17

மறைமுக உதவி…

பிரச்சனை ஒன்று வரும்போது
உன் நிலையில் நின்று
யோசிக்கும் போது..
உனக்கு சாதகமான
பதில் மட்டுமே கிடைக்கும்..
அடுத்தவர் நிலையில் நின்று
யோசிக்கும் போது
சரியான பதில் கிடைக்கும்… 

இதுவரை வெறும்  வார்த்தைக்கு மட்டுமே கணவன்  மனைவியாய் வாழ்ந்து கொண்டு   இருந்தவர்கள் வாழ்விலும் ஒன்றிணைய  விதுரன் மீது படித்திருக்கும் களங்கத்தை துடைக்க இருமடங்கு வேகத்துடன் பாலா   இருக்கும் இடத்தை கண்டறியும் முயற்சியில்  இறங்கினாள் ஹனிகா. 

தன்னுடன் படித்த தோழிகளில் சந்தியா படித்த கல்லூரியில்  அவர்களின் உறவில் அல்லது  தெரிந்தவர்கள் எவரேனும்  படித்துக்கொண்டிருகின்றார்களா என்று விசாரிக்க துவங்கினாள். அதில் ஒரு பெண் தனது தம்பி  தற்போது அந்த கல்லூரியில் தான் படித்துக்கொண்டிருக்கிறான் என்று  கூறவும், அவனிடம்   பாலா   படித்த ஆண்டு மற்றும்  பிரிவு போன்ற விபரங்களை கூறி    கல்லூரி அலுவலகத்தில் பாலாவின்  மற்ற விபரங்கள்  பெற்றிட ஏற்பாடு செய்தாள்.  

அவள்  கேட்ட  விபரங்கள்  கைவந்து சேர்வதற்கு  சரியாய் ஒருவாரம்  கடந்திருந்து, ஹனிகா ஊருக்கு பக்கத்து ஊர்தான் பாலா அவன் வீட்டு முகவரியும் கிடைத்திட   அவனை   நேரில் சந்தித்து என் அக்காவின் தற்கொலைக்கு நீ தான் காரணம்   நீ  கொடுத்த தொந்தரவு தாங்காமல் தான் என் அக்கா தற்கொலை செய்துகொண்டாள் என்று கேட்டு அவனுக்கு தண்டனை வாங்கிகொடுக்க வேண்டுமென உள்ளம் பரபரத்தது.    இங்கிருந்தபடி எதையும் செய்ய முடியாது,  தன் பிறந்த வீட்டிற்கு  சென்றால் நினைத்து எல்லாம் செய்து முடிக்கலாம்   என்ற எண்ணம்  தோன்றவும்   ஊருக்கு செல்ல விதுரனிடம்  அனுமதி  கேட்டு  வந்து நின்றாள் ஹனிகா. 

“ மாமா” என்று செல்லம் கொஞ்சி சினுங்கியவளை தன் கையணைவில் கொண்டு வந்து நிறுத்தியவன், “ஏம்மா..?” என்று அவளை போலவே ராகம் பாடியவன் மார்பில் வலிக்கும் படி   அடித்து, “  கிண்டல் பண்ணாதீங்கா! மாமா” என்று  மீண்டும்  சிணுங்கினாள் ஹனிகா. 

“என்ன  இன்னைக்கு கொஞ்சல்   கொஞ்சம் ஜாஸ்தியா தெரியுது? என்ன விசயம்?”  என்று  விதுரன் வினவ, “நான் ஒரு இரண்டு நாள் அம்மா வீட்டுக்கு போயிட்டு வரட்டுமா? அம்மாவை பார்க்கணும் போல இருக்கு!” என்றாள் ஹனிகா. 

“அவ்ளோ தான விசயம், நாளைக்கே உன் அம்மாவ இங்க கிளம்பி வந்திட சொல்லு, நீ அவங்கள   பார்த்த மாதிரியும் இருக்கும், அவங்களுக்கும்  நம்ம ஊர  சுத்திப்பாத்த மாதிரியும் இருக்கும்” என்று மாற்று வழி கூறினான் விதுரன். 

“ அம்மாவ மட்டும் இல்ல  அப்பாவையும் தான்” என்று ஹனிகா மறுக்க, “சிம்பிள் நாளைக்கே  அத்தை மாமா இரண்டு  பேருக்கும் டிக்கட் போட்டுடுறேன்” என்றான் விதுரன். 

“அப்பா அம்மாவ மட்டும் இல்ல எங்க வீட்டு ஆடு மாடு நாய் எல்லாத்தையம் பார்க்கணும் போல இருக்கு, பேசாம ஒரு டெம்போ பிடிச்சு எல்லாத்தையும் இங்க   தூக்கிக்கிட்டு   வந்திடுங்க” என்று சிடுசிடுத்தாள் ஹனிகா.

“அதுவும் நல்ல யோசனை தான், “ என்று மனைவி கோபத்தை பொருட்படுத்தாமல் விதுரன்  கிண்டல் செய்ய, “ நான்  ஊருக்கு போகணும்” என்று பிடிவாதம்  பிடிக்க துவங்கினாள் ஹனிகா. 

கோபமாய் தன்னை விட்டு விலகி நின்றவளை இழுத்து தன் முன் கொண்டு வந்து நிறுத்தியவன், “என்னைய விட்டுட்டு உன்னால இருக்க முடியுமா?”, என்று சமாதானம் செய்ய முயல “அதெல்லாம் இருந்திடுவேன், இரண்டு நாள் தான” என்று  தன் முடிவில்  தளராமல்   நின்றவளை  அணைத்துக்கொண்டவன், “என்னால இருக்க முடியாது ஹனி,”  என்றான் இன்னும் தன்னுடன் சேர்த்து இறுக்கிக்கொண்டபடி.

“எனக்கு தெரியும் நீங்க இப்படி தான் சொல்லுவீங்கன்னு, ராதா அண்ணி கூட சொன்னாங்க, பொதுவா இந்த ஆம்பளைங்களுக்கு பொண்டாட்டி அம்மா வீட்டுக்கு போகணும்னு சொல்லும்போது தான் பாசம் பொங்குமாம். அவங்க சொன்னது சரிதான்” என்று விதுரன்  கைக்குள் இருந்து தன்னை விடுவித்து கொள்ள போராடினாள்.

            மனைவியின் வார்த்தையிலும் தன்னை விட்டு விலக எடுத்துக்கொள்ளும் முயற்சிலும் உண்டான எரிச்சலுடன், “அப்போ என் அன்பு பொய்ன்னு சொல்லுறியா?” என்றான் விதுரன்.

“ சேச்சே..எவ்ளோ கஷ்டப்பட்டு கிடைச்ச பொக்கிஷம் உங்க அன்பு அதை போய் பொய்ன்னு சொல்லுவேனா? உங்க பாசத்தை இப்போ கொட்டுறது  தான் கொஞ்சம் ஓவரா இருக்கு!” என்றாள் ஹனிகா.

“எனக்கு உன்னை பிடிக்கும்னு அடிக்கடி சொல்லுற அன்பை விட சொல்லாம உள்ளுக்குள்ள  மறைச்சு வைக்குற அன்பு தான் ஆழமானது நிலையானதும்”,  என்றிட, “உள்ளுக்குள்ள வைச்சு பூஜை செய்வீங்களோ!” என்று கண்சிமிட்டி கேலி  பேசியவள் காதை செல்லமாய் திருகிட,  “ வலிக்குது மாமா” என்று முகம் சுருங்கினாள் ஹனிகா.

அவள் முகம்பொய்க்கு கூட வாடப் பொறுக்காமல் “வெளிய சொல்லல, ஆனா விடுற ஒவ்வொரு மூச்சுலயும்  நீ தான் இருக்க. சிரிக்க மறந்த எத்தனையோ நாட்களுக்கும் சேர்த்து இப்போதான் சிரிக்கிறேன், என்  சின்ன சின்ன சந்தோஷத்துக்கு  காரணம் நீ   தான் குட்டிமா.  நீ இல்லாம  இரண்டு நாள் இல்ல இரண்டு நிமிஷம் கூட என்னால இருக்க முடியாது, வீட்டை விட்டு வெளிய போய்  திரும்பி வரும்போது இந்த வீட்டுக்குள்ள எனக்காக  நீ இருப்பாங்கிற நினைப்பு  மட்டும் தான் இன்னும்  என்னை உயிர்ப்போட நடமாட வைக்குது”, என்று    இதுவரை சொல்லாமல் மறைத்து வைத்த தன் உணர்வுகளை வெளிப்படுத்தினான் விதுரன்.

தான் இல்லாமல் ஒரு நிமிடத்தை கூட கடக்க முடியவில்லை என்று சொல்பவனிடம், அதற்குமேல் என்ன பிடிவாதம் பிடிப்பது என்று   ஹனிகா மௌனமாகிட, அவள் அமைதியை தாங்கிக் கொள்ளமுடியாமல்,  “ஆபீஸ்ல கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு அது முடியவும் நானே உன்னை ஊருக்கு கூட்டிட்டு போயி உன் அப்பா அம்மாகிட்ட, இங்க பாருங்க  என் பொண்டாட்டிய அதாவது உங்க பொண்ண நான் நல்லா தான் பார்த்துகிறேன்னு  காட்டிட்டு கையோட என் கூடவே கூட்டிட்டு வந்துடுவேன்.  என் செல்ல குட்டிக்கு இப்ப சந்தோஷம் தான?” என்று அவள் கன்னம் பற்றி தன் முகம் பார்க்க செய்து காதலுடன் கூறினான் விதுரன். 

விதுரன் காதலில்  தன்னை மறந்தவள், தன் இருகைகளையும் நீட்டி, “ தூக்கு மாமா” என்று வழமை போல கொஞ்சலுடன்  கூறிட, எப்போதும்  அவள் அவ்வாறு தூக்கச்சொன்னதும் செய்வது போல அவள் உயரத்துக்கு  குனிந்து வராமல் அவளை தன் உயரத்திற்கு இடையில் கரம் பதித்து தூக்கியவன்,  அவள் ரகசியம் கூறிட  ஏதுவாய் காதை அவள் வாய் அருகில் கொண்டு செல்ல, அவன் கன்னம் பற்றி  திருப்பி இதழில் மெதுவாய் இதழ் பொருத்தி “ போதும் இறக்கிவிடுங்க”  என்றாள் ஹனிகா.

“எனக்கு  போதாதே!” என்று கள்ளனாய் கன்னக்குழி விழ சிரித்தவன், மறுப்பாய் தலையசைத்து தன்னை இம்சிக்கும் தன்னவள் இதழில் மீண்டும் தன்னை தொலைக்க துவங்கினான்.

ஒருவழியாய் காதல் மயக்கத்தில்  இருந்து மீண்டவன்,  நேரம் தவறியே அலுவலகம் கிளம்பி சென்றான்.

எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் கோவை மாநகரத்தின் ஒரு பகுதியான ரேஸ்கோர்ஸ். அமைதியான சாலையில் அமைந்திருக்கும் கட்டிடங்களின் அமைப்பு அதன் உரிமையாளர்களின் செழுமையை பறைசாற்றும். உயர்ந்த கட்டிடத்தின் ஒரு பகுதியை தனது அலுவலகமாக பயன்படுத்திக்கொண்டிருந்த விதுரன் தன் அலுவலக பணியில் மும்முரமாய் மூழ்கியிருந்த நேரம் அவனைக் காண அனுமதி பெற்று  அவசரமாய் அறையினுள்  நுழைந்தார் மாதவன். 

“என்ன ஹீரோ சார் காலையிலயே இவ்ளோ பதட்டமா இருக்கீங்க? கேஸ்ன்னு  நினைச்சு ஏதாவது லூசுகிட்ட மாட்டிக்கிட்டீங்களா என்ன?” என்று கேலியுடன் விதுரன் வினவிட “என்ன சாரோட  பேச்சுல நக்கல் கொஞ்சம் தூக்கலா இருக்கு?  நடவடிக்கைல ஏதோ வித்தியாசம் தெரியுதே, என்ன நடக்குது?” என்று ஆர்வத்துடன்  வினவினார்  மாதவன்.

“எனக்கு  நடக்குறது இருக்கட்டும், உங்களுக்கு என்ன  நடந்தது?  எதுக்கு இப்படி பதறிட்டு வந்தீங்க?” என்று விதுரன்   கேள்விக்கு,   “ விஷயம் தெரிஞ்சா நீயும்  பதட்டமாகிடுவ”  என்று புதிர் போட்டவர்  விதுரனுக்கு  எதிரில் இருந்த இருக்கையில்  அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு மேலும் தொடர்ந்தார், “ அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னேல, நீ சொன்ன மாதிரியே ரெண்டு ஜாதகமும் அந்த பொண்ணோட அம்மாவுக்கு அனுப்பிவைச்சேன்”,  என்று மாதவன் நிறுத்த,  இடையில் புகுந்து “ஆமா அதுல  ஒரு ஜாதகம் நல்லா பொருந்தி இருக்குன்னு சொல்லி பொண்ணு பார்த்து  நிச்சயதார்த்த தேதி கூட குறிச்சுட்டாங்கல” என்றான்  விதுரன். 

“அதுல தான் சிக்கலே இருக்கு” என்றார் மாதவன். “ அதுல என்ன சிக்கல் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எதிர்பார்த்ததைவிட அதிகமாக வரதட்சனை கேட்கிறாங்களா?, அவங்க என்ன    எதிர்பார்த்தாலும் சரி அதை விட அதிகமாவே  செஞ்சி தாரேன்னு மாப்பிள்ளை வீட்டுல சொல்லிடுங்க,  இந்த விஷயம்  பொண்ணு  வீட்டுக்கு   தெரியக்கூடாது, எந்த பிரச்சினையும் இல்லாம இந்த கல்யாணத்தை நல்லபடியா  நடத்திவைக்க வேண்டியது என் கடமை” என்று பொறுப்புணர்ச்சியுடன் பேசினான்  விதுரன்.

“என்னையும் கொஞ்சம் பேசவிடு. என்ன சொல்ல வரேன்னு புரியாம கடமை உணர்ச்சில பொங்கிட்டு இருக்க.  நீ நல்லபடியா நடக்கும்னு  ஆசைப்படுற இந்த கல்யாணத்துக்கு  அந்த பொண்ணு  சம்மதம் சொல்லனும்னா இத்தனை நாள் அவங்க குடும்பத்துக்கு எங்க இருந்தோ முகத்தை கூட காட்டாம உதவி செஞ்சிட்டிருக்க அவ அண்ணன்  பாலாவோட  நண்பன நேருல பார்க்கணுமாம், அப்பதான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுவேன்னு  அந்த பொண்ணு பிடிவாதம் பிடிக்குது”, என்று  பெரிய அணு குண்டை போட்டார் மாதவன். 

“என்ன என்னை நேர்ல பாக்கணும் சொல்றாங்களா? நான் எப்படி அவங்க முன்னாடி வரது, அவங்களுக்கு உண்மை தெரிஞ்சா  என்ன நினைப்பாங்க?,   என்னால  வர முடியாது நீங்க ஏதாவது சொல்லி சமாளிங்க ஹீரோ சார்”  என்று தயங்கினான்  விதுரன். 

“ இதுல சமாளிக்க என்ன இருக்கு என்னை கேட்டா இந்த பிரச்சனையில  இருந்து தப்பிக்கிறதுக்கு இதுதான்  நல்ல வாய்ப்பு,  பேசாம   நான் யாருன்னு தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை, கல்யாணம் பண்றதும் பண்ணாததும்  உன் விருப்பம்ன்னு  சொல்லி இந்த பிரச்சனைய இதோட தலைமுழுகிடு”, என்று யோசனை சொன்னார் மாதவன். 

“பாலா இந்நேரம் உயிரோடு இருந்திருந்தா அவன் தங்கச்சிக்கு என்ன செய்வானோ அதை தான் நான் செஞ்சுக்கிட்டு இருக்கேன். இது சந்தியாவோட விருப்பமும் கூட. அவளுக்காக நான் இத செஞ்சு தான் ஆகணும். ஹீரோ சார் புரிஞ்சுக்கோங்க” என்று தன் முடிவில்  பிடிவாதமாக நின்றான் விதுரன். 

“நான் புரிஞ்சுகிறது இருக்கட்டும், உனக்கு கொஞ்சமாது புரியுதா? அவன் பண்ணுன முட்டாள்தனத்துனால தான் உன்  வாழ்க்கை  அழிஞ்சது, நீ  என்னடான்னா அவன் குடும்பத்துக்கே உதவி செஞ்சுட்டு இருக்க. பாலாவே உயிரோடு இருந்திருந்தாலும் அவன் குடும்பத்துக்கு இந்த அளவுக்கு பார்த்து பார்த்து செஞ்சிருப்பானான்னு  தெரியல. அந்த குடும்பம் இந்த நிலைமையில நிக்கிறதுக்கு  ஒருவகையில் நீயும் சந்தியாவும்   காரணம்ன்னு உறுத்தலா இருக்குன்னு உதவி பண்ணனும்னு நினைச்ச, அது தப்பு இல்ல, அதுக்கு தான்  கொஞ்சம்  மாடு வாங்கி கொடுத்து  அவங்களுக்குன்னு ஒருதொழில் ஏற்பாடு பண்ணி கொடுத்த, அந்தப் பொண்ணையும் அஞ்சு வருஷம் காலேஜ் படிப்பு படிக்க வச்சிருக்க.  செஞ்ச வரைக்கும் போதாதா இன்னும் உன் மனசு ஆறலையா?, உதவி செய்றதுக்கும் ஒருஅளவு வேணும் விதுரா.   நல்லவனா இருக்க வேண்டியதுதான் அதுக்காக அநியாயத்துக்கு நல்லவனா இருந்தா, எல்லாரும் யூஸ் பண்ணி தூக்கி எறிஞ்சிட்டு போயிட்டே இருப்பாங்க”, என்று ஆற்றாமையுடன் பேசினார் மாதவன். 

“நான் செய்யுறது உதவி இல்ல  ஹீரோ சார்,  செஞ்ச தப்புக்கு பிராய்ச்சிதம்..” என்றான் விதுரன்.

“ ஓ… எனக்கு ஒரு விஷயம் சொல்லு ஹனிகாவுக்கு நீ செய்யற பிராய்ச்சிதம் தெரிஞ்சா என்ன ஆகும்? அதாவது நான் என்ன கேட்க வரேன்னா? அவ அக்கா சாக காரணமாயிருந்தவன் குடும்பத்துக்கு  பிராய்ச்சித்தம்ங்கிற பேருல  நீ செய்யுற உதவி தெரிஞ்சா உன்னை சும்மா விடுவாளா.. ?” என்றார் மாதவன்.

“ நீங்க சொல்லுறது சரிதான், ஹனிக்கு இந்த உண்மை தெரிஞ்சா, என்னை உண்டு இல்லன்னு பண்ணிடுவா.  ஆனா  நீங்களோ நானோ சொல்லாம அவளுக்கு உண்மை  தெரிய வாய்ப்பில்ல,  அவளை பொறுத்தவரைக்கும் சந்தியா  என்கூட ஏற்பட்ட சண்டையால தான் தற்கொலை பண்ணிகிட்டா.  சில உண்மை யாருக்கும் தெரியாம இருக்கிறது தான் நல்லது. நீங்க பேச்சை மாத்த  முயற்சி பண்ணாம  இந்த பிரச்சனையில இருந்து எப்படி வெளிய வரதுன்னு  வழி சொல்லுங்க” என்றான் விதுரன்.

“ என்கிட்ட எதுக்கு வழி கேட்கிற, என் பேச்சை கேட்டா எல்லாம் செய்யுற?” என்று மாதவன் சிடுசிடுக்க “உங்க பேச்சை கேட்டதால தான் இந்த பிரச்சனை, சோ இதுக்கான  வழியையும் நீங்க தான் சொல்லனும்”  என்றான் விதுரன்.

“ என்ன என் பேச்சை கேட்டதால தான் பிரச்சனையா?” என்று மாதவன் அதிர்ச்சியாக, “பாலா தங்கச்சி படிப்பு செலவுக்கு டிரஸ்ட் கொடுக்கிற மாதிரி டிராமா பண்ணலாம்னு சொன்னேன்,  நீங்க தான் அது செட் ஆகாது, பாலா பிரெண்ட்ன்னு சொல்லிட்டு ஹெல்ப் பண்ணலாம்னு சொன்னீங்க, இப்போ என்னாச்சு?  அந்த பிரென்ட்டை பாக்கனும்னு சொல்லுறாங்க! இதே டிரஸ்ட்னா இந்த பிரச்சனை வந்திருக்காது” என்றான் புரியாமல்.

“சட்டம் படிச்சது நீயா இல்லை நானா?  ஒரு டிரஸ்ட்ல இருந்து ஒருத்தருக்கு உதவி பண்ணனும்ன்னா எத்தனை பார்மாலிட்டி இருக்கு தெரியுமா?   நினைச்சதும் ஒரு டிரஸ்ட் ஆரம்பிச்சு ஒரு  பொண்ண  மட்டும் படிக்க வைக்க  முடியுமா?, இன்னொரு விசயத்த நீ மறந்துட்டு பேசுற. நீ அந்த பொண்ண படிக்க  மட்டும் வைக்கல, அவங்க வீட்டுக்கு வேண்டிய எல்லா உதவியும் பண்ணுன. இப்போ கல்யாணம் வரைக்கும் நீ  தான் பண்ணிட்டு இருக்க.  சோ, குழப்பத்துல உளறுறத விட்டுட்டு இந்த பிரச்சனைக்கு நல்ல வழி யோசி” என்று சூழ்நிலையை விளக்கினார் மாதவன்.

தோப்புக்கரணம் போடுவது போல இரண்டு காதிலும்  கை வைத்து தன்  தவறுக்கு மன்னிப்பு வேண்டுவது போல  விதுரன்  கெஞ்சலாய் பார்க்க, “சும்மா பாவம் போல பார்த்து படுத்தாதடா.  நீ அந்த பொண்ணுக்கு  போன் பண்ணி பேசு,  சொன்ன பொய்ய மறந்துடாத”, என்று மாதவன் கூறிட, “என்ன ஹீரோ சார் யோசனை சொல்லச்சொன்னா ஆப்பு அடிக்கிறீங்க?” என்று பதறினான் விதுரன்.

“பயப்படாத. அவங்களுக்கு உண்மை தெரிய வாய்ப்பில்ல,  என்னைக்கு இருந்தாலும் உன்னை பத்தின விஷயம் தெரிஞ்சுக்க அவங்க முயற்சி  பண்ணுவாங்க, அவங்களே தெரிஞ்சுக்கிறத விட நாமே நம்மள பத்தி சொல்லிடலாம்” என்றார் மாதவன்.

“உண்மைய சொல்ல சொல்லுறீங்களா?” என்று குழப்பமாய் விதுரன் வினவ.. “என்னைய கேட்டா உண்மைய சொல்லுறது தான் பெஸ்ட்ன்னு சொல்லுவேன், அதுல உனக்கு விருப்பம் இல்ல அதனால் பொய்யை உண்மை மாதிரியே சொல்லுவோம்” என்று பாலாவின் தங்கை பாக்கியாவிடம் விதுரன்  என்ன பேசுவது எப்படி பேசவது என்று சொல்லிக்கொடுத்தார் மாதவன்.

மாதவனின் அறிவுரைப்படி பாலாவின்   தங்கையை தொடர்பு கொண்டான் விதுரன்.

அவள் வேண்டுகோளுக்கு இணங்க  அவள் திருமண நிச்சயதார்த்தத்திலும் கலந்து கொள்ள சம்மதம் சொன்னான்.