்டா,  சேலையில பார்க்கும் போது  ரொம்ப லட்சணமா மகாலட்சுமி மாதிரி  இருக்கா” என்று வழமையான வர்ணனை வார்த்தைகள் கொண்டு, தன் அண்ணனின் இளைய மகளின் அழகை வர்ணித்தார் தேன்மொழி.

“மகாலட்சுமி..” என்று இழுத்து ராகம் பாடியவன், “பார்த்து வீட்டு சுவருல தொங்கவிட்டுறாதீங்க”  என்று  சிரியாமல் கிண்டல் செய்தான் விதுரன். “வாயை கழுவு,  என்ன வார்த்தை சொல்லுற? இவளாவது நீண்ட ஆயுசோட சந்தோசமா வாழனும்”, என்று   கிண்டல் செய்த மகனை கண்டித்தார் தேன்மொழி.

“அம்மா.. நான் அந்த அர்த்ததுல சொல்ல,  நம்ம ஹனி நல்லா இருக்கணும்னு தான் நான் நினைப்பேன்”, என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினான் விதுரன்.

“ஒரு வார்த்தை கொல்லும் ஒரு வார்த்தை வெல்லும் விதுரா.. வாழப்போற பொண்ணை பத்தி பேசும் போது பார்த்துப்பேசு” என்று குரலை உயர்த்தாமலேயே கண்டித்தார் தேன்மொழி.

“இனி பேசுற வார்த்தையில கவனமா இருக்கேன் அம்மா!” என்று பதில் தந்தவன் மனதில் ‘என் அண்ணன் மகனை விட்டுட்டு உங்க தங்கச்சி பையனுக்கு நம்ம பொண்ணை குடுக்குறீங்களே, அவன் எப்படி என் பொண்ணோட சந்தோசமா வாழுறான்னு நானும் பார்க்குறேன்’, என்று விதுரன் சந்தியா திருமணம் முடிவான புதிதில் வசுந்திரா கூறிய வார்த்தை எதிரொலித்தது. ‘ஒருவேளை அவங்க வார்த்தை தான் என் வாழ்க்கையை  அழிச்சுடுச்சோ!’ என்று வலியுடன் எண்ணியவன், தான்  தெரியாமல் கிண்டலாய் சொன்ன வார்த்தை ஹனிகாவை பாதிக்கக்கூடாது என்ற வேண்டுதலுடன் மேடையில்  மலர்ந்த முகமாய் சிரித்தபடி விதுரன் தேன்மொழியை பார்த்து கையசைத்த ஹனிகாவிற்கு  தன்னையும் மீறி கையசைத்தான் விதுரன்.

“என்னடா, என்னென்னவோ சொல்லிட்டு, இப்போ என் மருமகளுக்கு  கையாட்டுற!” என்று சூழ்நிலையை இலகுவாக்க முயன்றார் தேன்மொழி.

“ஆமா உங்க மருமக பேரழகி பாருங்க.. பார்த்ததும்  அவ அழகுல மயங்கி கையாட்ட.. அந்த வானரம் மேடையில் நின்னு என்ன குதிகுதிக்குது பாருங்க. இவ தான் என் தியாவோட  தங்கச்சின்னு  சூடம் அடிச்சு சத்தியம் பண்ணாலும் யாரும் நம்ம மாட்டாங்க, அவ பூவுன்னா இவ புயல், அவளுக்கு சத்தமா பேசக்கூட தெரியாது,  இவ பேசுனா ஊரே அதிரும்.. “ என்று அன்னையின் முயற்சி புரிந்து  சிரித்தபடி பேசினான் விதுரன்.    

“ஏன்டா.. என் மருமகளுக்கு என்ன குறை?” என்று தேன்மொழி நிறுத்த..  “ வாலு ஒன்னு தான் குறை!,  மத்ததெல்லாம் அதிகம் தான், வாய்க்கொழுப்பு, திமிரு, பிடிவாதம் இன்னும் நிறைய  நிறைய இருக்கு உங்க ஆசை மருமககிட்ட” என்று வரிசையாய் அடுக்கினான் விதுரன்.

அவன் அடுக்கிய அத்தனை நிறைகளை கொண்டவள் தான் அவன் வாழ்வையும் நிறைக்கப் போகிறாள் என்று அவன் அறியவில்லை..

நாம் ஒன்று நினைக்க..
தானாய் ஒன்று நடப்பது
விதி நிகழ்த்தும்
விளையாட்டு..
அதன் விதிமுறை அறிந்தால்
வென்றிடலாம்.. விதியையும்
அது நிகழ்த்தும் சதியையும்…