17…

மனதின் ஆசைகள்

அதிகரிக்கும் போது..

வாழ்வில்  அவஸ்தையும்

அதிகரிக்க துவங்கியது..

ஆசையை அடக்க தெரிந்தவன்..

வாழ்வை வெல்கிறான்..

அடக்க மறந்தவன்..

கால ஓட்டத்தில்

அடங்கி போகிறான்..

இரு அறைகளை சேர்த்து இணைக்கப்பட்டது போல் இருந்த அந்த பெரிய அறையின் மத்தியில்,  வாமை, ஜேஷ்டை, ரவுத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூததமனி, மனோன்மணி எனும் நவசக்திகளின் உருவங்களை பெண்ணின் வடிவத்தில் செதுக்கிய  ஒன்பது  கற்சிலைகள் வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

பெண் தெய்வங்களுக்கு காவல் தெய்வங்களான..  வீரவாகுதேவர், வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேசன், வீரபுரந்திரன், வீரராக்ஷசன், வீரமார்த்தாண்டன், வீரராந்தகன், வீரதீரன் ஆகிய நவ வீரர்களை பிரதிபலிக்கும் விதமாய் பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், வெண்கலம், இரும்பு,தரா(எட்டுப்பாகம் செம்பும் ஐந்துபாகம் காரீயமுங் கலந்த ஓர் உலோகம்), துத்தநாகம் ஆகிய நவ உலோகங்களை உருக்கி செய்யப்பட்ட ஒன்பது அருவாள்கள் நவசக்தி சிலையை சுற்றி அரணாய் பதிக்கப்பட்டிருந்தது.

சரிவர செதுக்கப்படாத சிலையின் கோர உருவத்தை மேலும் அகோரமாய் காட்டும் விதமாய்.. சிலைகள் மீது அங்கங்கு மஞ்சள் குங்குமம் திருநீறு ஆகிய  கலவைகள் பூசப்பட்டிருந்தன.

நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, வேர்க்கடலை ஆகிய நவ தானியங்களை இடித்து செய்த மாவினை ஒன்பது உருண்டைகளாக வாழை இலையில் நவசக்தி சிலைகளுக்கு படையல் இடப்பட்டு இருந்தது.

கோமேதகம், நீலம், வைரம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம் போன்ற நவரத்தினங்கள் கலந்த கலவை ஒரு தட்டில் கொட்டிக் கிடக்க,  அதனை அடுத்து  நவக்கிரக தளங்களாக கருதப்படும் சூரியனார் கோவில், திங்களூர், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம்.. ஆகிய தளங்களிலிருந்து பெறப்பட்ட புனித நீர் ஒன்பது கலசங்களில் நிறைத்து வைக்கப்பட்டிருந்தது.

மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, சந்தனம், விபூதி நவசக்தி சிலைக்கு அபிஷேகம் செய்ய ஒன்பது வகையான அபிஷேகப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

தூக்க மாத்திரையின் உதவியால் மயக்கத்தில் கிடந்த  சுஹனியை சுற்றி  த்ரைலோக்ய மோகன சக்கரம், சர்வசாபுரக சக்கரம், சர்வ சம்மோகன சக்கரம், சர்வ சவுபாக்ய சக்கரம், சர்வார்த்த சாதக சக்கரம், சர்வ ரக்ஷகர சக்கரம், சர்வ ரோஹ ஹர சக்கரம், சர்வ ஸித்தி ப்ரத சக்கரம், சர்வனந்தமைய சக்கரம் என ஒன்பது நவ சக்கரங்களை மாந்திரீகம் மந்திரத்தை உச்சரித்தபடி வரைந்தான் தீபேந்திரன்.

தன் முதலாளியின் விசித்திர செயல்களை கவனித்துக் கொண்டிருந்த ராஜதுரை..”தம்பி எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாமா?” என்று தயக்கத்துடன் வினவினார்.

பதில் ஏதும் கூறவில்லை என்றாலும் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு தலையை மட்டும் ராஜதுரை பக்கம் திருப்பியவன், என்ன என்பது போல் புருவம் உயர்த்தி வினவ… அதையே தனக்கான சம்மதமா எடுத்துக்கொண்ட ராஜதுரை தனது சந்தேகத்தை வினவத் துவங்கினார்.

” உங்களைப் பத்தின உண்மை தெரிஞ்சதுக்கு அப்புறம், சுதாகர் ஐயாவும் சுமதி அம்மாவும், சுஹனி பாப்பாவை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சம்மதிக்கல, நீங்களும் எவ்வளவோ பேசி பார்த்தீங்க ஆனா அவங்க ஒத்துக்கவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அப்பவும் இதே மாதிரி தான் இந்த வீட்டுக்கு வந்து.. ஏதேதோ பூஜை பண்ணி, அவங்க ரெண்டு பேரையும் உங்க வசிய கட்டுப்பாட்டுக்குள்ள   கொண்டு வரப் போறேன்னு சொன்னீங்க.”என்று ராஜதுரை நிறுத்த..

”  நான் சொன்னபடி தானே நடந்தது,  என் அத்தை மாமாவை வசியம் பண்ணி, என் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்து, அவங்க வாயாலே கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சேனே!” என்றான் தீபேந்திரன்.

“ஆமா அதுல எந்த சந்தேகமும் இல்லை..

நீங்க சொன்ன மாதிரியே உங்க அத்தை மாமா ரெண்டு பேரும்  மகுடிக்கு மயங்கின பாம்பு மாதிரி உங்க பேச்சைக் கேட்டு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுனாங்க, பாப்பாவும் அப்பா அம்மா சந்தோசத்துக்காக உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லுச்சு. எல்லாம் சரியா தான் போயிட்டு இருந்தது, ஆனா அதுக்கு அப்புறம் தான் கதையே மாறிடுச்சே!  திடீர்னு ரெண்டு பேரும் கல்யாணத்தை நிறுத்திட்டு உங்கள வீட்ட விட்டு வெளிய துரத்திட்டாங்களே!.. அப்போ உங்க பூஜை பலிக்கலன்னு தானே அர்த்தம்!, “என்றவர் தீபேந்திரனின் கோபப் பார்வைக்கு பயந்து பணிந்து… சொல்ல வந்ததை சொல்லாமல் பாதியில் நிறுத்தினார்.

“நீ என்ன கேட்க வரேன்னு எனக்கு புரியுது, அப்பா அம்மாவை வசியம் பண்ணியே ஒன்னும் நடக்கல,  இப்போ பொண்ண மட்டும் வசியம் பண்ணி என்ன நடக்க போகுதுன்னு தானே நக்கலா கேக்க வர  ?..”என்று ராஜதுரையின் எண்ணத்தில் இருந்ததை அப்படியே வினவினான் தீபேந்திரன்.

“அது இல்ல தம்பி..,” என்று வாய் வார்த்தைக்கு மறுத்தாலும், அதற்கான விடையை அறிந்து கொள்ளவே மனம் நச்சரித்தது.. இருந்தும் எதிரில் இருந்தவன் கோபத்திற்கு பயந்து வெளிப்படையாக எதையும் கேட்காமல், “இல்ல போன தடவை ஏதோ பூஜைல தப்பு நடந்திருக்கும் போல,  அதனால தான் வசியம் பண்ணது பலிக்கல.  இந்த தடவை எந்த தப்பும் வந்திடாத மாதிரி எல்லாத்தையும் தெளிவா பண்ணுங்கன்னு சொல்ல வந்தேன்.., நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க!”, என்று மழுப்பினார் ராஜதுரை.

“போன தடவை நான் இந்த  பூஜை பண்ணலையே!”என்று தீபேந்திரன் துவங்க.. இடையில் நுழைந்த ராஜதுரை…”என்ன தம்பி இப்படி சொல்றீங்க?, நானும் நீங்க பூஜை பண்ணும் போது உங்க பக்கத்துல தான இருந்தேன் மறந்துட்டீங்களா?,  உங்க அத்தை மாமாவுக்கு கார் ஆக்சிடென்ட் நடக்குறதுக்கு முதல் நாள் கூட அகோர தேவிக்கு நடு ஜாம   பூஜை  பண்ணுனீங்களே,  அப்பவும் நான் உங்க கூட தான் இருந்தேன்” என்றார் ராஜதுரை.

“நான் பூஜை பண்ணலன்னு சொல்லலையே, இந்த பூஜை பண்ணலன்னு தானே சொன்னேன். கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க நான் அவங்க கிட்ட பிரயோகித்தது சாதாரண வசியம் மந்திரம் தான். அதுக்கு சாதாரண பூஜையே போதுமானது, அடுத்து நீங்க சொன்னீங்களே அகோர தேவிக்கு நடந்த நடு ஜாம பூஜை அது உயிரை காவு வாங்குறதுக்காக செய்யுற பூஜை, அகோர தேவிக்கு உயிர்பலி கொடுத்து என் ரத்தத்தால அபிஷேகம் பண்ணுனேன், அதோட பலன் தான் அடுத்த நாள் நடந்த  கார் ஆக்சிடென்ட், இப்போ நான் பண்ண போறது எங்க ரெண்டு பேரையும் ஜென்ம ஜென்மத்துக்கும் சேர்த்து வைக்கிற நவசக்தி பூஜை..” என்றான் தீபேந்திரன்.

“என்ன தம்பி சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல.. அப்போ நீங்க பாப்பாவை வசியம் பண்ண போறது இல்லையா!..”என்று குழப்பத்துடன் வினவினார் ராஜதுரை.

“இதுவும் ஒரு வகையான வசியும் தான்..”என்று தீபேந்திரன் பதில் தர..

“அப்போ இப்ப பண்றதும் வசிய பூஜை  அப்படித்தானே!” என்று ராஜதுரை வினவிட ஆமாம் என்பது போல் தலை அசைத்தான் தீபேந்திரன்.

” அன்னைக்கு அத்தை மாமாவுக்கு வசியம் பண்ணி அது சரியா பலிக்கல, கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாம் சொதப்பிடுச்சு,  அதனால இந்த தடவையாவது தெளிவா மந்திரம் சொல்லுங்க , இல்லைனா பாப்பாவும் மறுபடியும் மனசு மாறிடப் போகுதுன்னு  சொல்ல வந்தேன்.” என்று ஒருவழியாக தன் மனதில் இருந்ததை கூறிவிட்டார் ராஜதுரை.

“நான் தான் ஏற்கனவே சொன்னேனே அன்னைக்கு அத்தை மாமா கிட்ட நான் பயன்படுத்துனது சாதாரண வசிய மந்திரம்.. ஆனா இப்ப நான் பண்ண போறது ஜென்ம ஜென்மத்துக்கான வசியம், இதுல எந்த தப்பும் வராது. என் வேலைய பாக்க விடாம சும்மா  லொட லொடன்னு பேசிட்டு இருக்காம, கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு அமைதியா இரு.”என்று தன் மந்திரத்தின் மீது கொண்ட நம்பிக்கையில் உறுதியாக பேசியவன், அதே நேரத்தில் ராஜதுரையை அதட்டி அடக்கவும் செய்தான் தீபேந்திரன்.

“அட  சாதாரண வசியம் மந்திரமே ஒன்னும் இல்லாம போயிடுச்சு.. இப்ப இவ்வளவு பெரிய பூஜை பண்றீங்க.. மந்திரத்தை பார்த்து சொல்லுங்கன்னு தான் சொல்ல வரேன் தம்பி. நான் உங்கள வேற ஒன்னும் தப்பா சொல்லல” என்று சமாதானம் செய்ய முயன்றார் ராஜதுரை.

“போன தடவை தப்பு நடந்தது என்னோட மந்திரத்தில் இல்லை..”என்று தீபேந்திரன் மறுக்க..”அப்புறம்?” என்று கதை கேட்கும் ஆவலுடன் வினவினார் ராஜதுரை.

“கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்கிறதுக்காக அத்தையும் மாமாவும் குலதெய்வ கோயிலுக்கு போயிட்டு வந்தாங்களே அங்க தான் தப்பு நடந்தது.”என்றான் தீபேந்திரன்.

“என்ன குலதெய்வ கோயில்ல தப்பு நடந்ததா..?, என்ன தம்பி சொல்றீங்க அப்படி ஒன்னும் அங்க பெருசா நடக்கலையே..   முத பத்திரிக்கையை  அம்மனுக்கு வச்சுட்டு, கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு வேண்டிக்கிட்டு பொங்க வெச்சு கெடா வெட்டி ஊருக்கே விருந்து குடுத்துட்டு வந்தாங்க,  இதுல என்ன தப்பா நடந்தது?” என்று புரியாமல் வினாவினார் ராஜதுரை.

“பொதுவா குலதெய்வம் நம்ம குலத்தை காக்குறதுக்காக பரம்பரை பரம்பையா வழிபட்டு வரது. உயிரை பறிக்க வர எமன் கூட குலதெய்வத்து கிட்ட அனுமதி வாங்கிட்டு தான் உயிர எடுப்பானாம். அந்த அளவுக்கு குலதெய்வம் முக்கியத்துவம் வாய்ந்தது.  நம்ம குலத்தையே காக்குற குலதெய்வத்துக்கு முன்னாடி நான் செஞ்ச சாதாரண வசியம் எல்லாம் ஒண்ணுமே இல்ல. கல்யாண பத்திரிகை வைக்க போன மாமா அவரோட  குலதெய்வமான காமாட்சி அம்மனுக்கு பொங்கல் வச்சு,  காவல் தெய்வமான கருப்பனுக்கு கெடா பலி கொடுத்ததும் அவர் கிட்ட நான் பயன்படுத்திய வசியம் பலனில்லாம போயிடுச்சு. அதனால தான் கல்யாணத்தை நிறுத்திட்டாங்க..” என்றான் தீபேந்திரன்.

“ஓ இது தான் விஷயமா.. அதனால தான் குடும்பம் தலைக்கனும்,  எந்த கெட்டதும் நம்ம சந்ததிகளை அண்டக்  கூடாதுன்னு  வருஷத்துக்கு ஒரு தடவை குலதெய்வத்துக்கு சிறப்பா விழா எடுத்துக் கொண்டாடுறாங்களோ!  “என்று ஆச்சரியத்துடன் பேசினார் ராஜதுரை.

பொதுப்படையாக தலை அசைத்து விட்டு மீண்டும் தன் வேலையில் கவனம் செலுத்தினான் தீபேந்திரன்.

“அதனால தான் பாப்பா கிட்டயும் சாதாரண வசிய மந்திரம் பயன்படுத்தாம,   இவ்ளோ பெரிய பூஜை ஏற்பாடு பண்ணி இருக்கீங்களா ?” என்றார் ராஜதுரை.

“இல்ல, அத்தை மாமா இறந்ததுக்கு அப்புறம் நான் சுஹாவை தேடி வந்தேன், ஆனா அவ என்னை பக்கத்திலேயே சேர்த்துக்க ரெடியா இல்ல, அப்போ அத்தை மாமாவுக்கு   செஞ்ச மாதிரி சாதாரண வசிய மந்திரத்தை  சுஹா கிட்ட ட்ரை பண்ணி பார்த்தேன். என்னன்னு தெரியல என்னால  சுஹாவை வசியம் பண்ண முடியல  “என்றான் தீபேந்திரன்.

” ஏன்?” என ஒற்றை வரியில் ராஜதுரை வினவ..

“நான் ரொம்ப ஆபத்தானவன்னு தெரிஞ்சுகிட்ட அத்தை மாமா..  அவங்களை வசியம் பண்ணுன மாதிரியே  சுஹாவையும் வசியம் பண்ணி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிடுவேன்னு  பயந்துட்டு,  அவளை குலதெய்வத்துக்கு தத்து கொடுத்துட்டாங்க.. இப்போ அவ சுமதி சுதாகர் பொண்ணு இல்ல, அவங்க குலதெய்வமான காமாட்சியம்மனோட பொண்ணு.. கோயிலுக்குள்ள போனதுக்கே வசியம் பலனில்லாம போகுதுன்னா அவளோட பிள்ளைய வசியம் பண்ண விடுவாளா என்ன?,”என்று சுஹனியை தான்  வசியம் செய்ய முடியாமல் போன காரணத்தை விவரித்தான் தீபேந்திரன்.

” தத்து கொடுத்துட்டாங்களா!, என்ன சொல்றீங்க எனக்கு புரியல?”என்று குழப்பமாய் வினவினார் ராஜதுரை.

” சில கோயில்ல எல்லாம் பார்த்து இருப்பியே!, பிறந்த குழந்தையை சாமி பாதத்துல வச்சுட்டு பணமோ இல்ல தானியங்களோ கொடுத்து குழந்தையை தத்து எடுத்துப்பாங்க,  அதாவது அந்த குழந்தைக்கு ஏதாவது தோஷம்,  இல்லை தீர்க்க முடியாத பிரச்சனை ஏதாவது இருந்ததுனா,  குழந்தையோட பிரச்சனையை சரி செய்யணும்னு வேண்டிக்கிட்டு, இனி இந்த குழந்தை என்னோடது இல்ல  உன் பொறுப்புன்னு தெய்வத்துகிட்ட ஒப்படைச்சிடுவாங்க. குழந்தைக்கு வந்த  பிரச்சனை தீர்ந்ததும் குழந்தையை பணம் கொடுத்தோ இல்ல தானியங்கள் கொடுத்தோ   வாங்குற மாதிரி தத்து எடுத்துப்பாங்க.. அது மாதிரி தான் அத்தையும் மாமாவும் சுஹனியை.. அவங்க குலதெய்வமான காமாட்சி அம்மன் கிட்ட ஒப்படைச்சுட்டாங்க. அதனால தான் என்னால அவளை வசியம் செய்ய முடியல இதையெல்லாம் நான் பூஜை மூலமா தெரிஞ்சுகிட்டேன்.”என்று விளக்கம் கொடுத்தான் தீபேந்திரன்.

அறையின் கதவு அருகில் நின்று உள் நடக்கும் விவாதங்களை கவனித்துக் கொண்டிருந்த கீர்த்தனுக்கு தன்னால் ஏன் சுஹனியை வசியம் செய்ய முடியவில்லை என்ற காரணம் தெளிவாக புரிந்தது.

தான் அறிந்து கொள்ள விரும்பிய விவரங்கள் ஒவ்வொன்றாய் வெளியில் வர இந்த பூஜை எதற்காக நடக்கிறது அதன் பலன் என்னவென்று அறிந்திடும் ஆவலுடன் மேலும் கவனமாய் நடக்கும் பேச்சு வார்த்தையை கவனிக்கத் தொடங்கினான்.

“அப்போ இந்த பூஜை மட்டும் எப்படி தம்பி பலிக்கும். ” என்று பரபரப்புடன் ராஜதுரை வினவிட..” நான் தான் சொன்னேன்ல இது வெறும் வசியம் பண்றதுக்கான பூஜை மட்டும் இல்ல,  எங்களை ஏழேழு ஜென்மத்துக்கும் சேர்த்து வைக்க போற பூஜை.. நவ சக்திகளான இந்த தெய்வத்துக்கு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து இப்போ உறுதியளிக்கப் போறோம். இது கிட்டத்தட்ட எங்களுக்கு கல்யாணம் நடக்கிற மாதிரி .  இந்த ஒரு ஜென்மத்தோட இந்த கல்யாண பந்தம் முடிஞ்சிடாது இனி எங்களுக்கு இருக்கிற எல்லா ஜென்மமும் நாங்க சேர்ந்து தான் இருக்க போறோம். சுஹாவே நினைச்சாலும் இனி என்னை விட்டு பிரிய முடியாது..” என்று கர்வமாய் அறிவித்தான் தீபேந்திரன்.

“என்னது கல்யாணமா?, தாலி எதுவும் இல்லையே அப்புறம் எப்படி கல்யாணம்? ” என்று குழப்பத்துடன் வினவினார் ராஜதுரை.

“தாலி கட்டி நடக்கிற கல்யாணம் இன்னும் ரெண்டு நாள் கழிச்சு நடக்கும். இப்போ எங்க ஆன்மாக்களுக்கு கல்யாணம் நடக்க போகுது. அதாவது இந்த நவசக்திகளுக்கு அபிஷேகம் பண்ண போற பூஜை பொருட்களோட எங்க ரெண்டு பேரோட ரத்த துளிகளையும் கலந்து அபிஷேகம் பண்ணுவேன். அப்படி பண்ணுனா எங்க ரெண்டு ஆத்மாக்களுக்கும் இந்த நவசக்தி முன்னிலையில் கல்யாணம் நடந்ததா அர்த்தம்” என்று தீபேந்திரன் விவரித்துக் கொண்டிருந்த நேரம்.. பூட்டி வைக்கப்பட்டிருந்த அறையின் கதவை உடைத்துக் கொண்டு அவர்களின் முன் வந்து நின்றான் கீர்த்தன்.

(இந்த கதையில் வரும் காட்சி அமைப்பும் கதாபாத்திரங்களும், விவரிக்கப்பட்ட வருணனைகள் அனைத்தும் கற்பனையே யார் மனதையும் மதத்தையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டதல்ல,  அத்தியாயத்தில் குறிப்பிட்ட சில விபரங்கள் கதையின் சுவாரசியத்திற்காக இணைக்கப்பட்ட கூடுதல் கற்பனை மட்டுமே.. படித்ததும் கடந்து விடுக..)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்ரினோஜன் என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 – 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்ரினோஜன் உள்ளது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~