19

நிச்சயதார்த்த விழா..

குழப்பங்கள்  என்னை
சூழ்ந்து நிற்கும்
போதெல்லாம்
வெளிவர முடியாமல்
திணறித்தவிக்கிறேன்..
உன் காதல் கொண்டு
என்னை மீட்டெடுத்து..
தவிப்புகளை தீர்த்திடு.. 

விதுரனின் நல்ல நேரமோ இல்லை ஹனிகாவின் கெட்ட நேரமோ தெரியவில்லை ஹனிகா வந்து  சென்ற சில மணிநேரம் கடந்து,  இட விற்பனை விஷயமாக  செல்வதாக சொல்லிச்சென்ற விதுரன் தன் சொந்த வேலைகளை முடித்துக்கொண்டு பாலாவின் தங்கை பாக்யாவின் திருமணத்திற்கு வேண்டிய சில ஏற்பாடுகளையும் முன்னின்று கவனிக்க  முதல்முறையாக பாலாவின் வீடு வந்து சேர்ந்தான். 

 என்னதான் நாம் புத்திசாலி என்று எண்ணிக்கொண்டு  சிலவற்றை  மறைக்க முயன்று கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தாலும், விதி ஒருநாள் அது சதி செயல்களை நிகழ்த்தி அதுவரை  நடத்திக்கொண்டிருக்கும்  கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அந்தநாள் நாளை தான் என்று அறியாமல் பாலாவின் வீட்டில் தயக்கத்துடன் நுழைந்தான் விதுரன்.

முதன்முறை விதுரனை சந்திப்பதால் அங்கே இருக்கும் எவருக்கும் அவனை யாரென்று  தெரியவில்லை. வாசலில் அமர்ந்திருந்த  வயதான பெண்மணி ஒருவர் வீட்டினுள் நுழையும் புதியவர்களை கேள்வியாய் பார்த்து “யாருப்பா நீங்க   யாரைப் பார்க்கணும்?” என்று கேள்வி எழுப்பிட தன்னை எவ்வாறு அறிமுகப்படுத்திக் கொள்வது என்று தெரியாமல் விதுரன் தயங்கி நின்றிட,  பெரியவரின் குரல் கேட்டு வீட்டினுள்ளிருந்து அவசரமாய் வெளியே வந்தார் பாலாவின் அன்னை கனகா.

“யாரு தம்பி நீங்க?” என்று அவரும் அதே கேள்வியை கேட்டிட..  அப்போதுதான் விதுரனுக்கு பின்  நின்றிருந்த மாதவனைக் கண்ட கனகா, “ அடடே வக்கீல் சார் நீங்களா?, அப்போ இந்த தம்பி தான் பாலாவோட ஃப்ரண்டா! வாங்க வாங்க, இன்னைக்கு தான் நேரில் பார்க்கிறேன் அதான். யாருன்னு தெரியாம பேசிட்டேன் உள்ள வாங்க தம்பி”, என்று விதுரன் எடுத்துக்கொள்ள தயங்கிய உரிமையை தானாகவே முன்வந்து கொடுத்தார் கனகா.

சுற்றியிருந்தவர்கள் யார் என்பது போல் கனகாவை கேள்வியாய் பார்க்க, “நான் சொன்னேன்ல, பாலாவோட ஃபிரண்ட் இந்த கல்யாணம் நடக்கிறதுக்கு இந்த தம்பி தான் காரணம்”, என்று சொந்தபந்தங்களுக்கு விதுரனை அறிமுகம் செய்திட சற்று  சங்கடத்துடனே  வீட்டினுள் நுழைந்தவன், மாதவன் காதருகில் மெல்ல “இவங்க ஒவ்வொரு தடவையும் என்னை பாலாவோட ஃப்ரண்ட்ன்னு  சொல்லும்போது ரொம்ப சங்கடமா இருக்கு,  இதுக்குத்தான் இங்க வரமாட்டேன்னு சொன்னேன்” என்றான் விதுரன்.

“அந்த அளவுக்கு நம்ம சொன்ன பொய்ய உண்மைன்னு நம்பி இருக்காங்கன்னு நீ சந்தோஷப்படனும், இல்லனா நம்ம போலியான வேஷம் வெளியவந்துடும்”, என்று அதே   குரலில் அறிவுறுத்தினார் மாதவன்.

இதுவரை தன்னை வெளிப்படுத்தாமல் உதவிசெய்த அண்ணனின் நண்பனை காண ஆவலுடன் வந்த பாக்கியா, “வாங்க அண்ணா” என்று நன்றியுடன் வரவேற்று,  “இத்தன நாள் நீங்க யாருன்னு கூட சொல்லாம, முகத்தை கூட காட்டாம உதவி பண்ணிட்டு இருந்தீங்க, ஒருவழியா இப்பவாவது எங்களை பார்க்கணும்னு தோணுச்சே!, ஒரு சின்ன நல்லது செஞ்சாலும் நீ கஷ்டப்படறப்ப நான் இத செஞ்சேன்னு ஆயிரம் தடவை சொல்லி காட்டற. மனுஷங்களுக்கு மத்தியில எவ்வளவு பெரிய உதவி செஞ்சுட்டு  ஒண்ணுமே செய்யாத மாதிரி ஒதுங்கிக்க பாத்தீங்களே”  என்று  விதுரனின் செயலை குறிப்பிட்டாள் பாக்கியா. 

“நான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே,  ஃபாரின் காண்ட்ராக்ட் வேலை அதான் வரமுடியல” என்று விதுரன் மழுப்பிட,  “வர முடியாதத கேட்கல,  நீங்க தான் எங்களுக்கு உதவி செய்யறீங்கன்னு   எங்களுக்குத் தெரியக்கூடாதுன்னு மறைக்க நினைச்சது  ஏன்னு கேட்குறேன்  அண்ணா” என்று அதுவரை மனதில் குடைந்து கொண்டிருந்த கேள்வியை கேட்டாள் பாக்யா.

“ மறைக்க நினைச்சிருந்தா நீங்க கூப்பிட்டதும்  வந்திருப்பேனா என்ன? அண்ணன்னு சொல்லிட்டு உங்களுக்கு செஞ்சத ஏன்மா உதவின்னு சொல்ற?” என்று அதற்கும் மழுப்பலாகவே பதில் கூறி அந்த விவாதத்தை முடித்து வைத்தான் விதுரன். 

வந்தவர்களுக்கு கனகா அருந்த தேநீர் கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கி பருகத்துவங்கிய ஆண்கள் இருவரும் அடுத்து பாக்கியாவின்  கேள்வியில் அதிர்ந்து போயினர். “நீங்க என் அண்ணன் கூட காலேஜ்ல படிச்சவரா ?,” என்றாள்.

“ நானும் உன்கிட்ட இதைத்தான் கேக்கனும்னு நினைச்சேன்  தம்பி, பாலாகூடப் படிச்ச பசங்கள எனக்கு ஓரளவுக்கு தெரியும்,  அடிக்கடி நம்ம வீட்டுக்கு கூட  வந்திருக்காங்க ஆனா உன்னை பாத்த மாதிரியே ஞாபகம் இல்லையே!” என்று தனது சந்தேகத்தை வினவினார் கனகா. 

“ இல்லம்மா நான் காலேஜ் ஃபிரண்ட்,  இல்ல அவன்கூட ஸ்கூல்ல படிச்சேன், அவ்வளவா எங்களுக்குள்ள பழக்கம் இல்ல ஆனா எனக்கு ஒரு உதவி தேவைன்னு  தெரிஞ்சதும்  கேட்காமலேயே முன்வந்து அவனோட ஃபாரின் வேலைய எனக்காக விட்டுக்கொடுத்தான்”,  என்று தன் உண்மை மறைக்க  பொய் கூறினான் விதுரன்.

விதுரனின் பொய்யை உண்மை என்று நம்பி கனகாவும் அமைதியானார். 

“ வெளிநாட்டு வேலை  எப்படி போகுது  அண்ணா” என்று விதுரனின் வேலையைப் பற்றி பாக்கியா வினவிட,  “வேலையில ஒன்னும் பிரச்சனை இல்ல மா, ஆனா எனக்குதான் அங்கு இருக்க விருப்பமில்ல அதனால வேலையை விட்டுட்டு வந்துட்டேன்” என்று மேலும் மேலும் பொய்யை வளர்க்காமல் முடித்து வைக்க நினைத்தான் விதுரன்.

“என் பையன் பாலாதான் அந்த பொண்ணு மேல இருந்த  மயக்கத்துல நல்ல சம்பளம் கொட்டிக்குடுக்க  இருந்த வேலைய வேணாம்னு விட்டுட்டான்.  நீயும் ஏன் தம்பி அதே தப்பை செய்யுற. வேலையில ஒன்னும் பிரச்சனை இல்லனா,  நல்ல  வேலைய ஏன் விடணும் தம்பி” என்று அக்கறையுடன் வினவினார் கனகா. 

என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விதுரன் தயக்கத்துடன் அமைதி காக்க, “புதுசா கல்யாணம் ஆகியிருக்கு அம்மா,  சம்பாதிச்ச வரைக்கும் போதும் இனிமேல் சொந்தபந்ததோட   நிம்மதியாக வாழலாம்ன்னு, கோயம்புத்தூர்ல  புதுசா பிசினஸ் ஆரம்பிச்சிருக்கான்”  என்று விதுரனின் உதவிக்கு வந்தார் மாதவன்.

“கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு…  வீட்டிலிருந்தும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல” என்று தன் கள்ளமற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர், “நல்ல வேலையை விடனுமான்னு  இன்னொரு தடவை யோசிச்சுக்கோ  தம்பி”, என்று அதே அக்கறையுடனும்  பேசினார்.

“ அம்மா அது அவரோட சொந்த விருப்பம்”,  என்று தன் அன்னையை அடக்கிவிட்டு, “சாரி அண்ணா, பாலா அண்ணன் எங்களை விட்டு போனதுக்கப்புறம் குடும்பமே நிலைகுலைஞ்சு  போயிடுச்சு, நாங்க நல்ல நிலைமையில இப்ப வாழ்றதுக்கு நீங்கதான் காரணம்.  உங்களை யாரோ வெளியாள் மாதிரி நினைக்க எங்களால முடியல, பாலா அண்ணன் இடத்தில  தான்  உங்கள பார்க்கிறோம், அதனாலதான் உங்களால நடக்குற நல்ல விஷயத்துக்கு  நீங்க கண்டிப்பா வரணும்னு ஆசைப்பட்டேன். அதே  உரிமையில தான் அம்மாவும் கொஞ்சம் அவசரப்பட்டு பேசிட்டாங்க,  நீங்க எதையும்  மனசுல வைச்சுக்காதீங்க அண்ணா”, என்று தன் அன்னையின் அவசர வார்த்தைக்கு மன்னிப்பு வேண்டினாள் பாக்கியா.

“நான் எதையும் தப்பா எடுத்துக்கல மா” என்று பெருந்தன்மையாக எடுத்துக்கொள்ள, அவன் குணத்தைக் கண்ட பெரியவர், “இந்த வயசில எவ்வளவு பொறுப்பா  இருக்க. என்னைக்கோ என் பையன் செஞ்ச சின்னஉதவிக்கு நீ எங்களுக்கு எவ்வளவோ நல்லது பண்ணி இருக்க. உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல தம்பி”, என்றார் நெகிழ்ச்சியுடன். 

“ பெரியவங்க நீங்க பெரிய வர்த்தையெல்லாம் சொல்லாதீங்க அம்மா.  ஒருவிதத்துல உங்களோட நிலைமைக்கு நானும் ஒரு  காரணம்  தான!” என்று அவர்கள் நன்றி உணர்வை ஏற்க மனமின்றி மறுத்தான்  விதுரன். 

என்ன என்பது போல் பெண்கள் இருவரும் புரியாமல் விழிக்க, “அதாவது பாலா அவனோட வேலைய இவனுக்கு விட்டுக்கொடுத்தப்போ விதுரன் வேண்டாம்ன்னு  மறுத்திருந்தா  பாலாவே  அந்த வேலைக்கு  போயிருப்பான் உங்க குடும்பத்துக்கும் இந்த நிலைமை வந்திருக்காது. அதைத்தான் சொல்ல வரான் அப்படித்தானே விதுரா” என்று விதுரன் செய்யத் துணிந்த தவறை திருத்திக் கூறினார் மாதவன்.

“ஆமாம்  அந்த நேரம் நான் கொஞ்சம் யோசித்து முடிவு எடுத்திருந்தா யாருக்கும் இந்த நிலைமை வந்திருக்காது எல்லாரும் சந்தோஷமா இருந்திருப்போம்” என்றான் பெருமூச்சுடன்.

“நடந்து முடிஞ்சதை பத்தி பேசி என்ன பிரயோஜனம் தம்பி?  மத்த விஷயத்துல  எல்லாம் தைரியமா முடிவெடுக்கிறவன் இந்த விஷயத்துல முட்டாள்தனமா  அவசரப்பட்டு முடிவெடுத்து,  எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டான்.   ஒரு  பொண்ண காதலிக்கிற விஷயத்தை முன்னாடியே சொல்லி இருந்தா ஏதாவது செஞ்சு இருக்கலாம்.   தைரியமா அந்த பொண்ணு வீட்டுக்கு போயி நாலு பெரிய மனுஷங்கள வைச்சு பஞ்சாயத்து பண்ணி இருந்திருந்தா இவனை ஏமாத்தின பெண்ணுக்கு சரியான பாடம் சொல்லிகுடுத்த மாதிரி இருந்திருக்கும், அதெல்லாம் விட்டுட்டு   எதைப்பத்தியும் யோசிக்காம எங்களைப் பத்தியும் யோசிக்காம அவசரப்பட்டுட்டான்”, என்று பழைய கதை வேண்டாம் என்றவரே பழைய நினைவுகளை புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சந்தியா பற்றிய பேச்சு எழும்பவும்  அதற்கு பின் அங்கு நிற்க மனமில்லாமல், “நிச்சயதார்த்தத்திற்கு வேண்டிய ஏற்பாடு பண்ணியாச்சு. அம்மா, நீங்க கிளம்பி கோவிலுக்கு வந்தா மட்டும் போதும் மற்ற ஏற்பாடெல்லாம் நாங்களே பார்த்துட்டோம்”,  என்று வந்ததற்கான காரணத்தை சொல்லிக்கிளம்பிட தயாரானான் விதுரன்.

“நீங்க கண்டிப்பா வரணும் அண்ணா. அண்ணியையும் கூட கூட்டிட்டு வரணும் என்னோட அண்ணன்  இடத்துல  நீங்க தான் நிக்கணும்” என்று வற்புறுத்தி அழைத்தாள் பாக்கியா.

“ஆமாம் தம்பி, விருந்தாளி மாதிரி நேரத்துக்கு வரக்கூடாது முன்னாடியே வந்துடனும்”, என்று அன்புடன் கட்டளை விதித்தார் கனகா.

சற்று சங்கடமாக இருந்தாலும் ஏற்றுக் கொண்ட பொறுப்பை சரிவர  முடிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் சரி என்று சம்மதித்து தலையாட்டி  வந்தனர் ஆண்கள் இருவரும்.

கேள்விக்கு விடை தேடும் போது திரும்பும் திசையெல்லாம் விடைக்கான  கதவுகள் அடைத்து கிடைக்க இனி எந்த வழி சென்று விடை காண்பது என்று புரியாமல் தவிப்புடன் அமர்ந்திருந்தாள் ஹனிகா. 

வெளியில் சென்றிருந்த  விதுரன் வீடு வந்து பார்க்கும்போது தன் தலையின் பாரத்தைக் கூட தாங்க முடியாமல் தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்த ஹனிகாவை கண்டதும் வேகமாய் அவள் அருகில் வந்தவன் “என்னடா குட்டிமா? தலை ரொம்ப  வலிக்குதா, நான் வேணும்னா பிடிச்சு விடட்டா?” என்று பரிவுடன் கேட்டு இதமாய் அவள் தலையை பற்றினான்   விதுரன்.

தன்னவனின் இதம்  இதயத்தில் இருக்கும் குழப்பத்தை குறைப்பதுபோல் உணர்ந்தவள், அவள் முதுகின் பின் நின்று இதமாய் தலை வருடியவன்  நெஞ்சிலேயே சரிந்துகொண்டு, “  மாமா.. ஒண்ணுமே புரியல கண்ண கட்டி விட்ட மாதிரி இருக்கு” என்று தன் பிரச்சனை என்னவென்றே விவரிக்காமல் கூறினாள் ஹனிகா.

“யாரது என் ஹனி கண்ணையே கட்டுனது..” என்று  அவள் முன் வந்து அமர்ந்தவன்,  அவள்  கன்னம் பற்றி தன் கண்களை பார்க்க செய்தவன், “என்ன குழப்பம்?” என்றான் ஒற்றை வரியில்.  

சந்தியாவின் மரணத்திற்கு காரணம் தேடிச்சென்று  காரணமானவனே மரணித்து இருக்கும் விஷயத்தை எப்படி சொல்வது என்று தெரியாமல் ஹனி தயங்கிட, “என்கிட்ட என்ன தயக்கம் ?” என்று  மென்மையாய் விசாரித்தான் விதுரன்.

“சொல்றதுக்கு தயக்கம் இல்லை மாமா சொன்னா நீங்க எப்படி எடுத்துக்குவீங்கன்னு  தெரியல” என்று மேலும் தயங்கினாள் ஹனிகா. 

‘நானும் அதே குழப்பத்துல தான் இருக்கேன்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டவன், “நாம செய்றது  தப்பா சரியானு தெரியாத குழப்பத்துல  இருக்கும்போது    எதையும் வெளிப்படையா பேச முடியாது”, என்று  தன்னையே நியாயப்படுத்தும் விதத்தில் அறிவுரை வழங்கினான்  விதுரன்.

“உண்மைதான் மாமா நான் செய்றது  தப்பா சரியான்னு ஒன்னும் புரியல, சரியான வழியில் தான் போறேனான்னு தெரியல…” என்று ஹனிகா மீண்டும் புதிர் போட, “ஒரு பிரச்சனைய நம்ம பக்கத்துல இருந்து யோசிக்கும்  போது நாம செய்யுறது தான் சரின்னு தோணும். பிரச்சனையை விட்டு விலகியிருந்து யோசிச்சா சரியெது தப்புயெதுன்னு புரியும்”, என்று அவள் குழப்பத்திற்கு விடை கூறிக்கொண்டிருந்த நேரம், ராதா மாதவனின்  செல்லப்பிள்ளைகள் அவசரமாய் அறைக்குள் நுழைந்து, விதுரன் மடியில்  ஹரிஹரன் அமர்ந்துகொள்ள ஹனி மடியில் தருணிகா உரிமையாய் ஏறி அமர்ந்து கொள்ள அவர்களின் விவாதத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. 

“ நீங்க இன்னும் தூங்கலையா?”  என்று விதுரன்  குழந்தைகளுடன் பேசிக்கொண்டிருக்க அறையுனுள்  நுழைய  அனுமதி கேட்டு காத்திருந்தனர் குழந்தைகளின் பெற்றோர்கள்.

அவர்களுடன் உள்ளே  வந்த தேன்மொழியும் “ நீ இன்னும்  தூங்கலையா ஹனி,  பிரண்ட்ஸ் வீட்டுக்கு போயிட்டு வந்ததுல இருந்து தலைவலிக்குதுன்னு சொல்லிட்டே இருந்த இன்னேரம் நீ தூங்கிருப்பன்னு நினைச்சேன்”,  என்றார் தேன்மொழி.

தன்னிடம் சொல்லாமல் வெளியில் சென்று வந்தவளை கேள்வியாய்  விதுரன் பார்த்திட,  “ பக்கத்துல இருக்கிற  ஊர் தான்” என்று  சன்னக்குரலில்  கூறினாள் ஹனிகா.

மற்றவர்கள் முன் எதையும் கேட்டுக்கொள்ள மனமின்றி விதுரன் அமைதியாக அது அப்போதைக்கு நிம்மதியை தந்தது ஹனிகாவிற்கு.

“விதுரன் நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்”, என்று மாதவன் விதுரனை தனியாக மாடிக்கு அழைத்துச்செல்ல, “ஆரம்பிச்சிட்டாங்க, இங்க வந்தும்  நீங்க தனியா பேசறத நிறுத்தவே இல்லையா?,  அப்படி உங்களுக்குள்ள என்னதான் ரகசியம் இருக்கு”,  என்று ராதா சலித்துக்கொள்ள, “இவ ஒருத்தி நேரங்காலம் தெரியாம கேள்வி கேட்டுட்டு! ஆம்பளைங்க நாங்க  எத்தனையோ பேசுவோம் உனக்கு என்ன?, நாளைக்கு என்ன கலர் புடவை கட்டணும்னு  கேட்கத்தான ஹனி   ரூமுக்கு வந்த, வந்த வேலையை மட்டும் கவனி” என்று  மனைவியை கண்டித்துவிட்டு விதுரனுடன்  கிளம்பிச்சென்றார் மாதவன்.

“நாங்க வரதுக்கு முன்னாடி ரொம்ப சீரியஸா பேசிட்டு இருந்த மாதிரி தெரிஞ்சது.  உன் முகம் வேற சரி இல்லையே, உங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்ல தான!” என்று அக்கறையுடன் ராதா வினவ, “எந்த பிரச்சனையும் இல்ல அண்ணி,  நார்மலா தான் பேசிட்டு இருந்தோம்”, என்று முடித்தாள் ஹனிகா.

மாடிக்கு தனியே அழைத்து வந்த மாதவன்.. “ஹனி கிட்ட எல்லாம் விபரமும் சொல்லிட்டியா.. ?” என்று கேட்க, “எங்க ஹீரோ சார் எப்படி ஆரம்பிக்கிறது எப்படி முடிகிறது ஒண்ணுமே புரியல. நான் சொன்னா எப்படி எடுத்துக்குவாளோன்னு  வேற பயமா இருக்கு, கோபம் வந்தா என்ன பேசுறோம்னு புரியாம வார்த்தையை விட்டுடுவா”, என்று தன் மனைவியின் குணத்தை சுட்டிக்காட்டினான் விதுரன்.

“அதுக்காக சொல்லாமலேயே மறைக்கலாம்னு  நினைக்கிறாயா?, நாளைக்கு நிச்சயதார்த்த  வீட்டுல யாராவது சொல்லி  உண்மை தெரிஞ்சா என்ன செய்வ?” என்று நியாயமாய் கேள்வி கேட்டார் மாதவன்.

“அவங்க  உண்மைன்னு நினைக்கிற விஷயத்தை தானே ஹனிக்கிட்ட  சொல்லுவாங்க, அந்த பொண்ணோட அண்ணன் காதல் தோல்வி தாங்காம இறந்துட்டான், அவனோட இடத்தில இருந்து இந்த கல்யாண ஏற்பாடு பண்ணறேன்னு தான அவங்களுக்கு தெரியும்.  இதுல ஹனி என்கிட்ட கோபப்பட என்ன இருக்கு? ஹீரோ சார்”,  என்று விபரம் புரியாமல் பேசினான் விதுரன்.

“புரியாம பேசாத விதுரா. பாலா வீட்டைப் பொறுத்தவரைக்கும் நீ பாரின்ல இருந்து வந்தவன், இந்த விஷயம் சொன்னாலே போதுமே”,  என்று விளக்கம் கொடுத்தார் மாதவன்.

“ஆனா யோசிங்க.. ஒருவேளை அவங்க எதுவும் சொல்லாம விட்டு நானே வலியப்போய் சொல்லி பிரச்சனை பெருசாச்சுன்னா  என்ன செய்யறது” என்று தயங்கினான் விதுரன்.

“எல்லா விஷயத்துலயும் வெளிப்படையாக இருக்கணும்னு நினைக்கிற நீ இந்த விஷயத்தை மறைக்க நினைக்க காரணம் என்ன?” என்று வினவினார் மாதவன்.

“என் தயக்கத்துக்கு காரணம் ஹனி, அவ இதை எப்படி எடுத்துக்குவான்னு  என்னால கெஸ் பண்ண முடியல. அவளுக்கு எதுவும் தெரியாம இருக்கிறதே நல்லதுன்னு தோணுது”, என்றான் விதுரன்.

“சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் இதுக்கு மேல  உன் இஷ்டம்”, என்று முடித்தார் மாதவன்.

விதுரனை பொறுத்தவரை ஹனிகாவிற்கு பாலா குடும்பத்தைப்பற்றி எதுவும் தெரியாது. ஆதலால்  தானே வலிய சென்று உண்மையைச் சொல்லி பிரச்சனையை இழுத்துக் கொள்ளவேண்டாம் என்று எண்ணினான். அவனது இத்தகைய எண்ணமே அவனுக்கு பிரச்சனையாக மாறப்போகிறது என்று தெரியாமலும் நாளைய பொழுதில் தனக்காக காத்திருக்கும் இன்னலின் விபரீதம்   உணராமலும் நிம்மதியாக அன்றைய இரவுப் பொழுதை கடந்தான்.

மறுநாள் விடிந்ததும்  விதுரன் ஹனிகாவுடன்  ராதாவும் மாதவனும் நிச்சயதார்த்த விழா நடக்கும்  கோவிலுக்கு கிளம்பிட குழந்தைகளை தன்னுடனே இருத்திக்கொண்டார் தேன்மொழி.

என்னதான் அவசரமாய் கிளம்பி வந்தாலும் நிச்சயதார்த்தத்திற்கு சற்று முன்புதான் இருஜோடிகளும் கோவில் வந்து சேர்ந்தனர். 

கோவிலின் வாசலுக்கே வந்து பாக்கியா குடும்பத்தினர் விதுரன் குடும்பத்தார்களை அன்புடன் வரவேற்க  விதுரன் அருகில் நின்ற ஹனிகாவை கண்ட கனகா, “என் கண்ணே பட்டுடும் போல அவ்ளோ பொருத்தமான ஜோடி”, என்று இருவரின் ஜோடிப்பொருத்தத்தை வியந்துகொள்ள, பாக்கியாவோ ஹனிகாவை தன் அருகிலேயே வைத்துக்கொண்டாள். 

திருச்சுழி அருகே மறவர் பெருங்குடி கிராமத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோயில்    தன்னைக் காண வந்தவர்களை கனிவுடன் காத்து ரட்சிக்கும் அன்னையவள் முன் இருவீட்டு பெரியவர்களும் திருமணம் உறுதிக்காண நிச்சயத்தாம்பூலம் மாற்றிக்கொண்டனர். 

பெண் வீட்டு சார்பாக விதுரன் எல்லா சடங்குகளிலும் முன்நின்று செய்திட குழப்பமான ஹனிகா, “உங்க அண்ணன் எங்க அவர் தானே இதெல்லாம் செய்யணும்?” என்று மெதுவாய் பாக்கியாவிடம்  வினவிட.

விவரம் அறியாததுபோல் வினவிய ஹனிகாவை விசித்திரமாய் பார்த்த பாக்கியா, “என் அண்ணன் இப்போ உயிரோட இல்ல, அதுக்காக தான் விதுரன் அண்ணா முன்னிருந்து எல்லாத்தையும் செய்யுறார்” என்று அவள் குழப்பத்தை மேலும் அதிகரித்தாள். 

“இந்த நேரத்தில இப்படி விசாரிக்கிறது தப்புதான். ஆனா எனக்கு நடக்கறதை பார்த்தா  ஏதோ குழப்பமா இருக்கு. உன் அண்ணன் இல்ல ஓகே,  பொதுவா இந்த மாதிரி சடங்கு எல்லாம் நெருங்கின சொந்தபந்தத்துல  இருக்கிறவங்கதான் செய்வாங்க. உங்க  வீட்டில இருக்கிற  வேற ஆம்பளைங்க தானே செய்யணும் அதுதானே முறை, அப்படி யாரும் இல்லையா ?” என்று அடுத்த கேள்வியை அடுக்கினாள் ஹனிகா.

“எத்தனை உறவு இருந்தாலும் நாங்க கஷ்டப்படும்போது யாரும் வரல, என் அண்ணன் கூட படிச்ச ஒரே காரணத்துக்காக நாங்க கஷ்டப்படுற விஷயம் தெரிஞ்சு எங்களுக்காக எல்லா உதவியும் செஞ்சது விதுரன் அண்ணா தான்,  அவரைத்தவிர வேறு யாருக்கும் இந்தச் சடங்க செய்ய உரிமையில்ல”, என்று கண்ணீர் நிறைந்த விழிகளுடன் நன்றியுடன் பேசினாள் பாக்கியா.

விதுரன் நல்லவன் என்று தெரியும். ஆனால் நண்பரின் குடும்பத்திற்கும் வலிய சென்று உதவி செய்யும் அளவிற்கு   தன்னவன் தன்னலம் இல்லாத நல்லவன் என்று பெருமையுடன் விதுரனை பார்த்திருந்தாள் ஹனிகா.

ஹனிகாவும்  பாக்கியமும் வெகுநேரம் தனிமையில் பேசிக்கொண்டிருப்பதை கவனித்த விதுரன்,  அவர்களை கண்காணிக்கும்படி  மாதவனிடம் கண்களால் எச்சரிக்கை செய்ய  மாதவனும் விதுரனின் கட்டளையை ஏற்று பெண்கள் இருக்கும் இடத்திற்கு வந்து ஹனிகாவை பாக்கியாவிடம் இருந்து பிரித்து அழைத்து வந்து ராதவிடம் ஒப்படைத்து சென்றார்.

எந்தவித பிரச்சனையுமின்றி நிச்சயதார்த்தம் அமைதியாய் நிறைவுற கோவிலில் இருந்தபடியே சொந்தபந்தங்கள் கலைந்து சென்றிட, பாக்கியாவையும் கனகாவையும் அவர்கள் வீட்டில் பத்திரமாய் இறக்கிவிடுவதற்கு தனது காரிலேயே ஏற்றுக்கொண்டு கிளம்பினான் விதுரன்.

பாலாவின் வீடு தேடி அலைந்தபோது வந்த  வழியிலேயே கார் செல்வதை கவனித்த ஹனிகா குழப்பமாய் அமர்ந்திருக்க, அவள் குழப்பத்திற்கு விடை தருவது போல் பாலாவின் வீட்டின் முன்பே கார் நின்று அனைவரும் இறங்கினர்.  யோசனையுடன் அமர்ந்திருந்த ஹனிகாவை கைபிடித்து வீட்டினுள் இழுத்துச்சென்றாள் பாக்கியா. 

“ இது தான் உங்க  வீடா?” என்று அதிர்ச்சியுடன் ஹனிகா வினவிட, “ஆமா அண்ணி” என்று  அறிவித்தாள் பாக்கியா.

வந்தவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்ய கனகா அடுப்படிக்குள் நுழைந்திட “அதெல்லாம் ஒன்னும் வேணாம் அம்மா நீங்க சிரமப்படாதீங்க ஏற்கனவே நிச்சயதார்த்த வேலைபார்த்து களைப்பா இருப்பீங்க” என்று கரிசனம் காட்டினான் விதுரன்.

“நான் என்ன தம்பி வேலை பார்த்தேன், அலங்காரம் பண்ணிட்டு கோயில்ல  வந்து நின்னேன்.  அதை தவிர  நான் எந்த  வேலையும் செய்யல.  எனக்கு   மிச்சம் வைக்காம  எல்லா வேலையையும்  நீங்க முன்னாடியே  முடிச்சிட்டீங்களே..!” என் நன்றி கலந்த குரலில் கூறினார் கனகா.

வற்புறுத்தலுடன் கேட்டுக்கொண்டிட மதிய உணவை முடித்துக்கொண்டு செல்வதாய் சம்மதித்தனர் ஆண்கள் இருவரும்.

காரில் ஏற்றி வந்த நிச்சயத்தாம்பூல  பொருட்களை  எடுத்துவர ஆண்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றிட,

அதிர்ச்சி விலகாமல் வீட்டின் மூலை முடுக்கையும் ஆராய்ந்தவள் சுவற்றில் படமாய் தொங்கிக்கொண்டிருந்த பாலாவின்  அருகில் வந்து “இது தான் உன்னோட அண்ணனா?”  என்றிட, “ ஆமா அண்ணி, இது தான் என் அண்ணன்” என்றாள் பாக்கியா.

இங்கு வந்ததிலிருந்து  ஹனிகாவின்  நடவடிக்கையிலிருந்து மாற்றத்தை கவனித்த   ராதா,  “என்னாச்சு ஹனி ஏன்  ஒரு மாதிரி இருக்க?” என்று விசாரிக்க, “ இவர் பேரு?” என்று  ராதாவின்  வார்த்தையை காதில் வாங்காமல்  மேலும் தனது விசாரணையை தொடர்ந்தாள் ஹனிகா. 

“பாலா” என்று ஒற்றை வரியில்  தனது சகலமும் அடங்கியது போல ஆட்டம் கண்டுப்போனாள்  ஹனிகா.

“ ஹனி…  ஒன்னும் பிரச்சனை இல்லையே”,   என்று மீண்டும் ராதா வினவிட, “இவர் எப்படி இறந்தார்?” என்றாள் ஹனிகா. “இந்த விபரம் எல்லாம் உனக்கு எதுக்கு ஹனி?” என்று  ராதா ஹனிகாவை அடக்கிடமுயல, “அண்ணி ப்ளீஸ்”,  என்று அவரை அடக்கிவிட்டு,  “நீ சொல்லு பாக்கியா உன் அண்ணன் எப்படி இறந்தார்?” என்று மீண்டும் அழுத்தமாய் வினவினாள் ஹனிகா.

“ஒரு பொண்ண உயிருக்கு உயிரா காதலிச்சுட்டு இருந்தாரு.   அந்த பொண்ணு இவரை ஏமாத்திட்டு அவங்க   அப்பா  காட்டுன  பையனை  கட்டிட்டு போயிட்டா.  அந்த துரோகியோட துரோகத்தை  தாங்க முடியாம  தற்கொலை பண்ணிட்டாரு.. “ என்றாள் பாக்கியா.

“துரோகி அது இதுன்னு வார்த்தை விடாத”,  என்று ஒற்றை விரலை நீட்டி  ஹனிகா எச்சரிக்கை செய்ய,  “உங்களுக்கு அவளை பத்தி தெரியாது அண்ணி, காலேஜ் படிக்கும்போது என் அண்ணன்  கூட சுத்திட்டு, அவ குடும்பத்துக்காக  என் அண்ணனை தூக்கி  எறிஞ்சவ  துரோகி மட்டும் இல்ல.  நேரத்துக்கு ஒரு நிறத்தை மாத்துற  பச்சோந்தி. என் அண்ணனை ஏமாத்தி சாகடிச்சிட்டு அவ மட்டும் குடும்பம் குட்டின்னு சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கா”, என்று ஹனிகாவின் கோபம் அறியாமல் பேசிக்கொண்டே சென்றாள் பாக்கியா. 

“இன்னொரு தடவை என்  அக்காவை பத்தி தப்பா பேசின என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது, உன் அண்ணன்  தான் பைத்தியக்காரத்தனமா  என் அக்கா பின்னாடியே சுத்தி,  அவ வாழ்க்கையையும்  சேர்த்து  அழிச்சுட்டான்”  என்று ஆதங்கத்துடன் பேசினாள் ஹனிகா.

பொருட்களை இறக்கி வைத்துவிட்டு வீட்டினுள் நுழைந்த  விதுரன் அருகில் வந்த ராதா,  “ஹனி என்னென்னமோ  பேசுறா  வந்து நீ என்னனு கேளு” என்று விதுரனை பிரச்சனை நடக்கும் இடத்திற்கு இழுத்து சென்றார்.

ஏதோ விபரீதம் என்று உணர்ந்த மாதவனும் அவர்களை பின்தொடர்ந்தார். சமையலறையில் விருந்தினர்களுக்கு வேண்டிய பதார்த்தங்களை சமைத்துக் கொண்டிருந்த கனகாவும் பெண்களின் சத்தம் கேட்டு அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

“என்ன உங்க அக்காவா?”  என்று பாக்கியா புரியாமல் அதிர்ந்து நிற்க.  அவ்விடம் வந்து சேர்ந்த விதுரன், “இங்க என்ன பிரச்சனை?” என்று விசாரிக்க,  “ இது யார் குடும்பம்னு தெரியமா?” என்று கோபம் தணியாத குரலில் வினவினாள் ஹனிகா.

“ஹனி. என்ன எதுக்கு இவ்ளோ கோபம்?” என்று விதுரன் அவளை அமைதிபடுத்த  முயல, “உங்க வாழ்க்கை அழிய காரணமா இருந்தவன் குடும்பத்துக்கு உதவி பண்ணிட்டு இருக்கீங்கன்னு உங்களுக்கு தெரியுமா?” என்று விடாமல் கோபம் காட்டினாள் அவன் மனைவி.

“ஹனி.. என்ன உளருற…?.  எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசலாம். கிளம்பு” என்று அங்கிருந்து  கிளம்பிட தயாரானான் விதுரன்.

“ உளருறேன்னா… யாரு உளருறது.. நீங்க தான் யாருக்கு உதவி  செய்றேம்ன்னு தெரியாம செஞ்சுட்டு இருக்கீங்க! இவன் யாருன்னு தெரியுமா? நம்ம சந்தியா சாவுக்கு காரணமாக இருந்தவன், காதலிக்கிறேன்னு பின்னாடியே சுத்தி டார்ச்சர் பண்ணி பிளாக்மெயில் பண்ணி சந்தியாவை உங்க கூட வாழவிடாம செஞ்சது இந்த பாவிதான்”என்றாள் ஹனிகா.

“ என் அண்ணன் உங்க கூட படிச்சவருன்னு தான சொன்னீங்க. இவங்க என்னென்னவோ சொல்லுறாங்க?” என்றாள் பாக்கியா.

“பாலா எப்படி உங்க கூட படிச்சிருக்க முடியும்? அவர் எப்படி உங்களுக்கு பிரெண்ட்டானாரு ?” என்று ஹனிகாவும் அவள் பங்கிற்கு கேள்வி எழுப்பிட. “நான் உனக்கு எல்லாத்தையும் விளக்கமா சொல்லுறேன் முதல்ல  என்கூட கிளம்பு”, என்று ஹனிகாவை விடாப்பிடியாக தன்னுடன் இழுத்து சென்றவன், மாதவன் புறம் திரும்பி, “சாரி ஹீரோ சார் நீங்க சொன்னப்பவே நான் உண்மைய சொல்லியிருந்தா இவ்ளோ பிரச்சனை வந்திருக்காது” என்று மன்னிப்பு வேண்டும் குரலில் கூறினான்.

“ நீ ஹனிகாவ  கூட்டிட்டு கிளம்பு. இவங்களுக்கு வேண்டிய விளக்கம்  நான் குடுத்துக்கிறேன், ராதா நீயும் அவங்க கூடவே கிளம்ப பசங்க உன்னை தேடுவாங்க” என்று தன் மனைவியையும் விதுரனுடன் அனுப்பிவைத்து குழப்பத்தில் தவித்து நின்ற பாலா குடும்பத்திற்கு வேண்டிய விளக்கம் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்  மாதவன்.

தன் கணவன் தன்னிடம் எதையோ மறைக்கிறான் என்று சந்தேகம் இருந்தாலும் அது இந்த அளவிற்கு பெரிய விஷயமாக இருக்கும் என்று எதிர்பார்த்திராத ஹனிகா கோபமும் குழப்பமுமாய் விதுரனை வெறித்தபடி  வந்தாள்.

ஹனிகா  பார்வையில் இருக்கும் கோபத்தின் அளவை அறிந்தவன் இதை  எப்படி சரிசெய்வது என்று புரியாமல் தயக்கமும்  தடுமாற்றத்துடனும் வந்தான்.

என் அத்தனை
கேள்விகளுக்கும்   விடை
நீ என்று அறியாமல்..
திசை தெரியாமல்..
தவிப்பவளை..
உன் விடை கொண்டு
வழிநடத்து…