16….

என் வாழ்வில்
என்றும் தொலைத்திடக் கூடாத
பொக்கிஷமாக
உன்னை எண்ணினாலும்..
என்னிடமிருந்து
தொலைவில் நிறுத்தவே
எண்ணுகின்றேன்…

சுஹனி இருக்கும் இடம் தெரிந்த பின்பும் தாமதிக்க மனம் இல்லாமல் பழமையான முறையில் ஓடுகள் வைத்து முற்றம் அமைப்புடன் கூடிய, கீழும் மேலுமாய் இரு அடுக்குகள் கொண்ட வீட்டினுள் செல்லும் வழியை தேடி வீட்டைச் சுற்றி இருந்த மதில் சுவரை ஆராய்ந்த படி சுற்றி வந்தான் கீர்த்தன்.

வீட்டினுள் இருக்கும் இருவரையும் நேரடியாக எதிர்கொள்வது கீர்த்தனுக்கு பெரிய விஷயம் இல்லை என்றாலும், இதையெல்லாம் இவர்கள் எதற்காக செய்கிறார்கள்?, இதை செய்வதால் அவர்களுக்கு என்ன கிடைத்து விட போகிறது.. என்று தனக்குத்தானே கணக்கிட்டு பார்க்க துவங்கியவன், என்ன யோசித்தும் தெளிவான பதில் கிடைக்கவில்லை என்ற நிலையில், செயலை செய்பவர்கள் மூலமாகவே அவர்கள் செய்யவிருக்கும் செயலின் காரணத்தை அறிந்து கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் உள்ளிருப்பவர்களின் கவனத்தை ஈர்க்காமலேயே வீட்டினுள் நுழைய முயற்சித்தான்.

வீட்டைச் சுற்றி இருந்த மதில் சுவர்களை ஆராய்ந்த படி வந்தவன், கீழ் அறையின் சாளர திட்டுகளை பற்றிக் கொண்டு அதன் மீது ஏறி நின்றான். அடுத்து மாடியின் சாளரத்தை பற்றினான் இவ்வாறாக.. கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து சென்று ஓடுகள் பதிக்கப்பட்ட வீட்டின் மேல் பகுதிக்கு வந்து சேர்ந்த கீர்த்தன், வீட்டின் முற்றத்தின் வழியாக கூடத்திற்குள் குதித்தான்.

“கீழே ஏதோ சத்தம் கேட்குதே!, “என்று சந்தேகமாய் தீபேந்திரன் வினவ…”அதெல்லாம் ஒன்னும் இல்ல தம்பி., பூனை ஏதாவது அங்கிட்டும் இங்கிட்டும் ஓடிட்டு திரியும், நீங்க ஆக வேண்டிய வேலையை கவனிங்க…”என்று அவசரமாய் மறுத்தார் ராஜதுரை.

” சுஹா.. எழுந்திருக்க மாட்டாளே!, அவ முழிச்சிட்டா இந்த பூஜையை நடத்த முடியாது. எதுக்கும் நீங்க போய் ஒரு தடவ சுஹனிய பாத்துட்டு வாங்க, நான் இங்க பூஜைக்கு வேண்டிய ஏற்பாட கவனிக்கிறேன்.”என்று உத்தரவு பிறப்பித்தான் தீபேந்திரன்.

“தம்பி அதெல்லாம் பாப்பா எந்திரிச்சு இருக்காது. பவர்ஃபுல்லான தூக்க மாத்திரை, நாளைக்கு மதியம் வரை தாக்கு பிடிக்கும்..”என்று எழுந்து செல்ல மனம் இல்லா சோம்பேறி தனத்துடன் கூறினார் ராஜதுரை.

“ஒருவேளை நம்ம கிட்ட இருந்து தப்பிக்கனும்னு பாலை குடிக்காம இருந்தா என்ன செய்றது?, போய் அவ என்ன செய்றான்னு பாத்துட்டு வாங்க..” என்று மீண்டும் அதிகாரக் குரலில் உத்தரவிட்டான் தீபேந்திரன்.

தன் முதலாளியின் குரலில் இருந்த வேற்றுமையை உணர்ந்து கொண்ட ராஜதுரை மேலும் மறுப்பு கூறாமல் அங்கிருந்து நகர்ந்தார்.

‘இவன் கல்யாணம் பண்றதுக்கு நம்ம என்னென்ன காரியம் பண்ண வேண்டியதா இருக்கு. வேகமா போயிட்டு இந்த காருக்கு பின்னாடி எவனோ ஓடி வரான்னு சொல்றான், இவ்வளவு நேரம் பூட்டிக் கிடந்த வீட்டுக்குள்ள ஏதோ சத்தம் கேக்குதுன்னு சொல்றான், இவனுக்கு மட்டும் எப்படித் தான் இப்படி எல்லாம் தோணுதோ!, ‘என்று தனக்குத் தானே புலம்பியபடி மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தார் ராஜதுரை.

ஆள் வரும் அரவம் கேட்டதும் அடுத்த நொடியே படியின் கீழ்ப்புறத்தில் சென்று பதுங்கிக் கொண்டான் கீர்த்தன்.

” தம்பி தேவை இல்லாம சந்தேகப்படுது.. பாப்பா நல்லா தூங்கிட்டு தான் இருக்கு” என்று சுஹனி இருந்த அறையை எட்டிப் பார்த்தவர், தீபேந்திரன் கொடுத்த உத்தரவை நிறைவேற்றி விட்ட நிம்மதியுடன் மீண்டும் படியேறி சென்றார்.

ராஜதுரை சென்று விட்டதை உறுதி செய்தவன் மெதுவாய் ஒதுங்கிய இடத்திலிருந்து வெளியேறி நின்ற இடத்திலிருந்தே வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்த்தான்.

நான்கு அறைகள் கொண்ட கீழ்தளத்தில் ஒருபுறம் சமையல் அறை இருக்க அதன் எதிர் திசையில் பூஜை அறை இருந்தது. அது இரண்டிலும் சுஹனி இருக்க வாய்ப்பு இல்லை என்று உறுதியாய் எண்ணிக் கொண்டவன், மற்ற இரண்டு அறைகளை நோக்கி நகர்ந்தான். சுத்தம் செய்யப்படாத பழைய படுக்கை கொண்ட ஒரு அறையில் .. வேண்டாத பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க… ஏமாற்றத்துடன் அடுத்த அறைக்குள் அடியெடுத்து வைத்தான் கீர்த்தன்.

சுத்தமாய் பராமரிக்கப்பட்ட அந்த அறையின் ஓர் மூலையில் புதிதாய் வாங்கப்பட்ட படுக்கையில் மயக்க நிலையில் துவண்டு கிடந்தாள் சுஹனி.

சுஹனி தன்னை நெருங்கிட அனுமதிக்க கூடாது என்ற தனது தீர்மானத்தை மறந்து அவசரமாய் அவள் அருகில் சென்று அமர்ந்தவன், தவிப்புடன் அவளது கைவிரல்களை பற்றிக் கொண்டான்.

“சுஹனி..” என்று பலமுறை அவள் பெயரை அழைத்தும், அயர்ந்த உறக்கத்தை கலைக்கும் விதமாய் கன்னத்தில் தட்டிப் பார்த்த பிறகும் சுஹனியிடமிருந்து எந்த வித அசைவும் இல்லாமல் போனது.

‘தூக்க மாத்திரை குடுத்திருக்குன்னு சொன்னாங்களே!, ஒருவேளை டோஸ் அதிகமாகி இருக்குமா!, எவ்வளவு எழுப்பியும் எந்திரிக்க மாட்டேங்கிறாளே!, ‘என்று உள்ளுக்குள் உண்டான தவிப்பை குரலில் தேக்கிக்கொண்டு அரற்றினான் கீர்த்தன்.

“ஹனி.. எழுந்திரி ஹனி.. என்னைப் பாரு. என்கிட்ட ஹெல்ப் கேட்க சொல்லி வார்டன் மேம்மை அனுப்பி வச்சிருந்தயே! இங்க பாரு நான் வந்துட்டேன், உனக்கு ஹெல்ப் பண்றதுக்காக நான் வந்துட்டேன். உனக்காக தான் வந்திருக்கேன், ப்ளீஸ்மா தடவை என்னைப் பாரு , என்கிட்ட பேசு ஹனி. நீ இப்படி அமைதியா இருக்கிறத பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு.”என்று ஒருவிதப் பதற்றத்துடன் அவளின் பின்பகுதி பெயரை மட்டும் உரக்க உச்சரித்து மீண்டும் எழுப்ப முயற்சி செய்தான் கீர்த்தன்.

அப்போதும் உறக்கத்திலிருந்து அவள் எழுந்து கொள்ளவில்லை.. என்னானதோ ஏதானதோ என்ற தவிப்புடன்.. மயங்கிய நிலையில் இருந்தவளை தன் மார்போடு சேர்த்து கட்டி அணைத்துக் கொண்டவன்..
“ப்ளீஸ் ஹனி எந்திரி டா, என்னால உன்னை இப்படி பார்க்க முடியல.. ப்ளீஸ்டா என்னை விட்டு போயிடாத” என்று பரிதவிப்புடன் புலம்பினான் கீர்த்தன்.

மார்பில் சாய்ந்திருந்தவள் சட்டென்று கீழே சரிந்து விழப் போக அவளை தாங்கிப் பிடித்தவன், அவளது மூக்கில் விரல் வைத்து மூச்சுக்காற்று இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தான்.

காற்றை உள் இழுப்பதும் வெளிவிடுவதுமாய் நாசி அதன் பணியை சீரும் சிறப்புமாய் செய்து கொண்டிருந்த போதிலும் சுஹனியிடம் இருந்து கண் விழிப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் போனது. தன்னையும் மீறி வழிந்த கண்ணீரை துடைக்க மறந்து மீண்டும் சுஹனியை தனது மார்போடு சேர்த்து இறுக்கிக் கொண்டான்.

” என்னை விட்டுப் போயிடாத ஹனி, நீ இல்லாம என்னால வாழ முடியாது. நீ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பாக்க முடியாது. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? உன்னை முதல் தடவை பார்த்ததுமே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. என்னை மறந்திடு, திரும்பி என்னைத் தேடி வராதன்னு உன்கிட்ட சொல்லிட்டு எனக்குள்ள உடைஞ்சு போயிட்டேன் ஹனி. இதுவரைக்கும் எந்த பொண்ணு கிட்டயும் இப்படி ஒரு உணர்வை நான் உணர்ந்ததே இல்லை. யாரோ நான் உயிரோடு இருக்கும்போதே இதயத்தை அறுக்கிற மாதிரி வலிச்சது. இருந்தாலும் என்னை கட்டுப்படுத்திட்டு உன்கிட்ட கோபத்தை காட்டினேன். என் பேச்சை மீறி என்னை தேடி வர மாட்டியான்னு மனசு ஒரு பக்கம் ஏங்கிட்டே இருக்கும் போது தான், சித்தேஷ் வந்து உன் பேரை சொல்லி.. நீ என்னை தேடி வந்திருக்கிறதா சொன்னான். எனக்குள்ள அவ்ளோ சந்தோஷம் ஆனாலும் உன்னை அவாய்ட் பண்ண தான் ட்ரை பண்ணுனேன். நாம ஒன்னு சேரனும்னு நினைக்கிறது ரெண்டு பேருக்கும் சரி இல்லன்னு யோசிச்சு தான் உன்கிட்ட கோவமா பேசுற மாதிரி நடிச்சேன். இருந்தாலும் என் மனசு உன்னை தான் தேடிட்டு இருந்தது ஹனி. இரும்பை பார்த்த காந்தத் துண்டு மாதிரி உனக்கே தெரியாம என்னை ஈர்த்துட்டு இருக்க டா, முதல் தடவை நான் தடுமாறிட்டு இருக்கேன். என் தவிப்பை புரிஞ்சுக்க முயற்சி பண்ணு என்னை விட்டு போயிடாத. சரியோ தப்போ இனி நீ எப்பவும் என்கூட தான் இருக்கணும். “என்று கலங்கிய விழிகளுடன் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் மனதில் மறைத்து வைத்த அத்தனை ரகசியத்தையும் புலம்பித் தீர்த்தான் கீர்த்தன்.

கீர்த்தனின் உணர்வுப் பூர்வமான வார்த்தைகளை மயக்க உறக்கத்தில் கிடந்த சுஹனியின் செவிகளை எட்டி சிந்தைக்கு சென்றதோ என்னவோ, பெண்ணவள் விழிகளில் இருந்து கண்ணீர் சுரந்தது.

எவ்வளவோ முயன்றும்.. சுஹனியை உறக்கத்திலிருந்து மீட்டெடுக்க முடியாமல் போக அடுத்து என்ன செய்வது என்ற புரியாத தவிப்புடன் அமர்ந்திருந்தான் கீர்த்தன்.

அதே நேரத்தில் சுஹனியை பூஜைக்கு அழைத்து செல்வதற்காக தீபேந்திரன் மாடியில் இருந்து கீழ் இறங்கி வந்தான்.

யாரோ அறையை நெருங்கி வரும் காலடி ஓசை கேட்டதும், சுஹனியை மீண்டும் அவளிடத்திலேயே படுக்க வைத்து விட்டு ஒரு ஓரத்தில் சென்று மறைந்து கொண்டான் கீர்த்தன்.

சுஹனியை தேடி வந்தவன் அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை உறுதி செய்து கொண்டு.. படுக்கையில் கிடந்தவளை தன் இரு கைகளால் அள்ளிக்கொண்டு பூஜைக்கு ஏற்பாடு செய்த அறையை நோக்கிச் சென்றான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிரிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~