18….

உன் பிரிவினில் வலி உணர்வதால் தான்..

நமக்குள் இன்னும் பிரியம் கூடுகின்றது….

பூஜைக்கு வேண்டிய ஏற்பாட்டை கவனித்துக் கொண்டே ராஜதுரை கேள்விக்கு விளக்கம் அளித்து கொண்டிருந்த தீபேந்திரன்.. சற்றும் எதிர்பாராத நேரத்தில் நவசக்தி சிலைகளின் முன் இருந்த திரிசூலத்தால் தனது உள்ளங்கையை காயப்படுத்தி அதில் வழிந்த ரத்த துளிகளை ஒன்பது கலசங்களில் சேகரித்து வைத்த நவதள தீர்த்தங்களின் கலந்தான் தீபேந்திரன்.

இதுவரை கேட்ட கேள்விகளுக்கு முதல் முறையாக கோபம் இல்லாமல் பதில் தந்த தனது முதலாளியின் விசித்திர செய்கையை கவனித்துக் கொண்டிருந்த ராஜதுரை அதிர்ச்சியில் உறைந்து நிற்க, அதே நேரத்தில் அறையின் கதவை உடைத்துக் கொண்டு வந்து உள்ளே வந்து நின்றான் கீர்த்தன்.

பலரும் அறியாத பாழடைந்த வீட்டில் எவரும் அறியாத வகையில் ரகசிய முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனது ரகசிய பூஜைக்கு இடையூறாக திடீரென்று வந்து நின்றவனை குழப்பமாய் பார்த்த தீபேந்திரன் தனக்குள் எதையோ தீவிரமா யோசித்துக் கொண்டிருக்க,

“யாருயா நீ? உனக்கு எப்படி இந்த இடம் தெரிஞ்சது?” என்று கோபமாய் வினவினார் ராஜதுரை.

“யார் நீ?” என்று ராஜதுரை வினவியை அதே கேள்வியை சற்றே திருத்திக்கேட்டான் தீபேந்திரன்.

“அதானே!, யார் தம்பி இந்த ஆளு திடீர்னு உள்ள வந்து நிற்கிறான். பூட்டுன வீட்டுக்குள்ள எப்படி வந்திருப்பான்? “என்று குழப்பத்துடன் வினவினார் ராஜதுரை.

“அத நான் உன்கிட்ட தான் கேக்கணும் ராஜதுரை, கதவை நீ தானே பூட்டின, கீழே ஏதோ சத்தம் கேக்குதுன்னு சொன்னதுக்கு பூனையா இருக்கும்னு கதை சொன்ன.. இவன் தான் அந்த பூனையா?” என்று தனது கோபத்தை ராஜதுரை பக்கம் திருப்பினான் தீபேந்திரன்.

” சத்தியமா சொல்றேன் தம்பி, நான் கீழே போகும் போது அங்க யாருமே இல்ல, பூட்டின கதவும் பூட்டுன மாதிரி தான் இருந்தது. பாப்பாவுக்கு பக்கத்துலயும் யாரும் இல்ல” என்று அவசரமான பதற்றத்துடன் கூறினார் ராஜதுரை.

தன் பணியாளனின் பதற்றத்தை பொருட்படுத்தாமல்.. கீர்த்தனை கூர்ந்து கவனித்து.. ” நான் பார்த்தது பிரம்மை இல்லை, எனக்கு ரொம்ப நல்லா ஞாபகம் இருக்கு நான் உன்னை தான் பார்த்தேன்.” என்று தனக்கு முன் இருந்தவனை முன்பே அறிந்தவன் போல் பேசினான் தீபேந்திரன்.

“இந்த ஆளை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா தம்பி!” என்று ஆச்சரியத்துடன் ராஜதுரை வினவிட.. அவர் கேள்விக்கான பதில் கூறாமல் சுஹனியை நெருங்கிக் கொண்டிருந்த கீர்த்தன் புறம் திரும்பி ” நாங்க வந்த காரை ஃபாலோ பண்ணிட்டு ஓடி வர உன்னால எப்படி முடிஞ்சது?, “என்று குழப்பமான குரலில் கேள்வி எழுப்பினான் தீபேந்திரன்.

” காரை ஃபாலோ பண்ணிட்டு வந்தது இவனா!, அப்போ அந்த குரங்கு?” என்று குழப்பத்துடன் ராஜதுரை வினவிட.. “அது நீ சொன்ன பொய்!” என்று எரிச்சலுடன் மொழிந்தான் தீபேந்திரன்.

“என்ன தம்பி சொல்றீங்க!, நான் எதுக்கு உங்க கிட்ட பொய் சொல்லப் போறேன். உண்மையிலேயே நான் பார்த்தது குரங்கு தான்!” என்று தான் கண்டதையே மெய் என அறிவித்தார் ராஜதுரை.

“அப்போ நான் பொய் சொல்றேன்னு சொல்லுறியா?, நான் சொல்றது பொய்யா இருந்தா இவன் எப்படி இந்த இடத்தை கண்டுபிடிச்சு வந்திருப்பான். இந்த இடத்துல நடக்கப் போற பூஜையை பத்தி உன்னையும் என்னையும் தவிர வேற யாருக்கும் தெரியாது நான் யார்கிட்டயும் சொல்லல, நீ யார்கிட்டயும் உளறிட்டியா என்ன?” என்று பொறுமை இழந்து வினவினான் தீபேந்திரன்.

“ஐயோ!! தம்பி சாமி சத்தியமா சொல்றேன் நான் என்னைக்கும் உங்களுக்கு துரோகம் பண்ண நினைச்சதே இல்லை..”என்று அவசரமாய் அலறிக்கொண்டே அறிவித்தார் ராஜதுரை.

அப்போதும் ராஜதுரையின் புறம் பார்வையை திருப்பாமல் கீர்த்தனை நோக்கி, ” உன்னை பார்த்தா நார்மல் மனுஷன் மாதிரி தெரியலையே!, காத்து வேகத்துல கார ஃபாலோ பண்ணிட்டு வந்திருக்கேனா! உனக்குள்ள ஏதோ வித்தியாசமான பவர் இருக்கு!, உண்மைய சொல்லு நீ யாரு?, உன்னால எப்படி அவ்ளோ பாஸ்ட்டா ஓடி வர முடிஞ்சது. உனக்குள்ள இருக்கிற சூப்பர் நேச்சுரல் பவர் என்ன?”என்று அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றான் தீபேந்திரன்.

“என்னது சூப்பர் நேச்சுரல் பவரா?, அப்படின்னா என்ன தம்பி,” என்று அப்பாவியாய் வினவினார் ராஜதுரை.

“சாதாரண மனுஷன் மாதிரி தெரிஞ்சாலும் அவங்களுக்குள்ள அசாதாரணமான ஒரு சக்தி இருக்கும். அதைத்தான் சூப்பர் நேச்சுரல் பவர்னு சொல்லுவாங்க..” என்று சந்தேகம் வினவியவருக்கு அவருக்கு புரியும் விதத்திலேயே பதில் தந்தான் தீபேந்திரன்.

“அப்படின்னா இவன் சாதாரண மனுஷன் இல்லையா..? பாக்க எந்த வித்தியாசமும் தெரியலையே, மனுஷன் மாதிரி தான் தெரியுறான்,!”என்று தன் காதுகளில் எட்டிய வார்த்தையை நம்ப முடியாமல் சந்தேகத்துடன் வினவினார் ராஜதுரை.

“அட முட்டாள்!, மனுஷன் மாதிரி தெரிஞ்சாலும் அவனுக்குள்ள ஏதோ ஒரு சக்தி இருக்கும்னு சொன்னது உன் காதுல விழுகளையா?, மறுபடியும் அதே கேள்வி கேக்குற?”என்று அதட்டினான் தீபேந்திரன்.

‘அப்படி இவனுக்குள்ள என்ன சக்தி இருக்கும். வேகமா ஓடி வந்தான்னு தம்பி சொன்னதே!, ஒரு வேளை அது தான் இவனுக்குள்ள இருக்கிற வித்தியாசமான சக்தியா இருக்குமோ!’ என்று தனக்குள் குழம்பியபடி நின்றிருந்தவரை வெறுப்புடன் பார்த்து” இன்னமும் என்ன வேடிக்கை பாத்துட்டு நிக்கிற… போய் அவனை பிடி..”என்று உத்தரவு பிறப்பித்தான் தீபேந்திரன்.

இருவரும் தங்களுக்குள் காரசாரமாய் விவாதித்துக் கொண்டிருக்க.. அதற்குள் சுஹனியை நெருங்கி இருந்த கீர்த்தன்… அவளைச் சுற்றி மந்திரம் ஜெபித்தபடி தீபேந்திரன் வரைந்து வைத்த நவ சக்கரங்களை கால்களால் அழிக்கத் துவங்கினான்.

“ஏய் நிறுத்து…” என்று அலறியபடி கீர்த்தனை நெருங்கிய ராஜதுரை.. அவனை அங்கிருந்து விலக்கி தள்ள முயல.. தன்னை தாக்க முயன்றவரை ஒரே பிடியில் தடுத்து நிறுத்தியவன், பிடித்த வேகத்திலேயே தூரமாய் தூக்கி எறிந்தான்.

தூக்கி எறியப்பட்ட வேகத்தில் அறையின் கதவில் இடித்துக் கொண்டு கீழே சரிந்த ராஜதுரை மயக்க நிலைக்கு சென்றார்.

ஒரே தாக்குதலில் சுருண்டு விழுந்த ராஜதுரையை கண்டு ஓர் அலட்சிய புன்னகை செய்தவன், அவரை அனுப்பி வைத்தவன் புறம் திரும்பி, “இது நமக்குள்ள இருக்கிற பகை, நேரா மோதுறத விட்டுட்டு எதுக்கு புள்ள பூச்சியை எல்லாம் அனுப்பி வைக்கிற!, தைரியம் இருந்தா நீயே என் கூட மோதி பாரு, தைரியத்தை விட உயிர் மேல ஆசை அதிகம் இருந்தா பிரச்சனை எதுவும் பண்ணாம இங்க இருந்து ஓடிடு.. ” என்று எச்சரிக்கை விடுத்தபடி, பூஜைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நவரத்தினங்களை திசைக்கு ஒன்றாய் தூக்கி எறிந்து, ஏற்று வைத்த விளக்குகள் அனைத்தையும் கீழே தட்டி விட்டான் கீர்த்தன்.

புதியவனின் புதிரான நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்த தீபேந்திரன் மனதில் சில பிம்பங்கள் வந்து போகத் துவங்கியது.. தெளிவில்லாத சில உருவங்களுடன் ஒரு பெண் அலறல் குரல்.. மனதிற்குள் எதிரொலிக்க.. தனக்குள் உண்டாகும் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறியவன் ஒரு முறை கண்களை இறுக மூடித் திறந்தான்…” இப்போ தான் உன்னை முதல் தடவை பார்க்கிறேன் இருந்தாலும் உன் மேல வெறுப்பா இருக்கு, உன்னை கொல்லனும்னு எனக்குள்ள வெறி ஏறுது, உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” என்று வெறுப்பான வார்த்தைகளால் கர்ஜனை செய்தான் தீபேந்திரன்.

“அத தெரிஞ்சிட்டு நீ என்ன செய்யப் போற.. ஒழுங்கு மரியாதையாக இங்க இருந்து ஓடிடு..” என்றவன் சுஹனியை தூக்கி தனது இடது தோளில் போட்டுக் கொண்டான்.

“அவளை எங்க கூட்டிட்டு போற?, கீழே இறக்கி விடு” என்ற தீபேந்திரன் கோபமாய் கூறியபடி, தன் கால்களால் கீர்த்தனின் மார்பை எட்டி உதைக்க.. சற்றும் எதிர்பாராத தாக்குதலில் பெண்ணவள் பாரத்தை தாங்கி நின்றவன், இரண்டு அடி பின் நகர்ந்து சென்றான்.

” திரும்பத் திரும்ப நீ ஒரே தப்பை செய்யுற!, பொண்ணோட சம்மதம் இல்லாம அவளை கல்யாணம் பண்ண நினைக்கிறது ரொம்ப பெரிய தப்பு. ஹனியை விட்டுடு. அது தான் உனக்கு நல்லது” என்று அப்போதும் பொறுமையாகவே பேசினான் கீர்த்தன்.

“அவ பேரு ஹனி இல்ல.. அவ என்னோட சுஹா.. என் சுஹாவை முதல்ல கீழே இறக்கி விடு ” என்று அதிகாரமாய் தனது உரிமையை நிலைநாட்ட நினைத்தவன் மேலும் கையை ஓங்கிக் கொண்டு கீர்த்தனை நெருங்கிட.. இதற்கு மேல் பொறுமையை இழுத்துப் பிடித்து வைப்பது சாத்தியம் இல்லை என்பது போல் தன்னை கோபமாய் நெருங்கியவன் கரத்தினை பற்றி.. வேகமாய் இழுத்து தன் அருகில் நிறுத்தி… கன்னத்தில் ஓங்கி அறைந்தான் கீர்த்தன்.

கிடைத்த அடியில் கதி கலங்கி நின்றவனை கண்டு என்ன நினைத்தானோ!, தனது கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, ” இனிமேலாவது இந்த மந்திர தந்திரத்தை எல்லாம் ஓரங்கட்டி வச்சிட்டு திருந்தி வாழுற வழியைப் பாரு.. ஹனியை நெருங்க முயற்சி செய்யாத” என்று அறிவுரை வழங்கினான் கீர்த்தன்.

முன் இருந்தவன் அறிவுரையை ஏற்க மனமற்று, “யார் நினைச்சாலும் சுஹாவை என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது. யார் தடுத்தாலும் இந்த பூஜை நடந்தே தீரும்..” என்று வெறிகொண்டவன் போல் கத்தியவன், கீர்த்தன் தோள்களில் கிடந்த சுஹனியை மீட்க முயன்றான் தீபேந்திரன்.

எதிர் தாக்குதலுக்கு தயாரான கீர்த்தன் தீபேந்திரனை தூரமாய் எட்டி உதைக்க.. தடுமாறியபடி கீழே விழுந்தவன் மீண்டும் எழுந்து.. அறையின் வெளிச்சத்திற்காக சுற்றி ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீப்பந்தத்தை எடுத்து கீர்த்தனின் வலது தோள்களில் ஓங்கி அடித்தான்.

ஒரே பிடியில் தீபேந்திரனிடம் இருந்து தீப்பந்தத்தை கைப்பற்றியவன் அதை அடுத்த நொடியே அறையின் மூலைக்கு வீசி விட அங்கிருந்த திரைச்சீலையில் நெருப்பு பற்றிக் கொண்டது..

“ஹனிக்கு உன்னை பிடிக்கலைன்னு தெரிஞ்சும் ஏன்டா இப்படி முட்டாள் தனமான வேலை பாக்குற?, இந்த ஒரு ஜென்மத்திலேயே உன்னை ஏத்துத் தயங்குறவளை ஏழு ஜென்மத்துக்கும் உன்னோட பிணைச்சு வைக்க நினைக்கிறது எந்த விதத்துல நியாயம். பிடிக்காத பொண்ணு கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்றதால உனக்கு அப்படி என்ன சந்தோஷம் கிடைச்சிடப் போகுது. “என்று தீபேந்திரனின் தவறை புரிய வைக்க முயன்றான் கீர்த்தன்.

“அதெல்லாம் சொன்னாலும் உனக்கு புரியாது சீ இஸ் மை லவ், சீஸ் ஒன்லி ஃபார் மீ.. அவளை யாருக்காகவும் எதுக்காகவும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். ” என்றவன் ஆக்ரோஷமாய் கீர்த்தனை தாக்க முயல.. சண்டையிடுவதில் முழு கவனத்தை செலுத்த வேண்டிய நிலையில் இருந்த கீர்த்தன் பிடி தளர்ந்தது, தோள்களில் துவண்டு கிடந்த சுஹனி நழுவி கீழே விழுந்தாள்.

மீண்டும் அவளை அள்ளிக் கொள்ள முயன்ற கீர்த்தன் மீது தீப்பந்தத்தை தூக்கி எறிந்தவன்.. அவன் சுதாரிக்கும் முன், அருகில் கிடந்த கூர்மையான பொருள் ஒன்றை எடுத்து அவசரமாய் சுஹனியின் வலது கையில் கிழித்து காயம் ஏற்படுத்தினான்.

காயத்தின் பலனாய் சுஹனியின் கையில் இருந்து ரத்தம் சொட்டத் துவங்கியது.. கசிந்த ரத்த துளிகளில் சிலவற்றை தன் இடது கையில் சேகரித்துக் கொண்டான் தீபேந்திரன்.

சுஹனியின் கரத்தினில் காயத்தை கண்டதும் பதற்றம் அடைந்த கீர்த்தன், தன் கவனத்தை அவள் புறம் திரும்ப.. அது தான் தக்க சமயம் என்று எண்ணிய தீபேந்திரன், ஏற்கனவே தனது ரத்தம் கலந்த கலசத்தில்.. சுஹயினின் ரத்தத்தையும் ஒன்றாய் சேர்த்தான்.

பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நவசக்தி சிலைகளுக்கு ரத்தம் கலந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தால் போதும்.. இருவரின் ஆன்மாவும் இனி வரும் ஜென்மம் அனைத்திலும் இணைந்தே இருக்கும்..

கீர்த்தனின் கவனம் முழுவதும் சுஹனியின் மீது இருக்க.. கலசத்தில் சேகரித்த நீர் கொண்டு நவசக்தி சிலைகளுக்கு அபிஷேகத்தை துவங்கினான் தீபேந்திரன்.

முதல் கலசத்தில் இருந்த நீரால் அபிஷேகம் முடியும் போது தான் கீர்த்தனின் கவனம் தீபேந்திரன் புறம் திரும்பியது. மற்ற எட்டு கலசத்தில் உள்ள நீரால் அபிஷேகம் செய்து முடித்தால் பூஜை நிறைவடையும் என்ற எண்ணம் எழுந்ததும் அவசரமாய் சுஹனியை விட்டு விலகி வந்த கீர்த்தன் ஆக்ரோஷத்துடன் தீபேந்திரனை தாக்கத் துவங்கினான்.

கீர்த்தனின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் துவண்டு விழுந்த தீபேந்திரன்.. முயற்சியை கைவிடாது மீண்டும் மீண்டும் கீர்த்தனை தாக்க முயன்றான்.

தீபேந்திரனின் கடின முயற்சிகள் ஒவ்வொன்றையும் மிக இலகுவாய் முறியடித்த கீர்த்தனின் இறுதி அடியில் அப்படியே தரையில் சுருண்டு விழுந்தான் தீபேந்திரன்.

தாங்க முடியாத வேதனையுடன் விழி மூட முயன்றவன் அருகில் சென்ற கீர்த்தன், “. இம்முறையும் என்னிடம் தோற்ப்பதற்காகவே மறுபிறவி எடுத்து வந்தாயா?, நீ எத்தனை பிறவி எடுத்து வந்தாலும் உனக்கு உன் காதல் கிட்டவே கிட்டாது காந்தாரா.. உன் கர்வத்தை அழித்து காதலைப் பறிப்பதற்காகவே யுகயுகமாய் காத்திருக்கிறான் இந்த கீர்த்தி வர்ம தேசிங்கன்..” என்று கர்ஜனையாய் முழங்கினான்.

“கீர்த்தி வர்ம தேசிங்கன்..” என்று கீர்த்தன் உச்சரித்த அதே பெயரை மீண்டும் முணுமுணுத்துக் கொண்டே விழி மூடி சரிந்தான் தீபேந்திரன்.

தீபேந்திரன் சட்டை பையில் அவன் வந்த காரின் சாவியை எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டவன், கையில் காயத்துடன் மயங்கிக் கிடந்த சுஹனியை தன் இரு கைகளில் அள்ளிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் கீர்த்தன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. ‘A’, ‘B’, ‘AB’, ‘O’ (ஓ) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர ‘A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. ‘O’ பிரிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு ‘யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~