Advertisement

2… விபரீத விருப்பம்…

என் அன்னையின் அன்பை

உன் அரவணைப்பில்

உணர்கின்றேன்..

உன் அன்பில் கரைந்திட

தவிக்கின்றேன்..

என்றும் காதலில்

வாழ்ந்திட துடிக்கின்றேன்..

வெளியில் சென்ற பேரன் இன்னும் வீடு திரும்பிடவில்லை என்று கவலையுடன் வாசலை பார்த்திருந்தவர் முகத்திலிருந்த கவலை கண்டு ஏளனமாய்.. “போன தடவை சொல்லாம கொள்ளாம போனவன், நாலு பேரு கூட மல்லுக்கட்டி போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய் குடும்பமானத்தையே வாங்கிட்டு திரும்ப வந்தான். இன்னைக்கு என்ன பிரச்சனையை இழுத்துட்டு வரப்போறானோ!” என்று இளக்காரமாய் கூறினார் கோமதி காவியனின் பெரியம்மா.

“இன்னைக்கு என்ன நாள்னு மறந்துட்டியா? இன்னைக்கு அவனோட பிறந்தநாள், அவன் வாழ்க்கையில எல்லாத்தையும் இழந்த நாள். இன்னைக்கு ஒருநாளாவது உன் வெறுப்பை எல்லாம் மூட்டை கட்டிவைச்சுட்டு அவன்கிட்ட கொஞ்சம் பாசமா நடந்துக்க கூடாதா? இந்த நாள் வந்தா அவன் வெறுமையா உணருவான்னு.. உனக்கும் தெரியும் தானே… எல்லாம் தெரிஞ்சும் அவனை எப்படி தனியா வெளிய போகவிட்ட?..” என்று வேதனைக்குரலில் வினவினார் நிலவேந்தன் காவியனின் தாத்தா.

“அந்த பைத்தியம்” என்று துவங்கியவர் நிலவேந்தன் கோபப்பார்வையில் சுதாரித்து, “உங்க பேரன் எந்த நேரத்துல எப்படி நடந்துக்குவான்னு யாருக்கு தெரியும்? அதுலையும் என்னையப் பார்த்தாலே வெறிப்பிடிச்சவன் மாதிரி கத்துவான்.. இதுல எங்கயிருந்து என் பேச்சை கேட்பான்!” என்று சற்று எரிச்சலுடன் பதில் தந்தார் கோமதி.

“நீ சொல்லியும் கேட்காம வெளியே கிளம்பிப் போறான்னு, எனக்கு போன் பண்ணி சொல்லி இருந்தா, எங்க இருந்தாலும் உடனே நான் வந்து அவனை தடுத்திருப்பேனே!“ என்றிட.. “எந்நேரமும் உங்க செல்லப்பேரன் எங்க போறான் வரான்னு பாக்குறது தான் எனக்கு வேலையா?” என்று கோமதி பதில் தந்து கொண்டிருக்க.. காவியனை தேடிச்சென்ற பரத் வீட்டினுள் நுழைந்தான்.

வேகமாய் எழுந்து அவன் முன் வந்து நின்றவர்.. “என்னப்பா பரத் காவியனை பற்றி ஏதாவது விபரம் தெரிஞ்சதா?” என்று ஆவலுடன் வினவினார் நிலவேந்தன்.

“ ஒழுங்கா ஒரு ரூமுக்குள்ள பூட்டி வையுங்கன்னு சொன்னா இந்த வீட்டுல யாரு என் பேச்சை கேட்குறா? அடிக்கடி இப்படி அவுத்துட்டு ஒடுறவனை தேடிக் கண்டுபிடிக்கிறது தான் என் பிள்ளைக்கு வேலையா? இவனும் உங்களுக்கு பேரன் தான் அதை மறந்துட்டு வீட்டு வேலைக்காரன் மாதிரி ஓடிப் போனவனை தேடச் சொல்லுறீங்க?“ என்று நிலவேந்தனிடம் மரியாதை இல்லாமல் பேசிய தாயை கோபமாய் முறைத்து.. “ரூமுக்குள்ள பூட்டிவைக்க.. காவியன் ஒன்னும் நீங்க சொல்லுற மாதிரி பைத்தியம் இல்ல. தம்பிய காணோம்னா தேடச்சொல்லி அண்ணன்கிட்ட தான் சொல்லுவாங்க..“ என்று வெடுக்கென்று பதில் தந்தவன் நிலவேந்தன் புறம் திரும்பி, சோகமாய் தலையசைத்து “இல்லை தாத்தா வழக்கமா அவன் போற இடத்துல எல்லாம் தேடித் பார்த்துட்டேன், பழைய வீட்டுலயும் இல்ல..” என்று கவலை படிந்த முகத்துடன் பதில் தந்தவன் தனது மொபைல் போன் அடிக்க.. எடுத்து பேசிடத் துவங்கினான்.

“காவியனுக்கு ஆபத்து இல்லையே!” என்று பதட்டமாய் வினவி எதிர்பக்கம் தரப்பட்ட பதிலில் திருப்தி அடைந்து நிம்மதி பெருமூச்சை வெளியேற்றியவன், “காவியன் இருக்குற இடம் தெரிஞ்சுடுச்சு தாத்தா, நான் போய் கூட்டிட்டு வரேன்” என்று வெளியேறிச் சென்றான் பரத் காவியனின் அண்ணன் கோமதியின் மகன்.

‘சீதா.. நம்ம பேரன் எந்தப் பிரச்சனையும் இல்லாம பத்திரமா வீடு வந்து சேரனும் அவனுக்கு துணையா என்னைக்கும் நீ இருக்கனும்’ என்று மனதில் மண்ணைவிட்டு பிரிந்த தன் மனைவிடம் மனமுருகி வேண்டிக்கொண்டார் நிலவேந்தன்.

மருத்துவமனையில் வேண்டிய சிகிச்சை முடிந்து நல்லபடியாக வீடு திரும்பிய காவியன்.. சில நாட்களாக எதையோ தீவிரமாய் சிந்தித்துக்கொண்டே இருக்க.. அவன் முகத்தில் உண்டான யோசனையைக் கண்டு, “என்ன கண்ணா.. என்ன யோசனை? காயம் இன்னும் வலிக்கிதா? ஹாஸ்பிட்டல் போவோமா?” என்று அக்கறையாய் வினவி அருகில் வந்து அமர்ந்தார் நிலவேந்தன்.

“வலி இல்லை தாத்தா.. கொஞ்சநாளா என் மனசுல ஒரு ஆசை அது சரியான்னு குழப்பம்! என் எண்ணம் நிறைவேறனும்னு ஏக்கம், இப்படி எனக்குள்ளேயே பல போராட்டம்” என்று தன் யோசனையின் காரணம் சொன்னான் காவியன்.

“என் பேரன் ஆசைய நிறைவேத்தத் தான இந்த தாத்தா உயிர சுமந்துட்டு இருக்கேன்… உன் ஆசை என்னன்னு மட்டும் சொல்லு, கண்ணு மூடி திறக்குறதுக்குள்ள தாத்தா நிறைவேத்துறேன்..” என்று நிலவேந்தன் ஆர்வமாய் வினவிட.. “என்ன கேட்டாலும் மறுக்காம எனக்காக செய்வீங்களா தாத்தா?” என்று காவியன் சந்தேகமாய் கேட்க.. “நீ கேட்குறத பார்த்தா ஆசை பெருசா இருக்கும் போல.. “ என்று பொய்யான பயம் காட்டி சிரித்தார் நிலவேந்தன்.

“பெரிய ஆசை தான் தாத்தா.. என் வாழ்நாள் முழுக்க எனக்கு சந்தோசத்தையும் நிம்மதியும் தரப் போற ஆசை..” என்று துவங்கியவன், நிலவேந்தன் முகத்தில் தெரிந்த யோசனை கண்டு, அவர் மறுக்கவே முடியாத விதத்தில் தன் எண்ணத்தை வலியுறுத்தும் விதமாய்… “இந்த தடவை என் பிறந்தநாளுக்கு நீங்க இன்னும் எந்த பரிசும் தரல! இதை மட்டும் செஞ்சீங்கனா அதை விட பெரிய கிப்ட் எனக்கு எதுவும் இல்ல” என்று ஏக்கம் கலந்த குரலில் காவியன் வினவிட.. முகம் மலர பதினைந்து வருடம் கழித்து.. தன் பிறந்தநாளுக்கு பரிசு கேட்ட பேரனை பரிவுடன் பார்த்து “ உனக்கு என்ன வேணும்னு சொல்லு மறுக்காம தாத்தா வாங்கித்தரேன்.. புது கார் வேணுமா? டூர் எங்கையாவது போகனுமா? ” என்று பேரன் விருப்பம் என்னவென்றே அறியாமல் உறுதியாய் வாக்களித்தார் நிலவேந்தன்.

“எனக்கு அந்த பொண்ணு வேணும் தாத்தா.. அவ எப்பவும் என் கூடவே என் பக்கத்துலயே இருக்கனும்” என்று தன் விருப்பதை கூறினான் காவியன்.

“எந்தப்பொண்ணு?” என்று முதலில் புரியாமல் குழம்பியவர்.. பின் பேரனின் மனம் விரும்பும் பெண் யார் என்று புரிந்து கொள்ள முடியாமல் காவியன் முகத்தை ஆவலாய் பார்த்திட.. தன் தாத்தாவின் முகத்தில் இருந்த உணர்வை படித்தவன் போல மென்மையாய் புன்னகை செய்து.. “அன்னைக்கு என்னைய காப்பத்தி ஹாஸ்பிட்டல்ல சேர்த்த பொண்ணை தான் சொல்லுறேன்.. எனக்கு அவ வேணும் தாத்தா” என்றான் காவியன்.

“ என்ன?” என்று பேரனின் விருப்பம் அறிந்து அதிர்ந்தவர் காவியன் முகத்தில் இருந்த தீவிரத்தை உணர்ந்து.. “அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சுருக்கா? கண்ணா.. “ என்றிட..

“ ரொம்ப ரொம்ப ரொம்ப தாத்தா.. என் அம்மா அளவுக்கு” என்று சிறு குழந்தையின் துள்ளலுடன் பதில் தந்தான் காவியன்.

வெகுகாலம் கடந்து பேரன் முகத்தில் அளவில்லா சந்தோசத்தை கண்டவர் மறுக்காமல் அவன் விருப்பதை ஏற்று.. “என் பேரன் விருப்பம் தான் இந்த தாத்தாவோட விருப்பமும்..” என்று தன் சம்மதத்தை கூறிச்சென்றார்.

காவியன் விருப்பதை நிறைவேற்றிவிடும் வேகத்தில் பரத்தை தேடிச்சென்ற நிலவேந்தன்.. தன் பேரனின் ஆசையை கூறி, “ரொம்ப நாள் கழிச்சு அவன் முகத்துல இன்னைக்கு தான் உண்மையான சந்தோசத்தை பார்த்தேன். அது எப்பவும் நிரந்தமா அவன் கூடவே நிலைச்சு இருக்கனும், அது நடக்கணும்னா அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வாழ வரணும் பரத்” என்றார் தாத்தா.

“அவன் தான் புரியாம பேசுறான், நீங்களும் சூழ்நிலை புரியாம அவன் சொல்றதுக்கு எல்லாம் சம்மதம் சொல்லிட்டு வந்தா என்ன அர்த்தம்?, ரோட்டுல அடிபட்டு கிடந்தவன அங்கயே விட்டுவிட்டு போகாம, காப்பாத்தி ஹாஸ்பிட்டலில் சேர்த்துவிட்டு நமக்கும் விபரம் சொன்ன.. அந்த பொண்ணு நல்லவ தான் அதுக்காக அவளையே கல்யாணம் பண்ணனும்னு பிடிவாதம் பிடிக்கிறது சரியில்ல!” என்றான் பரத்.

“நாங்க புரியாம பேசல நீ தான் புரியாம பேசுற, அவன் விரும்புறதுல என்ன தப்பு? எல்லாருக்கும் நமக்கு வர வாழ்கை துணை இப்படி இருக்கனும் அப்படி இருக்கணும்னு நிறைய கனவு இருக்கும், என் பேரன் விரும்புற மாதிரி அந்த பொண்ணு இருந்திருக்கா.. இவனும் ஆசைப்பட்டுட்டான்.. இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு? அவன் ஒன்னும் காதல் கீதல்னு அந்த பொண்ணு பின்னாடி பொறுக்கி மாதிரி சுத்தலையே.. நல்ல பிள்ளையா பொறுப்பா என்கிட்ட கல்யாணம் பண்ணிவையுங்கனு தானே சொல்லுறான். எப்படியும் அவனுக்கு ஒருநல்ல பொண்ணை தேடிபிடிச்சு கல்யாணம் பண்ணி வைக்கத்தானே போறோம், அது அவன் மனசுக்கு பிடிச்ச பொண்ணா இருந்தா இன்னும் சந்தோசம் தானே? தாத்தாவா என் பேரன் ஆசையை நிறைவேத்துறது என் கடமை.. அதனால உன் உதவி இல்லைனானும் என் பேரனுக்கு அந்த பொண்ணை தான் கட்டிவைப்பேன்” என்று தன் முடிவில் உறுதியாய் நின்றார் நிலவேந்தன்.

“உங்க பேரன் ஆசைப்பட்டா மட்டும் போதுமா? அந்த பொண்ணு விருப்பம் என்னன்னு தெரிஞ்சுக்க வேணாமா? இவனுக்கு பிடிச்ச உடனே வாங்கித்தர அந்தப் பொண்ணு ஒன்னும் கடையில காசுக்கு விக்கிற பொம்மை இல்ல, உயிரும் தனிப்பட்ட உணர்வும் இருக்குற ஆள்,! ” என்று கண்டிக்கும் குரலில் சூழ்நிலையை புரியவைக்க முயன்றான் பரத்.

“ காவியன் பேசும் போது அவன் பக்கத்துல நீ இல்லாம போயிட்ட.. அந்தப் பொண்ண பத்தி பேசும் போது அவன் முகத்துல எவ்வளவு சந்தோசம் தெரியுமா? அதை மட்டும் நீ பார்த்திருந்தா இப்படி தயங்கிட்டு நிக்க மாட்ட.. உடனே அந்த பொண்ணை பத்தி விசாரிச்சு கல்யாணத்துக்கு தேவையான ஏற்பாடு செய்யத் தொடங்கிடுவ..” என்று காவியன் காதலை பரத்திற்கு புரியவைக்க முயன்றார் நிலவேந்தன்.

“காவியன் மேல எனக்கு அக்கறை இல்லைன்னு நினைக்கிறீங்களா தாத்தா..?. அவன் சந்தோசத்துக்காக எதைச் செய்யவும் நான் ரெடி தான்.. ஆனா அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருந்தா?.. வேற யார் மேலயாவது காதல் இருந்தா… என்ன செய்றது? வீணா அவனுக்கு நம்பிக்கை தந்துட்டு அத நடத்தி வைக்க முடியாம போனா அதை காவியன் தாங்கிக்கமாட்டான்.. அதுக்கு அப்புறம் அவன் நிலைமை இன்னும் மோசமாகிடும்..” என்று எதார்த்தை கூறினான் பரத்.

“நீ சொல்றதும் சரிதான்.. நான் முதல காவியனுக்கு கவுன்சிலிங் குடுக்குற டாக்டரை பார்த்து இதைப்பத்தி பேசிட்டு வரேன்” என்று கிளம்பிச்சென்றார் நிலவேந்தன்.

பரத் வெளியில் மறுத்தாலும் உள்ளுக்குள் ஒருவேளை தம்பி விரும்பும் பெண் அவன் வாழ்வில் வந்தால் அவன் குணம் மாறுமோ என்ற எண்ணம் வர… தன் தம்பிக்கு உதவிய பெண்ணின் விபரம் அறியும் வேலையில் இறங்கினான்.

 

 

Advertisement