18

ஊர் பயணம்..

உதவி என்பது
கேட்டுப் பெறும்
தட்சனை அல்ல
உண்மைக்கு
தானாய் கிடைக்கும்
வெகுமானம்
நியாயம்
உன் பக்கம் இருக்குமெனில்
உதவியும்
கேட்காமல் கிடைக்கும்

பாலாவின் தங்கை நிச்சயவிழாவிற்கு  செல்வதற்காக,  வேலை விஷயமாக வெளியூர் பயணம்  என்று பொய்யுரைத்து தன் சொந்த ஊருக்கு கிளம்பத் தயாரானான். 

கோபமாய் இடையில் கைவைத்து முறைத்து நின்ற ஹனிகா,“எப்படி, எப்படி  நான் இல்லாத  இடத்துல இருந்தா உங்களுக்கு மூச்சு முட்டுமா?, ஒரு நிமிஷம் கூட நான் இல்லாம இருக்க முடியாது”, என்று அவன் சொன்னதையே திரும்ப சொல்லிகாட்ட, தவறிழைத்து அன்னையிடம் மாட்டிக்கொண்ட சிறுவன் போல தலைகுனிந்து அமர்ந்திருந்தான் விதுரன். 

“ ஒன்னுமே தெரியாத பச்சை  குழந்தை மாதிரி தலைய தொங்கப்போட்டா  விட்டுடுவேன்னு நினைக்கிறீங்களா?,  அதெல்லாம் எனக்கு தெரியாது நானும் உங்க கூட ஊருக்கு வருவேன்”, என்று  அடம் பிடித்து நின்றாள் ஹனிகா. 

விதுரனுடன்  பயணம்  செல்ல  தயாராகிக் கொண்டிருந்த மாதவன் வீட்டிலும் இதே பிரச்சனை எழ தன் மனைவியை சமாளிக்க முடியாத மாதவன் பஞ்சாயத்திற்கு விதுரன் வீடுவந்து நின்றார்.

“நீயே விதுரன்கிட்ட கேட்டு பாரு. அவனோட சொந்த ஊர்ல ஒரு இடம் விக்கிறதுல  ஏதோ லீகல்  ப்ராப்ளம், அதான் நானும் அவனும்   ஊருக்கு போறோம், ரெண்டு நாள்தான் திரும்பி வந்துடுவோம், இதுக்கு என்னமோ இந்த குதி குதிக்கிற” என்று மனைவியை சரிகட்ட   முடியாமல் “நீயே உன்  அக்காவுக்கு எடுத்துச்சொல்லு விதுரா. நாம என்னமோ பிக்னிக் போற மாதிரி குழந்தைகளையும்  கூட்டிட்டுகிளம்பணும்னு சொல்லுறா?”   என்று விதுரனிடம் கோர்த்துவிட்டார் மாதவன். 

“ பாரு ஹனி எத்தனை தடவை சொல்லியும் கேட்காம திரும்பத்திரும்ப  நம்மள   தனியா விட்டுட்டு இவங்க மட்டும் சுத்த கிளம்புறாங்க. வேற எங்கேயாவது போறதா இருந்தா கூட பரவாயில்ல.. உங்க சொந்த ஊருக்குதான் போறாங்க, உங்க கல்யாணத்துக்கு  தான்  வர முடியல இப்போவாவது கூட்டு போங்கன்னு சொல்றேன். முக்கியமான வேலையாம் நம்ம வந்தா கெட்டுப்போயிடும்னு சொல்லுறாரு”  என்று இதுவரை விதுரன் மறைத்து வைத்த ரகசியத்தை போட்டு உடைத்தார் ராதா. 

ஏற்கனவே ஹனிகாவின் வசைமொழியில் குளித்துக் கொண்டிருந்த விதுரன், மாதவன் வந்து   உண்மை சொன்னதும் இனி என்ன ஆகுமோ என்ற பதற்றத்துடன், ‘கிழிஞ்சது, இப்போ தான் இவளை சரிக்கட்டுனேன் அதுக்குள்ள வந்து உண்மைய போட்டு உடைச்சுட்டீங்களே!’ என்று உள்ளுக்குள் புலம்பியபடி  தலையில்  கைவைத்து கொள்ள விதுரனை கோபமாய் முறைத்துக்கொண்டிருந்தவள் எதுவும் பேசாமல் தனது அறைக்குள் சென்று முடங்கினாள். 

“என்ன விதுரா? உன் வீட்டிலேயும் இதே பிரச்சனைதான் போல” என்று மாதவன் சிரிக்க “அடப்போங்க ஹீரோ சார்! எந்த ஊருக்குன்னு சொல்லாம கிளம்பிட்டு இருந்தேன்,  வந்து உண்மையை உளறி எனக்கு உலை  வச்சுட்டீங்க” என்று அலுத்துக்கொண்டபடி ஹனிகா இருக்கும் இடத்திற்கு சென்றான் விதுரன்.

படுக்கை அறையில் இருந்த பால்கனி ஊஞ்சலில் அமர்ந்திருந்தவள் அதை ஆட்டும் வேகத்திலேயே தெரிந்தது அவளின் கோபத்தின் அளவு. ‘பயங்கர டென்ஷனா  இருக்கா போல’ என்று தயக்கத்துடன் உள்ளே வந்த விதுரன் வேகமாய் ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலை கைபிடித்து தடுத்து, அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.

“ஹனி” என்று மெதுவாய் அழைக்க  “ என்கிட்ட பொய்சொல்ல ஆரம்பிச்சிட்டீங்கல.. !” என்று கலங்கிய  குரலில்   ஹனிகா வினவ,. “ஹே பொய் சொல்லணும்னு இல்லடா” என்று  அவள் கன்னம் பற்றினான் விதுரன்.

கன்னத்தில் இதமாய் பதிந்த விரல்களை விலக்கி தள்ளி, “ரெண்டு நாளைக்கு முன்னாடி நான் ஊருக்கு போகணும்னு சொன்னப்ப வேலையெல்லாம் முடியட்டும் நானே கூட்டு போறேன்னு சொன்னீங்க, இப்போ என்னடான்னா என்கிட்ட கூட சொல்லாம திடீர்னு நம்ம ஊருக்கு போறீங்க?, என்கிட்ட பொய் சொல்லிட்டு போற அளவுக்கு அப்படி என்ன முக்கியமான விஷயம்?”என்று அவன் கண்ணையே கூர்ந்து கவனித்தபடி வினவினாள்.

“உண்மையிலேயே லேண்ட் விஷயமா தான் போறோம்,  அப்படியே என்   ஃப்ரெண்டோட சிஸ்டர் நிச்சயதார்த்தம் அதையும் முடிச்சிட்டு வரலாம்னு நினைச்சேன், நான் ஊருக்கு கிளம்புற விஷயம் உனக்கு மட்டும் இல்ல நம்ம வீட்டில் யாருக்குமே தெரியாது, வெளியே தான் ஹோட்டல்ல  தங்க போறோம், அதான் யாருகிட்டயும் சொல்லல, ஹனி நம்புடா” என்று விதுரன் பாதி உண்மையும் பொய்யுமாய் கூறி மனைவியை சமாதானம் செய்ய, “ இது  உண்மையா இருந்தா   என்கிட்ட சொல்லிட்டே போயிருக்கலாம், பொய் சொல்லி ஊருக்கு போக பார்த்தீங்க!, ஏதோ தப்பா இருக்கே மாமா”,  என்று   நம்பாமல் பேசினாள் ஹனிகா.

“அது அது..  ஹனி..” என்று விதுரன்  என்ன சொல்வது என்று புரியாமல்  விழிக்க, “ ஊருக்கு நானும் வருவேன்,  என்னையும் நிச்சயத்தார்த்துக்கு கூட்டிட்டு போங்க”  என்று  நிபந்தனை விதித்தாள்.

“என்ன  நிச்சயத்துக்கா? அங்க எப்படி ஹனி.   தெரிஞ்சவங்க யாரும் இருக்கமாட்டாங்க அப்புறம் உனக்கு போர் அடிக்கும்”,  என்று விதுரன் மழுப்ப,  கண்களின் வழி மனதை படிப்பது போல ஆழ்ந்து அவன் விழி நோக்கி “எனக்கு தெரிஞ்சவங்க யாரும் இருக்கமாட்டாங்களா?,  இல்ல நான் தெரிஞ்சுக்க கூடாதவங்க  இருப்பாங்கன்னு   கூட்டிட்டுப் போக யோசிக்கிறீங்களா?” என்றாள் ஹனிகா. 

“நீ கேக்கறத பாத்தா என்னைய சந்தேகப்படுற மாதிரி இருக்கு”, என்று  குற்றம் சாட்டும் விதமாய் வினவினான் விதுரன். 

“ மாதிரி இல்ல மாமா உண்மையிலேயே சந்தேகம்தான் படுறேன். பொய் சொல்லிட்டு ஊருக்கு கிளம்புறீங்க உங்க மேல சந்தேகம் வராம வேற என்ன வரும்”,  என்றவளை “ ஹனி” என்று குரலை உயர்த்தி அடக்க  முயன்றான் விதுரன்.

“ஷ்.. இப்போ எதுக்கு குரலை உசத்துறீங்க..  என்னையும் உங்ககூட ஊருக்கு கூட்டிட்டு போங்க என் சந்தேகம் போயிடும்” என்று  தன் கோபத்தை தணிக்கும் வழி கூறினாள் ஹனிகா. 

“இன்னோரு தடவை போகும் போது, கூட்டிட்டு போறேன், இப்போ  வேணாம் ப்ளீஸ்”,   என்றவன் அவளை நெருங்கி முத்தமிட முயல, “தப்பை  மறைக்க இப்படி ஒரு வழி, ஒன்னு இல்ல ஆயிரம் முத்தம் கொடுத்தாலும் என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல. நானும் உங்க கூட வருவேன்” என்று பிடிவாதம் பிடித்தவளை  சமாளிக்க முடியாமல், “ முக்கியமான வேலைடா,  அங்க உன்கூட டைம்  ஸ்பெண்ட் பண்ண முடியாது” என்று கண்களால் கெஞ்சினான் விதுரன்.

மறுப்பாய் தலையசைத்தவள்,“உங்களுக்கு மட்டும் தான் முக்கியமான வேலை இருக்குமா?,  எனக்கும்  ஊர்ல ரொம்ப முக்கியமான வேலை இருக்கு, நீங்க கூட்டிட்டு போகலைன்னா என்ன? எனக்கா பஸ் ஏறி போகத் தெரியாதா? நாளைக்கே ஊருக்கு கிளம்புவேன், என்னை  யாரும் எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது தடுக்கவும் கூடாது”  என்று பிடிவாதமாய் கூறினாள் ஹனிகா.

தன் மனைவியின் பிடிவாதம் புரிந்தவன் இதுக்கு மேல் பேசி பிரயோஜனம் இல்லை என்று , “சரி ஊருக்கு எல்லாரும் ஒன்னாவே   போவோம்! உன் லக்கேஜ் ரெடி பண்ணு, நான் போய் அம்மாவையும் ராதா அக்காவையும் ரெடியாகச் சொல்றேன். இனி உனக்கு என் மேல இருக்குற கோபமும் சந்தேகமும் போயிடும்ல” என்று சலித்துக்கொண்டவன், வேறு வழியின்றி  அனைவரையும் அழைத்து செல்ல சம்மதம் தெரிவித்தான்.

  விஷயம்  அறிந்ததும்  “என்னடா.. இப்படி அங்க போய் ஏதாவது விபரீதமா நடந்தா என்ன பண்ணுவ?” என்று மாதவன் தயங்க, “ வேற வழி இல்லை ஹீரோ சார், நான்  அவளை விட்டுட்டு கிளம்பினா, அடுத்த பஸ்ல ஊருக்கு கிளம்பிடுவேன்னு மிரட்டுறா. அவ ராதா அக்கா மாதிரி வாயில மட்டும் சொல்லுற ஆள் இல்ல, சொன்னத    வார்த்தை மாறாம செய்யுற ஆள். பின்னாடியே வந்து நமக்கே தெரியாம நம்மள  கண்காணிக்க  ஆரம்பிச்சுடுவா,  அதுக்கு  கூடவே கூட்டுட்டு அலையுறது எவ்வளோ மேல்”,  என்று தன் முடிவுக்கு காரணம் கூறினான் விதுரன்.

“ நீ சொல்லுறதும் சரிதான், பார்த்து ரொம்ப கேள்வி கேட்டு   குடையுறான்னு பதில் சொல்லமுடியாத கடுப்புல  உண்மைய    உளறிடாத…”   என்று   எச்சரித்து நகர்ந்தார். 

காரின் முன் இருக்கையில் ஆண்கள் இருவரும் ஏறிக்கொள்ள நடுவில் இருந்த இருக்கையில் குழந்தைகளுடன் தேன்மொழி அமர்ந்துகொள்ள, ரகசியம் பேசிட ஏதுவாக இறுதி இருக்கையில் இடம் பிடித்துக்கொண்டனர் பெண்கள் இருவரும்.

“பரவாயில்லையே ஹனி, புருஷனை கண்பார்வையில கட்டி வச்சி இருக்க. நீ கோபமா பார்த்தா விதுரன் கதிகலங்கி போயிடுறானே!” என்று  காரில் செல்லும்போது ஹனியின் சாமர்த்தியத்தை ராதா மெய்ச்சிக்கொள்ள அப்போதும் நம்பாமல்  கார் ஓட்டிக்கொண்டு வந்த விதுரனை  சந்தேகமாய் பார்த்து, “ ஏதோ சரி இல்ல  அண்ணி, அவர் முகமும் குரலும் தடுமாறுது. என் கண்ணை பார்த்து பேச  தயங்குறாரு,  நீங்க அண்ணனை கவனிச்சீங்களா! எதையோ மறைக்கிற மாதிரி தெரியல?” என்று தன்  சந்தேகத்தை வினவினாள் ஹனிகா. 

“நீ சொல்லுறது சரிதான், ஹனி.  அடிக்கடி இப்படிதான்  ஏதோ ரகசியம் பேசிக்கிறாங்க!  இவங்களை கண்காணிக்கணும்” என்று ஹனிகா  வார்த்தையை ஆமோதித்தார்  ராதா. 

“ ஏதோ அவர் பிரென்ட்டோட தங்கச்சி  நிச்சயத்தார்த்தத்துக்கு   போறதா சொன்னாரு. அண்ணா என்ன சொன்னாங்க?” என்று ஹனிகா  வினவ, “லேண்ட்  விக்கிறதுல ஏதோ லீகள்  பிராப்ளம்ன்னு சொன்னார்,  ஏன் ஹனி விதுரனை சந்தேகப்படுறியா?” என்றார்  ராதா. 

“சந்தேகம் இல்ல அண்ணி நிச்சயமா சொல்றேன் அவர் என்கிட்ட எதையோ மறைக்கிறாரு, நானா   அது என்னன்னு கண்டுபிடிச்சேன்னு வையுங்க உங்க தம்பிய  ஒருவழியாக்கிடுவேன்”   என்றாள் ஹனிகா.

பெண்கள் இருவரும் அருகருகே அமர்ந்து ரகசியம் பேசிக்கொண்டு வர முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஆண்கள் இருவரும்  தங்களுக்குள் ரகசிய பார்வை  பரிமாற்றத்தை நிகழ்த்திக்கொண்டு வந்தனர்.

ஊருக்கு வந்துசேர்ந்த முதல் நாள், விதுரன் மற்றும் மாதவன் இட விற்பனை விசயமாக வெளியில் அலைந்து திரிந்திட, ஹனிகா தன்  அப்பா அம்மா வீட்டிற்கு ராதா மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்று   அவர்களை அறிமுகம் செய்து வைத்துவிட்டுஅன்றைய முன்பகுதி  முழுவதும் அவர்களுடனே  சுற்றி திரிந்தாள். 

மதியம் அனைவரும் குட்டித் தூக்கமிட அவரவர் அறைக்கு சென்று முடங்கிவிட வெளியில் சென்ற ஆண்கள் இருவரும் வீடு வந்து சேராமல் இருக்க தனது இருசக்கர வாகனத்தை கிளப்பிக்கொண்டு  பாலாவின் இல்லம் தேடி கிளம்பினாள் ஹனிகா.

திடீரென்று அவசரமாய் கிளம்பியவளை என்னவென்று கேட்டபடி வசுந்தரா தடுக்க, “ஒரு முக்கியமான வேலை அம்மா வந்து சொல்றேன், விது மாமா வந்து கேட்டா  பக்கத்துலதான் போயிருக்கேன், பயப்பட  வேணாம்னு சொல்லுங்க. எதையாவது  சொல்லி  பயம்காட்டிடாதீங்க அப்புறம்  அழுதுடுவாரு”, என்று  கணவன் தன் மீது கொண்ட அன்பையே கூறி சிரித்தவள்  அடுத்தநொடி  காற்றைக் கிழித்துக் கொண்டு வேகத்துடன் சென்றாள் ஹனிகா.

மகளின் வேகத்தைக்கண்டு கலங்கியபடி உள்ளே வந்த வசுந்தராவை கவனித்த கணபதிநாதன், “என்ன வசு ஏன் கவலையா இருக்க”என்றிட,  “எல்லாம் உங்க சின்னமகளை நினைச்சு தான். கல்யாணம் ஆயிடுச்சு, கொஞ்சமாவது பொறுப்பு வந்திருக்கா! வண்டி எடுத்துட்டு சுத்த கிளம்புறா. எங்கன்னு கேட்டா வந்து சொல்றேன்னு திமிரா பதில் சொல்லிட்டு போறா. இதுவே என் பொண்ணு சந்தியாவா இருந்திருந்தா என்னை கேட்காம  வீட்டைவிட்டு ஒரு அடி எடுத்து வைக்கமாட்டா”, என்று  சின்னமகளின் செயலை எண்ணி சலித்துக்கொண்டார் வசுந்தரா.

“நம்ம கேட்காம வீட்டைவிட்டு போகாத  மகள்   தான் யார்கிட்டயும்  சொல்லாம ஒட்டு மொத்தமா உலகத்தை விட்டு போயிட்டா”  என்று கவலையுடன் பேசினார் கணபதிநாதன்.

“நம்ம  பேச்சை மீறாத பொண்ணு இப்படி ஒரு முடிவு  எடுத்திருக்கானா  அதுக்கு நிச்சயம் ஏதாவது ஒரு காரணம் இருக்கும். ஹனி மாப்பிள்ளையோட இவ்வளவு சந்தோஷமா இருக்குறத பார்க்கும்போது அந்த காரணம் மாப்பிளையா இல்லைன்னு மட்டும் தெரியது”, என்று வசுந்தரா நிறுத்த, “அப்பாடா இப்பவாவது ஒத்துக்கிட்டயே நம்ம மாப்பிளை நல்லவர்ன்னு”, என்று சிரித்தார்  கணபதிநாதன்.

“சந்தியாவோட சாவுக்கு  அவர் தான் காரணம்னு அளவுக்கு அதிகமாகவே அசிங்கப்படுத்தினோம்,  கம்ப்ளைன்ட் கொடுத்து  ஜெயில்ல கூட வச்சோம், நாம செஞ்சதெல்லாம்  மறந்துட்டு நம்ம மகள நல்லா  சந்தோசமா  பார்த்துகிறாரு.  விருப்பமே இல்லன்னாலும் நம்ம கட்டாயத்துனால  கல்யாணம் பண்ண ஹனியையே  இவ்வளவு சந்தோஷமா பார்த்துகிறார்னா!. ஆசைப்பட்டு  கல்யாணம் பண்ண சந்தியாவ நிச்சயமா  சந்தோசமா தான்  வைச்சிருந்திருப்பார்,    அவ தான் இவரை சரியா புரிஞ்சுக்காம ஒரேடியா விட்டுட்டு போயிட்டா..” என்று கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி,    “அவ  தான் ஒழுங்கா வாழல,  இவளும் துடுக்குத்தனமான ஏதாவது செஞ்சு   கிடைச்ச  நல்ல வாழ்க்கைய  கெடுத்துக்கக் கூடாதேன்னு   பயப்படுறேன்” என்று தன் கவலையை கூறினார் வசுந்தரா.

“அவ என்ன சின்னபொண்ணா என்ன செய்யணும்னு அவளுக்கு தெரியும். சந்தியாவ தான் கைக்குள்ளேயே வைச்சு வெளி உலகம் தெரியாம வளர்த்துட்டோம், இவளாவது  தைரியமா சுதந்திரமா முடிவெடுக்க தெரிஞ்சவளா இருக்கான்னு சந்தோஷப்பட்டுக்கோ”, என்று  மகளின் மீதிருந்த நம்பிக்கையில் மனைவியை அமைதி படுத்தினார்  கணபதிநாதன்.

அக்காவிற்கும் தங்கைக்கும் குணத்தில் ஆறு வித்தியாசம் மட்டுமல்ல அடுக்கடுக்காய் வித்தியாசங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.  தனது சோகங்களை வெளியில் சொல்லாமல் மறைக்க கூடியவள் சந்தியா. தனது குழப்பங்களையும் மனதுக்குள்ளேயே  அலசி ஆராய்ந்து தீர்வு காண்பவள்  ஹனிகா.   திடமான முடிவு எடுக்கத்தெரியாமல்  திணறுபவள் அக்கா.  ஒரு முடிவு எடுத்துவிட்டால் எந்த நிலையிலும் பின்வாங்காமல் அதை பிடிவாதத்துடன் செய்து முடிப்பவள் தங்கை. தனித்து செயல் படத்தயங்குபவள் சந்தியா,  எதற்கும் எவரையும்  சார்ந்து இருக்க பிடிக்காதவள் ஹனிகா.  இரு மகள்களுக்கு இடையில் இருக்கும் குணத்தின் வேறுபாட்டை கருத்தில் கொண்டு, மருமகன் மீது  கொண்ட நம்பிக்கையிலும், அக்கறையிலும்,   சின்னமகள் எந்த பிரச்சனை வந்தாலும் அதைக் கடந்து வாழத்தெரிந்தவள் என்ற அதீத நம்பிக்கையிலும்   ஹனிகாவை விதுரனுக்கு மணமுடிக்க  சம்மதித்தார் கணபதிநாதன்.

 சந்தியாவிற்கு இருந்த கட்டுப்பாடு ஹனிகாவிற்கு  இருந்தது இல்லை, கட்டுப்படுத்திவைக்க  நினைத்தாலும் கட்டுக்குள்  நிற்பவள் அவள் இல்லை. கல்லூரி படிக்கும்போதே தோழிகளுடன் மதுரையை சுற்றி திரிந்த பழக்கம் இருப்பதால் அருப்புக்கோட்டை கடந்துள்ள   திருச்சுழியை      நோக்கி வண்டியை செலுத்தினாள். 

திருச்சுழியின் முக்கிய வீதிகள் கடந்து கண்ணில் காண்பவர்களிடம் செல்ல வேண்டிய தெருவை விசாரித்து சரியான வழியில் பயணித்து பாலாவின் வீடு வந்து சேர்ந்தாள்.

ஓட்டு வீட்டின் முன் சிறுமுற்றம் இருக்க அதில் இருந்த உறவுப்பெண்கள் மகிழ்ச்சியுடன் உரையாடிக்கொண்டிருந்தனர்.  வாசலில் தோரண அலங்காரத்துடன் பந்தலிட்டு  வீடு மணக்கோலம் பூண்டு இருந்த்தது.    விசேஷ வீட்டில் உறவுகள் சூழ்ந்திருக்கும் இடத்தில் விசாரணை செய்வது அநாகரிகம் என்று சற்றுத்தள்ளி வந்தவள் பாலாவின் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி இருந்த ஓட்டு வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த வயதான பெண்மணியிடம், “அது பாலா வீடுதான?” என்று விசாரிக்க.  “ஆமாம் பாலாவீடுதான். நீ யாரு புதுசா இருக்க. பாக்கியா கூட படிச்ச புள்ளையா..?”என்றார் அந்தப் பெண்மணி. 

என்ன சொல்லி சமாளிப்பது என்று புரியாமல் யோசனையுடன்  ஹனிகா நின்றிருக்க.. “நல்ல பொண்ணு பொறுப்பில்லாதவனுக்கு தங்கச்சியா பொறந்த பாவத்துக்கு சின்னவயசிலேயே எல்லா கஷ்டத்தையும் அனுபவிச்சுடுச்சு, போற இடத்துல சந்தோசமா இருக்கட்டும்”, என்றார் அவர். 

“பாலா.. அதாவது பாக்கியா அண்ணன் இப்போ எங்க இருக்காரு அம்மா”,  என்று ஹனிகா மெதுவாய் தனது விசாரணையைத் துவங்க.. “அவன்  எங்க இருக்கான், அதான் ஒரு  பொம்பள பிள்ளைக்கா  குடும்பத்தை விட்டு ஒரேடியா போயிட்டான்ல”, என்றவர் சொன்ன செய்தி ஹனிகாவை அதிர்ச்சியடைய செய்ததது.

“ எப்போ?” என்றாள்  அதே அதிர்ச்சிகுரலில். புதியவளை புதிராய் பார்த்தவர், “பாக்கியாவோட பிரெண்டுனு சொன்ன உனக்கு இந்த விபரமெல்லாம் தெரியாதா?”  என்று அவர் சந்தேகமாய் வினவ “ இல்ல அம்மா. நான்அவ கூட ஸ்கூல்ல படிச்ச ஃபிரண்டு, இங்க பக்கத்துலதான் என் ஊரு. இந்த பக்கமா வந்தேன் அப்படியே இவளையும்  பார்த்துட்டு போலாம்னு தோணுச்சு, வீட்ல உறவுக்காரங்க நிறைய இருக்காங்க அதான் வெளிய நின்னு பார்த்து பேசிட்டு  கிளம்பலாம்னு நினைச்சேன்,  நான் கொஞ்ச நாளா ஊர்ல இல்ல அதனால எனக்கு இந்த விஷயம்  தெரியாது” என்று பொய்யையும் உண்மை போல் கூறினாள் ஹனிகா. 

நல்ல குடும்பத்துப்பெண் போல் தெரிபவள் எதற்கு வீணாக பொய் சொல்லி  விசாரிக்கபோகிறாள் என்று எண்ணிக்கொண்டவர் தான் அறிந்த  விவரங்களை எல்லாம் ஒப்பிக்க துவங்கினார். 

“ அந்தப் பையன் இறந்து ஒரு அஞ்சாறு வருஷம் இருக்கும். காலேஜ்ல படிக்கும்போதே ஏதோ ஒரு பொண்ண காதலிச்சிருக்கான், அந்த பொண்ணு இவன விட்டுட்டு  அப்பா அம்மா காட்டின பையனை கட்டிக்கிச்சு. காதலிச்சவ விட்டுட்டு போன விரக்தில, அந்த பொண்ணுக்கு கல்யாணம் முடிச்ச  அன்னைக்கே இவன் குடும்பத்தை பத்திக்கூட யோசிக்காம விஷத்தைக் குடிச்சு தற்கொலை பண்ணிட்டான்.  வீட்ல இருந்த ஒத்த ஆம்பளையும் அம்போன்னு விட்டுட்டு போக, அவங்க அனுபவிக்காத கஷ்டம் இல்ல. சின்னவயசிலே படிக்கிறத விட்டுட்டு பத்துப்பாத்திரம் தேய்க்க போச்சு பாக்கியா. எந்த சாமி புண்ணியமோ, அவ அண்ணனோட பிரெண்டுன்னு சொல்லிட்டு  ஒருபையன் பாதில விட்ட படிப்பை படிக்கவச்சு  அனாதையா நின்ற குடும்பத்துக்கு ஆதரவா இருக்கான்.  இந்த  கல்யாணம் கூட அந்தப்பையன் பார்த்து ஏற்பாடு பண்ணி  வைச்சதுதான். குடுத்து உதவுன  சொந்தபந்தத்தையே  பெருசா நினைக்காத இந்த காலத்து பசங்க மத்தியில பிரண்டோட குடும்பத்துக்கு இவ்வளவு செய்யுற அந்த பையன் எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்”, என்று முன்பின் முகமறியாதவனை மனதார வாழ்த்தினார் அந்த பெண்மணி. 

பக்கத்துவீட்டுப் பெண்மணி சொன்ன செய்தி ஹனிகாவை  குழப்பி எடுத்தது.. “ சரிமா நான் அப்போ போய் பாக்கியாவ பார்த்துட்டு வீட்டுக்கு கிளம்புறேன்” என்று சொல்லிக்கொண்டு கிளம்பியவள் குழம்பிய  மனநிலையில் பாலா வீட்டில்   யாரையும் சந்திக்காமலேயே  வண்டியைக் கிளப்பிக்கொண்டு போனள் ஹனிகா. 

தீவிர யோசனையுடன் இருந்தவள் எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. வீட்டிற்குள் வந்ததும் தனது அறைக்குள் சென்று முடங்கிவள் மனதில் அடுத்தடுத்து கேள்விகள் எழுந்தது, ‘சந்தியா கல்யாணம் முடிஞ்சதும் பாலா தற்கொலை பண்ணிகிட்டான், அவன் பிளாக்மெயில் பண்ணலேன்னா அக்கா எதுக்காக சாகனும். பாலாவை  மறக்க முடியாம இருந்திருந்தா  தற்கொலை பண்ணிக்கிறதுக்கு  ரெண்டு நாளைக்கு முன்னாடி    மாமா கூட வாழப்போற வாழ்க்கைய பத்தி சந்தோஷமா ஏன் பேசனும்?, கோயிலுக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போன இடத்துல  அப்படி என்னதான் நடந்திருக்கும் ஒன்னுமே புரியலையே!. ஒருவேளை உண்மையிலேயே மாமா சொன்ன மாதிரி ரெண்டு பேருக்கும் நடுவுல இருந்த சண்டைதான் அக்கா  சாவுக்கு காரணமா?’ என்று பலவிதத்தில் யோசித்து எதற்கும் விடை தெரியாமல் குழம்பி நின்றாள் ஹனிகா.